இந்திய தேசிய காங்கிரஸ் லாகூர் நகரின் ராவி நதிக்கரையில் 31.12.1929 அன்று இந்தியாவின் மூவண்ணக்கொடியை முதன்முதலாக ஏற்றியது. அதைத் தொடர்ந்து 26.01.1930 அன்று முழுவிடுதலையைப் பிரகடனப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக சட்ட மறுப்பு நடவடிக்கையைத் தொடரும் விதமாக ஒரு திட்டத்தை வகுத்துக்கொடுக்கும் பொறுப்பை காந்தியடிகளிடம் காங்கிரஸ் ஒப்படைத்தது. ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு காந்தியடிகள் ஆங்கிலேயரின் உப்புச்சட்டத்தை இலக்காக்கி அறவழியில் போராட்டத்தை முன்னெடுக்கும் திட்டமொன்றை உருவாக்கினார். அதன் முக்கியத்துவத்தை அன்றிருந்த பல தலைவர்களால் உடனடியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆயினும் காந்தியடிகள் மீதிருந்த நம்பிக்கையின் அடிப்படையில் அத்திட்டத்துக்கு இணங்கினர்.
12.03.1930 அன்று சபர்மதி ஆசிரமத்திலிருந்து காந்தியடிகள் எழுபத்தெட்டு
சத்தியாகிரகிகளோடு குஜராத்தின் கடற்கரைச் சிற்றூரான தாண்டி என்னும் இடத்துக்கு நடந்தே
சென்றார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பின்தொடர இருநூற்று நாற்பது கிலோமீட்டர் தொலைவை
இருபத்துமூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடந்து தாண்டி கடற்கரையை அவர்கள் அடைந்தனர்.
06.04.1930 அன்று கடற்கரையில் ஒரு பிடி உப்பை அள்ளியெடுத்து உயர்த்திப் பிடித்தபடி
“இதன் மூலமாக ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தையே அசைக்கிறேன்” என்று அறிவித்தார்
காந்தியடிகள். தன்னைச் சூழ்ந்திருந்த தொண்டர்களிடம் கடற்கரையில் வசதிப்படும் இடத்தில்
கடல்நீரைக் காய்ச்சி தனக்குத் தேவையான உப்பை எடுத்துக்கொள்ளுமாறு சொன்னார்.
ஏறத்தாழ ஒரு மாத காலம் அந்தப் போராட்டம் நீடித்து தேசத்தையே
திரும்பிப் பார்க்க வைத்தது. 05.05.1930 அன்று தராசன் என்னும் இடத்தில் உப்புச்சட்டத்தை
மீறும்போது காந்தியடிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தனர் அதிகாரிகள். அதைக் கண்டித்து
நாடெங்கும் எதிர்ப்பு ஊர்வலங்களும் கூட்டங்களும் நடைபெற்றன. அப்போது கோவையில் பீளமேடு
சர்வஜனப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பதினெட்டு வயதே நிறைந்த மாணவரொருவர் தன் பள்ளியில்
படிக்கும் மாணவர்களைத் திரட்டிக்கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்றார்.
படிக்கும் காலத்திலேயே காந்தியடிகளின் கொள்கைகளால் அவர் ஈர்க்கப்பட்டிருந்தார். காந்தியடிகளைப்போலவே
அறவழியில் நடந்து மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவர் ஆழ்மனத்தில் பதிந்திருந்தது.
ஊர்வலத்தைப் பாதியில் தடுத்து நிறுத்திய காவலர்கள் அந்த இளைஞரையும்
முன்னணியில் முழக்கமிட்ட மாணவர்களையும் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
காவல்துறை அதிகாரி கேட்ட கேள்விகளுக்கு அஞ்சாமல் உண்மையான பதில்களைச் சொன்னார் அந்த
இளைஞர். உண்மையை ஏற்றுக்கொள்ளும் அவருடைய பண்பைக் கண்டு வியந்த அந்த அதிகாரி, அவருடைய
இளம்வயதைக் கருத்தில் கொண்டு அந்த இளைஞரையும் பிற மாணவர்களையும் கண்டித்து விடுதலை
செய்து அனுப்பிவைத்தார். அஞ்சாத நோக்கும் அறவழியில் உறுதியான பற்றும் கொண்டிருந்த அந்த
இளைஞரின் பெயர் என்.ஜி.ராமசாமி.
முதல் உலகப்போருக்கு முந்தைய காலம் வரை நாடெங்கும் ஆங்கிலேயர்களே
பஞ்சாலைகளைத் தொடங்கி நடத்தி வந்தனர். ஆனால் உலகப்போருக்குப் பிறகு நிலைமை மாறியது.
