Home

Wednesday 23 March 2022

கதாநாயகன் - சிறுகதை

 

நான்கு ஆண்டு கால இடைவிடாத முயற்சிகளுக்குப் பிறகு சுகுமாரனுக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தயாரிப்பாளரின் திடீர் மரணத்தின் விளைவாக, அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு  பாதியிலேயே நின்றுவிட்டது. அதற்குப் பிறகு வேறொரு வாய்ப்பும் அவனைத் தேடி வந்தது. ஏறத்தாழ நாற்பத்தைந்து நாட்கள் படப்பிடிப்பு நடந்துமுடிந்திருந்த சூழலில், திடீரென தயாரிப்பாளர் சிறைக்குச் செல்ல நேர்ந்ததால், அந்தப் படமும் கைவிட்டுப் போனது. அவனிடம் எல்லாத் திறமைகளும் இருந்தன. யாரும் ஒரு குறையும் சொன்னதில்லை. ஆயினும் எதிர்காலத்தை நோக்கி அவனால் ஓர் அடி கூட எடுத்துவைக்க முடியவில்லை.

அவநம்பிக்கையில் மனம் வெறுத்து ஊருக்குத் திரும்பிச் சென்றுவிடலாம் என எடுத்த முடிவை, ஒவ்வொரு முறையும் அவன் அப்பா தடுத்து நிறுத்தினார். மூச்சிருக்கும்வரை முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பவர் அவர். பத்து நாட்கள் அவனுடன் சென்னையிலேயே தங்கி, அவனிடம் பேசிப்பேசி சோர்விலிருந்து மீட்டு நம்பிக்கையளித்துவிட்டுச் சென்றார். ஒரு சில மாதங்களிலேயே அவர் சொன்ன சொல் பலித்து, இயக்குநர்  குமாரராஜாவின் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பார்ப்பதற்கு அவன் மிகவும் அழகாக இருந்தான். எப்படிப்பட்ட நிறத்திலான ஆடையானாலும், அவனுக்கு அது பொருத்தமாகவே இருக்கும். உறுதியான அவனுடைய உடற்கட்டைப் பார்த்தவர்கள் மீண்டும்மீண்டும் அவனைப் பார்க்கவே விரும்புவார்கள். தென்னார்க்காடு மாவட்டத்தின் மூலையில் இருக்கும் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதை அவனாகவே யாரிடமாவது சொன்னால்தான் உண்டு. சொல்லாதவரைக்கும் பச்சையப்பன் கல்லூரியிலிருந்தோ லயாலோ கல்லூரியிலிருந்தோ நேராக நடிக்க வந்தவன் என்றுதான் நினைக்கத் தோன்றும். அவனுடைய பேச்சு, நடை, உடை எல்லாமே அப்படி இருந்தன.

திரைப்பட உலகத்தில் வெற்றிக்கொடி நாட்டும்படி வாழ்த்தி அவனை அனுப்பிவைத்திருந்தார் அவன் அப்பா. அக்கம்பக்கத்தில் இருந்த பதினாறு பாளையங்களில் மல்யுத்தக்கலை தெரிந்த பெரிய ஆளுமை அவர். சமஸ்தானங்கள் கொடிகட்டிப் பறந்த காலங்களில் எல்லா அரண்மனைகளிலும் தன் திறமையைக் காட்டி பதக்கங்கள் பெற்றவர். ’சுகுமார பவனம்’ என்னும் பெயரில் அவர் ஒரு மல்யுத்த நிலையத்தை நடத்திவந்தார். அதில் பயிற்சி பெற்றவர்களின் ஒருவரோ இருவரோ ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நிகழும் மல்யுத்தப் போட்டிகளில் விருது வாங்கியபடி இருந்தார்கள். ஐந்து பெண்குழந்தைகளுக்குப் பிறகு ஆறாவதாகப் பிறந்த சுகுமாரன்மீது அளவற்ற பாசம் வைத்திருந்தார் அவர்.  முதலில் தென்னங்குச்சியாலும் பிறகு வேப்பங்குச்சியாலும் மூங்கில் குச்சியாலும் வாள்சண்டை பழகிய பிஞ்சு வயதில் அவனுடைய வேகத்தைப் பார்த்துவிட்டு சுற்றியிருந்தவர்கள் “என்னைக்காவது ஒருநாள் கண்டிப்பா இவன் சினிமாவுக்குள்ள போயிடுவான்” என்று சொன்ன சொற்களை முதலில் அவர் வாழ்த்துகளாகவே எடுத்துக்கொண்டார். நாளடைவில் அவரை அறியாமலேயே அது ஒரு கனவாகவே மாறிவிட்டது. 

சுகுமாரனோடு படித்து பட்டம் வாங்கியவர்கள் அனைவரும் வங்கி, ரயில்வே, தபால்தந்தித் துறை என பலவிதமான வேலைகளை நோக்கிப் பறந்துகொண்டிருந்த சமயத்தில்தான், திரையுலகத்துக்குப் பொருத்தமான கட்டுடல் இளைஞனாக அவனை மாற்றும் பயிற்சிகளைத் தொடங்கினார் அவர். அவருக்கு சினிமாவைப்பற்றி எவ்விதமான ஞானமும் கிடையாது. சினிமாவில் கம்பீரமாகத் தெரிவதற்கு நல்ல உடற்கட்டு அவசியம் என்பது மட்டுமே தெரியும். காலை, மாலை இரண்டு வேளைகளிலும் பயிற்சி நிலையத்தில் மற்ற இளைஞர்களோடு இளைஞனாக அவனும் பயிற்சி பெற்றான். முதலில் அரைமணிநேரம் யோகாசனம். அதன் முடிவில் சூரிய நமஸ்காரம். பத்து நிமிடம் சவாசனத்திலேயே ஓய்வு. அதற்குப் பிறகு தொலைவில் ஏரிக்கரையோரம் தெரியும்  ஐயனார் கோவில் குதிரையைத் தொட்டுவிட்டுத் திரும்பும் ஓட்டம். மீண்டும் சவாசன ஓய்வு. அதைத் தொடர்ந்து தோப்பிலிருந்த தென்னையின் உச்சிவரைக்கும் ஏறி இறங்கும் பயிற்சி. மாலை முழுதும் மல்யுத்தப்பயிற்சிகள். அவன் உடல் மெல்லமெல்ல இறுகி உறுதியடைந்து கம்பீரமான சிலைபோல மாற்றம் பெற்றது.

பொங்கலையொட்டி சுகுமார பவனத்தில் நடைபெறும் புதுப்புது போட்டிகளை ஊரே திரண்டு வந்து பார்த்து ரசிப்பது வழக்கம். அந்த ஆண்டில் விசித்திரமானதொரு போட்டி நடைபெற்றது. தென்னைமரத்தில் ஏறி, அதில் தொங்கும் குலையிலிருந்து ஒரு காயை மட்டும் வெட்டி வீழ்த்திவிட்டு இறங்குவதுதான் போட்டி. ஒருவரால் அதிகபட்சமாக எத்தனை முறை ஏறி இறங்கமுடிகிறது என்பதை வைத்துத்தான் வெற்றியைத் தீர்மானிக்கமுடியும். வேடிக்கை பார்ப்பதற்காக சுண்ணாம்புக் கோட்டுக்கு வெளியே நின்றிருந்த ஊர்க்காரர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். தாவணி அணிந்த இளம்பெண்கள் சத்தம் போட்டு உற்சாகமூட்டினார்கள். போட்டியில் கலந்துகொள்ள வந்த முதல் இளைஞன் பெருத்த ஆரவாரத்துக்கிடையே மரத்தில் தாவி ஏறினான். தினமும் பயிற்சிக்காக ஏறி இறங்கும் மரமென்பதால் அவனுக்குச் சிரமமே இருக்கவில்லை. இடுப்பில் செருகியிருந்த கத்தியை உருவி ஒரு காயை வெட்டி வீழ்த்தினான். பிறகு மெதுவாக இடுப்பிலேயே கத்தியை செருகிக்கொண்டு கீழே இறங்கினான். ஒரு பெரியவர் ஓடி வந்து அவன் கழுத்தில் மாலை சூட்டிவிட்டு கைதட்டினார். தலைகுனிந்து வணங்கிய அவன் மரத்தை நெருங்கி, மீண்டும் ஏறத் தொடங்கினான். பழைய வேகம் இல்லையென்றாலும், மனம் தளராமல் மெதுவாக ஏறி காயை வெட்டி வீழ்த்தினான். தரையில் இறங்கிய சமயத்தில் கால்களை தரையில் ஊன்றமுடியாமல் சரிந்து விழுந்தான். பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி அவனுக்கு விடைகொடுத்து அனுப்பிவைத்தார்கள்.

அடுத்தடுத்து பத்து இளைஞர்கள் களத்தில் இறங்கினார்கள். முதல் சுற்றிலேயே பெரும்பாலானவர்கள் சோர்வில் நிலைகுலைந்துபோனார்கள். இரண்டு பேர் மட்டுமே இரண்டாவது சுற்றை வெற்றிகரமாக முடித்தார்கள். பதினோராவதாக ஏறிய இளைஞன் எவ்விதமான அவசரமும் காட்டாமல் மெதுவாகவே ஏறினான். அந்த நிதானம் மூன்றாவது முறையும் ஏறி இறங்கும் சக்தியை அவனுக்குக் கொடுத்தது. தரையில் இறங்கியவன் ஒருகணம் கால் துவள அப்படியே கீழே விழுந்துவிட்டான்.  பார்வையாளர்கள் வந்து தூக்கிக்கொண்டு சென்றார்கள். அடுத்தடுத்து வந்த வேறு இரண்டு பேர்கள் முதல் முயற்சியோடு துவண்டு நின்றுவிட்டார்கள்.

