Home

Sunday, 27 June 2021

இலக்கியத் தேன்துளிகள்

  

ஏட்டுச்சுவடிகளில் இருந்த தமிழிலக்கிய நூல்கள் அனைத்தும் அச்சு வடிவத்துக்கு மாற்றப்பட்ட காலத்தை இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்றே சொல்லவேண்டும். அச்சு ஊடகம், அனைத்து வகையான   எழுத்துகளையும் அனைவருக்கும் பொதுவாக ஆக்கியது. அச்சுநூல்கள், படிக்கத் தெரிந்த அனைவரையும் தன் வாசகர்களாக உருமாற்றிக்கொண்டன. ஏற்கனவே இலக்கியத்தில் தோய்ந்த வித்துவான்களும் புலவர்களும் ஆசிரியர்களும் ரசனையில் தேர்ந்தவர்களும் புதிதாக உருவான இலக்கிய வாசகர்களுக்கு இலக்கியத்தின் நுட்பத்தையும் அழகையும் வாய்ப்பு கிட்டிய  தருணங்களிலெல்லாம் சுட்டிக்காட்டினார்கள். அங்கங்கே இலக்கிய அமைப்புகள் உருவாகி இலக்கிய நயங்கள் எடுத்துரைக்கப்பட்டன. இலக்கியத்துக்கும் மக்களுக்கும் இடையில் ஒருவித நெருக்கம் உருவாக இத்தகு முயற்சிகள் தூண்டுகோலாக இருந்தன.

நயமும் அழகும் மிக்க பாடல்களை முன்வைத்து, அவற்றில் ஆழ்ந்து இன்பம் பெறும் விதங்களைப்பற்றி .வே.சா. ஏராளமான கட்டுரைகளை  வாழ்நாள் முழுதும் எழுதிக்கொண்டே இருந்தார். ரசிகமணி என்று அழைக்கப்படும் டி.கே.சிதம்பரநாத முதலியார் கவிதை நயங்களைப்பற்றி பேசுவதற்காகவே வட்டத்தொட்டி என்னும் அமைப்பை ஏற்படுத்தி ஒத்த ரசனையுள்ளவர்களை ஒருங்கிணைத்து வாழ்நாள் முழுக்க கவிதைகள் மூலம் ஆனந்தம் அடையும் வழிகளைக் கூறிக்கொண்டே இருந்தார். அவர் எழுதிய இதயஒலி, அற்புத ரஸம், கம்பர் யார் போன்ற புத்தகங்கள் அவருடைய ரசனையுணர்வுக்கு அடையாளமெனத் திகழ்பவை. அவருடைய மாணவரான மீ..சோமு அந்நினைவுகளைத் தொகுத்து ரசிகமணி ரசித்த மணிகள் என்னும் புத்தகத்தை எழுதினார். ரசிகமணி ரசித்த பாடல்கள் என்றொரு தனிநூலையே மரபின் மைந்தன் முத்தையா எழுதி வெளியிட்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து மு.வரதராசனார் போன்ற பல தமிழறிஞர்களும் கு.அழகிரிசாமி, நா.பார்த்தசாரதி போன்ற படைப்பாளிகளும் இலக்கிய நயங்களை பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் பல நூல்களை எழுதினார்கள். இம்முயற்சிகள் அனைத்தும் நம் இலக்கியச் செல்வத்தின் அருமையை நாம் உணர்ந்து போற்றி உள்வாங்கி மகிழ்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்வழியில் படித்தவர்களாக இருந்தாலும் சரி, ஆங்கில வழியில் படித்தவர்களாக இருந்தாலும் சரி, இரண்டாயிரத்துக்குப் பிறகு உருவான இளந்தலைமுறையினருக்கு, தமிழ் என்பதை ஒரு மொழிப்பாடம் என்பதற்கு அப்பால் அதன் வளத்தைப்பற்றியோ அழகைப்பற்றியோ பெரிய புரிதல் எதுவும் இல்லாமல் போயிற்று. இது கல்வி என்பதை ஒரு வேட்டைக்கலையாக உருமாற்றியதன் விளைவு. வென்று, மேலே மேலே என சென்றுகொண்டே இருக்க விழைபவர்களை நாம் விட்டுவிடலாம். ஒரு கணம் நின்று இழந்ததைப்பற்றி நினைத்துப்பார்க்க விழைபவர்களுக்கு தமிழின் இலக்கிய அழகை எடுத்துரைக்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டிருக்கிறது. இன்றைய வாசகர்கள் மரபிலக்கியத்தின் அழகோடு நவீன இலக்கியத்தின் அழகையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். நம் தமிழின் வளம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள அந்த முயற்சி அவசியம்.

