Home

Sunday 12 September 2021

சித்தலிங்கையாவுக்கு அஞ்சலி

 

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழிலக்கியச் சூழலில் தலித் இலக்கியச் செயல்பாடுகள் தீவிரமடையத் தொடங்கின. அதைப்பற்றிய உரையாடல்கள் எல்லா இடங்களிலும் நிகழ்ந்தன. 1991இல் கோமல் சுவாமிநாதனைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு வெளியான சுபமங்களா பல எழுத்தாளர்களுடைய விரிவான நேர்காணல்களைப் பிரசுரித்தது. எழுத்தாளர்களை ஒரு கருத்தியல் தரப்பாக தமிழ்ச்சூழலில் அந்த நேர்காணல்கள் முன்னிறுத்தின. வாசிப்புப்பழக்கம், எழுத்துக்கான களத்தேர்வு, மொழியின் பயன்பாடு, இளமைக்கால வாழ்க்கை, பிடித்த படைப்புகள், பிடித்த ஆளுமைகள் சார்ந்து ஒவ்வொரு எழுத்தாளரிடமும் கேட்கப்பட்ட கேள்விப்பட்டியல் வெவ்வேறு விதமாக இருந்தாலும் தலித் இலக்கியம் பற்றிய ஒரு கேள்வி மட்டும் அந்த நேர்காணல்களில் பொதுவாக இருந்தது. தலித் இலக்கியம் பற்றிய எழுத்தாளர்களின் எண்ணங்களைத் தொகுத்தளிப்பதன் வழியாக அதைப்பற்றிய வரையறையை செழுமைப்படுத்த முடியும் என்று கோமல் நம்பினார். மராட்டிய மொழியில் தலித் இலக்கியம், கன்னட மொழியில் தலித் இலக்கியம் போன்ற கட்டுரைகளை, அம்மொழியுடன் தொடர்புடைய  நண்பர்கள் வழியாகப் பெற்று அவ்வப்போது சுபமங்களாவில் வெளியிட்டார். நாளடைவில் இலக்கியச் சந்திப்புகளில் தலித் இலக்கியம் பற்றிய உரையாடல் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியது.

விடுமுறையில் புதுச்சேரியில் தங்கியிருந்த சமயத்தில் ஒருமுறை வங்கி ஊழியராக இருந்த நண்பர் ரவிக்குமாரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். படித்த புத்தகங்களையும், கவிதைகளையும் முன்வைத்து தொடங்கிய எங்கள் உரையாடல் மெல்ல மெல்ல தலித் இலக்கியத்தின் திசையில் திரும்பியது. அப்போதுதான் நான் கன்னட எழுத்தாளர் சித்தலிங்கையாவைப் பற்றிய செய்திகளை அவரிடம் பகிர்ந்துகொண்டேன். அவருடைய கவிதைகளுக்கு மெட்டமைத்து வசீகரமான தாளக்கட்டுடன் பாடல்களாகப்  பாடி கேசட்டுகளாக பதிவு செய்து விற்கப்படுவதையும் கர்நாடகம் முழுதும் அந்தப் பாடல்கள் பரவி பிரபலமடைந்திருப்பதையும் சொன்னபோது ரவிக்குமார்  முதலில்  வியந்துபோனார். திரைப்படப்பாடல்களைப் போல அவை ஊரெங்கும் பரவியிருப்பதையும் பொதுமக்கள் முணுமுணுப்பதையும் நான் நேரில் பார்த்திருப்பதாகச் சொன்னேன். அப்போது பிரபலமாக இருந்த ஒரு பாட்டின் வரியையும் நினைவிலிருந்து முணுமுணுத்துக்காட்டினேன். பத்து பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அப்பாடல்களை மக்கள் பாடிவருகிறார்கள் என்னும் செய்தி அவருக்குப் புதுமையாகவே இருந்தது.

பெங்களூருக்கு திரும்பியதும் ஒருநாள் உணவு இடைவேளை சமயத்தில் ரவிக்குமாரை தொலைபேசியில் அழைத்து, நான் ஏற்கனவே மொழிபெயர்த்துவைத்திருந்த சித்தலிங்கையாவின் சில கவிதைகளைப் படித்துக் காட்டினேன். அதன் சிறப்பம்சம் என்ன என்பதையும் விரிவாகச் சொன்னேன். வழக்கமாக நவீன கவிதைகளில் நாம் எதிர்பார்க்கிற உருவகத்தையோ, படிமத்தையோ கச்சிதமான மொழியையோ சித்தலிங்கையாவின் கவிதைகளில் எதிர்பார்க்க முடியாது. பொதுவாக, நாம் வாசிக்கும் நவீன கவிதை ஒரு புள்ளியை மென்மேலும் நுட்பம் கொண்ட புள்ளியாக  மாற்றுவதற்கு முயற்சி செய்கிறது. ஆனால் சித்தலிங்கையாவின் கவிதை ஒரு புள்ளியை, தெளிவாக சுட்டிக்காட்டி அடையாளப்படுத்தும் விதமாக அதைச் சுற்றி பல வட்டங்களை எழுப்பி எழுப்பி விரிவாக்கிக்கொண்டே செல்கிறது. ஒரே பொருளை வெவ்வேறு விதமாக மாற்றி மாற்றி முன்வைக்கிறது. சொற்களில் கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தத்தை அதிகரித்துக்கொண்டே சென்று உச்சத்தைத் தொடுவது அதன் இயல்பு. அவை உள்முகமாக அகத்தை நோக்கிப் பேசவில்லை. புறத்தே கூடியிருக்கும் மக்களை நோக்கிப் பேசுகிறது. அவர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு செல்லும் நூலாக சித்தலிங்கையாவின் கவிதை அமைந்திருக்கிறது. விளக்கத்தை பொறுமையாகக் கேட்டுக்கொண்ட பிறகு ரவிக்குமார் அக்கவிதைகளை தனக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து சித்தலிங்கையாவைச் சந்தித்து ஒரு நேர்காணலை எடுத்து அனுப்ப முயற்சி செய்யும்படி சொன்னார். இலக்கியம், சமூகம் சார்ந்த சித்தலிங்கையாவின் அணுகுமுறை தமிழ்ச்சூழலில் ஏதேனும் சில தாக்கங்களை உருவாக்கும் என்னும் நம்பிக்கை அவருக்கு இருந்தது. 

