Home

Sunday 1 August 2021

கன்னடப் பெண்படைப்பாளிகள் : சவால்களும் சாதனைகளும்

 

 அக்கா என கன்னட இலக்கிய உலகத்தாரால் அன்போடு அழைக்கப்பெறும் அக்கமகாதேவி என்கிற மகாதேவி அக்காவே கன்னட மொழியின் முதன்மைப் பெண்படைப்பாளி. கன்னட வசன இலக்கியத்தின் முக்கியமான ஆளுமை. அல்லமப்பிரபு, பசவண்ணர் வரிசையில் வைத்து மதிக்கப்படுபவர். இவர்கள் அனைவருமே வாழ்வனுபவத்தையும் ஆன்மிக அனுபவத்தையும் வசீகரமான வகையில் இணைத்து எழுதியவர்கள். சிவனை வெறும் இறையுருவமாக மட்டும் கருதாமல் நல்ல தோழனாக, நல்ல வழிகாட்டியாக, நல்ல துணையாக என பல்வேறு வடிவங்களில் உருவகிக்கின்றன இந்த வசனங்கள். இவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு சிவனை தன் உள்ளம் கவர்ந்த மாமனிதனாக உருவகித்து எழுதியிருக்கிறார் அக்கமகாதேவி. மல்லிகார்ஜுனன் மீது அவர் கொண்ட பற்றையும் விருப்பத்தையும்  புலப்படுத்தும் அக்கமகாதேவியின் பாடல்கள் நாராயணன் மீது காதல் கொண்டு பாடப்பட்ட ஆண்டாளின் பாடல்களைப் போன்றவை.

பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஷிமோகா மாவட்டத்தில் உடுத்தடியில் பிறந்த அக்கமகாதேவி இளமைப்பருவத்திலிருந்தே சென்னமல்லிகார்ஜுனன் மீது ஈடுபாடு கொண்டிருந்தார். ஆண்டாள், மீரா வழியில் மனத்தளவில் சென்னமல்லிகார்ஜுனனிடம் தன்னை ஒப்படைத்தவராகவே அவர் வாழ்ந்தார்.  குடும்ப வாழ்க்கையையும் அரண்மனையையும் செல்வங்களையும் துறந்ததோடு மட்டுமன்றி தன் ஆடைகளையும் துறந்து தன் நீண்ட கூந்தலாலேயே தன் உடலை மறைத்து திகம்பரியாக ஊரைவிட்டு வெளியேறி ஸ்ரீசைலம் திருமலையை நோக்கி நடக்கத் தொடங்கினார். மிகவும் குறுகிய காலமே அவர் உயிர்வாழ்ந்திருந்தாலும் ஏறத்தாழ முன்னூற்றைம்பது வசனங்களை அவர் எழுதினார். ஒவ்வொரு வசனமும் அவர் மல்லிகார்ஜுனன் மீது அவர் கொண்டிருந்த அன்பையும் நெருக்கத்தையும் வெவ்வேறு கோணங்களில் முன்வைப்பவை.

மல்லிகார்ஜூனன் நிலையானவன். ஆதியும் அந்தமுமாக இருப்பவன். அதனால் தன்னையே மல்லிகார்ஜூனனிடம் ஒப்படைத்துவிட்டவர்களின் வாழ்க்கை நிலைத்திருக்கிறது. அவனன்றி மற்ற விஷயங்கள்பால் தன்னை ஒப்படைத்துவிட்டவர்களின் வாழ்க்கை நிலையற்றுச் சிதைந்து போகிறது. அதை நுட்பமாக உணர்த்தும் விதமாக ஒரு வசனத்தை எழுதியிருக்கிறார் அக்கமகாதேவி.

