Home

Wednesday 2 August 2017

முடிவில்லாத பயணம்- கால சுப்ரமணியமின் "மேலே சில பறவைகள்"



மனிதர்களை இருவகையாகப் பிரிக்கலாம்.  தனக்கு நேரும் சின்னச்சின்ன கவலைகளையும் துன்பங்களையும்கூட மிகப்பெரிதானவையாக நினைத்து மீளாத துயரத்தில் ஆழ்ந்து திகைத்துச் சோர்வடைபவர்கள் ஒருவகை.  கடுமையான துன்பங்களால் சூழ்ந்தபோதிலும் சிறுகச்சிறுக அவற்றிலிருந்து விடுபட்டு இயல்பான நிலைக்குத் திரும்பி தன்னைத்தானே தேற்றிக்கொண்டு தினசரி வாழ்வைத் தொடங்குகிறவர்கள் இன்னொருவகை. ஒருவர் இயற்கையிலிருந்தும் காலநகர்விலிருந்தும் கிடைக்கக்கூடிய ஆறுதலையும் மருந்தையும் பெற்று தன் மனப்புண்ணை ஆற்றிக்கொள்கிறார். இன்னொருவர் அந்த ஆறுதலையும் மருந்தையும் ஏற்றுக்கொள்ளும் ஊக்கமில்லாத அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிடுகிறார். மனிதர்கள்மட்டுமே இருவகையாகப் பிளவுண்டு கிடக்கிறார்களே தவிர, இயற்கையும் காலமும் எவ்விதமான ஏற்றத்தாழ்வும் இல்லாமல் தன் கருணையையும் ஆறுதலையும் ஒரே அளவிலேயே அனைவருக்கும் வழங்குகின்றன. அவற்றின் ஊற்றுக்கண்கள் ஒருபோதும் வற்றாதவை.


வளமுறப் பொழிந்து பயிர்பச்சைகளை நன்கு தழைக்கவைப்பதும் மழை.  தழைத்திருக்கும் பயிர்பச்சைகளை அளவுகடந்து பொழிந்து அழிப்பதும் மழைதான். மழையின்மீது வருத்தமிருந்தாலும் மழையின்மீதான நம்பிக்கையை விவசாயிகள் ஒருபோதும் இழப்பதில்லை. வான்மழை அவர்களுடைய வாழ்வில் போற்றத்தக்க தெய்வத்துக்கு நிகரானது. நம்பிக்கையின் துணையோடு அவர்கள் தம் சங்கடங்களைக் கடந்து செல்கிறார்கள்.

நெடுஞ்சாலையில் ஒரு விபத்து நடந்துவிடுவதாக எடுத்துக்கொள்வோம். சில கணங்கள் போக்குவரத்தே உறைந்து நின்றுவிடுகிறது. இரண்டு திசைகளிலும் வாகனங்கள் தம் பாதையைக் கடக்கமுடியாதபடி நின்றுவிடுகின்றன.  எல்லாருடைய முகங்களிலும் அதிர்ச்சி உறைகிறது. சில மணி நேரங்கள்வரைக்கும் அந்த இடம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. விபத்துக்குள்ளான வாகனமோ அல்லது உடலோ அகற்றப்பட்டபிறகு, நிலைமை மெல்லமெல்ல சீரடைகிறது. அந்த இடத்தைக் கடந்துசெல்லும்போது எல்லாரும் ஒருவகையான வருத்தத்தோடும் இயலாமையோடும் கடந்துசெல்கிறார்கள். அடுத்தடுத்த வரிசைகளில் வாகனங்கள் கடக்கமுனையும்போது விபத்துபற்றிய பேச்சே எழுவதில்லை. இயல்பான நிலைக்கு எல்லாருமே திரும்பிவிடுகிறார்கள். சிலமணிநேரங்களுக்குப் பிறகு, அது ஒரு செய்தியாகமட்டுமே எஞ்சி நிற்கிறது. இன்னும் சில மணிநேரங்களுக்குப் பிறகு, அது மறக்கப்பட்டுவிடுகிறது. ஒரு பயணத்தில் இடைப்பட்ட அதிர்ச்சி என்பது சில கணங்கள்மட்டுமே. இறுதியில், இயற்கை தன் உத்வேகத்தின் வழியாக அந்நிலைமையை சீரடையவைத்துவிடுகிறது.

இயற்கை என்பது ஆற்றைப்போல. காற்றைப்போல. தம் பயணத்தில் தென்படுகிற பள்ளங்களையும் வெற்றிடங்களையும் நிரப்பியபடியே செல்கின்றன.  பயணம்-எதிர்பாராத குழப்பத்தால் உருவாகும் திகைப்பு- இயற்கையின் உத்வேகத்தால் இயல்புநிலைக்கு மீண்டும் திரும்புகிற பயணம் என்னும் சுற்று முடிவேயில்லாமல் இயங்கியபடி உள்ளது.

