இத்தொகுப்பில் 60 கவிதைகள் உள்ளன.
வோர்ட்ஸ்வொர்த், தாமஸ் ஹார்டி, தாமஸ் க்ரே, ஷெல்லி, டென்னிசன், ஆலிவர் கோல்ட்ஸ்மித், கீட்ஸ் ஆகிய ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளும் சில ஆப்பிரிக்கக் கவிதைகளும்
ரசூல் கம்சுதேவின் ரஷ்யமொழிக் கவிதைகளும் தாகூரின் கவிதைகளும் இவற்றில் அடங்கும்.
சுவையும் பொருளும் குன்றாத வகையில் மிக அழகிய தமிழல் இக்கவிதைகளைத்
தமிழாக்கியுள்ளார் தங்கப்பா. இவை அனைத்தையும் இனிய மரபுக்கவிதை வடிவில் செய்திருப்பது
மேலுமொரு சிறப்பாகும். மொழிபெயர்ப்பு என்னும் குறிப்பு இல்லாவிடில் இக்கவிதைகள்
அனைத்தும் தமிழிலேயே புனையப்பட்டவை என்று சொல்வதில் யாருக்கும் தடையிருக்காது.
தங்கப்பாவின் சொல் தேர்வும் பொருத்தமாக அவற்றைக் கையாளும் விதமும் கவிதைகளுக்கு
அழகைச் சேர்க்கின்றன. எளிமையும் தெளிவும் அழகும் இவரது சொந்தக் கவிதைகளுக்கு
எப்போதும் பெரும் வலிமையாக இருப்பவை. மொழிபெயர்ப்புகளுக்கும் இவையே வலிமையாகத்
திகழ்கின்றன.
மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கவிஞர்கள் அனைவரும் நவீன யுகத்துக்கு முந்தைய
காலத்தைச் சேர்ந்தவர்கள். அழகின் வழியே இயற்கையையும் இயற்கையின் வழியே இறைவனையும்
தரிசிக்கும் ஆசையும் ஆற்றலும் மிகுந்தவர்கள் அவர்கள். அழகான ஒரு மலரைப் பாடினாலும்
தும்பியைப் பாடினாலும் இயற்கையின் தரிசனத்தை மானுடர்க்கு நுட்பமாகச்
சுட்டிக்காட்டும் புள்ளிகளாக அவற்றை மாற்றிவிடும் வலிமை மிகுந்தவர்கள் . அக்கவிதைகளின்
மூல வடிவத்தில் படிந்திருந்த அதே பரவசத்தோடும் துடிப்போடும் எழுச்சியோடும்
தமிழிலும் முன்வைத்திருக்கும் தங்கப்பாவின் சொல்லாட்சித் திறமை பாராட்டுக்குரிய
ஒன்றாகும்.
இம்மொழிபெயர்ப்புத் தொகுதியில் இடம்பெற்றுள்ள தாமஸ் ஹார்டியின் ‘வாலாட்டிக்குருவியும் குழந்தையும் ‘ என்ற கவிதை மிக முக்கியமான ஒன்றாகும். மொத்தத் தொகுப்பின் தொனிப்பொருளைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் கவிதையாக இதைக்கொள்வதில் தவறில்லை. மிக எளிய
சித்தரிப்புத்தன்மையை உடைய இக்கவிதை முடியும் போது உருவாகும் மனஅலைகள் எளிதில்
அடங்குவதில்லை. கவிதையில் ஒரு வாய்க்கால் இடம்பெறுகிறது. ஒருபுறம் ஒரு குழந்தை
வேடிக்கை பார்க்கிறது. மறுபுறம் வாலாட்டிக்குருவியொன்று உட்கார்ந்திருக்கிறது.
முதலில் அந்த வாய்க்கால் வழியாக ஒரு முரட்டுக்காளை செல்கிறது. காட்சியில்
எந்தவிதமான சலனமும் இல்லை. இரண்டாவதாக அவ்வாய்க்கால் வழியாக ஒரு குதிரை செல்கிறது.
அப்போதும் காட்சியில் எவ்விதமான சலனமும் இல்லை. மூன்றாவதாக நாயொன்று வருகிறது.
அப்போதும் அக்காட்சியில் எவ்விதமான மாற்றமும் நேர்வதில்லை. இறுதியாக ஒரு மனிதன்
வருகிறான். சட்டென காட்சியில் சலனமெழுகிறது. பயத்துடனும் பதற்றத்துடனும் குருவி
பறந்து விடுகிறது. இவ்வளவுதான் விவரணை. இவ்விவரங்கள் வழியாக உருவாகும்
மனச்சித்திரத்தில் கவிதை உன்னதம் எய்துகிறது. விலங்குகள் இயற்கையோடும் காற்றோடும்
சேற்றோடும் பயிர்பச்சைகளோடும் மாறாத உறவுகொண்டு நடமாடுகின்றன. ஒன்றின் வரவை
மற்றொன்று அறிந்தாலும் அச்சம் கொள்வதில்லை. அவற்றிடையே இயங்கும் சமன்பாட்டில்
எந்தவிதமான குழப்பமும் இல்லை. குழந்தையைக்கூட அவை மனத்தளவில் எவ்விதமான வேறுபாடும்
பாராட்டாமல் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் அவை ஏற்கத்தயங்கி அஞ்சி ஒதுங்குவது
மனிதர்களை மட்டுமே.