பல உள்ளூர்ப் பணக்காரர்கள் பஞ்சாலைகளைத் தொடங்கினர். பஞ்சத்தின் காரணமாக பிழைக்க வழியில்லாத
பாமர மக்கள் பஞ்சாலைகளில் தொழிலாளிகளாக வேலை செய்ய முன்வந்தனர். நேரக் கட்டுப்பாடு
எதுவுமில்லாமல் அத்தொழிலாளிகளிடமிருந்து ஒரு நாளைக்கு பத்து மணி நேரம், பன்னிரண்டு
மணி நேரம் என முதலாளிகள் வேலை வாங்கினர். அச்சூழலில் பள்ளிப்படிப்பை முடித்த இளைஞர்
ராமசாமி பஞ்சாலை இயந்திரங்களைப் பொருத்தவும் பழுது பார்க்கவும் பொழுதுபோக்காகக் கற்றுக்கொண்டார்.
பிறகு, அதுவே அவருடைய வேலையாக மாறியது. வேலை பழகும் வாய்ப்பு இருந்த எல்லா ஆலைகளுக்கும்
அவர் வேலைக்குச் சென்றார். கோவை லட்சுமி மில், ரங்கவிலாஸ் மில், ஜனார்த்தனா மில், முருகன்
மில் என பல ஆலைகளிலும் வேலை செய்துவிட்டு சரோஜா மில்லில் பணிபுரியத் தொடங்கினார். ஊழியராக
வேலைக்குச் சேர்ந்த அவர் வெகுவிரைவிலேயே மாஸ்டராக பணி உயர்வு பெற்றார். அதே நேரத்தில்
அந்த ஊருக்குள் ஒத்த எண்ண அலைவரிசை உள்ள பத்து பதினைந்து நண்பர்களை ஒருங்கிணைத்த ராமசாமி
’உண்மை உள்ளக் கழகம்’ என்னும் பெயரில் ஓர் அமைப்பை நிறுவி ஓய்வு நேரங்களில் ஊர்ப்பணிகளில்
ஈடுபட்டு வந்தார்.
வேலை நேரத் தகராறு காரணமாக கோவை ஸ்டேன்ஸ் மில்லில் 1935இல் வேலை
நிறுத்தம் நடைபெற்றது. தொழிலாளருக்குப் பக்கபலமாக இருக்கும்பொருட்டு சென்னை தொழிற்சங்கங்களுக்குத்
தலைவராக இருந்த பாசுதேவ் என்பவர் கோவைக்கு அழைத்துவரப்பட்டார். கோவை தொழிலாளர் சங்கம்
1936இல் பதிவு செய்யப்பட்டது. திருப்பூரிலும் ஒரு சங்கம் உருவானது. என்.ஜி.ரங்கா என்பவர்
அதே ஆண்டில் சோஷலிஸ்ட் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் ஒன்றைத் தொடங்கினார். இப்படி பல
தொழிற்சங்கங்கள் களத்தில் இருந்த சமயத்தில் 1937இல் மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு
வெளியானது.
இந்திய தேசிய காங்கிரஸ் அத்தேர்தலில் முதன்முதலாக பங்கெடுக்கத்
தீர்மானித்தது. அரசியல் நிர்ணய சட்டத்தின்கீழ் சென்னை மாகாணத்தில் 215 தொகுதிகளில்
ஆறு இடங்கள் தொழிலாளர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்தன. அவற்றில் கோவை – மலபார் பஞ்சாலைத்
தொழிலாளருக்கான தொகுதியும் ஒன்று. தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு தொழிலாளரோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தைச்
சேர்ந்த ஒரு நிர்வாகியோ அத்தொகுதியில் வேட்பாளராக போட்டியிடலாம் என்பது விதி. தொழிற்சங்கத்
தலைவராக பணியாற்றிய அனைவரும் வேட்பாளராகப் போட்டியிட ஆர்வம் காட்டினர். முதலாளிகளின்
ஆதரவு பெற்ற ஆசாமி ஒருவரையே காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தவும் சிலர் முயற்சி செய்தனர்.
கட்சியின் மேலிடத் தலைவர்களின் ஒத்துழைப்போடு சென்னை சோஷலிஸ்ட் தலைவரொருவரை அழைத்துவந்து
நிறுத்தவும் ஓர் அணி வேலை செய்தது. இறுதியில் கல்வி, தொழில், அனுபவம், ஒழுக்கம், காந்திய
நெறிகள் மீது கொண்டிருந்த பற்று ஆகியவற்றின் காரணமாக காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்
வாய்ப்பு தொழிலாளிகளில் ஒருவராக இருந்த ராமசாமியைத் தேடி வந்தது. பாசுதேவ் ஜஸ்டிஸ்
கட்சியின் சார்பில் நின்றார்.
