Home

Tuesday 19 December 2017

எட்டு மாம்பழங்கள் - சில பாடல்கள்



ஆசைகள்

அப்பா அப்பா ஏரிக்கரைக்கு
போகலாமா?
ஆல விழுதில் ஊஞ்சல் ஆடி
குதிக்கலாமா?

விழுந்து கிடக்கும் நாவல் பழத்தை
எடுக்கலாமா?
மண்ணை ஊதி அகற்றிவிட்டு
தின்னலாமா?

எட்டு மாம்பழங்கள் - புதிய சிறுவர் பாடல் தொகுதி முன்னுரை






ஹூப்ளி என்னும் ஊருக்குப் பக்கத்தில் பத்து நாட்கள் தொடர்ச்சியாக தங்கி வேலை பார்க்கும்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த ஊர் தொலைபேசி நிலையத்திலேயே ஓர் அறையில் தங்கியிருந்தேன். வேலையிடத்துக்கு என்னை அழைத்துச் செல்லவேண்டிய நண்பர் தன் சொந்த வீட்டிலிருந்து கிளம்பி வந்து என்னை அழைத்துச் செல்வார். அவருடைய சிரமத்தைக் குறைப்பதற்காகவும் பயணத்தொலைவைக் குறைப்பதற்காகவும் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு பொது இடத்தை, இருவரும் சந்தித்துப் புறப்படும் இடமாக அமைத்துக்கொண்டோம்.

Wednesday 13 December 2017

கனவுகளின் அறைகள் - தூயனின் சிறுகதைகள்


                               
கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே அடுத்தடுத்து குறிப்பிடத்தக்க நல்ல சிறுகதைகளை எழுதி வாசகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பவர் தூயன். பலவிதமான கூறுமுறைகளுக்கு ஏதுவாக கதைக்களங்களைக் கட்டமைக்கும் விதங்களில் தூயனின் ஆர்வமும் ஆளுமையும் வெளிப்படுகின்றன. வடிவப்பிசகில்லாதபடி ஒரு கதையைத் தொடங்கும் கலையும் சரியான புள்ளியில் முடிக்கும் கலையும் தூயனுக்கு இயல்பாகவே கைகூடி வரும் அம்சங்களாக உள்ளன.

Sunday 10 December 2017

கசப்பும் கனவும் - உமா மகேஸ்வரியின் சிறுகதைகள்


உமா மகேஸ்வரியை ஒரு கவிஞராகவே நான் முதலில் அறிந்துவைத்திருந்தேன். நான் எழுதி வந்த கணையாழி இதழில் அவரும் அடிக்கடி எழுதி வந்தார். ‘எனது நதி’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையொன்று என் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. நதியையும் ஒரு பெண்ணின் புடவையையும் பல்வேறு நிலைகளில் ஒப்புமைப்படுத்தியபடி செல்லும் அக்கவிதை. சின்னஞ்சிறு வயதில் அம்மாவின் புடவையென அலையோடியிருக்கிறது நதி. பருவ வயதில் ஓரம் தைத்த தாவணியாக உருவம் மாறிக் கிடக்கிறது. திருமணமாகி வேறு திசைக்குச் சென்று திரும்பி வந்து பார்க்கும் தருணத்தில் நூலிழை பிரிந்த கந்தலாகக் கிடக்கிறது. ஒருபுறம் காலம் ஒரு சிறுமியை திருமணம் முடித்த பெண்ணாக வளர்ந்து நிற்கவைக்கிறது. மறுபுறத்தில் அதே காலம் அலைகளோடிய நதியை நீரோட்டம் இல்லாத சிறு குட்டையாகச் சிறுக்க வைத்திருக்கிறது. இந்தக் கவிதையை இன்னும் என் நினைவில் பதிந்திருப்பதற்குக் காரணம் நதியைக் குறிப்பிட உமா மகேஸ்வரி ’அம்மாவின் புடவை’ என கையாண்டிருக்கும் உவமை. எந்த நதியைப் பார்த்தாலும் அந்த உவமை ஒருகணம் என் மனத்தில் எழுந்து மறையும்.

Saturday 2 December 2017

கதவு திறந்தே இருக்கிறது - மனைவி என்னும் மகாசக்தி


உயர்நிலைப்பள்ளியில் படித்த காலத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற ஒரு பேச்சுப்போட்டியில் எனக்கு முதற்பரிசு கிடைத்தது. நான்கு புத்தகங்களை ஒரே கட்டாக வண்ணக்காகிதத்தில் சுற்றிக் கொடுத்தார்கள். வீட்டுக்கு வந்ததும் எங்கள் அம்மா அந்தக் கட்டைப் பிரித்தார். “எல்லாமே ஒரே எழுத்தாளர் எழுதிய புத்தகமா இருக்குதுடா” என்றார். நான் அவற்றை எடுத்துப் பார்த்தேன். எல்லாமே மு.வரதராசனார் எழுதியவை. அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பருக்கு ஆகியவை. அந்த வாரத்திலேயே அவை அனைத்தையும் படித்துமுடித்தேன். கடித வடிவத்தில் கூட ஒரு புத்தகத்தை எழுதமுடியும் என்னும் அம்சம் புதுமையாகவும் வியப்பளிப்பதாகவும் இருந்தது. அறிவுரைகள், வாழ்க்கைச்சம்பவங்கள், சின்னச்சின்ன கதைகள், எடுத்துக்காட்டுகள் என ஏராளமான விஷயங்களின் கலவையாகவும் தொகுப்பாகவும் இருந்தது. ஒரு பயணம் போய்வந்த அனுபவத்தைக்கூட அவர் ஒரு கடிதமாக எழுதியிருந்தார். ஏதோ ஒரு கடிதத்தில் அன்று படித்து மனத்தில் பதியவைத்துக்கொண்ட ஒரு கருத்து, (சாதிசமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள். மறக்க முடியாத நிலையில் புறக்கணிக்கக் கற்றுக்கொள்) இன்றும் என் நெஞ்சில் பசுமரத்தாணியென பதிந்திருக்கிறது.