கடைசியாக சுகுமாரன் களமிறங்கினான். கைதட்டலும் ஆரவாரமும் அடங்க நீண்ட நேரமானது. புன்னகை மாறாத முகத்துடன், அந்தத் தென்னை மரத்தின்மீது அணில் ஏறுவதுபோல எளிமையாக ஏறி இறங்கினான். ஆறு முறை ஏறி இறங்கிய பிறகும் அவன் நிலைகுலையவில்லை. ஏழாவது முறையும் ஏறுவதற்கு மரத்தைத் தொட்டவனை நிறுத்தி, தோளில் ஏற்றிக்கொண்டு ஊர்வலம் வந்தார்கள் அவன் நண்பர்கள். வெற்றி ஊர்வலம் நிகழ்ந்துமுடிந்த ஒரு வாரம் கழித்து, சுகுமாரனை சென்னைக்கு அனுப்பிவைத்தார் அவன் அப்பா.

இயக்குநர் குமாரராஜாவின் படத்தில் நடிப்பது ஒவ்வொரு இளம்நடிகனுக்கும் கனவாக இருந்த காலம் அது. அந்தக் கனவின் நதி சுகுமாரனின் இதயத்திலும் ஓடிக்கொண்டிருந்தது. கூட்டைத் தேடிச் செல்லும் பறவையைப்போல ஒவ்வொரு நாளும் அவரை அவன் இடைவிடாமல் தேடிச் சென்று பார்த்தான். அவனுடைய உறுதியான உடலமைப்பும் அடர்த்தியாகச் சுருண்டிருந்த தலைமுடியும் வசீகரமான முகமும் பார்த்த கணத்திலேயே அவரைக் கவர்ந்தன. ஆனாலும் பிடிகொடுக்காமல் ”இந்த படத்த தொடங்கிட்டனேப்பா, அடுத்த படம் தொடங்கும்போது சொல்றேன் வா” என்று சம்பிரதாயமாகச் சொல்லி அனுப்பிவிட்டார். ஆனால், அச்சொற்களை அவன் முழுமையாக நம்பினான். அந்த நம்பிக்கையினாலேயே தினமும் அதிகாலையில் அவர் வீட்டில் இயங்கிவந்த அலுவலகத்துக்குச் சென்று வந்தான். இடைவிடாத உடற்பயிற்சிகளால் அவன் உடல் நாள்தோறும் மெருகேறியபடி இருந்தது. மனம் கனிந்த குமாரராஜா ஒருநாள் அவனிடம் “நடிக்கணும்ன்னு ஏன் துடிக்கிற? அசிஸ்டென்டா இருந்துக்கறியா? ம்ன்னு சொல்லு, இன்னைக்கே வந்துரலாம்” என்றார். அவன் புன்னகைத்தபடி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டான். பிறகு சோறு பிசைந்து ஊட்டப்பட்ட சிறுபருவத்திலிருந்தே கதாநாயகன் கனவையும் சேர்த்து ஊட்டப்பட்டதை விரிவாக எடுத்துச் சொன்னான். குமாரராஜா சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார்.

அப்போது எடுத்துவந்த படத்தைத் தொடர்ந்து அவர் மேலும் மூன்று படங்களை இயக்கினார். ஒரு படத்தில்கூட அவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்துவிடும், அடுத்த படத்தில் வாய்ப்பு கிடைத்துவிடும் என்று அவனும் புதுப்படத்துக்கான வேலைகளைத் தொடங்கும் ஒவ்வொரு சமயத்திலும் கனவுகண்டு கனவுகண்டு சோர்வடைந்தான். ஆயினும் ஒரு தருணத்திலும் தன் சோர்வை அவன் புலப்படுத்தியதே இல்லை. கொஞ்சம்கூட உற்சாகம் குன்றாத முகத்துடனேயே அவரைச் சந்தித்து வந்தான்.

“உன் முகத்தைப் பார்த்தாலேயே ஒருமாதிரி உற்சாகமா இருக்குதுடா” என்று ஒருநாள் சொன்னார் குமாரராஜா. அதிகாலை அவனை வீட்டுக்கு வரவழைத்து, அவனுடன் ஒருமணி நேரம் ஷட்டில் காக் விளையாடினார். அவருடைய இதயத்தில் அவனுக்கென ஓர் இடம் மெல்லமெல்ல உருவானது.  “உனக்குன்னு ஒரு கதையா தனியா யோசிச்சி வச்சிருக்கன் சுகுமாரா. பொறுத்ததே பொறுத்த, இன்னும் கொஞ்ச காலம் பொறுத்துக்க. நல்ல தயாரிப்பாளர் கெடைக்கட்டும். சீக்கிரமா தொடங்கிடலாம்” என்று ஒருநாள் அவன் தோளைத் தட்டிக்கொடுத்தார்.

நாலைந்து மாதங்களுக்குப் பிறகு ஒருநாள், விளையாடி முடித்த பிறகு வீட்டுக்குப் புறப்பட்ட சமயத்தில் அவனை நிறுத்தி, “என் கூடவே டிஃபன் சாப்புடு இன்னைக்கு. கேமிராமேன வரச் சொல்லியிருக்கேன். இன்னைக்கு ஒரு போட்டோ ஷூட் எடுத்துரலாம்” என்றார். அவர் சொன்ன சொற்கள் அவன் இதயத்தைத் தொட சில கணங்கள் பிடித்தன. பிறகு வேகமாக நெருங்கிவந்து அவர் கால்களைத் தொட்டான். அவனை எழுப்பி நிறுத்தி “என்ன ஹீரோ? சந்தோஷம்தான?” என்று சொன்னபடி அவன் தலைமுடியை அழுத்தி கலைத்துவிட்டுச் சென்றார்.

அடுத்த நாள் காலையில் ஆல்பத்தோடு தயாரிப்பாளர் சக்கரவர்த்தியைச் சந்திக்கச் சென்ற குமாரராஜா அவனையும் தன்னுடன் வரும்படி அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.  

”இந்தப் படத்துக்கு இவர்தான் ஹீரோன்னா நீங்க முடிவு செஞ்சா போதுமே டைரக்டர் சார். நடுவுல நான் சொல்ல என்ன இருக்குது?” என்று புன்னகைத்தபடியே டைரக்டர் அளித்த புகைப்பட ஆல்பத்தை வாங்கினார் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி. அதே கணத்தில் அவருடைய பார்வை அருகில் நின்றிருந்த சுகுமாரனின் மீதும் படர்ந்து மீண்டது. ”அது எப்படிங்க சார்? நீங்களும் ஒருதரம் பார்த்துட்டு புடிச்சிருக்குதுன்னு சொன்னாதான என் மனசுக்கு திருப்தியா இருக்கும்” என்றார் குமாரராஜா.

புன்னகை மாறாமலேயே தலையசைத்தபடி ஆல்பத்தைப் புரட்டினார் சக்கரவர்த்தி. ஒவ்வொரு புகைப்படத்திலும் புதுப்படத்துக்குத் தேவைப்பட்ட பலவிதமான ஒப்பனைகளில்  அவன் தோற்றம் மாறியபடி இருந்தது. அறுபது எழுபது படங்கள். ஒன்றுவிடாமல் நிறுத்தி நிதானமாகப் பார்த்தார். இறுதியாக ”ஓ.கே.” என்று திருப்தியுடன் ஆல்பத்தை மேசையின்மீது வைத்துவிட்டு டைரக்டரைப் பார்த்து கட்டைவிரலை உயர்த்திக் காட்டி புருவத்தை உயர்த்திச் சிரித்தார்.

“உங்க அறிமுகம்ன்னா சும்மாவா டைரக்டர் சார்? புடம்போட்டு புடம்போட்டு தங்கத்த மெருகேத்திடுவீங்களே” என்று சொல்லிவிட்டு சுகுமாரனைப் பார்த்து “எதிர்காலத்துல பெரிய நட்சத்திரமா வரணும் தம்பி நீங்க. கண்டிப்பா வருவிங்க. நம்ம டைரக்டர் சார் ராசி அப்படி” என்று சொன்னார். சுகுமாரன் ஒருகணமும் தயங்காமல் தயாரிப்பாளர், டைரக்டர் இருவருடைய கால்களிலும் விழுந்து வணங்கினான்.

ஒரு ஓட்டப்பந்தய வீரனைப்பற்றிய கதை அது. முதற்கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது. படத்தின் பெயர் வெற்றிவீரன். தினத்தந்தி நாளிதழில் ஒரு முழுப்பக்க விளம்பரம் வந்தது. அவன் முகம் கோட்டோவியமாக அதில் இடம்பெற்றிருந்தது. பொம்மை பத்திரிகை அவன் புகைப்படத்தைப் பிரசுரித்து செய்தியையும் வெளியிட்டிருந்தது. எல்லாவற்றையும் அவன் வாங்கி பெட்டி நிறைய சேகரித்துவைத்திருந்தான். நூறு தினத்தந்திகள் வாங்கி, அவன் புகைப்படம் இடம்பெற்றிருக்கும் விளம்பரப் பக்கத்தை கிராமத்தில் உள்ள எல்லா வீட்டுச் சுவர்களிலும் ஒட்டிவைத்திருப்பதாக அவன் அப்பா கடிதம் எழுதியிருந்தார்.