தண்ணீரால் மேடை செய்து

நெருப்பால் பந்தலெழுப்பி

ஆலங்கட்டியாலான மணைவைத்து

நெற்றியில் திருமணப்பட்டம் கட்டி

காலில்லாத மனைவிக்கு

தலையில்லாத கணவன்

   வந்து சேர்ந்தான் பாராய்

என்றும் நிலையான வாழ்வுக்கு

என்னைக் கொடுத்தார்

சென்னமல்லிகார்ஜூனனிடம்

இந்த வசனத்தில் திருமணச்சடங்கைப்பற்றிய குறிப்புகள் நிறைந்திருக்கின்றன. ஒவ்வொரு குறிப்பும் அந்த நிலையற்ற தன்மையைச் சுட்டிக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, அங்கே அமைக்கப்பட்டிருக்கும் மேடை மரச்சட்டங்களால் ஆன மேடை அல்ல. மாறாக தண்ணீரால் கட்டியெழுப்பப்பட்ட மேடை. பந்தலும் மூங்கிலாலோ கீற்றுகளாலோ உருவானதல்ல. நெருப்பால் ஆன பந்தல். மணையும் அப்படியே. ஆலங்கட்டியாலான மணை. காலில்லாத மனைவி என்பதும் அழகான சொல்லாக்கம். சுதந்திரத்தை அடையாளப்படுத்துகிறவகையில் கால் ஒரு குறியீட்டுச் சொல்லாகவே பயன்படுகிறது. சுதந்திரம் உள்ளவள் மல்லிகார்ஜூனனையே தேர்ந்தெடுப்பாள். சுதந்திரம் அற்றவளே, மற்றவர்களை ஏற்றுக்கொண்டு நிலையற்ற வாழ்வை வாழத் தொடங்குகிறாள். தனக்குக் கிட்டிய சுதந்திரத்தின் அடிப்படையிலேயே மல்லிகார்ஜூனனிடம் ஆட்பட்டதாக அக்கமகாதேவி சொல்வது கவனிக்கத்தக்கது.

மல்லிகார்ஜுனனினுடைய நட்பின் தன்மையைப்பற்றி முன்வைக்கும் மற்றொரு வசனம் கவித்துவம் நிறைந்தது.

அஞ்ஞானிகளின் நட்பு

கல்லை உரசி

நெருப்பைப் பெறுவதுபோல

அறிந்தவர்களின் நட்பு

தயிரைக் கடைந்து

வெண்ணெய் பெறுவதுபோல

உன் சரணர்களின் நட்பு

கற்பூரமலையில்

நெருப்பு பற்றிக்கொள்வதுபோல

சென்னமல்லிகார்ஜூய்யா

சரணர்களுடைய நட்பே கற்பூரமலையில் நெருப்பு பற்றிக்கொள்வதுபோல இருந்தால் சென்னமல்லிகார்ஜூனுடைய நட்பின் தன்மை எவ்விதமானது என்பதை சொல்லாமல் சொல்கிறது வசனம்.

மல்லிகார்ஜூனனைப்பற்றிய நினைவு இல்லாத ஒரு மனம் எப்படி இருக்கக்கூடும் என்பதைப்பற்றிய ஒரு சித்திரத்தையும் அக்கமகாதேவி வழங்கியுள்ளார்.

   இற்றுப்போன மரத்தில்

பூச்சிகள் புகுந்துகொள்வதுபோல

ஆள் இல்லாத வீட்டில்

நாய் நுழைந்துகொள்வதுபோல

மன்னன் இல்லாத நாட்டை

எதிரிகள் சூழ்ந்துகொள்வதுபோல

உடலுக்குள் உங்கள் நினைவற்றுப்போனால்

பூதம் பேய் பிசாசுகள் புகுந்துகொள்ளும்

சென்னமல்லிகார்ஜூனய்யா

தன்னை நட்புடன் ஏற்றுக்கொண்ட மல்லிகார்ஜூனன் தன்னை இல்லறவாழ்வைநோக்கித் தள்ளியதன் காரணத்தை அக்கமகாதேவியால் புரிந்துகொள்ள முடியவில்லை.  மல்லிகார்ஜூனனிடமே நேரிடையாகக் கேட்க அவள் மனம் துடிக்கிறது. ஆனால் அதற்குத் துணிச்சலில்லை. ஒருவித சங்கடமான மனநிலையில் இப்படி செய்துவிட்டாயே மல்லிகார்ஜூனனே என்று மட்டும் ஆற்றாமையோடு கேட்டபடி அடிக்கடி பெருமூச்சு விடுகிறாள். அந்தச் செயலைச் சுட்டிக்காட்ட வசனத்தில் பயன்படுத்தப்படும் உவமைகள் அழகானவை.

