Home

Sunday, 1 August 2021

புன்னகையும் பரவசமும்

 

காந்தியடிகள் தன் வாழ்க்கைவரலாற்றைசத்திய சோதனைஎன்னும் தலைப்பில் நூலாக எழுதியுள்ளார். அதில் அவர் தன் குழந்தைப்பருவத்தைப் பற்றி ஒருசில அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார். ஒருமுறை அவர் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்தார். அரிச்சந்திரனின் வாய்மை தவறாத பண்பு அவரைக் கவர்ந்தது. சத்தியத்தின் மீது அரிச்சந்திரன் கொண்டிருக்கும் பற்று எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வழங்கிவிடுவதைப் பார்த்து அவர் வியப்படைந்தார். தன் வாழ்நாளில் சத்தியமே தனக்குரிய வழி என அக்கணத்தில் காந்தியடிகள் முடிவெடுத்தார்.

ஒரு மனிதனுக்குள் உருவாகும் மாற்றத்துக்கு ஓர் எளிய கதை தூண்டுகோலாக அமையும் என்பதைப் புரிந்துகொள்ள இந்தச் சம்பவம் நல்லதொரு எடுத்துக்காட்டு.

அந்தக் காலத்தில் கணக்குப் பாடத்தில் கூட கதை கலந்திருந்தது. ஒரு பசு ஒரு மரத்தில் பத்து மீட்டர் நீளமுள்ள கயிற்றால் கட்டப்பட்டிருக்கிறது. கயிற்றின் கடைசிவிளிம்பு வரைக்கும் சென்ற பசு அந்தப் புள்ளியிலிருந்து புல்லை மேய்ந்தபடி வட்டப்பாதையில் நடந்து சென்று மீண்டும் தொடங்கிய புள்ளிக்கே வந்து சேர்கிறது. பசு நடந்த தூரத்தின் அளவு என்ன? ஒரு காட்சி. ஒரு கதை. அதை மனத்துக்குள் விரிவாக்கிப் பார்க்கும் ஒரு சிறுவனோ அல்லது சிறுமியோ விடையை மிக எளிதாகத் தொட்டுவிடுவார்கள். பத்து மீட்டர் ஆரமுள்ள வட்டத்தின் சுற்றளவு என்ன என்கிற இன்றைய கேள்வியின் நேற்றைய வடிவம் இது.

ஒரு கணக்கைப் புரியவைப்பதற்குக் கூட ஒரு கதை தூண்டுகோலாக அமைவது சாத்தியம். ஒரு கோணத்தில் கதை வழியாகவே சிக்கலான சமூக உண்மைகளையும் தத்துவங்களையும் கூட புரியவைத்துவிட முடியும். அந்த அளவுக்கு கதை ஆற்றல் வாய்ந்த ஊடகமாகும்.

சூழியல் துறை இந்தியாவில் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில் உருவாகி, இயற்கைவளங்கள் சார்ந்த பல உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்கியது. காடு ஏன் இருக்கவேண்டும், விலங்குகள் ஏன் வாழவேண்டும், ஏரிகளும் குளங்களும் ஆறுகளும் ஏன் எப்போதும் இருக்கவேண்டும் என்ற கேள்விகளுக்கெல்லாம் சூழியல் விடைகளை எடுத்துரைத்தது. விலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்கும் சட்டம் முதன்முதலாக நிறைவேறியது.

ஆயினும் அதைப்பற்றிய சரியான புரிதலோ தெளிவோ இல்லாத சிலரால் தொடர்ந்து சூழியல் சிதைக்கப்பட்டுக்கொண்டெ இருக்கிறது. எனவே அதைக் குறித்த விழிப்புணர்ச்சியை மக்களிடையில் உருவாக்குவதை சமூக ஆர்வலர்கள் தம் கடமையாக எடுத்துக்கொண்டனர். சமூக ஆர்வலரும் படைப்பாளியுமான உமையவன் சூழியல் சார்ந்த சில  உண்மைகளை கதைகள் வழியாக எடுத்துரைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். தங்க அருவி ரகசியம் அவருடைய நல்லெண்ணங்களின் வெளிப்பாடு

தங்க அருவி ரகசியம் கதையில் மலையில் அலைந்து களிக்கும் இரு சிறுவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். வழக்கமாக மலைப்பயணம் சார்ந்த கதைகளில் அச்சமூட்டும் அம்சங்கள் இடம்பெறும். பேய்களும் பூதங்களும் பேசி வழிமறிக்கும். திருடர்கள் வந்து தடுப்பார்கள். அசரீரிச் சத்தங்கள் கேட்கும். குதிரைகள் பாய்ந்தோடும் சத்தம் கேட்கும். இளவரசனோ அல்லது இளவரசியோ பாறையோடும் மரத்தோடும் கட்டப்பட்டு வதைக்கப்படுவார்கள். கதையில் சுவாரசியத்துக்காக ஒருவித திகைப்பையும் அச்சத்தையும் உருவாக்கி வைப்பார்கள்.

