07.03.1925 அன்று காந்தியடிகள் கதர்ப் பிரச்சாரத்துக்காக சென்னைக்கு வந்திருந்தார். அப்போது அவர் தங்குவதற்கு சீனிவாச ஐயங்கார் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வீட்டுக்கூடத்திலேயே பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. அவர்களிடையில் கதராடைகளை அணிவது பற்றியும் தீண்டாமை ஒழிப்பைப்பற்றியும் காந்தியடிகள் விளக்கிப் பேசினார்.
அப்போது ஒரு பத்திரிகையாளர் காந்தியடிகளிடம் “ஒருவேளை நாளையே
அரசாங்கம் அடக்குமுறையைக் கையாண்டால் நீங்கள் மக்களுக்கு எப்படிப்பட்ட செய்தியைச் சொல்வீர்கள்?” என்று கேட்டார்.
ஒருசிறிதும் பதற்றமில்லாத அமைதியான குரலில் “கதராடை அணிவதையும் தீண்டாமை ஒழிப்பையும்
பற்றியே அப்போதும் பேசுவேன்” என்று காந்தியடிகள் பதில் சொன்னார். “கதர் கதர் கதர்”
என்னும் சொற்களே அவரிடமிருந்து வெளிப்பட்டன.
அன்று சென்னை நகராண்மைக்கழகம் காந்தியடிகளுக்கு ஒரு வரவேற்பை
அளித்தது. பத்துக்கும் மேற்பட்டோர் பாராட்டு மடல்களை வாசித்துக் கொடுத்தனர். எதிர்பாராத
விதமாக அம்மடல்களில் ஒருவர் கூட கதரைப்பற்றிக் குறிப்பிடவில்லை. அதைக் கவனித்த காந்தியடிகள்
அந்தச் செய்தியை தன் உரையில் குறிப்பிட்டுப் பேசினார். மனித வர்க்கத்துக்காக தான் செய்த
சிறு தொண்டுகளில் கதரை நிலைநிறுத்தியதே முதன்மை வாய்ந்தது என்று தெரிவித்தார். அதைத்
தொடர்ந்து பள்ளிகளில் நூல்நூற்பதையும் தறி பழகுவதையும் பாடத் திட்டத்தில் ஒரு பகுதியாக
வைக்கவேண்டும் என்று நகராட்சி மன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அன்று மாலை திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்துக்குச்
செல்லும்போது காந்தியடிகளோடு பயணம் செய்த ஒருவர் காங்கிரஸில் உறுப்பினராக இருக்கும்
ஒரு பெண்மணி திருவல்லிக்கேணியில் மிகுந்த ஈடுபாட்டுடன்
கதர் விற்பனை நிலையமொன்றைத் தொடங்கி நடத்தி வருவதாகத் தெரிவித்தார். அதைக் கேட்டு முகம்
மலர்ந்த காந்தியடிகள் அந்த விற்பனை நிலையத்தைப் பார்க்க விரும்பினார். உடனடியாக அவர்
பயணம் செய்துவந்த வாகனம் அந்த விற்பனை நிலையத்தை நோக்கிச் சென்றது. காந்தியடிகள் கடைக்குள்
சென்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆடைகளை ஆர்வத்துடன் பார்த்தார். காந்தியடிகளின்
எதிர்பாராத வருகையைக் கண்டு அந்தப் பெண்மணி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அந்தப் பெண்மணியின்
கல்வி, பெற்றோர், கணவன், பிள்ளைகள் தொடர்பான கேள்விகளைக் கேட்டு அவரைப்பற்றி ஓரளவு
தெரிந்துகொண்டார் காந்தியடிகள். பொதுக்கூட்டத்துக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்ததால்
வேறு வழியில்லாமல் அவரை வாழ்த்திவிட்டு விடைபெற்றுக்கொண்டு வெளியேறினார். கதர் விற்பனை
நிலையத்தை நடத்திய அப்பெண்மணியின் பெயர் ருக்மணி லட்சுமிபதி.
காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்த பிறகு அயல்நாட்டு ஆடைகள் அணிவதை
அறவே விட்டொழித்து, ருக்மணி கதராடையை மட்டுமே உடுத்தி வந்தார். தன் குடும்ப உறுப்பினர்கள்
அனைவரும் கதர்த்துணிகளை விரும்பி அணியும் வகையில் மனமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தார்.
இயக்கத்தில் இணைவதற்கு முன்பாகவே சமூக சேவையில் ஆர்வமுடன் தொண்டாற்றிய அனுபவம் அவருக்கு
இருந்தது. பாரத் மகா மண்டல் என்ற சமூக சேவை அமைப்பின் செயலாளராக சில ஆண்டுகள் தொண்டாற்றியருந்தார்.