நம் காலத்து மூத்த படைப்பாளியான நாஞ்சில் நாடன் தொடர்ந்து பல ஆண்டுகளாக நயமான மரபிலக்கிய வரிகளை முன்வைத்து பேசிக்கொண்டே இருப்பவர். அந்த வரிசையில் உள்ளம் படர்ந்த நெறி புத்தகம் வழியாக சமீப காலத்தில் இணைந்திருப்பவர் கோவை எழிலன். இந்த நூல் உருவான விதத்தைப்பற்றி எழிலன் தன் முன்னுரையில் ஒரு  சுவாரசியமான குறிப்பை அளித்திருக்கிறார். ஒருநாள் நண்பர்களுடன் அவர் மேற்கொண்ட ஒரு மகிழுந்துப் பயணத்தில் மணிக்கு தொண்ணூறு கிலோமீட்டர் வேகத்தில் வண்டி சென்றுகொண்டிருக்கிறது. ஆயினும் வண்டியின் சாளரங்கள் மூடப்பட்டிருந்ததாலும் சாலையில் எந்த வாகனமும் இல்லாததாலும் அது மெதுவாகச் செல்வதுபோல அனைவருக்கும் தோன்றுகிறது. வெளிப்படையாகவேஏன் மகிழுந்து மெதுவாகச் செல்கிறது?” என்று ஒரு நண்பர் கேட்டுவிடுகிறார். அந்தக் கேள்வி நந்திக்கலம்பகத்தில் ஒரு தேர்ப்பயணத்தைப்பற்றிய சித்தரிப்புக்கு இணையாக இருப்பதாக எழிலனுக்குத் தோன்றுகிறது. உடனே அந்தப் பாடலை அவர்களிடம் எடுத்துரைத்து அதை விளக்குகிறார். நண்பர்கள் நயமான அந்த இலக்கியக்காட்சியின் அனுபவத்தில் திளைத்து மகிழ்ச்சியடைகிறார்கள். இதைப்போன்ற நயமான பாடல்களை இன்னும் கொஞ்சம் சொல்லவேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். நண்பர்களின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு நாளும் ஒரு பாடலென முந்நூறுக்கும் மேற்பட்ட பாடல்களை ஓர் இணையக்குழுமம்  வழியாக எழிலன் பகிர்ந்துகொள்கிறார். அந்த முந்நூறு பாடல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றைம்பது பாடல்களை அழகியல் கோணத்துடன் தொகுத்து உள்ளம் படர்ந்த நெறி என்ற தலைப்பில் நூலாக உருவாக்கியிருக்கிறார்.

எழிலனுடைய மரபிலக்கியப் பயிற்சியும் தேர்ச்சியும் பாராட்டுக்குரியவை. வழக்கமான அகநானூறு, புறநானூறு, திருக்குறள், கம்பராமாயணம் போன்றவற்றுக்கு அப்பால் திருவரங்கக்கலம்பகம், குண்டலகேசி, சூளாமணி, விவேகசிந்தாமணி, பிள்ளைப்பெருமாள் ஐயங்கார், முக்கூடற்பள்ளு, வில்லிபாரதம், சீறாப்புராணம், சீவகசிந்தாமணி, தேம்பாவணி, தனிப்பாடல் என பல நூல்களிலிருந்து எழிலன் பல அழகான பாடல்களை எடுத்துரைத்துள்ளார். அவருடைய விரிவான வாசிப்புக்கு அவை எடுத்துக்காட்டுகளாக உள்ளன.

