Home

Thursday 26 August 2021

புதிர் - சிறுகதை

  

குளித்து முடித்ததும் இருள் விலகாத கிழக்குத் திசையைப் பார்த்து நாராயணாஎன்று கணநேரம் கண்களை மூடி வணங்கிய பின்னர் குளத்திலிருந்து கரையேறினார் பெரியாழ்வார். பனி கவிழ்ந்திருந்தது. எனினும் உடல் முழுக்க வெப்பம் பரவியிருப்பதை உணர்ந்தார் அவர். கரையோரத்தில் பூச்செடிகள் அசைவற்று நின்றிருந்தன. ஒரு பக்கம் பனிமுத்துக்களைச் சுமந்த பூக்கள் மௌனமாகத் தலைகவிழ்ந்திருந்தன. பல்லாண்டு பல்லாண்டு...என்று முனகலுடன் முதல் பூவைக் கொய்து குடலையில் போட்டார். விரலிலும் மனத்திலும் வழக்கமான மலர்ச்சி எழாதது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

குருவே... ஒரு குடலை நிறைந்து விட்டதுஎன்று மேற்குத் திசைத் தோட்டத்திலிருந்து வந்து ஒரு சீடன் என்றான். பெரியாழ்வார் அவனை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தார். ஓடிப் போய் ஆண்டாளிடம் கொடுத்துவிட்டு வாஎன்றார். ஆழ்வாரின் குடில் இருந்த திசையில் வேகவேகமாக நடக்கத் தொடங்கினான் சீடன். ஏதோ நினைவு வந்தவராகப் பெரியாழ்வார். கொஞ்சம் நில்என்று அவனைப் பார்த்துச் சொன்னார். அக்குரல் கேட்டு நின்றான் சீடன். திரும்பிக் குருவின் முகத்தைப் பார்த்தான். அவர் சொல்லப் போகும் வார்த்தைகளுக்காகக் காததிருந்தான். பெரியாழ்வாரின் மனத்துக்குள் குழப்பம் அலைபாய்ந்தது. கட்டிய மாலையைக் சூடிக்கொண்டு தண்ணீர்த்தட்டில் தன் பிம்பத்தைப் பார்த்தபடி நின்ற ஆண்டாளின் கோலம் மீண்டும்மீண்டும் மனத்திலெழுந்தது. ஏதோ சொல்ல அவர் நாக்கு துடித்தது. தயக்கம் அந்த வார்த்தைகளைத் தொண்டைக்கடியில் அழுத்தியது. ஒன்றுமில்லை போஎன்று சொல்லிவிட்டுக் குனிந்து கொண்டார். குழப்பத்துடன் குடிலைநோக்கி நடக்கத் தொடங்கினான் சீடன்.

பெரியாழ்வார் பெருமூச்சுடன் மறுபடியும் மலர் கொய்யத் தொடங்கினார். இனம் புரியாத தடுமாற்றத்தில் தவித்தது அவர் மனம். அடிக்கடி நெஞ்சு அடைத்தது. குழப்பத்தில் இதயத்துடிப்பு கூடியது. குழப்பத்தை உதறுவது போலத் தலையை அசைத்துக்கொண்டார். தன்னிச்சையாக அவர் கைகள் மலர்களைக் கொய்தன.

மெல்லமெலல இருள் பிரியத் தொடங்கியது. பூமணம் தோட்டம் முழுக்க நிரம்பியிருந்தது. மதிலோர மரங்களின் கிளைகளில் சடசடவென்று சிறகடித்து எழுந்தன பறவைகள். உடைந்த மதிலுக்கு அருகிலிருந்த வேப்பங்கிளையில் குயிலொன்று கூவியது. விடிவதற்குள் தன் நெஞ்சில் தேங்கியிருக்கும் சோகத்தையெல்லாம் இசையாக்கிட வேண்டும் என்பதுபோல. முதலில் அந்தக் குரல் பெரியாழ்வாரின் அடிவயிற்றைப் பதறவைத்தது. பிறகு நெஞ்சம் இளகி உருகத் தொடங்கியது. அக்குயில் பாடுவது தன் சோகத்தைத்தான் என எண்ணியபோது அவர் இதயம் மேலும் கரைந்தது. நெகிழ்ச்சியில் தளர்ந்து கீழே விழுந்துவிடுவோமோ என எண்ணினார்.

