Home

Wednesday 23 August 2017

கிடைக்காமல் போவதும் கிடைப்பதும்- ராஜ சுந்தரராஜனின் "கொடுப்பினை"


எங்கள் கிராமத்தில் ஆடி மாதத்தில் அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் தெருக்கூத்துக்கு ஏற்பாடு செய்வார்கள்எல்லாமே பாரதக்கதைகளை ஒட்டியதாகவே இருக்கும்கர்ணமோட்சம், துரியோதனன் கர்வபங்கம், வீர அபிமன்யு, பதினெட்டாம் நாள் போர் என்ற தலைப்புகளில் கூத்துகள் நடக்கும். பீமன் பாத்திரமும் துரியோதனன் பாத்திரமும் களத்தில் இறங்கியதுமே அவர்கள் மோதிக்கொள்ள இருக்கிற இறுதிக்காட்சிக்காக மனம் ஏங்கத்தொடங்கிவிடும். அடவு கட்டி ஆடி, அங்குமிங்கும் தாவிக் குதித்து, இருவரும் ஆக்ரோஷத்தோடு மோதிக்கொள்கிற காட்சி  மனத்தைப் பதறவைத்துவிடும். அந்த இறுதிக்காட்சியில் மனம் அடைகிற பரபரப்பையும் பதற்றத்தையும் உள்ளூர அனுபவிப்பதற்காகவே இரவெல்லாம் பல மணிநேரம் அந்தக் கூத்தைக் கண்விழித்துப் பார்த்திருப்பேன்


ஆனால் ஆசைதீரப் பார்fத்தது இரண்டுமூன்று தடவைகள்மட்டுமே. பெரும்பாலான சமயங்களில் கண்விழிக்க முடியாமல் உறக்கத்தில் ஆழ்ந்துவிடுவேன். படபடவென்று மேளங்கள் ஒலிக்கிற ஓசையைக் கேட்டபிறகுதான் விழிப்பு வரும். அது சண்டையெல்லாம் முடிந்து தர்மருக்கு முடிசூட்டுகிற சமயமாக இருக்கும். "ராத்திரிபூரா முழிச்சிருந்து என்ன பிரயோஜனம் போ, முக்கியமான சமயத்துல கோட்ட உட்டுட்டியே" என்று நண்பர்கள் சிரித்து ஏளனம் செய்வார்கள். அமைதியாக இருப்பதைப் பார்த்ததும் "ஆசப்பட்டா மட்டும் போதாதுடா ராஜா, அதுக்கெல்லாம் ஒரு யோகம் வேணும்.." என்று  அந்தக் கிண்டல் மேலும் வலுக்கும்.

நாங்கள் வசித்து வந்த தெருக்கோடியில் ஒரு கால்நடை மருத்துவமனையை அந்தக் காலத்தில்  கட்டினார்கள். அதன் திறப்புவிழாவுக்கு முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்களை அழைத்திருந்தார்கள். அக்கம்பக்கத்தில் இருந்த பதினேழு பதினெட்டு கிராமங்களுக்கு நடுவில் எங்கள் கிராமத்தில்மட்டுமே மனிதர்களுக்கான மருத்துவமனையும் கால்நடைகளுக்கான மருத்துவமனையும் அறுபதுகளிலேயே இருந்தன. அண்ணாதுரையைப் பார்க்க பதினேழு கிராமத்து மக்களும் தெருவையே அடைத்துக்கொண்டு நின்றிருந்தார்கள். எங்கள் வீட்டுவழியாகத்தான் கார்கள் செல்லவேண்டும். அண்ணாதுரை கண்டிப்பாக கார் ஜன்னல் வழியாக கையை அசைப்பார், அப்போது அவரைக் காட்டுவதாக எங்கள் அம்மா சொல்லியிருந்தார். நானும் காத்திருந்தேன். காத்திருந்துகாத்திருந்து சலித்து ஏதோ ஒரு கணத்தில் தூங்கிவிட்டேன். அந்தச் சமயத்தில் அண்ணாதுரையின் கார் கடந்துபோய்விட்டது. "இத்தன பேருங்களால பாக்கமுடிஞ்சத ஒன்னால பாக்கமுடியலை, ஒனக்கு குடுத்துவச்சது அவ்வளவுதான் போ.." என்று கிண்டல் செய்தார்கள்.