ஏராளமான திருப்பங்களுடைய சிறுகதையைப்போன்றதொரு பாட்டை விவேகசிந்தாமணியிலிருந்து முன்வைத்திருக்கிறார் எழிலன். ஒரு மரக்கிளையில் அமர்ந்து இரு புறாக்கள் காதல் புரியும் காட்சியிலிருந்து தொடங்குகிறது இப்பாடல். அப்போது ஒரு வேடன் அவற்றை வீழ்த்த அம்பெடுத்து குறிபார்க்கிறான். அதைக் கண்டு நடுங்கிய பெண்புறா பறந்து தப்பித்துச் செல்லலாம் என திட்டமிடுகிறது. அந்த நேரத்தில் வானத்தில் வட்டமிடும் வல்லூறைக் கண்டதும், அதை பெண்புறாவுக்கு சுட்டிக்காட்டி தப்பிக்கும் திட்டத்தைக் கைவிடுகிறது ஆண்புறா. மரணத்தைத் தவிர்க்க முடியாது என்ற மனநிலையில் எது வந்தாலும் எதிர்கொள்ள தம்மைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்த தருணத்தில் திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு பாம்பு அந்த வேடனைத் தீண்டிவிடுகிறது. மறுகணமே கடிபட்ட வேடனின் கையிலிருந்த அம்பு திசைமாறிப் பறந்துபோய் வல்லூறைக் கொன்றுவிடுகிறது. மரணத்திலிருந்து தப்பித்த மகிழ்ச்சியில் புறாக்கள் காதல் விளையாட்டைத் தொடர்கின்றன.

 

கரத்தொருவன் கணைதொடுக்க மேற்பறக்கும்

ராசாளி கருத்துங் கொண்டே

உரைந்துசிறு கானகத்தில் உயிர்ப்புறா

பேடுதனக்கு உரைக்கும் காலை

விரைந்துவிடத் தீண்டவுயிர் விடும்வேடன்

கணையால்வல் லூறும் வீழ்ந்த

தான்செயலே யாவதல்லால் தன்செயலால்

ஆவதுண்டோ அறிவுள்ளோரே

 

 நளவெண்பாவிலிருந்து எழிலன் எடுத்துக்காட்டாக வழங்கியிருக்கும் வெண்பா உவமைநயம் மிக்க பாடல். திருமணம் முடிந்ததும் தமயந்தியை தன் அரண்மனைக்கு தேரில் அழைத்துச் செல்லும்போது வழியில் எதிர்ப்பட்ட சோலையில் ஒரு காட்சியை அவளுக்குச் சுட்டிக் காட்டுகிறான். அங்கே ஒரு பெண் மலர் பறிக்கிறாள்,. அப்போது அவள் முகத்தையே தாமரை என நினைத்து சில வண்டுகள் சூழ்ந்து மொய்க்கின்றன. அவற்றை தன் கைகளால் விலக்கித் தடுக்கிறாள். விலக்கும் கைகளை காந்தள் மலரென நினைத்த வண்டுகள் முகத்திலிருந்து கைகளை நோக்கித் தாவுகின்றன. என்ன செய்வது என புரியாமல் குழம்பித் தவிக்கிறாள் அந்தப் பெண்.

 

மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தை

பங்கயமென் றெண்ணிப் படிவண்டைசெங்கையால்

காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே

வேர்த்தாளைக் காணென்றான் வேந்து

 

வண்டுகள் சேட்டை இடம்பெற்றிருக்கும் இன்னொரு பாட்டும் எழிலனின் பட்டியலில் இருக்கிறது. இதை விவேகசிந்தாமணியிலிருந்து அவர் எடுத்திருக்கிறார். தேன்குடித்த மயக்கத்தில் ஒரு கருவண்டு ஒரு நாவல் மரத்தடியில் அசைவின்றிக் கிடக்கிறது. அப்போது அந்தச் சோலைக்கு வந்த ஓர் இளம்பெண் மரத்திலிருந்து உதிர்ந்துகிடக்கும் நாவல் பழமென நினைத்து, அந்த வண்டை கையில் எடுக்கிறாள். அதனால் சற்றே விழிப்புற்ற வண்டு அரைமயக்கத்தில் அவள் தன்னைத் தாங்கியிருக்கும் உள்ளங்கையை மலர்ந்த தாமரையென நினைத்துக்கொள்கிறது. முகத்தைப் பார்த்து இரவில் ஒளிவீசும் நிலவென நினைத்துக்கொள்கிறது. இரவு தொடங்கிவிட்டது போலும், எந்த நேரத்திலும் தாமரை கூம்பி மூடிக்கொள்ளக்கூடுமே என்று பதற்றமுற்ற வண்டு அவள் பிடியிலிருந்து தப்பித்து பறந்து செல்கிறது. பறந்துபோவது வண்டு என அறியாத அழகி, நாவற்பழம் கூட பறக்குமோ என வியந்து உறைந்து நிற்கிறாள்.