சங்கடத்தில் தத்தளித்தபடி இருந்தார் அவர். பூக்களின் நடுவே ஆண்டாளின் சிவந்த முகம் சிரிப்பதுபோலத் தோன்றியது. புத்தம் புதுசாக நாராயணனுக்குக் கட்டிய மாலையைச் சூடிக்கொண்டு சுழன்றாடிய கோலம் நிழலாடியது. நேற்று அந்த நிலையில் ஆண்டாளைக் கண்டதும் நம்ப முடியாமல் உறைந்து போனார் பெரியாழ்வார். பூமி பிளப்பது போல அவர் இதயம் வெடித்து விட்டது. ஆண்டாள், என்ன காரியம் இது மகளே? ஆண்டவனுக்குக் கட்டிய மாலையை நீ அணியலாமா?” என்று பதற்றத்துடன் கேட்டார்.

அணிந்து பார்ப்பதில் என்ன தப்பு தந்தையே? நன்றாக இருக்கிறதல்லவா?” கொஞ்சும் குரலில் கேட்டாள் அவள். மகளின் இனிய குரலும் அப்பாவித்தனமான முகமும் அவர் கோபத்தைப் பெரிதும் தணித்தது. ஆண்டாள்என்று சொன்னபடி முன்னால் ஓடிவந்தார். அப்படிச் செய்வது தெய்வக் குற்றம் மகளே. அரங்கனின் கழுத்துக்குக் கட்டிய மாலைகளை அவனுக்குத்தானே அணிவிக்கவேண்டும். அதுதானே முறை. அது தானே பக்தி...

என் பக்தி பாசமாகிவிட்டது தந்தையே

அவள் குரல் விசித்திரமாக இருந்தது. அவள் கண்களின் வெளிச்சம் அவரைத் தடுமாறவைத்தது. பாசம் கனிந்து காதலாகவும் மலர்ந்து விட்டதுஎன்று மறுபடியும் சொன்னாள். பெரியாழ்வார் பதற்றத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்தார்.

ஆமாம் தந்தையே... நாராயணன் என்னை மணந்து கொண்டான் தந்தையே.

என்ன சொல்கிறாய் மகளே? என் தடுமாற்றம் புரியவில்லையா உனக்கு..-.-?” அவர் வார்த்தைகள் தடுமாறின. ஆண்டாள் எதையுமே பேசவில்லை. தன் கழுத்து மாலையைத் தானே ரசித்தபடி கனவில் அமிழ்ந்தவள்போலச் சிலையாக நின்றிருந்தாள். ஆண்டாள்கிட்டத்தட்ட அலறியபடி அவளை நெருங்கினார் பெரியாழ்வார். உன்னை வளர்த்துப் பெண்ணாக்க எவ்வளவு பாடுபட்டிருப்பேன் மகளே, அதெல்லாம் உனக்குச் சொன்னால் புரியாது, நீ வாய்திறந்து பேசவேண்டும், சிரிக்க வேண்டும் என்று எத்தனை நாளைக்குத் தவமிருந்து வளர்த்தேன் தெரியுமா? இப்படியெல்லாம் பேசி என்னைப் பதற்றத்துள்ளாக்குகிறாயே? ஆண்டாள், நீ என் உயிர் அம்மா, உயிர்.