’வெற்றிவீரன்’ கதையை அவனுக்காகவே உருவாக்கியிருந்தார் குமாரராஜா. குன்றின் அடிவாரத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். அங்குள்ள பள்ளியில் படிக்கும் இளைஞர்கள் ஓடும் திறமை நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். காலையிலும் மாலையிலும் ஒரு விளையாட்டுபோல அந்த ஊர்க்குன்றின்மீது ஏறி இறங்குகிறார்கள் அவர்கள். அந்தக் கிராமத்தில் வசிக்கும் அழகான ஒரு பெண்மீது அனைவருமே மையல் கொண்டிருக்கிறார்கள். எதையேனும் ஒரு விஷயத்தைச் சொல்லி தினந்தோறும் அவர்களை வெகுதொலைவு ஓடும்படி செய்கிறாள் அவள். தற்செயலாக ஒருநாள் அந்தக் கிராமத்து ரயில்வே ஸ்டேஷனில் ஒரு ரயில் நிற்கிறது. அடுத்த ஊர் ஜங்ஷனில் வண்டித்தடத்தில் ஏதோ பிரச்சினை என்பதால், தற்காலிகமாக அந்த ரயில் அந்தக் கிராமத்துக்கு வருகிறது. இந்திய அளவில் பிரபலமான ஓட்டப்பந்தய பயிற்சியாளர் ஒருவர் அந்த ரயிலில் இருக்கிறார். காற்று வேகத்தில் குன்றின்மீது ஏறி இறங்கும் இளைஞர்களை ஆச்சரியத்தோடு பார்க்கிறார் அவர். அவர்களுடைய வேகமும் திறமையும் அவரை மலைக்கவைக்கிறது. அவர்களை அழைத்து, அனைவரையும் நகரத்துக்கு வரும்படி அழைக்கிறார். தன் மனத்தில் உள்ள எதிர்காலத்திட்டங்களை அவர்களுக்கு எடுத்துரைக்கிறார். இளைஞர்களுக்கு ஒருபுறம் ஆசை. மறுபுறம் கிராமத்து அழகியைப் பிரிந்துசெல்ல விரும்பாத மனம். முடிவெடுக்கத் தடுமாறுகிறார்கள் இளைஞர்கள். இரண்டு வாரப் படப்பிடிப்பு நல்லபடி போய்க்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சக்கரவர்த்திக்கு கடுமையான நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் சேர்க்கும்படி நேர்ந்தது.  துரதிருஷ்டவசமாக, தீவிர சிகிச்சைக்குப் பிறகும் அவர் உயிர் பிரிந்துவிட்டது. அன்று ரத்தான படப்பிடிப்பு அதற்குப் பிறகு தொடங்கவே இல்லை.

மூன்று மாதங்கள் காத்திருந்துவிட்டு, வேறொரு படத்தை இயக்கச் சென்றுவிட்டார் குமாரராஜா. அந்தக் கதையில் சுகுமாரனுக்குப் பொருத்தமான பாத்திரமெதுவும் இல்லை என்று சொன்னார். திறமைமிக்க ஒரு நடிகனாக தமிழுலகில் அவனை முன்வைக்க நினைத்த கனவு கைகூடாமல் போனதில் அவர் மனம் வருத்தத்தில் மூழ்கியிருந்தது. நின்றுபோன படத்தின் கதை என்பதால், அந்தப் படத்தில் முதலீடு செய்ய மற்ற தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டினார்கள்.

இயக்குநர் சிவலிங்கம் தொடங்கவிருக்கும் தன் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒரு புதுமுகத்தைத் தேடியலையும் செய்தியை அறிந்த  குமாரராஜா, அவரை தன் வீட்டுக்கே வரவழைத்து சுகுமாரனை அறிமுகப்படுத்தினார். வெற்றிவீரனுக்காக உருவாக்கிய ஆல்பத்தை அவரும் பார்த்தார். சில வசனப்பகுதிகளைச் சொல்லி நடிக்கவைத்தும் பார்த்தார். அவன் திறமையில் திருப்தியடைந்து, அன்று மாலையே அவனைத் தன் தயாரிப்பாளரிடமும் அறிமுகப்படுத்தி ஏற்றுக்கொள்ளும்படி வைத்தார். புதிய படத்துக்கு ’ஆசைக்கடல்’ என்று பெயர் சூட்டப்பட்டது. ஒரு நல்ல நாளில் பொள்ளாச்சிக்குப் பக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. நாற்பத்தைந்து நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடந்தது. கிட்டத்தட்ட முக்கால் பங்குக்கும் மேலாக படவேலைகள் நிறைவடைந்தன. பாடல்காட்சிகளும் ஒன்றிரண்டு இறுதிக்கட்ட காட்சிகளும் மட்டுமே பாக்கியிருந்தன. அவற்றை இலங்கை அல்லது மலேசியாவில் எடுத்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள். அத்தருணத்தில் வருமான வரி வழக்கில் சிக்கிக்கொண்ட தயாரிப்பாளர் சிறைக்குச் செல்லும்படி நேர்ந்ததால் ஆசைக்கடல் நின்றுபோனது.

மனமுடைந்துபோன சுகுமாரனை வீட்டுக்கு அழைத்து ஆறுதல் சொன்னார் குமாரராஜா. அவனை தனியே அனுப்ப மனமின்றி தன் வீட்டிலேயே ஓர் அறையில் தங்கவைத்து கவனித்துக்கொண்டார்.

“ரயில் பயணம் படம் முடியட்டும்டா. உனக்காக நானே இன்னொரு கதைய தயார் பண்ணிடறன். தைரியத்தயும் நம்பிக்கையையும் மட்டும் என்னைக்கும் இழந்துடக் கூடாது. புரியுதா?” கண்டிப்பும் அன்பும் அவர் குரலில் கலந்திருந்தன.  

எந்தப் பதிலும் இல்லாமல் அவரைப் பார்த்து மெதுவாகப் புன்னகைத்தான் அவன். அந்தப் புன்னகையைப் பார்த்த பிறகு அவரால் எதுவும் பேசமுடியவில்லை. “ஒன்னும் கவலப்படாதடா சுகுமாரா, நீ நல்லா வருவடா. நல்லா வருவ” என்றபடி அவன் கைகளைப் பற்றி அழுத்திக் கொடுத்தார். 

ரயில் பயணம் முடியும் சமயத்தில், அதில் கதாநாயகனாக நடித்த நடிகர் கணேஷ் வெகுவிரைவில் தயாரிப்பு நிறுவனமொன்றைத் தொடங்கவிருப்பதாகவும் அதன் முதல் படத்தை இயக்கிக் கொடுக்கவேண்டுமென்றும் குமாரராஜாவிடம் கேட்டுக்கொண்டார். அன்று மாலையே சுகுமாரனை வரவழைத்து கணேஷிடம் அறிமுகப்படுத்தினார் குமாரராஜா.

“நல்ல திறமைசாலி பையன். புது படத்துக்கு இவனயே போட்டுடலாம். இவனுக்காகவே ஒரு கதய மனசுல வச்சிருக்கேன்”

“நானும் ஒரு காலத்துல இந்தமாதிரி இருந்து வந்தவன்தான சார். எதிர்பார்ப்பின் வலியும் வேதனையும் எனக்கு நல்லாவே தெரியும். இந்த மாதிரி விஷயங்களுக்கு துணையா இருக்கணும்ங்கறதுதான் சார் இந்த நிறுவனத்துடைய நோக்கம். தாராளமா இவர வச்சியே தொடங்குங்க. உங்களுக்கு முழு சுதந்திரமும் உண்டு.”

ரயில்பயணம் முடிந்ததும் ஒருநாள் கூட ஓய்வில்லாமல் ஒரே மாதத்தில் புதிய படத்துக்கான திரைக்கதையை எழுதிமுடித்தார் குமாரராஜா. படத்துக்கு பெயர் ’சிரிக்கும் மேகங்கள்’. ஆடம்பரமின்றி புறநகரில் வாடகை வீடொன்றில் எளிமையான முறையில் படத்துக்கான பூஜை நடந்து படப்பிடிப்பும் தொடங்கியது. சுகுமாரனின் திறமையை வெளிக்கொண்டு வரும் விதமாக ஏராளமான காட்சிகளை படம் நெடுக உருவாக்கியிருந்தார் குமாரராஜா. படப்பிடிப்பு நிகழ்ந்த காலம் முழுதும் அவன் வேறொரு உலகத்தில் இருப்பதுபோல மிதந்திருந்தான். 

அவன் வசனங்களை உள்வாங்கி நடிக்கும் தருணங்கள் எல்லாமே பரவசமானவை. இயக்குநரின் ‘ஆக்‌ஷன்’ கட்டளை காதில் விழுந்ததுமே ஒரு புது உயிர் குடிபுகுந்த உடல்போல ஆகிவிடுவான் அவன். பார்வை, நடை, பேச்சு, சிரிப்பு எல்லாமே அடியோடு மாறிவிடும். இதற்கு முந்தைய காட்சி எது, இதற்கு அடுத்த காட்சி எது எல்லாமே அவன் மனத்தில் தெளிவான அடுக்குகளாக இருக்கும். அதை அனுசரித்து அவன் நடிப்பு வெளிப்படும். புது நடிகன் என்கிற பதற்றம் ஒரு துளி கூட அவன் முகத்தில் தெரிந்ததில்லை. காலம்காலமாக நடித்து வருபவன்போல மிகவும் இயல்பான முறையில் நடித்து முடித்துவிடுவான். முதல் ஒன்றிரண்டு நாட்களில் அவனுக்கு காட்சியை விளக்குவதிலும் நடித்துக் காட்டுவதிலும் குமாரராஜாவும் உதவி இயக்குநர்களும் நிறைய நேரம் எடுத்துக்கொண்டார்கள். அவசரமில்லாமல் அவர்கள் சொல்வதையெல்லாம் அவன் பொறுமையாகக் கேட்டுக்கொண்டான். அவர்கள் சொல்வதுபோலவே செய்தும் காட்டினான். திருப்தியோடு அவர்கள் “சரி டேக் போகலாம்” என்று சொன்னபோது, “வேற விதமா இத செஞ்சி காட்டறன், பார்க்கறிங்களா?” என்று பணிவுடன் கெஞ்சி அனுமதி பெற்றான். அக்கணத்தில் அவன் வெளிப்படுத்திய நடிப்பு முற்றிலும் புதிய கோணத்தில் சிந்தித்து வெளிப்பட்டதாகவும் மறுக்கமுடியாததாகவும் இருந்தது. குமாரராஜாவுக்கு அது பிடித்துவிட்டது. நாளடைவில் அவனுக்கு நடிப்பு சொல்லித் தரும் வேலைக்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது. ”கலைக்குரிய தெய்வமே அவன் ஆன்மாவுல உக்காந்திருக்காடா. அவனுக்கு எல்லாமே தானா வரும். அவன் போக்குலயே உட்டுடுங்கடா. அவன் உடம்புல ரத்தத்துக்கு பதிலா தெய்வத்தின் ஆசீர்வாதமே ஓடுது” என்று உதவி இயக்குநர்களைப் பார்த்து புன்னகைத்தார் குமாரராஜா.  

