Home

Saturday 28 August 2021

இயற்கையும் மனிதனும் – தங்கப்பாவின் தமிழாக்கப் பாடல்கள்

 

 எல்லா மொழிகளிலும் உள்ள பெரிய படைப்பாளிகள் அனைவரும் தம் படைப்பு முயற்சிகளோடு கூடவே தமக்குப் பிடித்த படைப்புகளைப் பிறமொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். தமிழில் பாரதியார் முதல் புதுமைப்பித்தன் வரை இத்தகு முயற்சிகளில் ஈடுபட்டவர்களே. நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தம் வாழ்வனுபவத்தைக் கலையுணர்வோடு மரபுக்கவிதை வடிவில் முன்வைத்துவரும் ம.இலெ.தங்கப்பா தம் இளமைக்காலம் முதல் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த கவிதைகள் கனவுகள் என்கிற பெயரில் வெளியாகியுள்ளன.

Thursday 26 August 2021

ஜமதக்னி : இலட்சியத்தின் தூதர்

 

1857இல் கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவத்தில் ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் இந்தியச் சிப்பாய்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வங்காளத்தில் இருந்த கவர்னர் கட்டளையிட்டார். உடனே மெட்ராஸிலிருந்த இராணுவப்பிரிவு நீல் என்னும் ஆங்கில அதிகாரியின் தலைமையில் புறப்பட்டுச் சென்று எண்ணற்ற சிப்பாய்களைக் கொன்று குவித்து மோதலை அடக்கியது. நெருக்கடியான தருணத்தில் அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டும் விதமாக அன்றைய அரசு, மெளண்ட் ரோடில் ஸ்பென்சருக்கு அருகில் நீலுக்கு மாபெரும் உருவச்சிலையை வைத்தது.

புதிர் - சிறுகதை

  

குளித்து முடித்ததும் இருள் விலகாத கிழக்குத் திசையைப் பார்த்து நாராயணாஎன்று கணநேரம் கண்களை மூடி வணங்கிய பின்னர் குளத்திலிருந்து கரையேறினார் பெரியாழ்வார். பனி கவிழ்ந்திருந்தது. எனினும் உடல் முழுக்க வெப்பம் பரவியிருப்பதை உணர்ந்தார் அவர். கரையோரத்தில் பூச்செடிகள் அசைவற்று நின்றிருந்தன. ஒரு பக்கம் பனிமுத்துக்களைச் சுமந்த பூக்கள் மௌனமாகத் தலைகவிழ்ந்திருந்தன. பல்லாண்டு பல்லாண்டு...என்று முனகலுடன் முதல் பூவைக் கொய்து குடலையில் போட்டார். விரலிலும் மனத்திலும் வழக்கமான மலர்ச்சி எழாதது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

Sunday 15 August 2021

என் வாழ்வில் புத்தகங்கள் - புதிய புத்தகம்

 

ஐந்தாண்டுகளுக்கு முன்பாக தொலைபேசி வழியாக எனக்கு அறிமுகமானவர் பிரபு. பெங்களூரில் அவர் வசித்த அடுக்ககம் இருபது கிலோமீட்டர் தொலைவில் புறநகரில் இருந்தது. தம் அடுக்ககத்தில் வசித்துவரும் சிறுவர்களுக்கும் சிறுமியருக்கும் ஒவ்வொரு மாதமும் முதல் வார ஞாயிறு அன்று மாலையில் ஒரு மணி நேரம் கதை கூறும் நிகழ்ச்சியை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். அடுத்தநாள் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு நான் கதைசொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மண்ணில் பொழிந்த மாமழை - காந்திய ஆளுமைகளின் கதைகள்

 

நாற்பதுக்கும் மேற்பட்ட காந்திய ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளை எழுதிய அனுபவத்தில் அவர்கள் அனைவரிடமும் வெளிப்பட்ட செயல்வேகத்தில் ஓர் ஒற்றுமையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அது காந்தியக் கொள்கைகள் மீது அவர்களுக்கு இருந்த உறுதியான நம்பிக்கை.

Sunday 8 August 2021

காகா காலேல்கர் : மாபெரும் நாடோடி

17.02.1915 அன்று தாகூரைச் சந்திப்பதற்காக காந்தியடிகள் சாந்தி நிகேதன் பள்ளிக்குச் சென்றிருந்தார். அந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்களை அண்ணா, பெரியப்பா, சித்தப்பா, மாமா, ஐயா என உறவுச்சொற்கள் வழியாக அழைப்பதையும் உரையாடுவதையும் கண்டு மகிழ்ந்தார். சார், மேடம் போன்ற மேற்கத்தியச் சொற்களைவிட இத்தகு உறவுச்சொற்கள் குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் நடுவில் இயல்பான வகையில் ஒரு நெருக்கத்தை உருவாக்குவதை அவர் கண்கூடாகக் கண்டுணர்ந்தார். அவரே தென்னாப்பிரிக்காவில் போனிக்ஸ் ஆசிரமத்தில் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்ட வழிமுறை அது. அன்று மாலையில் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் அதையொட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் செய்தார்.