கதவு திறந்தே இருக்கிறது - பால்யத்தின் அடித்தளம்

வில்லியம் சரோயன், சிங்கர் ஆகிய எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிக்கும்படி முதன்முதலில் எனக்கு ஆலோசனை வழங்கியவர் அசோகமித்திரன். அதற்குப் பிறகுதான் அவர்களுடைய சிறுகதைத்தொகுதிகளைத் தேடி வாங்கிப் படித்தேன். இருவருமே மகத்தான எழுத்தாளர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஓர் எழுத்தாளனுக்கு தன் இளம்பருவத்து அனுபவங்கள் விதைகளாகவும் உரங்களாகவும் எவ்விதம் அமைந்திருக்கின்றன என்பதை இத்தொகுதிகளைப் படிக்கும்போது உணர்ந்துகொள்ள முடியும். இவர்களுக்கு இணையாக தமிழில் சொல்லத்தக்க ஒரே எழுத்தாளர் அசோகமித்திரன் மட்டுமே.

Saturday 18 November 2017

வெங்கட் சாமிநாதன் - சில பொழுதுகள் சில நினைவுகள்






கலாப்ரியாவின் பழைய கவிதையொன்றில் படித்த ’மைக்கறை பற்றிக் கவலைப்படாத பேனா ரிப்பேர்க்காரன்’ என்னும் வரி நினைவில் படர்கிறது.    நமது இலக்கியம், பண்பாடு, கலைகள், மொழி ஆகியவை அனைத்தும் மேன்மையுறும் கனவுகளோடும் அக்கறையோடும் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக தன் கருத்துகளை முன்வைத்து வாதாடி வந்த வெங்கட் சாமிநாதனோடு இணைத்துப் பார்க்க முற்றிலும் பொருத்தமான வரியாகவே அதை நினைக்கிறேன். அவர் எதிர்பார்த்ததுபோலவே தமிழ்ச்சூழல் அவரைப் புறக்கணித்தது. கடுமையாக வசைபாடியது. அதனால் அவர் வேதனை அடைந்ததுண்டு. ஆயினும் அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல் தான் நினைத்த உயர்ந்த மதிப்பீடுகளைப்பற்றி இறுதி மூச்சுவரைக்கும் இடைவிடாமல் பேசியும் எழுதியும் வந்தார். அவர் கைகள் மைக்கறையால் அழுக்கடையாத நாளே இல்லை. ஆனால் அவர் அதை ஒரு பிரச்சினையாகக் கருதியதே இல்லை.  பழுது நீக்குபவனின் தீவிரத்தோடும் அக்கறையோடும் இடைவிடாமல் அவர் செயல்பட்டபடியே இருந்தார்.

Tuesday 14 November 2017

கலவரத்தின் பன்முகங்கள்


1998 ஆம் ஆண்டில் கோவை நகரில் மதக்கலவரம் நிகழ்ந்தது. 19 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். அக்கம்பக்கத்தில் இருந்த பல இஸ்லாமியக் குடியிருப்புகள் சிதைக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. பல வீடுகள் எரிக்கப்பட்டன. சிறுகச்சிறுக சேர்த்த செல்வத்தை ஒரு சில மணி நேரங்களில் இழந்து மனிதர்கள் தெருவில் நிற்கும் நிலை உருவானது. அனைத்தும் ஆறா வடுக்களாக மாறி பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்தக் கலவரத்தை களமாகக் கொண்ட பல்வேறு சிறுகதைகளைத் தொகுப்பாக்கியிருக்கிறார் அ.கரீம் என்னும் இளம் எழுத்தாளர்.

வன்மத்தின் கலை



சராசரி மனிதர்களின் எளிய வாழ்க்கையே நவீன இலக்கியத்தின் மையமாக விளங்குகிறது என்பது ஒரு பொதுவான இலக்கணம்.  தொடக்ககாலப் படைப்புகளில் ஏராளமான அன்றாடக்காட்சிகளின் தொகுப்பு தோராயமாக முன்வைக்கப்பட்டன.  மெல்ல மெல்ல அதே அன்றாடக்காட்சிகள் துல்லியத்தை நோக்கி நகர்ந்தன. மாபெரும் தருணங்கள் கதைவெளிக்குள் நிகழ்ந்தன. ஒரு காலகட்டத்தில் எளிய மனிதர்களுக்குள் ஒளிந்து சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகளும் சிறகு விரித்து விண்வெளியில் நீந்திச்செல்லும் பறவைகளும் சித்தரிக்கப்பட்டன. இன்னொரு காலகட்டத்தில் யானைகளின் பிளிறலும் அஞ்சி வளைகளுக்குள் ஓடோடி ஒளிந்துகொள்ளும் எலிகளின் நடுக்கமும் காட்சிப்படுத்தப்பட்டன. கையறுநிலையில் துன்பம் கொண்டு தவிப்பதையும் சின்னஞ்சிறு புன்னகையையே ஒரு துடுப்பாகக் கொண்டு அதே துன்பத்தைக் கடந்துபோகும் அற்புதத்தையும் மற்றொருகாலகட்டம் பதிவுசெய்தது.

