Home

Sunday, 19 September 2021

ஜெயப்பிரகாஷ் நாராயண் : நம்பிக்கையின் சின்னம்

     13.04.1919 அன்று ஜாலியன்வாலாபாக் என்னும் இடத்தில் கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை காரணமின்றி சுட்டுவீழ்த்திய ஜெனரல் மைக்கேல் டயர் என்னும் ஆங்கில அதிகாரி தண்டிக்கப்படவேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை எழுப்பியது. ஆனால் பெயரளவில் மட்டும் கண்துடைப்பாக ஒரு விசாரணையை நிகழ்த்திய அரசு 1920இல் எல்லாக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் டயரை விடுவித்துவிட்டது. இதையொட்டி 1920இல் செப்டம்பர் மாதத்தில் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் மாநாடு அந்த விடுதலையை கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தது. தொடர்ந்து நாடு சுயராஜ்ஜியம் அடைந்தால் மட்டுமே   எதிர்காலத்தில் இத்தகு குற்றங்கள் மீண்டும் நிகழாதவகையில் தடுக்கமுடியும் என்றும் நாட்டின் கெளரவத்தை நிலைநாட்டமுடியும் என்றும் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார் காந்தியடிகள்.

மேலும் சுயராஜ்ஜியம் அடையும் வரையில் அரசுடன் எல்லா வகைகளிலும் ஒத்துழைக்காமல் ஒதுங்கியிருப்பதே நம் நாட்டினருக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி என்றும் அவர் தெரிவித்தார். ஆங்கில அரசால் அளிக்கப்பட்ட கெளரவப்பட்டங்களை உடனடியாகத் திருப்பியளிக்க வேண்டும் என்றும் அரசு அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் எவ்வகையிலும் அரசுடன் ஒத்துழைக்கக் கூடாது என்றும் அரசாங்கக் கல்வி நிறுவனங்களிலும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் கல்வி பயில தம் பிள்ளைகளை அனுப்பியிருக்கும் பெற்றோர்கள் படிப்படியாக அவர்களை அங்கிருந்து விலக்கி தேசியப்பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேர்க்கவேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணிக்கவேண்டுமென்றும் அயல்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார். அவர் முன்மொழிந்த ஒத்துழையாமைத் தீர்மானங்கள் அந்த மாநாட்டில் நிறைவேறின.

மெட்ரிகுலேஷன் படிப்பில் முதல்வகுப்பில் தேறினாலும் கல்லூரியில் சேர்ந்து படிக்க போதிய வசதியில்லாமல் படிப்பை நிறுத்திய இளைஞரொருவர் அந்தத் தருணத்தில்தான் அரசு உதவி பெற்று நகரத்தில் கல்லூரியில் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தார். பாட நூல்களுக்கு அப்பால் நண்பர்களின் ஆலோசனையைக் கேட்டு கீதையைப் படிக்கத் தொடங்கி ஆன்மாவின் அழிவின்மையைப்பற்றி அழுத்தமாக உரைக்கும் அதன் வரிகள் அவரைக் கவர்ந்திருந்தன. அவை அவரிடம் ஒருவித போர்க்குணத்தை உருவாகின. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்க கல்லூரியிலிருந்தும் பள்ளியிலிருந்தும் ஏராளமான மாணவர்கள் வெளியேறினர். கல்லூரியை விட்டு வெளியேறுவதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் தன்னை நகரத்துக்கு அனுப்பிவைத்த தன் அப்பா நிராசைக்கு ஆளாக்கிவிடுவாரோ என்ற தயக்கம் அவரைத் தடுத்தது. அதே சமயத்தில் தேசத்தின் நலனுக்காக இதைக்கூட செய்யாமல் விடுவது பெரும்பிழை என்ற எண்ணத்தின் விசையையும் அவரால் தடுக்கமுடியவில்லை. இறுதியில் அந்த இளைஞரின் நெஞ்சில் ஒலித்த காந்தியடிகளின் அழைப்புக்குரலே வென்றது. உதவித்தொகையை நிராகரித்துவிட்டு உடனடியாக கல்லூரியிலிருந்து வெளியேறிய அவர் ராஜேந்திரபிரசாத் பாட்னாவில் நிறுவியிருந்த பிகார் வித்யாபீடத்தில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார். அந்த இளைஞர் ஜெயப்பிரகாஷ் நாராயண்.