நினைத்ததற்கு ஒரு வாரம் முன்னாலேயே படத்தின் வேலைகள் முடிந்துவிட்டன. கணேஷ் எல்லோரையும் அழைத்து ஒரு பெரிய விடுதியில் விருந்து கொடுத்தார். அதற்கு முன்னால் தணிக்கைச் சான்றிதழுக்காக தயார் செய்யப்பட்டிருந்த படத்தை ஒருமுறை எல்லோரும் பார்த்தார்கள். விருந்து நடந்துகொண்டிருந்தபோது, பலரும் சுகுமாரனை நெருங்கி பாராட்டிவிட்டுச் சென்றார்கள். “எல்லாமே என் குரு குமாரராஜாவின் ஆசீர்வாதம்” என்று அந்தப் பாராட்டுகளையெல்லாம் தன் குருவின் பக்கம் பக்தியுடன் திருப்பிவிட்டான் அவன். அந்த விருந்துக்கு அவன் அப்பாவும் வந்திருந்தார். வயதானவராக இருந்தாலும் அவருடைய உடற்கட்டைப் பார்த்து அதிசயத்துவிட்டார் குமாரராஜா. “சார், உங்கள பாத்ததுமே, உங்களுக்காகவே புதுசா ஒரு கதய பண்ணலாம் போல தோணுது” என்று சொன்னபடி கைகுலுக்கி வாழ்த்தினார். “உங்க மகன் ஒரு ரத்தினம் சார். அபூர்வ ரத்தினம். தமிழ்நாடு அவன தலைமேல தூக்கி வச்சி கூத்தாடப் போவுது. அந்த நாள் ரொம்ப தூரத்துல இல்ல. நான் இப்பவே என் கண்ணால பார்க்கறேன்” என்றார் அவர்.

அன்று இரவு தன் மகனிடம் ”ஏன் தம்பி, ஊருக்கு ஒரு தரம் வந்துட்டு போவக்கூடாதா? அங்கேருந்து கெளம்பி வந்த நாள்முதலா ஒரு முறை கூட ஊர எட்டி பார்க்கலையேப்பா. உங்க அம்மாகாரிலேருந்து ஊருகாரங்க வரைக்கும் நான்தான் உன்ன கட்டுப்படுத்தி வச்சிருக்கேன்னு என்ன புடிச்சி ஏசறாங்கப்பா” என்று சொன்னார். தொடர்ந்து ”ஊரு பூரா ஒன் போஸ்டர்தான் இப்ப. எல்லா இடத்துலயும் ஒன்ன பத்திய பேச்சுதான். நேருல பார்த்தன்னு வை, ஆச்சரியப்பட்டுடுவ நீ” என்று பெருமிதத்தோடு புன்னகைத்தார்.

”எந்த நோக்கத்துக்காக இங்க வந்தமோ, அந்த நோக்கத்த நடத்திக் காட்டிட்டு வந்தாதானப்பா நமக்கும் ஒரு கவுரவமா இருக்கும். அதான் காரணம். வேற ஒன்னுமில்ல. இந்த படம் எப்படியும் தீபாவளிக்குள்ள, இல்லன்னா தீபாவளிக்கு ரிலீஸாயிடும். அதுக்கப்பறம் ஊருக்கு வர்றதுதான்பா என் மொதல் வேல” 

சுகுமாரனின் அப்பா அதைக் கேட்டு தலையசைத்துக்கொண்டார். பிறகு அவர் பேச்சு, சுகுமார பவனம் வளர்ந்திருக்கும் விதத்தையும் பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கும் புதியவர்களைப் பற்றியுமானதாக விரிந்துபோனது. இரவுமுழுதும் தூங்காமல் எதைஎதையோ சொல்லிக்கொண்டே இருந்தார் அவர்.

ஒரே மாதத்தில் யாரும் எதிர்பார்க்காத மாற்றங்கள் நிகழ்ந்தன. தணிக்கைக்கு முன்பாக கணேஷ் எல்லோருக்கும் ஒரு பைசா கூட பாக்கியில்லாமல் பேசிய சம்பளப்பணத்தை முழுமையாகக் கொடுத்து கணக்கை முடித்தார். அந்த சந்தோஷத்தின் ஈரம் உலரும் முன்பே, தான் முதலீடு செய்து எடுத்த படத்தை வேறொரு முதலாளிக்கு விற்றுவிட்டார். திரைப்படத்துக்குத் தொடர்பே இல்லாத டெலிபோன் கம்பெனி நடத்தும் முதலாளி அவர். “தப்பா எடுத்துக்காதீங்க சார். வெளியே சொல்லமுடியாத சில பிரச்சினைகள். இனிமேல சிரிக்கும் மேகங்களுக்கு அவர்தான் பொறுப்பு. அவர் உங்ககிட்ட பேசுவார் சார்” என்று விலகிச் சென்றுவிட்டார்.

புதிய முதலாளி யாரையும் அழைத்துப் பேசவில்லை. அவரைத் தொடர்புகொண்டு பேசுவதும் அவ்வளவு எளிதாக இல்லை. எல்லோரும் ஆசையோடு எதிர்பார்த்திருந்த தீபாவளி கடந்துபோனது. அதைத் தொடர்ந்து பொங்கலும் கடந்துபோனது. சுகுமாரன் விரக்தியில் மூழ்கத் தொடங்கினான். அவன் முகம் பொலிவிழந்து போவதைப் பார்க்கப்பார்க்க மனம்பொறுக்காத குமாரராஜா வேறொரு முதலாளி மூலமாக முயற்சி செய்து படத்தை வாங்கிய முதலாளியைச் சந்தித்தார். அன்று சுகுமாரனையும் தன்னோடு அழைத்துச் சென்றிருந்தார். சிகரெட் புகைத்தபடி அந்த முதலாளி பேசிய தோரணையே அவருக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு தன் மனக்குமுறலையெல்லாம் அவர்முன் கொட்டினார்.

அசையாத பாறையாக அமர்ந்திருந்தார் அந்த முதலாளி. பிறகு தொண்டையைக் கனைத்துக்கொண்டு “இங்க பாருங்க. இது நான் பணம் போட்டு வாங்கன படம். எப்ப வெளிய விடணும், எப்ப விடக்கூடாதுன்னு எனக்குத் தெரியும். ஒரு மூணாவது மனுஷன் என்ன பாத்து புத்திமதி சொல்றது எப்பவுமே எனக்குப் புடிக்காது. நஷ்டம்னு வந்தா எனக்குத்தான வரப்போவுது? அத பத்தி ஒங்களுக்கு என்ன கவலை? வேற வேலைய பாருங்க, போங்க” என்று வாசல்பக்கம் கையைக் காட்டினார்.

அந்த முதலாளியின் வீட்டைவிட்டு வெளியேறி படிகளில் இறங்கும்போது, முடிவே இல்லாமல் அந்தப் படிகள் நீண்டுகொண்டே செல்வதுபோல சுகுமாரனுக்குத் தோன்றியது. தோல்வியும் அவமானமும் நிறைந்த ஒரு பெரிய பள்ளம் படிகளின் முடிவில் இருப்பதுபோலத் தோன்றியது. ஒரே வெட்டில் விறகைப் பிளந்ததுபோல தன் உடலும் உள்ளமும் பிளந்து சிதறிவிட்டதாகத் தோன்றியது. அவனை எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் தவித்த குமாரராஜா அவன் கையைப்பற்றி தன் கைகளுக்கிடையே வைத்துக்கொண்டார்.

நீண்ட நேர மெளனத்துக்குப் பிறகு, “போனா போவுது உடுடா. நாம ஒன்னு நெனச்சா ஆண்டவன் ஒன்னு நெனைக்கறான். இந்த ஆளு ஒருத்தன்தான் சினிமா உலகத்தயே தலையில தூக்கி வச்சி தாங்கிட்டிருக்கானா? இவன மாதிரி இன்னும் நூறு பேரு. நமக்குன்னு ஒருத்தன் கோடம்பாக்கத்துல எங்கயாச்சிம் இருப்பான்டா. சீக்கிரம் கண்டுபுடிச்சிடலாம். தைரியமா இரு” என்று பொறுமையாகச் சொன்னார்.

அன்று இரவு அவனால் தூங்கமுடியவில்லை. அறைக்கு வெளியே பால்கனியில் நின்றுகொண்டு நட்சத்திரக்கூட்டத்தை வேடிக்கை பார்த்தான். சில இடங்களில் மாலையிலிருந்து உருவிப் போட்ட பூக்களைப்போல நட்சத்திரங்கள் கூட்டமாக இருந்தன. சில மூலைகளில் பாதையில் யாராலோ தவறவிடப்பட்ட மோதிரம்போல தனிமையில் காணப்பட்டன. இருண்ட இடைவெளிகளிலும் நட்சத்திரங்கள் இருக்கக்கூடும் என்று அக்கணத்தில் அவனுக்குத் தோன்றியது. ஒளியற்ற நட்சத்திரங்கள். பிரகாசிக்கத் தெரியாத நட்சத்திரங்கள். வெறும் சாம்பல் குவியலாக கரைந்து அடையாளமற்றுப் போன நட்சத்திரங்கள். மறுகணமே கட்டுப்பாடின்றி அலையும் தன் எண்ண ஓட்டங்களைத் தடுத்து, மனத்தை தன் தந்தையின் நினைவுகளால் நிரப்பத் தொடங்கினான். அடியும் பிடியும் சொல்லித் தந்து ஓட்டத்தையும் யோகத்தையும் கற்பித்த பழைய நாட்களின் காட்சிகள் மிதந்துவந்தன.