அவர் பதற்றத்தையே அறியாதபடி கனவுலகில் அவள் கண்கள் மிதந்தலைந்தன. பரவசம் மின்னும் கன்னங்கள். சுருள் முடி அலையும் நெற்றி. தேன்சுவையில் திளைத்த நிறைவு ததும்பிய முகம். அவர் வார்த்தைகள் அவள் செவிகளில் விழவில்லை. அவரால் ஆண்டாளை நெடுநேரம் பார்க்க இயலவில்லை. மெதுவாக நகர்ந்து கூடத்தில் இருந்த பலகையில் அமர்ந்தார். என்ன பேசுகிறாள் இந்தப் பெண்? இவள் கண்களில் ஏன் இவ்வளவு பிரகாசம்? இவள் உடலில் ஏன் இத்தனை பூரிப்பு? அரங்கனை நேருக்கு நேர் பார்த்துப் பழகியது போல என்ன இப்படி ஒரு பேச்சு? ஐயோ ஒன்றும் புரியவில்லையேஎன்று கண்களை மூடிக்கொண்டார். தவறாக ஒரு சொல்லை உதிர்த்து மகளைப் புண்படுத்திவிடக்கூடாது என்று பற்களைக் கடித்துக்கொண்டார். தலை நரம்புகள் வெடிப்பதைப்போல புடைத்தெழுந்தன. தோட்டத்தில் பூச்செடியின் அருகில் அவளைக் குழந்தையாகக் கண்டெடுத்த கணத்திலேயே ஏதோ ஒரு கண் அவளைத் தீண்டிவிட்டதாக நினைத்தார். காயா மலர்வண்ணன் கண்ணன் கருங்குழல் தூய்தாக வந்து குழல் வாராய் அக்காக்காய்என்றபடி சதாகாலமும் மிகையான வரிகள் மிதக்கும் சூழலில் வளர்ந்தது பிழையோ என்று தோன்றியது. அந்த மிகையின் தூரிகையை அவள் மனம் தொட்டுவிட்டது. நாராயணா, ஏன் இப்படி ஆயிற்றப்பா?” என்று மனத்துக்குள் கதறினார். எளிய மகளாக, ஊரில் யாராவது நல்ல ஆண்மகனை மணந்து கண்முன்னால் செழித்து வாழ்வதைப் பார்க்கிற பேற்றைத் தரக்கூடாதா என்று உருகினார். அவர் கண்கள் தளும்பிவிட்டன.

தந்தையேஆண்டாள் அவரை நெருங்கித் தோள்களைத் தொட்டாள்”. என்ன தந்தையே?” என்று பரிவுடன் அருகில் உட்கார்ந்தாள். இன்னமும் அந்த மாலை அவள் கழுத்திலேயே இருந்தது.

எதற்காக இந்த அதிர்ச்சி-?” அவள் ஆதரவுடன் கேட்டாள். அந்தக் குரலின் குழைவில் அவா மனம் உடைந்தது.

உன் பேச்சு குழப்பம் தருகிறது மகளேதடுமாறும் குரலில் சொன்னால் பெரியாழ்வார்.

தந்தையே, குடந்தைக் கிடந்த வெங்கோவே குருக்கத்திப் பூச்சூட்ட வாராய் என்று பாடியது நீங்கள்தானே தந்தையே?”

ஆமாம் ஆண்டாள். அதற்கென்ன இப்போது?”

தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் என்று பாடியதும் நீங்கள்தானே தந்தையே?”

ஆமாம் அம்மா. அதையெல்லாம் ஏன் இப்போது நினைவு படுத்துகிறாய்-?-”

இப்படிச் சொல்லிச்சொல்லி நீங்கள்தானே தந்தையே வளர்த்தீர்கள். மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன் உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு என்று பேச்சு முளைக்காத நாள் முதல் சொல்ல வைத்தது நீங்கள்தானே தந்தையே? திருமால் செவிமடுக்கவேண்டும் என்கிற நம்பிக்கையில்தானே இதைச் செய்தோம். என் குரல் அந்த நம்பிக்குக் கேட்டுவிட்டது தந்தையே, அவருக்கு நான் சூட்டிய மாலையை அவர் எனக்குச் சூட்டினார் என்றால் ஏன் தந்தையே நம்ப மறுக்கிறீர்கள்?”

துதிப்பாடலுக்கும் வாழ்வதற்கும் வித்தியாசமுண்டு ஆண்டாள்

துதிப்பதே நன்றாக வாழ்வதற்காகத்தானே தந்தையே

அதில் என்ன சந்தேகம்?”

என் துதிப்பாடல் என்னை அவர் மேல் மையல் கொள்ள வைத்துவிட்டது தந்தையே. நாங்கள் மாலை மாற்றிக் கொண்டோம்                   ஆண்டாள்... நீ மிகைப்படுத்தி உணாகிறாய் அம்மா. எனக்குப் பயமாக உள்ளது மகளே...நடுங்கும் குரலில் சொன்னார் பெரியாழ்வார்.

அந்த நாராயணன் என்னைக் கைவிடமாட்டார் தந்தையே. அவர் என் நாதன். என் தெய்வம். என் பற்று. என் காதல்”.