ஒத்துழையாமை இக்கத்துக்கு தேசிய அளவில் ஆதரவு பெருகி வலிமையடைந்து வந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக 05.02.1922 அன்று உத்தரப்பிரதேசத்தில் செளரி செளரா என்னும் இடத்தில் சுதந்திரப் போராட்டத்தினருக்கும் காவல் துறையினருக்கும் இடயில் மோதல் ஏற்பட்டது. சில விடுதலை வீர்ர்கள் மரணமடைந்தனர். காவல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. சில காவலர்களும் கொல்லப்பட்டனர். அறவழியில் நடைபெற்ற இயக்கம் வன்முறைப் பாதையில் செல்வதைக் கண்ட காந்தியடிகள் அதிர்ச்சியடைந்து இயக்கத்தை நிறுத்துவதாக அறிவித்தார். வன்முறை ஓயும் வரைக்கும் மூன்று வார காலம் உண்ணாவிரதம் இருந்தார். கண்முன்னாலேயே ஒத்துழையாமை இயக்கம் வலுவிழந்து நின்றுவிட்டதைப் பார்த்த ஜெயப்பிரகாஷ் செயலிழந்து சோர்வில் மூழ்கினார். அப்போது உயர்கல்விக்காக அமெரிக்காவுக்குப் புறப்பட்ட அவருடைய நண்பர் போலா பண்ட் ஜெயப்பிரகாஷையும் அமெரிக்காவுக்கு வருமாறு அழைத்தார். அங்கேயே ஏதேனும் வேலை தேடிக்கொண்டு அந்தப் பணத்தில் எங்கேனும் தங்கிப் படித்துக்கொள்ளலாம் என்று நம்பிக்கையூட்டினார். அதனால் தன் இளம்மனைவியை சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளின் பாதுகாப்பில் விட்டுவிட்டு அமெரிக்காவுக்குப் புறப்பட்டார் ஜெயப்பிரகாஷ்.

ஏழு ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கிய ஜெயப்பிரகாஷ் கலிஃபோர்னியா, ஐயோவா, விஸ்கான்சின், ஓகியோ பல்கலைக்கழகங்களில் படித்து சமூகவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.  அங்குதான் அவர் காரல்மார்க்ஸின் மூலதனம் நூலை முழுமையாகப் படித்துமுடித்து பொதுவுடைமைக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டார். நாணயத்தின் இரு பக்கங்களைப்போல ஒரு முதலாளித்துவ சமூகத்தில் பொருளாதார வளர்ச்சிகளும் கூர்மையான முரண்களும் இருப்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. கல்லூரிச் செலவுக்கும் விடுதிச் செலவுக்குமான தொகையைச் செலுத்துவதற்காக ஓய்வு நேரங்களில் வயல்வெளிகளிலும் உணவுவிடுதிகளிலும் தொழிற்சாலைகளிலும் பல சின்னச்சின்ன வேலைகளைச் செய்து பொருளீட்டினார். செல்வம், சொத்து, சமூகத்தகுதி ஆகிய நிலைகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளே மனிதகுலத்தின் மிகப்பெரிய பிரச்சினை என்பது அவருக்குத் தெளிவாகப் புரிந்தது. எதிர்பாராத விதமாக தன் தாயாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் செய்தி கிடைத்ததால் உடனடியாக இந்தியாவுக்குத் திரும்பினார்.

சபர்மதி ஆசிரமத்தில் விட்டுச் சென்ற அவருடைய மனைவி தான் பிரம்மச்சரியப் பாதையில் பயணம் செல்வதாகத் தெரிவித்த செய்தி முதலில் ஜெயப்பிரகாஷைத் திகைக்கவைத்தது. பிறகு நீண்ட நேர யோசனைக்குப் பிறகு இயல்பான நிலைக்குத் திரும்பினார். பிறகு அவரும் பிரம்மச்சரிய வழியை ஏற்றுக்கொண்டு மக்கள் சேவைக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டார்.

காந்தியடிகள் வகுத்த எல்லாப் போராட்டங்களிலும் ஜெயப்பிரகாஷ் பங்கேற்றார். இந்தியப் பொதுவுடமையாளர்கள் தேசியத்துடன் இயைந்த நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருந்த விதம் அவருக்கு வியப்பூட்டியது. அப்போது லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஆர்வத்துடன் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில்தான் நேரு முன்மொழிந்த பரிபூரண சுதந்திரத் தீர்மானம் நிறைவேறியது. நேருவுக்கும் ஜெயப்பிரகாஷுக்கும் இடையில் நல்ல நட்பு உருவானது. இருவருமே காந்தியடிகளின் பொருளியல் கொள்கைகளையும் ஒத்துழையாமைக் கொள்கையையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகுகிறவர்களாக இருந்தனர். இருவருமே இந்தியாவின் வளமான வாழ்வுக்கான பாதையாக சோஷலிசமே இருக்குமுடியும் என நம்பினர்.