எண்ணங்கள் ஓய்ந்துபோன தருணத்தில் இருள் மறையத் தொடங்குவதையும் வானம் வெளுக்கத் தொடங்குவதையும் பார்த்தான். வீட்டுக்கு அருகிலிருந்த தோப்பில் குயில்கள் கூவும் சத்தம் கேட்டது. அவை அனைத்தும் ஒரே குரலில் எதையோ தன்னை நோக்கிச் சொல்லும் சொற்களாக அச்சத்தத்தை நினைத்தான். புன்னகைத்தபடி மெதுவாக வீட்டைப் பூட்டிக்கொண்டு தெருவில் இறங்கினான். தெரிந்த மனிதர்கள் யாருடைய பார்வையிலும் பட்டுவிடக்கூடாது என்னும் வேகத்தில்  பாதையோரம் நின்றிருந்த ஆட்டோவில் ஏறி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தான். எந்த ஊருக்குச் செல்வது என்ற எந்த முடிவுமின்றி, பயணச்சீட்டு வாங்கும் வரிசையில் நின்றான். அவனுக்கு முன்னால் நின்றிருந்த பெரியவர் காசியின் பெயரைச் சொல்லி சீட்டு வாங்கியதைப் பார்த்துவிட்டு, அவனும் காசிக்கு ஒரு சீட்டு வாங்கினான். அவனைப் பார்த்த பெரியவர் “நீங்களும் காசிக்கா தம்பி?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார். அவருக்கு நன்றாக நரைத்துத் தொங்கும் தலைமுடி. மார்பைத் தொடும் வெண்தாடி. எலும்பான உடல். நெற்றி முழுதும் மறைய பெரிய பூசை. அவன் என்ன பதில் சொல்வது என ஒருகணம் புரியாமல் “ஆமாம்” என்று மையமாகத் தலையசைத்தான். அவர் முகத்தில் தன் அப்பாவின் சாயல் தெரிவதைப் பார்த்தபோது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

”நல்லதா போச்சி. வழித்தொணைக்கி ஆளில்லயேன்னு நெனச்சிநெனச்சி பயந்துட்டிருந்தேன். நல்ல வேள, என் நமச்சிவாயன் வழி காட்டிட்டான். வா தம்பி போவலாம்”

பெரியவர் சொல்லுக்கு மறுசொல் இல்லாமல் பின்தொடர்ந்தான் சுகுமாரன். இரண்டு பகல்கள், ஒரு இரவு என நீண்ட பயணத்துக்குப் பிறகு அவர்கள் காசியை அடைந்தார்கள். அவ்வளவு நீண்ட பயணத்தில் அவன் மனம் ஒருகணம் கூட திரைப்படத்தைப் பற்றியே நினைக்கவில்லை என்பதை அவன் ஆச்சரியத்தோடு நினைத்துப் பார்த்துக்கொண்டான்.

காசிக்கு வந்த பிறகுதான் காசியில் செய்துமுடிக்கவேண்டிய வேலைகள் என பெரியவருக்கு எதுவுமில்லை என்பதை அவன் உணர்ந்துகொண்டான். அவரும் மனம்போன போக்கில் அங்கு வந்தவர்தான் என்பது புரிந்தது. இருவரும் சேர்ந்தே இருப்பதென தீர்மானித்தார்கள். காலையில் கங்கையில் குளித்த பிறகு ஈரவேட்டியை உதறி  காற்றில் உலரவைத்தபடி கரையோரமாகவே நடந்தார்கள். ஒரு கரை அலுக்கும்போது படகில் ஏறி மறுகரைக்குச் சென்று நடந்தார்கள். களைக்கும் தருணங்களில் எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் அமர்ந்து ஓய்வெடுப்பதில் அவருக்கு எவ்விதமான தயக்கமும் தோன்றியதில்லை. சில சமயங்களில் மரத்தடிகள். சில சமயங்களில் படிக்கட்டுகள். சில நேரங்களில் திண்ணைகள், மணல்மேடுகள், கோவில் வாசல்கள். எந்த மனத்தடையும் அவரிடம் வெளிப்படவில்லை என்பதைக் கவனித்தான் சுகுமாரன். அவருடைய உரையாடல்களில் அவர் தெளிவும் அறிவும் வெளிப்பட்டன. தத்துவங்களிலும் வரலாற்றிலும் அவர் அளவற்ற ஞானம் உடையவராக இருந்தார். எங்கோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக ஆற்றிவந்த பணியை உதறி கால்நடையாகவே இந்தியா முழுதும் அலையும் அனுபவத்துக்காக வீட்டைவிட்டு வெளியேறியதாக ஒருமுறை சொன்னார். இப்படியும் ஒரு விஷயத்தை நினைவில் வைத்திருக்கமுடியுமா என ஆச்சரியப்படும் அளவுக்கு பழைய செய்திகளை துல்லியமாகச் சொல்லும் ஆற்றல் அவரிடம் இருந்தது.

காசியிலிருந்து ஒருநாள் கிளம்பி ஹரித்துவார், ரிஷிகேஷ், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி வரைக்கும் சென்றார்கள். பிறகு சிம்லா செல்லும் கூட்டமொன்றுடன் சேர்ந்து சிம்லாவில் திரிந்தார்கள். அமர்நாத் பாதை திறந்துவிட்டதையும் யாத்ரீகர்கள் செல்லத் தொடங்கியதையும்  கேள்விப்பட்டதும் வேகமாகச் சென்று அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். அந்தப் பயணத்தில் அதுதான் இறுதிப்புள்ளி. பிறகு வைஷ்ணவிகோவில் வழியாக ராஜஸ்தானில் இறங்கி நடந்தார்கள். சில மாதங்களுக்குப் பிறகு ஒரு மழைக்கால இரவில் திரிவேணி சங்கமத்தை அடைந்தார்கள். அதன் கரையோரம் ஒரு வாரம் ஓய்வெடுத்த பிறகு மீண்டும் நடந்து காசிக்குத் திரும்பினார்கள். 

மழைபெய்து ஓய்ந்த மாலை நேரம் அது. மறுகரையில் ஓங்கி வளர்ந்திருந்த ஓர் ஆலமரத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள். சட்டென ஒரு கணத்தில் கரைமுழுதும் ஏராளமான ஆலமரங்களைக் கொண்ட தனது ஊர் ஏரியை நினைத்துக்கொண்டான் சுகுமாரன். அந்த ஏரியில்தான் அவனுக்கு நீச்சல் பயிற்சியளித்தார் அவன் அப்பா. எல்லாவிதமான நீச்சல்களிலும் அவன் தேர்ச்சி பெற்றிருந்தான். ஒருநாள் எதிர்க்கரையில் நின்றிருக்கும் ஆலமரத்தைச் சுட்டிக்காட்டிய அவன் அப்பா அதைத் தொட்டுவிட்டு திரும்பமுடியுமா என்று அவனிடம் கேட்டார். ஏறத்தாழ ஒரு மைல் நீளத்துக்கும் அப்பால் இருந்தது மறுகரை. “முடியும் அப்பா” என்றபடி இரையெடுக்கத் தாவிய மீன்கொத்திபோல ஏரிக்குள் தாவிக் குதித்தான் சுகுமாரன். ஒருமுறை கூட திரும்பிப் பார்க்காமலேயே நீந்திச் சென்று மறுகரையைத் தொட்டுவிட்டுத் திரும்பினான். காலை வெளிச்சத்திலும் காற்றிலும் பட்டுத்துணிபோல தகதகத்துக்கொண்டிருந்த கங்கையைப் பார்த்தபடியே அந்தப் பழைய கதையை பெரியவரிடம் சொன்னான் சுகுமாரன்.

அமைதியாக அவன் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்ட பெரியவர் “இப்ப உன்னால இந்த கங்கையில நீந்தி அந்த மரத்தைத் தொட்டுட்டு வரமுடியுமா?” என்று சுகுமாரனைப் பார்த்துக் கேட்டார். சுகுமாரன் மறுகணமே பெரியவரின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு கங்கைக்குள் பாய்ந்தான். ஒரு கட்டுமரம்போல கங்கையை இருபுறமும் விலக்கியபடி அவன் உடல் முன்னேறிச் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தார் பெரியவர்.  சில நிமிடங்களிலேயே அவன் மறுகரையின் மரத்தைத் தொடுவதையும்  மீண்டும் கங்கைக்குள் தாவுவதையும் பார்த்தார். கரையை அடைந்ததும் ஒரு சிலையைப்போல தண்ணீரிலிருந்து மேலே எழுந்துவந்தான் சுகுமாரன். அவன் உடல்முழுதும் தண்ணீர் வழிந்தபடி இருந்தது. அவன் உடலில் தேங்கி உருளும் தண்ணீர்த்துளிகளில் கதிரவன் ஊடுருவி மின்னிமின்னி மறைந்தான்.  உறுதியான அவன் உடற்கட்டைப் பார்த்த பெரியவர் “வைரம் பாய்ஞ்ச மரம் மாதிரி இருக்கிறாய்” என்று புன்னகைத்தார். தொடர்ந்து ”தமிழ்நாட்டின் அதிர்ஷ்டமாக சுடர்விட வேண்டிய உன்னை இந்த கங்கையில வச்சி விளையாடுற விதியின் விளையாட்டைத்தான் புரிஞ்சிக்கவே முடியலை” என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டார்.

சுகுமாரன் உடைமாற்றி அருகில் அமர்ந்ததும், “திடீர்னு ஒரு புராணக்கதை ஞாபகத்துக்கு வருது” என்றார் பெரியவர். தொடர்ந்து  ”முடவனாகவும் முனிவனாகவு இருந்த ஒருவனுடைய கதை” என்று சொல்லி அவன் ஆவலைத் தூண்டினார். “சொல்லுங்க ஐயா” என்றபடி சிரித்தான் சுகுமாரன்.

