Home

Thursday, 2 September 2021

பிரிவு - சிறுகதை


சுகர் தன்னைவிட்டுப் பிரிவது உறுதி என்று புலப்படத் தொடங்கியதும் மனம் நொறுங்கிய வியாசர் கொழுகொம்பற்ற கொடிபோலத் துவண்டு சரஸ்வதி நதிக்கரையில் உட்கார்ந்திருந்தார். அவர் கண்ணுக்குத் தெரிந்ததெல்லாம் எங்கெங்கும் கவிந்திருந்த இருள் மட்டும்தான். நதிக்கு மறுபுறம் மலைச்சிகரமொன்று நின்றிருந்தது. வாழைப்பூமொக்கு போன்ற அதன் உச்சியின் பின்புறத்திலிருந்து நிலா ஊர்ந்து வரத் தொடங்கியது. அதற்கு முந்தைய தருணம் வரைக்கும் சிகரத்தின் மடியிலும் தோளிலும் விளையாடிய நிலா அது. இப்போது சிகரத்தைத் துறந்து மேகவெளியில் உருளத் தொடங்கியது. வியாசருக்கு மறுபடியும் சுகரின் ஞாபகம் வந்தது. அவனும் பிரிந்துவிட்டால் இந்தப் பரந்த உலகில் தான் மட்டும் தனிமையில் வீசப்பட்டுவிடுவோம் என்ற பிரமை எழுந்தது. சுகரைப்பற்றி இனி நினைக்கக்கூடாது என்று அந்நொடி முடிவு செய்தார் வியாசர். மறுநொடியே சுகரின் முகம், சுகரின் சிரிப்பு, சுகரின் பிஞ்சுக் கை, சுகரின் ஒளிவீசும் கண்கள் என அடுத்தடுத்து எல்லாமே மனத்தில் விரிந்தன. அவனைப்பற்றிய நினைவுகள் அவரைப் பாடாய்ப்படுத்தின. அவன் நாளை தன்னுடன் இருக்கமாட்டான். தன்னிடமிருந்து விலகி நெடுந்தூரம் சென்று விடுவான் என்கிற ஒரு குரல் சதாநேரமும் ஒலித்தபடி இருந்தது. அக்குரலை மறுத்து அவனை எப்படியும் தடுத்துவிடலாம் என்று அவர் மனம் நம்பியது. இது எல்லாம் கனவு. அவன் பிரியப் போவதும் இல்லை. நான் கெஞ்சப் போவதும் இல்லை என்றெல்லாம் இருந்தால் எவ்வளவு நல்லது என்று நினைத்துப் பார்த்தார் வியாசர்.

 

மெல்ல மேலேறிய நிலாவின் வெளிச்சத்தில் ஆற்று மணல் மின்னியது. ஒரு கையால் மணலை அள்ளுவதையும் சற்றே உயர்த்தி மணலைத் தரையிலேயே கவிழ்ப்பதுமாய் இருந்தார் வியாசர். இக்கரைமணலில்தான் சுகரின் விரல் பிடித்து எழுதப் படிக்கக் கற்றுத் தந்திருந்தார். பிஞ்சுப் பாதம் பதிய நடை பழகியதும் இந்த இடத்தில்தான். அவனுக்கு பாரதக் கதையைச் சொன்னதும் அங்குதான். ஓம் நமோ பகவதே வாசுதேவாயாஎன்று பாகவதத்தை உபதேசித்ததும் அங்குதான். அந்த நாட்கள். அவன் இளமை. அவன் பயின்ற வேகம். மனம் மிக மெதுவாகச் சுழன்றுசுழன்று எங்கோ மிதப்பதுபோல இருந்தது. அருகில் கைக்கெட்டும் தொலைவில் சிறுவனாக உற்சாகம் ததும்பும் கண்களுடன் சுகர் உட்கார்ந்திருப்பதுபோல உணர்ந்தது அவர் மனம். ஒருவித நெகிழ்ச்சியோடும் ஆச்சரியத்தோடும் தற்செயலாகத் திரும்பியபோது அவர் அருகே சுகர் உண்மையில் உட்கார்ந்திருந்தான். கனவல்ல, எல்லாமே உண்மை என்று உறைத்தது.

 

சுகர்....அழைக்கக்கூடாது என்று மனம் கட்டளையிட்டபடி இருப்பினும் வார்த்தைகள் ஒருவித வேகத்துடன் வெளிவந்தன.