இயற்கையின் படைப்பில் மனிதர்களும் விலங்குகளும் குழந்தைகளே. ஆனால் ஒரு
குழந்தையைக் கண்டு மற்றொரு குழந்தை ஏன் அஞ்சவேண்டும் ? அதுதான் நம் துயரங்கள் அனைத்துக்குமான காரணப்புள்ளி. மனிதன்
தன்னைச்சுற்றியுள்ள எல்லாவற்றைக் காட்டிலும் மேலானவனாகவும் வலிமையானவனாகவும் தன்னை
நினைத்துக் கொள்கிறான். அன்போடும் அனுசரணையோடும் அணுகவேண்டிய இயற்கையை வென்றெடுக்க
வேண்டிய ஒரு கோட்டையாக எண்ணி விடுகிறான். வெற்றிக்கொடி நாட்டி எல்லாவற்றையும் தன்
ஆட்சியின் கீழ் கொண்டுவர எண்ணுகிறான். அரவணைத்தல் அல்ல, அடிமைப்படுத்துவதே அவன் இயல்பாகிறது. முதலில் இயற்கையை நுகர்கிறவனாக இருக்கிற
மனிதன், ஆசையின் காரணமாக அதை
அடிமைப்படுத்துகிறான். பின்னர் பேராசையின் காரணமாக அதை நாசப்படுத்திச்
சிதைக்கிறான். உச்சியில் தன் வெற்றிக்கொடி பட்டொளிவிசிப் பறக்கவேண்டும் என்கிற
வெறியில் காலடி மணணையும் சிதைத்துப் பள்ளமாக்குகிறான். தன் தாயின் இதயத்தையே
அறுத்து எடுக்கிற வெறிகொண்ட பிள்ளையைப்போல இயற்கையைக் குலைக்கவும்
தயங்காதவனாகிறான். தாயின் இதயகீதத்தைக் கேட்க அவனுக்குக் காதுகளில்லை. அவள்
கண்களில் ஒளிரும் தரிசனக்காட்சியைக் காணக் கண்களுமில்லை. மாறாக, எல்லாமே வெற்றிகொள்ளத்தக்க கோட்டைகளாகவே தென்படுகின்றன. தன் மீட்சிக்கான பாதை
மிக அருகிலேயே இருந்தும் அதைக் காணவியலாத மனிதன் தன் அழிவுப்பாதையைத் தானே
தேடிக்கொள்கிறான் என்பதே இயற்கையுகக் கவிஞர்கள் அனைவருடைய ஒட்டுமொத்தச் செய்தி.
தங்கப்பாவின் சொந்தக் கவிதைகளின் உள்ளடக்கத்தைப்போலவே அவர் தேர்ந்தெடுத்திருக்கும்
மொழிபெயர்ப்புக் கவிதைகளும் அமைந்திருப்பதைச் சிறப்பான ஒற்றுமையாகச்
சொல்லவேண்டும்.
இத்தொகுப்பின் முக்கியமான இன்னொரு பகுதி தாகூரின் கதையொன்றை
அடிப்படையாகக்கொண்டு தங்கப்பா யாத்துள்ள ‘வெற்றிஓசை ‘ என்கிற கவிதைநாடகப்
பிரதியாகும். அங்கதச் சுவை மிகுந்த இந்த நாடகம் அரசு எந்திரத்தின் அபத்தமான
திட்டமுறைகளைக் கிண்டல்களுடன் முன்வைக்கிறது. கிளிக்கும் பாடக் கற்றுக்கொடுக்கும்
முயற்சி படிக்கக் கற்பிக்கும் முயற்சியாக மாறுவதும் பிறகு நுால்களைக் கரைத்துக்
குடிப்பாட்டும் முயற்சியாக மாறுவதும் நகைச்சுவை ததும்ப எழுதப்பட்டுள்ளன. இறுதியில்
தொண்டை அடைத்த கிளியைக் காட்டி அறிவின் ஆழ்ந்த அமைதிநிலை என்று அதிகாரிகள் உரைத்து
முழக்கமிடும் போது கிண்டல் உச்சம் பெறுகிறது. நுண்ணுணர்வில்லாத ஆட்சியில்
நடைபெறும் அபத்தக் கோலங்களை உணரும் விதத்தில் ஒவ்வொரு வரியும் அமைந்திருக்கிறது.
(கனவுகள்-தமிழாக்கப் பாடல்கள். மொழியாக்கம்: தங்கப்பா. வானகப் பதிப்பகம்,
7, 11 ஆம் குறுக்குத்தெரு, அவ்வை நகர், புதுவை –
605 008. விலை3ரு35)
(19.04.2003 திண்ணை இணைய இதழில் எழுதிய கட்டுரை )