Home

Sunday, 19 September 2021

காதலென்னும் ஊஞ்சல் - புத்தக அறிமுகம்

     

சூர்யநிலாவின் கவிதைத்தொகுதியின் முகப்பில் பரணர் எழுதிய நற்றிணைப்பாடலை வழங்கியிருப்பது ஏதோ ஒரு வகையில் புதுமையாகத் தோன்றியது. முன்னுரை வாக்கியங்களைப்போலத் தோன்றிய அப்பாடல் வரிகள் கவிதைத்தொகுதிக்குள் அழைத்துச் செல்ல, வாசலில் நின்று வரவேற்பதுபோலத் தோன்றியது. என்ன தொடர்பு இருக்கக்கூடும்  என்றொரு கேள்வி ஒரு பறவையைப்போல சிறகடித்தபடி இருக்க, அப்பாடலை நாலைந்து முறை படித்துவிட்டேன். அதன் உள்ளோசைக்காக ஒரு முறை. அதன் காட்சியமைக்காக ஒரு முறை. அதன் கற்பனையழகுக்காக ஒரு முறை. அதன் பொருளுக்காக ஒரு முறை. படிக்கப்படிக்க அதன் அழகு பெருகியபடியே இருந்தது.  

ஓர் அன்னப்பறவை கூட்டிலிருக்கும் தன் குஞ்சுகளுக்காக இரை தேடிப் பறந்து செல்கிறது. இரை கிட்டும்வரை இரை பற்றிய நினைவே வாட்டுகிறது. இரை கிடைத்ததும் குஞ்சுகளின் நினைவு வாட்டத் தொடங்குகிறது.  கிடைத்த சிறு உணவுடன் மீண்டும் கூட்டை நோக்கிப் பறந்து வருகிறது. இரையை ஊட்டியதும் இரை தேடிப் பறந்து செல்கிறது. அமைதியற்ற அந்த அன்னப்பறவைக்கு ஓய்வே இல்லை. ஒய்வின்றி பறந்தபடியே இருக்கிறது. மீண்டும் மீண்டும் கூட்டுக்குத் திரும்பி வருகிறது. அந்த அமைதியின்மையைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான் அக்காட்சியைக் கட்டமைக்கிறார் பரணர்.

காதலியைச் சந்திக்க முடியாத காதலன் ஊருக்கு வெளியே தனிமையில் தவிப்போடு நிற்கிறான். அந்த அன்னப்பறவையைப்போல அவன் மனம் மட்டும் அவளை நோக்கிச் சென்று அலைந்துவிட்டு அமைதியிழந்து திரும்புகிறது. அமைதி குலைந்த மனத்திடம் ஆறுதல் சொற்களைச் சொல்கிறான் காதலன். அபூர்வமானதொரு கணத்தில் சூரியனுக்கு அருகில் வெள்ளி தோன்றுவதுபோல என்றேனும் ஒருநாள் தனக்கருகில் காதலி வந்து சேருவாள் என நம்பிக்கைச் சொற்களைச் சொல்லி அமைதிப்படுத்துகிறான்.

காதலின் இரு பக்கங்களான அமைதியின்மையையும் நம்பிக்கையையும் பரணரின் வரிகள் அழகாகக் காட்சிப்படுத்துகின்றன. மீண்டும் மீண்டும் பறந்தபடியே இருக்கும் அன்னப்பறவையை ஆழ்நெஞ்சில் அசைபோட்டபடி ஒவ்வொரு கவிதையாக படிக்கத் தொடங்கினேன். பல கவிதைகள் புன்னகை பூக்கவைத்தன. பரணர் தீட்டிய காதலனின் சாயலை சூர்யநிலா தீட்டியிருக்கும் காதலனின் சித்திரத்தில் பார்க்கமுடிந்ததுதான் காரணம். அதே அமைதியின்மை. அதே நம்பிக்கை. முகப்பில் பரணருடைய வரிகளின் இருப்புக்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் காதலின் தன்மை எவ்விதமான மாற்றமுமில்லாமல் அப்படியே இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் சூர்யநிலா பயின்று பெற்ற கவிமொழி அவருடைய காட்சியமைப்புக்குத் துணையாக உள்ளது. அவர் இன்னொரு பரணராக மாற முயற்சி செய்திருக்கிறார். சூர்யநிலா தனக்குள் இருக்கும் ஏதோ ஓர் அந்தரங்கமான தேடலை இத்தொகுதியில் படிமங்களாகவும் உருவகங்களாகவும் மாற்றி முன்வைக்க விழைந்திருக்கிறார்.