தேர்தல் பிரச்சாரம் ஒரு கடுமையான போராட்டமாகவே நடைபெற்றது. தேர்தல்
முடிவடைந்து வாக்கு எண்ணப்பட்டபோது பாசுதேவைவிட 1536 வாக்குகள் அதிகமாகப் பெற்று ராமசாமி
வெற்றி பெற்றார். ராமசாமியின் வெற்றி தொழிலாளர்களிடையில் புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும்
ஏற்படுத்தியது. தொழிலாளர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆறு தொகுதிகளிலும் காங்கிரஸ்
கட்சியே வென்றது. மொத்தம் 215 இடங்களில் 158 இடங்களைப் பெற்று காங்கிரஸ் ஆட்சியமைத்தது.
பஞ்சாலை நிர்வாகிகளோடு பேசுவது, அதிகாரிகளைச் சந்தித்து உரையாடுவது,
அலுவலக வேலைகளைக் கவனிப்பது என ஒரே நேரத்தில் குவியும் எண்ணற்ற வேலைகளை எவ்வித பரபரப்புமின்றி
மேற்கொள்ளும் ஆற்றல் ராமசாமியிடம் இயல்பாகவே குடிகொண்டிருந்தது. நினைத்த நேரத்தில்
நினைத்த இடத்தில் தங்கவும் உறங்கவும் உண்ணவும் அவர் பழகியிருந்தார். எந்தத் தொழிலாளியின்
வீடும் அவர் வீடே. தொழிலாளர்களின் புகார்களை உடனுக்குடன் நிர்வாகிகளைச் சந்தித்து தீர்வு
காண்பதில் அவர் எப்போதும் துடிப்போடு இயங்கினார். அவர் ஒருபோதும் தயவுதாட்சண்யம் பார்த்ததில்லை.
தயக்கமும் நாசுக்கும் அவருக்குத் தெரியாத அம்சங்கள். ஒருபுறம் அவர் அமைதியின் உருவம்.
மறுபுறமோ அவர் பெரும்கோபக்காரர்.
தொழிலாளர்களை அச்சுறுத்தி வேலை வாங்கும் போக்கினை முதலாளிகள்
கைவிடாததால், இரு தரப்பினரிடையில் அடிக்கடி வாக்குவாதங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு முறையும்
முதலாளிகள் புதுப்புது நிபந்தனைகளை விதித்து தொழிலாளர்களை மிரட்டினர். அடிபணிய மறுப்பவர்களை
அக்கணமே வேலையை விட்டு நீக்கினர். ஒவ்வொரு நாளும் அதிக ‘சைடு’ கட்டவும் இயந்திரம் ஓடும்போதே
சுத்தம் செய்யவும் தொழிலாளிகளுக்கு நெருக்கடி கொடுத்தனர் முதலாளிகள். அதைச் செய்ய மறுத்ததற்காக
தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கினர். வேறு வழியின்றி, தொழிலாளிகள் வேலை நிறுத்தம்
செய்தனர். வேலை நிறுத்தத்தை உடைப்பதற்காக வேறொரு ஆலையிலிருந்து ஆட்களைக் கொண்டுவர நிர்வாகம்
முயற்சி செய்தது. உடனடியாக அதைப்பற்றி அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார் ராமசாமி.
உடனே அரசு தலையிட்டு அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தியது.
ஒருமுறை புலியகுளம் என்னும் ஊரில் வேலைநிறுத்தப் பொதுக்கூட்டத்தில்
பேசிவிட்டு இரவு நேரத்தில் மிதிவண்டியில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் ராமசாமி.
அப்போது அடையாளம் தெரியாத சிலர் அவரைச் சுற்றி வளைத்து தாக்கினர். அடி தாளாத ராமசாமி
மயங்கி விழுந்தார். இரு தினங்களுக்குப் பிறகே அவருக்கு சுயநினைவு திரும்பியது. அப்போது
தொழிலமைச்சராக இருந்த வி.வி.கிரி கோவைக்கு வந்து ராமசாமியைச் சந்தித்து எல்லா விவரங்களையும்
கேட்டுத் தெரிந்துகொண்டார். அன்றே, தொழிற்சங்கத்தினரிடமும் முதலாளிகளிடமும் பேச்சு
வார்த்தை நடத்தினார். அதன் விளைவாக இரு தரப்பினரிடையிலும் ஓர் உடன்பாடு ஏற்பட்டது.
பழி வாங்கப்பட மாட்டாது, அனைவரும் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள், இயந்திரம்
ஓடும்போது சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை, வேலை நிறுத்தக் காலத்துக்குக் கூலியில்லை
உள்ளிட்ட பன்னிரண்டு அம்சங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன. இரு தரப்பினரும் அவற்றை ஏற்று
கையெழுத்திட்டனர். ஆலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின.