நேருவின் ஆலோசனையை ஏற்று, அலகாபாத்தில் காங்கிரஸ் சார்பில் தொடங்கப்பட்ட தொழிலாளர்கள் ஆய்வு நிறுவனத்தின் செயலராக ஜெயப்பிரகாஷ் பொறுப்பேற்றுக்கொண்டார். தொழிலாளர்களின் துன்பங்களை நேருக்கு நேர் பார்த்தறிய ஜெயப்பிரகாஷுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. அச்சமயத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த அவருடைய தாயார் மறைந்துவிட்டார். ஆயினும் அத்துயரத்தை மறந்து தொழிலாளர்கள் நலன்காக்கும் போராட்டத்தில் இணைந்தார் ஜெயப்பிரகாஷ்.

வேலையிடங்களில் மனிதாபிமானமற்ற முறைகளில் இந்தியத் தொழிலாளர்கள் நடத்தப்படுவதை உலக ஊடகங்களில் அம்பலப்படுத்தி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார். பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் ஆதரவையும் பிரிட்டிஷ் தொழிற்சங்க ஆதரவையும் அவரால் பெறமுடிந்தது. தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளாலும் கடிதப்போக்குவரத்துகளாலும் அவருடைய முயற்சிகள் வெற்றி பெற்றன. இறுதியில், உலகளாவிய தொழிலாளர் கொள்கைகளுக்கு இயைந்த வகையில் இந்தியத் தொழிலாளர்களுக்குரிய விதிகள் வகுக்கப்பட்டன. தேசத்தின் செல்வத்தைக் கொள்ளையடித்துக்கொண்டு செல்லும் ஆட்சியாளர்களை அகற்றாதவரையில் நாட்டில் நிலவும் வறுமையையும் மக்களின் துன்பங்களையும் ஒருபோதும் நீக்கமுடியாது என ஜெயப்பிரகாஷ் உறுதியாக நம்பினார்.

1930இல் காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கி தண்டி கடற்கரையை நோக்கி நடைப்பயணத்தைத் தொடங்கினார். அதன் பகுதியாக சட்டமறுப்பு இயக்கமும் தொடங்கியது. காந்தியடிகளும் பிற தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டனர். கைதாகாமல் தலைமறைவான ஜெயப்பிரகாஷ் பொதுமக்களுக்கும் காங்கிரஸ் இயக்கத்துக்கும் இடையில் தகவல்கள் பரிமாற்றத்துக்கு பேருதவியாகச் செயல்பட்டார்.  ஆங்கிலேய அரசின் கொடுமைகளையும் அடக்குமுறைகளையும் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் தேசமெங்கும் நடைபெறும் அவலச்சம்பவங்களைப்பற்றிய தகவல்களைச் சேகரித்துத் தெரியப்படுத்தியபடி இருந்தார். அரசாங்க நடவடிக்கைகளை உடனுக்குடன் பரப்பும் ஜெயப்பிரகாஷை கண்டுபிடித்து கைது செய்ய அரசு துடித்தாலும் அவர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தார்.

அடுத்த ஆண்டு ஆங்கில அரசு காந்தியடிகளுடன் பேச்சுவார்த்தை நிகழ்த்தியது. அதன் விளைவாக ஏற்பட்ட ஒப்பந்தப்படி சிறையில் அடைபட்டிருந்த தொண்டர்கள் அனைவரும் விடுதலை பெற்றனர். சட்டமறுப்பு இயக்கம் நிறுத்தப்பட்டது.  காந்தியடிகள் இரண்டாம் வட்டமேசையில் கலந்துகொள்ள லண்டனுக்குச் சென்றார். ஆனால் எந்த முடிவையும் எட்டாமல் அந்த மாநாடு தோல்வியில் முடிவடைந்தது. காந்தியடிகள் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு 29.12.1931 அன்று பம்பாயில் காங்கிரஸ் செயற்குழு கூடியது. முதல் சட்டமறுப்பு இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்து நாடு முழுதும் ஆங்கில அரசு மேற்கொண்ட வன்முறைச்சம்பவங்களையும் பொதுமக்களின் பாதிப்புகளையும் தொகுத்துப் பேசினார் ஜெயப்பிரகாஷ். உண்மைத்தகவல்களைக் கொண்ட அவருடைய உரை அனைவரையும் அசைத்தது. மீண்டும் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்க காங்கிரஸ் முடிவெடுத்தது. அதைத் தொடர்ந்து தலைமறைவான ஜெயப்பிரகாஷ் 07.09.1932 சென்னை புகைவண்டி நிலையத்தில் கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டார். காங்கிரஸின் மூளையாகச் செயல்பட்டவர் கைது என அன்று எல்லா முன்னணிப் பத்திரிகைகளும் அவர் கைதானதைப்பற்றி எழுதின. 1932இல் ஜனவரி மாதத்தில் அவர் நாசிக் சிறைக்கு மாற்றப்பட்டார்.

நாசிக் சிறைவாசத்தின்போது அவருடன் ஆழ்ந்த கல்வியறிவும் மார்க்சியப் பயிற்சியும் கொண்ட ஆச்சார்ய நரேந்திரதேவ், யூசுப் மேஹாலி, அசோக் மேத்தா, அச்சுத பட்டவர்த்தன், என்.ஜி.கோரே, எஸ்.எம்.ஜோஷி போன்றோரும் சிறையில் இருந்தனர். சோஷலிசச் சிந்தனை இவர்களுடைய நட்பையும் நெருக்கத்தையும் வளர்த்தது. காங்கிரசுக்குள்ளேயே காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி என்ற பெயரில் தனி அமைப்பை உருவாக்குவதென்றும் நாடெங்கும் வசிக்கும் சோஷலிச எண்ணம் கொண்ட இளைஞர்களைத் திரட்டுவதென்றும் திட்டமிட்டனர்.

இரண்டு ஆண்டுகள் கழித்து விடுதலையானதும் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. ஜெயப்பிரகாஷ் கட்சியின் செயலாளரானார். 1934இல் பாட்னாவில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றபோது அதே இடத்தில் நரேந்திர தேவ் தலைமையில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் மாநாடும் நடைபெற்றது. நாட்டின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் பதினைந்து அம்சங்களை கட்சி தன் நோக்கமாக அறிவித்தது. காங்கிரஸ் கட்சியினர் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

1935இல் காங்கிரஸ் தலைவராக நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார். அது ஜெயப்பிரகாஷுக்கு உற்சாகத்தை அளித்தது. அந்த ஆண்டில் லட்சுமணபுரியில் நடைபெற்ற மாநாட்டில் பல முற்போக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட ஜெயப்பிரகாஷே காரணமாக இருந்தார். 1937இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் அரசு பிகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் கடன் சுமையைக் குறைத்தல், நிலவரிப் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவருதல் என பல சட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஜெயப்பிரகாஷே மூளையாக இருந்து செயல்பட்டார்.

1939இல் இரண்டாம் உலகப்போர் மூண்டது. ஆங்கிலேய அரசு இந்தியர்களை தன்னிச்சையாக போரில் பங்கெடுக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதை எதிர்த்து கடுமையாக விமர்சனம் செய்து பத்திரிகைகளில் எழுதினார் ஜெயப்பிரகாஷ். ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அதே செய்தியைப் பேசவும் செய்தார். உடனே அவர் மீது தேசத்துரோகக் குற்றத்தைச் சுமத்தி அரசு கைது செய்தது.  1940இல்  மார்ச் மாதம் அவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர் நீதிமன்றத்தில்ஏகாதிபத்தியமும் தோற்கவேண்டும், நாஜிகளும் தோற்கவேண்டும் என்ற விருப்பமுடையவன் நான். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிடுவதைத் தவிர இந்தியர்களுக்கு வேறு வழியில்லைஎன்று தொடங்கி அவர் வாசித்த வாக்குமூலம் ஒரு முக்கியமான ஆவணம். அவருடைய சொற்களால் ஆங்கிலேயரின் நீதியுணர்வைத் தொட முடியவில்லை.  ஜெயப்பிரகாஷுக்கு ஒன்பது மாதங்கள் கடுங்காவல் தண்டனையை வழங்கினார் நீதிபதி.

அவருடைய வாக்குமூலத்தை ஹரிஜன் பத்திரிகையில் பிரசுரித்த காந்தியடிகள், ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்ட முறை ஒரு போராட்டத்தை தம் மீது அரசே திணிக்கிறது என்னும் எண்ணத்தையே மக்களிடையில் விதைக்கிறது என எழுதினார்.

தண்டனைக்காலம் முடிந்து விடுதலையடைந்த ஜெயப்பிரகாஷ் காந்தியடிகளைச் சந்தித்து போராட்ட விவரங்களைப் பற்றிய செய்திகளைத் தெரிந்துகொண்டார். அவரை வெளியே சுதந்திரமாக விட்டுவைக்க விரும்பாத அரசு மீண்டும் 1941இல் அவரைக் கைது செய்து பம்பாய் சிறையில் அடைத்தது. பிறகு ராஜஸ்தானில் உள்ள தியோலி என்னும் வதைமுகாம் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே கைதிகள் அனைவரும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டனர். அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நூறு கைதிகளை தன்னுடன் இணைத்துக்கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் ஜெயப்பிரகாஷ். உண்ணாவிரதச் செய்தி வெளியானதை ஒட்டி பொதுமக்கள் அரசின் மீது சீற்றமுற்றனர். இறுதியாக கைதிகளை அவரவர் மாநிலப்பகுதியில் உள்ள சிறைகளுக்கே மாற்ற ஒப்புக்கொண்டது. ஜெயப்பிரகாஷ் தியோலியிலிருந்து ஹசாரிபாக் சிறைக்கு 1942இல் மாற்றப்பட்டார்.

08.08.1942 அன்று காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு முழக்கத்துடன் புதிய போராட்டத்தைத் தொடங்கினார். அந்த இயக்கத்தை முளையிலேயே கிள்ளியெறிய விரும்பிய அரசு அதற்கு மறுநாளே காந்தியடிகளையும் மற்ற தலைவர்களையும் கைது செய்து வெவ்வேறு சிறைகளில் அடைத்தது. சிறையிலிருந்த ஜெயப்பிரகாஷுக்கு இச்செய்தி அதிர்ச்சியை அளித்தது. அனைவரும் சிறைப்பட்டிருக்கும் சூழலில் சுதந்திரப் போராட்டம் வலுவிழந்து போகக்கூடுமோ என அஞ்சினார். இந்த எண்ணத்தால் தூண்டப்பட்ட அவர் ஜோகேந்திர சுக்லா, ராமானந்த மிஸ்ரா, சூர்ய நரேன் சின்ஹா, குலாப்சந்த் குப்தா, ஷாலிக் ராம்சிங் ஆகிய நண்பர்களுடன் சரியாக மூன்று மாதங்கள் கழித்து 08.11.1942 அன்று தீபாவளி இரவில் சிறையிலிருந்து தப்பித்தார். தேசமெங்கும் வசிக்கும் இரண்டாம் நிலை, மூன்றாம்  நிலை தலைவர்களுக்கு கடிதங்களையும் கட்டுரைகளையும் எழுதியனுப்பி அவர்களுடைய போர்க்குணமும் நம்பிக்கையும் குன்றிவிடாதபடி பார்த்துக்கொண்டார்.  அரசு மீது கொரில்லா தாக்குதல் நிகழ்த்தவும் அவர் திட்டமிட்டார். பிகாருக்கும் நேபாளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு பயிற்சி மையத்தை உருவாக்கவும் அவர் விழைந்தார். அதன் விளைவாக உருவானதே ஆஜாத் தஸ்தா அமைப்பு.

அவருடைய தலைமறைவு வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. 19.09.1943 அன்று தில்லியிலிருந்து ராவல்பிண்டிக்குச் செல்லும் ரயிலில் அவர் பயணம் செய்துகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். அச்சிறையில் அவர் சொல்லொணாத துன்பங்களை அனுபவித்தார். ஒருகணம் கூட கண்களை மூடி தூங்க சிறைக்காவலர்கள் அவரை அனுமதிக்கவில்லை. சோர்ந்து கண்களை மூடும்போதெல்லாம் அடித்துத் துன்புறுத்தி விழித்திருக்க வைத்தனர்.  சில சமயங்களில் ஐஸ் பலகை மீது ஆடையின்றி படுக்கவைத்து அடித்தனர். அவர் துன்புறுத்தப்படும் செய்தி எப்படியோ சிறையிலிருந்து வெளியுலகத்துக்குக் கசிந்தது. Free Press Journal இச்சம்பவத்தை மையப்படுத்தி Wrong use of ice என்னும் தலைப்பில் ஒரு தலையங்கத்தை எழுதியது. நாடெங்கும் எதிர்ப்புக்குரல் எழுந்து வலிமைபெறத் தொடங்கியதும் வேறு வழியில்லாத நிலையில் ஜெயப்பிரகாஷ் ஆக்ராவில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டார். இறுதியாக 1946இல் விடுதலையானார்.

நாடு தழுவிய தேர்தலில் பங்கேற்க காங்கிரஸ் அப்போது தயாராகிக்கொண்டிருந்தது. அந்தப் போக்கு அவருக்குப் பிடிக்கவில்லை. விவசாயிகள் சங்கங்களையும் தொழிற்சங்கங்களையும் மாணவர் அமைப்புகளையும் உருவாக்கி அவற்றை ஒன்றிணைத்து ஒரு புதிய போராட்டத்தைத் தொடங்கவேண்டும் என்றும் அத்தகு போராட்டமே சமூக மாற்றத்துக்கு வழிவகுக்கும் என அவர் மேடைகளில் பேசவும் எழுதவும் செய்தார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சி செய்தார். அதற்காகவே ஜனதா என்னும் பத்திரிகையையும் தொடங்கினார். 1948 மார்ச் மாதத்தில் நாசிக் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சோஷலிஸ்ட்டுகள் காங்கிரஸிலிருந்து பிரிந்தனர். அதைத் தொடர்ந்து அக்கட்சி மேலும் பல துண்டுகளாகவே சிதறியது.

அகில இந்திய தபால் தந்தித் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் 1952இல் நாடு தழுவிய ஒரு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராகச் செயல்பட்டவர் ஜெயப்பிரகாஷ். அவரும் அத்துறையின் அமைச்சராக இருந்த ரபி அகமது கித்வாயும் சந்தித்துப் பேசியதன் விளைவாக பல நாட்கள் நீடித்த அந்த வேலைநிறுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது. பேச்சுவார்த்தையின்போது வேலைநிறுத்த நாட்களுக்கு சம்பளம் தருவதாக அமைச்சர் ஒப்புக்கொண்டிருந்தபோதும் போராட்டம் நிறுத்தப்பட்ட பிறகு தாம் அப்படி வாக்குறுதி அளிக்கவே இல்லை என்று மறுத்துவிட்டார். போராட்டத்தில் தொழிலாளர்களுக்குக் கிடைத்த வெற்றி அமைச்சரின் உறுதிமொழியை எழுத்துமூலமாக வாங்காமல் விட்ட பிழையால் அரைகுறையான வெற்றியாக நிலைகுலைந்து போய்விட்டதை நினைத்து வருந்தினார் ஜெயப்பிரகாஷ். இது தன் தவறுதான் என்றும் அதற்குப் பிராயச்சித்தமாக காந்தியடிகளின் வழியில் 21 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். பிறகு யார் தடுத்தும் கேட்காமல் பூனாவில் இருபத்தொரு நாட்கள் உண்ணாவிரதத்தை  மேற்கொண்டார்.

இந்த உண்ணாவிரதம் அமைச்சரையோ அரசையோ எதிர்த்து மேற்கொள்ளப்படவில்லை. பேச்சுவார்த்தையின்போது கவனக்குறைவாக நடந்துவிட்ட என் தவறுக்கான பிராயச்சித்தமே. மக்கள் சேவை தொடர்பான விஷயத்தில் ஏராளமான ஊழியர்கள் பாதிக்கப்படுவதற்கு நான் எப்படியோ காரணமாகிவிட்டேன். இந்தப் பிராயச்சித்தத்தை நான் செய்தால்தான் என் கடமையை இனி திறம்பட செய்யமுடியும். நான் மரணமடைய விரும்பவில்லை. இந்த உண்ணாவிரதத்தை ஆதரித்து யாரும் எவ்வித கிளர்ச்சியிலும் ஈடுபடக்கூடாதுஎன்ற அவர் ஓர் அறிக்கையை அன்று வெளியிட்டார். உண்ணாவிரதத்தின்போது  அவர் எழுதிய Incentives for the goodness என்னும் கட்டுரை தூய்மையின் மீதும் வாய்மையின் மீதும் அவர் கொண்டிருக்கும் ஆழ்ந்த பற்றை விளக்கியது.

சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று நேரு பிரதமரானதும் அமைச்சரவையில் சேர்ந்து பணியாற்றும்படி ஜெயப்பிரகாஷை கேட்டுக்கொண்டார். ஆனால் மக்கள் சேவையைத் தவிர வேறெதிலும் தனக்கு நாட்டமில்லை என்று ஜெயப்பிரகாஷ் மறுத்துவிட்டார்.

சுதந்திரத்துக்குப் பிறகு தெலுங்கானா பகுதியில் நிலமற்ற ஏழை விவசாயிகளின் ஆதரவோடு பொதுவுடமைக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சர்வோதய சம்மேளனத்துக்கு ஐதராபாத்துக்குச் சென்ற வினோபா அப்படியே தெலுங்கானாவுக்கும் சென்றார். நிலமின்மையே மக்களை போராட்டத்துக்குத் தூண்டுகின்றது என்றும் அரசின் உதவியை எதிர்பாராது நிலமுடையவர்களே தம்மிடம் உள்ள நிலங்களில் ஒரு பகுதியை நிலமற்றவர்களுக்குத் தானமாக அளித்தால் சிக்கலைத் தீர்க்கமுடியும் என்று மக்களிடம் பேசித் தெரிந்துகொண்டார். வினோபாவின் வேண்டுகோளை ஏற்று ஒருவர் அப்போதே நூறு ஏக்கர் நிலத்தைத் தானமாக அளித்தார். மனிதர்களின் மன ஆழத்தில் படிந்திருக்கும் நீதியுணர்ச்சியையும் நல்லெண்ணத்தையும் தூண்டினால் மாற்றத்தை உருவாக்கமுடியும் என்பதை அனுபவத்தின் அடிப்படையில் உணர்ந்தார் பிறகு அது ஓர் இயக்கமாகவே வளர்ந்தது.

முதலில் வினோபாவின் நடவடிக்கைகளை சற்றே ஐயத்தோடும் விசித்திர உணர்வோடும் கவனித்துவந்த ஜெயப்பிரகாஷ் மக்களிடையில் கொஞ்சம்கொஞ்சமாக பூதான இயக்கத்துக்குப் பெருகிவரும் ஆதரவைக் கண்டு நம்பிக்கையுற்றார். குடியரசுத்தலைவரான ராஜேந்திர பிரசாத் அவர்களே பிகாரில் தன் பரம்பரைக்குச் சொந்தமான நிலங்களை தானமாக வழங்கினார். 1952இல் காசியில் நடைபெற்ற சர்வோதய சம்மேளனத்தில் நிலமற்ற இந்திய ஏழை விவசாயிகளுக்கு வழங்க ஐந்து கோடி நிலம் வேண்டும் என்று தெரிவித்தார். வன்முறையற்ற புதிய சமூகத்தைக் கட்டமைக்க இதுவும் ஒரு வழி என நினைத்த ஜெயப்பிரகாஷ் அந்த இயக்கத்தில் இணைந்துகொண்டு பணியாற்றத் தொடங்கினார். வினோபாவுடன் அவரும் நடைப்பயணத்தில் இணைந்துகொண்டார். அதற்குப் பிறகு நேரடி அரசியலை விட்டு விலகி சர்வோதயப் பணிகளில் மட்டுமே ஐம்பதுகளின் இறுதிவரைக்கும் மூழ்கியிருந்தார்.

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற பகுதிகளில் வாழ்ந்த கொள்ளைக்காரர்களை கட்டுப்படுத்த அரசு திணறிய சமயத்தில், நல்லெண்ணத்தூதராக அவர்களிடம் சென்று பேசினார் ஜெயப்பிரகாஷ். அவருடைய அன்புக்கும் அகிம்சைக்கும் கட்டுப்பட்டு பல கொள்ளையர்கள் தம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர்.

எழுபதுகளில் ஜெயப்பிரகாஷ் மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்பினர். அப்போது பிகாரில் மட்டுமன்றி, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நிர்வாகம் சீர்குலைந்திருந்தது.  அதிகாரத்தின் தலைமைப்பொறுப்பில்  இருப்பவர்களின் கட்டற்ற ஊழல்களால் எவ்விதமான வளர்ச்சிப்பணிகளும் இல்லாமல் நாடே உறைந்திருந்தது.  தனியார் துறை தலையெடுக்கவே முடியாதபடி நெருக்கடிகளில் அகப்பட்டுத் தவித்தது. எங்கெங்கும் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது. வெறுப்பும் கசப்பும் கொண்ட இளைஞர்கள் நாடெங்கும் விரக்தியில் மூழ்கினர். அவர்களின் எதிர்காலமே இருண்டுபோனது. இளைஞர்களின் எழுச்சியாக உருவான நக்சல்பாரி இயக்கம் அதிகாரத்தின் அடக்குமுறையால் வேரோடு அழிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான  இளைஞர்கள் அதில் கொல்லப்பட்டனர்.

அப்போது சலிப்பும் வெறுப்பும் அதிருப்தியும் கொண்ட இளைஞர்களை காந்தியவழியில் ஒருங்கிணைத்து நாடு தழுவிய அளவில் ஒரு இயக்கத்தைக் கட்டமைத்தார் ஜெயப்பிரகாஷ். அது பிகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் விரைவாக வளர்ந்து எழுச்சியுற்றது. பொருளியல், வாழ்வியல், சமூகம், அரசியல் என எல்லாத் தளங்களிலும் முழுமையான மாற்றத்தை உருவாக்கும் முனைப்பில் உருவான அந்த இயக்கத்துக்கு முழுப்புரட்சி என்று ஜெயப்பிரகாஷ் பெயர்சூட்டினார். அடிப்படைகளை மாற்றியமைத்து தேசத்தை மீண்டும் கட்டமைக்க ஒன்றிணையுமாறு தேசத்தில் இருக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். ஆனால் அவ்வழைப்பை மக்களை வன்முறைக்குத் தூண்டும் அழைப்பெனக் கருதினார் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி. இந்த வன்முறை பெரிதாக வளர்ந்து தேசத்தில் ஜனநாயத்தையே சீர்குலைத்துவிடும் என தான் அஞ்சுவதாகவும் தெரிவித்தார். ஆகவே ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக 20.06.1975 அன்று நெருக்கடி நிலையை அறிவித்தார். உடனே ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்டு சண்டிகர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்ட முதல் மனிதர் அவர். அவரைத் தொடர்ந்து தேசத்தில் உள்ள எல்லா அரசியல் இயக்கத் தலைவர்களும் இரவோடு இரவாக கைது  செய்யப்பட்டு தேசத்தின் பல்வேறு மூலைமுடுக்குகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