"வண்டாமரையின் உடன்பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்" என்பது பழைய செய்யுளொன்றின் வாசகம். எங்கிருந்தோ பறந்து வந்து அமர்கிற தேனீக்களுக்குத்தான் மலர்களின் அழகில் லயிக்கிற வாய்ப்பும் தேனை உறிஞ்சியுண்ணும் வாய்ப்பும் கிட்டுகின்றன. அரிய வாய்ப்புகள் காத்திருப்பவர்களை நெருங்குவதில்லை. தற்செயலாக வந்து நிற்பவர்களுக்கு தாமாகவே அமைந்துபோகின்றன. எவ்வளவுதான் தட்டினாலும் சிலருக்கு கதவுகள் திறப்பதே இல்லை. போகிறபோக்கில் ஒரு தட்டுதட்டினாலே சிலருக்கு கதவுகள் தாராளமாக திறந்துவிடுகின்றன. சிலர் அதை வரம் என்கிறார்கள். சிலர் அதிருஷ்டம் என்கிறார்கள். சிலர் தற்செயல் என்கிறார்கள். ராஜ சுந்தரராஜன் ஒரு கவிதையில் அதை கொடுப்பினை என்று குறிப்பிடுகிறார்.

கவிதையில் ஒரு தரிசனக்காட்சி முன்வைக்கப்படுகிறது. சூரியோதயக்காட்சிதான் அந்தத் தரிசனம். சூரியன் உதயமாவதைக் காண வானெங்கும் நிறைந்திருந்து இரவெல்லாம் காத்துக்கிடக்கின்றன விண்மீன்கள். துரதிருஷ்டவசமாக அந்த வாய்ப்பு அவற்றுக்கு அமையவில்லைமாறாக, அதிகாலையில் எழுந்து வெளியே வருகிற ஒரு வெள்ளிக்கு அந்த பிரகாசமான வாய்ப்பு வாய்க்கிறது. காத்திருந்தது யாரோ மாலைபோட்டது யாரோ என்பதுபோல, விண்மீன்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு விடிவெள்ளிக்குக் கிடைத்துவிடுகிறது.

பாரதத்திலும் இப்படி கொடுப்பினை மாறிப்போகிற ஒரு தருணம் உண்டு. அர்ஜூனன், துரியோதனன் இருவருமே நிகழ இருக்கிற போரில் கிருஷ்ணன் துணையாக இருக்க வேண்டும் என்று கேட்க வருகிறார்கள். தொடக்கத்திலேயே கிருஷ்ணன் யுத்தத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று தௌiவுபடுத்திவிடுகிறார். அதே சமயத்தில் யாராவது ஒருவருக்கு சாரதியாக இருப்பது, இன்னொருவருக்கு தன்னுடைய மொத்தப்படையையும் வழங்குவது என்ற இரு விஷயங்களை செய்யவிருப்பதாகவும் சொல்கிறார். மறுநாள் அதிகாலையில் இருவரையும் தன் அறைக்கு வரச் சொல்கிறார். யாரை முதலாவதாக பார்க்க நேர்கிறதோ அவர்களுக்கு சாரதியாக இருக்க தீர்மானித்திருப்பதாகவும் சொல்கிறார். மறுநாள், உறங்கும் கிருஷ்ணனின் அறைக்குள் முதலாவதாக சென்றபோதும் கால்மாட்டில் நிற்க விரும்பாமல் தலைமாட்டில் போய் நின்றுவிடுகிறான் துரியோதனன். தாமதமாக வந்தாலும் அர்ஜூனன் கிருஷ்ணன் காலையொட்டி நிற்கிறான். உறங்கி எழுந்து உட்கார்ந்ததும் கிருஷ்ணன் அர்ஜூனனையே பார்க்க நேர்கிறது. உனக்கே நான் சாரதி என்று அறிவித்துவிடுகிறார் கிருஷ்ணன். ஒரேஒரு கணம் மனத்தை ஆக்கிரமித்த அகங்காரத்தால் கிருஷ்ணனை சாரதியாகக் கொள்ளும் வாய்ப்பை இழந்துவிடுகிறான் துரியோதனன்.

வாழ்க்கையில் வாய்ப்பு தவறிப்போவதற்கு பல காரணங்கள் சொல்லலாம். சோம்பல், சலிப்பு, எரிச்சல், ஆத்திரம், வெறுப்பு, துரோகம், துரதிருஷ்டம், அச்சம், அகங்காரம் என அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் கைக்குக் கிட்டுகிற வாய்ப்பு என்பது  கூரையைப் பிய்த்துக்கொண்டு விழுகிற பழம்போல. மிக அழகான தற்செயல்.


*

கொடுப்பினை

ராஜ சுந்தரராஜன்

இரா முழுக்கத்
தவம் கிடந்தன
வான்நிறைய மீன்கள்
பரிதியை
நேர்நின்று கண்டதோ
விடிய வந்த ஒரு வெள்ளி


*

வசீகரமான சொற்கலவை பயின்றுவரும் கவிதைகளோடு எண்பதுகளில் தீவிரமாக இயங்கிய கவிஞர் ராஜ சுந்தரராஜன். முகவீதி இவருடைய முக்கியமான கவிதைத்தொகுதி.