ஒரு மாத காலத்திலேயே தொழிலாளிகள் – முதலாளிகள் மோதல் மீண்டும்
புகையத் தொடங்கியது. தீபாவளி சமயத்தில் போனஸ் என்னும் பெயரால் ஒரு சிறு தொகை இனாமாகக்
கொடுப்பது பல ஆண்டுகளாக நீடித்துவந்த ஒரு பழக்கம். தொழிலாளிகளைப் பழிவாங்கக் கருதிய
முதலாளிகள் அந்த ஆண்டு இனாம் கொடுக்க மறுத்தனர். இந்த அதிருப்தி மெல்ல மெல்ல பெருகி
மீண்டும் வேலை நிறுத்தத்தில் முடிந்தது. ராமசாமியின் அழைப்புக்கு இணங்கி கோவைக்கு வந்த
தொழிலமைச்சர் இரு தரப்பினரிடையேயும் பேச்சு வார்த்தை நடத்தினார். அரசாங்கம் ஒரு விசாரணை
மன்றம் அமைக்குமென்றும் இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டு அது ஒரு முடிவை அறிவிக்கும்
என்றும் அவர் உறுதியளித்தார்.
அமைச்சரின் முடிவை ஒரு சில ஆலைகளின் சங்கங்கள் ஏற்றுக்கொள்ள,
பிற சங்கங்கள் கட்டுப்பட மறுத்தன. காங்கிரஸ் கட்சியினர் தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபடுவதை
அவர்கள் விரும்பவில்லை. சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து தாம் ஒரு தொழிலாளர்
பிரதிநிதி என்றும் அவர்களுடைய நன்மைகளுக்காகப் பாடுபட கடமைப்பட்டவன் என்றும் ராமசாமி
உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கை ராமசாமியின் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் பிரதிபலித்தது.
அவர் ஒருபோதும் குறுகிய கட்சிக்கண்ணோட்டத்துடன் நடந்துகொண்டதுமில்லை, வித்தியாசம் பாராட்டியதுமில்லை.
இதற்கிடையில் ராமசாமிக்கு வாக்களித்தபடி விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை
தொடங்கியது. இரு மாத காலம் தொடர்ச்சியாக விசாரித்த பிறகு அந்த நீதிமன்றம் சேமநலத் திட்டங்கள்,
வேலை நேரமும் ஷிப்டுகளும், தொழிற்சங்கங்கள், சம்பளம், வேலை நிலைமைகள் ஆகிய ஐந்து முக்கியமான
தலைப்புகளின் தன் பரிந்துரைகளை அளித்தது. இரு தரப்பினரும் அவற்றை ஏற்றுக்கொண்டதால்
தற்காலிகமாக போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆலைகள் இயங்கத் தொடங்கின.
ராமசாமியின் அயராத உழைப்பால் தொழிலாளர் இயக்கம் வலிமை கொள்வதை
முதலாளிகள் சிறிதும் விரும்பவில்லை. அவருக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தைச் செய்தனர்.
பீளமேடு மைதானத்தில் ராமசாமி ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது கல்லெறி
நடைபெற்றது. அடுத்த ஆறேழு மாதங்களும் போராட்டங்களிலும் சமரச முயற்சிகளிலுமே காலம் கரைந்தது.
தொழிலாளர் இயக்கத்துக்கு வலிமை சேர்க்கும் விதமாக அடிக்கடி சங்கக் குழுவினர் கூடி கூட்டம்
நடத்தினர். கோவை வேலை நிறுத்தம் திருப்பூர் வரைக்கும் பரவியது. சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன்
கோயில் மைதானத்தில் முதலாவது பஞ்சாலைத் தொழிலாளர் மாநாடு நடைபெற்றது. இரவுபகல் பாராமல்
பல ஊர்களிடையில் தொடர்ச்சியாக பயணம் செய்துகொண்டிருந்த சமயத்தில் முதலாளிகளால் அனுப்பப்பட்ட
குண்டர்கள் இரவு வேளையில் மீண்டும் ராமசாமியைத் தாக்கிவிட்டு தலைமறைவாயினர். மருத்துவச்
சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறும் வரைக்கும் காத்திருந்த ராமசாமி மீண்டும் தொழிலாளர்களிடையில்
தோன்றி பணிபுரிந்தார். இரண்டு முறை சட்டசபையில் முதலமைச்சர் முன்னிலையில் தொழிலாளர்
நிலை குறித்து ராமசாமி ஆற்றிய உருக்கமான உரைகள் கோவை பஞ்சாலைகளின் நிலைமையை ஊரறியச்
செய்தன.