உளறாதே ஆண்டாள்கோபத்தை அடக்க முயன்றபடி பலவீனமான குரலில் சொன்னார் பெரியாழ்வார். அவர் தோள்கள் நடுங்கின. வயிறு சுருங்கியது.

தந்தையே, உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தும் நோக்கம் எனக்கில்லை. உண்மையைச் சொன்னேன் நான். கண்ணனை நான் கண்டுகொண்ட கணத்திலிருந்து பற்பல பிறவிகளாக நானும் கண்ணனும் தொடர்ந்து வாழ்ந்துவருவதுபோலவே உணர்கிறேன். என் இதயம் வானத்தைப் போல விரிகிறது. ஏராளமான சிகரங்களின் முகடுகளைத் தாண்டி அந்த வானம் விரிகிறது. ஒரு பெருஞ்சுடரடாக அங்கே கண்ணன் உருவம் எழுகிறது. நின்று நிலைத்துக் கண்களைக் கூசும் அளவுக்குப் பிரகாசத்துடன் எரிகிறது அச்சுடர். அச்சுடரின் நுனியாக நான் மிதக்கிறேன். இந்த உணர்வை நான் எப்படி அடைந்தேன்? தெரியாது தந்தையே. பூக்களைக் கட்டிக்கொண்டு இருக்கும்போது திடுமென ஒரு கணத்தில் அப்படி உணர்ந்தேன். இக்குடிலின் மூலையில் ஏதோ பாடல்களை முனகியபடி உட்கார்ந்திருக்கும் என் மனத்தில் இக்கற்பனை பெருவெள்ளமாகக் கரைபுரண்டோடுகிறது. தடுக்க முடியாத வெள்ளம். அக்கண்ணனே என்னைத் தழுவுகிறான். அக்கண்ணனே என்னைக் கொஞ்சுகிறான். அக்கண்ணனே என்னைத் தாங்குகிறான். என் ஆகிருதி அவன் அணியும் மாலையில் ஒரு மலராகிவிடுகிறது. என் எண்ணங்கள் ஏன் இபபடி மாறினவோ?  அச்சுடருடன் கலந்துவிடவே விழைகிறேன். ஒரு பிறவிக்குத் தேவையான இன்பத்தை நுகர்ந்த பிறகு இனி பிறவி வேண்டாம் என்று கதறுகிறேன். கனவு வெளியில் கதறிக்கதறிச் சத்தமிடுகிறேன். ஏதோ ஒரு கை என்னை இடுப்பிலிருந்து குழந்தையை இறங்குவதுபோல இறக்கிக் கீழே விட்டுவிடுகிறது. நான் அழுது அரற்றி என் கோரிக்கையை முன் வைக்கிறேன். இரக்கம் கொண்டு அக்கரம் என்னை நோக்கி மறுபடியும் நீள்கின்றன. என்னை அள்ளிக் கொள்கின்றன. பெருஞ்சுடரின் விளிம்பினை அடைகிறேன். ஐயோ அந்தச் சுடரில் கலந்து ஒளியாகிறேன்...

போதும் ஆண்டாள் போதும்பெரியாழ்வார் பதற்றத்துடன் எழுந்தார். மகளைத் தழுவிக் கொண்டார். இனி நான் எதையும் கேட்கவில்லை மகளே. அமைதியாக இரு. உன் மன ஆவேசம் தணியட்டும்அவர் விரல்கள் அவள் முதுகை அமைதியாகத் தடவிக் கொடுத்தன. அவர் கண்கள் பெருவியப்புடன் கூடத்தின் மூலையிலிருந்த நாராயணனின் மூர்த்தியைப் பார்த்தன. எப்படிச் சாத்தியமாயிற்று இது? இந்தச் சின்னக் குழந்தைக்கு ஏன் இவ்வளவு பெரிய சோதனை கடவுளேஅவர் பெருமூச்சு வாங்கினார். ஒரு வேளை ஆண்டாளின் மனம் குழம்பியிருக்குமோ. அப்படி எண்ணத் தொடங்கியதும் அதிர்ச்சியில் உறைந்தது அவர் மனம். இது போன்ற பேச்சுதான் பித்தின் முதல் அடையாளமோ என்ற கேள்வி எழுந்தபோது அடிவயிற்றில் ஒரு நெருப்புப்பொறி விழுந்தது. என்ன முட்டாள்தனம்என்று மனத்தை அதட்டி அடக்கினார். ஆண்டாள் அதிர்ஷ்டக்காரி. அணுநேரமும் நாவால் துதிக்கிற தனக்கு அருளாத கண்ணன் விளையாட்டுப்பிள்ளைக்கு அருளை வழங்கி விளையாடுகிறான் என்று நினைத்தார்.