இளைஞர் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி மதுவின் தீமையை மக்கள் உணரும் வகையில் தெருமுனைகளில்
நின்று பிரச்சாரம் செய்த அனுபவமும் அவருக்கிருந்தது. ஆங்கிலேய அரசு இந்தியாவை விட்டு
வெளியேற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வந்த ஹோம்ரூல் இயக்கம், இந்தியர்களுக்கு
எதிராக அரசு பிறப்பித்த ரெளலட் சட்டம், பஞ்சாபில் ஜாலியன்வாலாபாகில் ராணுவ ஜெனரல் டயர்
நிகழ்த்திய படுகொலை போன்ற நிகழ்ச்சிகள் மெல்ல மெல்ல ருக்மணியின் நெஞ்சில் விடுதலை வேட்கையை
விதைத்திருந்தன.
சிறந்த மருத்துவர் என
புகழ்பெற்ற அவருடைய கணவரான லட்சுமிபதியும் விடுதலை வேட்கை கொண்டிருந்ததால் மனைவியின்
செயல்பாடுகளுக்கு அவர் உறுதுணையாக இருந்தார். ஆவடிக்கு அருகில் தொழுநோயாளிகளுக்கு ஆதரவு
அளிக்கும் வகையில் ஆரோக்கிய ஆசிரமம் என்னும் நிலையத்தை உருவாக்கி மருத்துவச்சேவை புரிந்து
வந்தார் லட்சுமிபதி.
காந்தியடிகளைச் சந்திக்கும் வாய்ப்பு 1927இல் ருக்மணிக்கு மீண்டும்
கிடைத்தது. குறுகிய காலத்திலேயே காங்கிரஸ் இயக்கத்தில் ருக்மணி ஒரு முக்கியப் புள்ளியாக
வளர்ந்திருந்தார். 25.12.1927 அன்று சென்னையில் ஸ்பர் டாங்க் மைதானத்தில் நடைபெற்ற
42வது இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மாதர் பிரிவு செயலாளராக அவர் பணிபுரிந்தார். இந்த மாநாட்டில்தான் காந்தியடிகள் முதன்முதலாக ‘இந்தியாவின்
குறிக்கோள் முழு விடுதலையே’ என்று அறிவித்தார். இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு அடித்தளமிடும்
வண்ணம் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
1929இல் பாரிஸில் நடைபெற்ற பத்தாவது உலகப் பெண்கள் மாநாட்டில்
இந்தியப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு பெண்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்தார் ருக்மணி.
அயல்நாடுகளில் பங்கெடுத்துக்கொண்ட எல்லாக் கூட்டங்களிலும் இந்தியா விடுதலை பெறவேண்டியதன்
அவசியத்தைப்பற்றி பிரச்சாரம் செய்தார். இந்தியப் பெண்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்த
ருக்மணி அரசியலில் பெண்களுக்கும் சம உரிமை அளிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
1929இல் டிசம்பர் மாதத்தில் லாகூர் நகரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்
கலந்துகொண்டு, அதே கருத்தை வலியுறுத்திப் பேசிய ருக்மணி, அதை ஒரு தீர்மானமாக முன்மொழிந்தார்.
அத்தீர்மானம் அந்த அரங்கில் ஒரு. மனதாக நிறைவேற்றப்பட்டது.
முழு விடுதலை என்னும் குறிக்கோளை எய்துவதற்காக, தக்க சமயத்தில்
வரிகொடா இயக்கம் உட்பட ஒத்துழையாமை இயக்கத் திட்டத்தைத் தொடங்குவதற்கு அந்த மாநாடு
இந்திய தேசிய காங்கிரஸிற்கு அதிகாரமளித்தது. 02.01.1930 அன்று நடைபெற்ற காங்கிரஸின்
புதிய செயற்குழுக்கூட்டத்தில் ஜனவரி 26ஆம் நாளை சுதந்திர நாளாகக் கொண்டாடுவது என்று
தீர்மானிக்கப்பட்டது. மாநாட்டிலிருந்து சென்னைக்குத் திரும்பிய எல்லாத் தலைவர்களும்
மாநிலமெங்கும் சுதந்திரநாள் பற்றிய செய்தியைப் பிரச்சாரம் செய்தனர். அறிவித்தபடி
26ஆம் நாளன்று காலையில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோவிலுக்கு எதிரில் ருக்மணி
கொடியேற்றி சுதந்திர நாள் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார். பிறகு சென்னை நகரின் பல்வேறு
பகுதிகளில் நடைபெற்ற பல கொண்டாட்டங்களிலும் அவர் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்தார்.
