Home

Sunday, 15 August 2021

என் வாழ்வில் புத்தகங்கள் - புதிய புத்தகம்

 

ஐந்தாண்டுகளுக்கு முன்பாக தொலைபேசி வழியாக எனக்கு அறிமுகமானவர் பிரபு. பெங்களூரில் அவர் வசித்த அடுக்ககம் இருபது கிலோமீட்டர் தொலைவில் புறநகரில் இருந்தது. தம் அடுக்ககத்தில் வசித்துவரும் சிறுவர்களுக்கும் சிறுமியருக்கும் ஒவ்வொரு மாதமும் முதல் வார ஞாயிறு அன்று மாலையில் ஒரு மணி நேரம் கதை கூறும் நிகழ்ச்சியை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். அடுத்தநாள் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு நான் கதைசொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 


வீட்டு ஜன்னல் வழியாகக் கூட வெளியே எட்டிப் பார்க்கவிடாமல் பிள்ளைகளை வளர்க்கும் அடுக்ககச்சூழலில் இவர் எப்படி பிள்ளைகளைத் திரட்டுகிறார், எப்படி கதை சொல்கிறார் என்பதெல்லாம் எனக்கு வியப்பாக இருந்தது. என்னமோ ஒரு வசியசக்தி அவரிடம் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். உடனே அந்தச் சூழலை நேரில் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. எனவே, நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாகச் சொல்லிவிட்டேன்.

 

மறுநாள் மாலையில் பிரபுவின் நண்பரே என் வீட்டுக்கு வந்து அழைத்துச் சென்றார். அவருடைய அடுக்கக வளாகம் மிகப்பெரியது. குறைந்தபட்சம் நூறு வீடுகள் இருக்கும். அக்கம்பக்கத்தில் மேலும் சில அடுக்ககங்கள் இருந்தன. எல்லாவற்றிலும் ஒரு சில வீடுகளில் தமிழ்க்குடும்பங்கள் இருந்தன. அக்குடும்பங்களில் குழந்தைகளும் இருந்தார்கள். பிரபு முதலில் குழந்தைகள் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பெற்றோரை நேரில் சந்தித்து தம் நோக்கத்தைப்பற்றி விரிவாகச் சொல்லி ஏற்றுக்கொள்ள வைக்க முயற்சி செய்திருக்கிறார்.

 

அடுக்ககத்தின் கீழ்த்தளத்தில் உள்ள சிற்றரங்கம்தான் நிகழ்ச்சி நடைபெறும் இடம். முதல் மாதத்தில் அவருடைய பிள்ளைகளையும் சேர்த்து பத்து பிள்ளைகள் கலந்துகொண்டனர். எண்ணிக்கையைப் பற்றி கவலைப்படாமல் பிரபுவும் பிரபுவுடைய நண்பர்களும் அந்தப் பிள்ளைகளுக்கு சிரிக்கச்சிரிக்க பாட்டும் கதையும் சொல்லி மகிழ்ச்சியில் திளைக்க வைத்துவிட்டார்கள். நல்வாய்ப்பாக, இந்தக் குழந்தைகள் வழியாகவே செய்தி மற்ற அடுக்ககங்களில் பரவ, இரண்டாவது மாதத்தில் இன்னும் பத்து பிள்ளைகள் கூடுதலாக வந்து சேர்ந்தார்கள்.

 

நிகழ்ச்சி இரண்டு மணி நேரம். முதலில் பாட்டு. பிறகு கதை. அப்புறம் ஓவியம். தமக்குத் தெரிந்த பாடல்கள், கதைகள் எல்லாவற்றையும் அவர்கள் சொல்லிமுடித்ததும் புதிய பாடல்களுக்கும் கதைகளுக்கும் புத்தகங்களைத் தேடிச் சென்றனர். இப்படியே சில மாதங்கள் சமாளித்துவிட்டனர். ஒருநாள் யாராவது புதுமுகம் வந்து கதைசொன்னால் பிள்ளைகளுக்கு சலிப்பு தோன்றாமல் இருக்குமென அவருக்குத் தோன்றியிருக்கிறது. எப்படியோ என் பெயர் நினைவுக்கு வர, உடனே அவர் எனக்கு அழைப்பு விடுத்தார். வாகனத்தில் செல்லும்போதே எல்லாச் செய்திகளையும் அந்த நண்பரிடம் பேசி தெரிந்துகொண்டேன்.

