Home

Tuesday 30 June 2015

பண்ணும் பாடலும்

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நான் பெங்களூரில் வசித்து வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இசைக்கச்சேரிகள் நடைபெறும் ராமநவமி நாட்களையும் அனுமன் ஜெயந்தி நாட்களையும் இசையின்பத்தில் திளைக்கும் நாட்கள் என்றே சொல்லவேண்டும். சில இடங்களில் நுழைவுக்கட்டணம் வசூலிப்பார்கள். சில இடங்களில் இலவசமாகவே அனுமதிப்பார்கள். என்னால் எல்லாக் கச்சேரிகளுக்கும் செல்ல முடிந்ததில்லை. அலுவலகம் முடிந்து மாலை நேரங்களில் மட்டும் கலந்துகொண்டு கேட்பதுதான் வழக்கம். பாடல்களில் மயங்கியிருந்த தருணங்கள் எல்லாமே பொன்னான நேரங்கள். ஏதோ ஒரு கை வந்து நம்மை ஏந்திக்கொள்வதுபோல, ஏதோ ஒரு விரல் நீண்டு மென்மையாகத் தொட்டு வருடுவதுபோல, எங்கோ அந்தரத்தில் பறந்துசெல்வதுபோல, எங்கோ ஒரு கடலில் ஆழத்தை நோக்கி இறங்குவதுபோல ஒவ்வொரு கணத்திலும் அந்த அனுபவம் மாறிக்கொண்டே இருக்கும். சுருதி, சுரம், ராகம், தாளம் என எதுவுமே இன்றுவரை எனக்குத் தெரியாது. ஆனால் பாடும் கலைஞர் ஒரு ராகத்தைத் தொட்டு ஆலாபனை செய்யும்போது மழைச்சாரலில் நனைந்ததுபோல இருக்கும். ஒரு சொல்லை விதவிதமாக ஏற்றி இறக்கி குழைந்து நெளிந்து உச்சரிக்கும்போது உள்ளம் உருகிவிடும். கச்சேரியிலிருந்து திரும்பும்போது என் மனத்துடன் ஒட்டிக்கொண்டு வரும் அந்த இனிய அனுபவத்துக்காகவே மீண்டும் மீண்டும் கச்சேரிகளை நாடிச் சென்றுகொண்டே இருக்கிறேன்.

Thursday 25 June 2015

கலையைத் தேடி வந்த கௌரவம்

தேசிய அளவில் மிகப்பெரிய கௌரவமாகக் கருதப்படும் ஞானபீட விருது நம் தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தனுக்குத் தரப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஞானபீட விருதைப் பெற்ற சிவராம காரந்த், தகழி சிவசங்கரன் பிள்ளை, மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், மகாஸ்வேதா தேவி, குர் ஆதுலின் ஹைதர், நிர்மல் வர்மா போன்ற மிகப்பெரிய இலக்கிய ஆளுமைகளின் வரிசையில் தமிழ் எழுத்தாளரான ஜெயகாந்தனுடைய பெயரும் இடம்பெறுவது தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயமாகும். 

அடித்தட்டு மக்களுடைய வாழ்வியக்கங்களின் சித்திரங்களை எழுத்தில் பதிவு செய்தவர் ஜெயகாந்தன். அவருடைய எழுத்தும் உரையாடலும் விவரணை முறையும் அந்த அழகியல் தன்மைகளைக் கொண்டவையாகவே விளங்குகின்றன. பிச்சைக்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள், ஆண்டிகள், சாமியார்கள், சாப்பாட்டுச்சுமை தூக்கிகள், தள்ளுவண்டிக்காரர்கள், மேஸ்திரிகள், சித்தாள்கள், விடுதிகளில் வேலை செய்பவர்கள், விலைமாதர்கள், நாடகக்காரர்கள், போதையில் திளைப்பவர்கள் என வாழும் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்களுடைய வாழ்வியக்கச் சித்திரங்களையே ஜெயகாந்தன் தன் படைப்புகளில் தீட்டி வைத்திருக்கிறார். இவர்கள் வாழும் வேட்கை கொண்டவர்கள். பெரிதும் படிப்பறிவு இல்லாதவர்கள். இவர்களுடைய கருத்தியல்களையும் விழுமியங்களையும் கதைகள் மூலம் கண்டடைய முயற்சி செய்தவர் ஜெயகாந்தன். 

Tuesday 16 June 2015

மறைந்துபோன வரலாறு

நண்பரொருவருடைய வீட்டில் சில மாதங்களுக்கு முன்பாக திருடு நிகழ்ந்துவிட்டது. அவரைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காகச் சென்றிருந்தோம். அலங்கோலமாகக் கலைந்து கிடந்தது அவர் வீடு. களவுபோன பொருட்களின் விவரங்களை விசாரித்து பட்டியல் தயாரித்து அப்போதுதான் கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்றார்கள் காவலர்கள். அந்தப் பட்டியலில் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் முதல் குழந்தைக்கு பால் கொடுக்க உதவும் ஃபீடிங் பாட்டில்வரை இருந்தது. பெரிய பொருட்கள் களவாடப்பட்டதைக்கூட பொறுமையாகப் படித்த நண்பர்கள் ஃபீடிங் பாட்டில்  பெயரைப் படித்ததும் மனம் குமைந்து பேசினார்கள். “அயோக்கிய நாய்ங்க, அயோக்கிய நாய்ங்கஎன்று ஆத்திரத்துடன் திரும்பத் திரும்பச் சொன்னார் ஒருவர். ”குழந்தைக்கு பால் குடுக்கற பாட்டல்னு கூட நெனச்சிப் பார்க்கலையே அவனுங்க. சரியான மிருகமா இருப்பானுங்க போலஎன்பதையே வேறுவேறு சொற்களில் தம் ஆற்றாமைகளைப் பகிர்ந்து கொண்டார் இன்னொருவர். திருடுவதற்கு என வந்துவிட்டவனுக்கு அந்த எண்ணமெல்லாம் ஏன் வரப் போகிறது? குழந்தைக்குப் பயனளிப்பது, பெரியவர்களுக்குப் பயனளிப்பது என பிரித்துப்பிரித்துப் பார்த்தா திருடமுடியும்? திருடனுக்கு எல்லாப் பொருட்களும் திருடத்தக்கவையே. அத்தருணத்தில் மனச்சாட்சிக்கு இடமே இல்லை என்று சொன்னேன் நான். “ஆமா, அப்படி திருடித் தின்னறத விட எங்கயாவது போய் சாணிய தின்னுட்டு சாவலாம்என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு காறித் துப்பினார் நண்பர்.