சட்ட மறுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக காந்தியடிகள் 12.03.1930
அன்று உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். சபர்மதி ஆசிரமத்திலிருந்து அவர் எழுபத்தெட்டு
சத்தியாகிரகிகளோடு இருபத்துமூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடந்து சென்றார். தாண்டி கடற்கரையில்
ஒரு பிடி உப்பை அள்ளியெடுத்து கையை உயர்த்தி அதன் வழியாக ஆங்கிலேய அரசின் அடித்தளத்தையே
அசைப்பதாக அறிவித்தார். உப்பு சத்தியாகிரகத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு கிளையும்
காந்திய வழியில் சத்தியாகிரகத்தை நடத்த காங்கிரஸ் செயற்குழு அனுமதியளித்தது. இவ்வகையில்
தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தும் பொறுப்பை ராஜாஜி ஏற்றுக்கொண்டார். தமிழகம்
முழுதும் பயணம் மேற்கொண்ட ராஜாஜி, மக்களுக்கு இலவசமாக இயற்கை வழங்கும் உப்பின் மீது
வரி விதிக்கும் அரசின் போக்கைக் கண்டித்து, ஏராளமான புள்ளிவிவரங்களுடன் உரையாற்றி சத்தியாகிரகத்துக்கு
ஆதரவு திரட்டினார். சத்தியாகிரகத்தில் கலந்துகொள்ள பலர் ஆர்வம் காட்டினர். தனக்கு வந்த
மனுக்களைப் பரிசீலனை செய்து 98 பேர் கொண்ட ஒரு பட்டியலை அவர் தயாரித்தார். சென்னை நகரிலிருந்து
11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ருக்மணியும் ஒருவர்.
திட்டமிட்டபடி 13.04.1930 அன்று திருச்சியிலிருந்து சத்தியாகிரகிகளின்
பாதயாத்திரை தொடங்கியது. அனைவரும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் வழிநடைப்பாட்டையும்
பாரதியாரின் பாடல்களையும் பாடியபடி நடந்து சென்றனர் பதினாறு நாட்களுக்குப் பிறகு அனைவரும்
வேதாரண்யம் கடற்கரையை அடைந்தனர். அரசு விதித்திருந்த தடையை மீறி ஊரே திரண்டு வந்து
அவர்களை எதிர்கொண்டு வரவேற்றது.
அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கூட்டத்தினரிடையில்
ராஜாஜி முதலில் பேசினார். பிறகு தேசியக்கொடியை கையிலேந்தியபடி அருகிலேயே நின்றிருந்த
ருக்மணியை பேசுவதற்கு அழைத்தார். உடனே அவர் தன் இடிமுழக்கம் போன்ற குரலில் “நம் தாய்நாட்டின்
விடுதலைக்காக பெண்களாகிய நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் அதிகமாகவே உள்ளன. ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்நாட்டிலே என்று பாடிய பாரதியாரின் பாடலை நினைத்துக்கொள்ளுங்கள்.
இங்கு பெண்கள் ஆண்களுக்குச் சமமாக வாழ்ந்தால் மட்டும் போதாது. ஆண்கள் நடத்தும் எல்லாப்
போராட்டங்களிலும் பெண்களும் பங்கேற்க முன்வர வேண்டும். அப்போதுதான் நாம் வெற்றியடைய
முடியும். நம் நாட்டு விடுதலையும் அப்போதுதான் சாத்தியமாகும். நாளை மறுதினம் நடக்கவிருக்கிற
உப்பு சத்தியாகிரகத்தில் நீங்கள் அனைவரும் இணைந்து போராடி ஆட்சியில் இருப்பவர்களை நிலைகுலையச்
செய்யவேண்டும்” என்று முழங்கினார். மன உறுதி மிக்க அவருடைய பேச்சைக் கேட்டு கூட்டத்தினர்
அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
சத்தியாகிரகிகள் சூழந்திருக்க 30.04.1930 அன்று அகஸ்தியம்பள்ளியில்
ராஜாஜி உப்பை அள்ளினார். செய்தி கிடைத்ததும் ஓடி வந்த காவலர்கள் அவரை உடனடியாக கைது செய்தனர். அதற்குப்பின், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக
குழுவுக்கு தலைமையேற்றுச் சென்று உப்பையள்ளி கைதாகினர். அதே நேரத்தில் வேதாரண்யத்தில் பல்வேறு ஊர்களில் தொடர்ச்சியாக பொதுக்கூட்டங்கள்
நடைபெற்றன. ஒவ்வொரு கூட்டத்திலும் ருக்மணி உணர்ச்சிப் பிழம்பென உரையாற்றி தேசப்பற்றைத்
தூண்டினார். அந்நியப்பொருட்களை உதறித் தள்ளி சுதேசிப் பொருட்களை வாங்குமாறும் கதராடைகளை
அணியுமாறும் மாதர்களிடமும் பொதுமக்களிடமும் கேட்டுக்கொண்டார்.