“அவருடைய பேரு சயுக்குவன். கால் இல்லாததால அவரால எங்கயும் நடந்து போவமுடியாது. எங்க போகணும்ன்னாலும் ஒரு வண்டி வச்சிகிட்டுதான் போவமுடியும். ஒருநாள் வண்டியில ஒரு காட்ட தாண்டி போயிட்டுருக்காரு. மாடுகள் ரொம்ப களைச்சிட்டுதுன்னு ஒரு கொளத்தங்கரையில நெழலா பாத்து வண்டிய நிறுத்திடறான் வண்டிக்காரன். மாடுங்கள அவுத்து தண்ணி காட்டிட்டு, அதுங்களும் கொஞ்ச நேரம் படுத்து ஓய்வெடுக்கட்டும்ன்னு விட்டுடறான். வண்டிக்காரனும் முனிவரும் கூட ஓய்வெடுக்கறாங்க. பக்கத்துல ஒரு பாழும் கெணறு இருக்குது. திடீர்னு அதுலேருந்து ஒரு கொரல் கேட்குது. நல்லா உத்து கேட்டபிறகுதான் அது பல குரல்கள்னு தோணுது. ஒரு சமயத்துல கா கா ன்னு காக்கா கத்தற மாதிரி சத்தம். அடுத்த நிமிஷமே கூகூன்னு குயில் கூவுறமாதிரி சத்தம். அதுங்கூடவே குருக் குருக்னு புறா கூப்புடறமாதிரி சத்தம். ஒன்னுமே புரியலை. காதுகுடுத்து நல்லா கவனமா கேக்கும்போது, பறவைங்க சத்தம் மறஞ்சி மனுசங்களோட சத்தம் மாதிரியும் தோணுது. அவருக்கு ஒரே கொழப்பம். ரொம்ப கவனமா கேக்கறாரு. பிறகு தன்னுடைய தவவலிமையால அந்தக் குரலுக்குரிய உயிர் யார்னு ஆலோசன பண்ணிப் பார்க்கறாரு. கடசியா அது தன்னுடைய பித்ருக்களுடைய குரல்தான்னு அவருக்கு புரியுது. சாந்தமில்லாம அலையும் ஆன்மாக்கள். அவுங்களுக்கு அமைதிய கொடுக்கறது தன்னுடைய கடமைன்னு அவருக்கு தோணுது. தன்னுடைய ஆற்றல பயன்படுத்தி கங்கை, யமுனை, கயை மூணு நதிகளயும் அந்த இடத்துல வரும்படி செய்யறாரு. பித்ருக்களுடைய ஆன்மாக்கள் ஒன்னொன்னா அந்த நதியில முழுகி குளிச்சி சொர்க்கத்துக்குப் போயிடறாங்க.”

கதையைக் கேட்டு புன்னகைத்தான் சுகுமாரன். பிறகு கங்கையின் பக்கம் முகத்தைத் திருப்பியபடி “அதிர்ஷ்டமும் துரதிருஷ்டமும் எப்பவுமே இப்படி  இணைஞ்சிதான் இருக்கும்போல” என்று சொல்லிவிட்டு தலையை அசைத்துக்கொண்டான். தொடர்ந்து, “ஒருபக்கம் தீர்வே இல்லாத உடல் ஊனம். இன்னொரு பக்கம் நினைச்ச இடத்துக்கு கங்கையை வரவழைக்கக் கூடிய சக்தி. இது என்ன விதமான சங்கமமோ” என்றபடி பெருமூச்சுவிட்டான்.

அவன் சொற்களைக் கேட்டு பெரியவரின் புருவங்கள் உயர்ந்தன. மெலிந்த குரலில் “இந்த ஞானத்துக்கும் திறமைக்கும் நீ பெரிய உச்சத்துக்கே போயிருக்கணும் சுகுமாரா…..” என்று எதையோ சொல்லத் தொடங்கி முடிக்காமலேயே “த்ச்” என்று நாக்கைச் சப்புக்கொட்டியபடி நிறுத்திவிட்டார். பிறகு மெதுவாக எழுந்து கரையின் ஓரமாகவே நடக்கத் தொடங்கினார். அவருடைய நிழலைப் போல சுகுமாரனும் பின்னால் நடந்தான்.

அன்று இரவு ஒரு சத்திரத்தில் சாப்பிட்டுவிட்டு உறங்கும்போது, “சுகுமாரா, நான் ஒரு விஷயம் சொல்றேன். கேப்பியா?” என்றார். “சொல்லுங்க ஐயா” என்றபடி படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தான் சுகுமாரன்.

“என் மரணத்துக்குப் பிறகு நீ இந்த காசியில இருக்கவேணாம். ஊருக்கு திரும்பிப் போயிடு.”

அந்த வார்த்தைகளை சிறிதும் எதிர்பார்க்காத சுகுமாரன் “ஐயா..” என்று எதையோ கேட்க முனைந்தான். அதற்கு எந்த வாய்ப்பும் கொடுக்காத பெரியவர் தொடர்ந்து “எனக்கு எந்த சடங்கும் செய்யவேணாம். உன் கையால கங்கையில இழ்த்து விட்டுடு. அது போதும்” என்று சொன்னார்.

“ஐயா, என்ன இது, இந்த நேரத்துல? இப்படியெல்லாம் பேசாதீங்க, அமைதியா படுங்க” என்று செல்லமாக அவரைப் பார்த்து அதட்டினான் சுகுமாரன். எந்தப் பதிலும் சொல்லாமல் ஒரு புன்முறுவலோடு கண்களை மூடிக்கொண்டார் பெரியவர். அவருக்கு அருகே அமர்ந்து பாதங்களை மெதுவாக அமுக்கிவிட்டான் சுகுமாரன். எப்போது தூங்கினோம் என்பது தெரியாமலேயே அவர் பாதங்களிலேயே தலைவைத்தபடி தூங்கிவிட்டான்.

கோவிலில் ஒலித்த முதல் மணியோசையைக் கேட்டபோது அவனுக்கு விழிப்பு வந்தது. பார்வைக்கு எதிரில் இருந்த பெரியவரின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு உள்ளங்கைகளை விரித்து சில கணங்கள் பார்த்தபடி அமர்ந்திருந்தான். பிறகு பெரியவரை எழுப்புவதற்காக அவரை அசைத்தபோது அவர் தலை மறுபக்கம் தளர்ந்து சரிந்ததைப் பார்த்து அதிர்ச்சியுடன் அவர் மார்பைத் தொட்டுத் தடவினான். ஈரம் படிந்த ஆற்றங்கரைப் பாறைபோல குளிர்ந்திருந்தது. அதிர்ச்சியில் அவன் உடல் குலுங்கியது. ”ஐயா” என அவனை மீறி எழுந்த குரலைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் நெருங்கி வந்து பார்த்தார்கள். ஒருவர் அவருடைய நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு “போயிட்டாருப்பா” என்றார். 

சத்திரத்துக்காரர்கள் பெரியவரின் உடலை கங்கைக்கரை வரைக்கும் சுமந்துவர உதவினார்கள். சூரியன் இன்னும் உதித்திருக்கவில்லை. பிரியாத இருளிலேயே ஒரு படகில் அவரை ஏற்றிக்கொண்டு கங்கையில் சென்றான் அவன். குளிர்ந்த காற்றின் வேகம் சீராக இருந்தது. சூரியன் மேலெழ மேலெழ செவ்வண்ணப் பட்டாடையை விரித்ததுபோல கங்கை நிறம்மாறி ஓடியது. நடுப்பகுதியைத் தொட்ட தருணத்தில் சூரியனின் முகம் முழுமையாகத் தெரிந்தது. வெட்டுண்ட வாழைமரத்தை தூக்குவதுபோல பெரியவரை இரு கைகளாலும் தூக்கி சூரியனின் பார்வையே சாட்சியாக மெதுவாக கங்கைக்குள் இறக்கினான். ஒருசில நீர்க்குமிழிகள் வெடித்து மேலெழுந்து அடங்க, அவர் உடல் கங்கையின் ஆழத்துக்குள் சென்று மறைந்தது.

மூன்று நாட்கள் உண்ணாமலும் உறங்காமலும் கங்கைக்கரையிலேயே திரிந்தான் சுகுமாரன். களைத்துப்போய் ஒரு மரத்தடியில் சரிந்து படுக்கப்போன சமயத்தில் மிக அருகில் கேட்பதுபோல “ஊருக்கு திரும்பிப் போயிடு” என்று யாரோ சொல்வதுபோல கேட்டது. சட்டென உறக்கம் கலைய விழித்து அக்கம்பக்கத்தில் சுற்றிப் பார்த்தான். ஒருவரும் இல்லை. தன் மனசின் குரலாக இருக்குமென நினைத்தபடி உறங்கினான். விடிந்தபோது அந்தக் குரல் ஓர் எதிரொலிபோல அவன் நெஞ்சில் மீண்டும்மீண்டும் ஒலித்தபடி இருப்பதை உணர்ந்தான்.

காலையில் கங்கையில் பெரியவரை நினைத்து மூழ்கிவிட்டு கரைக்குத் திரும்பி தண்ணீர் சொட்ட நின்றிருந்த சமயத்தில், யாரோ ஒருவர் படிக்கட்டுகளில் இறங்கி அவனைக் கடந்து சென்றார். ஒரு கணம் சட்டென அவன் பக்கமாகத் திரும்பி “இன்னுமா இங்க இருக்கற நீ? இந்த ஊர்க்கணக்கு முடிஞ்சி போயிடுச்சி. போ. போ. ஊருக்கு போ” என்று சொல்லிவிட்டு கங்கைக்குள் இறங்கி நீந்தத் தொடங்கினார். அக்கணத்தில் அது ஒரு கட்டளை என அவனுக்குத் தோன்றியது. மெதுவாக எழுந்து படியேறினான். மேல் படியில் யாரோ ஒரு அம்மா அவனை நிறுத்தி மடிக்கப்பட்டிருந்த தேக்கு இலையில் சூடாக கஞ்சியை ஊற்றிக் கொடுத்தார். அதை வாங்கி ஓரமாக நின்று உண்டுமுடித்தான் அவன். மெதுவாக மேலேறிச் சென்று ஒரு மரத்தடியில் நின்றான். “போங்க போங்க…. வழியில நிக்காதீங்க” என்றபடி ஒரு கூட்டம் ஒரு மூங்கில் பாடையைச் சுமந்தபடி கடந்துசென்று படிகளில் இறங்கியது. ஏதோ ஒரு விசையால் செலுத்தப்பட்டவன்போல ஸ்டேஷனுக்கு வந்து சென்னைக்கு ஒரு பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு ரயிலைத் தேடிச் சென்றான்.