தந்தையே நான் நேற்று இரவு ஒரு பாடல் எழுதினேன்என்று குதூகலத்துடன் சொன்னபடி பேச்சின் திசையைத் திருப்பினாள் ஆண்டாள்.

பாட்டா-?” ஆச்சரியத்துடன் கேட்டார் பெரியாழ்வார்.

ஆமாம் தந்தையே. நீங்கள் கண்ணன் மீது கட்டுக்கட்டாக எழுதிய வைத்துள்ளீர்களே, அது போல. நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு வேதனை. உங்கள் சுவடியொன்றில்தான் எழுதினேன். காட்டட்டுமா?” குழைவான குரலில் கேட்டாள்.

காட்டு பார்ப்போம்பெரியாழ்வாருக்கும் விசித்திரமாக இருந்தது. அவ்வப்போது எழுதும் பாடல்களைப் படியெடுக்கவும் சுவடிகளை அடுக்கிக்கட்டவும் அவள்தான் உதவுவாள். சொந்தமாகப் பாடல் புனையும் அளவுக்கு வளர்ந்திருப்பது ஆச்சரியமாக இருந்தது. அறைக்குள் சென்ற ஆண்டாள் சிறிது நேரத்தில் ஒரு ஓலைச்சுவடியோடு வந்தாள்.

பாருங்கள் தந்தையேஆர்வத்துடன் நீட்டினாள்.

நீயே படி மகளே

படிக்கத் தயாரான நிலையில் சுவடியைச் சரி செய்தாள் ஆண்டாள். சட்டெனப் பெரியாழ்வாரின் பக்கம் திரும்பி தந்தையே, உங்கள் அளவுக்குப் பெரிய புலமையெல்லாம் இல்லை எனக்கு. வெறும் பூக்கட்டுகிற ஞானம்தான். சொற்களையும் ஏதோ இசையின் போக்கில் கட்டியிருக்கிறேன். கேட்ட பிறகு சிரித்துவிடக் கூடாதுஎன்று கட்டளையிடுவது போலச் சொல்லிச் சிணுங்கினாள். சிவந்த அவள் கன்னங்களில் நாணத்தின் சிவப்பும் கூடுதலாகப் படிந்தது. மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர், சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்லச் சிறுமீர்காள். கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாராயணனே நமக்கே பறைதருவான் பாரோர் புகழப் பழந்தேலோரெம்பாவாய்சட்டென்று அச்சூழல் ஆனந்தமயமானது. அச்சொற்களின் ஏற்ற இறக்கங்களின் வழியாக அலைஅலையாக ஆனந்தம் பரவியது. பெரியாழ்வாரின் கண்கள் நீர் சொரிந்தன. அருகே நின்ற ஆண்டாளை நெருங்கி ஆண்டாள், அற்புதமாக எழுதியிருக்கிறாயம்மாஎன்றார் பெருமை வெளிப்படும் குரலில். தொடர்ந்து இந்தத் தந்தையையே விஞ்சிவிட்டாய் மகளேஎன்றார். ஐயோ தந்தையே அப்படிச் சொல்லாதீர்கள்என்று பரபரப்புடன் அவர் வாயை மூடினாள் ஆண்டாள்.

குருவேஎன்றது சீடனின் குரல், “இரண்டாவது குடலையும் நிரம்பிவிட்டது

நினைவிலிருந்து மீண்டெழுந்தார் பெரியாழ்வார். நல்லது... போ, போய் ஆண்டாளிடம் கொடுத்துவிட்டு வாஎன்றார்.

குருவேஎன்றான் சீடன் மறுபடியும்.

என்ன?” என்று நிமிர்ந்தார் பெரியாழ்வார்.