 

அன்று முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். குழந்தைகளின் பெற்றோர்களும் வந்து அரங்கத்துக்கு வெளியே நின்று வேடிக்கை பார்த்தனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஒரு சிறுமியே முதலில் ஒரு கதையைச் சொல்லி தொடங்கவைத்தாள். இன்னொரு சிறுமி பாட்டு பாடினாள். பிறகு பிரபுவும் பிள்ளைகளும் சேர்ந்து ஒரே குரலில் அரங்கமே அதிர ஒரு பாட்டை குதித்துக் குதித்துப் பாடினார்கள். நானும் அதை கைதட்டியபடி வேடிக்கை பார்த்தேன். சில நொடிகள் கழிந்த பிறகுதான் அவர்கள் பாடிக்கொண்டிருந்த பாடல் நான் எழுதிய பாடல் என்று புரிந்தது. பிள்ளைகள் இந்த அளவுக்கு நேர்த்தியாக அந்தப் பாட்டின் உயிரோட்டத்தைப் புரிந்துகொண்டிருந்த விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இறுதியாக நான் அவர்களுக்கு ஒரு கதையும் ஒரு பாட்டும் சொன்னேன். அத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

 

குழந்தைகளைக் கவர்வதற்காக பிரபு அப்போது ஒரு பத்திரிகையைத் தொடங்கியிருந்தார். அதன் பெயர் பஞ்சுமிட்டாய். குழந்தைப்பாடல்கள், அறிவியல், கதை, விளையாட்டுக்குறிப்பு என பல அம்சங்கள் நிறைந்த வகையில் கணிப்பொறியின் உதவியோடு அச்சடித்த தாட்களைச் சேகரித்து தைத்து இரண்டு மூன்று பிரதிகளை உருவாக்கி குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக சுற்றுக்கு அனுப்பிவைத்தார்.

 

அடுத்த ஆண்டிலேயே பஞ்சுமிட்டாயை அச்சிதழாக மாற்றினார் பிரபு. வண்ணவண்ணத்தாள்கள். அழகான அச்சு. நல்ல அருமையான படங்கள். சுவையான பாடல்கள்.

 

அதற்கடுத்த ஆண்டில் பஞ்சுமிட்டாய் என இணைய இதழ் ஒன்றை அவர் தொடங்கினார். ஒவ்வொரு பக்கத்திலும் அவருடைய அழகுணர்ச்சி வெளிப்படும் வகையில் ஓவியங்களையும் பாடல்களையும் கதைகளையும் அவ்விதழில் அவர் சேர்த்தார்.

ஒருநாள் அந்த இணைய இதழின் வடிவமைப்பைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, பேச்சோடு பேச்சாக அந்தக் காலத்தில் நான் படித்த படக்கதைப் புத்தகங்களில் பிரசுரமாகும் அழகான படங்களைப்பற்றிச் சொன்னேன். பிறகு பல்வேறு வகையான கதைப்புத்தகங்கள் தொடர்பாக அந்தப் பேச்சு நீண்டுகொண்டே சென்றது. அன்று நான் சொன்ன செய்திகளையெல்லாம் பிரபு மிகவும் ஆர்வத்துடன் கேட்டார். பேச்சின் முடிவில் பால்ய காலத்தில் படிக்கிற பழக்கம் வந்து சேர்ந்த என் அனுபவங்களை ஒரு தொடராக எழுதும்படி கேட்டுக்கொண்டார். நினைவுகளை எழுதிப் பார்ப்பது என்பது எனக்கு எப்போதும் பிடித்தமான செயல். அது கடந்துபோன பழைய கணங்களை மீண்டும் ஒருமுறை கனவுக்காட்சியென நிகழ்த்திப் பார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது.

 

என் வாழ்வில் புத்தகங்கள்தொடர் இப்படித்தான் உருவானது. 2019, 2020 ஆண்டுகளில் ஒவ்வொரு மாதமும் இரண்டு கட்டுரைகளை அவருக்காக எழுதி அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அந்தந்த நேரத்தில் நினைவுக்கு வரும் நிகழ்ச்சிகளையே கட்டுரைகளாக விரித்தெழுதினேன். இருபத்தைந்து கட்டுரைகள் எழுதிய பிறகு தொடரை முடித்துக்கொண்டேன்.