இரண்டாம் உலகப்போரில் தன்னிச்சையாக இந்தியாவை இணைத்துக்கொண்ட
பிரிட்டன் அரசின் போக்கைக் கண்டிக்கும் விதமாக பல மாகாணங்களில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த
காங்கிரஸ் 1939இல் ஆட்சியைக் கலைத்துவிட்டு வெளியேறியது. அதைத் தொடர்ந்து தலைவர்கள்
அனைவரும் நாடெங்கும் போர் எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கினர். ஆழ்ந்த ஆலோசனைக்குப்
பிறகு, 13.10.1940 அன்று வார்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு
எதிராக காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகத்தை அறிவித்தார். முதல் சத்தியாகிரகியாக வினோபா
களத்தில் இறங்கி போருக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். ஆங்கிலேய அரசு அவரை உடனடியாக
கைது செய்து சிறையில் அடைத்தது. அவரைத் தொடர்ந்து
தேசமெங்கும் ஒவ்வொரு மாகாணத்திலும் சத்தியாகிரகிகள் போராட்டத்தில் இறங்கினர். தமிழ்நாட்டின்
முதல் சத்தியாகிரகியாக தி.சே.செள.ராஜன் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைபுகுந்தார். கோவை
மாவட்டத்தின் முதல் சத்தியாகிரகியாக ராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
22.11.1940 அன்று சிங்காநல்லூரில் ராமசாமி சத்தியாகிரகம் செய்தார்.
யுத்த எதிர்ப்புப் பிரசுரங்களை எழுதி யுத்தக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிவைத்ததாக
காவல்துறை ராமசாமியின் மீது குற்றம் சுமத்தி கைது செய்து சிறையில் அடைத்தது.
03.12.1940 அன்று கோவை மத்திய சிறைக்குள்ளேயே நடைபெற்ற விசாரணையில் தன்னுடைய யுத்த
எதிர்ப்பு நிலைபாட்டை ராமசாமி துணிவோடு வெளியிட்டார். அதைக் கேட்ட நீதிபதி தன் தீர்ப்பில்
அவருக்கு ஓராண்டுக் காலம் சிறைத்தண்டனை வழங்குவதாக அறிவித்தார். வேலூர் சிறையிலும்
திருச்சி சிறையிலுமாக அவருடைய தண்டனைக்காலம் கழிந்தது. சிறைத்தண்டனையின் துன்பத்தைவிட,
சத்தியாகிரகத்துக்கு முன்பாக, தொழிலாளர்களுக்கு பஞ்சப்படி வாங்கித் தரவேண்டியது தொடர்பாக
தொடங்கிய பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டாத நிலையில் சிறைக்கு வந்துவிட்டோமே என்னும்
எண்ணமே அவருக்குத் துன்பமாக இருந்தது. அத்தருணத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் அவருக்கு
எப்போதும் உதவியாக இருக்கும் ஆறுமுகம் என்னும் நண்பர் எதிர்பாராத விதமாக உடல்நலம் குன்றி இயற்கையெய்திவிட்டார். அந்த மறைவுச்செய்தி ராமசாமியின்
உடல்நலத்தையும் சீர்குலைத்தது. ஏற்கனவே இயக்கச் செயல்பாடுகளுக்காக கடன் கொடுத்திருந்தவர்கள்
தொகையைத் திருப்பிக் கேட்டு சிறை முகவரிக்கு கடிதங்கள் எழுதி நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர்.
அது அவர் மனநிலையை கடுமையாகப் பாதித்தது. தண்டனைக்காலம் முடிந்து மெலிந்தும் நலிந்தும்
சிறையிலிருந்து விடுதலை பெற்று வந்தபோது, சிங்காநல்லூரி்ல் அவரை வரவேற்பதற்காகக் காத்திருந்த
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவருடைய நிலையைக் கண்டு கண்ணீர் வடித்தனர்.
யுத்தத்தின் விளைவாக உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. கிடைக்கும் பொருட்களின் விலை பல மடங்காக ஏறிவிட்டது.
அதன் சுமையைத் தாங்கமுடியாமல் தொழிலாளிகள் மனம் சோர்ந்திருந்தனர். முதலாளிகளோ யுத்தத்துக்கு
ஆதரவாக நின்று அரசு அதிகாரிகளின் நட்போடு தொழிலாளர் நலனைப் புறக்கணித்து அடிமைபோல வேலை
வாங்கத் தொடங்கினர். அலவன்ஸ் வேலைநிறுத்தப்
போராட்டத்தில் கலந்துகொண்டதற்குப் பழிவாங்கும் வகையில் மூவாயிரம் தொழிலாளர்களை வேலைக்கு
எடுக்காமலேயே காலம் தாழ்த்தினர். இன்னொரு பக்கம் கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் குழப்பம் மிக்க இத்தருணத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் வசமிருந்த
தொழிலாளர் அமைப்புகளைத் தன் பக்கமாக இழுக்க முயற்சி செய்தனர்.
விடுதலை பெற்ற ராமசாமி தன் நோயை மறந்து பஞ்சாலைச்சங்கத்தை மீண்டும்
கட்டமைக்கும் முயற்சியில் இறங்கினார். ஒருபோதும் காந்திய வழியிலிருந்து விலகிவிடாது
மன உறுதியோடு தொழிலாளர்களை ஒன்று திரட்டினார்.
தொழிலாளர்களைப் பத்து பிரிவாகப் பிரித்து வேலைகளைத் தீவிரப்படுத்தினார். எங்கும்
சங்கப்பணிகள் புதுவேகத்தோடு நடைபெற்றன. எங்கெங்கும் கூட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.