முடிவில்லாமல் இயங்கும் பறவைகளின் பயணத்தைக் காட்சிப்படுத்தி இயற்கையின் ஆற்றலை உணரவைக்கிற ஒரு கவிதை கால.சுப்ரமணிமின் "மேலே சில பறவைகள்".  ஒரு மாலைவேளையில் கூடுநோக்கித் திரும்புகிற நாரைகளின் பயணத்தைக் காட்சிப்படுத்துகிறது இக்கவிதை. குன்றுகளின் பக்கமாக அப்பறவைகள் பறந்துகொண்டிருக்கும்போது, பாறைகளை தகர்ப்பதற்காக வைத்த வெடிகள் வெடிக்கப்படுகின்றன.  பறவைகளின் பயணத்திசை ஒரே நொடியில் குழம்பிவிடுகிறது.  நடுவானில் தத்தளிக்கின்றன அவை. எல்லாமே சில கணங்கள்மட்டுமே. தன்னுணர்வுபெற்ற நாரைகள் தன் திசையைநோக்கி மறுபடியும் பறக்கத் தொடங்கிவிடுகின்றன. 

இக்கவிதையில் மௌனமாக இடம்பெறுகிற இன்னொரு முக்கியமான அம்சமும் உண்டு. வானத்துப் பறவைகளின் பயணம் திகைப்புற்று நிற்பதும் பிறகு தொடர்வதும் ஒரு நிலை. மண்ணுலகில் பாறைகளைப் பிளக்கும் தொழிலாளர்கள் இடைவெளியின்றி இயங்குவது இன்னொரு நிலை. இரண்டு நிலைகளும் ஒரே கணத்தில் தற்செயலாகவே நிகழ்கின்றன. வெடிவைக்கும் முன்பாக விலங்குளோ அல்லது யாராவது மனிதர்களோ எதிர்ப்பட்டுவிடக்கூடாது என அக்கம்பக்கம் கவனத்தோடு சுற்றிச்சுற்றிப் பார்க்கிற தொழிலாளர்களை பறவைகள்மீது அக்கறையில்லாதவர்கள் என நினைத்துவிடமுடியாது. தற்செயலாகவே அந்தப் பிசகு நிகழ்கிறது. மிக நுட்பமான அளவில் எச்சரிக்கையுணர்வுள்ள பறவைகள் பறத்தலின் இன்பத்தில் திளைத்தபடி பறந்ததாலோ அல்லது நேரத்தோடு கூடு திரும்புவேண்டும் என்கிற  அவசரத்தாலோ  பாறைவெடியைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தவறிவிடுகின்றன. அதுவும் தற்செயலான ஒரு பிசகு. கோடிக்கணக்கான தற்செயல்களால் நெய்யப்பட்ட வாழ்வில் எதிரும்புதிருமாக நிற்கும் இரண்டு தற்செயல்களை கவிதை முன்வைக்கிறது. இந்த உலகம் பறவைகளுக்குமட்டுமே உரித்தான ஒன்றல்ல. அதே நேரத்தில் மானுடர்களுக்குமட்டுமே உடைமையான ஒன்றுமல்ல. எல்லா உயிர்களுக்கும் உரிமையுள்ள ஒரு மகத்தான இடம். ஒவ்வொன்றும் தனக்கே உரிய பாதையில் தனக்கே உரிய உத்வேகத்தோடு இயங்கிக்கொண்டே இருக்கிறது.

*



மேலே சில பறவைகள்

கால.சுப்ரமணியம்

சூரியன்கூட
மேற்கில் மறைந்தான்
நேரத்தோடு
கூடு நோக்கி
பறந்து சென்ற நாரைகள்
கீழே
இன்னும் வேலை முடியாத மனிதர்கள்
அக்கம் பக்கம் பார்த்து
(மேலே பார்க்கும் அவகாசமற்று)
ஆட்கள்
மிருகங்கள்
வாகனங்கள்
இல்லையென்பதை நிச்சயித்துக்கொண்டு
பாறையைப் பிளக்க வெடியை வெடித்தனர்
சப்த அதிர்ச்சியில்
ஒரு கணம்
அரண்டு
தயங்கிக்
குழம்பிச்
சிதறி
மீண்டும் தன்வழியே வரிசைகொண்டு
சாவகாசமாய்
மிதந்து சென்றன பறவைகள்

*

பிரமிள் வழிவந்த கவிஞர்களில் முக்கியமானவர் கால சுப்ரமணியம்.  லயம் என்னும் சிற்றிதழை விட்டுவிட்டு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வந்தவர். மொழிபெயர்ப்பிலும் ஆர்வம் உள்ளவர்.  பிரமிளின் மரணத்துக்குப் பிறகு அவருடைய கவிதைகளையும் உரைநடைப்படைப்புகளையும் தொகுத்து வெளியிட்டவர்.
*