Saturday 21 October 2017

பெற்ற மனம்- சிபிச்செல்வனின் "அரும்பின் குறும்பு"



எங்கள் வீட்டருகே நாக்பூரைச் சேர்ந்த ஓர் இளைஞன் குடியிருந்தான். கணிப்பொறித்துறையில் ஓராண்டு விசேஷ பயிற்சிக்காக வந்து தங்கியிருந்தான். அடுத்த ஆண்டிலேயே அவனுக்கு வேலை கிடைத்தது. அதற்கடுத்த ஆண்டில் அவன் திருமணம் செய்துகொண்டான். தன் அறைக்குப் பக்கத்திலேயே அதே வீட்டு உரிமையாளருக்குச் சொந்தமான பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டான். அடுத்த ஆண்டில் அவர்கள் வீட்டில் குழந்தையின் மழலைச் சத்தம் கேட்டது. இந்திமொழியில் அவர்கள் அக்குழந்தையைக் கொஞ்சிக்கொஞ்சிப் பாடுவதையும் பேசுவதையும் மகிழ்ச்சியோடு கேட்டுக்கொண்டிருப்பேன். தளர்நடைபோட்டு அக்குழந்தை வாசலுக்கு வெளியே வரத் தொடங்கியதும் காலைநடைக்கு அக்குழந்தையையும் ஒரு தள்ளுவண்டியில் உட்காரவைத்துத் தள்ளிக்கொண்டு வருவான் அந்த இளைஞன். அந்தக் குழந்தைக்கு சோறு ஊட்ட கிட்டத்தட்ட ஒவ்வொரு வேளையிலும் ஒரு மணிநேரம் பிடிக்கும். சலிப்பே இல்லாமல் அவர்கள் இருவரும் அக்குழந்தையின் பின்னாலேயே ஓடிக்கொண்டிருப்பார்கள்.

கற்பனையும் எதார்த்தமும்- நகுலனின் கவிதை


ஒரு விடுமுறை நாளில் பூங்காவில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தேன். செவ்வக வடிவில் பூங்காவைச் சுற்றி நடையாளர்களுக்காகவென ஏற்படுத்தப்பட்டிருந்த பாதையொன்றிருந்ததுமழைக்காலத்தில் அடிக்கடி நீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறும்போது பாதையில் யாராலும் நடக்கமுடிவதில்லைஏராளமான பேர்கள் ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்வதுண்டு. திரும்பிச் சென்ற யாரோ ஒருவர் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் அன்று பாதை சீர்ப்படுத்தப்பட்டு சதுரக்கற்கள் பதிக்கும் வேலை மும்முரமாக நடந்துகொண்டிருந்ததுதொழிலாளர்களின் குழந்தைகள் அருகில் கொட்டப்பட்டிருந்த மணல்குவியலில் விளையாடிக்கொண்டிருந்தன

Sunday 8 October 2017

ஞானியின் சொல்


அன்புள்ள நண்பர்களே,

அனைவருக்கும் வணக்கம். ஒரு கன்னடக்கவிதையோடு இந்த உரையைத் தொடங்குகிறேன். வேகவேகமாக ஒருவரைத் தேடிக்கொண்டு ஓட்டமும் நடையுமாகச் செல்லும் ஒரு பெண்ணை ஒருகணம் கற்பனை செய்துகொள்ளுங்கள். தேடல் ஒன்றையே அவள் இலக்காகக் கொண்டிருக்கிறாள். அவள் மனம் முழுக்க அப்புள்ளியிலேயே குவிந்திருக்கிறது. நாலடி எடுத்துவைப்பதற்குள் அவள் முன் பசி எழுந்துவந்து அவளைத் தடுத்து நிறுத்துகிறது. அந்தப் பசியிடம் அவள் சற்றுப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறாள். இன்னும் சில அடிகள் கடப்பதற்குள் தாகம் அவளை வாட்டத் தொடங்குகிறது. அவள் தாகத்திடமும் பொறுத்துக்கொள்ளும்படி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறாள். மேலும் சில அடிகள் எடுத்துவைப்பதற்குள் உறக்கம் அவள் முன்னால் வந்து நின்று தடுக்கிறது. அவள் அதனிடமும் தன் இலக்கைப்பற்றி எடுத்துச் சொல்லி கெஞ்சி ஒதுக்கிவிட்டு பரபரப்பாக நடந்துபோகத் தொடங்குகிறாள்.

கதவு திறந்தே இருக்கிறது -அழகிய சொல்லோவியங்கள்


கர்நாடகத்தின் ஹோஸ்பெட் அழகான ஊர். தண்ணீருக்குப் பஞ்சமில்லாத ஊர். எங்கெங்கும் பச்சைப்பசேலென வயல்வெளிகளும். தோப்புகளும்  நிறைந்திருக்கும். துங்கபத்திரை அணைக்கட்டிலிருந்து பிரிந்து செல்லும் கால்வாய்கள் ஊர் எல்லையிலேயே இருபெரும் பிரிவுகளாக இரு திசைகளில் சுழித்தோடும். பெரிய கால்வாயிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சின்னஞ்சிறு கால்வாய்கள் உடல்நரம்புகளென ஊரெங்கும் புகுந்தோடி எங்கோ ஒரு புள்ளியில் மீண்டும் பெரிய கால்வாயோடு இணைந்துவிடும்படி கட்டமைக்கப்பட்டிருந்தன. நகரமக்களின் நீர்த்தேவையை அந்தச் சிறுகால்வாய்கள் தீர்த்துவைத்தன. குளிக்க, துணிதுவைக்க, கால்நடைகளை நீராட்ட என எல்லாத் திசைகளிலும் தனித்தனி துறைகள் உண்டு. அவை மேலும் சிறுசிறு பிரிவுகளாகப் பிரிந்தோடி வயல்வெளிகளுக்கும் தோப்புக்கும் பாய்ந்து செல்லும். கால்வாய் ஓரமாக அமைதி தவழும் ஓரிடத்தில் நாங்கள் கூடாரமடித்துத் தங்கியிருந்தோம்.