 

தேன்நுகர் வண்டு மதுவினை உண்டு

தியங்கியே கிடந்ததைக் கண்டு

தான்அதைச் சம்புவின் கனியென்று

தடங்கையால் எடுத்துமுன் பார்த்தாள்

வானுறு மதியம் வந்ததென்று எண்ணி

மலர்க்கரம் குவியுமென்று அஞ்சிப்

போனது வண்டோ? பறந்ததோ பழந்தான்?

புதுமையோ இதுவெனப் புகன்றாள்

 

தினைப்புலம் காக்கும் பெண்களுக்கும் குரங்குகளுக்கும் இடையில் நிகழும் ஒரு மோதலை நயமுடன் சித்தரிக்கிறார் எழிலன். தினைப்புலம் காக்கும் பெண்கள் குருவிகளை விரட்டுவதற்காக கவணில் மாணிக்கக்கற்களை வைத்து வீசுகிறார்கள். அந்தக் கற்கள் இலக்கு பிசகிச் சென்று மரக்கிளைகளில் விளையாடும் குரங்குகள் மீது விழுகின்றன. உடனே அவை சீற்றம் கொண்டு அருகிலிருக்கும் தென்னைமரத்திலிருந்து இளநீர்க்காய்களைப் பறித்து அவர்கள் மீது திரும்ப வீசித் தாக்குகின்றன. இந்தத் தாக்குதல் நிகழ்ச்சியை விவரிக்கும் பாடலை திருப்பனசைப்புராணத்திலிருந்து எடுத்திருக்கிறார் எழிலன்.

 

மாதிரத்துச் சிறுமாதர் ஏனல்கவர்

குரீஇனங்கள் மறுக வீசும்

பீதகத்தில் ஆர்தழற்செம் மணிவந்து

தாக்கவந்த பெற்றி கண்டு

தாததிரும் பூம்பாளைத் தெங்கிளங்

காய்பறித்து தாக்கும் மந்தி

பேதமிலா வரதனமும் இளநீரும்

ஈரிடத்தும் இயமும் மாதோ

 

முதுசூரியர், இளஞ்சூரியர் என அழைக்கப்படும் இரட்டைப்புலவர்கள் எழுதிய ஒரு பாடலை சுவைபட விவரித்திருக்கிறார் எழிலன். ஒரு கதைபோன்ற சித்தரிப்புடன் கூடிய இந்தப் பாட்டின் அழகிலும் நயத்திலும் மயங்காதவர்களே இருக்கமுடியாது.  இவர்களில் முதுசூரியர் நடக்க இயலாதவர். இளஞ்சூரியர் பார்க்க இயலாதவர். அதனால் எங்கு சென்றாலும் இளஞ்சூரியர் தன் முதுகில் முதுசூரியரைத் தூக்கிக்கொண்டு நடந்துசெல்வது வழக்கம். இதனாலேயே இவர்கள் இரட்டையர் என அழைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் இணைந்து வெண்பா பாடுவதை வழக்கமாகக் கொண்டவர்கள். முதலிரண்டு அடிகளை ஒருவர் பாடி வெண்பாவை தொடங்கிவைப்பார். உடனே அடுத்தவர் பொருள் மாறாமல் அடுத்த இரு அடிகளைப் பாடி முடித்துவைப்பார்.

