Home

Sunday 27 March 2022

மரபும் நவீனமும் - வளவ.துரையனின் ‘ஒரு சிறு தூறல்’

 

வீரயுக மாந்தர்களை வியந்தும் பாராட்டியும் எழுதப்பட்டிருக்கும் பல பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. அவற்றில் சிற்றில் நற்றூண் பற்றி எனத் தொடங்கும் பாடல் பிரபலமானது. ஆண்மகன் என்பவன் போராடப் பிறந்தவன் என்கிற தொனியும் அத்தகைய வீரனைப் பெற்ற தாய் என்கிற பெருமையும் ஒருங்கே வெளிப்படும் பாடல் அது. இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்த சூழல் அப்பாடலில் சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்தச் சாயலில் இன்றைய சூழலை சற்றே மாற்றி எழுதிப் பார்த்திருக்கிறார் வளவ. துரையன். புறநானூற்றில் மகனைப்பற்றிய கேள்விக்கு வீரமரபைச் சேர்ந்த தாய் விடை சொல்கிறாள். வளவ துரையன் கவிதையில் மகளைப்பற்றிய கேள்விக்கு நவீன தாய் அல்லது தந்தை விடைசொல்வதாக உள்ளது.

வெண்ணிற இரவுகள் : நிலவும் முகிலும்

  

     ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் சிறுகதைகளும் குறுநாவல்களும் என்னும் புத்தகத்தை புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு புத்தகக்கண்காட்சியில் 1982இல் நான் முதன்முதலாக வாங்கினேன். அத்தொகுப்பில் வெண்ணிற இரவுகள், பலவீனமான இதயம், அருவருப்பான விவகாரம், அடக்கமான பெண், அப்பாவியின் கனவு ஆகிய ஐந்து கதைகள் இடம்பெற்றிருந்தன. முதல் வாசிப்பிலேயே வெண்ணிற இரவுகள் என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

Wednesday 23 March 2022

வீடு - சிறுகதை

 

உறக்கம் கலைந்து கண் விழித்ததுமே வலதுபக்கச் சுவரில் ஒட்டியிருந்த முருகரின் படத்தைப் பார்த்தான் வடிவேலு. மயில் விளையாடும் பாதத்திலிருந்து மணிமுடி வரைக்கும் அவன் பார்வை மெதுவாகப் படர்ந்து உயர்ந்தது. அக்கணத்தில் ஆஸ்பத்திரியிலிருந்து ராமாயி பெரியம்மாவை அழைத்துவர வேண்டும் என்பது நினைவிலெழுந்தது.

கதாநாயகன் - சிறுகதை

 

நான்கு ஆண்டு கால இடைவிடாத முயற்சிகளுக்குப் பிறகு சுகுமாரனுக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தயாரிப்பாளரின் திடீர் மரணத்தின் விளைவாக, அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு  பாதியிலேயே நின்றுவிட்டது. அதற்குப் பிறகு வேறொரு வாய்ப்பும் அவனைத் தேடி வந்தது. ஏறத்தாழ நாற்பத்தைந்து நாட்கள் படப்பிடிப்பு நடந்துமுடிந்திருந்த சூழலில், திடீரென தயாரிப்பாளர் சிறைக்குச் செல்ல நேர்ந்ததால், அந்தப் படமும் கைவிட்டுப் போனது. அவனிடம் எல்லாத் திறமைகளும் இருந்தன. யாரும் ஒரு குறையும் சொன்னதில்லை. ஆயினும் எதிர்காலத்தை நோக்கி அவனால் ஓர் அடி கூட எடுத்துவைக்க முடியவில்லை.

Sunday 13 March 2022

கேள்வியும் விடையும்


சி.எஸ்.ஸ்ரீகண்டன் நாயர் என்னும் மலையாள எழுத்தாளர் ராமாயணக்கதையை மூன்று நாடகங்களாக எழுதினார். அந்த வரிசையில் மூன்றாவது நாடகத்தின் பெயர் காஞ்சன சீதை. அது உத்தரராமாயணக்கதையை ஆதாரமாகக் கொண்ட பகுதி. அயோத்தியின் ஆட்சிக்கட்டிலில் ஏறிய ராமன் தன் ஆட்சித்திறமையால் மக்களின் நற்பெயரைச் சம்பாதித்து சக்கரவர்த்தியாக உயர்கிறான். அப்போது வசிட்ட முனிவர் ராமனிடம் அஸ்வமேதயாகத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு ஆலோசனை சொல்கிறார். அது மனைவியோடு இணைந்து செய்யவேண்டிய யாகம் என்பதால், காட்டுக்கு சீதையை அனுப்பிவிட்டு தனிமையில் இருக்கும் நிலையில் யாகத்தை நடத்த வழியில்லை என்று ராமன் தயங்குகிறான்.