Tuesday 26 September 2017

கசப்பு என்னும் பாசி - சண்முக சுப்பையாவின் "உலகம்"


மகிழ்ச்சி என்பது மனம்சார்ந்ததா அல்லது வசதிகள்சார்ந்ததா என்பது முக்கியமான கேள்விவசதிகள் மிகுந்த இருக்கை, படுக்கை, இருப்பிடம், தோட்டம், வாகனங்கள், மாளிகைகள் என எதை வேண்டுமானாலும் விலைகொடுத்து வாங்கிவிடமுடியும். ஆனால் மகிழ்ச்சியை எந்த விலை கொடுத்தும் வாங்கமுடியாது. மெத்தையைத்தான் வாங்கமுடியும், தூக்கத்தை எப்படி விலைகொடுத்து வாங்கமுடியும்? வசதிக்குறைவு என்பது சிற்சில வருத்தங்களுக்கும் சிரமங்களுக்கும் காரணமாக இருக்கலாம்ஆனால் ஒருபோதும் அது மகிழ்ச்சி இல்லாமல்போவதற்கான காரணமாக இருக்கமுடியாது

நிம்மதியைக் குலைக்கும் அமைதி - மு.சுயம்புலிங்கத்தின் "தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்"



சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களின் மக்கள்தொகையில் முப்பது விழுக்காட்டுக்கும்மேல் பாதையோரங்களில் வசிப்பவர்கள்யாருக்கும் முறையான தங்குமிடம் இல்லை. பலருக்கு உடல்மறைக்கும் துணிகள் இல்லை. பசிவேளைக்கு போதுமான உணவில்லை. கிடைக்கும்போது சாப்பிட்டு, கிடைக்கிற கிழிசலை அணிந்து, கிடைக்கிற இடத்தில் தூங்கி நாட்களை ஓட்டுகிறார்கள். கிடைக்கிற வேலைகளைச் செய்கிறார்கள். கிடைக்கிற பணத்தை விருப்பம்போல செலவு செய்கிறார்கள். யாருக்கும் எதற்கும் கட்டுப்படாத ஒரு வாழ்க்கைமுறை. யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்ப்பதற்கும் வழியில்லாத வாழ்க்கைமுறை என்றும் சொல்லவேண்டும்.

Tuesday 12 September 2017

காலம்காலமாக நீளும் கனவுகள்- சூத்ரதாரியின் "நடன மகளுக்கு"



கர்நாடகத்தைச் சேர்ந்த  இந்துஸ்தானிக்கலைஞர் ஹானகல் கங்குபாய் சமீபத்தில் மறைந்ததையொட்டி எல்லா இதழ்களிலும் அவரைப்பற்றிய அஞ்சலிக்கட்டுரைகள் வெளிவந்தன. சில கட்டுரைகள் அவருக்கும் அவருடைய தாயாருக்கும் இருந்த நெருக்கமான உறவைச் சுட்டிக்காட்டியிருந்தன. கங்குபாய் சிறுமியாக இருந்தபோதே இசையில் ஆர்வமுடன் விளங்கினார். கங்குபாயின் தாயார் மிகச்சிறந்த கர்நாடக இசைக்கலைஞர். தாயின் செல்வாக்கு சிறுமியின் உள்ளத்தில் படிந்திருக்கக்கூடும்அதனால் சின்ன வயதிலேயே அவரும் இசையில் ஆர்வம் உள்ளவராக இருந்தார். மகளுடைய இசையார்வம் தாய்க்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது. கர்நாடக இசையின் பாதையில் தன்னையும் கடந்து மகள் செல்லவேண்டும் என்ற கனவு அவருக்குள் இருந்தது.

வாழ்வின் தடங்கள் - சித்தலிங்கையாவின் தன்வரலாறு



வாழ்வின் தடங்கள் சித்தலிங்கையாவுடைய தன்வரலாற்று நூலின் இரண்டாவது பகுதி.  இதன் முதல் பகுதி ஊரும் சேரியும் என்னும் தலைப்பில் வெளிவந்தது. இரண்டாவது பகுதியான நூலை மொழிபெயர்த்து முடித்ததும் அதன் கையெழுத்துப் பிரதியை எனக்கு நெருக்கமான நண்பரிடம் படித்துப் பார்க்கக் கொடுத்திருந்தேன். 

Sunday 3 September 2017

கதவு திறந்தே இருக்கிறது – ஒரு மானுடப்பறவையின் பயணம்


20.06.1987 அன்று எங்களுக்கு மகன் பிறந்தான்.  அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக என் தோள்பை நிறைய சாக்லெட்டுகளை எடுத்துச் சென்று மருத்துவமனைக் கூடத்தில் இருந்தவர்கள் அனைவருக்கும் வழங்கினேன். அது ஒரு கொண்டாட்டமான கணம். என் உடலில் முளைத்த ரகசிய இறக்கைகளை அசைத்தசைத்து திக்குத்திசை புரியாமல் பறந்தபடி இருந்தேன். ஒரு கூடத்தில் தங்கியிருந்த அனைவருக்கும் கொடுத்த பிறகு, அடுத்தடுத்த கூடங்களில் இருப்பவர்களுக்கும் கொடுத்தால் என்னவென்று தோன்றியது. மறுகணமே அங்கே நுழைந்து எல்லோருக்கும் சாக்லெட்டுகளை வழங்கிவிட்டுத் திரும்பினேன். இப்படியே நடந்து நடந்து மருத்துவர்கள் அறைவரைக்கும் சென்றுவிட்டேன். எல்லா மருத்துவர்களும் அங்கே இருந்தார்கள். ஆனால் என் மனைவிக்குப் பேறு பார்த்த மருத்துவர் மட்டும் காணவில்லை. இருந்தவர்கள் அனைவருமே வாழ்த்துச் சொல்லோடும் புன்னகையோடும் சாக்லெட்டுகளை எடுத்துக்கொண்டார்கள்.