வேதாரண்யத்தில் தங்கியிருந்த சமயத்தில் அவருடைய இரண்டு வயது
குழந்தைக்கு திடீரென உடல்நலம் சரியில்லாததால் உடனே புறப்பட்டு வருமாறு இரு தந்திகள்
அடுத்தடுத்து வந்தன. போராட்டத்திலிருந்து விலகிச் செல்ல அவருக்கு மனம் வரவில்லை. ஆனால்
அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒருமுறை சென்னைக்குச் சென்று பார்த்துவிட்டு வருமாறு கூறினர்.
அரைமனத்தோடு சென்னைக்குப் புறப்பட்டு வந்த ருக்மணி மருத்துவ மனையில் இருந்த குழந்தையை
பக்கத்திலேயே இருந்து கவனித்துக்கொண்டார். குழந்தை உடல்நலம் தேறியதும் கணவரிடம் விடை
பெற்றுக்கொண்டு மீண்டும் வேதாரண்யத்தை அடைந்தார்.
வேதாரண்யத்தில் சத்தியாகிரகிகள் அள்ளி வந்த உப்பை தம் தங்குமிடத்துக்கு
எடுத்து வந்து குவியலாக குவித்து வைத்திருந்தனர். 14.05.1930 அன்று திடீரென முகாமுக்குள்
புகுந்த காவலர்கள் அந்த உப்புக்குவியலைப் பறிமுதல் செய்ய முயற்சி செய்தனர். அவர்களுடைய
நோக்கத்தைப் புரிந்துகொண்ட ருக்மணியும் பிற சத்தியாகிரகிகளும் வட்டமாகக் கைகோர்த்துக்கொண்டு
நின்று உப்புக்குவியலைப் பாதுகாத்தனர். காவலர்கள் தடியடி நடத்தி சத்தியாகிரகிகளைக் கலைக்க முயற்சி செய்தனர். அந்த முயற்சியும் தோல்வியில்
முடிந்தது. அடிகளால் சிறிதும் கலங்காது ருக்மணியும் மற்றவர்களும் கோட்டைச்சுவரென உறுதியாக
நின்றுவிட்டனர். காவலர்கள் அனைவரையும் கைது செய்து வாகனத்தில் ஏற்றி தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு
அழைத்துச் சென்றனர். அங்கு நீதிபதி அனைவருக்கும் ஓராண்டுக் காலம் கடுங்காவல் தண்டனை
விதித்தார். ருக்மணி வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
உப்பு சத்தியாகிரகத்தில் நாட்டிலேயே முதன் முதலில் கைது செய்து
சிறையில் அடைக்கப்பட்ட பெண்மணி ருக்மணி. வேலூர் சிறைச்சாலையில் பெண் அரசியல் கைதிகளுக்கென
தனிப்பிரிவு முதன்முதலாக ருக்மணிக்காகவே உருவாக்கப்பட்டது.
சிறையிலிருந்து தன் கணவருக்கு எழுதிய கடிதத்தில் “தேசத் தொண்டில்
ஈடுபட்டமைக்காக இந்தப் பரிசு எனக்குக் கிடைத்தபடியால் சிறைவாழ்க்கையைப்பற்றி எனக்கு
சிறிதும் கவலை இல்லை” என்று குறிப்பிட்டார்.
இந்தி மொழியைக் கற்பதற்கும் பாகவதத்தைப் படிப்பதற்கும் சிறையில் இருந்த காலத்தைப் பயனுள்ள
வழியில் பயன்படுத்திக்கொண்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்ற மாநிலத் தலைவர்களையும்
தேடித்தேடிச் சந்தித்தார்.
காந்தியடிகளுக்கும் வைசிராயான இர்வினுக்கும் இடையில் நடைபெற்ற
மூன்று வார கால பேச்சுவார்த்தையின் விளைவாக 05.04.1931 அன்று ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கேற்று கைதான அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை
செய்யவும் உப்பு மீதான வரியை ரத்து செய்யவும் இந்தியர்கள் உப்பு உற்பத்தியில் ஈடுபடவும்
கள்ளுக்கடைகள் முன்பும் துணிக்கடைகள் முன்பும் மறியல் செய்யவும் அரசு ஒப்புக்கொண்டது.