வண்டி புறப்பட்ட கணத்திலிருந்து கணக்கில்லாமல் கடந்துபோன ஆண்டுகளின் நினைவுகள் மோதியபடி இருந்தன. எதிலும் அவன் மனம் லயிக்கவில்லை.  பகலிலும் இரவிலும் ஜன்னல் வழியாக கடந்துபோகும் வயல்வெளிகளையும் ஊர்களையும் மரங்களையும் நதிகளையும் பாலங்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தான். அந்தப் பெட்டியில் பயணம் செய்த ஒரு கூட்டம் சாப்பிட உட்கார்ந்த சமயங்களிலெல்லாம் அவனுக்கு ஒரு காகிதத் தட்டில் வைத்துக் கொடுத்தார்கள். மெளனமாக அதை வாங்கிச் சாப்பிட்ட பிறகு மறுபடியும் வேடிக்கை பார்த்தான். இரண்டு நாட்களுக்குப் பிறகு சென்னை வந்தது. மறுபடியும் ஒரு பயணம். மாலை மயங்கும் நேரத்தில் அவன் தன் கிராமத்தில் இறங்கினான்.

சுகுமார பவனம் வெள்ளையடிக்கப்பட்டு மாவிலைத் தோரணங்களுடன் அலங்கரிக்கப்பட்டு பொலிவோடு நிற்பதை தொலைவிலிருந்தே பார்த்தான் சுகுமாரன். பால்யகால நினைவுகள் நெஞ்சில் புரள வாசல்வரைக்கும் வந்தவன், அடுத்த அடியை எடுத்துவைக்க முடியாதவன்போல அப்படியே அசைவில்லாமல் நின்றுவிட்டான். அவன் நடித்து வெளிவராத திரைப்படங்களின் விளம்பரங்களில் இடம்பெற்றிருந்த அவனுடைய பழைய தோற்றங்களின் பெரிதாக்கப்பட்ட படங்கள் தட்டிகளில் அங்கங்கே வைக்கப்பட்டிருந்தன. தோரணங்களுக்கு இணையாக வண்ணத்தாள்களால் ஆன கொடி படபடக்க கட்டிக்கொண்டே வந்த இரு இளைஞர்கள் அவனைப் பார்த்துவிட்டு அருகில் ஓடிவந்து “யார பாக்கணும் ஐயா?” என்று மெதுவாகக் கேட்டார்கள். பதில் சொல்லாமல் வார்த்தைகளை விழுங்கியபடி பெருமூச்சோடு நிற்கும் அவனைப் பார்த்துவிட்டு இருவரும் கண்களாலேயே கேள்விகளைப் பரிமாறிக்கொண்டார்கள். ஒருவன் அவனுக்கு அருகிலேயே நிற்க, இன்னொருவன் தகவலைச் சொல்ல உள்ளே ஓடினான். தகவல் பரவிய வேகத்தில் பல இளைஞர்கள் பவனத்திலிருந்து வெளியே வந்து அவனைச் சூழ்ந்து நின்றார்கள். இறுதியாக “இவருதான் ஐயா” என்ற சொல் பின் தொடர சுகுமாரனின் அப்பா வந்து நின்றார். அவரும் மற்றவர்களைப்போல “என்ன வேணுங்க ஐயா?” என்று சட்டென தொடங்கி பாதியிலேயே நிறுத்திவிட்டு, அவன் விழிகளையும் கட்டு குலையாத தோள்களையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்த தருணத்தில் அவன் அவர் கால்களில் விழுந்தான்.

அதிர்ச்சியும் பரவசமும் ஒருங்கே நிறைந்த மனத்துடன் மெலிந்த குரலில் ”சுகுமாரா……..” என அழைத்தபடி குனிந்து அவனைத் தூக்கினார் அவர். உடல் அதிர இருவரும் தழுவிக்கொண்டார்கள். பிறகு மெல்ல அவனை விடுவித்து நிறுத்தி அவன் முகத்தை, முதன்முதலாக குழந்தையைப் பார்ப்பதுபோல சில கணங்கள் ஆசையோடு பார்த்தார்.  ”என்னடா கோலம் இது தம்பி” என்று சொன்னபடி அவன் கன்னங்களில் செல்லமாக அடித்தார். கூடியிருக்கும் இளைஞர்கள் பக்கமாகத் திரும்பி, “என் மகன் சுகுமாரன். இந்த சுகுமார பவனத்தின் சுகுமாரன்…” என்று அறிமுகப்படுத்தினார். ”நான் நம்பிய தெய்வம் கைவிடலை. கடைசி காலத்துலயாவது கொண்டு வந்து சேர்த்துட்டுது…..” என்றபோது அவர் குரல் தழுதழுத்தது. ”அப்பா…..” என்று தொட்டு அவரை இழுத்து மீண்டும் தன்னோடு சாய்த்துக்கொண்டான் அவன். அதற்குள் செய்தி கிடைத்து அவன் அம்மாவும் அங்கேயே வந்துவிட இருவரையும் ஒருசேரத் தழுவினான் சுகுமாரன். அன்று முழுக்க பவனத்தில் பழைய கதைகளைப் பேசிப்பேசி நேரம் கடந்துபோனது.

”விடிஞ்சா பொங்கல். இந்த கோலத்துலயே இருந்தா எப்படி? மொதல்ல போயி தாடிமீசைய எடுத்துட்டு வரலாம். வா” என்றார் அப்பா.

அவர் சொற்களை அவனால் தட்டமுடியவில்லை. அவரோடு கடைக்குச் சென்று திரும்பியவனை எல்லோரும் வைத்த கண் எடுக்காமல் பார்த்தார்கள்.  அம்மா அவனுக்கு திருஷ்டி சுற்றிப் போட்டாள்.

”அசல் ஹீரோதான்டா.”

“வாய்ப்பு மட்டும் சரியா அமைஞ்சிருந்தா கமல், ரஜினிக்குலாம் சரியான போட்டியா இருந்திருப்பாரு.”

”எத்தன வருஷம் ஓடினாலும் உடல்கட்டு அப்படியே இருக்குது பாருடா”

அருகில் நின்றிருந்த பயிற்சி இளைஞர்கள் அனைவரும் தமக்குள் மாறிமாறி முணுமுணுத்துக்கொண்டார்கள்.

மறுநாள் பொங்கல்விழாப் போட்டிக்காக கூடியிருந்த பொதுமக்கள் வைத்த விழியை விலக்கமுடியாதபடி அவனையே பார்த்தபடி நின்றிருந்தார்கள். அக்கம்பக்கத்து கிராமங்களில் வாழ்க்கைப்பட்டுச் சென்ற அவனுடைய ஐந்து சகோதரிகளும் குடும்பத்தோடு வந்து அவனைப் பார்த்தார்கள். பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஆறுமுறை மரமேறி இறங்கிய அவனுடைய வெற்றிக்கணக்கு இன்னும் யாராலும் தொடமுடியாத புள்ளியாகவும் புராணமாகவும் நிலைபெற்றுவிட்ட கதையை மாறிமாறிச் சொல்லிக்கொண்டார்கள். அவன் செல்லும் இடங்களிலெல்லாம் அவர்களும் போனார்கள். பலவிதமான புதுப்புது போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொன்றிலும் புதிய இளைஞர்கள் உற்சாகமாகக் கலந்துகொண்டு தம் திறமையை வெளிப்படுத்தினார்கள்.  ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் சுகுமாரன் மகிழ்ச்சியோடு அவர்கள் கைகளைப் பற்றி குலுக்கி வாழ்த்தினான்.

நிறைவுப் போட்டியாக தென்னைமரத்தில் ஏறி காயை வெட்டிச் சீவும் போட்டியை அறிவித்தார் சுகுமாரனின் அப்பா. பலத்த கைத்தட்டல்களுக்கிடையில் புவனத்தில் பயிற்சி பெறுபவர்கள் ஒவ்வொருவராக வந்து தென்னைமரத்தில் ஏறி இறங்கினார்கள். ஒருசிலர் மூன்று முறைகள். ஒருசிலர் இரண்டுமுறைக்கு மேல் ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாமல் நிலைகுலைந்து உட்கார்ந்துவிட்டார்கள். ஒருவன் மட்டும் நான்குமுறை ஏறி இறங்கினான். பார்வையாளர்களின் கைத்தட்டல் இடிமுழக்கம்போல எங்கெங்கும் எதிரொலித்தது. வேர்வை வழியும் உடலுடன் இருக்கும் அவனைப் பார்த்தபோது  தம்முடைய இளம்பருவத்துத் தோற்றத்தை ஒருகணம் நினைத்துக்கொண்டான் சுகுமாரன்.

“வேற யாராவது முயற்சி செய்றிங்களா?” என்றபடி கூட்டத்தை நோக்கினார் சுகுமாரனின் அப்பா. யாரும் முன்வரவில்லை. அந்த இளைஞன்தான் வெற்றிவீரனாக அறிவிக்கப்படப் போகிறான் என எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில் சுகுமாரனின் தோளைத் தொட்ட அவன் அப்பா, “நீ ஏன் ஒருமுறை முயற்சி செய்யக்கூடாது சுகுமாரா?” என்று கேட்டார். மின்சாரத்தைத் தொட்டதுபோல இருந்தது அவனுக்கு. “அதெல்லாம் ஒரு வயசுலதான்பா முடியும். இப்ப எப்பிடிப்பா முடியும்? சும்மா விளையாடாதீங்க. எல்லாத்தயும் மறந்து ரொம்ப காலமாவுது” என்றான்.

“வயசுக்கும் திறமைக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல சுகுமாரா. எல்லா சக்தியும் மனசுலதான இருக்குது” என்று மெதுவாகச் சொன்னார் சுகுமாரனின் அப்பா. தொடர்ந்து “நீ ஜெயிக்கறத என் கண்ணால பார்க்கணும் சுகுமாரா. ஒரு தரம். ஒரே ஒரு தரம். என் ஆயுசுக்கு அது போதும்” என்று அடங்கிய குரலில் சொன்னார். அக்கணத்திலேயே அவர் கண்கள் அவனிடமிருந்து விலகி எங்கோ தொலைதூரத்து வானத்தை, தோரணங்களை, வாசலை, தென்னையைப் பார்ப்பதுபோல விலகிவிட்டன. அந்தப் பார்வை தன் உடலையும் மனத்தையும் முறுக்கேற்றுவதை உணர்ந்தான் சுகுமாரன். சட்டென குனிந்து தன் அப்பாவின் பாதத்தைத் தொட்டு “முயற்சி செய்றேன்பா” என்றான்.