உருமாற்றத்தின் ரகசியம்- சுகுமாரனின் "அறைவனம்"



பிழைப்புதேடி எங்கள் ஊருக்குள் வருகிறவர்கள் எல்லாம் ஏரிக்கரைக்குப் பக்கத்தில் இருந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் கூடாரமடித்து சில நாட்கள் தங்கிச்செல்வதை என் இளமை நாட்களில் பார்த்திருக்கிறேன். ஒன்றிரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்த சுவடு தெரியாமல் புறப்பட்டுப் போய்விடுவார்கள்

அன்பைப் பகிர்ந்தளிக்கும் அன்னை- சல்மாவின் "இருட்தேர்"


உன் மகன் எங்கே என்று கேட்ட ஒருவனிடம்  அவன் சிங்கம்போல வீரத்துடன் போரிட யுத்தகளத்துக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகவும் அவனைப் பெற்றெடுத்த தன் வயிறு, சிங்கம் தங்கியிருந்து கிளம்பிச் சென்ற குகையைப்போல இருப்பதாகவும் ஒரு தாய் சொல்வதாக புறநானூற்றுப் பாடலொன்றில் ஒரு காட்சி இடம்பெறுகிறது. பெற்றெடுப்பதும் சான்றோனாக்குவதும் வேல்வடித்துக்கொடுப்பதும் என ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கடமையை வரையறுத்த சமூகம் உடல்வலிமையும் மனவலிமையும் மிகுந்த இளைஞர்களுக்கு போரிடுவதை கடமையாக வரையறுத்தது

Wednesday 23 August 2017

என்றென்றும் மாறாத பொருத்தமின்மை- மோகனரங்கனின் "கைக்கிளை"


வித்யாரண்யபுர என்பது பெங்களூர் மாநகரத்தின் ஒரு நுனி. ஜெயநகர் என்பது இன்னொரு நுனி. கிட்டத்தட்ட முப்பது கிலோமீட்டர் இடைவெளி. நகரப் பேருந்தில் பிரயாணக்கணக்கு ஏறத்தாழ இரண்டரைமணிநேரம். அலுவலகத்துக்கு வந்து செல்வதிலேயே ஒரு நாளில் ஐந்துமணிநேரம் செலவாகிவிடும். என் நண்பரொருவர் தினமும் அப்படித்தான் அலுப்பில்லாமல் வந்துகொண்டிருந்தார். என்னைவிட வயதில் இளையவர். "அலுவலகத்துக்குப் பக்கத்திலேயே ஏதாவது வீடு பார்க்கக்கூடாதா?" என்று ஒருநாள் அவரிடம் கேட்டேன். "பாக்கலாம், ஆனா அவங்க வரமாட்டாங்க..." என்று புன்னகைத்தார். "அவங்க" என்று அவர் சொன்னது அவர் மனைவியையும் பிள்ளையையும். ஏன் என்று கேட்டேன். "அங்க அவுங்க அம்மாஅப்பா வீடு பக்கத்தலயே இருக்குது, அதான்" என்றார். 

கிடைக்காமல் போவதும் கிடைப்பதும்- ராஜ சுந்தரராஜனின் "கொடுப்பினை"


எங்கள் கிராமத்தில் ஆடி மாதத்தில் அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் தெருக்கூத்துக்கு ஏற்பாடு செய்வார்கள்எல்லாமே பாரதக்கதைகளை ஒட்டியதாகவே இருக்கும்கர்ணமோட்சம், துரியோதனன் கர்வபங்கம், வீர அபிமன்யு, பதினெட்டாம் நாள் போர் என்ற தலைப்புகளில் கூத்துகள் நடக்கும். பீமன் பாத்திரமும் துரியோதனன் பாத்திரமும் களத்தில் இறங்கியதுமே அவர்கள் மோதிக்கொள்ள இருக்கிற இறுதிக்காட்சிக்காக மனம் ஏங்கத்தொடங்கிவிடும். அடவு கட்டி ஆடி, அங்குமிங்கும் தாவிக் குதித்து, இருவரும் ஆக்ரோஷத்தோடு மோதிக்கொள்கிற காட்சி  மனத்தைப் பதறவைத்துவிடும். அந்த இறுதிக்காட்சியில் மனம் அடைகிற பரபரப்பையும் பதற்றத்தையும் உள்ளூர அனுபவிப்பதற்காகவே இரவெல்லாம் பல மணிநேரம் அந்தக் கூத்தைக் கண்விழித்துப் பார்த்திருப்பேன்

Monday 14 August 2017

கதவு திறந்தே இருக்கிறது - ஐந்நூறு வண்டிகளின் சத்தம்


எண்பதுகளின் இறுதியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் வீக் எண்ட் என்னும் தலைப்பில் வார இணைப்பொன்றை வெளியிட்டு வந்தது. தினமணியின் சார்பில் வெளிவந்துகொண்டிருந்த ’தமிழ்மணி’ போல, தமிழலக்கியத்தைப்பற்றிய தகவல்களையும் ஒரு தமிழ்ச்சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் கொண்டதாக அந்த வாராந்திர இணைப்பு கட்டமைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பொறுப்பாசிரியராக இருந்த விஸ்வநாதன் என்பவர் ’வீக் எண்ட் விஸ்வநாதன்’ என்று அடைமொழியோடு அழைக்கப்படும் அளவுக்கு பிரபலமாக இருந்தார். 