அந்த ஆண்டு மட்டும் அதுவரை எப்போதும் இருந்திராத அளவுக்கு தொழிற்சங்கத்தில் 6600 பேர்
உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். பல இடங்களில் அலைந்து திரிந்து நிதி திரட்டி, சங்கத்துக்காக
சிங்காநல்லூரில் ஒரு கட்டிடம் சொந்தமாக வாங்கப்பட்டது. தொழிலாளர்களிடம் புதிய உற்சாகமும்
நம்பிக்கையும் பிறந்தன. அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க வளர்ச்சி தொழிலாளர்களிடையில்
பிளவை உருவாக்கியது. ஓர் அணியைப் பார்த்து மற்றோர் அணி பொறாமை கொள்வதும் மோதிக்கொள்வதும்
சபலம் கொள்வதும் அடிக்கடி நிகழ்ந்தன. இரு அணிகளுக்கும் இடையில் ஒற்றுமையை உருவாக்குவதற்காக
பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் ஒரு பயனையும் அளிக்கவில்லை. பாதுகாப்பு
கருதி கோவை பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸில் இணைந்தது.
ராமசாமிக்கு தொழிலாளர்களின் ஆதரவு பெருகப்பெருக பஞ்சாலை முதலாளிகளின்
எதிர்ப்பு நடவடிக்கைகளும் தீவிரமாகின. ஒவ்வொரு பஞ்சாலையிலும் ஏற்கனவே தொடங்கப்பட்டு
செயல்படாமல் இருந்த நிர்வாகச் சார்புடைய சங்கங்கள் புதுப்பிக்கப்பட்டன. தொழிலாளர்களைக்
கட்டாயப்படுத்தி அவற்றில் உறுப்பினர்களாக இணைத்து கட்டாயச்சந்தா பெற்றனர். சங்க எதிர்ப்புவேலைகள்
மறைமுகமாக நடந்தன. காங்கிரஸைச் சேர்ந்த சில முதலாளிகளே தொழிலாளர் இயக்கத்தை ஒழித்துவிட
முயற்சி செய்தனர். காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகிய பிறகு யுத்த நிதிக்கு நன்கொடைகள்
வழங்கி ஆங்கில அதிகாரிகளின் ஆதரவைப் பெற்றனர். அவர்கள் எதைச் செய்தாலும் மன்னித்துவிட
அரசு தயாராக இருந்தது.
ஒருமுறை முருகன் மில் நிர்வாகம் திடீரென ஒரு ஷிப்டை நிறுத்தி
நூறு தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவதாக அறிவித்தது. வேலைக்கு வந்த தொழிலாளர்கள்
அனைவரும் வாசலிலேயே நிறுத்தப்பட்டனர். செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்த ராமசாமியும்
அவருடைய நண்பர்களும் உடனடியாக பஞ்சாலைக்கு விரைந்து சென்று முதலாளியைச் சந்தித்துப்
பேசினார். தனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள
முதலாளி மறுத்தார். மணிக்கணக்கில் பேசியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பிற்பகலில்
பேச்சுவார்த்தையைத் தொடரலாம் என்று தெரிவித்துவிட்டு, முதலாளியும் அவரோடு இருந்த வணிகர்களும்
ஆலையைவிட்டு வெளியே சென்றுவிட்டனர். மீண்டும் ஆலைக்கதவு இழுத்து மூடப்பட்டது.
ராமசாமியும் அவருடைய நண்பர்களும் ஏமாற்றத்துடன் சங்க அலுவலகத்தை
நோக்கி நடந்தபோது, பயங்கர ஆயுதங்களோடு ஒரு கும்பல் அவர்களைச் சுற்றி வளைத்துத் தாக்கத்
தொடங்கியது. அடிமேல் அடிவிழ ராமசாமி மயங்கி வீழ்ந்தார். அக்கலவரத்தில் சின்னக்குட்டி
கவுண்டர் என்பவர் கொலையுண்டார். இன்னொருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. அடிபட்ட ராமசாமியை
உடனடியாக மருத்துவ மனையில் சேர்த்ததால் உயிர் பிழைத்தார்.
1942இல் ஜூலை மாதத் தொடக்கத்தில் வார்தாவில்
கூடிய காங்கிரஸ் செயற்குழு வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான ஆயத்தத்தைத் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து 08.08.1942 அன்று பம்பாய் நகரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில்
ஆயிரக்கணக்கி திரண்டிருந்த மக்களிடையில் காந்தியடிகள் உரையாற்றினார். உரையின் இறுதியில்
வெள்ளையனே வெளியேறு தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அடுத்தநாள், பெரும்பாலான
காங்கிரஸ் தலைவர்களை அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. தலைவர்களின் கைதுச் செய்தியை
அறிந்த ராமசாமி அன்று மாலையில் சிதம்பரம் பூங்காவில் பொதுமக்களைத் திரட்டி ஒரு பொதுக்கூட்டத்தை
நடத்தினார். ராமசாமியுடன் கே.பி.திருவேங்கடம், ப.சு.சின்னத்துரை, கே.வி.ராமசாமி ஆகியோர்
உரையாற்றினர்.