சித்தலிங்கையா அப்போது பெங்களூரு பல்கலைக்கழகத்தில் கன்னடத்துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். கர்நாடக அரசு அவரை மாநில மேலவை உறுப்பினராகவும் நியமித்திருந்தது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் அவருக்கு தனியாக ஒரு அறை வழங்கப்பட்டிருந்தது. அந்த அறையையே அவர் அலுவலகமாகவும் வைத்திருந்தார். மாலையில் ஒவ்வொரு நாளும் அங்கு வந்து நண்பர்களைச் சந்திப்பதும் பொதுமக்கள் பிரச்சினைகளைப்பற்றிப் பேசுவதும் வழக்கம். ஒருநாள் மாலையில் அவரைச் சந்திப்பதற்காக நானும் நண்பர் ஜி.கே.ராமசாமியும் சென்றிருந்தோம். அதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் நவீன கன்னடக் கவிதைகள் என்ற தலைப்பில் நான் மொழிபெயர்த்து வைத்திருந்த கவிதைகளை நண்பர் சுப்ரபாரதிமணியன் கனவு சிறப்பிதழாக வெளியிட்டிருந்தார். அதில் சித்தலிங்கையாவின் இரு கவிதைகளைச் சேர்த்திருந்தேன். அதன் பிரதிகளையும் அவரிடம் ஏற்கனவே கொடுத்திருந்தேன்.

என்னைப் பார்த்ததுமே சித்தலிங்கையாஉங்க தொகுப்புக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். “நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது சார். உங்களுடைய என் மக்கள் கவிதை பலருக்குப் பிடித்திருக்கிறதுஎன்று நான் சொன்னதைக் கேட்டதும் அவர் முகத்தில் புன்னகை படர்ந்தது. ”அப்படியா, நல்லது நல்லதுஎன்று தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தபடி தலையசைத்தார். ”உங்களுடைய கவிதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து  மொழிபெயர்த்து தனியாக  ஒரு தொகுப்பைக் கொண்டுவரலாம் என நினைத்திருக்கிறேன்என்று நான் அவரிடம் சொன்னேன். மறுகணமே அவர் புன்னகைத்தபடியேசெய்யுங்க, செய்யுங்க. தாராளமா செய்யுங்கஎன்று சொன்னார்.

நண்பர் ஜி.கே.ராமசாமி அப்போது மகாராணி கல்லூரியில் சமூகவியல் பேராசிரியராக பணியாற்றிவந்தார். சித்தலிங்கையாவும் அவரும் சிறிது நேரம் கல்வித்துறை சார்ந்தும் பல்கலைக்கழகம் சார்ந்தும் உரையாடிக்கொண்டனர். அந்த உரையாடல் முடிவதற்காகக் காத்திருந்து நான் அவரிடம் ஒரு நேர்காணல் எடுக்க விரும்புவதாகத் தெரிவித்தேன். ”நேர்காணலா, அதற்கென்ன இப்ப அவசரம்?” என்று கேட்டார் சித்தலிங்கையா.

முதன்முதலாக மாநில அளவில் ஒரு பெரிய அமைப்பை உருவாக்கி நிலைநிறுத்திய அனுபவம் உங்களுக்கு இருக்கிறது. பல போராட்டங்களில் முன்னால் நின்றிருக்கிறீர்கள். உங்கள் கவிதைகளுக்கு கர்நாடகம் தழுவிய பெரிய வரவேற்பு இருக்கிறது. உங்கள் சமூக அனுபவங்களும் இலக்கிய அனுபவங்களும் தமிழ்ச்சூழலிலும் நல்ல பயனை விளைவிக்கும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதற்கு உங்கள் நேர்காணல் உதவியாக இருக்குமென்று நம்புகிறோம்

நான் விரிவாகச் சொன்ன பிறகு நேர்காணலுக்கு ஒப்புக்கொண்டார். பிறகுபதில்களை எழுதிக் கொடுக்கவேண்டுமா அல்லது வாயால் சொன்னால் போதுமா?” என்று கேட்டார். தொடர்ந்துஎனக்கு எழுதுவது என்றால் சிரமம்என்றார்.

நாம இப்ப சாதாரணமா பேசறமாதிரியே பேசலாம் சார். நான் டேப்ரிக்கார்டர் கொண்டுவரேன். கேசட் போட்டு பதிவு செஞ்சிக்கறேன். அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா கேட்டு கேட்டு மொழிபெயர்த்துடுவேன்

, அப்படின்னா சரிஎன்றபடி அருகில் மேசைமீது வைக்கப்பட்டிருந்த காலண்டரை எடுத்து ஓவ்வொரு தேதியையும் தொடுவதும் பிறகு எதையோ நினைத்தபடி விரலை நகர்த்துவதுமாக இருந்தார். சில கணங்களுக்குப் பிறகுவர சனிக்கிழமை காலையில பத்துமணிக்கு வச்சிக்கலாமா?” என்று கேட்டார். நாங்கள் ஒரு நொடி கூட யோசிக்காமல் உடனே சம்மதம் சொல்லிவிட்டோம். “டேப்ரிக்கார்டரோடு சனிக்கிழமை காலையில பத்து மணிக்கு இதே அறைக்கு வந்துடறோம்என்று தெரிவித்துவிட்டு எழுந்தோம். “இருங்க, இருங்க. ஏன் எழுந்துட்டீங்க? இப்ப டீ வரும். குடிச்சிட்டு போவலாம்என்று தடுத்தார் சித்தலிங்கையா. அவரும் ராமசாமியும் மீண்டும் கல்லூரி விஷயங்களைப் பேசத் தொடங்கினர். அவர் சொன்னதுபோலவே கால் மணி நேரத்துக்குப் பிறகு தேநீர்க்காரர் வந்து எங்களுக்கு கோப்பைகளில் தேநீர் வழங்கிவிட்டுச் சென்றார். தேநீர் அருந்திய பிறகு நாங்கள் சித்தலிங்கையாவிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.