உங்கள் குடலையும் நிரம்பிவிட்டது. குடலை நிறைந்து மலர்கள் கீழே விழுகின்றன

அப்போதுதான் முழுக்கச் சுய உணர்வை அடைந்தார் பெரியாழ்வார். குடலையைப் பார்த்தார். குடலை நிரம்பி இன்னொரு குடலை கொள்கிற அளவு கீழே விழுந்து கிடந்தன பூக்கள். சீடனை ஒருகணம் நிமிர்ந்து பார்த்தார் பெரியாழ்வார். மறுகணம் அவன் பார்வையைத் தவிர்ததபடி சரி, வா போகலாம்என்று குடிலை நோக்கி நடந்தார்.

புலரத் தொடங்கியது. தொலைவில் தலைநிமிர்ந்து நிற்கும் கோபுரம் தெரிந்தது. தெருவெங்கும் வாசல் தெளிக்கும் சத்தம். பசுக்கள் நடமாடும் சத்தம். பசுக்களின் கழுத்து மணிகளின் சத்தம். கன்றுக்குட்டிகளோடு விளையாடும் குழந்தைகளின் சத்தம். கோலம் போடும் பெண்களின் கைவளைச் சத்தம். மரத்தின் மறைவிலிருந்தபடி கோலம் போடும் இளம்பெண்களை அழைக்க ஆடவர்கள் எழுப்பும் விசித்திரமான சத்தம். பாதையில் நடந்தவர்கள் எல்லாரும் பெரியாழ்வாரின் வருகையைக் கண்டு ஒதுங்கி வழிவிட்டு நின்றார்கள்.

ஆண்டாளின் வார்ர்தைகளை மறுபடியும் அசைபோட்டது அவர் மனம். மாக்கோலம் போட்டுக் கொண்டும் பூக்களைக் கட்டிக் கொடுத்துக்கொண்டும் பசுக்களைக் கண்காணித்துக் கொண்டும் வாழும் எளிய பெண்ணல்ல அவள் இனி. மற்ற பெண்களைப் போல குடும்ப வாழ்வு இருக்காது அவளுக்கு. அப்படி நினைத்ததும் அவர் மனம் உடைவதுபோல இருந்தது. அவர் கனவுகள் வேறு விதமாக இருந்தன. மகள் பேரனைப் பெற்றுத் தருவாள். பேரனுக்கும் பெருமாளின் பாட்டைச் சொல்லித் தந்தபடி காலத்தை ஓட்டலாம். அதிருஷ்டம் இருந்தால் அவன் பிள்ளைக்கும் அரங்கனின் பாட்டைக் கற்பிக்கலாம் என்றெல்லாம் நினைத்திருந்தார். அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று அக்கனவுகளை மனத்துக்குள்யே பொசுக்கிக்கொண்டார். அவ்வெப்பம் பரவியதில் அவர் உடலில் வேர்வை வழிந்தது.

குடிலை அடைந்ததுமே ஆண்டாள் மாலையுடன் தயாராக இருந்தாள். அவள் முகத்தை முதல் முறையாகப் பார்ப்பதுமாதிரி பார்த்தார் பெரியாழ்வார். எவ்வளவு ஆனந்தம்? எவ்வளவு பரபரப்பு?

ஆண்டாளும் பெரியாழ்வாரும் சீடனும் ஆலயத்தை நோக்கி நடந்தார்கள். ஏதோ ஐயம் பெரியாழ்வாரை உறுத்தியது. எப்படிக் கேட்பது என்று தயங்கினார். சட்டென சீடனின் பக்கம் திரும்பி அந்தக் குட¬லையை என்னிடம் கொடு. அனுமனுக்கு இன்னொரு குடலைப்பூ வேண்டுமே, ஓடு ஓடு, பறித்துக் கொண்டுவாஎன்று விரட்டினார். எதுவும் புரியாமல் திரும்பித்திருப்பிப் பார்த்தபடி நகர்ந்தான் சீடன். சில கணங்களுக்குப் பிறகு தடுமாற்றத்துடன் ஆண்டாள். மாலை.. இன்றும்....என்று தொடங்கினார்.

சூடிப் பார்த்துத்தான் கொண்டுவந்தேன் தந்தையேபுன்சிரிப்பு மாறாமல் சொன்னாள் ஆண்டாள்.

ஐயோ குழந்தையே, தெய்வக்குற்றம். புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கிறாயேஎன்று அடிக்குரலில் நொந்து கொண்டார்.