 

சொல்லுங்கள் தந்தையே

 

அவன் விழிகளில் அதே குழந்தைமை. அதே துடிப்பு. அதே ஆர்வம். சடையாக இறங்கத் தொடங்கிய தலைமுடியின் ஓரம் நிலவு வெளிச்சத்தில் மின்னியது. என்ன முடிவு செய்துள்ளாய் சுகர்?” என்று தணிந்த குரலில் கேட்டார் வியாசர். என் முடிவில் எந்த மாற்றமும இல்லை தந்தையே. கிளம்ப வேண்டும். உங்கள் விடைக்காகக் காத்திருக்கிறேன்என்றான் சுகர்.

 

சுகரிடமிருந்து வானத்தை நோக்கிப் பார்வையைத் திருப்பினார் வியாசர். தளர்ந்த அவர் முகத்தில் கவலை குடிகொண்டது. வேதனையில் நெற்றித்தோல் சுருங்கியது. வேகமாய்ப் பெருமூச்சு விட்டார். நினைவுகளைச் சுதந்திரமான மனவெளியில் உலவவிட்டுப் பேசாமல் வானத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

 

எனக்குள் ஏதோ ஒருவித நம்பிக்கை துளிர்த்துள்ளது தந்தையே. உங்களிடமிருந்து பெற்ற ஞானத்தை என்னிடமிருந்து வாங்கிக்கொள்ள இன்னொருவன் எங்கோ தயாராகியிருக்க வேண்டும் என்று என் மனம் சொல்கிறது தந்தையே. அவனைத் தேடிக் கண்டடையவேண்டும் நான்மெல்லப் பொறுமையாகப் பேச்சைத் தொடங்கினான் சுகர். அவன் குரலில் உற்சாகம் பொங்கியது.

 

ஞானம்என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு வருத்தமான ஒரு சிரிப்பை உதிர்த்தார் வியாசர். ஞானம் என்பது மிகப்பெரிய கற்பனை சுகர்

 

அப்படியென்றால் பிரும்மம்-?”

 

அது ஓர் உண்மை. அவ்வளவுதான்

 

சுகர் திடுக்கிட்டு ந்தையே?” என்றான். கிட்டத்தட்ட அவன் குரல் அலறுவது போல இருந்தது.

 

சத்தம் போடாதே சுகர். இது ஆறு. அது மலை. இது மணல். இவையெல்லாம் உணரத்தக்க உண்மைகள். இயற்கையின் ஒரு நுட்பமான கூட்டு விகிதம் இத்தகு உண்மைகளில் உண்டு. பிரும்மம் என்பது இதேபோல ஓர் உண்மை. கண்ணுக்குப் புலப்படாத தருக்க விதிகளால் கட்டப்பட்ட மற்றோர் கூட்டு விகிதம் இதற்கும் உண்டு”-.

 

வியாசரை உற்றுப் பார்த்தான் சுகர். பரிதாபமாகவும் ஆயாசமாகவும் உணர்ந்தான்.

 

ஏன் இப்படிப் பேசுகிறீர்கள் தந்தையே-?”

 

உள்ளதைச் சொல்கிறேன் சுகர். என்னைக் கோழை என்று நினைக்கலாம். அன்புக்காக ஏங்குகிற வயசாளி என்றும் கருதலாம். நான் நினைத்ததைச் சாதித்துக்கொள்ள ஏதேதோ பேசி நிறுவ முயற்சி செய்வதாகவும் தோன்றலாம். அப்படி இல்லை. ஒரு வேளை அப்படியும் இருக்கலாமோ என்னமோ, அதுவும் தெரியவில்லை. எனக்கு நீ வேண்டும் சுகர். என் அருகில் இருக்க வேண்டும். நீ இல்லாத ஒரு நாளை என்னால் நினைத்துப் பார்க்கமுடியவில்லை. கற்றதையும் யோசித்ததையும் கண்டடைந்ததையும் புதியபுதிய விகிதங்களில் கூட்டிக் கலந்து கழித்துப் பேசிப் பேசி அலுத்துவிட்டதடா...

 

நிறுத்துங்கள் தந்தையே...சுகரின் முகம் உறைந்தது. வியாசரின் சொற்கள் அவளை உள்ளூர வதைத்துக் கொண்டிருந்தன. அவரை அமைதிப்படுத்தும் விதம் தெரியாமல் கைகளைப் பிசைந்தான்.