சனிக்கிழமை அன்று காலையில் நான் இரண்டு புதிய கேசட்டுகளோடும் டேப்ரிக்கார்டர் பெட்டியோடும் வீட்டிலிருந்து புறப்பட்டு சாளுக்யா ஓட்டலுக்கு அருகில் சென்று காத்திருந்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு ராமசாமி இருசக்கர வாகனத்தில் வந்து சேர்ந்தார்.  அவருடன் நண்பர் தேவராஜனும் வந்திருந்தார். பிறகு நாங்கள் மூவரும் சேர்ந்து சித்தலிங்கையாவின் அறைக்குச் சென்றோம். அறை திறந்திருந்தது. இரண்டு மூன்று பேர் எங்களுக்கு முன்பே அறைக்கு வந்து காத்திருந்தார்கள். எங்களைப் பார்த்ததும்வர நேரம்தான். உக்காருங்கஎன்று சொன்னார்கள். நாங்கள் மேசை மீது வைக்கப்பட்டிருந்த சில இதழ்களைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தோம். சிறிது நேரத்திலேயே சித்தலிங்கையா வந்துவிட்டார். நாங்கள் வணக்கம் சொன்னோம். அவரும் வணக்கம் சொன்னபடி நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். ஏற்கனவே காத்திருந்தவர்களை அழைத்து ஏதோ சில வேலைவிவரங்களைப்பற்றி சுருக்கமாக சொல்லியனுப்பிவிட்டு எங்களை அறைக்குள் அழைத்துச் சென்றார்.

அறையில் அமைதி நிலவியது. டேப்ரெக்கார்டருக்கு மின்சார இணைப்பு கொடுத்துவிட்டு ஒருமுறை சில சொற்களைப் பேசி பதிவாகிறதா என்று சோதித்துப் பார்த்தேன். சரியாகவே இருந்தது. அதைத் தொடர்ந்து ஒலிநாடாவை சரிப்படுத்திவிட்டுஆரம்பிக்கலாமா சார்?’ என்று சித்தலிங்கையாவிடம் கேட்டேன். அவர் தலையசைத்ததும் பொத்தானை அழுத்தினேன். நாடா ஓடத் தொடங்கியதும் நான் வணக்கம் என்று சொன்னேன்.

பொதுவாக அவருடைய இலக்கிய ஈடுபாடு பற்றி முதலில் சொல்லும்படி கேட்டுக்கொண்டேன். இலக்கியம் பற்றிய தன் பார்வையை முன்வைத்தபடி நீரோட்டம்போல சொல்லிக்கொண்டே சென்றார் சித்தலிங்கையா. வகைப்படுத்தல் என்பது வேறு, இலக்கியம் என்பது வேறு என்று அன்று அவர் சொன்ன சொல் இன்னும் என் நினைவில் உள்ளது. ஆப்தவாக்கியம் போல நான் அந்த வாக்கியத்தை அப்படியே பற்றிக்கொண்டேன். அது எனக்குப் பிற்காலத்தில் பல தெளிவுகளைக் கொடுத்தது. வகைப்படுத்தலை இலக்கியம் என்று நம்புகிறவன் ஒருபோதும் உண்மையான இலக்கியத்தின் அருகில் நெருங்கிவர முடியாது. இலக்கியத்துக்கே உரிய கருணையும் பரிவும் பிறர் வேதனையைக் கண்டு கலங்கும் துடிப்பும் வேகமும் கொண்டவர்களே இலக்கியத்தை நெருங்கி வரமுடியும். உலகமெங்கும் இலக்கியத்தை நோக்கி வந்தவர்கள் அத்தகையவர்களே என்று அடுக்கிக்கொண்டே சென்றார்.

முதல் கேள்வியைத் தொடர்ந்து அவருடைய கல்லூரி அனுபவங்கள், போராட்ட அனுபவங்கள், திருவிழாக்கள், புராணங்கள், பண்பாடு, கல்விநிறுவனங்கள், இலக்கிய அழகியல், மார்க்சிய இயக்கங்கள், தலித் இயக்கங்கள் தொடர்பாக பல கேள்விகளை அடுத்தடுத்து கேட்டோம். எல்லாக் கேள்விகளுக்கும் அவர் உற்சாகமாக பதில் சொன்னார். ஒரு பதிலில் ஒரு திருவிழாவைப்பற்றி அவர் சொன்ன விளக்கம்  மிகமுக்கியமானதாக இருந்தது. அந்தத் திருவிழாவில் வீட்டிலிருந்து கோவிலை நோக்கி ஊர்வலமாக எல்லோரும் கந்தலான உடையை அணிந்துகொண்டுதான் நடந்து செல்லவேண்டும். கந்தையாடை அணியாதவர்கள் அந்த ஊர்வலத்தில் பங்கு பெறமுடியாது. கந்தையணிந்து சென்று கோவில் வளாகத்தில் சோறு சமைத்து ஒரு கல்லைக் கழுவி அதன் மீது பரிமாறவைத்துத்தான் அனைவரும் சாப்பிடவேண்டும். திருவிழாவை முன்வைத்து மக்கள் கடைபிடிக்கும் ஜனநாயக குணம் என்று அதைச் சொன்னார் சித்தலிங்கையா. சாமியை அடித்துவிட்டு வரும் திருவிழா கூட உண்டு என்றொரு தகவலையும் அவர் குறிப்பிட்டார். திருவிழாக்கள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் ஆதிமனிதர்கள் தம் வாழ்வில் பின்பற்றிய பழக்க்வழக்கங்களின் குறியீடுகளாக இன்றும் நீடிக்கின்றன. நம்மால் இன்று அக்குறியீடுகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதற்காக அவற்றைப் பழிப்பதோ விலக்கிவைப்பதோ பிழையானது என்று அவர் விளக்கினார்.