வெள்ளையனே வெளியேறு என திட்டவட்டமான கோரிக்கையை
முன்வைத்திருந்த போதிலும் தலைவர்கள் அனைவரும் சமரச எண்ணம் உடையவர்களாகவே இருந்தனர்.
அரசுடன் நிகழ்த்தவிருந்த சமரசப்பேச்சை துரிதப்படுத்தும் வாய்ப்பாகவே அத்தீர்மானத்தைக்
கருதினர். ஒருவேளை சமரசப்பேச்சு எதிர்பார்த்த பலனை அளிக்காவிட்டால் அகிம்சை வழியில்
வெகுஜன கிளர்ச்சியை நடத்தவே அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அந்த வெகுஜன கிளர்ச்சி நேசநாடுகளின்
யுத்த முயற்சிக்கு எவ்விதமான குந்தகத்தையும் ஏற்படுத்தாது என வெளிப்படையாகவே அறிவித்திருந்தனர்.
நல்லெண்ணமும் அனுசரணையும் கொண்ட தம் அணுகுமுறையின் காரணமாக அரசு அவசரப்பட்டு விபரீதமான
எந்த முடிவையும் எடுக்காது எனக் கருதியிருந்தனர். ஆனால் சுதந்திரமடைய ஆயுதமேந்திய போராட்டமே
வேண்டும் என்று கருதிய சோஷலிஸ்டுகள் தம் திட்டங்களுக்கு காங்கிரஸ் தேசபக்தர்களிடையே
ஆதரவைத் திரட்டினர். தலைவர்கள் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டு மனம் குலைந்திருந்த
தேசபக்தர்கள் ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் திகைத்து நின்றதால் அக்கூட்டத்தின் தலைமைப்
பொறுப்பை அவர்களாகவே எடுத்துக்கொண்டனர். இறுதிப் போராட்டத்துக்கான திட்டங்களை வகுத்து
நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பி வைத்தனர். கோவைக்கு வந்த போராட்டத்தின் நகல்
தொழிற்சங்கத் தலைவரான ராமசாமியின் கையில் கிடைத்தது. ஒண்டிப்புதூரில் ஐம்பதுக்கும்
மேற்பட்ட தொழிற்சங்க ஊழியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அந்தத் திட்டம் பரபரப்புடன் விவாதிக்கப்பட்டது.
ராணுவத்தளவாடங்களை ஏற்றிச் செல்லும் ரயில்களைக்
கவிழ்ப்பது, விமானத்தளத்தை அழிப்பது, சிறைகளை உடைத்து கைதிகளை விடுதலை செய்வது, இறுதியாக
ஆட்சியைக் கைப்பற்றுவது என்பதுதான் அவர்கள் வகுத்தளித்த திட்டம். ஒவ்வொரு வேலைக்கும்
ஒரு குழுவென ஆறு குழுக்கள் பிரிக்கப்பட்டு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. இந்தச் சந்திப்புகளைப்பற்றி
தொடக்கத்தில் தீவிரமாக எடுத்துக்கொள்ளாத காவல்துறை அதிகாரிகள் தமக்குக் கிடைத்த உளவுச்செய்தியின் விளைவாக நாலைந்து
நாட்களிலேயே எச்சரிக்கையுடன் இருக்கத் தொடங்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழிற்சங்கத்
தலைவரும் தேசிய இயக்கத்தின் முன்னோடியுமான ராமசாமியை 13.08.1942 அன்று கைது செய்து
சிறையில் அடைத்தது.
அன்று நள்ளிரவு திட்டமிட்டபடியே ராணுவத் தளவாடங்களை
ஏற்றிச் சென்ற ரயில் கவிழ்க்கப்பட்டது. பன்னிரண்டு பெட்டிகள் கவிழ்ந்து உருண்டன. சூலூர்
ராணுவ விமானத் தளத்தை அழிக்கும் வேலையை ஏற்றிருந்த குழு விமான நிலையத்துக்குச் சென்றபோது
அங்கு விமானம் எதுவும் தென்படவில்லை. இருபத்தைந்து சரக்குவாகனங்களும் முப்பது கொட்டகைகளும்
மட்டுமே இருந்தன. அவையனைத்தையும் அந்தக் குழு தீக்கிரையாக்கியது.