 

நிலவின் ஒளி அதிகரித்தது. உச்சி வானில் அது ஒரு வட்டப் பூ போல பூத்திருந்தது. நிலவையே உற்றுப் பார்க்கப்பார்க்க விழிகள் மயங்கி மங்குவதுபோல இருந்தத-

 

வியாசர் சுகரைப் பார்த்து மறுபடியும் பேச்சைத் தொடங்கினார்.

 

உன் மனத்தில் என்ன ஓடுகிறது என்று புரிகிறது சுகர். இது முதுமையில் ஒரு பித்துநிலை என்று நினைக்கிறாய். மனத்தின் ஆவலை எளிமைப்படுத்திப் பார்க்க எண்ணுகிறாய். அது இயல்புதான். தன்னை அடுத்தவனுக்கு வெளிப்படுத்தி உயர்வாக நிலைநாட்டத் துடிப்பவனால் அபபடித்தானே யோசிக்க முடியும்தன்னைத் தைப்பதுபோல வந்து விழும் சொற்களைக் கேட்டுச் சுகர் மன வேதனைக்குள்ளானான்.

 

என்னை நிலைநாட்டிக்கொள்வதில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை தந்தையே. நாரதர் உங்களுக்குச் சொல்லி, நீங்கள் அல்லும் பகலுமாய்ப் புனைந்து எனக்குப் போதித்த மோட்ச ஞானத்தை எடுத்துரைக்க விரும்புவது தவறா?”

 

நிதானம் தவறாத குரலில் கேட்டான்.

 

யாருக்கு யார் எடுத்துரைப்பது சுகர்? எதுவுமே எவருக்குமே தெரியாது என்று எண்ணுகிறாயா-? எல்லாருக்கும் தேவையான அளவு எல்லாமே தெரியும் சுகர். நாம்தாம் அதை அறிந்து கொள்ள மறுக்கிறோம். காவிய மோகம் நம் கண்களுக்குத் திரையிட்டு விடுகிறது. அடுத்தவர்களை ஒன்றுமறியாத சூன்யங்களாக எண்ணி உபதேசிக்கத் தொடங்கிவிடுகிறோம்அவனைப் பொருட்படுத்தாத குரலில் சொல்லிமுடித்தார் வியாசர்.

 

அப்படியென்றால் மோட்ச ஞானம். அது எடுத்துரைக்கும் முக்கியமான விடைகள்..?”

 

மோட்சம் என்பது மிகப்பெரிய கனவு மகனே. ஒருபோதும் ஒரு உயிரும் அங்கே செல்ல முடியாது. மனித குலம் தோன்றிய காலத்திலிருந்து இந்தக் கனவு ஒரு வியாதிபோல பீடித்துக் கசக்குகிறது. இந்த உலக உறவை உதற முடியாதாடா மகனே. தாய், தந்தை, மகன் உறவு, சுற்றம் இவைதான் உண்மை. மோட்சம் என்ற ஒன்று இல்லவே இல்லை. உலக உறவை விஷமாக வெறுத்த யாரோ ஒரு ஆதிக் கிறுக்கண் கண்ட கனவு மோட்சம். காலம்காலமாக அதைச்சுற்றிக் கனவுகள் படர்ந்து விட்டன. வெளியைக் கடந்தால் மோட்சம் என்கிறார்கள். எங்கும் வெளி என்பது உண்மையாக இருக்கும்போது இந்த வெளியை எப்படியடா கடப்பது? வெளியை எத்தனை கூறு போட்டாலும் அல்லது குறுக்கினாலும் மீண்டும்மீண்டும் எஞ்சுவது வெளிதானே சுகர்? யோசித்துப் பார்

 

ஏதோ ஆவேசத்தில் பேசாதீர்கள் தந்தையே. மோட்சம் என்ற ஒன்று இருந்தே ஆக வேண்டும் என்கிற நம்பிக்கை எனக்கு கூடிக்கொண்டே வருகிறது. அதைப் பார்ப்பேன் என்கிற நம்பிக்கையும் பலருக்கும் அதைக் காட்டுவேன் என்கிற எண்ணமும் துளித்துளியாகப் பெருகிக்கொண்டேதான் போகிறது. என் வாழ்க்கையை இதற்காகச் செலவிடப் போகிறேன். அடைதலும் அடைதலைப்பற்றி வழிமுறைகளைப் பரப்புவதுமே எனக் குறிக்கோள். திரும்பி வராமல் போகலாம். அதைப் பற்றிய வருத்தம் எதுவும் இல்லைசுகர் பொறுமையாகச் சொன்னான்.