ஆயிரம் பொன்னுக்கு

வாசனைப்பொருட்களை வாங்கி

அவற்றில் சுண்ணாம்பைக் கலந்துவிட்டதுபோல

மூன்று லட்சம் பொன்னுக்கு

ரத்தினங்களை வாங்கி

அவற்றை மடுவில் எறிந்ததுபோல

என்னைத் தீண்டிப் புனிதமாக்கிப் பின்

துயர்தரும் சம்சாரத்தில்

ஒப்படைத்துவிட்டாயே அய்யா

சென்னமல்லிகார்ஜூய்யா

பக்தி காலகட்டத்துக் கவிதைகள் அனைத்தும் முக்திக்கான வழியைக் கேட்கும் வேண்டுகோள்களால் நிறைந்திருக்கும் நிலையில் பக்தியின் பரவசத்தை முன்வைப்பவையாக உள்ளன அக்கமகாதேவியின் வசனங்கள். அதுவே அவர் சிறப்பு.

 

நீ கேட்டால் கேள்

கேளாவிட்டால் விடு

உன்னைப் பாடாமல்

நான் இருக்கமாட்டேன்

நீ கருணை காட்டினால் காட்டு

காட்டாவிட்டால் விடு

உன்னை பூசிக்காமல்

நான் இருக்கமாட்டேன்

நீ விரும்பினால் விரும்பு

விரும்பாவிட்டால் விடு

உன்னைத் தழுவிக்கொள்ளாமல்

நான் இருக்கமாட்டேன்

நீ பார்த்தால் பார்

பார்க்காவிட்டால் விடு

உன்பைப் பார்த்து மகிழ்ந்து புகழாமல்

நான் இருக்கமாட்டேன்

நான் உன்னைப் பூசித்து

பரவசத்தில் ஆடுவேனய்யா

சென்னமல்லிகார்ஜூனய்யா

அக்கமகாதேவியைத் தொடர்ந்து கொத்தநாட சோமவ்வா, சூலெ சங்கவ்வா போன்ற பெண்வசனகாரர்களின் வசனங்களும் சொல்லழகும் பொருளழகும் கொண்டவையாக உள்ளன.

நவீன கல்வியை நோக்கி பெண்கள் செல்லத் தொடங்கியதுமே கன்னடமொழியில் முதல்தலைமுறை படைப்பாளிகள் உருவாகத் தொடங்கிவிட்டனர்.  உரைநடைப்பயிற்சியும் கவிதைப்பயிற்சியும் அவர்களை படைப்பாளிகளாக உருமாற்றின. ஹரப்பனஹள்ளி பீமவ்வா (1822-1902) .முக்கியமான படைப்பாளி. வாய்மொழிக்கதைகளாக வழங்கிவந்த பல செய்திகளை அவர்  நல்ல உரைநடையில் படைப்புகளாக மாற்றினார். அவர் எழுதிய சுபத்ரா கல்யாணம், நளசரிதம், ரதி கல்யாணம், பதிதான கொட்ட ஹாடு, சகுந்தலன ஹாடு அனைத்தும் அந்த வரிசையில் வைத்து கவனிக்கத்தக்கவை.

கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், ஆய்வு என எல்லாத் தளங்களிலும் தீவிரமாகச் செயல்பட்டு பெண் எழுத்துக்கு ஒரு விரிவான களத்தை தொடக்க காலத்திலேயே உருவாக்கி அளித்த பெருமை நஞ்சன்கூடு திருமலாம்பா (1887-1982) அவர்களையே சாரும். 93 வயது வரை வாழ்ந்த அவர் ஏறத்தாழ முப்பது நூல்களை எழுதி வெளியிட்டார். அன்றைய காலகட்ட வாழ்வியல் விதிகளுக்கு இணங்க அவருக்கு பத்து வயதில் திருமணம் நடைபெற்று , 14 வயதில் விதவையானவர். மற்றவர்களைப்போல வீட்டில் முடங்கிவிடாமல் திருமலாம்பாளுக்கு கல்விப்பயிற்சியைக் கொடுத்து பெரிய கல்விமானாக்கினார்  அவருடைய தந்தையார். கன்னடம், தமிழ், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் ஆழ்ந்த பயிற்சியைப் பெற்றார். தன் துயரத்தை எண்ணி தன்னிரக்கம் கொண்டு வீட்டில் முடங்கிக் கிடப்பதைவிட தன்னைப்போன்ற பெண்களின் துயரங்களைத் தீர்க்க உழைப்பதே தன் முக்கிய கடமையென முடிவெடுத்து பெண்களுக்காக பள்ளிகளையும் காப்பகங்களையும் தொடங்கி நடத்தினார். தன் வீட்டுக்கே மாத்ரு மந்திர என்று பெயர் சூட்டினார். சன்மார்க்க தர்ஷினி என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி பெண்களுக்குப் பயன்படும் வகையில் ஏராளமான சிறுசிறு பிரசுரங்களை வெளியிட்டு வழங்கினார். மதுரவாணி, கர்நாடக நந்தினி, சன்மார்க தர்ஷ என ஏராளமான இதழ்களை நடத்தினார். இவற்றில் வெளியிடுவதற்காகவே பல்வேறு தலைப்புகளில் அவரே பல கட்டுரைகளை எழுதினார். விலாசினி, தட்சகன்யா, விக்ரம, மாத்ருநந்தினி, பூர்ணகலா என பல நாவல்களை எழுதினார்.

திருமலாம்பாவின் சமகால எழுத்தாளர்களில் பல பெண்படைப்பாளிகளும் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர் திருமலை ராஜம்மா. இவர் நாடகத்துறையில் காட்டிய ஆர்வம் குறிப்பிடத்தக்கது. கபட நாடகம், தபஸ்வினி, மகாசதி, ஸ்வர்க நிராசன, துந்துபி, உன்மத்த பாமினி ஆகிய நாடகங்கள் முக்கியமானவை.

இன்னொரு முக்கியமான பெண்படைப்பாளி பெலகெரெ ஜனகம்மா. வெறும் முப்பத்தாறு ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்ந்த அவரே நவீன கன்னடக் கவிஞர்களில் முதல் பெண்கவிஞர். தமிழன்னை என்னும் படிமத்தைப்போல கன்னடத்தாய் என்னும் படிமத்தை முதலில் உருவாக்கியவர் இவர். கன்னட மொழியை தாயாகவும் கன்னடியர்கள் அனைவரையும் அவளுடைய பிள்ளைகளாகவும் உருவகித்து அவர் பாடிய சிறிகன்னடம் என்று தொடங்கும் பாடல் இன்றளவும் அனைவரும் விரும்பும் பாடலாகவும் மேடைதோறும் ஒலிக்கும் பாடலாகவும் உள்ளது. 

ஜனகம்மாவைப்போல சிறுகதைத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர் கொடகின கெளரம்மா. ஜனகம்மாவைப்போலவே அவரும் மிகக்குறைந்த காலம் மட்டுமே இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்தார். இருபத்தேழு வயது மட்டுமே அவர் இந்த மண்ணுலகில் வாழ்ந்தார். அவர் எழுதிய சிறுகதைகள் இன்றும் மதிக்கப்படுகின்றன. அவர் படைப்பாளியாக மட்டுமன்றி நல்ல சமூகத்தொண்டராகவும் பணியாற்றினார். தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுக்காக நிதி திரட்டும்பொருட்டு காந்தியடிகள் இந்தியாவெங்கும் பயணம் செய்தபோது கர்நாடகத்திலும் பயணம் செய்தார். அப்போது அவர் மேடையில் ஆற்றிய உரையைக் கேட்டு தான் அணிந்திருந்த எல்லா நகைகளையும் அக்கணமே கழற்றி அவரிடம் அன்பளிப்பாக அளித்தார். அவருடைய மறைவுக்குப் பிறகே அவருடைய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு கெளரம்மா சிறுகதைகள் என்னும் தலைப்பில் வெளிவந்தது.