அடுத்து, சூலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு
ஆயுதங்களைக் கைப்பற்றுவது, கோவை மத்தியச் சிறையைக் கைப்பற்றி கைதிகளை விடுதலை செய்வது,
அரசாங்கக் கருவூலத்தையும் ஆட்சியர் அலுவலகத்தையும் கைப்பற்றுவது என பல திட்டங்களை நிறைவேற்றும்
ஆவேசத்தில் குழுக்கள் இருந்தன. ஆனால் எதிர்பாராத விதமாக விமான நிலையம் தீக்கிரையானபோது
ஒருவருக்கும் தெரியாமல் தப்பி ஓடிய ஒரு வாகனஓட்டி கோவைக்கு ஓடிச் சென்று உயரதிகாரிகளுக்கு
தகவல் கொடுத்துவிட்டார். உடனே விழித்துக்கொண்ட காவல் துறையினர் ஒவ்வொருவரையும் வலைவீசித்
தேடினர். அதை அறிந்த சங்க உறுப்பினர்கள் சிலர் தலைமறைவாக ஒளிந்து திரியத் தொடங்கினர்.
நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது காவல் துறையினரின்
கொடுமைகள் எல்லை மீறின. தேடுதல் வேட்டை என்னும் பெயரில் சங்க ஊழியர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.
காவல் துறையினர்க்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் 22.08.1942 அன்ற் மோதல் வெடித்தது.
பங்கஜா மில் வாசலில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
அப்பாவித்தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட
அடக்குமுறைகளைப்பற்றிய செய்திகள் கிடைத்ததும் ராமசாமி துயரத்தில் மூழ்கினார். திட்டமிட்டபடி
எதுவும் நடைபெறவில்லையே என்கிற வருத்தத்தால் மனம் உடைந்து நிலைகுலைந்தார். இரு மாத
இடைவெளியில் கோவை சிறையிலிருந்து ராமசாமி வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த இடமாற்றம்
அவரை மனத்தளவில் பெரிதும் பாதித்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய உடல்நிலை நலியத் தொடங்கியது.
எந்த நேரமும் அவருக்கு மரணம் நிகழ்ந்துவிடலாம் என்கிற நிலையில் 16.03.1943 அன்று காவல்துறை
அவரை விடுதலை செய்ய முடிவெடுத்தது. ‘உடல்நிலை ஆபத்தாக உள்ளது. வந்து அழைத்து செல்லவும்’
என்று ராமசாமியின் வீட்டு முகவரிக்கு தந்தி அடித்தது. உடனே ராமு என்னும் நண்பர் கோவையிலிருந்து
வேலூருக்குப் புறப்பட்டுச் சென்றார். ஆனால் உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருந்த ராமசாமியை
விடுதலை செய்த காவல்துறையினர் தன்னந்தனியே இரக்கமற்ற முறையில் கோவை செல்லும் ரயிலில்
ஏற்றி அனுப்பி வைத்துவிட்டனர். தன்னந்தனியாக கோவை நிலையத்தில் இறங்கிய ராமசாமியை, தற்செயலாக
அங்கே சென்ற டாக்டர் பிரகாசம் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று மூன்று நாட்கள் வைத்திருந்து
சிகிச்சையளித்தார். அதற்குப் பிறகு செய்தியறிந்து அவரைத் தேடி வந்த ராமசாமியின் சகோதரி
தன்னுடன் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் பார்த்தார். காமாலை
நோயிலிருந்து மீண்டு வந்த ராமசாமி நிலைகுலைந்திருந்த தொழிற்சங்கத்தை மீண்டும் கட்டமைத்து
வலுப்பெற வைக்க முயற்சி செய்தார். ஆனால் அவருடைய மனத்துக்கு இருந்த உறுதியும் ஆற்றலும்
அவருடைய உடலுக்கு இல்லை. இரண்டு நாட்கள் நினைவு திரும்பாமலேயே படுக்கையில் கிடந்து
12.02.1943 அன்று மறைந்தார்.
கருணையும் தன்னலமற்ற உழைப்பும் திடமான மன உறுதியும்
பொதுச்சேவையில் ஈடுபட்டிருக்கிற ஒவ்வொரு தொண்டரிடமும் இருக்க வேண்டிய முக்கியமான பண்புகள்
என காந்தியடிகள் பல நிகழ்ச்சிகளில் விளக்கிப் பேசியிருக்கிறார். அப்பண்புகள் அனைத்தும்
ஒருங்கே வாய்க்கப்பெற்றவர் ராமசாமி. தொழிலாளர்களின் நலம் விழைபவராகவே தன் இறுதிக்கணம்
வரைக்கும் அவர் வாழ்ந்தார். அவருடைய எல்லையற்ற அன்பு அவருக்கு எல்லையற்ற துன்பங்களையே
பரிசாக அளித்தபோதும் அவை அனைத்தையும் புன்னகையுடன் கடந்துசென்றார். தன் தியாக வாழ்க்கையின்
வழியாக அவர் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கி நிலைநிறுத்தினார்.
(கிராம
ராஜ்ஜியம் – பிப்ரவரி 2022)