சட்ட மறுப்பு இயக்கத்தைக் கைவிடவும் லண்டனில் நடைபெறவிருக்கும் வட்ட மேசை மாநாட்டில்
கலந்துகொள்ளவும் காங்கிரஸ் தன் சம்மதத்தைத் தெரிவித்தது. அந்த ஒப்பந்தப்படி உப்பு சத்தியாகிரகத்தில்
கலந்துகொண்டு வெவ்வேறு சிறைகளில் இருந்த அனைவரும் விடுதலையடைந்தனர். ருக்மணியும் வீடு
திரும்பினார்.
06.05.1931 அன்று மதுரையில் தமிழ்நாடு இளைஞர் மாநாடு நடைபெற்றது.
அந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கும் பொருட்டு பம்பாயிலிருந்து வரவேண்டிய ஹார்னிமன்
என்பவர் எதிர்பாராத காரணத்தால் வராததால், மாநாட்டுக் குழுவினர் அங்கிருந்த ருக்மணியைத்
தலைமை தாங்கும்படி கேட்டுக்கொண்டனர். ருக்மணி தன் உரையில் அயல்நாட்டுத் துணிகளைப் புறக்கணித்து
கதராடைகளை அணியும்படியும் கள்ளுக்கடை மறியலில் ஈடுபடுமாறும் மன்றாடிக் கேட்டுக்கொண்டார்.
சுதேசி ஆடைகளுக்கும் இந்திய விடுதலைக்கும் உள்ள தொடர்பை அன்று அவர் விரிவாக விளக்கிப்
பேசினார்.
1931இல் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெற்ற வட்டமேசை மாநாட்டுப்
பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைய, காந்தியடிகள் இந்தியாவுக்குத் திரும்பினார்.
அதைத் தொடர்ந்து நாடெங்கும் மீண்டும் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்க காங்கிரஸ் செயற்குழு
திட்டமிட்டது. அதை உணர்ந்ததும் சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபடுவோர் மீது தடியடி நடத்தவும்
தேவைப்படின் துப்பாக்கிச்சூடு நடத்தவும் சென்னை மாகாண அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு
செய்தி அனுப்பியது. இருப்பினும் அந்த ஆணையைப் பொருட்படுத்தாது 26.01.1932 அன்று நாடெங்கும்
சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட்டது. 144 தடையை மீறி பொதுக்கூட்டங்களும் நடந்தன. சென்னை
எஸ்பளனேட் வட்டாரத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அவர்களைத் தடுத்து
நிறுத்திய காவலர்கள் கூட்டத்தைக் கலைக்கும் பொருட்டு தடியடி நடத்தினர். அடிபட்டு விழுந்தவர்களை
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூட அவர்கள் முயற்சி செய்யவில்லை. அந்த ஊர்வலத்தைப்
பார்வையிட வந்த ருக்மணி அடிபட்ட தலைவர்கள் எல்லோரையும் தனது சொந்த வாகனத்தில் ஏற்றி
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த சென்னை நகர போலீஸ் கமிஷனரின் எச்சரிக்கையை
மீறி அடிபட்டவர்களோடு அவருடைய வாகனம் புறப்பட்டு சென்றது.
சட்டமறுப்பு இயக்கத்தில் பெண்களை பெருமளவில் பங்கேற்க வைப்பதற்கான
ஏற்பாடுகளை ருக்மணி செய்யத் தொடங்கினார். விருப்பமுள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள்
பெறப்பட்டன. அம்புஜம்மாள், ஞானாம்பாள், சகுந்தலா, கமலாபாய் போன்றோர் மாதர் பிரிவின்
தீவிர உறுப்பினர்களானார்கள். அவர்கள் அனைவரும் அயல்நாட்டுத்துணிகளை விற்பனை செய்யும்
கடைகள் முன்பாக நின்று மறியல் செய்து பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.
12.03.1932 அன்று சென்னை நகரில் தாண்டி யாத்திரை தினமாக கொண்டாடப்பட்டது.