நேர்காணலுக்காக சித்தலிங்கையாவோடு செலவிட்ட பொழுதை வாழ்வில் மிகமுக்கியமான தருணமாகவே நினைக்கிறேன். வீட்டுக்குத் திரும்பிய பிறகு மீண்டும் மீண்டும் அந்த ஒலிநாடாவை ஓடவிட்டுக் கேட்டேன். பிறகு ஒவ்வொரு நாளும் இரவில் சில மணிநேரங்கள் கண்விழித்து அதை மொழிபெயர்த்தேன். மொழிபெயர்த்து முடித்ததும் அனைத்தையும் ஒருங்கிணைத்து பிரதியெடுக்க மேலும் சில நாட்கள் பிடித்தன. முழுப்பிரதி தயாரானதும் நண்பர்கள் ராமசாமியும் தேவராஜனும் ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு நிறைவளிப்பதாகச் சொன்னார்கள். அதற்குப் பிறகு நான் அப்பிரதியை நண்பர் ரவிக்குமாருக்கு அஞ்சலில் அனுப்பிவைத்தேன். தனக்கு அந்த நேர்காணல் மிகவும் நிறைவளிப்பதாக மகிழ்ச்சியுடன் தொலைபேசியில் சொன்னார் ரவிக்குமார். ”உண்மையிலேயே மிகப்பெரிய கலைஞன் சித்தலிங்கையாஎன்று அவர் பாராட்டுணர்வோடு சொன்ன சொல் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. ஒவ்வொரு பதிலிலும் சித்தலிங்கையாவுடைய தெளிவையும் நேர்மையையும் உணரமுடிவதாகவும் சொன்னார்.

ரவிக்குமார் அப்போது நிறப்பிரிகை இதழோடு தொடர்பில் இருந்தார். அவர்கள் 1994இல் கொண்டுவந்த ஒரு சிறப்பிதழில் இந்த நேர்காணல் வெளியானது. நானும் ராமசாமியும் ஒருநாள் சித்தலிங்கையாவைச் சந்தித்து இதழ்களைக் கொடுத்துவிட்டுத் திரும்பினோம். அவர் அந்த நேர்காணல் வெளியாகியிருக்கும் பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டுரொம்ப நீளமா போயிடுச்சே, படிப்பாங்களா?” என்று புருவத்தை உயர்த்திக்கொண்டு கேட்டபடி புன்னகைத்தார் சித்தலிங்கையா.

அந்த நேர்காணலுக்குப் பிறகு என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசியவர்களில் முக்கியமானவர் கோமல் சுவாமிநாதன். சித்தலிங்கையா சொன்ன ஒவ்வொரு பதிலையும் அவர் சொல்லிச்சொல்லி ரசித்தார். “என்ன வயசிருக்கும், பெரிய அனுபவசாலியோ?” என்று கேட்டார். ”நாப்பது வயசுக்குள்ளதான் இருக்கும் சார், பெங்களூருக்கு வரும்போது சந்திக்கலாம்என்றேன். மறுமுனையில் அவர் த்ச் என்று நாக்கு சப்புக்கொட்டியபடி சிரிப்பது கேட்டது. “இனிமேல அதெல்லாம் நடக்காத காரியம் பாவண்ணன். உடம்பு நாம சொல்ற பேச்சுக்கு கட்டுப்படாத ஒரு காலம் வந்துட்டுதுஎன்றார். ஆனால் அதைப்பற்றிய பேச்சை நான் மறுபடியும் எடுக்காத வகையில்இந்தப் பதிலத்தான நான் இத்தன வருஷமா நான் தேடிட்டிருந்தேன். நான் கேள்வி கேட்ட யாருமே இப்படி ஒரு பதில சொன்னதில்ல. ரொம்ப கன்வின்சிங்கான பதில். என் கண்ண யாரோ தெறந்தமாதிரி இருக்குது. உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்என்று பேசிக்கொண்டே போனார். முடிவில்இந்த இன்டர்வியூ நம்ம சுபமங்களாவிலயும் வந்ததா இருக்கணும் பாவண்ணன். சில பதில்கள மட்டும் நான் பயன்படுத்திக்கறேன். நீங்க அவருடைய ரெண்டு மூனு படங்கள மட்டும் வாங்கி எனக்கு அனுப்பிவைங்க. அது போதும்என்றார்.