கூட்டத்தைப் பார்த்து தலைதாழ்த்தி வணங்கிய சுகுமாரன் மரத்தின் அருகில் சென்று அதையும் தொட்டு வணங்கினான். அதே கணத்தில் பார்வையாளர்களின் ஆரவாரம் சட்டென அடங்கி ஆச்சரியமான வகையில் அமைதியடைந்தது. ஒருவித திகைப்புடன் அவன்மீது எல்லோருடைய பார்வையும் பதிந்தது. அந்த மெளனத்தையே உணராதவனாக மெதுவாக மரத்தில் தாவி ஏறினான் சுகுமாரன். கைகளும் கால்களும் மாறிமாறித் தாவும் வேகத்தை நம்பமுடியாதபடி இருந்தது. உச்சிக்குச் சென்ற சுகுமாரன் கத்தியால் வெட்டி ஒரு காயை உதிர்த்துவிட்டு மெதுவாக கீழே இறங்கி நின்றான். மறுகணமே மீண்டும் மரத்தில் ஏறத் தொடங்கினான். அப்போதும் கூட்டம் மெளனத்தில் மூழ்கியிருந்தது. மூன்று சுற்றுகள் முடிந்து நாலாவது சுற்றுக்காக அவன் மரத்தைத் தொட்டு ஏறத் தொடங்கிய கணத்தில் பரவசத்தில் கூவத் தொடங்கியது கூட்டம். கைத்தட்டல்களும் முழக்கங்களும் இடைவிடாமல் ஒலிக்கத் தொடங்கின. அதே நேரத்தில் நான்காவது சுற்றை முடித்து ஐந்தாவது சுற்றைத் தொடங்கினான் சுகுமாரன். ஒவ்வொரு கணமும் ஆரவாரம் பெருகியபடி இருந்தது. ஐந்தாவது சுற்றும் முடிந்து ஆறாம் முறையாக மரத்தின் உச்சிக்குச் சென்று காயை வீழ்த்திவிட்டு ஏறினான். அவன் உடலில் வேர்வை ஆறாக பெருக்கெடுத்தோடியது. சில கணங்களிலேயே ஆறாவது சுற்றையும் வெற்றிகரமாக முடித்தான் சுகுமாரன். புதிய இளைஞர்கள் அனைவரும் ஓடோடி வந்து அவனை தோள்மீது தூக்கிக்கொண்டார்கள். புவனத்தைச் சுற்றிச்சுற்றி வந்தார்கள். எங்கெங்கும் வாழ்க முழக்கம் கேட்டது. ஆனந்தத்தில் கண்கள் தளும்ப தொலைவிலிருந்து அவனைப் பார்த்து கையசைத்தார் சுகுமாரனின் அப்பா.

ஒருவார காலம் வரைக்கும் அந்த வெற்றிக்களிப்பில் மிதந்துகொண்டிருந்த சுகுமாரபவனத்தில் மறுநாள் காலையில் துக்கத்தின் நிழல் கவிந்தது. சுகுமாரனின் அம்மாவின் மரணச்செய்தியால் எல்லோரும் நிலைகுலைந்து போனார்கள். தினந்தோறும் ஆறுமணிக்கு எழுந்து ஏழுமணிக்கு பூக்கூடையோடு திரெளபதையம்மன் கோவிலுக்குச் செல்லும் பழக்கமுள்ளவர் அவர். எட்டுமணியைக் கடந்தும் எழுந்துவராததால் சந்தேகம் கொண்டு எழுப்புவதற்காகச் சென்றபோதுதான், தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துபோயிருப்பதை அறிந்துகொண்டார்கள். செய்தி கிடைத்து ஓடோடி வந்த சுகுமாரனால் தன் அம்மாவின் உடலுக்கருகில் நிற்கக்கூட முடியவில்லை. நிலைகுலைந்து விழுந்துவிட்டான். செய்தி கிடைத்ததும் அவன் சகோதரிகளின் குடும்பத்தினர் திரண்டு வந்து அழுதார்கள். மாலை வரைக்கும் அக்கம்பக்கத்து ஊர்க்காரர்களெல்லாரும் கூட்டம்கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அதற்குப் பிறகு நீண்ட ஊர்வலமாக அவர் உடல் சுமந்து செல்லப்பட்டது.

அம்மாவின் உடலுக்கு கொள்ளிவைக்கும்போது கங்கையில் பெரியவரின் உடலை இறக்கிவிட்ட கணத்தை நினைத்துக்கொண்டான் சுகுமாரன். தொடர்ந்து ”என் மரணத்துக்குப் பிறகு நீ இந்த காசியில இருக்கவேணாம். ஊருக்கு திரும்பிப் போயிடு” என அவர் சொன்ன வார்த்தைகளும் நினைவுக்கு வந்தன. யாரோ முகம் தெரியாத ஒரு துறவி ”இந்த ஊர்க்கணக்கு முடிஞ்சி போயிடுச்சி. போ. போ. ஊருக்கு போ” என நின்று சொல்லிவிட்டுச் சென்ற சம்பவமும் மனத்தில் மோதியது. எல்லாமே இதற்குத்தானா என நினைத்த கணத்தில் அவன் மனம் வெடித்துவிடும்போல இருந்தது. எரியத் தொடங்கிய சிதையைப் பார்த்து அம்மா என வாய்விட்டு அலறினான். பக்கத்தில் இருந்தவர்கள் அவனை ஆறுதலாக தாங்கிப் பிடித்தபடி வீட்டுக்கு அழைத்துவந்தார்கள்.

இரண்டுமூன்று வாரங்களில் துக்கத்தின் இறுக்கம் மெல்லமெல்ல கரைய, சுகுமார பவனம் மீண்டும் தன் சுறுசுறுப்பை அடைந்தது. அப்பாவின் பொறுப்புகள் ஒவ்வொன்றையும் அவனாகவே எடுத்துக்கொண்டான்.  பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்த சில நாட்களிலேயே தன் உடலின் இறுக்கம் தளர்ந்து நெகிழத் தொடங்கிவிட்டதை அவனால் உணரமுடிந்தது. பயிற்சி கொடுப்பவனாக இருந்தாலும்கூட, பயிற்சி பெறும் பதினேழு பேருடன் பதினெட்டாவது ஆளாகவே தன்னை நினைத்துக்கொண்டான் சுகுமாரன்.  மேற்பார்வை பார்ப்பவராகமட்டும் இயங்கினார் சுகுமாரனின் அப்பா.

ஒருநாள் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் பயிற்சியில் எல்லோரும் ஈடுபட்டிருந்த சமயத்தில் இளைஞனொருவனை அழைத்துக்கொண்டு ஏறத்தாழ ஐம்பது வயதையொட்டிய ஒருவர் சுகுமாரபவனத்துக்குள் வந்தார். சுகுமாரனின் அப்பாவைப் பார்த்து வணங்கினார்.

“நீங்க…..?”

“பக்கத்து பாளையத்துக்காரங்க ஐயா. இவன் என் புள்ளை. சினிமா பாத்துப்பாத்து பைத்தியமா நிக்கறான். அவனமாரி நடிக்கணும் இவனமாரி நடிக்கணும்ன்னு ராவும்பகலும் பெனாத்திகினே கெடக்கறான். அதுக்காக உடம்ப தேத்தி இரும்புமாரி வச்சிக்கணுமாம். டவுனுக்கு போவணும்ன்னு துடியா துடிச்சான். மொதல்ல நம்ம பாளயத்துல படிடான்னு  இங்க இழுத்து வந்துட்டன். நீங்கதான் அவன ஆளாக்கி உடணும்” வணங்கிய கைகளை விலக்காமல் சொல்லிமுடித்தார் அவர். அடுத்த கணமே தன் மகனை இழுத்து அவர் காலில் விழுந்து வணங்கும்படி சொன்னார்.

காலில் விழுந்தவனை “நல்லா இருடா தம்பி” என்றபடி தொட்டுத் தூக்கி நிறுத்திவைத்தார் சுகுமாரனின் அப்பா. சூரிய நமஸ்காரத்தை அடுத்து சவாசனத்தையும் முடித்துக்கொண்டு திரும்பிய சுகுமாரனை அருகில் அழைத்து விஷயத்தைச் சொல்லி அறிமுகப்படுத்தினார். அருகில் நின்றிருந்த இளைஞனின் முகம் தன்னுடைய முகத்தைப்போலவே இருப்பதை ஒருகணம் ஆச்சரியத்துடன் பார்த்தான் சுகுமாரன். அதே தலையமைப்பு. அதே முடியமைப்பு. வேகம் மிக்க அதே கண்கள். நெருங்கிச் சென்று அவன் தோளைத் தொட்டு அழுத்திவிட்டு புன்னகையோடு அவன் கன்னத்தைத் தட்டினான்.

“ஒன் பேரென்னப்பா?”

“தங்கவேலு.”

தன் ஆச்சரியத்தைப் பகிர்ந்துகொள்வதற்காக சுகுமாரன் தன் தந்தையின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவன் சொல்ல வருவதை ஏற்கனவே உணர்ந்தவரைப்போல அவர் மேலும்கீழும் தலையை அசைத்து புன்னகைத்தபடி நின்றார்.

சவாசனத்தில் உடலைத் தளர்த்திக்கொண்ட பயிற்சியாளர்கள் ஒவ்வொருவராக எழுந்து நின்றார்கள். அடுத்து செய்யவேண்டிய ஓட்டப்பயிற்சிக்காக தயாராக நின்றபடி சுகுமாரனின் சைகைக்காக காத்திருந்தார்கள். தங்கவேலுவின் தோளைத் தொட்ட சுகுமாரன் “போ. அவுங்களோடு சேர்ந்து நீயும் ஓடு” என்று சொன்னான்.  

(அம்ருதா – 2015)