 

ஓராண்டாக, அக்கட்டுரைகள் என் கோப்பிலேயே இருந்தன. போன மாத இறுதியில் இக்கட்டுரைகளுக்கு ஒரு புத்தகவடிவம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எல்லாக் கட்டுரைகளையும் மீண்டும் ஒருசேர படித்துமுடித்தேன். அப்போது நிகழ்ச்சிகள் முன்னும் பின்னுமாக தாவித்தாவிச் செல்வதை உணரமுடிந்தது. இன்னும் சில முக்கியமான நிகழ்ச்சிகள் விடுபட்டிருப்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது. அவற்றையெல்லாம் புதிதாக எழுதி இணைத்தேன். எல்லாவற்றையும் தொகுத்து வைத்துக்கொண்டு வரிசைப்படி ஒரே மூச்சில் படித்துமுடித்தபோது, ஒரு பாலகனாக அம்புலிமாமா கதைகளிலிருந்து தொடங்கி, எங்கெங்கோ சென்று, ஆண்டுக்கணக்கில் கைக்குக் கிட்டியதையெல்லாம் ஆசையோடு படித்து, எதிர்பாராத விதமாக அழகிரிசாமியின் கதையையும் ஜெயகாந்தன் கதையையும் சென்று சேர்ந்த என் இளம்பருவத்து வாழ்க்கையின் பதிவாக மாறியிருப்பதை உணர்ந்தேன். என்னை நானே கோட்டோவியமாக வரைந்துகொண்டதுபோல இருந்தது. கண்கள் நிறைந்து தளும்பிய அப்பொற்கணங்களை எனக்கு வழங்கிய இந்த வாழ்க்கைக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

 

இந்தக் கனவை எனக்குள் விதைத்த பஞ்சுமிட்டாய் பிரபுவை இக்கணத்தில் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். ஒவ்வொரு கட்டுரையையும் எழுதி முடித்த கணத்திலேயே முதல் வாசகியாக படித்தவள் என் அன்பு மனைவி அமுதா. என் முயற்சிகளில் எல்லாத் தருணங்களிலும் உறுதுணையாக இருந்துவரும் அமுதாவுக்கு என் கனிந்த அன்பு. என் பள்ளித்தோழன் பழனியும் இக்கட்டுரைகளை தொடர்ச்சியாக வாசித்துவந்தான். எனக்கு மட்டுமன்றி, இந்தப் பள்ளி நினைவுகள் அவனுக்கும் சொந்தமானவை. அவனுடைய உரையாடல்கள் என் நினைவுகளைச் சரிபார்த்துக்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவனுக்கும் என் அன்பார்ந்த நன்றி.

 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கோவிந்தையர் பள்ளி, அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி என மூன்று பள்ளிகளில் என் இளமைக்காலம் கழிந்தது. முதல் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்பு வரைக்கும் எனக்கு ஆசிரியர்களாக அமைந்தவர்கள் அனைவருமே தெய்வமென மதிக்கத்தக்கவர்கள். நல்வாய்ப்பாக, அனைவருமே என் மீது அன்பு கொண்டிருந்தார்கள். எல்லா ஆசிரியர்களுக்குமே வகுப்பில் நான் செல்லப்பிள்ளை. யாருமே என்னுடைய முழுப்பெயரையும் சொல்லி அழைத்ததில்லை. வீட்டில் உள்ள உறவுக்கார சிறுவனை அழைப்பதுபோலவே பாசு என்றோ, பாஸ்கர் என்றோ சுருக்கமாக அழைப்பதுதான் வழக்கம். ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களே என்னை வழிப்படுத்தினார்கள். துயரம் நிறைந்த தருணங்களில் ஆறுதல் வழங்கி உறுதிகொள்ளச் செய்தார்கள். அவர்கள் எனக்கு ஆசிரியர்கள் மட்டுமல்ல, என் பெற்றோருக்கு இணையானவர்கள். நவநீதம், கண்ணன், தா.மு.கிருஷ்ணன், பானுமதி, ராமசாமி, அதியமான், சௌந்திரராஜன், திருநாவுக்கரசு, ரங்கநாதன், குலசேகரன், வெங்கடேசன், தங்கபத்மனாபன், ராமனாதன், ராதாகிருஷ்ணன், சாம்பசிவம் ரெட்டியார், சுப்பையா என என் ஆசிரியர் பட்டியல் மிகவும் நீண்டது. இப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் அவர்களுடைய நினைவுகளால் நிறைந்திருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் இந்தப் புத்தகத்தை வணக்கத்துடன் சமர்ப்பணம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வளவனூர் கிளைநூலகப் பணியாளர் பாண்டியன் அண்ணனையும் இரெட்டியார்பாளையம் கிளைநூலகப் பணியாளர் முருகவேள் அண்ணனையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். புத்தகத்தை மிகச்சிறந்த முறையில் வெளியிட்டிருக்கும் என் அன்புக்குரிய நண்பரும் பதிப்பாசிரியருமான சந்தியா நடராஜனுக்கு என் மனமார்ந்த நன்றி.