சுபமங்களா நேர்காணல்கள் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமானவை. அனைத்தும் ஒருவிதமான ஆவணம் போன்றவை. அந்தப் பட்டியலில் சித்தலிங்கையாவின் நேர்காணலும் சேரப் போகிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. நான் மறுநாள் அலுவலகத்துக்குச் சென்றதும் ரவிக்குமாரை அழைத்து தகவலைத் தெரிவித்தேன். அவருக்கும் அது மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. அன்று மாலையே ராமசாமியை அழைத்துக்கொண்டு நான் விடுதியறைக்குச் சென்று சித்தலிங்கையாவைச் சந்தித்தேன். கையில் நான்கைந்து சுபமங்களா பிரதிகளை வைத்திருந்தேன். அவற்றை அவரிடம் காட்டி எழுத்தாளர்களின் நேர்காணல் இடம்பெறும் விதத்தை சுட்டிக்காட்டினேன். சுபமங்களாவின் ஆசிரியர் சித்தலிங்கையாவின் நேர்காணலை வெளியிட விரும்புவதாகத் தெரிவித்தேன். அதைக் கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பத்திரிகையில் வெளியிடுவதற்காக அவருடைய சில புகைப்படங்கள் வேண்டுமென நான் கேட்டேன். “இத கேக்க ஏன் இவ்வளவு தயக்கம்? இருங்க, இருக்குதான்னு பாக்கறேன். இருந்தா, இப்பவே கொடுக்கறேன்என்று சொல்லிவிட்டு மேசையின் இழுப்பறையைத் திறந்து உள்ளே நிறைந்திருந்த கோப்புகள், புத்தகங்கள், நோட்டுகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக திறந்துபார்த்தார். அவரோடு சேர்ந்து நானும் ஒவ்வொரு புத்தகத்தையும் பார்த்தேன். நல்ல வேளையாக, ஒரு புத்தகத்தில் மூன்று படங்கள் இருந்தன. அவரும் நானும் ஒரே நேரத்தில் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டோம். “அதிர்ஷ்டக்காரர்தான் நீங்க. நீங்க தேடி வந்த விஷயம் உடனே கெடைக்குது பாருங்கஎன்றபடி அந்தப் படங்களை எடுத்து, பக்கத்திலிருந்த ஒரு திருமண அழைப்பிதழ் உறைக்குள் வைத்துக் கொடுத்தார். ”ரொம்ப நன்றி சார்என்றபடி நான் அதை வாங்கி என் பைக்குள் வைத்துக்கொண்டேன். வழக்கம்போல தேநீர் வழங்கி உபசரித்த பிறகே சித்தலிங்கையா எங்களுக்கு விடைகொடுத்து அனுப்பிவைத்தார்.

அன்று இரவு கோமல் சுவாமிநாதனை தொலைபேசியில் தொடர்புகொண்டு புகைப்படங்கள் கிடைத்த செய்தியைத் தெரிவித்தேன்.  அதைக் கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். “இங்க பாருங்க பாவண்ணன், ஒரு செயலுக்கான உண்மையான தேடல் நம்ம மனசுல இருந்தா, அந்த செயலுக்குத் தேவையான எல்லாமே தானா ஒன்னொன்னா கெடைக்க ஆரம்பிச்சிடும். இத என் வாழ்க்கையில பல தரம் பார்த்திருக்கேன்என்றார்.  அந்தப் படங்கள் என் கைக்குக் கிடைத்த வேகத்தை நினைத்தால் எனக்கும் ஆச்சரியமாகவே இருந்தது. கோமல் சொன்ன கருத்தின் மீது எனக்கும் நம்பிக்கை பிறந்தது. என் மனம் அந்தச் சிந்தனையில் மூழ்கியிருக்கும்போதே கோமல்படங்கள அனுப்பும்போது, உங்க கைவசம் சித்தலிங்கையா கவிதைகள் ஏதாவது இருந்தா அதயும் சேர்த்து அனுப்பிவைங்க. இன்டர்வியூவுக்கு நடுவில அங்கங்க போடலாம். நல்லா இருக்கும்என்று சொன்னார்.

என் குறிப்பேட்டில் அவருடைய கவிதைகளின் மொழிபெயர்ப்பை எழுதிவைத்திருந்தேன். அன்றிரவே இரு கவிதைகளை பிரதியெடுத்து புகைப்படங்கள் வைத்திருந்த உறைக்குள் வைத்துக்கொண்டேன். அடுத்த நாள் அலுவலகம் செல்லும்போது அதை அஞ்சலில் அனுப்பிவிட்டேன். 1995இல் ஜனவரி மாத இதழில் அந்தப் புகைப்படங்களோடு சித்தலிங்கையாவின் நேர்காணல் சுபமங்களா இதழில் வெளிவந்தது. வழக்கம்போல நான் அந்த இதழின் பிரதிகளையும் எடுத்துச் சென்று சித்தலிங்கையாவிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினேன். சித்தலிங்கையாவின் நேர்காணல் சுபமங்களாவில் மீள்பிரசுரமாக வெளிவந்து, வாசகர்கள் நடுவில் இன்னும் பரவலாக சென்றதை ஒட்டி ரவிக்குமாரும் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

நேர்காணல் வெளியான ஒன்றிரண்டு மாத கால இடைவெளியிலேயே ருஜுவாது என்னும் கன்னட இலக்கிய இதழில் (ஆசிரியர்-யு.ஆர்.அனந்தமூர்த்தி) சித்தலிங்கையா எழுதிய என் இளமைக்காலம் என்றொரு கட்டுரை வெளிவந்தது. அவருடைய தன்வரலாற்றின் ஒரு பகுதியாகவே அது அமைந்திருந்தது. அதில் தன் அம்மா, அப்பா, பெரியப்பா, கிராமம், திருவிழா, சாமி பற்றியெல்லாம் சித்தலிங்கையா மிகவும் சுவையாக எழுதியிருந்தார். ஒரு புனைவைப் படிப்பதுபோல இருந்தது. அவருடைய பெரியப்பா அந்த ஊரிலேயே பெரிய மனிதர். ஊராட்சித்தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர். அவசரத்துக்கு அந்த ஊரைச் சேர்ந்த ஒரு வாயாடிப்பெண்மணியிடம் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்கமுடியாமல் திண்டாடுகிறார் அவர். இதனால் தினந்தினமும் அந்தப் பெண்ணின் வசைக்கு ஆளாகிறார். ஒருநாள் காலையில் அவள் வசையின் இழிவைத் தாங்கமுடியாமல் ஊருக்கு வெளியே இருக்கும் கிணற்றுக்குச் சென்று, அதன் மதிலோரமாக பூ, சந்தனம் எல்லாம் வைத்து வணங்கிவிட்டு கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்.

