1920இல் நாகர் கோவிலில் ஸ்காட் கிறித்துவ உயர்நிலைப்பள்ளியில் படித்துவந்த பதினாறு வயது நிரம்பிய ஒரு மாணவருக்கு பள்ளிக்கூட நூல்களுக்கு அப்பால் யங் இந்தியா பத்திரிகையைப் படிக்கும் பழக்கம் இருந்தது. அதில் தீண்டாமையை ஒழிக்கவேண்டியதன் அவசியத்தைப்பற்றி காந்தியடிகள் எழுதும் கட்டுரைக்குறிப்புகளை அந்த மாணவர் தொடர்ந்து ஆர்வத்துடன் படித்துவந்தார். திருவனந்தபுரத்தில் தேசியக்கல்வியைப் புகட்டும் ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்திவந்த அம்மாணவருடைய மாமாவான மார்த்தாண்டன் தம்பியின் நெருக்கத்தால் தீண்டாமை என்னும் சமூகத்தீமையைப்பற்றி ஏற்கனவே அவர் கொண்டிருந்த எண்ணம் காந்தியடிகளின் கட்டுரையைப் படித்ததைத் தொடர்ந்து ஆழமாக வேரூன்றியது.
இராட்டையின் மகத்துவம் பற்றியும் கதரின் முக்கியத்துவம் பற்றியும் அதே யங் இந்தியா
இதழில் காந்தியடிகள் எழுதிய கட்டுரைகளையும் அந்த மாணவர் விரும்பிப் படித்தார். நாகர்கோவிலில் எம்.இ.நாயுடு, ஏ.கே.பிள்ளை போன்ற தலைவர்கள் இராட்டையைப்பற்றி ஆற்றிய உரைகள் அவரைப் பெரிதும் கவர்ந்தன.
சென்னைக்கும் மதுரைக்கும் வந்து காந்தியடிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள்
பற்றிய செய்திகளையும் அவர் உரைகளையும் அந்த மாணவர் ஆர்வத்துடன் படித்துவந்தார்.
இராட்டையில்தான் இந்த தேசத்தின்
கெளரவமே அடங்கியிருப்பதாக காந்தியடிகள் சொன்ன சொற்கள் அவரைச் சிந்திக்கவைத்தன.
திலகர் சுயராஜ்ஜிய நிதிக்கு பொதுமக்கள் அனைவரும் தாராளமாக நன்கொடைகளை
அளிக்கவேண்டும் என காந்தியடிகள் விடுத்த வேண்டுகோளைப் படித்த அந்த மாணவர் அந்த இளம்வயதிலேயே
பொதுமக்களிடமிருந்து முன்னூற்றைம்பது ரூபாயை நன்கொடையாகப் பெற்று அனுப்பிவைத்தார்.
அந்த அளவுக்கு அவரிடம் தேசப்பற்று குடிகொண்டிருந்தது.
இராட்டையின் மீது கொண்டிருந்த ஆசையின் காரணமாக சொந்தமாக ஒரு இராட்டையை வாங்கி தன்
அறையிலேயே நூல்நூற்கத் தொடங்கினார் அந்த மாணவர். காந்தியடிகளின் வெவ்வேறு கருத்துகளை முன்வைத்து வீட்டிலுள்ள பெற்றோரோடும்
உறவினர்களோடும் அவர் உரையாடிக்கொண்டே இருந்தார். சாதிகளிடையே
வேறுபாடுகள் இல்லாமல் மதநல்லிணக்கப் பார்வையோடு வாழ்தல் போன்ற காந்தியடிகளின் கருத்துகள்
அவரை ஆட்கொண்டன. காந்தியடிகளின் சொல்லும் வழியிலேயே தன் வாழ்வை
அமைத்துக்கொள்ள வேண்டும் என அக்கணத்தில் அவர் முடிவெடுத்தார்.
அடுத்த நாளே, கதர்வேட்டியும்
கதர்ச்சட்டையும் அணிந்துகொண்டு அவர் பள்ளிக்குச் சென்றார். அவரைச்
சூழ்ந்துகொண்ட பள்ளி மாணவர்கள் அனைவரும் அவரைக் கிண்டல் செய்தனர். ஆனால் அந்தக் கிண்டலை கிஞ்சித்தும் பொருட்படுத்தாத அந்த மாணவர் தினந்தோறும்
கதராடைகளை உடுத்திக்கொண்டு செல்வதையே வழக்கமாகக் கொண்டார். காந்தியின்
கொள்கைகளை ஒட்டி அவரும் ஆங்கிலேய அரசாங்கத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்துவந்த அவருடைய
தந்தையாரும் அடிக்கடி விவாதித்துக்கொண்டனர்.
ஒருமுறை அவருடைய பள்ளி நிர்வாகம் அவரை மிகச்சிறந்த மாணவனாகத்
தேர்ந்தெடுத்து விருதளித்துப் பாராட்டியது. வீட்டுக்கு வந்ததும் அந்த விருதைப் பார்த்த பெற்றோர்களும் மற்ற உறவினர்களும்
பாராட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். அக்கணத்தை தனக்குச் சாதகமாகத்
திருப்பி மகனுக்கு அறிவுரை புகட்டவேண்டும் என விரும்பிய அவர் தந்தையார் அந்த விருது
காந்தியடிகள் அளித்த விருதல்ல என்றும் இங்கிலாந்து அரசரின் சார்பாக அவருடைய படத்தைத்
தாங்கியிருக்கும் விருதென்றும் சொல்லி கிண்டல் செய்தார். அதைக்
கேட்டதும் அந்த விருதை அருவருப்பாக உணர்ந்த அந்த மாணவர் அக்கணமே அதைக் கழற்றி வீசினார்.
அச்செயலை சிறிதும் எதிர்பார்க்காத அவர் தந்தையார் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.