ஒருமுறை இளஞ்சூரியர் ஒரு தாமரைக்குளத்தில் அணிந்திருந்த ஆடையைத் துவைத்துக்கொண்டிருந்தபோது, அவரை அறியாமல் அவரிடமிருந்து ஆடை கைநழுவிப் போய்விடுகிறது. அதைக் கண்ட முதுசூரியர் தினமும் ஆடையை அடித்துத் துவைத்ததால் அது நம் பிடியிலிருந்து தப்பிச் செல்லாதா என்று கேட்கிறார். அதற்கு அவர் அந்த ஆடை ஆயிரம் ஓட்டை கொண்ட கந்தலென்பதால் போனால் போகட்டும் என்று பதில் சொல்கிறார். முதுசூரியர் அத்துடன் தன் கேள்வியை நிறுத்தவில்லை. தொடர்ந்து கந்தலானால் என்ன, குளிருக்கு போர்த்திக்கொள்ள உதவியாக இருக்குமே என்று கூறினார். இளஞ்சூரியர் இக்கலிங்கம் (இந்த ஆடை) போனால் என்ன, சொக்கலிங்கம் துணையாக இருக்கும்போது ஒரு குறையும் இல்லையே என்று பதில் சொல்லி முடித்தார். கேள்விகளும் பதில்களுமாக அந்த வெண்பாக்கள் ஒரு சின்ன காட்சிச்சித்திரமென காட்சியளிக்கிறது.

 

அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நாமதனைத்

தப்பினால் நம்மையது தப்பாதோசெப்பக்கேள்

ஆனாலும் கந்தை, அதிலுமோர் ஆயிரங்கண்

போனால் துயர்போச்சுப் போ

 

கண்ணாயிரம் உடைய கந்தையே யானாலும்

தண்ணார் குளிரையுடன் தாங்காதோஎண்ணாதீர்

இக்கலிங்கம் போனாலென் ஏகலிங்க மாமதுரைச்

சொக்கலிங்கம் உண்டே துணை

 

மானுட வாழ்வின் இன்பம் எவ்வளவு அற்பமானது என்பதையும் எந்நிலையிலும் மனிதர்கள் அதைத் துய்க்கவே தயாராக இருக்கிறார்கள் என்பதையும் உணர்த்துவதற்காக எழிலன் சூளாமணியிலிருந்து ஒரு பாட்டை முன்வைத்திருக்கிறார். தற்செயலாக காட்டுக்குள் ஒரு யானை ஒருவனைத் துரத்துகிறது. தப்பித்து ஓடி வரும் அவன் ஒரு பாழுங்கிணற்றுக்குள் விழுந்துவிடுகிறான். முற்றிலும் விழுந்துவிடாமல் மேலிருந்து தொங்கும் ஒரு கொடியைப் பிடித்து தொங்குகிறான். கிணற்றில் ஒரு நச்சுப்பாம்பு படமெடுத்து நிற்கிறது. அந்நிலையில் மேலே மரக்கிளையில் தொங்கும் தேனடையிலிருந்து தேன்துளிகள் சொட்டுகின்றன. அத்துளிகளை அவன் நாக்கை நீட்டி, அதன் சுவையில் திளைக்கிறான். அனைத்தும் நிலையற்றதே. ஆனாலும் அக்கணத்தில் நிகழும் இன்பத்தில் திளைக்கிறான் மானுடன்.

 

யானை துரப்ப அரவுஉறை ஆழ்குழி

நால்நவிர் பற்றுபு நாலும் ஒருவன்ஓர்

தேனின் அழிதுளி நக்கும் திறத்தது

மானுடர் இன்பம் மதித்தனை கொள்நீ

 

வேகம், வேகமென ஓடிக்கொண்டே இருக்கும் இளந்தலைமுறையினரை இலக்கியத்தின்பால் திருப்ப எழிலனின் அறிமுகக்குறிப்புகள் துணைபுரியும் என்பது உறுதி. அவர் திரட்டி அளித்திருக்கும் தேன்துளிகளின் இனிமையே அதற்குச் சாட்சி.

 

(உள்ளம் படர்ந்த நெறிகோவை எழிலன். சந்தியா பதிப்பகம். 53வது தெரு, 9வது அவென்யு, அசோக் நகர், சென்னை -600083. விலை. ரூ.200)

 

(25.06.2021 புக்டே இணையதளத்தில் எழுதப்பட்ட க்ட்டுரை )