இன்னொரு அத்தியாயத்தில் ஒரு திருவிழா நடக்கிறது. யாரோ ஒருவன் மீது சாமி இறங்கிவிடுகிறது. அந்த வேகத்தில் அவன் ஓடத் தொடங்குகிறான். அவன் பின்னால் ஊரே ஓடுகிறது. ஓடி ஓடி களைத்து ஓரிடத்தில் அந்த சாமி மூச்சு வாங்கிக்கொண்டு நிற்கிறது. பின்னால் ஓடி வந்தவர்களும் நிற்கிறார்கள். அப்போது ஒரு கிழவன் ஊரார் சார்பில் அந்த சாமியிடம் உரையாடுகிறான். “இத்தன நாளா எங்க போயிருந்தே?” என்று கேட்கிறான். “இந்த ஒரு ஊரு மட்டும்தான் என் கட்டுப்பாட்டுல இருக்குதுன்னு நெனச்சிகிட்டியா? மூனு உலகத்தயும் நான் பாக்கணும் தெரியுமாஎன்று பதில் சொல்கிறது சாமி. சாமிக்கும் மனிதனுக்கும் இடையில் இப்படி நீண்டுபோகும் உரையாடல் சுவாரசியமாக இருந்தது. அதை உடனடியாக மொழிபெயர்க்கவேண்டுமென என் மனத்தில் ஓர் ஆவல் மூண்டது.. அன்று மாலையில் அவருடைய விடுதியறைக்குச் சென்று அவரைச் சந்தித்து தகவலைச் சொன்னேன். ஒரு புன்சிரிப்புடன் தன் இசைவை உடனடியாக தெரிவித்தார் அவர். அடுத்து இரண்டு மூன்று இரவுகளில் அந்த அத்தியாயங்களை மொழிபெயர்த்து முடித்து சுபமங்களாவுக்கு அனுப்பிவைத்தேன்.

நாலைந்து நாட்களுக்குப் பிறகு ஒருநாள் இரவில் கோமல் தொலைபேசியில் அழைத்தார். “இப்ப ஆபீஸ்க்கு போறதில்ல பாவண்ணன். கொஞ்சம் உடம்பு சரியில்லை. வாரத்துக்கு ஒருதரம் எல்லா தபாலயும் வீட்டுக்கே வரவழச்சி பாக்கறமாதிரி ஆயிடுச்சி. நீங்க அனுப்பின ஆர்டிக்கள இன்னைக்குத்தான் படிச்சேன். பிரமாதமா எழுதியிருக்காரு அந்த சித்தலிங்கையா. ஆத்மார்த்தமா இருக்குது அவருடைய எழுத்து. இதுபோல இன்னும்  நெறய எழுதினார்னா ஒரு பெஸ்ட் சுயசரிதையா இருக்கும். நீங்க அவர பார்த்தா, அவசியம் சொல்லுங்க. வர மாசமே நம்ம சுபமங்களாவுல வந்துடும்னு சொல்லுங்கஎன்றார்.

அவர் சொன்னதுபோலவே அடுத்த மாத இதழிலேயே என் இளமைக்காலம் வெளிவந்தது. நண்பர் ரவிக்குமாரும் தொலைபேசியில் அழைத்து எளிமையாகவும் சிறப்பாகவும் இருப்பதாகச் சொன்னார். நான் இரண்டு பிரதிகளை வாங்கிச் சென்று சித்தலிங்கையாவைச் சந்தித்து கொடுத்துவிட்டு முழுநூலாக எழுதும்படி கேட்டுக்கொண்டேன். வாசகர்களிடையில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் சொன்னேன். “எழுதணும் பாவண்ணன், ஆனா எப்ப எழுதுவேன்னு எனக்கே தெரியலை. எங்கனா கண்காணாத இடத்துக்கு போய் உக்காந்துதான் எழுதணும்என்று சொல்லிவிட்டு புன்னகைத்தார் சித்தலிங்கையா.

சித்தலிங்கையா ஒரு பேச்சுக்கு அப்படிச் சொன்னபோதும், அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் ஓராண்டு இடைவெளிக்குள்ளேயே அவர் ஊரும் சேரியும் என்னும் பெயரில் தன் தன்வரலாற்றை எழுதிவிட்டார். கன்னடத்தின் முக்கிய விமர்சகரான டி.ஆர்.நாகராஜ் முன்னுரையோடு அது புத்தகமாக வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் ஒவ்வொரு அத்தியாயமும் உயிரோட்டமுள்ள சித்திரமாக இருந்தது. படித்த வேகத்தில் சித்தலிங்கையாவின் அனுமதியைப் பெற்று அந்தப் புத்தகத்தை அதே தலைப்பில் மொழிபெயர்த்து முடித்தேன். ஏதோ ஆசையில் அந்த மொழிபெயர்ப்பைச் செய்துவிட்டேனே தவிர, அதை நூலாக எப்படி வெளியிடுவது என்று புரியாமல் குழம்பினேன். ஒருநாள் நண்பர் ரவிக்குமாருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது என் குழப்பத்தை அவரிடம் பகிர்ந்துகொண்டேன். “அதப்பத்தி நீங்க கவலைப்படாதீங்க. அந்த பொறுப்ப நான் எடுத்துக்கறேன். அடுத்த முறை ஊருக்கு வரும்போது ஸ்க்ரிப்ட்ட கொண்டுவந்து கொடுங்கஎன்று சொன்னார். அச்சொற்கள் எனக்கு அப்போது மிகவும் ஆறுதலை அளித்தன. ஆயினும் ஒரு தயக்கத்துடன்உண்மையாவா சொல்றீங்க?” என்று  கேட்டேன். “உண்மையாதான் சொல்றேன் பாவண்ணன். புத்தகமாக்கற வேலை என்னுடைய வேலை. நீங்க நிம்மதியா அடுத்த வேலைய பாருங்க. நேரமிருக்கும் போது, தலித் எழுத்தாளர்கள் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பா மொழிபெயர்க்க முடியுமான்னு பாருங்கஎன்று நம்பிக்கையூட்டும் விதமாகச் சொன்னார்.

சில வார இடைவெளியிலேயே நான் புதுவைக்குச் செல்லவேண்டிய ஒரு வேலை வந்தது. அப்போது அந்தக் கையெழுத்துப் பிரதியையும் எடுத்துச் சென்று அவரிடம் கொடுத்துவிட்டு வந்தேன். நாலைந்து நாட்களுக்குப் பிறகு அவருடன்  தொலைபேசியில் பேசும்போதுரொம்ப அருமையான சுயசரிதை பாவண்ணன். இந்தப் புத்தகம் பல பேருடைய ஆழ்மன தயக்கங்கள இது உடைக்கப் போவுது.  பலருக்கு இது ஒரு முன்னோடி புத்தகமா இருக்கப் போவுது. எனக்கு சந்தேகமே இல்லஎன்று மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

ரவிக்குமார் தன் சொந்த முயற்சியால் விடியல் பதிப்பகத்தைத் தொடர்புகொண்டு ஊரும் சேரியும் பிரதிக்கு நூல்வடிவம் கொடுத்தார். பின்னட்டையில் சித்தலிங்கையாவின் படத்தை வெளியிடலாம் என்று அவர் விரும்பினார். அதற்கு அவருடைய புகைப்படம் தேவைப்பட்டது. மீண்டும் புகைப்படத்துக்காக சித்தலிங்கையாவிடம் செல்ல எனக்கு மனமில்லை. அதனால் ஏற்கனவே இதழ்களில் வெளிவந்த சித்தலிங்கையாவின் படங்களை என் தம்பிக்கு அனுப்பி கோட்டோவியமாக தீட்டிக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். அவன் ஒரு மணி நேரத்திலேயே அந்த ஓவியத்தை வரைந்துமுடித்துவிட்டான். அவனே அதை புதுவைக்கு எடுத்துச் சென்று ரவிக்குமாரிடம் கொடுத்துவிட்டு திரும்பினான்.

சில நாட்களிலேயே புத்தகம் வந்துவிட்டது. கட்டைப் பிரித்து புத்தகத்தைப் பிரித்து பார்த்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எத்தனை பேருடைய கூட்டு உழைப்பு இது என்ற எண்ணமே எனக்கு முதலில் தோன்றியது. ரவிக்குமாரை அழைத்து நன்றி சொன்னேன். சித்தலிங்கையாவைச் சந்தித்து புத்தகப்பிரதிகளையும் கொடுத்தேன். “ரொம்ப அழகா இருக்குதுஎன்று சொல்லி புத்தகத்தின் முன்னட்டையையும் பின்னட்டையையும் விரல்களால் தொட்டுத்தொட்டுப் பார்த்தார். மஞ்சள்நிறப் பின்னட்டையில் கரிய கோடுகளால் வரையப்பட்டிருந்த அவருடைய ஓவியத்தைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் தலையசைத்தார். “ரொம்ப நல்லா இருக்குது. படம் போடறதுக்குப் புதிலா இப்படி ஓவியமா போடறது நல்ல முயற்சி. புதுமையா இருக்குது. யார் போட்ட ஓவியம் இது?” என்று கேட்டார். ”என் தம்பி சார்என்றேன். “, அப்படியா?” என்றபடி புன்னகையுடன் என் தோளைப் பற்றி அழுத்தினார் சித்தலிங்கையா.

ஊரும் சேரியும் புத்தகத்துக்கு ஒரு வெளியீட்டு விழாவை புதுச்சேரியில் ஏற்பாடு செய்திருந்தார் ரவிக்குமார். அந்த விழாவுக்கு நான் சென்றிருந்தேன். ஏற்கனவே ஒப்புக்கொண்ட சில நிகழ்ச்சிகள் காரணமாக சித்தலிங்கையாவால் கலந்துகொள்ள இயலவில்லை. சித்தலிங்கையாவின் நெருங்கிய நண்பரான டி.ஆர்.நாகராஜ் அப்புத்தகத்தை வெளியிட்டு நீண்ட நேரம் உரையாற்றினார். கன்னடப் படைப்புலகில் அந்தச் சுயசரிதை பெற்றிருக்கும் தனித்துவமான இடத்தைப்பற்றி விரிவான எடுத்துக்காட்டுகளோடு எடுத்துரைத்தார். அந்தச் சுயசரிதையில் ஒரு அத்தியாயத்தில் டி.ஆர்.நாகராஜைப்பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. அதைச் சுட்டிக்காட்டிய டி.ஆர்.நாகராஜ், அந்தச் சுயசரிதையைப்பற்றி தான் உரையாற்றுவது, ஒருவகையில் ஒரு கதையாசிரியரால் உருவாக்கப்பட்ட ஒரு கதைப்பாத்திரம், அந்தக் கதைக்கு வெளியே வந்து, அதே கதையை மீண்டும் சொல்வதுபோல  இருப்பதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ரவிக்குமார் தன் உரையில் சித்தலிங்கையாவின் சுயசரிதையின் வரவு தமிழ்ச்சூழலில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுப் பேசினார்.

பெங்களூருக்குத் திரும்பியதும் நான் சித்தலிங்கையாவைச் சந்தித்து வெளியீட்டு விழாவைப்பற்றிய விவரங்களைச் சொன்னேன். டி.ஆர்.நாகராஜ் தொலைபேசியில் தன்னுடன் அச்செய்தியைப் பகிர்ந்துகொண்டதாக அவரும் சொல்லி, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த நண்பர்கள் அனைவரும் தன் சார்பில் நன்றிகளைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

விடைபெறும்போதுஎல்லா இடத்துலயும் புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு இருக்குது பாவண்ணன். சீக்கிரமா இதனுடைய இரண்டாவது பகுதியை எழுதி முடிக்கணும். நாகராஜும் அதத்தான் சொல்லிட்டே இருக்காருஎன்றார்.  அதைக் கேட்க எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. “சீக்கிரமா எழுதுங்க சார். அதயும் தமிழ்ல கொண்டுவந்துடலாம்என்று நானும் உற்சாகமாகச் சொன்னேன்.

பல தருணங்களில் நம் மனத்தில் சொல்லாக இருப்பது செயல்வடிவம் கொள்வதே இல்லை என்பதையும் அப்படியே ஒருவேளை செயல்வடிவம் எடுத்தாலும் நினைத்த வேகத்தில் அது செயலாக மாறுவதில்லை என்பதையும் துயரத்துடன் நான் உணர்ந்திருக்கிறேன். சித்தலிங்கையாவின் விஷயத்திலும் என் விஷயத்திலும் இதுதான் நடைபெற்றது. பத்து பதினைந்து ஆண்டுகள் கழித்துத்தான் அவர் தன் சுயசரிதையின் இரண்டாம் பகுதியை எழுதி வெளியிட்டார். மேலும் சில ஆண்டுகள் கழிந்த பிறகே நான் அதை மொழிபெயர்த்தேன். 2017இல் வாழ்வின் தடங்கள் என்னும் தலைப்பில் அது புத்தகமாக வெளிவந்தது.

புத்தகப் பிரதிகளோடு ஒருநாள் அவரை சந்திக்கச் சென்றிருந்தேன். புத்தக அமைப்பு அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. புரட்டிப்புரட்டி பார்த்துவிட்டுஇருநூத்தியம்பத்தஞ்சி பக்கம். ரொம்ப பெரிய புத்தகமா போயிட்டுது, இல்ல?” என்று கேட்டுவிட்டு புன்னகைத்தார். பல முறை முதல் பக்கத்திலிருந்து கடைசிப்பக்கம் வரைக்கும் திருப்பித்திருப்பி பார்த்து மகிழ்ந்தார். இடையிடையில் உள்ள கோட்டோவியங்களைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தார். ‘யார் ஐடியா இது? ரொம்ப நல்லா இருக்குது? இதெல்லாம் யார் வரைஞ்சாங்க? உங்க தம்பியா?” என்று மிகவும் இயல்பாகக் கேட்டார். இருபது ஆண்டுகளுக்கு முன்பாக முதல் பகுதியின் பின்னட்டையில் அவருடைய கோட்டோவியத்தை வரைந்தவன் என் தம்பி என்று சொன்ன குறிப்பை அவர் இன்னும் நினைவில் வைத்திருப்பதை அறிந்து வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ”இல்ல சார். இது வேற ஒரு ஆர்ட்டிஸ்ட் வரைஞ்சது. தம்பிக்கு இப்ப படம் வரைய நேரமில்லை. கவர்மெண்ட் ஆபீஸ் வேலைக்கே இப்ப அவன் நேரம் சரியாபோயிடுதுஎன்றேன். “சரிசரி, இதுவும் நல்லாதான் இருக்குது, நல்லா போட்டிருக்காருஎன்று ஒவ்வொரு படத்தையும் புரட்டிப் பார்த்து ரசித்தார். மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுஇன்னொரு முறை வரேன் சார். பார்க்கலாம்என்று விடைபெற்றுக்கொண்டு திரும்பிவிட்டேன்.

அந்த இன்னொரு நாள் அமையவே இல்லை என்பதை இப்போது திகைப்போடு நினைத்துக்கொள்கிறேன். ஏதேதோ நெருக்கடிகள். எப்படிஎப்படியோ பொழுதுகள் கரைந்துவிட்டன. போதாக்குறைக்கு ஒருவரும் எதிர்பாராத விதமாக இந்த உலகத்தின் மீது கவிந்துவிட்ட கொரானா கடந்த ஒரு ஆண்டாக அனைவரையும் வீட்டுக்குள் முடக்கிவிட்டது. இடையில் ஒருசில முறைகள் அவரோடு தொலைபேசியில் உரையாடினேன். அவ்வளவுதான்.

இதோ, இன்று (11.06.2021) சற்றுமுன் வந்த தொலைபேசியில் அழைத்த நண்பர் சித்தலிங்கையாவின் மறைவுச்செய்தியைத் தெரிவித்தார். மனத்தில் ஒருவித செயலின்மை கவிய ஒருகணம் உறைந்து உட்கார்ந்துவிட்டேன். எப்போதும் புன்னகையால் நிறைந்த அவருடைய முகம் ஒரு நிழலென நெஞ்சில் எழுந்து மறைந்தது.  அந்தப் புன்னகை பூத்த முகத்தை இனி ஒருபோதும் பார்க்கமுடியாது என்பதையும் இனிமேல் அவருடன் உரையாடவும் முடியாது என்பதையும் நினைக்கும்போது பெருகும் துயரத்தைத் தாங்கவே முடியவில்லை. சித்தலிங்கையாவுக்கு அஞ்சலிகள்.

 

 

(தலித் - ஏப்ரல் – ஆகஸ்டு 2021 இதழில் வெளியான அஞ்சலிக்கட்டுரை)