கட்டுப்பாடும் சுதந்திரமும்- சி.மணியின் ’பிரிவு’

சி.மணியின் கவிதைகளை நான் விரும்பியதற்கு முதல் காரணம் அவர் பின்பற்றிய வடிவம். யாப்பின் கட்டுப்பாட்டையும் வடிவத்தின் சுதந்திரத்தையும் ஒரே நேரத்தில் அவருடைய கவிதைகள் முன்வைப்பவை. யாப்பின் காலத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமான கவிதைகள் வெளிவரத் தொடங்கிய கட்டத்தில் இரண்டிலுமுள்ள வலிமையான அம்சங்களை சமவிகிதத்தில் இணைத்த அவருடைய முயற்சி பலவகைகளில் முக்கியமானது. தன்னெழுச்சியாக அரும்பும் கவிதைக்கான புதிய வடிவத்தைத் தேடியடைகிற ஆவலுக்கான காரணம் யாப்பு தெரியாததால் அல்ல, மொழியின் செழுமையை வளப்படுத்துகிற உத்வேகம் என்பதைப் புலப்படுத்த இந்த வடிவத்தை அவர் மேற்கொண்டிருக்கக்கூடும்.  பல வகைகளில் பிற்காலத்தில் ஞானக்கூத்தன் கையாண்ட கவிதைகளின் வடிவத்துக்கு சி.மணியின் கவிதைவடிவத்தை முன்னோடித்தன்மை உடையதாகக் கருத இடமுண்டு.

காந்தமும் இரும்புத்துகளும்- மலைச்சாமியின் "வியூகம்"


எப்போதோ படித்த ஒரு நாட்டுப்புறக்கதை நினைவுக்கு வருகிறது.  ஒரு குகைப்பகுதியில் வசிக்கிற துறவியை இளைஞரொருவர் சந்திக்க வருகிறார். ஞானத்தைப்பற்றியும் அமைதியைப்பற்றியும் அவருக்கு ஏராளமான ஐயங்கள். அடுத்தடுத்து பல கேள்விகளை மணிக்கணக்கில் துறவியிடம் கேட்டு, அவர் சொல்லும் பதில்களைக் கவனமுடன் உள்வாங்கிக்கொள்கிறார். ஆனாலும் அமைதியை எப்படி அடைவது என்னும் கேள்வி அவரை இடைவிடாமல் குழப்புகிறது. நாட்டிலேயே மிகச்சிறந்த நான்கு கல்விநிலையங்களின் பெயர்களைச் சொல்லி அங்கே சிற்சில ஆண்டுகள் பயின்றுவிட்டு வரும்படி சொல்கிறார் துறவி.

Wednesday 2 August 2017

இருப்பும் இயக்கமும்- காசியபனின் "மாடியில்"



'வழிமயக்கம்' என்ற தலைப்பில் பாலகுமாரன் ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார். அடுக்கப்பட்ட வாழைத்தார்களோடு சாலைவழியாக வண்டியை இழுத்துக்கொண்டு செல்வார் ஒரு வண்டிக்காரர். அதே சாலையில் ஓரமாக வேறொருவர் நடந்து செல்வார். அவருக்கும் வண்டிக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. இருவருமே வெவ்வேறு நோக்கங்களோடு தனித்தனியாகச் செல்கிறவர்கள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதுகூட இல்லை.  எதிர்பாராதவிதமாக சந்திக்கிற நண்பரொருவர் பார்வையில் வாழைத்தார்களை வாங்கி வண்டியிலேற்றிவிட்டு கூடவே இவரும் நடந்துசெல்வதுபோலத் தோன்றுகிறது.  என்ன விலைக்கு வாங்கினீர்கள், எங்கே வாங்கினீர்கள் என்றெல்லாம் கேட்கத் தொடங்குகிறார்.  நடந்துசெல்லும் நண்பர் குழப்பமும் கூச்சமுமடைகிறார். அது தன்னுடையதில்லை என்று சொல்கிறார். 

முடிவில்லாத பயணம்- கால சுப்ரமணியமின் "மேலே சில பறவைகள்"



மனிதர்களை இருவகையாகப் பிரிக்கலாம்.  தனக்கு நேரும் சின்னச்சின்ன கவலைகளையும் துன்பங்களையும்கூட மிகப்பெரிதானவையாக நினைத்து மீளாத துயரத்தில் ஆழ்ந்து திகைத்துச் சோர்வடைபவர்கள் ஒருவகை.  கடுமையான துன்பங்களால் சூழ்ந்தபோதிலும் சிறுகச்சிறுக அவற்றிலிருந்து விடுபட்டு இயல்பான நிலைக்குத் திரும்பி தன்னைத்தானே தேற்றிக்கொண்டு தினசரி வாழ்வைத் தொடங்குகிறவர்கள் இன்னொருவகை. ஒருவர் இயற்கையிலிருந்தும் காலநகர்விலிருந்தும் கிடைக்கக்கூடிய ஆறுதலையும் மருந்தையும் பெற்று தன் மனப்புண்ணை ஆற்றிக்கொள்கிறார். இன்னொருவர் அந்த ஆறுதலையும் மருந்தையும் ஏற்றுக்கொள்ளும் ஊக்கமில்லாத அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிடுகிறார். மனிதர்கள்மட்டுமே இருவகையாகப் பிளவுண்டு கிடக்கிறார்களே தவிர, இயற்கையும் காலமும் எவ்விதமான ஏற்றத்தாழ்வும் இல்லாமல் தன் கருணையையும் ஆறுதலையும் ஒரே அளவிலேயே அனைவருக்கும் வழங்குகின்றன. அவற்றின் ஊற்றுக்கண்கள் ஒருபோதும் வற்றாதவை.