 

சுகரின் சொற்கள் எதுவும் வியாசர் காதில் விழவே இல்லை. அவர் அவன் முகத்தையே பார்த்தபடி இருந்தார். திடுமென உத்வேகமான குரலில் பேசத் தொடங்கினார்.

 

எத்தனையோ காலம் உருண்டுவிட்டது சுகர். எவ்வளவோ அனுபவித்துவிட்டேன். என்னென்னமோ எழுதியும் விட்டேன். ஆனால் எல்லாவற்றையும் இக்கணம் மறக்க எண்ணுகிறேன் நான். என் மனத்தில் முழுக்கமுழுக்க நிலைத்திருப்பது இப்போது ஒரே உருவம் தான். அது நீ. நீ மட்டும்தான். நீதான் நான் கண்ட சத்தியம். நீ என் மகன். நீதான் எனக்கு வேண்டும். நீ என்னருகில் இருக்கவேண்டும். இத்தனைக் காலமும் ஒரு பற்று வேண்டும் என்று தோன்றாமலேயே கனவுலகில் மிதந்து கிடந்தேன். இப்போது இந்த உடல் உளுத்துத் தளர்ந்து விட்டது

 

வியாசருக்கு மூச்சு வாங்கியது. பேச்சைச் சிறிது நேரம் நிறுத்திவிட்டு வானத்தைப் பார்த்தார். நிலவின் ஒளிக்கூடிக் கொண்டே போனது. வெண்மேகங்கள் அழகாக மின்னின. வெளிச்சப்பரப்பு வெள்ளித்தட்டுபோல பளபளத்தது.

 

உன் நினைவு சதா காலமும் சுற்றி வருகிறது -சுகர். நான் உன்னை வளர்ப்பதாக இத்தனை காலமும் நினைத்துக் கொண்டிருந்துவிட்டேன். அது தவறு. உன் வழியாக என்னை நிலைநாட்டியிருக்கிறேன் நான். எனக்குள் உன்னையே வாங்கிக் கொண்டேன். அல்லது என்னையே உனக்குள் செலுத்திவிட்டேன். இப்போது நான் என்பது நானல்ல சுகர். நீதான். நீ விலகி நிற்கிற ஒவ்வொரு நொடியும் என்னால் தாங்க முடியவில்லை

 

உணர்ச்சிவசப்பட்ட வியாசரின் பேச்சு சுகரைக் குழப்பியது. இரக்கத்தோடு அவர் கண்களைப் பார்த்தான். அச்சம் கொண்ட மானின் விழிகளில் தெரியும் மிரட்சியைக் கண்டான். சுகருக்கு அது துயரமளித்தது.

 

மலைச்சரிவில் நிலவு வேகவேகமாக இறங்கியபடியிருந்தது. வண்டுகளின் ரீங்காரம் காதைத் துளைத்தது. ஆலமரத்தில் அடைந்திருந்த சில பறவைகள் ஏதோ பதற்றத்தில் எழுந்து குரலெழுப்பின். ஒன்றிரண்டு பறவைகள் சிறகடித்துச் சிறிது தூரம் பறந்து திரும்பி அடைந்தன. குளிர்ந்த காற்று அமைதியாகக் கடந்து சென்றது.

 

சுகர்.. என் மனம் கொந்தளிக்கிறது. இப்படி ஒரு நதிக்கரையில்தான் பாரதக்கதையை எழுதினேன். அது கடும் மழைக்காலம். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது-. குளிர் காற்று. அதன் வேகத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் தழைத்து நிற்கும் என நான் நினைத்த இரண்டு மரங்கள் வேரோடு சடசடவென்று பெரும் சத்தத்துடன் கீழே சரிந்து விழுந்ததை ஆசிரமத்து வாசலிலிருந்தபடி பார்த்தேன். ஒரு கணம் அச்சித்திரம் என் கண்களில் ஆழமாய்ப் பதிந்துவிட்டது. ஒரு மரம் பாண்டவர்கள். இன்னொரு மரம் கௌரவர்கள். இந்தப் பிம்பம்தான் உடனடியாக என் மனத்தில் எழுந்தது. இருவருமே ஒரு வகையில் என் மக்கள். அந்தக் கொடும் போரும் மரணங்களும் உருவாக்கிய வெறுமைக்கு ஒரு வடிகால் கிடைத்ததுபோல இருந்தது. ஏதோ கண்ணுக்குத் தெரியாத ஊற்றிலிருந்து அக்கதை ஊறி ஊறிப் பெருகிவருவதுபோல இருந்தது. என் மனமெங்கும் மனிதர்கள். காலமே தலைகீழாகப் புரண்டபடி இருந்தது. என் வேகம் என்னை வெறிகொள்ள வைத்தது. என் மனம் தெம்பை இழக்கும் போதெல்லாம் மறுபடியும் மறுபடியும் மரங்கள் விழுந்த காட்சியை மனசுக்கும் வரவழைத்து உத்வேகத்தைக் கூட்டிக் கொள்வேன். எத்தனை இரவுகள். எத்தனை பகல்கள் தெரியுமா? மனம் மிதக்கமிதக்க எழுதி முடித்தேன்”.