கிரிபாலெ என்கிற சரஸ்வதி பாய் ராஜ்வாடே மற்றொரு குறிப்பிடத்தக்க படைப்பாளி. அவருடைய தாய்மொழி மராத்தி. அவருடைய பெற்றோர் உடுப்பியில் குடியேறியதையடுத்து அவர் கன்னட மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். அவருடைய தந்தையார் சிறுமியாக இருந்த அவரையும் வயிற்றில் மற்றொரு குழந்தையைச் சுமந்துகொண்டிருந்த அவர் அம்மாவையும் துறந்து குடும்பத்தைவிட்டு வெளியேறிவிட்டார். அப்போது வயிற்றில் கருவாக இருந்த குழந்தையை கலைப்பதை ஒட்டி உருவான விவாதத்தில்   அப்பாவின் திட்டத்துக்கு அம்மா உடன்படவில்லை என்பதே காரணம். ஆதரவற்ற சூழலில் கடும் வறுமையில் தாயும் மகளும் கிடைத்த வேலைகளைச் செய்து உயிர்பிழைத்தனர். சிறுமியான அவர் மேடை நாடகங்களிலும் ஊமைப்படங்களிலும் சிறுசிறு பாத்திரங்களில் நடித்தும் பாடகியாகப் பாடியும் ஈட்டிய வருமானத்தில் அந்த ஆதரவற்ற குடும்பம் உயிர்பிழைத்தது.  துயரம் அவருடைய வாழ்வில் தொடர்கதையாகவே இருந்தது. பதினைந்து வயதில் அவரைவிட முப்பத்தேழு ஆண்டு மூத்தவரான அம்பிகாபதி ராயசாஸ்திரி ராஜவாடே என்பவருக்கு அவர் திருமணம் செய்துவைக்கப்பட்டார். அவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் டெபுடி கலெக்டராக பணியாற்றிவந்தார். இருவருக்கும் இடையிலான குடும்ப வாழ்க்கை நிம்மதியை அளிக்கவில்லை. ஏராளமான கசப்புகளுக்கு இடையில் ஒரே கூரையின் கீழ் இருவரும் தனித்தே வாழ்ந்தனர்.

குடும்ப வாழ்க்கையில் தனக்குக் கிடைத்த தனிமையை புத்தகங்களை வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் பயன்படுத்திக்கொண்டார் சரஸ்வதிபாய். இல்லற வாழ்வில் பெண்கள் படும் துயரங்களும் இளம்வயதில் விதவைகளாக்கப்படும் பெண்களின் அவலநிலைகளும் அவருடைய படைப்புகளுக்குக் களங்களாக அமைந்தன. தன் முதல் இரு நாவல்களையும் தன் சொந்தப் பெயரிலேயே எழுதி வெளியிட்டார். அதற்குப் பிறகே அவர் தனக்கு கிரிபாலெ என்று புனைபெயரைச் சூட்டிக்கொண்டார். சுப்ரபாத என்ற இலக்கிய இதழைத் தொடங்கி பாதிக்கப்பட்ட பெண்களின் குரல்கள் பரவுவதற்கு வழிவகுத்தார்.

திருமலாம்பா, ராஜம்மா, கெளரம்மா, கிரிபாலெ ஆகிய நால்வருமே ஒருவகையில் கன்னட உரைநடை இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளிகள் என்று சொல்லலாம். கலப்புத்திருமணம், விதவைத்திருமணம், குழந்தைத்திருமணமுறை எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டோர் மேம்பாடு, பெண்கல்வி ஆகிய கருக்களையொட்டி தம் படைப்புகளை எழுதி வெளியிட்டனர். அவர்களுடைய படைப்புகள் மீது சமூக கவனம் குவிந்தது.