Monday 24 July 2017

இயற்கை என்னும் பேராசான்- க.நா.சு.வின் "கஞ்சிங் ஜங்கா"


தொடக்கப்பள்ளியில் நான் படித்த காலத்தில் எங்கள் பள்ளி ஆசிரியை ஒவ்வொரு நாளும் ஒரு கதையைச் சொல்வார். கதைநேரம் என்கிற பெயரில் ஒரு பாடப்பிரிவு அப்போது இருந்தது. எல்லாக் கதைகளையும் எங்கள் ஆசிரியை எப்போதும் ஒரு நீதிவாக்கியத்தில் கொண்டுவந்துதான் முடிப்பார். குறைவான நீருள்ள குடத்துக்குள் சின்னச்சின்ன கூழாங்கற்களைக் கொண்டுவந்து போட்டுவிட்டு நீர்மட்டம் உயர்ந்துவந்ததும் தண்ணீர் அருந்தி தன் வேட்கையைத் தணித்துக்கொண்ட காக்கையின் கதையை விரிவாகச் சொல்லிமுடிக்கும்போது முயற்சியால் முடியாதது ஒன்றும் இல்லை என்றொரு வாக்கியத்தையும் சேர்த்துச் சொல்லிமுடிப்பார்.

கலைந்துபோகும் கனவுச்சித்திரம்- ந.ஜயபாஸ்கரனின் "பித்தளை நாட்கள்"



உருளும் பாறைகளில் பாசி பிடிப்பதில்லை என்பது பழமொழி. குளத்தோரத்திலோ அல்லது ஏரிக்கரையிலோ ஒரே இடத்தில் விழுந்து கிடக்கிற பாறையைச் சுற்றி பாசி படர்ந்துவிடுகிறது. மனிதவாழ்விலும் இப்படி நேர்வதுண்டு. பல ஊர்களைச் சுற்றி பல மனிதர்களைச் சந்தித்து பலவிதமான அனுபவங்களுக்கு ஆளானவர்கள் நல்லதுகெட்டதுபற்றியும் வெற்றிதோல்விபற்றியும் பல விஷயங்களைத் தெரிந்துவைத்திருப்பார்கள்.  வாழ்வின் மேடுபள்ளங்களைப்பற்றிய தௌiவை அவர்களுடைய அனுபவங்கள் அவர்களுக்குக் கற்றுத்தந்திருக்கும். கல்வியறிவு இல்லையென்றாலும் அனுபவ அறிவு அவர்களுக்கு உற்ற துணையாக இருக்கும். எது மன்னிக்கக்கூடிய தவறு, எது மன்னிப்புக்கு அப்பாற்பட்ட தவறு என்பதை பின்னணிசார்ந்து ஆராய்ந்து அவர்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள். உலக அனுபவமே இல்லாமல் பிறந்த இடத்திலேயே ஆண்டுக்கணக்காக வளர்ந்து, வாழ்ந்து, உழைத்து மறைந்துபோகிறவர்களும் இருப்பார்கள். வாழ்க்கையில் இது ஒரு பெரிய தேக்கம். கல்வியறிவு அல்லது கேட்டலறிவின் துணையாக, இத்தேக்கத்தை உடைத்து தன் மனத்தை விரிவாக்கிக்கொள்கிறவர்களும் உண்டு. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழ்கிறவர்களும் உண்டு.

ஒருவருடைய ஆட்சியில் மக்களனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தால் அந்த ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்று அழைப்பதுண்டு. அசோகர் ஆட்சிக்காலத்தைப் பொற்காலம் என்று வரலாறு பதிவுசெய்து வைத்திருக்கிறது. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தை தஞ்சைத் தரணியின் பொற்காலம் என்று சொல்வதுண்டு. தனிப்பட்ட மனிதரொருவர் வாழ்வில் இளமைக்காலம் என்பதே பொற்காலமாகும். ஏழையாக இருந்தாலும் செல்வந்தராக இருந்தாலும் இளமை நாட்களின் குதூகலத்தக்கு ஈடுஇணையாக எதையும் சொல்லவியலாது. அதனாலேயே ஒருவருடைய இளமைநாட்கள் பொன்னான நாட்கள் என்று அழைக்கப்படுகின்றன.  மகிழ்ச்சிக்குப் பதிலாக அலுப்பும் சலிப்பும் மிகுந்த நாட்களை அழைக்க தனியாக ஒரு சொல்லில்லை. பொன்னுக்கு எதிர்ப்பதமாக பித்தளையைச் சொல்வதைப்போல, பொன்னான நாட்களுக்கு எதிர்ப்பதமாக பித்தளை நாட்கள் என்றொரு புத்தம்புதிய சொல்லை உருவாக்கிச் சொல்லலாம்.

மெல்லமெல்ல நிறம் மங்கி, களிம்பேறி அழுக்குப்பிடித்து பார்ப்பவர்களுக்கு அருவருப்பூட்டுகிற பித்தளையைப்போல, ஆனந்தத்தின் சுவடுகள் மங்கி, அலுப்பும் சலிப்பும் படர்ந்து, மனச்சுமையோடு ஒடுங்கி உட்காரவைத்துவிடும் நாட்கள் பித்தளைநாட்களாகின்றன. உலகில் எல்லாருடைய வாழ்விலும் பொன்னான நாட்களும் உண்டு. பித்தளை நாட்களும் உண்டு. விகித அடிப்படையில் வேண்டுமானால் மாற்றமிருக்கலாம். ஆனால் இரண்டும் கலந்ததாகவே வாழ்க்கை இருக்கிறது. அதே சமயத்தில் பொன்னுக்கும் பித்தளைக்கும் ஒரே வரையறை கிடையாது. ஒருவருக்கு பொன்னெனத் தோன்றுவது மற்றொருவருக்கு பித்தளையாகக் காட்சியளிக்கலாம். ஒருவருடைய பார்வையைப்பொறுத்து அது மாறக்கூடும். இமயமலை வாசம் சிலருடைய வாழ்வில் பொன்னான காலமாக இருக்கலாம். வேறு சிலருடைய வாழ்வில் விரைவில் கழித்துவிட்டுத் திரும்பவேண்டிய வெறும் வேலை நாட்களாக இருக்கலாம். கிணற்றுத்தவளை வாழ்க்கை சிலருக்கு பொன்னுலகமாக இருக்கலாம். வேறு சிலருக்கு அதுவே உள்ளிடற்ற வெறுமைபடிந்த உலகமாக இருக்கலாம். பொன்னை மண்ணாகவும் மண்ணைப் பொன்னாகவும் பார்க்கும் யோகியர்களும் இவ்வுலகில் உண்டு.