 

கசப்புடன் சிரித்தார் வியாசர். ஒரு பைத்தியத்தின் சிரிப்பு போல இருந்தது அது. நிலைகுலைந்த அவர் தோற்றத்தை இயலாமையுடன் பார்த்தான் சுகர். ஒரு கவி என்கிற நிலையில் இவ்வளவு காலமும் அவரை அலைக்கழித்த காலம் தன் இறுதிக் கட்டத்தில் கவியின் திரையை விலக்கித் தந்தையின் உருவைக் காட்டி அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது என்று நினைத்தான்.

 

இதிகாசத்துக்கான மன எழுச்சி உங்களிடம் இயல்பாகவே இருக்கிறது தந்தையே...

 

பணிவுடன் சொன்னான் சுகர். இல்லையடா சுகர். இல்லை. ஒரு பிம்பமாய் ஒரு கணம் எழுச்சி கொண்டது மட்டுமே உண்மை. பிறகு ஒவ்வொரு கட்டத்திலும் என் மனத்தை நானே முறுக்கேற்றிக்கொண்டு கவிதையின் உச்சத்துக்குச் சென்றேன். எழுதி முடித்ததும் எனக்குள் மறுபடியும் உருவான வெறுமைக்கு அளவே இல்லை. மிகப் பெரும் வெறுமை. அதன் வெப்பத்தை என்னால் தாங்கவே இயலவில்லை. அப்போதுதான் நாரதன் வந்தான். பாகவதத்தைச் சொன்னான். அது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. மீண்டும் என்னையே பொங்கவைத்துக் கொண்டேன். மீண்டும் நெருப்பாக எரிந்தேன் நான். கடந்து போன ஆண்டுகளுக்குக் கணக்கே இல்லை. தன் சுடரைத்தான் உனக்குள் ஏற்றினேன். ஒரு வகையில் அது பெரிய வெற்றி, இப்போது மறுபடியும் வெறுமை என்னை அலைக்கழிக்கிறது. இன்னொரு கனவுக்கும் புனைவுக்கும் என் மனத்தில் இடமில்லை. கனவும் புனைவும் நாமே நமக்கு நிகழ்த்திக்கொள்ளும் நாடகம் என்ற அறிவு வந்தபிறகு, அந்த ஆட்டம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதிலிருந்து விலகவே என் மனம் துடிக்கிறது. என் வாழ்வில் இந்தக் கணம் வரை உணராத ஒரு தீவிரத்தை இப்போது உணர்கிறேன். நீ புறப்படுவது கூட எதற்கு என்று தெரியும் எனக்கு. கலையும் கனவும் இல்லாத மரம் என்று என்னை எடைபோடுகிறது உன் மனம். இந்த மரத்தைவிட்டு ஒதுங்கி நகர்ந்துவிட அவசரப்படுகிறாய்? எது கலை? எது கனவு? என் மனம் துடிப்பதை நீ அறியமாட்டாய். உன்னிடம் எதற்காக இதையெல்லாம் சொல்கிறேனோ தெரியவில்லை. என் கனவு நீ. என் மறுபக்கம் நீ. இப்போது வெறும் அழுகை நான். காலம் நம்மை நகர்த்திநகர்த்தி நிற்க வைத்திருக்கிற இடங்களைப் பார்த்தாயா சுகர்?”

 

வியாசருக்கு மூச்சு இறைத்தது. தளர்ந்த மார்பு வேகவேகமாக ஏறித் தாழ்ந்தது. குற்ற உணர்ச்சியால் முகம் சிவந்தது சுகருக்கு.