கெளரம்மாவின் வழியில் சிறுகதைகளை எழுதியவர் சாவித்ரம்மா. அந்தக் காலத்தில் நாற்பதுகளில் தங்கப்பதக்கத்துடன் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தவர். நான்கு முன்னோடிப் படைப்பாளிகளைப்போலவே தீவிரத்துடன் படைப்புத்துறையில் இயங் வந்தபோதும் மொழிபெயர்ப்புத்துறையிலும் ஆர்வத்துடன் பங்காற்றினார் சாவித்ரம்மா. லூயி ஃபிஷரின் காந்தி புத்தகத்தை கன்னடத்தில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர். ஆன்டன் செகாவ் சிறுகதைகளையும்  தாகூரின் கோரா நாவலையும் கன்னடத்தில் மொழிபெயர்த்து அறிமுகம் செய்தார். சீதை, இராமன், இராவணன் ஆகிய இராமாயணக்கதைப் பாத்திரங்களை மையமாகக் கொண்டு அவர் மூன்று நாவல்களை எழுதிய முன்னோடியாகவும் திகழ்ந்தார் அவர். புராணப்பாத்திரங்களை விரிவான பின்னணியில் மீட்டுருவாக்கம் செய்து படைப்பாக்க முயற்சியில் புதியதொரு பாய்ச்சலை நிகழ்த்தினார்.

இரண்டாம் தலைமுறைப் படைப்பாளிகளின் முக்கியமான சாதனையாளர் எம்.கே.இந்திரா. அவருடைய சுயசரிதை இலக்கியப் படைப்பைப்போலவே இன்றளவும் வாசிக்கப்படும் நூலாகும். பதினொன்று சிறுகதைத்தொகுதிகளையும் நாற்பது நாவல்களையும் இவர் படைத்துள்ளார். கெஜ்ஜெபூஜெ, பணியம்மா, சதானந்த, ஹூபான ஆகியவை இவருடைய முக்கியமான நாவல்கள். இவை அனைத்தும் பல முக்கியமான இயக்குநர்களால் திரைப்படமாக எடுக்கப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. துங்கபத்திரை என்ற தலைப்பில் இவர் எழுதிய முதல் நாவல் சாதி கடந்த காதலையும் மோதலையும் களமாகக் கொண்ட படைப்பாகும். அதை வெளியிடுவதாக வாங்கிய பதிப்பகத்தார் அந்த நாவலின் உள்ளடக்கத்தால் சீண்டப்பட்டு வெளியிடவில்லை. வேறு யாரும் வெளியிட்டுவிடக் கூடாது என்னும் நோக்கத்தால் அந்தக் கையெழுத்துப் பிரதி தொலைந்துவிட்டதாக அவர் கைவிரித்துவிட்டார். ஆனால் இந்திரா அதை நினைத்து மனம் துவண்டுவிடாமல், தன் நினைவிலிருந்து முழு நாவலையும் மீண்டும் எழுதி வெளியிட்டார்.

இந்திராவைப்போலவே வாசகர்களால் மிகவும் விரும்பப்பட்ட மற்றொரு முக்கியமான எழுத்தாளர் திரிவேணி. முப்பத்தைந்து வயது மட்டுமே வாழ்ந்த திரிவேணியின் முழுப்பெயர் அனுசுயா சங்கர். அவரும் பட்டப்படிப்பை முடித்தவர். இருபது நாவல்களையும் மூன்று சிறுகதைத்தொகுதிகளையும் எழுதியவர். மனவியல் கோணங்களில் பல்வேறு பாத்திரங்களை வடிவமைத்து அவர்களுடைய மன எழுச்சிகளையும் குழப்பங்களையும் வெற்றி தோல்விகளையும் தம் படைப்புகளில் சித்தரித்தார். அவள மனெ, ஷரபஞ்சர, பெக்கின கண்ணு, ஹூவு ஹன்னு, முச்சித பாகிலு ஆகிய நாவல்களை வாசகர்கள் இன்றும் விரும்பிப் படிக்கிறார்கள்.