இதில் குற்றம் என்ன வந்தது தந்தையே? அவரே எனக்கு அப்படித்தான் ஆணை இட்டிருக்கிறார் தெரியுமா?”

கவடில்லாமல் அவளிடமிருந்து எழுந்த அக்குரலைக் கேட்டதும் அவர் நெஞ்சே வெடித்துவிடும்போல இருந்தது. நாராயணா என்று முனகலுடன் கணநேரம் கண்களை மூடித் திறந்தார். பிராகாரத்தைக் கடந்து கருவறையை நோக்கி நடந்தன அவர் கால்கள். புஷ்பயக்ஷனின் சிலையைக் கடந்து உள்ளே நடந்தார். பெரிய மண்டபத்தில் கல் தூண்களில் அழகழகான சிற்பங்கள். எல்லாம் கண்ணனின் வாழ்க்கைச் சித்திரங்கள். நடுநடுவே நடனப் பெண்களின் சிற்பங்கள். ஏதோ ஒரு -தூணில் தெரிந்த சிலை ஆண்டாள்போல இருந்தது.

கருவறைக்குள்ளிலுந்து பட்டர் வந்து பெரியாழ் வாரிடமிருந்து குடலைகளையும் ஆண்டாளிடமிருந்து மாலையையும் வாங்கிச் சென்றார். பெரியாழ்வார் கண்களை மூடி மனத்தை ஒருமுகப்படுத முயன்றார். சில கணங்களுக்குப் பின், கண் மூடிய நிலையிலேயே மாதவத்தோன் புத்திரன்போய் மறிகடல்வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தானு£ர்....என்று தொடங்கினார். அக்குரல் கம்பீரமாக எங்கும் விரிந்து நிறைந்தது. எங்கிருந்தோ வந்த காற்றில் தீபங்கள் நடுங்கித் துடித்தன. மணியோசையின் நாதம்போல் அவர் குரல் மெல்லமெல்ல பரவத் தொடங்கியது. சொற்களும் தாளக்கட்டும் தாமாகக் கூடி ஆறாகப் பெருகின. ஒவ்வொரு சொல்லும் முழுமையான இசையுடன் கூடி வந்தது. எல்லாப் பக்கங்களிலிருந்தும் இசையின் துணுக்கு ஊறிவந்து, கலந்து, வழிந்து பொங்கியது. கண்ணுக்குப் புலப்படாத, வெளி வரைக்கும் இசையாலான ஒரு திடல் எழுந்து நிற்பதுபோல இருந்தது. பாடல் வரிகள் இதயத்தை வருடின முதலில், அப்புறம் ரத்தத்தைத் தொட்டன. மெல்ல மண்டபத்தில் நிறைந்திருந்த ஒவ்வொருவரையுமே ஒரு சொல்லாக மாற்றி மிதக்க வைத்தது. நெடுநேரம் பொழிந்த இசைமழையில் அவர் மனத்துயரம் மறைந்து வெறுமை எஞ்சியது. அவர் மார்பில் கண்ணீர் வழிந்தது. தொண்டை விம்மியது. நிதானமாக அவர் சுயநினைவுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

அவர் கண்திறக்கக் காத்திருந்ததைப் போலப் பட்டர் கருவறையின் திரைகளை விலக்கினார். சட்டென முழவுகள் முழங்கின. கருவறையின் தீபங்கள் கண்களைக் கூச வைத்தன். ஒரு கணம் எதுவும் புரியவில்லை. பெரியாழ்வார் உற்றுப் பார்த்தார். அரங்கனின் உருவம். பூரண அலங்காரக் கோலம். அருகில் அரங்கநாயகி. அசையாது எரியும் இரு சுடர்கள் போல இருந்தன சிலைகள். பெரியாழ்வார் ஆண்டாள் பக்கம் திரும்பினாள். அவளுக்கு அவள் நிலையை உணாத்த நல்ல தருணம் என்று தோன்றியது அவருக்கு. ஆனால் அவள் இந்த உலகத்திலேயே இல்லை. கண்கள் மூடியிருந்தன. உதடுகள் எதையோ முணுமுணுத்தன. முகத்தில் கொஞ்சுதல் பாவம்.