 

     நிலா பார்த்தல் ஒரு நல்ல கவிதை. காதல் மீது கொண்ட நம்பிக்கையையும் உறுதியையும் புலப்படுத்தும் கவிதை.

     பெரும்நம்பிக்கையில்

     கட்டப்பட்ட

     உன்மீதான காதல்

     கட்டு தளரும்போதெல்லாம்

     இறுக்கி இறுக்கிக் கட்டுகிறேன் 

     காலம்

     உன்னையும்

     என்னையும்

     சேர்த்தே

     தீருமென்ற

     நம்பிக்கையில்

     நான்

     நிலா

     பார்க்கப்

     போனேன்

     நீ

     நிலவாகியிருந்தாய்

 

     தளர்வே இல்லாத உறுதியான கட்டமைப்பாக காதல் நிலவவேண்டும் என்பதுதான் எல்லாக் காதலர்களுக்கும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் எதார்த்தத்தில் அப்படி வாய்ப்பதில்லை. சில நேரம் உறுதி. சில நேரம் தளர்வு. ஆனால் அப்படி அதன் போக்கில் மாற்றமடைவதை, விதியே என வேடிக்கை பார்த்தபடி அமர்ந்துவிடவில்லை சூர்யநிலாவின் காதலன் அல்லது காதலி. தளரும்போதெல்லாம் இறுக்கி இறுக்கிக் கட்டுகிறார்கள். நம்பிக்கை சார்ந்த அச்செயல்பாடு காதலுக்கு வலிமையைச் சேர்க்கிறது. பார்க்கும் இடங்களிலெல்லாம் நெஞ்சிலிருக்கும் ஒன்றையே பார்ப்பது என்பது உலகியல் நோக்கில் பித்தாகத் தோன்றலாம். ஆனால் காதல் உலகிலும் கவிதை உலகிலும் அது ஒரு பெரும்பேறு. காக்கைச் சிறகினில் கண்ணனின் கருநிறத்தைப் பார்த்த பாரதியாரைப் போன்ற ஒருசிலருக்கே கிடைத்த நற்பேறு. ‘நிலா பார்க்கப் போனேன், நீ நிலவாகியிருந்தாய்அழகான வரி.

 

     இக்கவிதைக்கு முற்றிலும் எதிர்த்திசையில் பயணம் செய்வது காலத்தின் பெருங்கல் என்னும் கவிதை

 

     சிறகடிப்பின்போது

     பெருங்கல்லொன்று

     குறி தவறாமல்

     என் மேல் விழுகிறது

     என்னைக் கீழே

     மிக கீழே தள்ளிவிட்டு

     கைகொட்டிச் சிரிக்கிறது அப்பெருங்கல்

 

எதிர்பாராத விபத்து போல நிகழ்ந்துவிட்ட கல்லின் தாக்குதல் ஒருகணம் திகைப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. ஆனால் தளரும் போதெல்லாம் இறுக்கி இறுக்கிக் கட்டி, உறுதியை உறுதிப்படுத்துக்கொள்ளும் மனம் அதிர்ச்சியிலிருந்து மீண்டும் பறக்கத் தொடங்கியிருக்கக்கூடும் என்று நம்பிக்கை கொள்ளவே விழைகிறது.

 

     மிதந்து நகரும் அகல் என்பது ஒரு கவிதையின் தலைப்பு. மிக அழகான சொற்சேர்க்கை. காதலைக் கரைசேர்க்கும் நெஞ்சுக்கு இதைவிட பொருத்தமான வேறொரு சொற்கூட்டு அமையாது. கவிதையில் இச்சொற்கூட்டு வேறொரு பொருளில் அமைந்திருந்தாலும், அப்புள்ளியிலிருந்து சிறகடித்து எழுந்து பல தளங்களை நோக்கித் தாவும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

 

     நீ

     மேலமாசி

     கீழமாசி

     வீதிகளில்

 

     நான்

     தெற்கு

     வடக்கு

     இரத வீதிகளில்

 

     மிதந்து நகரும்

     அகல்விளக்குகளைப்போலவே

     சொக்கனின் தெப்பக்குளத்தில் நடனமாடும்

     நமது நிழல்களை உண்டு

     பசியாறும்

     மீன்களின் நிழல்களை உண்ணும்

     நிழல்கள் நாம்

 