பெண்கள் அணியுடன் ருக்மணி தேசியக்கொடியை கையிலேந்தி ஊர்வலமாகச் சென்றார். ஆங்காங்கே
திரண்டு நின்ற பொதுமக்களிடையில் அயல்நாட்டுத் துணிகளை ஏன் விலக்க வேண்டும் என விளக்கி
உரையாற்றினார். ஒரு திருப்பத்தில் காவலர்கள் அந்த ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தி கலைந்து
செல்லுமாறு கட்டளையிட்டனர். ருக்மணியும் பிற பெண்களும் அந்தக் கட்டளைக்கு மறுக்கவே,
காவலர்கள் அனைவரையும் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கே பெயருக்கு விசாரணை செய்த நீதிபதி ருக்மணிக்கும் மற்றவர்களுக்கும் ஆறுமாத சிறைத்தண்டனையும்
நூறு ரூபாய் அபராதமும் அதைச் செலுத்தத் தவறினால் மேலும் ஒரு மாத தண்டனையும் வழங்கினார். ருக்மணி மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
1933 பிப்ரவரியில் காந்தியடிகள் அரிஜன சேவா சங்கம் என்னும் அமைப்பை
உருவாக்கினார். அரிஜன் என்னும் பெயரில் ஒரு வாரப்பத்திரிகையையும் தொடங்கினார். தாழ்த்தப்பட்டவர்களின்
மேம்பாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கும் நோக்கத்தோடு சட்டமறுப்பு இயக்கத்தை காந்தியடிகள்
தற்காலிகமாக நிறுத்திவைத்தார். சிறையிலிருந்து விடுதலையான ருக்மணி காந்தியடிகளின் அறிவுரையை
ஏற்று தீண்டாமைக்கு எதிரான பிரச்சரத்தை மேற்கொள்ளத் தொடங்கினார்.
21.12.1933 அன்று காந்தியடிகள் சென்னைக்கு வருகை புரிந்தார்.
வட சென்னை அரிஜன சேவா சங்கத்தின் சார்பில் இராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில்
ஒரு பொதுக்கூட்டத்துக்கு ருக்மணி ஏற்பாடு செய்திருந்தார். அன்று காந்தியடிகள் ஆற்றிய
உரையை ஆதிகேசவலு நாயக்கர் மொழிபெயர்த்தார். உரை முடிந்ததும் அரிஜன முன்னேற்றத்துக்காக
நிதி திரட்டினார். 12 வயதான தன் மகளுடன் காந்தியடிகளை நெருங்கிய ருக்மணி தன் கையிலிருந்த
இரு தங்க வளையல்களையும் கழற்றி அரிஜன நிதிக்காகக் கொடுத்தார். அப்போது அருகிலிருந்த
தன் மகள் இந்திராவை காந்தியடிகளுக்கு அறிமுகப்படுத்தினார். அச்சிறுமியை அன்புடன் பார்த்த காந்தியடிகள் புன்னகைத்தபடி “என் அன்பார்ந்த இந்திரா
பாப்பா, உன் அம்மா அரிஜன நிதிக்காக தன் இரு தங்க வளையல்களைக் கொடுத்துவிட்டார். எனக்கு
நீ என்ன கொடுக்கப் போகிறாய்/” என்று கேட்டார். அச்சிறுமி சற்றும் தயங்காமல் தன் கையிலிருந்த
வளையல்களைக் கழற்றி காந்தியடிகளிடம் நீட்டினாள். அதைப் பார்த்த காந்தியடிகள் “உன் அம்மாவிடம்
ஒரு வார்த்தை கூட கேட்காமலேயே தருகிறாயே, அவரிடம் கேட்க வேண்டாமா?’ என்று கேட்டார்.
அதற்கு அச்சிறுமி அக்கணமே “நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள் தாத்தா, என் அம்மா ஒன்றும்
சொல்ல மாட்டார். மிகவும் மகிழ்ச்சியடைவார்” என்று சொன்னாள். ஆயினும் அக்கணம் காந்தியடிகள்
தயக்கத்துடன் ருக்மணியைப் பார்த்தார். ருக்மணி தன் மகளின் வளையல்களையும் அரிஜன நல நிதிக்காகப்
பெற்றுக்கொள்ளும்படி புன்னகையுடன் சொன்னார். அதன் பிறகு அவ்வளையல்களைப் பெற்றுக்கொண்ட
காந்தியடிகள் அச்சிறுமியை வாழ்த்தினார்.
மாண்டேகு செம்ஸ் போர்டு சட்டத்தின்படி 1934 டிசம்பர் மாதத்தில்
மத்திய, மாகாண சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. சென்னை மாகாண சட்டசபையில் நிரப்பப்படாமல்
இருந்த மூன்று இடங்களுக்கு தேர்தல் நடந்தது. தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களுக்குத் தலைமை
தாங்கிய ருக்மணி சென்னை வாக்காளர்கள் காங்கிரஸை ஆதரிப்பதன் மூலம் தம் தேசபக்தியை வெளிப்படுத்துமாறு
கேட்டுக்கொண்டார். அத்தேர்தலில் காங்கிரஸ் அடைந்த வெற்றியில் அவருக்கு முக்கியப் பங்குண்டு.
அச்சமயத்தில் எதிர்பாராதவிதமாக மாகாண கவுன்சில் உறுப்பினராக
இருந்த மல்லையா என்பவர் இறந்துவிட்டதை ஒட்டி நடைபெற்ற இடைத்தேர்தலில் ருக்மணியே வேட்பாளராக
நின்று வெற்றி பெற்றார். சட்ட மேலவைக்குத் தேர்வு பெற்ற முதல் பெண்மணி அவரே.