 

எதற்காக உங்களையே வதைத்துக்கொள்கிறீர்கள் தந்தையே?”

 

இந்தக் கடைசிக் காட்சி இப்படித்தான் அரங்கேற வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது போலும்

 

சுகர் மௌனமாகத் தலையசைத்தான்.

 

நிலா முற்றிலும் மறைந்துபோக ஆற்று மணல்பரப்பு சாம்பலாகத் தெரிந்தது. ஆற்றில் மலைச் சிகரத்தில் நிழல் கரிய படமாகத் தெரிந்தது.

 

அன்புக்காக ஏங்கும் உங்கள் மனம் விரக்தியில் எதைஎதையோ எண்ணுகிறது தந்தையே

 

அன்பு தவறானதா சுகர்?”

 

இல்லை தந்தையே

 

அப்படியென்றால் என்னோடு இருந்து அன்பைப் பகிர்ந்து கொள்வதில் உனக்கென்ன சங்கடம்?”

 

அன்பில் திளைத்திருப்பதைக் காட்டிலும் இந்தப் பிறவியில் இன்னொரு கடமை இருப்பதாக என் உள்ளம் சொல்கிறது தந்தையே

 

சுகர் குனிந்துகொண்டான். தொடர்ந்து ஒரு குயில் அருகிலிருந்த மரத்திலிருந்து துயரம் ததும்பிய குரலில் இசைத்தபடி இருந்தது.

வியாசரின் முகம் சுருங்கியது. கணநேரம் கண்களை மூடினார்.

 

ஒரு கேள்வி கேட்க என்னை அனுமதிப்பீர்களா தந்தையே?”

 

கேள் சுகர்

 

உங்கள் பெற்றோருடன் நீங்கள் எவ்வளவு காலம் சேர்ந்திருந்தீர்கள் தந்தையே?”

 

வியாசர் அதிர்ச்சியில் உறைந்தார். அவர் உதடுகள் துடித்தன. மௌனமாக வானத்தின் பக்கம் கண்களைத் திருப்பினார்.

 

மேலேறக் தொடங்கிய சூரியனின் பொற்கிரணங்கள் சரஸ்வதி நதியைத் தொட்டுத் துயிலெழுப்பியது. செம்மை கூடிய சூரியனின் பிம்பம் நீர்ப்பரப்பில் படர்ந்தது. நீருக்குள் நகரும் வட்டத்தட்டுபோல மிதந்தது பிம்பம். நீருக்குள் பரவிய ஒளியில் கரையின் அடித்தரையும் விழித்த கண்கள்போலக் காணப்பட்ட கூழாங்கற்களும் தெரிந்தன. ஆற்றிலிருந்து பார்வையைத் திருப்பிய சுகர் ஓரடி முன்னால் நகர்ந்து வியாசரின் காலில் விழுந்தான்.

 

என்னை ஆசீர்வதியுங்கள் தந்தையே

 

வியாசர் பெருமூச்சுடன் அவன் தலையில் கைவைத்தார். நம் பரம்பரையின் ஆசி உனக்கு முழு அளவில் கிடைக்கட்டும் மகனே. உனக்கு வெற்றி வாய்க்கட்டும்.

 

எழுந்து திரும்பிப் பார்க்காமல் நடந்தான் சுகர். ஆற்றின் கரையோரமாகவே நடக்கத் தொடங்கினான்.

 

கரையில் தனித்து நின்றிருந்தார் வியாசர். தளர்ந்த அவர் உடல் நடுங்கியது. தன்னையறியாமல் சுகர்என்ற அழைப்பு அவரிடமிருந்து வெளிப்பட்டது. கரைநெடுக நின்றிருந்த மரங்களும் பாறைகளும் புதர்களும் ஏன் ஏன்என்று எதிரொலி எழுப்பின. உறைந்து போனார் வியாசர். அக்குரல்களை அவரால் நம் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஒரு கணம் அவர் மனத்தில் பீதி சூழ்ந்தது. மீண்டும் பழையபடி வெறுமை கவிந்தது. பின்னாலேயே ஓடிச் சென்று சுகரைப் பிடித்து நிறுத்தி இழுத்துவர நினைத்தார். மறுகணமே அது தன்னால் முடியாத காரியம் என்று அவருக்குத் தோன்றியது.

 

(இந்தியா டுடே, 2000)