தங்கப்பா தமிழுலகம் நன்கறிந்த பாவலர். அன்பே வாழ்வின் மையமென தன் வாழ்நாள் முழுதும் சொல்லிக்கொண்டே இருந்தவர். ’அன்பால் நிறைந்த உள்ளத்தில்தான் அமைதியும் நிறைந்திருக்கும். தன் சொந்த முன்னேற்றம் என்ற வேட்கைக்கு அங்கே இடமிருக்காது. தான் என்ற உணர்வுக்கு அடிமையாகாத உள்ளமே வாழ்க்கையை இயற்கைச் சுவையுணர்வுடன் பார்க்கும்’ என்னும் கருத்துக்கு விளக்கமாக வாழ்ந்து காட்டியவர். அவர் வாழ்க்கையே அவர் விடுத்த செய்தி.
உள்ளம் வேறு, மனிதன் வேறு அல்ல. உள்ளமே மனிதன். மனிதனின் சிறப்பும் செம்மையும் அவன் உள்ளத்தைச் சார்ந்தவை. உள்ளம் அமைந்திருப்பது உடலில் என்பதால் உள்ளத்தைப் பேணுதல் வேண்டும். உடலுக்கென்று தனிவாழ்க்கை இல்லை. அப்படி வாழ்வதில் எந்தச் சிறப்பும் இல்லை. பயனும் இல்லை. ஒருவன் உடல்நலமும் வலிமையும் பெற்று, எல்லா உலக வளங்களும் பெற்று வாழ்வது உள்ளத்தின் நலம் பேணுதற்காகவே. ஆதலின் ஒருவன் உடல்நலமும் எல்லா உலகியல் வளங்களும் வாய்க்கப் பெற்று வாழ்ந்தால் மட்டும் போதாது. அவன் உள்ளார்ந்த பண்புநலன்கள் உடையவனாகவும் வாழ்தல் வேண்டும். ஆனால் பெரும்பாலான மனிதர்கள் அறியாமையில் மூழ்கியிருக்கிறார்கள். வெளிப்படையானவையும் கட்டாயமானவையும் மட்டுமே அவர்களுடைய கவனத்தில் படுகின்றன. ஆழ்ந்து எண்ணித் தெளியவேண்டிய செய்திகளில் ஒருவரும் போதிய அக்கறை கொள்வதில்லை. புறத்தேவைகளில் ஈடுபடும் அளவுக்கு அகத்தேவைகளில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லாமல் போகிறது. எப்போதும் இதுவே அவருடைய உரையாடலின் மையப்புள்ளியாக இருக்கும். அவர் சொன்னதைக் கேட்டுக் கேட்டு எனக்கு இச்சொற்கள் மனப்பாடமாகிவிட்டன. கல்வெட்டு எழுத்துகளைப்போல என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்ட இச்சொற்களை என்னால் ஒருபோது மறக்கமுடியாது.. அவரை நினைக்கும்தோறும் இச்சொற்களே நெஞ்சில் எழுந்துவருகின்றன.
1975இல்
தாகூர் கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்ந்தபோது எனக்கு அவருடைய அறிமுகம் கிடைத்தது.
அவருடைய
அமைதியான பேச்சும், திருத்தமான சிந்தனையும்
அன்போடு பழகும் விதமும் என்னை மிகவும் கவர்ந்தன. நான் படித்தது
கணிதப்பிரிவில். அவர் இருந்ததோ தமிழ்ப்பிரிவில். ஆயினும் ஒவ்வொரு நாளும் மதிய உணவு இடைவேளை நேரத்தில் வேகவேகமாக சாப்பிட்டுவிட்டு அவரைப் பார்க்க ஓடிவிடுவேன். நான் எழுதியிருக்கும் புதிய பாடலை அவரிடம் காட்டி திருத்தங்கள் பெறுவேன். அவரிடமிருந்து புத்தகங்கள்
வாங்கிவந்து படித்துவிட்டு திருப்பிக்கொடுப்பேன். அவர் தன் உரையாடல்கள் வழியாகவும் தன் திருத்தங்கள் வழியாகவும் என்னை கொஞ்சம்கொஞ்சமாக செம்மைப்படுத்தினார். என் எழுத்துக்கு மட்டுமல்ல, என் வாழ்க்கைக்கும்
அவரே என் வழிகாட்டி. எல்லா வகையிலும்
அவர் எனக்கு ஆசான்.
2018இல்
மே மாத இறுதியில் அவர் மறைந்தார். அதற்குச் சில
வாரங்கள் முன்புதான் நான் புதுவைக்குச் சென்றிருந்தேன். புதுவை நண்பர் பி.என்.எஸ்.பாண்டியன்
அவரைப்பற்றி ஓர் ஆவணப்படத்தை எடுத்துக்கொண்டிருந்தார். நான் பேசவேண்டிய பகுதியை எடுப்பதற்காகக் காத்திருந்தார். அதை முடித்துக்கொண்டு, அவரையும் சந்தித்துவிட்டு திரும்பினேன். அந்தச் சந்திப்பே அவரை இறுதியாகச் சந்திக்கும் தருணம் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
அவரைப்பற்றி
புதுவையிலும் திருவாரூரிலும் அடுத்தடுத்து நடைபெற்ற கருத்தரங்குகளில் நான் அவரைப்பற்றி உரையாற்றினேன். குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிகழ்த்தவேண்டிய உரை என்பதால் சுருக்கமாகவே உரையாற்ற முடிந்தது. அவரைப்பற்றி விரிவாக
யோசித்து என் மனநிறைவுக்காக ஒரு நூலை எழுதவேண்டும் என அப்போது
நினைத்துக்கொண்டேன். பயணம் முடிந்து ஊருக்குத் திரும்பிய அன்று என் மனைவி அமுதாவிடம் என் முடிவைப்பற்றி பகிர்ந்துகொண்டபோது உடனடியாக அந்தப் புத்தக வேலையைத் தொடங்கவேண்டும் என்று வலியுறுத்தினாள். பழக்கத்தின் காரணமாக நான் தங்கப்பாவை ஐயா என்று அழைத்தபோதும் அவள் அவரை அப்பா என்றே அழைத்துவந்தாள். எங்கள் இருவருக்கும் திருமணத்தை நடத்திவைத்தவர் அவரே. அவர்மீது அமுதாவுக்கு எப்போதும் மதிப்பும் அன்பும் உண்டு. அதனால் புத்தக
வேலையை நான் உடனே தொடங்கவேண்டும் என்று சொல்லத் தொடங்கினாள்.
எழுத்துவேலையைத்
தொடங்கும் முன்பாக, தங்கப்பாவின் சில
பழைய பாடல்நூல்களை மீண்டும் படித்துவிட விரும்பினேன். என்னிடம் சில தொகுதிகள் மட்டுமே இருந்தன. என்னிடம் இல்லாத
தொகுதிகளை செங்கதிரும் மின்னலும் தேடிக் கொடுத்தனர். அவ்விருவருக்கும் என் நன்றி.
சற்றும்
எதிர்பாராத விதமாக வந்து சேர்ந்த சாகித்ய அகாதெமியின் கடிதம் என் எண்ணத்துக்கு உடனடியாக செயல்வடிவம் கொடுக்கும் விசையை ஊட்டியது. அவர்களுக்கும் என்
நன்றி.