1937இல் மாகாண சட்டசபைக்கு தேர்தல் அறிவிப்பு வெளிவந்தது. காங்கிரஸ்
எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. சென்னை மாதர் தொகுதி வேட்பாளராக ருக்மணி நிறுத்தப்பட்டார்.
தீரர் எஸ்.சத்தியமூர்த்தியும் மற்ற தலைவர்களும் ருக்மணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர்.
இராஜாஜி தலைமையில் அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். சட்டப்பேரவையின் துணைச் சபாநாயகராக
ருக்மணி தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் நலன் கருதிய விவாதங்கள் வழியாகவும் எதிர்க்கட்சி
உறுப்பினர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்றும் ருக்மணி அனைவருடைய பாராட்டுதல்களுக்கும் உரியவரானார்.
கெடுவாய்ப்பாக, காங்கிரஸ் ஆட்சி இரு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.
ஜெர்மனிக்கு எதிராக இங்கிலாந்து போர்ப்பிரகடனம் செய்து, அந்த உலகப்போரில் இந்தியாவைக்
கட்டாயமாக ஈடுபடுத்த விரும்பியது அந்த முடிவை காங்கிரஸ் வன்மையாகக் கண்டித்தது.
23.10.1939 அன்று வார்தாவில் கூடிய காங்கிரஸ் செயற்குழு ஆங்கிலேய அரசின் தன்னிச்சையான
போக்கைக் கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் அமைச்சரவைகள் அனைத்தையும் பதவி வி்லகுமாறு கேட்டுக்கொண்டது.
சென்னை மாகாணத்தில் ராஜாஜியும் மற்ற அமைச்சர்களும் பதவி விலகினர்.
1940இல் காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.
முதல் சத்தியாகிரகியாக வினோபா களத்தில் இறங்கி போருக்கு எதிராக பிரச்சாரம் செய்து கைதானார்.
தமிழ்நாட்டில் ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜர், ஜீவானந்தம், ருக்மணி போன்ற பல தலைவர்களும்
கைது செய்யப்பட்டனர். ருக்மணிக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. உடனடியாக
அவர் வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ருக்மணி அம்மையார் சிறையில் இருந்த சமயத்தில் அவருடைய தியாகத்தையும்
அர்ப்பணிப்புணர்வையும் பாராட்டும் விதமாக கே.டி.ஆர்.வேனுகோபால் தாஸ் என்பவர் ஒரு பாடல்
தொகுதியை எழுதி வெளியிட்டார். மக்களின் தேசிய உணர்ச்சியை இப்பாடல்கள் தட்டி எழுப்பின.
இத்தொகுதியை வெளியிட்டது சட்டவிரோதமான செயல் என்று குற்றம் சுமத்தப்பட்டு, அச்சகத்தின்
உரிமையாளரான பெருமாள் நாயுடு என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தண்டனைக்காலம் முடிந்து அனைவரும் விடுதலை பெற்று வெளியே வந்திருந்த
சமயத்தில் இந்தியா, பாகிஸ்தான் என நாட்டை இரு பிரிவாகப் பிரிப்பது தொடர்பான பிரச்சினை
உச்சத்தில் இருந்தது. காந்தியடிகளைப் போன்ற தலைவர்கள் பிரிவினை கூடாது என்று கருதினர்.
ராஜாஜி போன்ற தலைவர்கள் ஒற்றுமைக்கு வழியற்ற சூழலில் பிரிவினையை ஏற்றுக்கொள்ளலாம் என்று
கருதினர். ருக்மணி போன்றவர்கள் காந்தியடிகளின் அணியில் நீடித்திருக்க, ராஜாஜியும் அவருடைய
நண்பர்களும் காங்கிரஸிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது.
1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியதும் தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டித் தலைவர் காமராஜர், உபயதுல்லா, அண்ணாமலைப்பிள்ளை, பக்தவத்சலம், முத்துரங்க
முதலியார் போன்றோர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். துணைத்தலைவரான
ருக்மணி கைது செய்யப்பட்ட போதும் சென்னை நகர போலீஸ் கமிஷனர் கடுமையான எச்சரிக்கையுடன்
விடுதலை செய்து அனுப்பிவைத்தார். தலைவர்கள் சிறையில் கழித்த மூன்றாண்டு காலமும் மிகுந்த
பொறுப்போடும் தேசபக்தியோடும் ருக்மணி காங்கிரஸை வழிநடத்தினார்.