மூன்றாம் தலைமுறை எழுத்தாளர்களின் முக்கியமானவர் அனுபமா நிரஞ்சனா. மருத்துவத்தில் பட்டம் பெற்று தார்வாட் நகரில் பணியாற்றியவர். சிறுகதை, நாவல், சுயசரிதை, சிறுவர் இலக்கியம், பயண நூல்கள் என எல்லாத் தளங்கள் சார்ந்தும் எழுதினார். இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை தம் வாழ்நாளில் எழுதி வெளியிட்டார். அனந்த கீதெ, தாயிமகு, தாம்பத்ய தீபிகெ ஆகியவை இவருடைய முக்கியமான நாவல்கள். மகாபாரதப் பின்னணியில் அவர் எழுதிய மாதவி என்னும் நாவல் குறிப்பிடத்தக்க சாதனைப்படைப்பாகும்.

நான்காம் தலைமுறை எழுத்தாளர்களில் மிகப்பெரிய சாதனைப் படைப்பாளி வைதேகி என்கிற ஜானகி ஸ்ரீநிவாசமூர்த்தி. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, வாழ்க்கைவரலாறு என எல்லாத் தளங்களிலும் அவர் எழுதினார். காளிதாசரின் சாகுந்தலம் நாடகக்கருவை மறுவாசிப்பு செய்யும் விதமாக அவர் எழுதிய சகுந்தலையுடன் ஒரு மாலைப்பொழுது என்ற நீள்கதை மிக முக்கியமான படைப்பு.

மேரி கியூரியின் வாழ்க்கை வரலாற்றை கன்னடத்தில் எழுதி படைப்புலகில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிக்கொண்டவர் நேமிச்சந்திர. அதைத் தொடர்ந்து அவர் எழுதிய சிறுகதைகளும் நாவல்களும் வாசக கவனம் பெற்றன. இரண்டாம் உலகப்போரை மையமாகக் கொண்ட அவருடைய யாத்வஷேம் என்னும் நாவல் தேசிய அளவில் கவனிக்கப்பட்டது. ஒரு கன்னடக் குடும்பத்தின் ஆதரவில் வளர்ந்து, அவர்களுடைய மகனையே மணம் செய்துகொண்டு பெங்களூரில் வாழும் ஒரு யூதப்பெண் தன் முதுமைக்காலத்தில் தன் வேர்களைத் தேடி ஜெர்மனி, அமெரிக்கா, இஸ்ரேல் என பல இடங்களில் பயணங்களை மேற்கொள்கிறார். இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் நிகழும் மோதல்களுக்கு நடுவில் நிகழும் இந்தப் பயணங்கள் இரண்டாம் உலகப்போரையும் அதன் பின்னணிகளையும் விளைவுகளையும் விரிவாக முன்வைக்கின்றன.

கன்னட மொழியில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர் மும்தாஜ் பேகம். எழுத்தாளர் எம்.கே.இந்திராவின் நாவல் கையெழுத்துப் பிரதி தொலைந்ததுபோலவே மும்தாஜ் பேகம் எழுதிய தபஸ்வி என்னும் நாவல் கையெழுத்துப்பிரதியும் தொலைந்துவிட்டது. என்ன காரணத்தாலோ, மும்தாஜ் பேகம் அந்த நாவலை மீண்டும் எழுத ஆர்வம் காட்டவில்லை. சில ஆண்டுகள் கழித்து பரதேசி என்னும் தலைப்பில் மற்றொரு நாவலை எழுதி வெளியிட்டார். அந்த நாவல் அவருக்கு மிகப்பெரிய அளவில் புகழை ஈட்டித் தந்தது.

சாரா அபுபக்கர் மிகமுக்கியமான படைப்பாளி. மெட்ரிக் படிப்பை முடித்த முதல் முஸ்லிம் பெண்மணி. இஸ்லாமியப் பெண்களின் நிலைமையை உள்ளது உள்ளபடி சமரசமின்றி படைப்புகளில் சுட்டிக் காட்டியவர். பெங்களூர் வாழ்வில் நிகழும் சுரண்டல்களை தன் படைப்புகளில் முன்வைத்தவர். முற்போக்கு எண்ணம் கொண்டவர். அவர் எழுதிய சந்திரகிரி ஆற்றங்கரையில் என்னும் நாவலை தமிழில் தி.சு.சதாசிவம் மொழியாக்கம் செய்துள்ளார். சாரா அபுபக்கர் எழுதிய முஸ்லிம் ஹுடுகி ஷாலெ கல்தித்து சிறந்த கன்னடச்சிறுகதைகளின் ஒன்றாகும்.