     மூன்று நிழல்களை ஒரே புள்ளியில் இணைக்க முயற்சி செய்கிறார் சூர்யநிலா. ஒரு நிழல் தெப்பக்குளத்தில் படிந்து அசையும் காதலர்களின் நிழல். இரண்டாவது நிழல் தெப்பக்குளத்தில் விழுந்த நிழலை ஏதோ இரையென நினைத்து கவ்விக்கொள்ள நீந்தியோடும் மீன்களின் நிழல். மூன்றாவது நிழல் காதலர்கள். அவர்கள் இந்த உலகத்திலேயே இல்லை. மீன்கள் இரையைக் கவ்விக்கொள்வதைப்போல ஒருவரையொருவர் கண்ணோடு கண் சேர்த்து பார்த்தபடி உறைந்து விடுகிறார்கள். அவர்கள் நிழலென உறைந்து, மீனின் நிழலைப் பார்க்கிறார்கள். ஒரு கோட்டில் இணையும் மூன்று நிழல்கள் அழகான கற்பனை.

     அன்பின் காலம் என்பது இன்னொரு முக்கியமான கவிதை. மலர்களை அலைகலாகவும் காற்றாகவும் பாடல்களாகவும் உருமாற்றி மனத்தைத் தீண்டிக் கரையேறவைக்கும் அன்பின் ஆற்றல் மகத்தானது.

    

     பூத்துக் கிடக்கும்

     உனதன்பின்

     மலர்கள்

 

     எனது மெல்லிய விசும்பலில்

     பாடலாக, காற்றாக

     அலைகளாக கரையேறுகின்றன

     உனது மனதின் மீது

    

     ஒரு பறவையும் ஒரு நிழலும் மற்றொரு சிறப்பான கவிதை. பறவையைத் தேடும் நிழலின் தவிப்பும் நிழலைத் தேடிப் பறக்கும் பறவையின் தவிப்பும் காலம் காலமாக தொடர்ந்துகொண்டே இருக்கும் காதலின் ஆடல். மேலதிகமான விளக்கமெதுவும் தேவையற்ற கவிதை.

 

     சிறகுகளின் மீது

     வெண்சாம்பலைப்போலுள்ள

     கோடுகள்

     பனிகளின் துளிகள் என்பதை

     அறியாமலேயே

     உயர உயரப் பறந்து செல்கிறது

     ஒரு பறவை

 

     உன் மீதுள்ள நிழல்

     நான்தான்

     என்பதை அறியாமல் நீ

     சென்றதைப் போலவே

 

     இன்னும் திரும்பவே இல்லை

     என் வாசலுக்கு

     ஒரு பறவையும்

     ஒரு நிழலும்

 

     கற்கள் இத்தொகுதியின் மிகச்சிறப்பான கவிதை. காதல் தன் இலக்குப்புள்ளியைத் தொட இயலவில்லை என்பது மாபெரும் துயரம். துயரத்தின் எடையை சூர்யநிலாவின் குறைவான சொற்கள் முழுமையாக உணர்த்திவிடுகின்றன.

    

     முழுவதும் அன்பினால்

     தடவி வீசப்பட்ட

     எனது கற்களில் ஒன்று

     உன் மதிலில் விழுந்தது

     மற்றொன்று

     உன் குடிலில் விழுந்தது

     மேலுமொன்று

     உன் மடியில் விழுந்தது

     எப்படி வீசினாலும்

     எந்தக் கல்லும் விழவில்லை

     உன் மனதில்

 

நம்பிக்கையின் இறுக்கம் தளரும்போதெல்லாம் இறுக்கி இறுக்கிக் கட்டி நம்பிக்கையை மீட்டுக்கொள்ளும் காதலன் ஒரு பக்கம். எப்படி வீசினாலும் எந்தக் கல்லும் விழவில்லை உன் மனத்தில் என நம்பிக்கை தளர்ந்துவிழும் காதலன் மற்றொரு பக்கம். ஒரு எல்லையில் உற்சாகம். மற்றொரு எல்லையில் துயரம். ஒரு எல்லையில் கனவு. மற்றொரு எல்லையில் எதார்த்தம். இரு எல்லைகளையும் மாறிமாறித் தொட்டு அசைந்தபடியே இருக்கிறது காதல் என்னும் ஊஞ்சல்.

 

(நீர்க்காகம்சூர்யநிலா. கவிதைகள். எழுத்துக்களம் வெளியீடு. 398/190. பஞ்சநாதன் தெரு, குப்தா நகர், சேலம் – 636009. விலை. ரூ.125)

 

(புக்டே – 18.09.2021 இணையதளத்தில் வெளிவந்த கட்டுரை)