எண்ணப்பாம்புகளின் நஞ்சு - புத்தக அறிமுகக்கட்டுரை

  

புறநகரில் ஒரு வீடு கட்டிக் குடியேறுகிறது ஒரு குடும்பம். அந்தக் குடும்பத்தின் தலைவர் ஒரு வைத்தியர்.  அக்குடியிருப்பில் அவருக்கு முன்னால் வீடு கட்டிக்கொண்டு குடிபோனவர்கள் பலர். அவரைத் தொடர்ந்து வீடு கட்டிக்கொண்டு குடிவந்தவர்களும் உண்டு. இரவு பகல் வித்தியாசமின்றி அடிக்கடி வீடுகளுக்குள் நுழைந்துவிடும் பாம்புகளைக் கண்டு எல்லோருமே அஞ்சுகிறார்கள். பாம்புச் செய்தி பரவத் தொடங்கியதுமே வைத்தியர் எங்கிருந்தோ சிறியாநங்கைச் செடிகளைக் கொண்டுவந்து வீட்டைச் சுற்றி சீரான இடைவெளிகளில் நட்டு வளர்க்கத் தொடங்குகிறார். ஆழமாக வேர் பிடித்துவிட்ட செடிகள் தழைத்து வளர்ந்து நிற்கின்றன. காற்றில் பரவியிருக்கும் அச்செடிகளின் மணம் பாம்புகளை நெருங்கவிடாமல் தடுத்துவிடுகின்றது. பாம்புத்தொல்லையால் மற்ற குடும்பங்கள் தவித்துத் தடுமாறும் போது, வைத்தியரின் குடும்பம் எந்தத் தொல்லையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கின்றது.

இரண்டு கடமைகள் - புத்தக அறிமுகக்கட்டுரை

 

சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வந்த இந்தி பிரச்சார சபையின் வெள்ளி விழாவுக்காகவும் தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசம் நிகழ்ந்த மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் பழனி முருகன் கோவிலுக்கும் சென்று வழிபடுவதற்காகவும் 22.01.1946 அன்று காந்தியடிகள் தமிழகத்துக்கு வந்தார். சென்னையில் சில நாட்கள் தங்கியிருந்த பின்னர் மதுரைக்கும் பழனிக்கும் சென்றார். அந்தப் பயணத்தில் ரயில் நின்ற எல்லா நிலையங்களிலும் அவரைக் காண்பதற்காக பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர். சில நிலையங்களில் அவர் பொதுமக்களைப் பார்த்து ஒருசில நிமிடங்கள் உரையாற்றினார். சில நிலையங்களில் அனைவரும் பார்க்கும் வகையில் பெட்டியைவிட்டு வெளியே வந்து நின்று கைகுவித்து வணங்கியபடி நின்றுவிட்டுச் சென்றார்.

Monday 2 August 2021

மிகையின் தூரிகை - புதிய சிறுகதைத்தொகுதி

 

இன்பத்திகைப்பில் ஆழ்ந்துபோகும் வகையில் நேற்று (30.07.2021)  ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கம்போல நண்பகல் உணவு இடைவேளை சமயத்தில் அஞ்சல்காரர் வந்து அஞ்சல்களைக் கொடுத்துவிட்டுச் சென்றார். கொரானா சடங்குகளை முடிக்கும் வகையில் அவற்றை வாசலிலேயே சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பிறகு உள்ளே எடுத்துவந்தேன்.

Sunday 1 August 2021

புன்னகையும் பரவசமும்

 

காந்தியடிகள் தன் வாழ்க்கைவரலாற்றைசத்திய சோதனைஎன்னும் தலைப்பில் நூலாக எழுதியுள்ளார். அதில் அவர் தன் குழந்தைப்பருவத்தைப் பற்றி ஒருசில அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார். ஒருமுறை அவர் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்தார். அரிச்சந்திரனின் வாய்மை தவறாத பண்பு அவரைக் கவர்ந்தது. சத்தியத்தின் மீது அரிச்சந்திரன் கொண்டிருக்கும் பற்று எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வழங்கிவிடுவதைப் பார்த்து அவர் வியப்படைந்தார். தன் வாழ்நாளில் சத்தியமே தனக்குரிய வழி என அக்கணத்தில் காந்தியடிகள் முடிவெடுத்தார்.

கன்னடப் பெண்படைப்பாளிகள் : சவால்களும் சாதனைகளும்

 

 அக்கா என கன்னட இலக்கிய உலகத்தாரால் அன்போடு அழைக்கப்பெறும் அக்கமகாதேவி என்கிற மகாதேவி அக்காவே கன்னட மொழியின் முதன்மைப் பெண்படைப்பாளி. கன்னட வசன இலக்கியத்தின் முக்கியமான ஆளுமை. அல்லமப்பிரபு, பசவண்ணர் வரிசையில் வைத்து மதிக்கப்படுபவர். இவர்கள் அனைவருமே வாழ்வனுபவத்தையும் ஆன்மிக அனுபவத்தையும் வசீகரமான வகையில் இணைத்து எழுதியவர்கள். சிவனை வெறும் இறையுருவமாக மட்டும் கருதாமல் நல்ல தோழனாக, நல்ல வழிகாட்டியாக, நல்ல துணையாக என பல்வேறு வடிவங்களில் உருவகிக்கின்றன இந்த வசனங்கள். இவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு சிவனை தன் உள்ளம் கவர்ந்த மாமனிதனாக உருவகித்து எழுதியிருக்கிறார் அக்கமகாதேவி. மல்லிகார்ஜுனன் மீது அவர் கொண்ட பற்றையும் விருப்பத்தையும்  புலப்படுத்தும் அக்கமகாதேவியின் பாடல்கள் நாராயணன் மீது காதல் கொண்டு பாடப்பட்ட ஆண்டாளின் பாடல்களைப் போன்றவை.