பள்ளிக்கூடக் காலத்திலேயே காந்தியக் கருத்துகளால் கவரப்பட்ட அந்த மாணவர்
ஜி.இராமச்சந்திரன்.
08.09.1920 அன்று கல்கத்தாவில்
நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஒத்துழையாமைத் தீர்மானத்தை அறிவித்து நீண்ட நேரம் உரையாற்றினார். வழக்கறிஞர்கள் உடனடியாக நீதிமன்றங்களிலிருந்து
வெளியேற வேண்டுமென்றும் கல்லூரிகளிலிருந்தும் பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் வெளியேற
வேண்டுமென்றும் பொதுமக்கள் அனைவரும் அந்நிய ஆடைகளைப் புறக்கணித்து ஒதுக்கவேண்டுமென்றும்
தெரிவித்தார். அரசுக்கு அளித்துவரும் ஒத்துழைப்பை எல்லாப் பக்கங்களிலிருந்தும்
பொதுமக்கள் திரும்பப்பெறுவதன் வழியாக அரசுக்கு தம் எதிர்ப்பை உணர்த்தவேண்டும் என்பது
அவர் திட்டம். அதைப்
புரிந்துகொண்ட இராமச்சந்திரன் உடனடியாக தன் பள்ளியிலிருந்து வெளியேறினார். கதராடைகள் உடுத்தி இராட்டையில் நூல்நூற்கக் கற்றுக்கொண்டார். மிகக்குறுகிய காலத்திலேயே நெசவையும் கற்றுத் தேர்ந்தார். முதன்முதலாக அவர் தானே நெய்த புடவையை தன் அம்மாவுக்கு பரிசாக அளித்தார்.
ஒருமுறை திருவனந்தபுரத்தில் குழந்தைசாமி என்னும் ஆசிரியர் வழியாக தாகூரின் கவிதையைக்
கேட்கும் வாய்ப்பு இராமச்சந்திரனுக்குக் கிடைத்தது. அந்தக் கவிதை அவரை முழு அளவில் ஆட்கொண்டது. அக்கவிதை உருவாக்கிய மன எழுச்சியையும் கனவுகளையும் எண்ணங்களையும் அவர் புதுமையாக
உணர்ந்தார். ஒருவித நம்பிக்கை தனக்குள் பொங்கியெழுவதை அவராலேயே
உணரமுடிந்தது. தற்செயலாக சில மாத இடைவெளியிலேயே தாகூர் ஒரு நிகழ்ச்சியில்
கலந்துகொள்வதற்காக திருவனந்தபுரத்துக்கு வந்தார். நாகர்கோவிலிலிருந்து
திருவனந்தபுரத்துக்குச் சென்ற இராமச்சந்திரன் தாகூரைச் சந்தித்தார். காந்தியடிகளின்
அழைப்புக்கிணங்கி பள்ளியைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் தாகூரின் விஷ்வபாரதியில் இணைந்து
கற்க விழைவதாகவும் தாகூரிடம் தெரிவித்தார். இராமச்சந்திரனிடம்
குடும்ப விவரங்களைப்பற்றி கேட்டறிந்த தாகூர் அவரை விஷ்வபாரதிக்குப் புறப்பட்டு வருமாறு
சொல்லிவிட்டுச் சென்றார்.
இராமச்சந்திரன் விஷ்வபாரதியில் கல்வி கற்கச் செல்வதை அவருடைய தந்தையார் அறவே விரும்பவில்லை. அது கண நேரத்துக்கு மின்னல்போலத் தோன்றி மறையும்
எண்ணமென நினைத்து, மகனுடைய கோரிக்கையைப் புறக்கணித்தார் அவர்.
அதனால் தன் விருப்பத்தின் ஆழத்தை தன் தந்தையார் உணர்ந்துகொள்ள வேண்டுமென்பதற்காக
வீட்டிலேயே உண்ணாவிரதம் இருந்தார் இராமச்சந்திரன். இறுதியில் அவருடைய தந்தை மனமிரங்கி,
இராமச்சந்திரனின் விருப்பத்துக்கு இணங்கினார். தன் பதினாறாம் வயதில் நாகர்கோவிலிலிருந்து புறப்பட்டு விஷ்வபாரதிக்குச் சென்று
சேர்ந்தார் இராமச்சந்திரன்.
விஷ்வபாரதியில் பேராசிரியர்கள் கெட்டெஸையும் பீர்சனையும் இராமச்சந்திரன் பெரிதும்
விரும்பினார். இந்தியாவின் கிராமப்புற
வாழ்க்கை எத்தகையது என்பதை அவர்களே அவருக்கு உணர்த்தினர். சந்தால்
பழங்குடியினர் படும் பாடுகள் அனைத்தும் அனைவரும் நேருக்குநேராகவே சந்திக்க முடிந்த
சாட்சியாக விளங்கின.
அப்போது விஷவபாரதியில் சாந்திநிகேதன் , ஸ்ரீநிகேதன்
என இரு அமைப்புகள் இயங்கிவந்தன. அவை பல நிர்மாணப்பணிகளை அவர்களிடையில்
ஆற்றிவந்தன. அனைவரும் கல்வியறிவையும் நவீன தொழில்நுட்பத்தைக்
கையாளும் ஆற்றலையும் பெறும் வகையில் போதிய பயிற்சியளித்தன.
சாந்திநிகேதனில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய காலை அட்டவணை இராமசந்திரனை
பெரிதும் கவர்ந்தது. ஒருகணம் கூட
வீணாகக் கழியாத அளவுக்கு அனைத்தும் சீராக திட்டமிடப்பட்டிருந்தன. காலை ஐந்து மணிக்கு படுக்கையிலிர்ந்து எழுதல். ஆறரை மணிக்கு
பொதுப்பிரார்த்தனை. பிறகு ஏதேனும் ஒரு மரத்தடியில் அமர்ந்து பத்து
நிமிட நேரம் தியானத்தில் மூழ்கியிருத்தல். பிறகு நூலக கட்டத்துக்கு
முன்னால் அனைவரும் கூடி அமர்ந்து நல்லிணக்கம் கோரும் மதச்சார்பற்ற பக்திப்பாடல்களைக்
கேட்டல். பல சமயங்களில் இந்த பிரார்த்தனைக்கு தாகூரே நேரில் வந்துவிடுவார்.
பிரார்த்தனை முடிந்ததும் அனைவர்க்கும் காலையுணவு. சரியாக ஏழரை மணிக்கு வகுப்புகள் தொடங்கிவிடும். நண்பகல்
ஒரு மணிக்கு உணவு இடைவேளை. மீண்டும் வகுப்புகள் தொடங்கி நாலரை
மணிவரையில் நிகழும். பிறகு ஆறரை மணிவரை விளையாட்டு. ஒவ்வொரு நாளும் மாலையில் வெவ்வேறு துறைசார் நிபுணர்கள் மாணவர்களிடையில் உரைநிகழ்த்துவார்கள்.
அதைத் தொடர்ந்து மாணவர்களே அணிபிரிந்து நடத்தும் விவாத அரங்கம்.
இவ்விதமாக இராமச்சந்திரன் சாந்திநிகேதனின் ஐந்தாண்டு காலம் படித்து பட்டம்
பெற்றார்.
1924இல் சாந்திநிகேதனில் பணியாற்றிவந்த ஆண்ட்ரூஸுக்கு ஒரு தந்தி
வந்து சேர்ந்தது. தந்தி அனுப்பியவர்
மெளலானா முகம்மது அலி. அதில் தில்லியில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும்
இடையில் மூண்டெழுந்த கலவரம் மறைந்து அமைதி திரும்புவதற்காகவும் இரு தரப்பினரிடையே ஒற்றுமையையும்
நல்லிணக்கத்தையும் உருவாக்கும்பொருட்டும் காந்தியடிகள் தில்குஷ் என்னும் இடத்தில் 21
நாட்கள் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள இருக்கிறார் என்றும் அத்தருணத்தில்
அவருக்கு அருகில் தங்கியிருந்து உதவி செய்ய உடனடியாகப் புறப்பட்டு வரவேண்டும் என்றும்
அந்தத் தந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் படித்ததும் உடனே ஆண்ட்ரூஸ்
புறப்பட்டார். அப்போது
இராமச்சந்திரனையும் தன்னுடன் அழைத்துச் சென்றார்.
காந்தியடிகளின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து நகரெங்கும் பரவியிருந்த வன்முறைகள் மெல்ல
மெல்ல அடங்கிவந்தன. அதுவரை ஆர்ப்பாட்டத்தோடு கலவரத்தில்
ஈடுபட்டவர்கள் மெல்ல மெல்ல அடங்கி அமைதிவழிக்குத் திரும்பிவந்தனர். உண்ணாவிரதக் கட்டிலில் நேருக்கு நேர் முதன்முதலாக காந்தியடிகளைப் பார்த்த இராமச்சந்திரன்
மனம் சிலிர்த்தார். அந்தி மறைந்த நேரம் அது. சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது. ஆனாலும் அந்த அறையில்
ஒரு சின்ன விளக்கு மட்டுமே சுடர்விட்டிருந்தது. காந்தியடிகள்
படுத்திருந்த கட்டிலைச் சுற்றி எல்லா மதத்தலைவர்களும் தலைகவிழ்ந்தபடி அமர்ந்திருந்தார்கள்.
அவ்வப்போது யாரோ ஒருவர் பிரார்த்தனைப் பாடலைப் பாடத் தொடங்குவதும்,
சிறிது நேரத்திலேயே அதை முடிக்கமுடியாமல் குரலுடைந்து தேம்பலுடன் நிறுத்துவதுமாக
இருந்தனர்.
காந்தியடிகளின் மன உறுதி இராமச்சந்திரனை வியக்கவைத்தது. மெலிந்துபோன இந்த எலும்புமனிதரால் அகிம்சையிலிருந்து
இம்மியும் பிசகாமல் தொடர்ந்து எப்படிப் போராட முடிகிறது என்ற கேள்வி அவரை அசைத்தது.
நம்பிக்கையுடன் செய்யும் பிரார்த்தனைகளுக்கு ஒருவருடைய மனசாட்சியைத்
தொட்டெழுப்பும் ஆற்றல் உண்டு என்பதை அக்கணத்தில் அவர் உணர்ந்தார். அப்போது அதுவரையில் தன் நெஞ்சில் படிந்திருந்த அனைத்துவிதமான நாத்திக உணர்வுகளும்
கரைந்து வெளியேற ஆன்மிக உணர்வு ஊறி நிறைந்ததை அவரால் உணரமுடிந்தது. காந்தியடிகள் வழியாக கடவுள்தன்மையின் உண்மையை அறிந்துகொண்ட பிறகு, அவரைப் பின்பற்றுவதொன்றே தன் வாழ்நாள் பணியென இராமச்சந்திரன் முடிவெடுத்தார்.
சாந்திநிகேதனுக்குத் திரும்பிய பிறகு அவர் காந்தியடிகளின் கட்டுரைகளையும் உரைக்குறிப்புகளையும்
தேடித்தேடி வாசிக்கத் தொடங்கினார். நிர்மாணப்பணிகள் வழியாக இந்தியப் பொருளாதாரத்தின் முகத்தையே மாற்றிவிட முடியும்
என்கிற காந்தியடிகளின் நம்பிக்கை இராமச்சந்திரனுக்கு உற்சாகமூட்டியது. காந்தியடிகளின் பொருளாதாரம் எளிமை, அகிம்சை, உழைப்பைப் புனிதமாக கருதும் மனம், சகமனிதர்களை மதிப்புடன்
அரவணைத்துச் செல்லும் நடத்தை ஆகிய நான்கு முக்கிய உட்கூறுகளைக் கொண்டது. எதையும் சார்ந்திருக்காத தன்னிறைவுள்ள
கிராமங்களை அத்தகு பொருளாதாரம் மூலம் எளிதில் உருவாக்கமுடியும் என்பது காந்தியடிகளின்
நம்பிக்கை..
மகிழ்ச்சி என்பது ஒருவன் தன் தேவைகளை மேலும் மேலும் என பெருக்கிக்கொண்டு செல்வதால்
கிட்டுவதல்ல, மாறாக ஆனமட்டும் தேவைகளைக்
குறைத்துக்கொண்டு எளிமையாக வாழ்வதில் உள்ளது என்பது காந்தியடிகளின் கருத்து.
ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கடைத்தேற்றம் நூலைப் படித்ததன் வழியாக அவர்
அந்தக் கருத்தை வந்தடைந்தார். ஏற்கனவே இராமச்சந்திரனிடம் குடியிருந்த
எளிமையின் மீதிருந்த பற்று காந்தியடிகளின் கருத்துகளால் மேலும் ஆழமானது.
நேர்மைக்கும் உறுதிக்கும் பேர்போனவர் இராமச்சந்திரன். ஒருமுறை காந்தியடிகளின் அகிம்சை வழிமுறை தீங்கற்றது
என்றபோதும் அதை வலியுறுத்துவதன் வழியாக உருவாகும் திணிப்புமுறை தீங்கானதென்றும் இராட்டைக்கு
அளிக்கப்படும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் குறித்தும் பற்றியும் தாகூர் தன் வருத்தங்களை வெளிப்படுத்தி
ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்த வினாக்களுக்குரிய சரியான விளக்கங்களை
காந்தியடிகளும் உடனடியாக எழுதி யங் இந்தியா நாளிதழில் வெளியிட்டிருந்தார்.
இக்கருத்துகளை ஒட்டி மாணவர்களிடையில் ஒரு விவாதம் நிகழ்ந்தது. அப்போது மாணவர் தலைவராக இருந்த இராமச்சந்திரனே
உரையாற்றினார். தன் உறுதியான வாதங்கள் வழியே தாகூரின் முன்முடிவுகளுக்கு
அடிப்படையில்லை என்றும் காந்தியடிகளின் திட்டங்கள் நீண்ட காலத்துக்குப் பின் பயனளிப்பவை
என்றும் தெளிவாக சான்றுகளுடன் உரையாற்றினார். அந்த உரையைக் கேட்ட
தாகூர் அவரை அழைத்துப் பாராட்டினார். சிந்திக்கும் சுதந்திரமும்
செயல்படும் சுதந்திரமுமே மானுடரில் அடங்கியிருக்கும் மிகப்பெரிய ஆற்றலென்றும் அதை யாருக்காகவும்
எந்தச் சூழ்நிலையிலும் விட்டுவிடக் கூடாதென்றும் எடுத்துரைத்தார். அக்கணத்தில் தன் பட்டப்படிப்புக்குப் பிறகு காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்துக்குச்
சென்று பயிற்சி பெற விரும்பும் தன் எதிர்காலத் திட்டத்தைப்பற்றி தாகூரிடம் எடுத்துரைத்தார்
இராமச்சந்திரன். தாகூர் தன் வாழ்த்துகளை இராமச்சந்திரனுக்கு வழங்கினார்.
அதுமட்டுமன்றி காந்தியடிகளுக்கு உடனடியாக ஒரு நீண்ட கடிதத்தை எழுதினார்.
அதில் இராமச்சந்திரனுடைய ஆர்வத்தையும் கனவுகளையும் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
இறுதியாக பட்டப்படிப்பை முடித்ததும் தாகூரின் ஆசிகளோடு இராமச்சந்திரன்
சபர்மதி ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார்.
இராமச்சந்திரனின் அறிவுக்கூர்மையையும் செயலார்வத்தையும் பற்றி
ஏற்கனவே நன்கு அறிந்திருந்த காந்தியடிகள் அவரை தன் மகனைபோலவே ஆசிரமத்தில் ஏற்றுக்கொண்டார். நடைமுறையில்
இருந்த ஆங்கிலக்கல்வி முறையை மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் தேசியக்கல்வியை ஆதரிக்கவேண்டுமென்றும் காந்தியடிகள்
பேசிவந்த நேரம் அது. தேசியக்கல்வியை
உள்ளடக்கிய புதியதொரு கல்விக்கொள்கையை அவர் உருவாக்கி, அதற்கு ஆதாரக்கல்வித்திட்டம்
என்றும் பெயர் சூட்டி வைத்திருந்தார். ஆதாரக்கல்வித் திட்டத்தின் கொள்கைகளை வகுப்பதிலும் அதை தேசமெங்கும் பரவச் செய்வதிலும் இராமச்சந்திரன்
உதவவேண்டும் என அவர் விரும்பினார்.
ஆதாரக்கல்வியானது பாடப்புத்தகங்களைக் கரைத்துக் குடிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் வாழ்க்கையை சிறப்புற வாழ்வதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்த ஒன்றாகும். வாழ்க்கைக்கான கல்வி, வாழ்க்கை வழியாக
அறிந்துகொள்ளும் கல்வி, வாழ்க்கை முழுதும்
கற்றுக்கொண்டே இருப்பதற்கான வாய்ப்பை வழங்கும் கல்வி என ஆதாரக்கல்வி முப்பரிமாணம்
கொண்ட ஒரு கொள்கையாகும். மாணவர்களிடம்
தெளிவான நோக்கங்களோடு ஒருவரோடொருவர் ஒத்துழைத்து விட்டுக்கொடுத்து பழகும் மனப்பான்மையை வளர்ப்பதாகவும் வன்முறையற்ற பாதையில் நடக்கத் தூண்டுவதாகவும் தன்னிறைவுக்கு வழிவகுப்பதாகவும் ஆதாரக்கல்வி அமையவேண்டும். அப்போதுதான் கல்வியின் முழுப்பயனும் இளம்தலைமுறையினருக்குக் கிட்டும். இப்படி பல
வகைகளிலும் யோசித்தும் பிறருடன் ஆலோசனை செய்தும் ஆதாரக்கல்விக்கான கொள்கைகளை வகுப்பதில் ஒத்துழைத்தார் இராமச்சந்திரன்.
புதிய கல்விக்கொள்கை தொடக்கக்கல்வி, ஆதாரக்கல்வி, தொடர்கல்வி, பல்கலைக்கழகக் கல்வி, சமூகக்கல்வி என
ஐந்து பிரிவுகளைக் கொண்டது. நாடெங்கும் ஆதாரக்கல்வியைபற்றிய
விழிப்புணர்வை உருவாக்குவதற்காக ஆசிரமத்தைச் சேர்ந்த சத்தியாகிரகிகளை நாடெங்கும் பல பகுதிகளுக்கு காந்தியடிகள் அனுப்பிவைத்தார். அவருடைய ஆணையைச் சிரமேற்கொண்டு இராமச்சந்திரன் ஆந்திரம், மைசூர், தமிழ்நாடு
என பல இடங்களுக்குச் சென்று ஆதாரக்கல்வி பரவுவதற்காக பாடுபட்டார்.
1930இல் காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தை அறிவித்தார். பயிற்சி பெற்ற எழுபத்தொன்பது சத்தியாகிரகிகளுடன் அவர் சபர்மதி ஆசிரமத்திலிருந்து இருநூற்று நாற்பது மைல் தொலைவிலிருந்த தண்டி கடற்கரையை நோக்கி 12.03.1930 அன்று நடக்கத் தொடங்கினார். அதைத்
தொடர்ந்து தண்டி யாத்திரையைப் போலவே தமிழகத்திலும் ஒரு யாத்திரையை நடத்தத் திட்டமிட்ட இராஜாஜி தொண்ணூற்றியெட்டு தொண்டர்களுடன்
14.04.1930
அன்று திருச்சியிலிருந்து வேதாரண்யம் கடற்கரையை நோக்கிச் செல்லும் ஒரு யாத்திரையைத் தொடங்கினார் அந்தக் குழுவில் இராமச்சந்திரனும் ஒருவர். அந்த யாத்திரையை தன் நிர்வாகத்திறமையால் வெற்றிகரமாக சாத்தியமாக்கியவர் சர்தார் வேதரத்தினம் பிள்ளை.
23.04.1930
அன்றே சத்தியாகிரகக்குழு வேதாரண்யத்தை அடைந்தபோதும் ஒரு வார காலம் பொதுமக்களிடயில் அனைவரும் பரப்புரை
செய்வதிலேயே ஈடுபட்டிருந்தனர். இறுதியாக
30.04.1930 அன்று
அதிகாலையில் மூன்று தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்ற இராஜாஜி அகஸ்தியம்பள்ளி கடற்கரையில் தடையை மீறி உப்பெடுத்தார். காவல்துறை அவரை உடனடியாக கைது செய்தது. இராஜாஜியைத் தொடர்ந்து
தொண்டர்களை வழிநடத்தும் பொறுப்பு சந்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மறுநாள் ஊர்வலமாகச் சென்று உப்பெடுத்த போது அவரும் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து முன்னணி வீரராக ஊர்வலத்தை வழிநடத்திய என்.எம்.ஆர்.சுப்பராமனும் கைது
செய்யப்பட்டார். அவரையடுத்து வழிநடத்துபவராகச் சென்று உப்பெடுத்தவர் இராமச்சந்திரன். அவர் துணிச்சலாகச் செயல்பட்டு அதிக அளவில் உப்பை முகாம் வரையில் எடுத்துவந்து பொதுமக்களிடையே ஏலம் விட ஏற்பாடு செய்தார். காவல்துறையினர் அவரையும் சத்தியாகிரகிகள்
அனைவரையும் கைது செய்தனர். இராமச்சந்திரனுக்கு ஓராண்டு கடுங்காவல்
தண்டனை விதிக்கப்பட்டது. கடலூர் சிறையிலும் வேலூர் சிறையிலுமாக அவர் தன் தண்டனைக்காலத்தைக் கழித்தார். சிறைக்கூடத்தில் அவர் தையல்
தொழிலைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார்.
1934இல் கேரளப்பகுதியில் இயங்கிவந்த ஹரிஜன சேவா சங்கக் கிளையில் செயலராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். 03.11.1935 அன்று செங்கானூர் கிராமத்தில் கூடிய கூட்டத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தெருக்களும் அலுவலகங்களும் ஆலயங்களும் சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் திறந்துவிடுவது தொடர்பான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசருக்கு அனுப்பிவைத்தார் இராமச்சந்திரன். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அதை ஆய்வு செய்த அரசர் ஆலயங்கள் நீங்கலாக மற்ற பொது இடங்கள் அனைத்தும் அனைத்துத் தரப்பினருக்கும் திறந்துவிடப்படுவதாக ஆணை பிறப்பித்தார்.
அதைத் தொடர்ந்து 09-05.1936 ,10-05-1936 ஆகிய இரு தினங்களில் திருவனந்தபுரத்தில் அரிஜன சேவா சங்கம் சார்பாக ஒரு பெரிய மாநாட்டைக் கூட்டினார் இராமச்சந்திரன். பல தலைவர்கள் அந்த அரங்கில் உரையாற்றினார். மாநாடு முடிவடைந்த பிறகு இராமச்சந்திரன்
தலைமையில் ஒரு குழு அரண்மனைக்குச் சென்று திவானைச் சந்தித்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மேல்சாதி இந்துக்களின் கையெழுத்துடன் தாழ்த்தப்பட்டவர்களின் ஆலய நுழைவை உறுதி செய்து சட்டமியற்றும்படி ஒரு கோரிக்கையை முன்வைத்தது. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 12.11.1936 அன்று திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியில் அமைந்திருக்கும் எல்லா ஆலயங்களும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு திறந்துவிடுவதற்கான சட்டத்தை திவான் வெளியிட்டார். இந்தச் சட்டத்துக்குப் பின்னால் இராமச்சந்திரன் ஆற்றிய பணி மகத்தானது. அதைத் தொடர்ந்து
இராமச்சந்திரன் மதுரைக்கு மாற்றப்பட்டார். அங்கு ஏற்கனவே மீனாட்சியம்மன் ஆலயப்பிரவேசத்துக்காக பாடுபட்டுக்கொண்டிருந்த வைத்தியநாத ஐயர், என்.எம்.ஆர்.சுப்பராமன், கிருஷ்ணசாமி ஐயங்கார் போன்றோருடன் இணைந்து தொண்டாற்றினார்.
ஒருமுறை தேசிய அளவிலான அரிஜன சேவா சங்கத்தின் மாநாடு தில்லியில் நடைபெற்றது. காந்தியடிகளும் மற்ற தலைவர்களும் தில்லிக்கு வந்திருந்தார்கள். இராமச்சந்திரனும் மாநாட்டு வேலைகளில் பரபரப்பாக இயங்கிகொண்டிருந்தார். அப்போது தில்லியிலேயே லேடி ஹாரிடிஞ்ச் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்துக்கொண்டிருந்த சுசிலா நய்யாரும் செளந்திரம் அம்மாளும் காந்தியடிகளைச் சந்திப்பதற்காக வந்திருந்தார்கள். அப்போதுதான் இராமச்சந்திரனும் செளந்திரமும் முதன்முறையாக சந்தித்து உரையாடினர். இருவருடைய சிந்தனைப்போக்கும் ஒன்றாக இருந்தது. அடுத்தடுத்து பல
காங்கிரஸ் கூட்டங்களில் சந்தித்துக்கொண்ட இருவரும் தொடர்ச்சியான உரையாடல்கள் வழியாக ஒருவரையொருவர் புரிந்துகொண்டனர்.
மருத்துவக்கல்லூரியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற செளந்திரம் சென்னைக்குத் திரும்பி சிறியதொரு மருத்துவமனையை நிறுவி பணிபுரியத் தொடங்கினார். தமிழ்நாடு அரிஜன சேவா சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட இராமச்சந்திரனும் சென்னைக்கு வந்து சேர்ந்தார். இருவரும்
திருமணம் செய்துகொள்ள விரும்பினர். ஆனால்
செளந்திரத்தின் பெற்றோர் மகளுடைய மறுமணத்தை ஏற்க மறுத்தனர். ஒருமுறை செளந்திரமும்
இராமச்சந்திரனும் சேவாகிராமத்துக்குச் சென்று காந்தியடிகளைச் சந்தித்து தம் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். அவர்களிடம் விரிவாகப் பேசிய காந்தியடிகள் இறுதியில் அவர்களுடைய திருமணத்தை ஆதரித்தார். அதே சமயத்தில் சபர்மதி ஆசிரமத்தில் இணையும் தருணத்தில் இராமச்சந்திரன் தன்னுடைய முப்பத்தைந்தாவது வயது வரை பிரும்மச்சரியத்தைக் கடைபிடிப்பதாகவும் அதற்கு பிறகே திருமணம் செய்துகொள்வதாகவும் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை அவர் நினைவூட்டினார். அதனால் அந்தக் காலம் நெருங்கிவரும் வரை பொறுமை காக்கும்படியும் இடைப்பட்ட காலத்தில் செளந்திரத்தின் பெற்றோருடன் தொடர்புகொண்டு திருமணத்துக்கான சம்மதத்தைப் பெற முயற்சி செய்வதாகவும் காந்தியடிகள் தெரிவித்தார். ஒருவேளை எதிர்பார்க்கும் சம்மதம் கிடைக்கவில்லையென்றால் தானே முன்னின்று இருவருக்கும் திருமணம் செய்துவைப்பதாகவும் கூறினார். இறுதியாக, அவர்
கூறியதே நிகழ்ந்தது. அவர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்ததால் அந்தக் கலப்புத்திருமணத்தை அவரே முன்னின்று 02.11.1940 அன்று எளிய முறையில் நடத்திவைத்தார்.
காந்தியடிகள் தான் நூற்ற நூலிலிருந்து நெய்யப்பட்ட வேட்டியை மணமகனுக்கும் கஸ்தூர்பா தான் நூற்ற நூலிலிருந்து நெய்யப்பட்ட புடவையை மணமகளுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்தனர். பிறகு காந்தியடிகள் இராட்டையில் தானே நெய்த நூலிலிருந்து தயாரிக்கப்பட்ட மாங்கல்ய நாணில் மஞ்சள் தடவிக் கொடுக்க, அதை வாங்கி
மணமகளுக்கு அணிவித்தார் இராமச்சந்திரன். காந்தியடிகள், கஸ்தூர்பா இருவருடைய ஆசிகளோடு திருமணம் நடந்துமுடிந்தது.
இருவருடைய இல்வாழ்க்கையும் சென்னையில் இனிதே தொடங்கியது. சில மாதங்களுக்குப் பிறகு மணமக்கள் இருவரும் திருவனந்தபுரம்
சென்றனர். தைக்காடு என்னும் இடத்தில் சாந்தி கிளினிக் என்னும் பெயரில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கி ஏழை எளியவர்களுக்கு மருத்துவச் சேவை செய்யத் தொடங்கினார் செளந்திரம். மேலும் அப்பகுதி மக்களுக்கு இராட்டையில் நூல் நூற்கக் கற்றுக்கொடுத்து தேசப்பற்றை ஊட்டினார். இராமச்சந்திரன் அரிஜன சேவா
சங்க வேலைகளில் மூழ்கியிருந்தார். 1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கியபோது, திருவனந்தபுரத்தில் இராமச்சந்திரன் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தியதற்காக திருவிதாங்கூர் அரசு அவரைக் கைது செய்து சிறையிலடைத்தது.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கியதால் காந்தியடிகளும்
கைது செய்யப்பட்டு ஆகாகான் மாளிகை வளாகத்தில் சிறைவைக்கப்பட்டார். அவரோடு மகாதேவ தேசாயும் கஸ்தூர்பாவும் சிறையில் இருந்தார்கள். எதிர்பாராத விதமாக இருவரும் அடுத்தடுத்து மறைந்துபோனார்கள். அப்போது காந்தியடிகளுக்கு 75 வயது. அதையொட்டி 75 லட்சரூபாயை
நிதியாகத் திரட்டி அவரிடம் அளிப்பதென தேசத்தலைவர்கள் முடிவு செய்தனர். காந்தியடிகளின் ஆலோசனைப்படி திரட்டப்படும் தொகையை வைப்புநிதியாகக் கொண்டு அன்னை கஸ்தூர்பா நினைவாக ஓர் அமைப்பை நிறுவலாம் என்றும் அதன் மூலமாக கிராமப்பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கல்வி, மருத்துவம், தொழில்
போன்ற துறைகளில் சேவை செய்யலாமென்றும் கூறினார்.
1944 ஆம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளில் திரட்டப்பட்ட தொகை அவரிடம் அளிக்கப்பட்டது. அன்றே கஸ்தூர்பா காந்தி தேசிய நினைவு நிதி அமைப்பு உருவானது. அமைப்பின் பணிகளையும்
விதிகளையும் காந்தியடிகளே வரையறுத்தார்.
’வாழ்க்கைக்கான கல்வி, வாழ்க்கை மூலம்
கல்வி, வாழ்க்கை முழுவதும்
கல்வி’ என்பது காந்தியக்கல்வியின்
அடிப்படை. இத்தகு கல்வி
மட்டுமே அறிவிலும் உழைப்பிலும் இணையான திறமையுள்ள மனிதர்களை உருவாக்கும். சமுதாயம் பயன்பெற இப்படிப்பட்ட மனிதர்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கமாக இருக்கவேண்டும் என இராமச்சந்திரனும் செளந்திரமும் உறுதியாக நம்பினர். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு என எல்லா நிலைகளிலும் பின்தங்கியிருக்கும் கிராமப்புறங்களை மேம்படுத்தி, சாதிமத வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் நல்லிணக்கத்தோடு வாழும் வகையில் மனமாற்றத்தை உருவாக்குவதை அவர்கள் தம் நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். அந்த இலட்சியப்பாதையில் முதல் முயற்சியாக சிறுமலை அடிவாரத்தில் திண்டுக்கல்லுக்கு அருகிலிருந்த சின்னாளப்பட்டி, செட்டிப்பட்டி, தெப்பம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு மையமான ஓரிடத்துக்கு காந்திகிராமம் என பெயர்சூட்டி கல்வி நிறுவனத்தைத் தொடங்கினர்.
காந்தியடிகளின் கொள்கைகள் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட லகுமய்யா என்பவர் முதன்முதலில் அந்த இடத்தில் தனக்குச் சொந்தமான இருபத்தைந்து ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக அளித்தார். இந்தியா சுதந்திரமடைந்த
அதே நாளில் லகுமய்யாவின் தாயார் அந்நிலத்தில் முதல் கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இராமச்சந்திரன் தன் கனவுத்திட்டத்தை காந்தியடிகளுக்குத் தெரிவித்தபோது, அவர் ‘உண்மை ஆட்சி
செய்யும் இடத்தில் வெற்றி குடியேறும்’ என்று வாழ்த்துச்செய்தியை அனுப்பியிருந்தார். முதல் கட்டடம் உருவான பிறகு, காந்தியடிகளின் வாசகம் கல்லில்
பொறிக்கப்பட்டு எல்லோரும் பார்க்கும் வகையில் வைக்கப்பட்டது.
கட்டடவேலைகள் நடைபெற்று வரும்போதே, கூடாரங்கள் எழுப்பப்பட்டு
நூல்நூற்றல், தறிநெய்தல், ஏனைய கிராமக் கைத்தொழில்களை ஊக்குவித்தல், கைத்தொழிலால் உருவாகும் பொருட்களுக்கு நல்ல விற்பனைமையங்களை உருவாக்குதல், விவசாய வளர்ச்சி என எல்லாத் தளங்கள் சார்ந்தும் வேலைகள் தொடங்கின. அனைவரும் கைத்தொழில்களில்
தேர்ச்சி பெறும் வகையில் பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டன. அனைவரிடமும் சுற்றுப்புறத் தூய்மை பற்றிய விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது. முதன்முதலாக அந்த இடத்தில் செளபாக்யா இல்லம் என்கிற பெயரில் ஆதரவற்ற குழந்தைகளின் பாதுகாப்புக்காக ஓர் இல்லம் உருவானது. அதைத் தொடர்ந்து
ஒரு தொடக்கப்பள்ளி உருவானது. பிறகு அது
உயர்நிலைப்பள்ளியாகவும் கல்லூரியாகவும் வளர்ச்சியுற்றது. ஏறத்தாழ ஒன்பதாண்டு கால கடுமையான உழைப்புக்குப் பிறகு அது கிராமிய உயர்கல்வி நிறுவனமாக உயர்ந்து நின்றது. மேலும் சில
ஆண்டுகளுக்குப் பிறகு அது பல்கலைக்கழகமாகவும் வளச்சிபெற்றது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தன் அயராத உழைப்பின் வழியாக காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தை இந்தியாவில் குறிப்பிடத்தக்க ஒரு கல்விநிலையமாக வளர்த்து நிலைநிறுத்தினார் இராமச்சந்திரன். 1976இல் அப்பல்கலைக்கழகத்தை நடுவண் அரசு தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உயர்த்தியது.
காந்திகிராம் ஆழமாக வேரூன்றி நின்ற பிறகு, ஏறத்தாழ ஐம்பது
ஆண்டுகளுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்குத் திரும்பிவந்தார் இராமச்சந்திரன். அங்கே தன் தாயாரின் பெயரில் மாதவி மந்திரம் லோகசேவை டிரஸ்ட் என்னும் அமைப்பை 02.10.1980 அன்று காந்தியடிகள் பிறந்தநாளில் உருவாக்கினார். அவருடைய தாயார் தன் பெயரில் இருந்த நிலங்களையும் வீட்டையும் அந்த டிரஸ்டுக்கு அன்பளிப்பாக அளித்தார். டிரஸ்ட் சார்பாக
முதலில் அவர் காந்தி வித்யாபீடம் என்னும் பள்ளியைத் தொடங்கினார். கிராமத்தில் உள்ள நிலங்களை நன்கு பண்படுத்தி விவசாயம் செழிக்கப் பாடுபடுதல், கிராமப்புறத்தைச் சேர்ந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் வருமானமீட்டும் கைத்தொழில்களில் போதிய பயிற்சியை அளித்து அவர்களுடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல், வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் அங்கன்வாடிகளை உருவாக்குதல், மதுப்பழக்கத்திலிருந்து மக்களை விடுவித்தல், காந்தியடிகளின் நிர்மாணப்பணிகளில் அனைவரும் ஈடுபட்டுப் பாடுபடும் வகையில் ஒருங்கிணைத்தல், சாதிமத வேறுபாடுகளைக் களைந்துவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து அகிம்சை வழியில் வாழும் வகையில் நல்லிணக்கத்தை உருவாக்குதல் என
திட்டவட்டமான குறிக்கோள்களுடன் டிரஸ்ட் இயங்கத் தொடங்கியது.
டிரஸ்ட் வழியாக இராமச்சந்திரன் அகிம்சைப்புரட்சி என்னும் இதழைத் தொடங்கி காந்தியடிகளின் கருத்துகளைத் தாங்கிய கட்டுரைகளை தொடர்ச்சியாக வெளியிட்டார். அவர் உருவாக்கிய மற்றொரு அமைப்பு சாந்திசேனை. அதன் உறுப்பினர்களுக்கு எதிர்ப்போ, போராட்டமோ இல்லாமல்
அகிம்சைவழியில் பிரச்சினைக்கு முடிவு காணும் பயிற்சி அளிக்கப்பட்டது. டிரஸ்ட் வளாகத்திலேயே தறிப்பிரிவுகளும் கைத்தொழில் பயிற்சிக்கூடங்களும் உருவாக்கப்பட்டு, அக்கம்பக்க சிற்றூர்களில் வாழும் பெண்களுக்கு போதிய பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சிக்காலத்துக்குப் பிறகு தகுந்த வேலைவாய்ப்புகள் வழியாக அவர்கள் சுயமாகவே சம்பாதிக்கத் தொடங்கினர். பலவிதமான மரக்கன்றுகளை உருவாக்கி விநியோகம் செய்யும்வகையில் சிறியதொரு பண்ணை உருவாக்கப்பட்டு, அதற்கு செளந்திரம் பண்ணை என்று பெயரிடப்பட்டது. ஒரு நாளின் பெரும்பான்மையான பொழுதை இந்த மந்திரத்திலேயே கழிக்கத் தொடங்கினார் இராமச்சந்திரன். அங்கே
பணியாற்றும் மகளிரை அவர் மாதவி மந்திரத்தின் பிள்ளைகளாகவே கருதினார்.
தன் மறைவுக்குப் பிறகு, தன் விழிகள்
மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படவேண்டுமென்றும் தன் உடல் எவ்விதமான சடங்குகளுமின்றி
தன் தாயாரின் கல்லறைக்கு அருகிலேயே, எங்கெங்கும் சர்வோதய கீதங்களும்
மதநல்லிணக்கப்பாடல்களும் ஒலிக்க, தேங்காய் ஓடுகளால் எரியூட்டப்படவேண்டும்
என்றும் தன் சாம்பல் கன்னியாகுமரியில் காந்தியடிகளின் கல்லறைக்கு அருகில் கரைக்கப்படவேண்டுமென்றும்
இராமச்சந்திரன் ஓர் உயிலை எழுதிவைத்திருந்தார். 17.01.1995 அன்று அவர் மறைந்ததும்,
பொதுமக்கள் பார்வைக்காக கலாபவன் அருகில் ஒருநாள் வைக்கப்பட்டிருந்து
மறுநாள் அவர் விரும்பிய விதத்திலேயே சடங்குகளின்றி எரியூட்டப்பட்டார்.
”நான் மறைந்தாலும் நான் தொடங்கிய வேலைகள் தடைபடாமல் இந்த மண்ணில் தொடர்ந்து
நடைபெறும். என் ஆன்மா என்றென்றும் உங்களோடு இணைந்து மனிதகுல மேன்மைக்காக
இயங்கியபடியே இருக்கும்” என்பதே இராமச்சந்திரனின் இறுதிச்செய்தி.
அவருடைய சொல்லுக்கு செயல்வடிவம் கொடுப்பதுபோல அவர் உருவாக்கிய மாதவி
மந்திரம் லோகசேவா டிரஸ்டு இன்றளவும் இடைவிடாமல் அறவழியில் இயங்கிவருகிறது.
(கிராம ராஜ்ஜியம் – 15.08.2021)