ஆண்டாள்பதில் இல்லை. ஆண்டாள்மறுபடியும் கூப்பிட்டபோது அவள் கண்கள் திறந்தன. அவள் முகத்தில் ஆனந்தத்தின் ரேகை குறைவுபடாமல் இருந்தது.

ஆண்டாள், கருவறையில் அரங்கனைப் பார்த்தாயா? இன்று பூரண அலங்காரம்

ஆமாம் தந்தையே. என் மனமும் உடம்பும் சிலிர்க்கின்றன. பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போல உள்ளது

அங்கே பக்கத்தில் யார் உள்ளார் தெரிகிறதா ஆண்டாள்?”

            தெரிகிறது தந்தையே

நான்தான் தந்தையே

ஒரு கணம் அதிர்ந்து போனார் பெரியாழ்வார். ஆண்டாள் என்ன உளறுகிறாய்?” என்றார் சந்நிதியில் குரல் சற்றே உயர்ந்துவிட்டதோ என்று தவித்தார்.

ஆமாம் தந்தையே. அது நான்தான்அவள் பார்வை அரங்கனின் மீது பதிந்து கிடந்தது. குழப்பத்துடன் கருவறையின் பக்கம் திரும்பினார் பெரியாழ்வார். ஏதோ ஒரு ஒளி அவரை நோக்கி இழுப்பதுபோல இருந்தது. அரங்கநாயகியின் மீது அந்த ஒளி இறங்கியது. கருவறையே ஒரு சுடராக மாறி அலைந்தது. வேகவேகமாக நெளியும் சுடர், மெல்ல அது தணிந்து நிலைபெற்று பொலிந்தது. கருங்கூந்தலுடனும் மஞ்சள் ஆடையுடனும் ஒரு கையில் தாமரைப் பூவுடனும் மறுகையில் அபய முத்திரையுடனும் வீற்றிருந்தது நாயகியின் கோலம். கருமை மின்னும் முகத்தின் கண்கள் திடுமெனத் திறந்தன. பெரும் ஒளிவெள்ளம். ஆண்டாள் முகம் அது. அதே கண்கள். அதே சுருள் முடி. அதே நெற்றி. அதே கன்னம். அதே -குழைவு. கனவு காண்பதுபோல இருந்தது. மறுகணம் எண்ணங்களின் ஓட்டம் தடைபட அந்த உருவத்தின் தோற்றம் தந்த அதிர்ச்சியில் பேச்சு வராமல் உறைந்து நின்றார். அவசரமாக அருகில் திரும்பிப் பார்த்தார். மீண்டும் கண்மூடித் தியானத்தில் ஆழ்ந்துவிட்டிருந்தாள் ஆண்டாள். அதே அவசரத்தோடு கருவறையைப் பார்த்தார். பரவசம் ததும்பும் ஆண்டாளின் முகமே அங்கும் தெரிந்தது. வெளியே மணி ஒலித்தது. உடனே உள்ளே மண்டபமணிகள் ஒலிக்கத் தொடங்கின. மங்கல இசை எழும்பியது. பட்டர் குடலையிலிருந்து ஒவ்வொரு மலராய் எடுத்துக் கருவறையில் அர்ப்பணம் செய்யத் தொடங்கினார். மண்டபம் முழுக்க நாராயணகோஷம் எழுந்தது.

குழப்பத்திலிருந்து தெளிவு பெற முடியாமல் நினைவுகளின் உள்முகமாகச் சரிந்தார் பெரியாழ்வார். ஆண்டவனே, யார் இந்த ஆண்டாள்? இவளை ஏன் அனாதையாகப் பிறக்கவைத்தாய்? என் பார்வையில் அவளை ஏன் காட்டினாய்? தந்தைப் பாசத்தை ஏன் உணரவைத்தாய்? அவள் எப்படி என்னை ஏற்றுக் கொண்டாள்? அவளும் நீயா? நானும் நீயா? எல்லாமே நீயா? எனக்கு ஏன் புரியவில்லை? எந்தப் பாசம் என்னைத் தடுக்கிறது?” அவர் தொண்டை விம்மியது. நெஞ்சு ஏறித் தாழ்ந்தது. கைகளைத் தலைக்குமேலே -தூக்கினார். அவர் விழிகள் தளும்பத் தொடங்கின.

 

(இந்தியா டுடே, 2000)