சிறைவாசத்தின்போது அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து புரிந்துகொள்ள முயற்சி செய்தார் ஜெயப்பிரகாஷ். அவரால் தேசத்தைச் சூழவிருக்கும் ஆபத்துகளை துல்லியமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. எப்படியாவது விடுதலை பெற்று வெளியே சென்றால்தான் எதிர்நடவடிக்கைகளைத் தொடங்கமுடியும் என்று அவருக்குத் தோன்றியது. சிறையில் இருந்தபடியே பிரதமருக்கு பல கடிதங்களை எழுதினார் ஜெயப்பிரகாஷ்.  ஆனால் பிரதமரிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. இறுதியாக தன்னை விடுதலை செய்யும்படியும் தன் இயக்கத்தைக் கலைத்து அரசியலிலிருந்து ஒதுங்கிவிடுவதாகவும் தெரிவித்தார். ஆயினும் காந்தியவாதிகளின் சமரசங்கள் கூட போராட்ட வழிமுறையாக மாற்றிவிடக் கூடிய ஆற்றல் உள்ளவை என்பதைப் புரிந்துவைத்திருந்த பிரதமர் இரக்கம்காட்ட மறுத்தார்.

எதிர்பாராத விதமாக பிகாரில் அப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இக்கட்டான இத்தருணத்தில் வெள்ளநிவாரணப் பணிகளில் ஈடுபட்டு மக்களுக்கு உதவ விரும்புதாகவும் தன்னை விடுதலை செய்யும்படியும் மீண்டும் பிரதமருக்குக் கடிதமெழுதித் தெரிவித்தார் ஜெயப்பிரகாஷ். அதற்கு முன்னால் அப்படிப்பட்ட தருணங்களில் அவர் மிகவும் செம்மையாக நிவாரணப்பணிகளைச் செய்தது,  நாடே அறிந்த செய்தி. அவர் உருவாக்கிய கஞ்சித்தொட்டி இயக்கம் ஓர் அரசாங்கம் சாதித்ததைவிட அதிகமாகச் சாதித்துக் காட்டியது. அவர் உடல்நிலையும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. சிறுநீரகப் பிரச்சினை அவரை மரணத்துக்கு அருகில் கொண்டு சென்று நிறுத்திவிட்டது. சிறையில் அவர் இறந்துவிடக் கூடாது என அஞ்சிய அரசு உடனடியாக அவரை விடுவித்தது.

விடுதலையானதும் ஜெயப்பிரகாஷ் மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையில் சேர்ந்து உரிய சிகிச்சையைப் பெற்று உயிர்பிழைத்தார். உடனடியாக பிகாருக்குச் சென்று வெள்ளநிவாரணப்பணிகளில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து நாடுமுழுதும் ஒடுக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சிகளான பிரஜா சோஷலிஸ்ட், லோக்தளம், பழைய காங்கிரஸ், சுதந்திரா, பாரதிய ஜனசங்கம் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஜனதா என்னும் பெயரில் ஒரு புதிய கூட்டணிக்கட்சியை உருவாக்கினார். நெருக்கடி நிலை விலக்கப்பட்டதைத்  தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதன் தலைமைப்பதவி அவரைத் தேடி வந்தபோதும் அதை உதறிவிட்டு மக்கள் சேவையிலேயே மூழ்கினார்.

துரதிருஷ்டவசமாக உட்கட்சிப் பூசல்களால் நீண்டகாலம் ஜனதா கட்சி ஆட்சியில் நீடித்திருக்க முடியவில்லை. கட்சிக்குள் நிலவிய குழப்பங்கள் ஜெயப்பிரகாஷுக்கு மனவேதனையை அளித்தன. சீர்குலைந்த அவருடைய உடல்நிலை தொடர்ந்து செயலாற்ற முடியாதவராக அவரை ஆக்கிவிட்டது. 08.10.1979 அன்று பாட்னாவில் அவர் மறைந்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு 1998இல் அவருக்கு நாட்டின் மிக உயர்ந்த விருதான பாரதரத்னா விருது அளிக்கப்பட்டது.

சுதந்திரமும் சமத்துவமும் நல்ல சமூகத்தின் இரு பக்கங்கள். அதை உருவாக்குவதே அவர் கனவு. இலட்சியம். நீண்ட காலமாக அடிமைப்பட்டிருந்த இந்தியாவில் விடுதலைக்குப் பிறகு அமையவிருக்கும் இலட்சிய சமூகத்தில் சுதந்திரமும் சமத்துவமும் நிலவவேண்டும் என்பது அவருடைய உள்ளார்ந்த விழைவாக இருந்தது. தன் கனவை நனவாக்கும் நம்பிக்கையோடு அவர் பொதுவாழ்வில் ஈடுபட்டார். இறுதி மூச்சுள்ள வரையில் நம் காலத்து நாயகனான அந்த மகத்தான மனிதர் தம் போராட்டத்தில் நம்பிக்கையோடு ஈடுபட்டார். அவர் நம்பிக்கையின் சின்னம்.

 

(சர்வோதயம் மலர்கிறது – செப்டம்பர் 2021 )