தமது நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் இல்லத்தில் ஒரு மாதம் கழித்து நடக்கவிருக்கும் ஆண்டுவிழாவில் போட்டிகளுக்குப் பரிசு வழங்கி சிறப்புரையாற்றவேண்டுமென்று கேட்டுக்கொண்டார் செல்லப்பா. திடீர்திடீரென்று அலுவலக ஆணைக்குக் கட்டுப்பட்டு மும்பை, கொச்சின், கல்கத்தா என்று புறப்பட்டுச் செல்கிற சூழல்களுக்கிடையே பணிபுரிகிறவன் இப்படியெல்லாம் விசேஷநிகழ்ச்சிக்கு தீர்மானமாக தேதி ஒதுக்கித்தருவதில் இருக்கிற சிரமங்களை அவருக்குப் புரியவைப்பது எப்படி என்று தடுமாற்றமாக இருந்தது. பத்திரிகைகளில் கதையெல்லாம் எழுதுகிறவன் கேட்டால் மறுக்கமாட்டான் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் வந்திருந்தார்.
அவரோடு
இல்லத்து மாணவிகள் சார்பாக ஒரு பார்வையற்ற மாணவியும் பார்வையுள்ள இன்னொரு
மாணவியும் வந்திருந்தார்கள். வெள்ளிக்கிழமையன்றும் சனிக்கிழமையன்றும் நான் இல்லாத
போது இரண்டுமுறை தேடி வந்து ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றுவிட்டதாகவும்
தெரிவித்தார்கள் மாணவிகள். வருத்தமாக இருந்தது. அவசரமாக வெளியூருக்குக் கிளம்பிப்
போனதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டியிருந்தது. நண்பரின் குழந்தைக்கு தானமாகக்
கிடைத்த கண்களைப் பொருத்தும் அறுவை
சிகிச்சை. அவருக்கு அண்ணன்தம்பிகள் மூன்றுபேர் இருந்தார்கள். ஆனாலும் அவர்களைவிட
நான் பக்கத்தில் இருந்தால் தன் மனசுக்குத் தெம்பாக இருக்கும் என்பது நண்பரின்
நம்பிக்கை அதற்காக ஓர் அவசரப் பயணம் மேற்கொள்ளவேண்டியதாயிற்று. எல்லாவற்றையும்
சுருக்கமாக சொல்லிமுடிப்பது கடமையானது.
“கட்டு எப்ப பிரிப்பாங்களாம் சார்?” செல்லப்பா
கேட்டார்.
“இன்னம் ஏழெட்டு நாளாவது ஆவும்னு தோணுது. அதுக்கப்புறம் பார்வை திரும்பிடும்னு
டாக்டர் சொல்லியிருக்காங்க. இன்னொரு நட போய் பாத்திட்டு திரும்பணும்.”
“நீங்க எதுக்கும் கவலப்படாதீங்க சார். எல்லாம் நல்லபடியா
நடக்கும். விஞ்ஞானம் முன்னேறியிருக்கிற தூரத்துக்கு கண் ஆபரேஷன்லாம் சிட்டிக போடற
நேரத்துல நடந்துமுடிற வேல. எங்க இல்லத்துல இதுவரைக்கும் அம்பத்தியாறு ஆபரேஷன்
நடந்திருக்குது தெரியுங்களா?”
“அம்பத்தியாறா?”
“எங்க இல்லத்து புள்ளைங்க பட்டியல எல்லா எடங்கள்ளயும்
பதிஞ்சி வச்சிருக்கம். நகரத்துல எங்களமாதிரியே மூணு நாலு இல்லங்க இருக்குது. பொருத்தமா கண்தானம் கெடைக்கும்போது
சீனியாரிட்டி லிஸ்ட்படி ஆஸ்த்திரியிலேருந்து
கூப்படறது வழக்கம்.”
“பார்வை கெடைச்சதும் அவுங்கள அனுப்பிடுவீங்களா?”
“இல்ல. இல்ல. பார்வையில்லாத மத்த புள்ளைங்களுக்கு ஆதரவா
இங்கயே இருப்பாங்க.”
நான் நாற்காலியில்
அமர்ந்திருந்த இரண்டு மாணவிகளையும் ஆதரவா இங்கயே இருப்பாங்க.”
“இது நிர்மலா. அது சரோஜா. ரெண்டுபேரும் ஒன்பதாம் கிளாஸ்
படிக்கறாங்க” செல்லப்பா
அறிமுகப்படுத்தினார்.
புள்ளைங்களுக்கெல்லாம்
நான்னா உயிரு. ஒவ்வொரு புள்ளைக்கும் ஆபரேஷன் முடிஞ்சி கண்ணு கட்டு அவிழ்க்கிற அன்னிக்கு என்னத்தான் மொதல்மொதல்லா பாக்கணும்ன்னு சொல்வாங்க. அதுங்களுக்கு அப்படி
பாக்கறதுல ஒரு சந்தோஷம்.”