ஆனால் உமையவனின் மலைப்பயணத்தில் நெல்லிமரங்களையும் இலந்தை மரங்களையும் தேக்கு மரங்களையும் சிறுவர்கள் பார்க்கிறார்கள். வற்றாமல் ஓடும் நீர்நிலையைப் பார்க்கிறார்கள். உலர்ந்த இலைகளை மடித்து படகு செய்து தண்ணீரில் ஓடவிடுகிறார்கள். ஒரு பஞ்சவர்ணக்கிளி வந்து அவர்களுக்கு மலையுச்சியில் உள்ள அருவிக்குச் செல்ல வழி சொல்கிறது. உற்சாகமூட்டி அழைத்துச் சென்று அருவியின் முன்னால் நிறுத்துகிறது. சாயங்கால செஞ்சூரியனின் ஒளிக்கற்றைகள் அருவியின் மீது பட்டுத் தெறிக்கும்போது தங்கம் பளப்பளப்பதுபோல சுடர்விடுகிறது. மலைக்காட்சிகளை ரசிக்கும் கலையை இந்தச் சிறுகதை உருவாக்குகிறது. மலை என்பது கல்லும் முள்ளும் மரமும் ஓடையும் இருக்கும் இடம் மட்டுமல்ல, அது உயிர்த்தொகுதியின் உறைவிடம் என்பதை  சொல்லாமல் சொல்லிப் புரியவைக்கிறது.

இடும்பவனம் காட்டுக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இடையில் உள்ள உறவைப் புரிந்துகொள்ள துணைசெய்கிறது. சுவாரசியத்துக்காக ஒரு முட்டாள் அரசனின் கதையைச் சொல்வதுபோல அது தொடங்கினாலும் இறுதியில் இயற்கைக்கும் பறவைகளுக்கும் இடையிலான சமன்பாட்டை உணர்த்தும் கதையாக முடிவடைகிறது. மக்கள் தமக்கு உணவாகவேண்டிய பழங்களையெல்லாம் பறவைகள் சாப்பிட்டுவிடுவதால் பசியோடு இருக்கிறார்கள் என்னும் சொற்களைக் கேட்டு பறவைகளை வேட்டையாடும்படி ஆணையிடுகிறான் அரசன். அதன் விளைவாக குறுகிய காலத்திலேயே காடே அழிவதை அவன் உணர்ந்துகொள்கிறான். முட்டாள்தானே தவிர அவன் பிடிவாதக்காரன் அல்ல. அதனால் உடனடியாக உண்மையை உணர்ந்து காட்டின் வளர்ச்சிக்கு உதவும் பறவைகளையும் விலங்குகளையும் பரிவோடு பார்க்கத் தொடங்குகிறான்.

எலி, எறும்பு, கறையான், வெட்டுக்கிளி, தேனீ, கிளி போன்ற எளிய பிராணிகளும் யானைகள் போன்ற பெரிய விலங்குகளும் உமையவனின் சிறுகதைகளில் இடம்பெற்றிருக்கின்றன. பறவைகள் செய்யும் இயற்கை விவசாயம் சிறுகதையில் மனிதர்கள் விதைத்து வளர்த்திருக்கும் பயிரை உண்ணவேண்டாம் என முடிவெடுத்து, பறவைகள் தமக்குரிய உணவை தாமே விதைத்து உண்ணலாம் என்ற எண்ணத்துடன் கூடி செயல்படும் சிறுகதையின் மையம் புன்னகையையும் பரவசத்தையும் அளிக்கிறது. யானை உழுவதும் குளத்திலிருந்து தும்பிக்கையால் நீரை நிரப்பி எடுத்துவந்து தெளிப்பதும் பறவைகள் விதைப்பதும் கொக்குகள் மண்புழுவைக் கொத்தி எடுத்துவந்து உரமாகப் போடுவதும் நல்ல வளமான கற்பனை.

இத்தொகுதியில் பத்து சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உண்மையை முன்வைக்கிறது. உமையவனின் மொழி சிக்கலற்ற நேரிடையான மொழி. எந்தக் கருத்தும் கவனத்திலிருந்து பிசகிவிடாதபடி சின்னச்சின்ன வாக்கியங்களையே உமையவன் பயன்படுத்துகிறார். சிறுவர்சிறுமியர் அனைவரும் இச்சிறுகதைகளை விரும்பிப் படிப்பார்கள் என்பது உறுதி. வாழ்த்துகள்.

 

(தங்க அருவியின் ரகசியம் என்னும் தலைப்பில் சூழலியல் தொடர்பாக உமையவன் எழுதிய சிறார் சிறுகதைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரை)