குழந்தைப் பாடல்களை இரண்டு பெரும்பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். முதல் பிரிவில் குழந்தைகள் தம் உணர்வுகளை வெளிப்படுத்த தாமே சொற்களைக் கூட்டிக்கூட்டி உருவாக்கும் பாடல்கள் அடங்கும். குழந்தைகளின் மனநிலைக்கு இணையாக தம் மனநிலையை தகவமைத்துக்கொள்ள முடிந்த பெரியவர்கள், குழந்தைகளின் பார்வையில் ஒவ்வொன்றயும் பார்த்து சொற்களை இணைத்து உருவாக்கும் பாடல்கள் இரண்டாவது பிரிவில் அடங்கும்.
குழந்தைகளிடம் பாடல்களை
உருவாக்கும் ஆற்றல் இருக்குமா என்றொரு கேள்வி எழக்கூடும். இதற்குரிய விடை இருக்கிறது
என்பதுதான். பல சமயங்களில் நாம் அவற்றைப் பொருட்படுத்தாமல்
கடந்துசெல்ல பழகிவிடுகிறோம். அதனாலேயே அத்தகு பாடல்கள் நம்
மனத்தில் பதிவதில்லை. சொற்களாலும் தாளத்தாலும் ஆனதுதான்
பாடல். குழந்தைகள் நெஞ்சில் சொல்லும் தாளமும் இயற்கையாகவே நிறைந்திருக்கின்றன.
ஒரு குழந்தை சொற்களை
அறிந்துகொள்ளத் தொடங்கியதுமே தன்னுடைய வேகத்தின் காரணத்தால் மெல்ல மெல்ல ஐம்பது, நூறு சொற்கள் வரைக்கும்
அறிந்துகொள்கின்றது. ஒரு சொல் முதன்முதலில் குழந்தைக்கு
அறிமுகமானதும், அச்சொல்லால் தன் கண்ணில் தெரியும்
எல்லாவற்றையும் சுட்டிக்காட்டவும் குறிப்பிடவும் முதலில் ஆர்வத்தின் காரணமாகப்
பயன்படுத்திப் பார்க்கும். பிறகு மெல்லமெல்ல தன்னைத்தானே
திருத்திக்கொண்டு மாற்றுச்சொற்களை கண்டடையும். ஒவ்வொரு
சொல்லுக்கும் தனித்தனி அர்த்தம் உண்டு என்பதை அது தானாகவே அறிந்துகொள்கிறது.
குழந்தைகளுடைய சொற்களஞ்சியத்தில் சொற்கள்
சேர்ந்துகொண்டே போகின்றன. நூறு சொற்கள், இருநூறு சொற்கள் என சேர்ந்து நிறைந்து ததும்பும்போதெல்லாம் அவற்றைப்
பாடலாக வெளிப்படுத்த முயற்சி செய்கின்றன.
தாளம் இல்லாமல் குழந்தையின் வளர்ச்சி இல்லை. குழந்தையின்
வளர்ச்சியில் எல்லா காலகட்டத்திலும் தாளம் இருக்கும். அதன் பேச்சு கூட அடிப்படையில் ஏதோ ஒரு தாளத்துக்கு
உட்பட்டதாகவே இருக்கும். தன்
கற்பனையாலும் கேள்விஞானத்தாலும் கண்டுபிடித்த தாளத்தை சதாகாலமும் உருட்டிக்கொண்டே
இருக்கும். சிரிப்பதற்கும் அழுவதற்கும் ஓடுவதற்கும்
நடப்பதற்கும் கூட தனித்தனி தாளம் இருக்கிறது என்பதை குழந்தை தானாகவே
உணர்ந்துகொள்கின்றது.
தனக்குள் பெருகும் தாளத்தையும்
ஏதேனும் ஒரு சொல்லையும் இணைத்து ராகத்துடன் சொல்லும்போது அதற்கு ஒரு பாட்டின்
சாயல் உருவாவதையும், அது
உச்சரிக்கும்போது கிட்டும் சுவையையும் ஒவ்வொரு குழந்தையும் ரசிக்கிறது. அது தன்னைத்தானே ரசிக்கும் குணம். தன் பிம்பத்தை
தரையில் விழும் நிழலிலும் சுவரின் விழும் நிழலிலும் கண்ணாடியிலும் கண்டு
ரசிப்பதுபோல, தன் குரலை தானே கேட்டு ரசிக்கத் தொடங்குகிறது.
குழந்தை உருவாக்கும் சொற் கூட்டத்திற்கு ஒரு
பாடலினுடைய தாளமும் இனிமையும் நிறைந்திருக்கும், ஆனால் பொருள் கிடையாது. பொருள் இருக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. ஒரு
பாட்டுக்கு பொருள் என்பது இரண்டாவது பட்சம் தான். அந்த பாட்டுக்கு குழந்தை எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதுதான் முக்கியமானது. மகிழ்ச்சி தான் ஒரே அளவுகோல். ஒரே நோக்கம். மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிற வரிகள்தான் பாட்டின்
கட்டமைப்பை தீர்மானிக்கும். பெரியவர்களின் காரண
அறிவுக்கு மட்டுமே, அப்பாடலுக்கு
பொருளில்லை என்று தோன்றும். ஆனால் உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு
தானே உருவாக்கிய தாளத்துடன் ஏதேதோ சொற்களை இணைத்து ஒரு குழந்தை உருவாக்கும்
பாடலுக்கு, அக்குழந்தையைப் பொறுத்தவரையில் ஏதோ ஒரு
பொருளுண்டு. குழந்தையால் உருவாக்கப்பட்டு குழந்தை மட்டுமே
உணரக்கூடிய ஒரு பொருள். இதற்கெல்லாம் சாட்சியாக பதிவுகள்
எதுவுமில்லை. சான்றாக எதையும் சொல்லிக்காட்டி நிறுவவும்
முடியாது. ஒவ்வொருவருக்கும் நேரடி அனுபவம் வழியாக
அறிந்துகொள்ள வேண்டியதுதான்.
குழந்தையுடைய மனநிலைக்கு பெரியவர்கள்
இறங்கிவந்து உருவாக்கும் பாடல்களை இரண்டாவது வகையான பாடல்கள் என்று குறிப்பிடலாம். அவ்வகையான பாடல்களில் ஒரு வகையான இனிமை இருக்கும். தாளமும்
இருக்கும். பொருளும்
இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகளின் மனதை அந்த பாட்டு வெளிப்படுத்தும். ஒரு கவிஞர்
குழந்தையின் மனநிலையில் இறங்கி குழந்தையின் சொற்களஞ்சியத்திற்குள் என்ன சொற்கள் இருக்கிறதோ அந்த
சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டு அந்தப் பாடலை அமைத்திருப்பார்.
இந்த இருபெரும் பிரிவுகளாலான
பாடல்வகைகளுக்கு அப்பால் இன்னும் சில முக்கியமான வகைகளும் உண்டு. குழந்தையை முன்வைத்து பாடக்கூடிய பாடல்களை ஒரு முக்கியமான பிரிவாகச் சொல்லலாம். குழந்தைகளை முன் வைத்து யார் பாடுவார்கள்?. அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, சொந்தக்காரர்கள் பாடுவார்கள். குழந்தைகள் நடந்து கொள்ளக்
கூடிய நடவடிக்கைகள் சார்ந்த சின்ன சின்ன காட்சிகளை பாடுவார்கள். உதாரணத்திற்கு
ஒரு குழந்தை படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் போது, தடுமாறி கீழே விழுகிறது. உடனே ஓடிச்
சென்று அக்குழந்தையை மிரட்டவோ அதட்டவோ செய்யாமல் உற்சாகப்படுத்தி கீழே விழாமல்
தொடர்ந்து நடப்பதற்குப் பாடுவது ஒரு காட்சி. எங்கோ
ஓரிடத்தில் ஒரு பொருள் இருக்கிறது என நம்பி ஒரு குழந்தை செல்கிறது. ஆனால் அது அங்கே இருக்காது, ஆனால் அக்குழந்தை
முற்றிலும் எதிர்பார்க்காத ஒன்று அந்த இடத்தில் இருக்கும். எதிர்பாராத
இன்பத்தில் குழந்தையின் முகம் மலரும். இது
ஒரு காட்சி. இப்படி
குழந்தைகள் இடம்பெறக்கூடிய சின்னச்சின்ன மகிழ்ச்சியான காட்சிகள், இப்படி குழந்தைகளை
முன்வைத்து பாடல்கள் எழுதப்படுகின்றன. எல்லா விதமான பாடல்களிலும் சொற்கள் குழந்தைகள் உலகத்திற்கு
நெருக்கமாக இருந்தால் மட்டுமே அவை
நீடிக்கும்.
அடுத்த நிலையில் வளர்ந்துவிட்ட குழந்தைகளுக்கு
எழுதப்படும் பாடல்களைக் குறிப்பிடலாம். இவ்வகைப்பாடல்களில்
குழந்தைகளுக்கு நல்வாழ்க்கைக்கான வழிகளைச் சொல்லலாம். இவ்வகைக்கான
பாடல்களுக்கு முன்னோடியாக பாரதியாரின் 'ஓடி விளையாடு பாப்பா' வை மனத்துக்குல்
வைத்துக்கொள்ளலாம். குழந்தைகள் நல்ல நடத்தையுடன் வளரவேண்டும், எது நல்லது எது கெட்டது என்பதை அவர்களுக்கு சொல்லவேண்டும்.
வாழ்க்கைக்கு அவர்களை தகுதி படுத்த வேண்டும். நல்ல சமூக மனிதனாக வளரவேண்டும். இது இன்னொரு
வகையான போக்கு.அப்படியெனில் குழந்தைக்கு என்ன அறிமுகப்படுத்தலாம், கல்வியை
அறிமுகப்படுத்தலாம், அறிவியலை அறிமுகப்படுத்தலாம், இயற்கையை அறிமுகப்படுத்தலாம், விலங்குகளை
அறிமுகப்படுத்தலாம். இப்படி குழந்தைகளுக்கு நாம் எதை எதையெல்லாம் அறிமுகப்படுத்த
வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதையெல்லாம் அறிமுகப்படுத்தலாம். அறிமுகப்படுத்துவதை
மிகவும் மகிழ்ச்சியோடு சொல்லிக்கொடுப்பது ஒருவிதமான பாடல். அறிவியல், விமானம், ராக்கெட் அறிவியல் சார்ந்த
விஷயங்கள் எப்படி இயங்குகிறது என்பதை பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.
இது ஒரு வகையான போக்கு.
அதற்கடுத்த நிலையில் சமூகம் சார்ந்த விஷயத்தை குழந்தைகளுக்கு உணர்த்தும் வகையில் எழுதப்படும் பாடல்களைச் சொல்ல வேண்டும். பற்பல வாழ்க்கைத்தருணங்களை முன்வைத்து குழந்தைகளுடைய
மனதில் கருணை என்பது எவ்வளவு முக்கியமானது, இரக்கம் என்பது எவ்வளவு முக்கியமானது. இந்த சமூகத்தில்
இரக்கத்திற்கும், கருணைக்கும், அன்புக்கும், பாசத்திற்கும் இருக்கக்கூடிய இடம் எவ்வளவு
முக்கியமானது என்பதை இவ்வகையான
பாடல்கள் உணர்த்துகின்றன.
ஒரு ஆய்வாளர் மொத்தமாக இருநூறு முன்னூறு பாடல்களைத் திரட்டிவைத்துக்கொண்டு
வகைப்படுத்தும்போது, இதுவரை சொன்ன
வகைமைகளின் அடிப்ப்டையில் எல்லாப் பாடல்களையும் வகைப்படுத்தலாம். இதன் வழியாக குழந்தைப்பாடல்களில் நிலவும் போக்குகள் என்னென்ன என்பதைப்
புரிந்துகொள்ள முடியும். இங்கு
குறிப்பிட்ட போக்குகளைக் கடந்து தனித்து நிற்கும் பாடல்களையும் சிற்சில சமயங்களில்
பார்க்கலாம். ஒரு பிரதானப் போக்குக்குக் கீழே தனித்தியங்கும்
துணைப்போக்குகளாக அவற்றை நாம் கருதலாம்.
இந்தச் சுருக்கமான அறிமுகத்தோடு
குழந்தைப் பாடலைப்பற்றிய சில
செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். குழந்தைப்பாடல்
என்னும் சொல்லே மிக அருமையாக இருக்கிறது. உழவர் பாடல்கள்,
படகோட்டிப் பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள் ஆகியவற்றின்
வரிசையில் குழந்தைப்பாடல்களுக்கு இருக்கும் இடம் என்ன? எல்லா
வகையான பாடல்களும் உருவாகும் முன்பாகவே உருவாகிவிட்ட பாடல்களாக குழந்தைப்பாடல்கள்
உள்ளன. ஒரு கோணத்தில் ஆதிப்பாடல்கள். குழந்தைகள்
பாடிய பாடல்கள். ஓர் உழவனோ, படகோட்டியோ
இட்டுக்கட்டி பாடல் பாடியதுபோல குழந்தைகளே இட்டுக்கட்டிய பாடல்களின் தொகுதி அவை.
எல்லாச் சமூகங்களிலும் வாய்மொழி
இலக்கியமே முதலில் உருவாகிய இலக்கியம். எழுத்தறிவு
பெற்ற பிறகு கற்பனை வளமும் கவியுள்ளமும் கொண்டவர்கள் உருவாக்கிய ஏட்டிலக்கியம்
உருவானது. இந்தச் சமூகத்தில் எழுத்தறிவற்றவர்களின் வாய்மொழி
இலக்கியமும் எழுத்தறிவுள்ளவர்களின் ஏட்டிலக்கியமும் இணைந்தே இங்கு வாழ்ந்த
மனிதர்களின் அடையாளமாகத் திகழ்ந்தது.
ஏட்டிலக்கியத்துக்கு தொடக்கநூல்
எது என்று சொல்லிவிடலாம். ஆனால்
வாய்மொழி இலக்கியத்துக்கு தொடக்கநூல் எது என்று குறிப்பிடுவது முடியாத செயல்.
ஒருவரால் ஒரு விதமான
உணர்ச்சி நிலையில் - உரையாடுகிற வேகத்தில் பகிர்ந்து கொள்ளக்கூடிய
விதத்தில்- பாடக்கூடிய வாய்மொழி பாடலின் ஆயுள்
என்பது அது
பாடப்படக்கூடிய கண நேரம் மட்டுமே. அந்த நேரத்தில் அந்த பாடல் தொடங்கி, பாடப் பெற்று ரசிக்க பெற்று முடிந்து போகிறது. ஆயுளே இல்லாத இந்த
மாதிரியான பாடல்கள் கோடிக்கணக்கில் பாடப்பட்டு இருக்கலாம், மறைந்தும் போயிருக்கலாம்.
வாய்மொழி பாடல்களை தொகுக்க வேண்டும் என்கிற போக்கு பத்தொன்பதாம்
நூற்றாண்டில் உருவான எண்ணம். தமிழ்ச்சமூகத்தில் வாய்மொழி இலக்கியத்தை பதிவு செய்தபோது உழவுப் பாடல்கள், நடவுப் பாடல்கள், தாலாட்டு
பாடல்கள், கும்மிப்
பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் என எண்ணற்ற வகைமைகளில் எல்லா பாடல்களையும் தொகுத்தார்கள். ஆனால் இந்த எல்லா
பாடல்களும் பெரியவர்கள் பாடியவை. யாருமே குழந்தைகளைப் பற்றி கவலைப்படவே இல்லை. குழந்தைகளும் பாட்டு பாடும், அந்தக் குழந்தைப் பாடல்கள் தொகுக்க வேண்டும் என்று வாய்மொழிப் பாடல்களை
தொகுத்தவர்களுக்குத் தோன்றவில்லை. அவர்கள் வசதியாக பெரியவர்கள் பாட்டை மட்டும்
சேர்த்து தொகுத்தார்கள்.
குழந்தைகள் கண்டிப்பாக பாடல் பாடியிருக்கும். நான்கு குழந்தைகள் சேர்ந்து விளையாடும்போது ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைப் பார்த்து பாடியிருக்கும். வர்ணிப்பதாக, நகைச்சுவையாக, கேலியாக,
ஏளனம் செய்வதாக, பழித்துப் பேசுவதாக, பாராட்டுவதாக என ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு கண்டிப்பாக பாடியிருக்கக்கூடும். ஆனால் அந்த பாடல்களை யாரும் பொருட்படுத்தித் தொகுக்கவில்லை. அதற்கான
முக்கியத்துவத்தை உணர கூடிய வாய்ப்பு எந்த சூழலிலும் அமையவில்லை.
அப்படி தொகுத்து இருந்தால் எப்படி இருக்கும் என்று
யோசித்துப் பாருங்கள். ஒரு நான்கு வயதுப் பையன் தன் அப்பா அம்மாவைப்
பற்றி பாட்டுப் பாடாமல் இருந்திருப்பானா? ஏன் நாம் நம்முடைய அப்பாவை பற்றியோ கண்டிக்கும் அண்ணன்மார்களைப்பற்றியோ
தாத்தாமார்களைப்பற்றியோ கேலியாகவும்
சந்தோசமாகவும் பாட்டுப் பாடாமல் இருந்திருப்போமா? நிச்சயம் இருந்திருக்கும். ஆனால் அவற்றை ஒரு பொருட்டாக நினைத்து
யாரும் தொகுக்கவில்லை. இந்த பாடல்கள்
தான் உண்மையான குழந்தைப் பாடல்கள்.
குழந்தை பாடல்கள் என்பது குழந்தை தனது மகிழ்ச்சிக்காக, தன் அறிவுக்கெட்டிய சொற்களைப் பயன்படுத்தி தானே கட்டி கொள்கிற பாடல். தன்னோடு விளையாடுகிற பெண்ணையோ அல்லது
பையனையோ பார்த்து கேலியாக பாடக்கூடிய பாடல். அந்தப் பாடல்வரிசையில் அம்மா பற்றிய பாடல் இருக்கும். அப்பா பற்றி
பாடிய பாடல் இருக்கும். குளத்திலிருந்து
அம்மா எப்படி குடங்களைச் சுமந்துகொண்டு நடந்துவருவார் என்பது பற்றிய பாடல்
இருக்கும். அப்பா எப்படி குறட்டை விடுவார் என பாடிய பாட்டு இருக்கும். அவர் நடந்தால் செருப்பு சத்தம் எப்படி கேட்கும் என்ற பாடலும் இருக்கும். இந்தப் பாடல்தான் உண்மையிலேயே குழந்தைகள் பாடி இருக்கக்கூடிய பாடல்.
பத்து பதினைந்து பிள்ளைகள் சேர்ந்துகொள்ள ஊஞ்சல் கட்டி விளையாடும்போது, எவ்வளவு பாட்டு
பாடியிருப்பார்கள். அவற்றையெல்லாம் நாம் இழந்துவிட்டோம்.
அச்சு ஊடகம் வந்த பிறகு நேரடியாகவே
பாடல்களை எழுதி வெளியிடக் கூடிய வசதி வந்தது. அப்போதுதான் கவிமணி தேசிக விநாயகம்
பிள்ளை, பாரதி, வள்ளியப்பா, எம்.சி. ராஜா, ரங்கநாயகி அடுத்த
தலைமுறைகள் வளர்ந்து வந்து அதை செழிப்பாக மாற்றினார்கள்.
குழந்தைகளின் சொற்களஞ்சியம்
மிகமிக நுட்பமானவை. குழந்தை
பயன்படுத்தும் எந்தச் சொல்லுக்கும் அகராதியில் குறிப்பிட்டிருக்கும் பொருள்
இருக்காது. அவை வேறு வகையான சொற்கள். குழந்தைகளோடு
நெருங்கிப் பழகி விளையாடி, தோழமை கொண்ட நிலையில்தான்
பெரியவர்களுக்கு குழந்தைகள் உலகத்தில் உள்ள சொற்களின் பொருள் புரியும். அன்போடும் நெருக்கத்தோடும் அவர்கள் அளவிற்கு இறங்கி பேசும் போது அவர்களின் சொற்களஞ்சியத்தை நாம் தெரிந்து
கொள்ள முடியும், கற்றுக்கொள்ள முடியும். ஒரு குழந்தை ஊஊ வந்தது என்று
காற்றை சொல்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை நாம் எப்படி புரிந்துகொள்வோம்? அது ஒலியோடு
சேர்ந்த ஒரு சொல்லமைப்பு. ஊஊ அடித்தால் கொடியில் காய வைத்த சட்டை பறக்கிறது.
இப்படி அதன் மூலமாக விளையக் கூடிய விளைவுகள் எல்லாவற்றையும் சொல்லும்
போதுதான் அந்த ஊஊ சொல்லுக்கான அர்த்தம் காற்று என்பதைப்
புரிந்துகொள்ளலாம். குழந்தையின் அந்த ஊஊ சொல்லை நாம் காற்று இல்லை என்று சொல்ல
முடியாது, அந்த குழந்தையின்
சொற்களஞ்சியத்தில் அதுதான் வார்த்தை. அத்தகு சொற்களை வடிவமைக்க கூடிய கற்பனை ஒரு கவிஞனுக்கு
அவசியம். அப்படி பாடல்கள் சொல்லப்படும்போது அந்த குழந்தையின் மனத்துக்கு அது மிக நெருக்கமாக அமையும்.
எப்படிப்பட்ட பாடல்கள்
குழந்தைகளைக் கவர்கின்றன என்றொரு கேள்வியை முன்வைத்து யோசிக்கும்போது, சில விடைகளை நம்மால் தோராயமாக
வழங்கமுடியும்.
அர்த்தத்தையே பார்க்காமல் வேகமாக பாடக்கூடிய பாடல் என்பது முதல் வகை.
அதோ பார் ரோடு
ரோட்டு மேல காரு
காருக்குள்ள யாரு
எங்க மாமா நேரு
இது யாரும் எழுதி படித்த பாடல் இல்லை. தன்னிச்சையான
தாளத்தில் உருவான பாடல்.
இன்னொரு பாடல்,..
அடடா அடடா அண்ணாமலை
அண்ணாந்து பாத்தா ஒன்றுமில்லை
போகப்போக ஜவுளிக்கடை
போயிப் பார்த்தா இட்லிக்கடை
ஆனால் இதில் ஒரு தாளம் இருக்கிறது. அதுதான் மலர்ச்சியை கொடுக்கிறது.
நிலா நிலா ஓடி வா
மல்லிகைப்பூ கொண்டு வா என்ற பாடல், இயற்கையோடு கொண்டிருக்கிற ஒரு உறவை சொல்கிறது. ஒரு அம்மாவை
அழைப்பது போல நிலவை அழைக்கிறது குழந்தை. நிலாவை அழைத்தால் அது வந்துவிடும் என்கிற
ஒரு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையே இந்த பாட்டின் பெரிய ஆதாரம்.
நிலாவானது தான் கூப்பிட்டால் வரவேண்டும். தான் கேட்டால் மல்லிகை பூ
எடுத்து கொண்டு வரவேண்டுமென்ற குழந்தையின் எதிர்பார்ப்பையும் குழந்தையின்
கற்பனையும் பதிவு செய்யக் கூடிய பாடல்தான் "நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா"
இது பாடப்பட்டு ஒரு நூறு வருடங்கள் இருக்கலாம். நூறு
வருடத்திற்கு பிறகும் கூட இந்த நான்கு வரிகளுக்கு ஒரு உயிர் இருக்கிறது. அந்த
உயிரோட்டத்திற்கு காரணமே அந்த வரிகளுக்கு பின்னால் இருக்கக்கூடிய கற்பனை, பெரிய
எதிர்பார்ப்பு, எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய குழந்தை மனம்.
செந்தில் பாலா எழுதிய ஒரு பாட்டு,..
வா வா மழையே
வரட்டுமா வெளியே
நீயும் நானும் தனியே ஆடலாமா இனியே
வீட்டில் யாரும் இல்லையே
நமக்கு இல்லை தொல்லையே
Rain rain go away Little johny wants to
play என்ற பாடலுடைய சாயல் இதில் தெரிகிறது. ஆனால் இந்த
ஆங்கிலப்பாடல் மழையை வராதே
என்று சொல்லக்கூடிய பாடல். பாலா எழுதியது வா வா மழையே, மழையை வா என்று சொல்லக்கூடிய பாடல். இங்கிலாந்தில்
வருடத்திற்கு பத்து மாதம் மழை பெய்யும். எனவே அங்கே இருப்பவர்களுக்கு மழை வேண்டாம், மழை இல்லாமல் இருந்தால்தான் அந்த நாட்டுப் பிள்ளைகளால் விளையாட முடியும். ஆனால் நமக்கு வருடத்தில் பத்து நாள்
மழை வந்தாலே பெரிய விஷயம். நமக்கு மழை வரும்போது பிள்ளைகள் அதில் நனைந்து ஆடவேண்டும், சேறு மேலே பட
வேண்டும். அப்படி ஆடும்போது கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி வருடம் முழுவதும் பிள்ளைகளிடத்தில் இருக்கும். அந்த மகிழ்ச்சியும் அந்த மகிழ்ச்சிக்கான எதிர்பார்ப்பும்தான் அந்த பாட்டில் வருகிறது. தன்னை ஒரு குழந்தையாக மாற்றி
கொண்டு அந்த மனநிலையில் பாடும் பொழுது அந்த பாட்டுக்கு இருக்கக்கூடிய சுவை
அருமையான சுவையாக இருக்கும்.
அதேபோல் இன்னொரு பாட்டு ஒன்று இருக்கிறது.
நெல் அரிசி சோறு
வடிச்சி வச்சது யாரு
கல அரிசி சோறு
செஞ்சு வச்சது யாரு
சீக்கிரமா கூறு
பாக்க போறேன்
தேரு
சீக்கிரமாக சொல் நான் தேர் பார்க்க போக வேண்டும்
என்கிறது அந்த பாட்டு.
அவரின் மற்றொரு பாட்டு,..
கூரை ஓலை அப்பளம்
தென்னங்குச்சி பாயாசம்
ஒட்டாங்குச்சி பணியாரம்
கொட்டாங்குச்சி இட்லி
மண்ணைகுழச்சி சட்டினி
நம்ம வீட்டு மருந்து டோய்
அப்பா வர நேரம் டோய்
படிக்க போலாம் ஓடு டோய்
தங்கப்பாவின் ஒரு பாட்டு ஒரு
விளையாட்டுக்காட்சியைக் காட்டுகிறது.
திமுக்கு தக்கா திமுக்கு தக்கா
திமுக்கு தக்காளி
சின்ன பாட்டி தோட்டத்துல சின்ன தக்காளி
சமைக்கும் முன்னே தொண்டைக்குள்ள
ஏப்பம் வந்தாச்சு..
சக்கை பிழிஞ்சு போட்ட இடத்தில் விதை முளைச்சாச்சு.
கண்முன்னால் ஒரு தக்காளிப்பழம்
பழுத்துத் தொங்குவதைப் பார்த்ததும் அதைப் பறித்துத் தின்ன பரபரக்கும்
குழந்தைமனத்தை இப்பாடலில் நாம் காணமுடியும்..
கடகடவெனு மழை விழுகுது,
தகர கூரை மேல
சடசடனு அது வழியுது,
தழைத்த செடிகள் மேல
பட படவென இலை துடிக்குது பட்ட மழையினாலே
மடமடவென நீர் பெருகுது
மரம் செடிகளின் கீழே
ஒரு மழைக்காட்சி. அந்த காட்சியில் கிடைக்கக்கூடிய
விதவிதமான ஒலிகள். இது ஒரு அருமையான பாட்டு.
அடுத்து குழந்தை தன்
பாட்டியைப்பற்றிய சித்திரத்தை முன்வைக்கும் விதம் பற்றிய பாடல். நம் கண்முன்னால் ஒரு பாட்டியின்
உருவத்தை அப்படியே கொண்டுவந்து நிறுத்துகிறது.
கூன் விழுந்த பாட்டி
குட்டை காலை நீட்டி
பாலும் சோறும் ஊட்டி
படுக்க வைத்தாள் பாட்டி
ஈரும் பேனும்
பார்ப்பாள்
எங்கும் தூய்மை சேர்ப்பாள்
நோயை நன்கு தீர்ப்பாள்
நாளும் அன்பை வளர்ப்பாள்
தந்தை வீடு செல்வாள்
அரட்டை பேசி வெல்வாள்
கொசுவை ஈயை கொல்வாள்
கோடி கதைகள் சொல்வாள்..
குழந்தையின் மனநிலையில் பாட்டியின் செயல்பாடுகள் என்ன
இருக்கிறதோ, அதையெல்லாம் இந்த பாடலில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
பெருஞ்சித்திரனார் எழுதிய குழந்தையைப் பற்றிய பாட்டு,..
குழந்தை இங்கே வா
கொஞ்சி முத்தம் தா
பாலும் சோறும்
உண்ணு
பத்து வரையில்
எண்ணு.
அ ஆ என்று அப்பா வந்தால் சொல்லு
பட்டு சட்டையில்
தைப்பார்,
பதக்கம் வாங்கி வைப்பார்,
முத்துப் பல்லைக் காட்டு
முன்னங்கையை
நீட்டு
சோற்றை வாயில் போட்டு
சுவையாய் பாடி ஆடு
குழந்தைகளுக்கான விடுகதை அமைப்பில் அமைந்த பாடல்கள் ஒரு முக்கியமான வகைமாதிரி. இந்த அமைப்பும் அழகாயிருக்கும். முழுக்க முழுக்க குழந்தைகள்
உலகத்தில் இருக்கக்கூடிய சந்தேகங்களையே நாம்
பாட்டில் பார்க்கலாம். அதேசமயத்தில் பதில் சொல்லும்போது ஒரு சின்ன திருப்பத்தையும் பார்க்கலாம்.
நீ எங்கே போன
ஊருக்கு போனேன்.
என்ன ஊரு?
மயிலாப்பூரு,
என்ன மயிலு?
காட்டு மயிலு,
என்ன காடு?
ஆற்காடு.
என்ன ஆறு?
பாலாறு.
என்ன பாலு?
கள்ளிப்பாலு.
என்ன கள்ளி?
இலை கள்ளி.
என்ன இலை?
வாழை இலை.
என்ன வாழை?
கற்பூர வாழை
என்ன கற்பூரம்?
ரச கற்பூரம்
என்ன ரசம்?
மிளகு ரசம்
என்ன மிளகு?
வால்மிளகு
என்ன வால்?
நாய் வால்
என்ன நாய்?
மர நாய்
என்ன மரம்?
பலா மரம்
என்ன பலா?
வேர் பலா
என்ன வேர்?
வெட்டி வேர்
என்ன வெட்டி?
பனை வெட்டி
என்ன பனை?
தாளி பனை
என்ன தாளி?
விருந்தாளி
என்ன விருந்து?
மணவிருந்து
என்ன மணம்?
பூமணம்
என்ன பூ?
மாம்பூ
என்ன மா?
அம்மா..
.அடுத்ததாக
குழந்தையின் அம்மாவோ அல்லது
அப்பாவோ பாடக்கூடிய பாடல்களை ஒரு முக்கியமான வகையாகச் சொல்லலாம், பிரியத்தை
மட்டுமே சொல்லக்கூடிய பாடல். குழந்தையால் அவர்கள் அடையக்கூடிய இன்பம், குழந்தை வழியாக
அவர்கள் பார்க்கக்கூடிய இன்னொரு உலகம். அந்த குழந்தைக்கு என்னவெல்லாம் செய்யலாம்
என்கிற கற்பனையே இந்த பாடல்,..
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
தாமரைப்பூவே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோயில் புறாவே சாய்ந்தாடு
பச்சைக்கிளியே சாய்ந்தாடு
பவளக்கொடியே சாய்ந்தாடு
சோலை குயிலே சாய்ந்தாடு
சுந்தர மயிலே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு
கற்பக கொடியே சாய்ந்தாடு
கட்டிக் கரும்பே சாய்ந்தாடு
கனியே பாலே சாய்ந்தாடு.
இசையோடு சேர்ந்த தாளம் தாளத்தோடு சேர்ந்த சொற்கள். பாடலில் எந்த
பொருளும் கிடையாது, ஆனால் குழந்தையை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்கிற
நோக்கம் மட்டும்தான். அந்த நோக்கத்திற்காக குழந்தைக்கு புரியக்கூடிய சொற்களை
சொல்லி பாடுகிறார்கள்.
காக்கா காக்கா
கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி குருவி
கொண்டைக்கு பூ கொண்டு வா
கொக்கே கொக்கே குழந்தைக்கு தேன் கொண்டு வா
கிளியே கிளியே கிண்ணத்தில் பால் கொண்டு வா
சில காட்சிகளை
சித்தரிப்பதுபோன்ற அமைப்பில் எழுதப்பட்ட பாடல்கள் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு முக்கிய
வகையாகும்.
மஞ்ச சட்டை
போட்டு இருக்கும்
மாடிவீட்டு மங்கம்மா
பந்தல் போட்ட முற்றத்திலே
பாடம் படிக்க வந்தாளாம்,
அங்க ஒரு கரப்பான்பூச்சி
அவளை பார்த்து முறைச்சதாம்
மங்கம்மா பதறி நடுங்கி
மயக்கம் போட்டு விழுந்தாளாம்.
பூச்சியை பார்த்து மயங்கி விழுந்த சம்பவம்.
சம்பவத்திற்க்குள்ளே இருக்ககூடிய பாட்டு.
சிட்டுக்குருவி அம்மா அப்பா எங்க போனீங்க,
இத்தனை நாள்
காலையில் எப்ப வந்தீங்க
பானைக்குள்ளே குஞ்சு பொரிச்சோம் பாழாகிபோச்சே
பூனை வாய்க்குள் எங்க குஞ்சு பொக்குனு போச்சே..
அப்புறம் ஏன் மறுபடியும் இங்க வந்தீங்க?
தப்பு பூனை மீண்டும் கொன்றால் என்ன செய்வீங்க?
பூனை தெருவில் செத்து கிடக்க பார்த்தோமே நேற்று.
தூணிடுக்கில் கூடு கட்ட துணிந்து வந்தோமே.
குருவிக்கு ஒரு கேள்வி பதில், எளிய கருத்தை
அழகாக பாட்டாக சொல்லும் போது மனதில் பதியும்.
வள்ளியப்பா பாடல் ஒன்று,
குருவி ஒன்று மரத்திலே
கூடு ஒன்றை கட்டியே
அருமை குஞ்சு மூன்றையும்
அதில் வளர்த்து வந்தது
நித்தம் நித்தம் குருவியும்
நீண்ட தூரம் சென்றிடும்
கொத்தி வந்த இரைகளை
குஞ்சு திண்ண கொடுத்திடும்
இறைவன் தந்த இறகினால்
எழுந்து பறக்க பழகுவிர்
இரையைத் தேடி தின்னலாம்
என்று குருவி சொன்னது..
நன்று நன்று
நாங்களும்
இன்றே இன்றே பழகுவோம்
என்று கூறி தாயுடன்
இரண்டு குஞ்சு கிளம்பின,
ஒன்று மட்டும் சோம்பலாய்
ஒடுக்கிக் கொண்டு உடலையே
அன்று கூட்டில் இருந்தது,
ஆபத்தொன்று வந்தது
எங்கிருந்தோ வந்தனன்
ஏறி ஒருவன் மரத்திலே
அங்கிருந்த கூட்டினை
அடைய நெருங்கிச் சென்றனன்,
சிறகிருந்தும் பறக்கவே
தெரிந்திடாமல் விழித்திடும்
குருவிக்குஞ்சை பிடித்தனன்
கொண்டு வீடு சென்றனன்.
குருவிக்குஞ்சு அவனது
கூட்டில் வாடலானது
அருமை அன்னை உரைத்தது
அதனின் காதில் உரைத்தது.
இது ஒரு கருத்து தான். ஆனால் இந்த கருத்தை நேரடியாக
சொல்லாமல், அழகாக குருவி குஞ்சு பறக்க சொல்லிதருவதை போல முன்வைக்கிறது, இரண்டு குருவிகள் மட்டுமே பறக்கக் கற்றுக்கொள்கின்றன. ஒன்று மறுக்கிறது, ஒருவன் அதை கொண்டுபோகிறான். இப்படி கதை அமைப்பில்
சொல்லும்போது நாம்
உத்தேசித்திருக்கும் கருத்து குழந்தைகள்
மனதில் பதிந்துவிடும்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கும்மிப்பாட்டு அமைப்பில் எழுதிய பாட்டு மிகமுக்கிய்மான
ஒரு வகையாகும்.
தோட்டத்தில்
மேயுது வெள்ளை பசு –அங்கே
துள்ளி
குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா எங்குது வெள்ளைப்பசு - உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப்பசு -பாலை
நன்றாய் குடிக்குது கன்றுக்குட்டி
முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு - மடி
முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி
கிட்டத்தட்ட கும்மி பாட்டின் அமைப்பிலேயே இப்பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது..
கொட்டுங்கடி
கும்மி கொட்டுங்கடி
கோதையரே கும்மி கொட்டுங்கடி
எட்டு திசையிலும்
செந்தமிழ் புகழ்
எட்டிடவே கும்மி
கொட்டுங்கடி
பனைமரமே பனைமரமே
ஏன் வளர்ந்தாய்
பனைமரமே
நான் வளர்ந்த காரணத்தை
நாட்டாரே சொல்கின்றேன்
படுக்க நல்ல பாயாவேன்
பாய் முடைய தோப்பாவேன்
கட்ட நல்ல கயிறாவேன்
கன்று கட்ட தும்பாவேன்
ஏரிக்கரை மேலே
எந்நாளும் வீற்றிருப்பேன்.
பனை மரத்திற்கும் நமக்கும் இருக்கிற உறவை இந்த பாட்டு
சொல்கிறது. மனித வாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பது பனைமரமும் தென்னை மரமும் தான். இந்த
மரங்களை பற்றி பிள்ளைகள் வாழ்க்கையில் தெரிந்துகொள்ள வேண்டும்.
அழகான கதையின் அமைப்பில்
எழுதப்படும் பாடல்களை தனியே வகைப்படுத்தலாம். இது ஒரு வகையான ஆர்வத்தைத் தூண்டும்
பாடல். குழந்தைகளிடம் கவனிக்கத்தூண்டும்
ஆர்வத்தை இத்தகு பாடல்கள் வளர்க்கின்றன.
கொழுகொழு கன்றே
கொழுகொழு கன்றே
என் பெயர் என்ன?
என்று ஈ கன்றுக்குட்டியை
கேட்கும், கன்றுகுட்டி தெரியாது என்று
சொல்லிவிட பிறகு தாய் பசுவிடம் கேட்கும், பசுவும் தெரியாது என்று சொல்ல இடையனிடம் கேட்கும், அவனும் தெரியாது
என்று சொல்ல, கையில் வைத்திருக்கிற தடியிடம் கேட்கும், தடிக்கு தெரியாமல் போக மரம், கொக்கு, மீன், குளம் என கேட்டு கடைசியாக
குதிரையிடம் செல்லும். என் பெயர் என்ன என அந்த குதிரையிடம் கேட்கும்போது குதிரை ஈஈஈஈ என்று இளிக்கும். அப்போது என்
பெயர் ஈயா என்று சொல்லும்.
பாடல் வழியாக கதையைச் சொல்லும்போது சுவாரஸ்மாக இருக்கும். ஒன்றை தெரிந்து
கொள்ளக்கூடிய ஆர்வத்தை இவ்வகையான குழந்தை பாடல்கள் தூண்டுகின்றன.
இந்த போக்குகள் அனைத்தும் மிக முக்கியமானவை இவற்றை மேலும் விரிவுபடுத்துவதும் புதிய போக்குகளை
உருவாக்குவதும் வாழும் தலைமுறையினரின் பணியாகும். அப்பணிகள் நிகழும்போது, நம் மொழியின்
குழந்தை இலக்கியம் தானாகவே வளர்ச்சியின் பாதையில் செல்லத் தொடங்கும்
(பஞ்சு
மிட்டாய்
இதழ்க்குழுவினர்
நடத்திய
சிறார்
இலக்கிய
இணையவழிக்
கருத்தரங்கத்தொடர்
நிகழ்ச்சியில்
20.09.2020 அன்று
நிகழ்த்தப்பட்ட
உரையின்
எழுத்துவடிவம்)