உற்சாகமாக பேசிக்கொண்டே
இருந்தார் செல்லப்பா. சரோஜாவின் பார்வை என்மீது பதிந்திருந்தது. பார்வையற்ற
நிர்மலா சற்றே கழுத்தை வளைத்து எங்கள் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
இருவருடைய கைகளிலும் நோட்டுகள் இருந்தன. நோட்டுக்குள் மடித்துவைக்கப்பட்டிருந்த
தாள்கள் நோக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. என் பார்வை அவற்றின்மீது பதிந்ததும்
மடித்து வைத்திருந்த நாளை அவசரமாக உதவி என்னிடம் காட்டினாள். நான்கு வெவ்வேறு
நிறங்களால் வரைந்து எழுப்பப்பட்ட ஒரு சதுரத்துக்குள் இருபது இருபத்தியைந்து வரிகள்
நீளமுள்ள கவிதையொன்று எழுதப்பட்டிருந்தது. குண்டு குண்டான கையெழுத்து. நியாய
உணர்வில்லாத சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் கேள்விப்பட்டியல். ஒவ்வொரு வரியிலும்
சாட்டையால் சொடுக்கப்பட்ட ஓசை ஒலித்தது. கவிதையின் இறுதியில் சிவப்பு வண்ணம்
பூசிக்கொண்ட ஒரு கண் வரையப்பட்டிருந்தது. அநியாயங்களைக் கண்காணித்து உலகத்துக்கு
எடுத்துரைக்கும் காவல் கண். அதற்கு அருகே சரோஜா என்ற பெயர் எழுதப்பட்டிருக்க.
ஒவ்வொரு எழுத்திலிருந்தும் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. கவிதையை நான்
படித்துவிட்டதை அறிந்து கொண்டு நிர்மலாவின் நோட்டிலிருந்து கவிதைத்தாளை
உருவிப்படிப்பதற்குத் தந்தாள் சரோஜா. அதிக இடைவெளியுடன் பத்து பன்னிரண்டு வரிகள்
மட்டுமே அதில் எழுதப்பட்டிருந்தன. ஒரு வாசிப்பில் அது ஒரு முறையீடு போல இருந்தது.
மற்ற தாவர ராசிகளுடன் ஒன்றுக்குள் ஒன்றாக புல் வளர்கிறது. ஆனால் மற்றவை வளர்ந்து
ஆளாகி மரங்களாகவும் மாறிவிடுகின்றன. புல்லுக்கு அப்படி ஒரு வாழ்க்கை இல்லை.
நசுங்குவதும் மிதிபடுவதும் பழகிப்போய்விடுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில்
அழுத்தமான சோகம் பதிந்திருப்பதைக் கண்டேன். ஓரமாக அவள் பெயர் சற்றே மேலும் கீழுமான
கோணல் வரிகளில் எழுதப்பட்டிருந்தது.
“கவிதைன்னா ரொம்ப புடிக்குமா ஒங்களுக்கு?” இரண்டு பேரயும்
பார்த்து பொதுவாகக்கேட்டேன்.
“இந்த நோட்டு பூரா கவிதைங்கதான் சார்”
இருவரும் ஒரே நேரத்தில்
கையிலிருந்து நோட்டுகளை நீட்டினார்கள். உள்ளே எண்ணற்ற கவி¬தைகளை விதவிதமாக
எழுதியிருந்தார்கள். நான் அப்பக்கங்களை மெதுவாகப் புரட்டிக்கொண்டிருந்தபோதே, “எங்க
ஆண்டுவிழாவுக்கு வருவிங்களா சார்?” என்று கேட்டார்கள். எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ஆவலும்
தொனிக்கும் அக்குரல்களை ஏமாற்றத்துக்கு ஆளாக்கக்கூடாது என்று தோன்றியது. என்
சம்மதத்தைத் தெரிவித்தேன்.
“நோட்டுங்க ஒங்ககிட்டயே இருக்கட்டும் சார்.
படிச்சிப்பாத்துட்டு ஒங்க கருத்த சொல்லுங்க சார்.”
இரண்டு பெண்களும் ஒரே
நேரத்தில் சொன்னார்கள்.
“இல்லத்துக்குப் புள்ளைங்களுக்கு ஆர்வம் அதிகம் சார், தங்கம்மான்னு ஒரு
பொண்ணு வீண
வாசிச்சிதுன்னா இன்னிக்கு பூரா கேட்டுகிட்டே இருக்கலாம் சார். சுலோச்சனான்னு
இன்னொரு பொண்ணு. அவளுக்கு
வயலின்மேல உயிரு. சோறு தண்ணிகூட வேணாம். தொடர்ச்சியா வாசிச்சிகிட்டே இருப்பா.
பத்து நிமிஷம் நின்று காது குடுத்து கேட்டா போதும். நெஞ்சபோட்டு பெசையற மாதிரி
இருக்கும். ஒன்னொன்னுக்கும் தனித்தனியா வாத்தியாருங்க போட்டிருக்கம் சார்.
எல்லாரும் நேரத்துக்கு சரியா வந்திருந்தது சொல்லித்தருவாங்க. பகல் நேரத்துல
படிப்பும் உண்டு. அதிலயும் நம்ம புள்ளைங்க கெட்டி. பிரெய்ல் மெதேட்ல ஸ்டேட் லெவல்ல
நம்ம இல்லத்து புள்ளைங்க ரேங்க் வாங்கியிருக்காங்க. பதினாறு வருஷங்க எப்படியோ
கஷ்டப்பட்டு சமாளிச்சி இல்லத்த இந்த நெலைக்கு உசத்தி வந்திருக்கேன். இன்னம்
கொஞ்சம் சேங்ஷன் வரணும். வந்தத இன்னம் சிறப்பா நடத்தலாம். வெறும் பன்னென்டு புள்ளைங்களோடுதான் இத ஆரம்பிச்சம். இன்னிக்கு நூத்தி
அம்பத்திரண்டு புள்ளைங்க படிக்குதுங்க.
வெகுநேரம்
பேசிக்கொண்டிருந்துவிட்டு செல்லப்பாவும் பிள்ளைகளும் புறப்பட்டார்கள். வாசல்வரை
சென்று வழியனுப்பி விட்டு வந்தேன் நான்.
பிரதான சாலையின்
திருப்பத்தில் விட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அந்த இல்லம் இருந்தது.
வெளிப்பார்வைக்கு சின்னத் தோப்புபோலத் தோற்றம் தெரியும். அந்த அளவுக்கு
முன்பக்கத்தை மரங்கள் அடைத்திருக்கும். மரங்களைக் கடந்துதான் உள்ளே இருந்த
இல்லத்துக்குள் செல்லவேண்டும். நான்கு கட்டங்களை ஒட்டவைத்ததைப் போல இருந்தன. ஒரு
பிரார்த்தனைக் கூடமும் உணவுக்கூடமும் தனித்தனியாக இருந்தன. பிரதான சாலையில்
காலைநடை நடந்து செல்லும் போதெல்லாம் உள்ளிருந்து ஒலிக்கும் பிரார்த்தனைப் பாடலை
பலமுறை கேட்டிருக்கிறேன். குரல்களும் இசையும் பாடல்வரிகளும் இனிமையாக இருக்கும்.
அன்று இரவு சரோஜாவின்
கவிதைகளையும் நிர்மலாவின் கவிதைகளையும் படித்தேன். தொடக்கநிலைக்கே உரிய
உற்சாகங்கள். சீற்றங்கள். தடுமாற்றங்கள், தத்தளிப்புகள். நிர்மலாவின் கவிதைகளில் பொழுது தொடர்பான
வார்த்தைகளோ தற்செயலாகக் கண்டறிந்தேன். நேர்மாறாக சரோஜாவின் கவிதைகளில்
பொழுதுகளும் நிறங்களும் நிரம்பிவழிந்தன.
இரண்டு நாளுக்குப் பிறகு
சாயங்கால வேளையில் சரோஜாவும் நிர்மலாவும் வந்திருந்தார்கள். அவர்கள் நோட்டுகளைத்
திருப்பித்தந்து அவர்கள் எழுதியிருந்த ஒவ்வொரு கவிதைபற்றியும் எடுத்துச் சொன்னேன்.
வலிமையான வார்த்தைகளின்றி சரிந்து போகும் கவிதைகளையும் வலிமைமிகுந்த
வார்த்தைகளுடன் இறக்கைகட்டிப் பற்நது போகிற கவிதைகளையும் பிரித்துப்பிரித்து
அடுக்கிச் சொன்னேன். நிர்மலாவும் சரோஜாவும் அப்போதே எனக்கு நெருக்கமானவர்களாக
மாறிவிட்டார்கள். விட்டுக்குள் எந்த நேரமும் வரலாம் போகலாம் என்கிற அளவுக்கு
சுதந்திரம் எடுத்துக் கொண்டார்கள். போட்டிக்காக எழுதிவைத்திருந்த கவிதைகளைக்
கொண்டு வந்து காட்டினார்கள். அவர்கள் எழுதுகிற கவிதைகளின் எண்ணிக்கை திடீரென
உயரத்தொடங்கியது. அந்த இல்லத்திலிருந்து மேலும் சில பிள்ளைகளை நிர்மலா அழைத்துவரத்
தொடங்கினாள். அவர்கள் அனைவருக்கும் அவள் தலைவியாக விளங்கினாள். நிர்மலாவின் நட்பின்மீது
உண்மையிலேயே அவர்கள் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். பார்வையுள்ள தோழிகளின்
தோள்மீது கைவைத்தபடி அவர்கள் சாலையில் இறங்கி நடப்பதைப் பார்க்கும் போதெல்லாம் என்
மனம் பாரமாகிவிடும்.
ஒரு ஞாயிறு விடுப்பில்
நிர்மலாவும் சரோஜாவும் பேசிக் கொண்டிருந்ததும் எங்கள் வீட்டில் வாடிக்கையாக துணி
துவைக்கும் முத்தம்மா உள்ளே வந்ததும் ஒரே கணத்தில் நிகழ்ந்தன.
“என்னங்கடி, ஜோடியாக வந்து ஐயா ஊட்டுல என்னடி பண்ணறிங்க?” மிகவும்
உரிமையோடு ஒலித்த முத்தம்மாவின் குரல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “உனக்கு இவுங்கள
தெரியுமா முத்தம்மா” என்றேன்.
“என்ன ஐயா அப்படி கேட்டுட்டிங்க. அந்த இல்லம் ஆரம்பிச்ச
காலத்திலேருந்து நான்£ன அங்க சலவவேல
பாக்கறேன். இதுங்கள்ளாம் கைப்புள்ளயா வந்து இன்னிக்கு கன்னிப்பொண்ணா நிக்குதுங்க.
இதுங்க தீட்டுத்துணிய தொவச்சதும் நான் தான்னா பாத்துக்குங்க. அதுவும் இதோ
நிக்கறாளே ராங்க்காரி, ஒரு நா காத்தால
இவ ஆத்தாக்காரி இவள வாசல்ல போட்டு ஓடிட்டா. கைக்கொழந்த அழுது அழுது நவுந்துபோயி
பக்கத்துல சாக்கடைக்கே உருண்டுபோயிடுச்சி. அப்பதான் நான் அந்தப்பக்கம் வந்தன்.
என்னடி கொழந்த சத்தம் மட்டும் கேக்குதேன்னு திரும்பித் திரும்பிப் பாத்தா சாக்கடையில பொரண்டுங்கெடக்குது
இது. தலமட்டும் வெளியில தெரியது. ஐயோ மாரியாத்தான்னு ஓடிப்போயி தூக்கியாந்து
குளிப்பாட்டி பொழைக்க வச்சேன். எப்படி நிக்குது பாருங்க இப்ப. என் கண்ணே பட்டுடும்
போல.”
அருகில் நின்றிருந்த
நிர்மலாவின் கன்னத்தைத் தொட்டு முத்தம் கொடுத்தாள். வெற்றிலைக்காவி படிந்த அவள்
பற்களைக் காட்டிச் சிரித்தாள். உதடுகள் வெற்றிலைச்சாறு படிந்து படிந்து வெடித்துப்
போயிருந்தன.
தொட்டதால்
கூச்சப்படுவதைப்போல நிர்மலா சற்றே பின்வாங்கி நின்றாள். அவள் முகத்தில் ஒருவித
கசப்பின் கோடுகள் படிந்திருந்தன. ஒரு வார்த்தைகூட பேசாமல் சரோஜாவின் தோளைப்
பிடித்தபடி நின்றாள்.
“சரியான ஆரவல்லிங்க ஐயா இவ. ஆனா மனசு சொக்கத்தங்கம்.”
முத்தம்மா பேசப்பேச அவள்
முகம் சுண்டுவதைப்போல இருந்தது. இடையில் புகுந்து உரையாடலை நிறுத்துவதற்கான
சந்தர்ப்பம் அதுதான் என்று தோன்றியது. பேச்சின் திசையை சட்டென வேறுபக்கம் மாற்ற
நிர்மலாவை அனுப்பிவைத்தேன்.
அடுத்த நாள் சாயங்காலம்
நானே இல்லத்துக்குச் சென்றேன். எல்லாப் பிள்ளைகளும் சுற்றி நின்று என்னை ஒரு
வினோதப் பிராணியைப்போல வேடிக்கை பார்த்தார்கள். அறையிலிருந்து வேகமாக வந்த
செல்லப்பா வரவேற்று அறைக்கு அழைத்துச்சென்று சூடான தேநீர் வரவழைத்துக் கொடுத்தார்.
பிள்ளைகளிடம் சிறிது சந்தோஷப்பட்டார் செல்லப்பா. முதலில் வயலின் கேட்க ஆசையாக
இருந்தது. சிறிது தயக்கத்துக்குப் பிறகு சுலோச்சனாவும் வேறுசில பெண்களும்முன்
வந்தார்கள்.
“எனக்காக ஒரு நிமிஷம் வாசிக்கிறிங்களா?” என் கோரிக்கையைக்
கேட்டு அவர்கள் முகம் கூச்சத்தில் சிவந்தது. அறைக்குச் சென்று ஒருத்தி வயலினைக்
கொண்டுவந்து சுலோச்சனாவிடம் கொடுத்தாள். எந்தத் தயக்கமும் இல்லாமல் அவள் வாசிக்கத்
தொடங்கினாள். நெஞ்சிலிருந்து ஒரு சுணை பொங்கிப்பெருகி நாடி நரம்புகளில்
ஓடிநிறைந்ததைப்போல இருந்தது. தொடர்ந்து இன்னொரு மாணவி தபேலா வாசித்தாள். அப்புறம்
வீணை வாசிப்பு. இருள் கவியத் தொடங்கியதால் இன்னொருநாள் மறுபடியும் வருவதாகச்
சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டேன்.
ஒருநாள் மாலை. வழக்கம்போல
நிர்மலாவும் சரோஜாவும் வந்திருந்தார்கள். நிர்மலாவின் முகத்தில் பதற்றம்
நிறைந்திருந்தது. பள்ளியில் விரும்பத்தகாதது ஏதாவது நடந்திருக்கக்கூடும் என்று தோன்றியது.
பதற்றத்தைத் தணிக்கும் எண்ணத்தில் ஒலி நாடாவில் ஹரிபிரசாத் வயலின் இசை
ஒலிக்கும்படி செய்தேன்.
“பூர்ணிமான்னு ஒரு பொண்ணுக்கு கண்தானம் கெடைக்கப்போவுது சார்.
ஆஸ்பத்திரிலேருந்து தகவல் வந்திருக்குது. டெஸ்ட் பண்ண கூப்ட்டும் போயிருக்காங்க” சரோஜா மெதுவாகப்
பேச்சைத் தொடங்கினாள்.
“அது நல்ல விஷயம்தானே. அதுக்கு ஏன் இவ இப்படி பதற்றமா இருக்கணும்.”
“சினியாரிட்டி பட்டியல்ல அடுத்து இவ பேருதான். அடுத்த
அழைப்பு எப்ப வேணும்னாலும் வரலாம். இவ தயாரா இருக்கணும். அத நெனைச்சி இப்பவே தடுமாறறா”
“என்ன நிர்மலா, அப்படியா?” என்று கேட்டதும் அவள் உடைந்து அழத்தொடங்கிவிட்டாள். ஒருகணம்
என்ன செய்வது என்றே புரியவில்லை. அவசரமாக என் மனைவி சங்கீதாவை அழைத்து விவரம்
சொன்னேன். அவள் பெண்கள் இருவரையும் தன் அறைக்குள் ஆதரவாக அழைத்துச் சென்றாள். நான்
ஹரிப்பிரசாத்தின் வயலின் இசையில் மீண்டும் மூழ்கினேன். ஒரேகணத்தில் என் மனம் பூவாக
மாறிவிட்டது. அந்தப் பூ மிதக்கிறது. காற்றின் வேகம் கூடக்கூட பூ மிதந்துமிதந்து
மேலே செல்கிறது. உச்சியில் ஒரு மேகம் தென்படுகிறது. பூ மேகத்தோடு ஒட்டிவிட
இரண்டும் சேர்ந்து மிதக்கின்றன. இசைநாடா இறுதிப்புள்ளியைத் தொட்டு நிற்காமல்
இருந்திருப்பின் காலம்காலமாக மிதந்துகொண்டே இருக்கமுடியும். என்றே தோன்றியது.
அறையிலிருந்து எல்லாரும்
வெளியே வந்தனர். “வரேன் சார்” என்றபடி கையில்
மடித்து வைத்திருந்த தாளை என் பக்கம் நீட்டினாள். “நேத்து புதுசா எழுதன கவிதை சார்” என்று
சொல்லிவிட்டு வெளியேறினார்கள். அவர்கள் வெளியேறும் வரை காத்திருந்தபிறகு
சங்கீதாவின் பக்கம் திரும்பினேன்.
“எனக்கு பார்வையே வேணாம் ஆன்ட்டி. இப்படியே
இருக்கப்போறேன்றா. பெத்தவளே அனாதையாக்கிட்டு தூக்கி கெடாசிட்டப்பறம் இந்த உலகத்துல
பாக்கறதுக்கு என்ன இருக்குது ஆன்ட்டின்னு ஒரே பொலம்பல். வரிசையா எல்லாமே நெகடிவ்
திங்க்கிங். பேசிப்பேசி கொஞ்சம் சரியாக்கனேன். இப்ப கொஞ்சம் தைரியம் வந்த மாதிரி
தோணுது. பாக்கலாம்.”
சங்கீதா உள்ளே சென்றதும்
நிர்மலா கொடுத்திருந்த தாளைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். உருக்கமான வரிகள்
கொண்ட கவிதை. அதையே அசைபோட்டபடி வெகுநேரம் உட்கார்ந்திருந்தேன்.
மறுவாரம் இல்லத்தில்
செல்லப்பாவைச் சந்திக்கச் சென்றேன். பரிசளிக்கப் போகிறவன் என்கிற நெருக்கத்தில்
போட்டியில் பங்கெடுத்துக் கொள்ளும் அனைவருக்கும் ஏதாவது ஒரு பரிசு இருக்க வேண்டும்
என்று சொல்லிவைத்தேன். முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு விசேஷப் பரிசுகள் தரப்படும் நிலையில் மற்ற
அனைவருக்கும் ஆறுதல் பரிசகள் தரப்பட வேண்டும் என்பது என் தரப்பு வாதம். அதை
செல்லப்பா ஏற்றுக் கொண்டது எனக்கு ஒருவகையில் நிம்மதியாக இருந்தது. விழாவை
ஐந்தரைக்குத் தொடங்கி ஏழரைக்கு முடிப்பது என்பது அவர் திட்டம். தொடர்ந்து இரவு
விருந்து உண்டு. நான் ஐந்தேகால் மணியளவில் வந்தால் போதும் என்று சொன்னார்.
தொடர்ந்து “இன்னிக்கு
அம்பத்தியேழாவது ஆபரேஷன் சார். எல்லாம் நல்லபடி நடந்திடுச்சி. பத்து நாள்ள கட்டுபிரிச்சி
அனுப்பிருவாங்க” என்றார். அவர்
முகத்தில் மகிழ்ச்சிகளை பரவியிருந்தது.
“அடுத்து நிர்மலாவா?” ஆவலுடன் கேட்டேன் நான்.
“அவளுக்கும் ஒரு காலம் பொறக்கும் சார். சீக்கிரமாவே
பொறக்கும்ன்னு என் மனசு சொல்லுது. பச்சக்கொழந்தயா அது இந்த வாசல்ல கெடந்தது. எத்தன
நாளு தோள்ள போட்டு தூங்க வச்சிருப்பேன். அதுவும் கண்ணத் தெறந்து இந்த இல்லத்த
பாக்க வேணாமா?”
நெகிழ்ச்சியுடன் அவர்
பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். இரண்டு மணிநேரத்துக்கும் மேல்
அவர் பேச்சு நீண்டு விட அன்று வீடு திரும்ப மிகவும் தாமதமானது.
விழாவன்று நானும்
சங்கீதாவும் சொன்ன நேரத்துக்குச் சரியாக சென்றுவிட்டோம். இல்லத்து முன்வாசலில்
திறந்த வெளியிலேயே அரங்கம் தயாரிக்கப்பட்டிருந்தது. பார்வையற்ற பிள்ளைகள் ஏறி
இறங்கும் சிரமங்களைத் தவிர்ப்பதற்காக மேடையும் மேசைகளும் தவிர்க்கப்பட்டிருந்தன.
ஓரமாக சில நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அவ்வளவுதான். நிறைய வண்ணக்காகிதங்களின்
தோரணங்களும் அலங்கார விளக்குகளும் சுற்றிலும் தொங்கின. முதலில் கடவுள் வாழ்த்து.
மூன்று பார்வையற்ற பெண்களும் பார்வையுள்ள பெண்களும் சேர்ந் ஒரே குரலில்
பாடினார்கள். அதற்கப்புறம்தானே போட்டிக்கான முறையான அறிவிப்பு தொடங்கியது. முதலில்
அறிவிக்கப்பட்டது பேச்சுப்போட்டி. தலைப்பு ஒளிபடைத்த பாரதம். அத்தலைப்பு ஊட்டிய
எழுச்சியால் ஒவ்வொருவரும் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேசினார்கள். எல்லாருடைய
பேச்சிலும் பாரதியின் வரிகளும் பாரதிதாசனின் வரிகளும் மேற்கோள்களாக உரைக்கப்பட்டன.
ஒவ்வொரு பேச்சின் முடிவின்போதும் கைதட்டல் நிற்காமல் வெகுநேரம் ஒலித்தபடியே
இருந்தது. இத்தனை தகவல்களை இந்த இளம் நெஞ்சங்கள் எப்படி திரட்டி எப்படி மனப்பாடமாக
வைத்திருக்க முடிந்தது என்று ஆச்சரியத்தில் மூழ்கினேன். பத்துப் பெண்களும்
மிகச்சிறப்பாகவே பேசினார்கள். தரவரிசைப் படுத்துவது சிரமமான பணியாகத் தோன்றியது.
தர்க்கப்படி வாதங்களை அடுக்கிப்பேசிய உரைகளை முன் வைத்து முதல் மூன்று
இடங்களுக்குரிய பெயர்களை வட்டமடித்துவிட்டு மற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள்
வழங்கவேண்டும் என்று தீர்ப்பெழுதினேன்.
அடுத்து இசைப்போட்டி.
வெறும் வாய்ப்பாட்டு அதற்கப்புறம் இசைக்கருவிகளுடன் பாடும் போட்டி
பாட்டுப்பின்னணியின்றி இசையை ஒலிக்கும் போட்டி. கவிதைப்போட்டி, பங்கேற்பாளர்கள்
பட்டியல் என்னிடம் ஏற்கனவே தரப்பட்டு விட்டதால் அடுத்தடுத்து பெயர்களை
அறிவிப்பதும் அவர்கள் வெளிப்படுத்தும் திறமைகளை ஒட்டி மதிப்பெண்களைக் குறித்துக்
கொள்வதும் என் வேலையாக இருந்தது.
எவ்விதத் தயக்கமும்
இல்லாமல் நிறைய பிள்ளைகள் பங்கெடுத்துக் கொண்டார்கள். வரிசையில் நடுவில்
உட்கார்ந்திருந்த நிர்மலா கவிதைப்போட்டியில் மட்டுமே கலந்து கொண்டாள். அவள் தன்
கவிதையை தானே மனப்பாடமாக சொன்னாள். மற்ற பார்வையற்றவர்கள் எழுந்துநிற்க, அவர்கள் எழுதிய
கவிதைகளை வேறு பிள்ளைகள் படித்தார்கள். கவிதைகள் படிக்கப்பட்ட ஒவ்வொரு முறையும்
கைதட்டல்கள் வேகமாக எழுந்தன. பார்வையுள்ள சில மாணவிகள் வேகமாக முன்வந்து தோளைத்
தொட்டும் கைகளைத் தொட்டும் குலுக்கியும் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்
கொண்டார்கள். போட்டிகள் நடைபெற்ற இரண்டுமணிநேரமும் நொடிப்பொழுதாக கரைந்துவிட்டது.
நினைத்துப் பார்க்கவே விசித்திரமான அனுபவமாக இருந்தது. இள நெஞ்சங்களில் இருந்து
வெளிப்பட்ட எண்ணங்களின் புதுமை என்னைப் பரவசப்படுத்தியது. மதிப்பெண்களைக் கூட்டி வரிசைப்
படுத்தி முதல் மூன்று இடங்களுக்குரியவர்களை தனியே கையெழுத்திட்டேன். ஆறுதல்
பரிசுக்குரியவர்களை தனியே இன்னொரு தாளில் எழுதிக் கையெழுத்திட்டேன். அதற்குள்
பரிசுக்குரிய பொருள்கள் மேடைக்கு வந்தன. பட்டியலை என்னிடமிருந்து பெற்றுக்கொண்ட
செல்லப்பா ஒவ்வொரு பெயராகப் படிக்கத் தொடங்கினார். நான் பரிசுகளை அவர்களுக்கு
வழங்கினேன். இறுதியாக, எல்லா
மாணவிகளையும் வாழ்த்தி போட்டிகள், கொடுக்கக்கூடிய உற்சாகம் பற்றியும் புதிய சிந்தனைகளை நோக்கி
நம் மனம் பறக்கத் தொடங்குவது பற்றியும் நான் பத்து நிமிஷ அளவுக்குப் பேசினேன். செல்லப்பா என்
ஒவ்வொரு வாக்கியத்தையும் ஏற்றுக் கொண்டாடுவதைப்போல தலையசைத்துச் சென்றார்.
இறுதியில் நிர்மலாவின் கவிதையில் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒரு வரியை
முக்கியப்படுத்தி அது எழுப்பும் எண்ண அலைகளைச் சொல்லி பேச்சை முடித்துக் கொண்டேன்.
ஒரு தயக்கத்துடன் தொடங்கிய கைத்தட்டல் மெது மெதுவாக அதிகரித்து வெகுநேரம் நீடித்து
அடங்கியது. விழாவுக்குப் பிறகும் இல்லத்துடனான தொடர்பு ஒரே சீராகத் தொடந்தபடி
இருந்தது. தான் எழுதக்கூடிய புதிய கவிதைகளை உடனுக்குடன் என்னிடம் காட்டிப்
பகிர்ந்துகொண்டால்தான் நிம்மதி என்பவளைப் போல அடிக்கடி வந்தாள் நிர்மலா.
என்னைவிடவும் என் மனைவிக்கு அவள் மிகநெருக்கமாக மாறிவிட்டாள். தன் தோழி சரோஜா
இல்லாத வேளைகளிலும் குச்சியைத் தட்டித்தட்டி தனியே வந்து திரும்பும் அளவுக்குத்
தேறிவிட்டாள்.
நிர்மலாவின் வரவு திடீரென
ஒரு வார காலத்துக்கு நின்றபோது அதைப் பெரிதும் மனக்குறையாக உணர்ந்தாள் சங்கீதா.
எதைஎதையோ சொல்லிக் குழம்பி என்னையும் கலவரப் படுத்தினாள். அடுத்த நாள்
துணிதுவைப்பதற்காக வந்த முத்தம்மாவிடம் விசாரித்தாள்.
“அப்படின்னா ஒங்களுக்கு விஷயம் தெரியாதா? எங்கயோ கண்தானம்
கெடைச்சிருக்குது போல. மாத்துக்கண்ண ஏத்துக்கற பக்குவத்துல இவ கண் நரம்புங்க
சரியாக இருக்குதான்னு டெஸ்ட்டுங்க எடுக்கணுமாம். நாலஞ்சி நாளுங்க தங்கியிருக்கணும் போல. வாங்கன்னு டாக்டருசொல்லி
அனுப்பியிருந்தாரு. அந்தப் பொண்ண அழைச்சிகிட்டு செல்லப்பா ஐயா அங்கதான்
போயிருக்காரு”
ஆஸ்பத்திரியின் பெயரைக்
கேட்டுத் தெரிந்துகொண்டு அடுத்த நாள் மாலை சென்று பார்க்கலாம் என்று சங்கீதாவிடம்
சொல்லிவைத்தேன். என்னுடைய துரதிருஷ்டன் அன்று அலுவலகத்தில் கசக்கிப்
பிழிகிறமாதிரியான வேலை. அது மட்டுமல்ல, அவசரமான ஒரு கண்காணிப்பு வேலைக்காக ஒரு மாதம் கல்கத்£வுக்கு
போகச்சொல்லி கட்டளை வேறு. விமானப் பயணச்சீட்டு, செலவுக்குப் பணம் எல்லாவற்றையும் ஒரு உறையில் போட்டுக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். சங்கீதாவின்
மனக்கஷ்டத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. தாமதமாகும்போதே தொலைபேசியில் தகவலைச் சொல்லி அவளைத் தனியாகவே சென்று பார்த்துவரும்படி
செய்திருக்கலாம். அப்போது அந்த யோசனை வராததை நினைத்து வருத்தமாக இருந்தது. ஒருவித
அதிருப்தியுடன் அடுத்தநாள் அதிகாலையிலேயே இருவரும் கல்கத்தாவுககுச்
சென்றுவிட்டோம்.
இரண்டு நாள் கழித்து
இல்லத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு செல்லப்பாவிடம் பேசினேன். என் குரலைக்
கேட்டதும் அவர் மிகவும் சந்தோஷப்பட்டதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
“நிர்மலாவுக்கு டெஸ்ட் எடுத்தாங்களாமே? டாக்டர் என்ன
சொல்றாங்க?”
“ரொம்ப நல்ல பதில்தான் சார். நாம் எல்லாருமே ஆண்டவன நம்பி
இருகறவங்க சார். நம்பனவங்கள அவன் எப்பவுமே கைவிட மாட்டான் சார். எல்லா டெஸ்ட்டும்
ஓக்கே ஆயிடுச்சி. கண்ணப் பொருத்திக்கறதுக்கு எந்தத் தடயும் இல்லன்னு சொல்லிட்டாரு.”
“கேக்கறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்குதுங்க செல்லப்பா. நாங்க
விசாரிச்சதா நிர்மலாகிட்ட சொல்லுங்க.”
“கண்டிப்பா சொல்றேன் சார். இன்னம் ஆஸ்பத்திரிலதான் இருக்கா.
டெஸ்ட்டுங்கள்ளாம் முடிஞ்சி கௌம்பற சமயத்துல ஒரு ஜோடி கண்ணுங்க டொனேஷன் கெடைச்சிது. அமைஞ்சா எல்லாம்
அடுக்கடுக்கா நல்லதா அமையும்ன்னு சொல்வாங்களே, அதுபோல தான் எல்லாம் நடக்குது. இந்த வாரத்துக்குள்ள
ஆப்பரேஷன் நடந்துரும்.”
அந்தச் செய்தி எங்களை
மிகவும் சந்தோஷப்படுத்தியது. லேசாக கண்கள் தளும்பின. பார்வை உணர்வுடன் அவள்
கவிதைகள் இனிமேல் எப்படி அமையக்கூடும் என்று யோசிக்கத் தொடங்கினேன்.
கல்கத்தா அலுவலக
கண்காணிப்புச் சோதனைகள் மாதக் கணக்கில் நீண்டுகொண்டே போயின. எந்த நேரமும் ஓயாத
வேலைகள். கட்டுக்கட்டாக கோப்புகளை வீட்டுக்கும் கொண்டு வந்து
பார்க்கவேண்டியிருந்தது. ஒருநாள் காலையில் பெட்டிக்குள்ளிருந்து சட்டையை
எடுக்கும்போது, பக்கவாட்டில்
தைக்கப் பட்டிருந்த பையிலிருந்து பிதுங்கிய நிலையில் காணப்பட்ட ஒரு தாளின்மீது என்
கவனம் திரும்பியது. எடுத்துப் பிரித்தேன். எப்போதோ எடுத்துவைத்த நிர்மலாவின்
கவிதை. மனத்தைக் கரைக்கும் வரிகள். அவள் நினைவுகள் மனத்தில் பேரலைகளாக மோதின.
சங்கீதாவை அழைத்துச் சொன்னேன். ஊரிலிருந்து யாராவது தொலைபேசியில் அழைத்தார்களா
என்று கேட்டேன். இல்லை என்றாள் சங்கீதா. அவளும் தகவலைத் தெரிந்துகொள்வதில் மிகவும்
ஆர்வமுடையவளாகக் காணப்பட்டாள்.
அன்று இரவு ஞாபகமாக
இல்லத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். வழக்கமான நலவிசாரிப்புகளுக்குப் பிறகு
ஆண்டு விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் ஆல்பம் வந்துவிட்டதாகவும் மிகச்
சிறப்பாக இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொண்டே போனார் செல்லப்பா. பேச்சின்
முடிவில் நானாகவே “நிர்மலாவுக்குப்
பார்வை வந்தாச்சிங்களா?” என்று கேட்டேன்.
“அடடா, சொல்லவே மறந்துட்டேன் பாருங்க. கொழந்தைக்கு ரொம்ப நல்லபடியா
பார்வை வந்தாச்சி இப்ப. காவேரின்னு இன்னொரு பார்வை இல்லாத பொண்ணுக்கு இவதான் இப்ப தொண. சரோஜாவ வேற பொண்ணுக்கு கூட்டாளியா போட்டிருக்கேன்.”
தொலைபேசியின் குழலை
கையால் மூடிவிட்டு சங்கீதாவுக்கு தகவலைச் சொன்னேன். அதைக் கேட்டதும் அவள்
முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. உடனேயே அவளுடன் தொலைபேசியில் பேசவேண்டும் என்று
கோரிக்கை வைத்தாள். நானும் அதைச் செல்லப்பாவுக்குத் தெரிவித்தேன். அவர் அருகிலிருந்த
யாரிடமோ நிர்மலாவை உடனே அழைத்துவரும்படி சொன்னது காதில் விழுந்தது. அப்போதுதான்
அந்தச் சந்தேகம் எனக்கு வந்தது.
“செல்லப்பா, பார்வை வந்ததும் நிர்மலா யார மொதல்ல பாத்தா? உங்களத்தானே? நான் உரத்த
குரலில் கேட்டேன்.
மறுமுனையில் சில நொடிகள்
மௌனம் நிலவியது. பிறகு அவர் குரல் சற்றே தணிந்து ஒலித்தது.
“இல்லத்துல துணிதொவைச்சிட்டு இருக்கறாளே, அந்த
முத்தம்மாவதான் மொதமொதலா பாக்கணும்ன்னு ஆசப்பட்டா. புள்ள நெஞ்சில அவதான்
இருந்திருக்கா போல. அவ ஆசய நான் நடத்திக்குடுத்தேன்.”
கேட்டதும் ஒருகணம்
ஆச்சரியத்தில் மூழ்கினாலும் மறுகணமே அவள் செய்கைக்குத் தூண்டுதலான புள்ளியைப்
புரிந்து கொண்டேன். விஷயத்தைக் கேட்டு “புத்திசாலிப் பொண்ணு” என்று சொல்லிப் புன்னகைத்தாள் சங்கீதா. நிர்மலாவின் குரல் இணைப்பில் ஒலிப்பதற்காக இருவரும்
காத்திருந்தோம்.
(வடக்குவாசல் – 2005)