நாவல்களிலும் நாடகங்களிலும் ஆழ்ந்த ஆர்வம் கொண்ட படைப்பாளி கீதா நாகபூஷண். சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர். பன்னிரண்டு நாடகங்களையும் இருபத்தேழு நாவல்களையும் அவர் எழுதியுள்ளார். பதுக்கு, ஹசி மாம்ச மத்து ஹத்துகளு ஆகியவை அவருடைய முக்கியமான நாவல்கள்.

பத்திரிகையாளராகவும் கவிஞராகவும் பத்தி எழுத்தாளராகவும் களச்செயல்பாட்டாளராகவும் விளங்குபவர்  பிரதிபா நந்தகுமார். துள்ளலும் துடுக்குத்தனமும் சீற்றமும் சினமும் படிந்த பார்வையுடைவை இவருடைய கவிதைகள். ‘நாவு ஹுடுகியரு ஹீகேஎன்னும் தலைப்பில் இவருடைய கவிதைகள் முதன்முதலாக 1979இல் தொகுதியாக வெளிவந்து சமூககவனம் பெற்றன. இவருடைய கவடையாட்டம் என்கிற கவிதைத்தொகுதி இவருக்கு புகழைத் தேடிக் கொடுத்தது. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் புதுவகையான பெண் கவிதை எழுத்து உருவாவதற்கு பிரதிபா நந்தகுமாரின் கவிதைகள் நல்லதொரு தொடக்கத்தை அளித்தன. தனகா, ரஸ்தெயஞ்சின காடி, ஆக்ரமண போன்ற பல தொகுதிகளை அவர் எழுதி வெளியிட்டார். பிரதிபா நந்தகுமாரின் சுயசரிதை அனுதினத அந்தரகங்க என்னும் தலைப்பில் வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றது.

பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் கவிஞராகவும் விளங்குபவர் விஜயா தப்பே. 1975இல்இருத்தவெஎன்னும் கவிதைத்தொகுதி வழியாக இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தவர். கவிஞராக மட்டுமன்றி, களச்செயல்பாட்டாளராகவும் அவர் செயல்பட்டு வருகிறார். பாலியல் சமத்துவம், குடும்பத்தில் நிகழும் கொடுமைகள், குழந்தைத்திருமணம், வரதட்சிணைக்கொடுமை, சாதி வேறுபாடுகள் சார்ந்த விழிப்புணர்வை உருவாக்கியதில் முனைப்பாக செயலாற்றிவருகிறார்.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் நான்கு தலைமுறைகளில் பெண் எழுத்துகளில் உருவான போக்குகள் மேலும் மேலும் விரிவும் ஆழமும் கொண்ட பார்வையோடு வளர்ந்து பெருகியதை கன்னட இலக்கிய நிகழ்ந்த மாபெரும் சாதனை என்றே சொல்லவேண்டும். ஒரு தொடக்கத்தை மென்மேலும் வீச்சு கொண்டதாகவும் ஆழம் நிறைந்ததாகவும் முன்னோக்கிச் செலுத்துவது சாதாரண செயலல்ல. உண்மையான ஆர்வமும் உழைப்பும் அர்ப்பணிப்புணர்வும் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அந்த விசையை பெண்படைப்பாளிகள் கன்னட இலக்கிய உலகத்துக்கு அளித்தனர். கவிஞராகவும் சிறுகதையாசிரியாகவும் நாவலாசிரியர்களாகவும் லாவண்யா, ரோகிணி, சுமித்ராபாய், பி.டி.ஜான்னவி, லலிதா சித்தபசவையா, மமதா சாகர், சவிதா நாகபூஷண, நாகவேணி, ஷரிஃபா போன்ற பல சாதனைப் படைப்பாளிகளை உள்ளடக்கிய அந்தப் பட்டியல் மிகவும் நீண்டது.

 

(30.07.2021 அன்று சென்னை சாகித்திய அகாதமி நடத்திய இந்தியப் பெண்படைப்பாளிகள்இணையவழிக் கருத்தரங்கில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம்)