வாழ்க்கையில் ஒரு நாள் - சிறுகதை


சென்னையிலிருந்து திரும்பியதுமுதல் யாரிடமும் பேசாமல்  அறைக்குள்ளேயே அடைபட்டிருந்தான் சண்முகவேலன். அம்மா, அப்பா, இந்திராணி, குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒற்றைச்சொல் பதில்களைமட்டுமே சொன்னான். பூபாளம் இசைக்குழுவிலிருந்து வந்த அலைபேசி அழைப்புகளைக்கூட அவன் மனம் பொருட்படுத்தவில்லை. அடுப்பில் வைத்த விறகுபோல அவன் மனம் எரிந்து கரியாகிக்கொண்டிருந்தது. இனி தன் கனவுகள் பொசுங்கிச் சாம்பலாவதை யாராலும் தடுக்கமுடியாது என்று தோன்றியபடியே இருந்தது.

இரு முனைகள்

  

புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தன். அவர் குழந்தையாக இருந்தபோது அவருடைய எதிர்காலத்தைக் கணித்த முதியவரொருவர் அவர் ஓர் அரசனாகவோ அல்லது ஞானத்துறவியாகவோ வரக்கூடும் என்று சொன்னார். சித்தார்த்தன் துறவின் வழியில் சென்றுவிடக்கூடாது என நினைத்தார் அவருடைய தந்தையார்.  அதனால் வெளியுலகமே அவருடைய கண்ணில் பட்டுவிடாமல் எல்லா வசதிகளோடும் அரண்மனைக்குள்ளேயே அவரை  வளர்த்தார். யசோதரை என்னும் பெண்ணுடன் அவருக்குத் திருமணம் நடந்தது. இருவருக்கும் ராகுலன் என்னும் மகன் பிறந்தான். 

என்.ஜி.ராமசாமி : ஆயிரம் விழுதுடைய ஆலமரம்

 

இந்திய தேசிய காங்கிரஸ் லாகூர் நகரின் ராவி நதிக்கரையில் 31.12.1929 அன்று இந்தியாவின் மூவண்ணக்கொடியை முதன்முதலாக ஏற்றியது. அதைத் தொடர்ந்து 26.01.1930 அன்று முழுவிடுதலையைப் பிரகடனப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக சட்ட மறுப்பு நடவடிக்கையைத் தொடரும் விதமாக ஒரு திட்டத்தை வகுத்துக்கொடுக்கும் பொறுப்பை காந்தியடிகளிடம் காங்கிரஸ் ஒப்படைத்தது. ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு காந்தியடிகள் ஆங்கிலேயரின் உப்புச்சட்டத்தை இலக்காக்கி அறவழியில் போராட்டத்தை முன்னெடுக்கும் திட்டமொன்றை உருவாக்கினார். அதன் முக்கியத்துவத்தை அன்றிருந்த பல தலைவர்களால் உடனடியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆயினும் காந்தியடிகள் மீதிருந்த நம்பிக்கையின் அடிப்படையில் அத்திட்டத்துக்கு இணங்கினர்.

Monday 7 March 2022

ருக்மணி லட்சுமிபதி : ஆர்வமும் அஞ்சாமையும்

 

07.03.1925 அன்று காந்தியடிகள் கதர்ப் பிரச்சாரத்துக்காக சென்னைக்கு வந்திருந்தார். அப்போது அவர் தங்குவதற்கு சீனிவாச ஐயங்கார் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வீட்டுக்கூடத்திலேயே பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. அவர்களிடையில் கதராடைகளை அணிவது பற்றியும் தீண்டாமை ஒழிப்பைப்பற்றியும் காந்தியடிகள் விளக்கிப் பேசினார்.

தங்கப்பா - புதிய புத்தகத்தின் முன்னுரை

  

     தங்கப்பா தமிழுலகம் நன்கறிந்த பாவலர். அன்பே வாழ்வின் மையமென தன் வாழ்நாள் முழுதும் சொல்லிக்கொண்டே இருந்தவர். ’அன்பால் நிறைந்த உள்ளத்தில்தான் அமைதியும் நிறைந்திருக்கும். தன் சொந்த முன்னேற்றம் என்ற வேட்கைக்கு அங்கே இடமிருக்காது. தான் என்ற உணர்வுக்கு அடிமையாகாத உள்ளமே வாழ்க்கையை இயற்கைச் சுவையுணர்வுடன் பார்க்கும்என்னும் கருத்துக்கு விளக்கமாக வாழ்ந்து காட்டியவர். அவர் வாழ்க்கையே அவர் விடுத்த செய்தி.