தமிழ்நாடு காங்கிரஸை சட்டவிரோத அமைப்பு என அறிவித்த அரசு தடையுத்தரவு
விதித்தது. உடனடியாக ருக்மணி அம்மையார் முத்துரங்க முதலியாருடன் இணைந்து தமிழ்நாடு
காங்கிரஸ்காரர்கள் சங்கம் என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பை உருவாக்கினார். பிறகு மக்களிடையில்
சுதந்திர வேட்கை தணியாதபடி பிரச்சாரம் செய்வதையே தன் தலையாய கடமையெனக் கருதி தமிழ்நாட்டில்
எல்லா மாவட்டங்களுக்கும் தொடர்ச்சியாக இரண்டாண்டுகளுக்கும் மேலாக பிரயாணம் செய்தார்.
இரண்டாவது உலகப்போர் முடிவுற்ற பிறகு இந்தியாவில் சட்டபூர்வமாகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையெல்லாம் மீண்டும் பதவியில் அமர்த்தும் விதமாக அரசு
1946இல் பொதுத்தேர்தலை நடத்தியது. ராஜாஜி மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். தேர்தலில்
வெற்றி பெற்ற காங்கிரஸ் டி.பிரகாசம் தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. ஓராண்டு காலம்
மட்டுமே நீடித்த அவருடைய ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக ருக்மணி அம்மையார் பொறுப்பேற்றார்.
சட்டசபை விவாதங்களில் மாதர் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரலெழுப்பினார்.
அவருடைய காலத்தில்தான் மதுரையிலும் குண்டூரிலும் அரசு மருத்துவக்கல்லூரிகள் உருவாக
அனுமதி வழங்கப்பட்டது. ஆயுர்வேதம், யுனானி போன்ற இந்திய மருத்துவ முறைகளுக்கு உரிய
முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மலேரியா ஒழிப்புக்கு
முன்னுரிமை கொடுத்து மருத்துவ ஊழியர்கள் செயல்பட ஊக்கமளித்தார்.
1942இல் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற வெவ்வேறு போராட்டங்களில்
ஈடுபட்டு சிறைபுகுந்தவர்கள் பலர் இந்திய விடுதலைக்குப் பிறகும் சதிவழக்கில் ஈடுபட்ட
குற்றவாளிகள் என்னும் பெயருடன் கைதிகளாகவே சிறைகளில் வாடுவதை ஏராளமான சான்றுகளோடு சட்டமன்றத்தில்
வாதாடி வெற்றி பெற்றார். அவர்களுடைய விடுதலைக்காக கவர்னர் வரைக்கும் சென்று விவாதிக்கவும்
அவர் தயங்கவில்லை. அவருடைய அயராத உழைப்பே அனைத்துவிதமான அரசியல் கைதிகளும் விடுதலை
பெறுவதற்கு அடிப்படையாக அமைந்தது.
ஒருமுறை சட்டம் படிக்க விரும்பிய கார்த்தியாயினி என்னும் பெண்மணிக்கு
சட்டக்கல்லூரியில் இடம் மறுக்கப்பட்டது. ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு தண்டனை
பெற்று சிறைபட்டவர் என்பதுதான் கல்லூரி சொன்ன ஒரே காரணம். அந்தச் செய்தி சட்டசபையில்
விவாதப் பொருளான போது ருக்மணி அம்மையார் அந்தப் பெண்மணியின் சார்பாக பேசி வெற்றி பெற்றார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் சிறைத்தண்டனை பெற்ற ஒருவரை இந்தியர் ஆட்சியிலும் தண்டனைக்கைதியாகவே
பார்ப்பது சரியான பார்வையல்ல என்றும் அரசியல் கைதியாகவே இருந்தாலும் அவருக்குரிய கல்வி
கற்கும் உரிமையை ஒருபோதும் மறுக்கக்கூடாது என்றும் வாதாடினார். இறுதியில் ருக்மணி அம்மையாரின்
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு கார்த்தியாயினிக்கு சட்டக்கல்லூரியில் சேர அனுமதி வழங்கியது.
மன உறுதி உள்ளவர்களின் வாழ்க்கையில் அச்சத்துக்கும் இடமில்லை,
அவநம்பிக்கைக்கும் இடமில்லை என்பது காந்தியடிகளின் சொல். இயற்கையிலேயே மிகுந்த மனஉறுதியும்
கருணையும் கொண்ட ருக்மணி அம்மையார் தம் தியாக வாழ்க்கையின் வழியாக எளிய மக்களின் நெஞ்சில்
இடம்பிடித்தார். எதைக் கண்டும் அஞ்சாதவராகவும் நேர்மை சார்ந்து நிற்பவராகவும் இறுதிவரைக்கும்
வாழ்ந்தார்.
(சர்வோதயம்
மலர்கிறது – பிப்ரவரி 2022)