ந.ஜயபாஸ்கரன் தன் கவிதையில் ஒரு கடைத்தெருக்காட்சியைக் காட்டுகிறார். அதிலும் குறிப்பாக, ஒரு பாத்திரக் கடைக்குள் கல்லாப்பெட்டிக்கும் தராசுக்கும் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற ஒருவரைக் காட்டுகிறார். இதுவரை தான் வாழ்ந்து வந்த நாட்களையெல்லாம் ஒரே கணத்தில் பித்தளை நாட்கள் என்று பட்டப்பெயரிட்டு அழைத்து தன்னைத்தானே கிண்டல் செய்துகொள்கிறது அப்பாத்திரம். திடீரென்று அப்படி ஒரு ஞானம் அப்பாத்திரத்துக்கு ஒருநாள் பிறக்கிறது. அதற்கு முதல்நாள்வரை அப்படித் தோன்றவில்லை. கடை வணிகமும் வேடிக்கையும் பொன்னான நாட்களாகவே தோற்றம் தருகின்றன. குறிப்பிட்ட நாளன்று அவன் கடைக்கு வந்து நீளமான குத்துவிளக்கு கேட்டுவிட்டு இல்லையென்ற பதிலைப் பெற்றுக்கொண்டுபோகிறாள் ஒரு கிராமத்துப் பெண். அவள் முகஅடையாளத்தைப் பதித்துக்கொள்ளாத அவன் மனம் அவள் முலைஅடையாளத்தைப் பதித்துவைத்துக்கொண்டு தவியாய்த் தவிக்கிறது.  அங்குதான் பிரச்சனை வேர்கொள்கிறது. கனவிலும் மனஉலகிலும் அதன் சித்திரம் எழுந்துஎழுந்து அவனை நிலைகுலையவைக்கிறது. அதனால் அவன் நினைவுகள் பிறழ்ச்சி கொள்கின்றன. யார் என்ன கொடுக்கவேண்டும், யாருக்கு என்ன தரவேண்டும் என்பதுபோன்ற விவகாரங்கள் எல்லாமே குழம்பி மாற்றமடைகின்றன. அவன் அவனாகவே இல்லாமல் தடுமாறுகின்றான். தன் கனவுச்சித்திரத்தை மீட்டெடுத்துமீட்டெத்து தன் நாட்களை பொன்னான நாட்களாக மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு இருக்கிறது.  ஆனால் கடைத்தெருவில் சமீப காலத்தில் நடந்த ஒரு வாள்சம்பவமொன்று நினைவிலெழுந்து அவன் கனவுச்சித்திரத்தைக் கிழித்துவிடுகிறது.  எதார்த்த அச்சத்தைப் புறக்கணித்தால் நேரக்கூடிய பின்விளைவுகளை நினைத்து தன் சித்திரத்தை வேகவேகமாகக் கலைத்துவிடுகிறது மனம்.  கனவோடும் இருக்கமுடியவில்லை.  கனவில்லாமலும் இருக்கமுடியவில்லை. கசப்பும் சலிப்பும் மிகுந்த அந்த நாளை பித்தளைநாள் என்று பெயர்சூட்டி ஒதுக்குகிறது.

இக்கவிதையில் இடக்குறிப்புகளையும் மனக்குறிப்புகளையும் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் ஜெயபாஸ்கரன். பித்தளைநாட்கள் என்கிற சொல்லாட்சி கவிதையை மறக்கமுடியாத அனுபவமாக்குகிறது.

*

பித்தளை நாட்கள்

ந.ஜயபாஸ்கரன்

ஞாபகக் கண்ணிகள்
சிதைந்து வருகின்றன
சிறுகச்சிறுக

சமுத்திரம் பாக்கி
இருபத்தாறு ரூபாய் எண்பத்தாறு காசா

கட்கரை நாடார்
கடைந்து தரவேண்டிய
பானை எடை
நூற்றுப் பதினான்கு கிலோவா
நூற்றுப் பதினாறு கிலோவா

தெளிவாகவில்லை

சிட்டையின்
இருப்புப்புள்ளி
பிசகிவிடுகிறது
அடிக்கடி

நிலுவையாகாத
பற்றுவழிக் கணக்கு எண்கள்
கலங்குகின்றன
கனவினுள்

லாங்காக
விளக்குக் கேட்ட
பட்டிக்காட்டுப் பெண்ணின்
முகம்மறந்து
முலை சிதறுகிறது
கனவில்

அங்கம் வெட்டுண்ட
பாணனாய்த்
துடிக்கிறது
பிறழ்ந்த பிரக்ஞை

கடைவீதியின் மூச்சை
அவ்வப்போது
நிறுத்திய
வளர்ந்தான் பாண்டியின் வாள்
துரு வளர்ந்து  
கனவு கிழிக்கத்
தவிக்கிறது

களிம்பேறிய பித்தளைநாட்களின்
கசப்புமட்டும்
இறங்குகிறது


*

அறுபதுகளில் எழுதத் தொடங்கிய கவிஞர்களில் ஒருவர் ந.ஜயபாஸ்கரன். இவருடைய கவிதைகள் மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அர்த்தநாரி, அவன் , அவள் என்பவை தொகுதிகளின் பெயர்கள்.