Home

Sunday, 13 March 2022

இரு முனைகள்

  

புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தன். அவர் குழந்தையாக இருந்தபோது அவருடைய எதிர்காலத்தைக் கணித்த முதியவரொருவர் அவர் ஓர் அரசனாகவோ அல்லது ஞானத்துறவியாகவோ வரக்கூடும் என்று சொன்னார். சித்தார்த்தன் துறவின் வழியில் சென்றுவிடக்கூடாது என நினைத்தார் அவருடைய தந்தையார்.  அதனால் வெளியுலகமே அவருடைய கண்ணில் பட்டுவிடாமல் எல்லா வசதிகளோடும் அரண்மனைக்குள்ளேயே அவரை  வளர்த்தார். யசோதரை என்னும் பெண்ணுடன் அவருக்குத் திருமணம் நடந்தது. இருவருக்கும் ராகுலன் என்னும் மகன் பிறந்தான். 

தற்செயலாக தன் உதவியாளருடன் சித்தார்த்தன் அரண்மனைக்கு வெளியே சென்றபோது முதுமையினால் தள்ளாடும் ஒரு கிழவரையும் துன்பத்தில் உழலும் ஒரு நோயாளியையும் அழுகிக்கொண்டிருக்கும் ஒரு பிணத்தையும் ஒரு துறவியையும் அடுத்தடுத்து கண்டு திகைத்துவிட்டார். மனிதர்களின் துயரத்துக்கான காரணம் என்ன என்னும் கேள்வி அவரை வாட்டியது.

தன் கேள்விக்கான பதிலை அரண்மனைக்குள் இருந்தவாறு அறிய முடியாது என்பதை அவர் மனம் தெளிவாக உணர்ந்தது. அதனால் காட்டுக்குச் சென்று தவம் செய்ய முடிவெடுத்தார். அந்தப் பயணத்துக்கு மரபான வகையில் அனைவரிடமிருந்தும் விடைபெற்றுச் செல்வது சாத்தியமில்லை என்பதால் யாருமறியாத நள்ளிரவில் தன் மனைவி யசோதரையும் மகன் ராகுலனும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த தருணத்தில் அரண்மனையைவிட்டு வெளியேறினார். அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து ஞானம் பெற்ற பின்பே அவர் லும்பினிக்குத் திரும்பினார். சித்தார்த்தன் மனம் நிறைய கேள்வியைச் சுமந்துகொண்டு குடும்பத்தையும் ஊரையும் துறந்து சென்ற தருணம் மிகமுக்கியமான ஒரு வரலாற்றுத் தருணம். அத்தருணத்தை பலரும் சிறுகதைகளாக, நாவல்களாக, நாடகங்களாக பல மொழிகளில் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். அவை அனைத்தும் சித்தார்த்தனின் கோணங்களில் அமைந்தவை.

அத்தருணம் சித்தார்த்தனின் மனைவியாகிய யசோதரைக்கு எப்படி அமைந்திருக்கும் என்பது ஒரு புதிய கோணம். சில எழுத்தாளர்கள் அத்தருணத்தை சிறுகதைகளாக எழுதிப் பார்த்திருக்கிறார்கள். கன்னட மொழியின் மூத்த படைப்பாளியான மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் யசோதரையை மையப் பாத்திரமாகக் கொண்டு ஒரு நாவலையே எழுதியிருக்கிறார். ஆயினும் எழுத்தாளர்களுக்கு யசோதரையைப்பற்றிச் சொல்வதற்கு இன்னும் சில விஷயங்கள் எஞ்சியுள்ளன. ஆகவே யசோதரையின் கதைகள் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டு வருகின்றன. எம்.எஸ்.மூர்த்தி தனக்கேயுரிய கலைமொழியில் யசோதரையின் கதையை கன்னடத்தில் ஒரு நாடகமாக எழுதியிருக்கிறார். கன்னடத்திலிருந்து அந்நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்து அளித்திருப்பவர் கே.நல்லதம்பி.

ஐந்து காட்சிகள் மட்டுமே கொண்டது இந்த நாடகம். மேடையில் அரைமணிக்கும் குறைவான நேரத்தில் இந்த நாடகத்தை நிகழ்த்திவிட முடியும். நாடகமேடைக்கே உரிய அழகியலுடன் இச்சிறு நாடகம் அமைந்திருப்பதே, இதன் முக்கியத்துவம். தமிழில் மொழிபெயர்ப்பதற்கும் இதுவே காரணம். அரண்மனையை விட்டு வெளியேற முடிவெடுத்த சித்தார்த்தன்  உறங்கும் யசோதரையையும் குழந்தையையும் பார்த்துவிட்டுச் செல்வதற்காக அவர்களுடைய படுக்கையறைக்குள் வருகிறார்.  ஒரே ஒரு கணம் அவர்களை அருகில் நின்று கவனிக்கிறார். மறுகணமே ஆழ்ந்த பெருமூச்சுடன் அறையைவிட்டு வெளியேறிவிடுகிறார்.

படைப்பாளிக்கே உரிய சுதந்திரத்துடன் மூர்த்தி இக்காட்சியை வேறு விதத்தில் வடிவமைக்கிறார். யசோதரை உறங்குகிறாள் என்பது உண்மை. அதே சமயத்தில் அவளுக்குள் ஒருபோதும் உறங்காத இன்னொரு யசோதரை விழித்தெழுகிறாள். ”என்னைப் பற்றி அணுவளவும் சிந்திக்க வேண்டாம், பரிவான அன்புடன் உங்களுக்கு விடையளிக்கிறேன். என் அன்பு மட்டுமே நான் உங்களுக்கு கொடுக்கும் கட்டுச்சோறு.  வழிப்பயணத்தில் நீங்கள் சந்திக்க நேரும் அனைவருக்கும் அதைப் பகிர்ந்து கொடுங்கள். எல்லோரும் உண்ணட்டும். அவர்களிடமிருந்து அது அட்சயமாகட்டும். புறப்படு சித்தார்த்தரே.  ராகுலனை நினைத்துத் தயங்கவேண்டாம். வழியில் நூறாயிரம் ராகுலர்கள் உங்களுக்குக் கிடைக்கலாம். புறப்படு....என்று வழியனுப்பிவைக்கிறாள்.

அதே தருணத்தில் உறங்கும் மனைவிக்கு அருகில் குழம்பியபடி நிற்கும் சித்தார்த்தனுக்குள் ஊக்கமுற்ற இன்னொரு சித்தார்த்தன் புத்துணர்ச்சியுடன் வெளிப்படுகிறார். பற்றில் மூழ்கிய தன்னை, அப்பற்றிலிருந்து விடுவித்து ஆறுதல் சொன்ன குரலைக் கேட்டு அவர் மனம் மகிழ்ச்சியடைகிறது. மனத்தில் கவிந்திருந்த கவலைகளை விலக்கி, அரண்மனையைவிட்டு வெளியேறுவதற்குத் தேவையான நம்பிக்கையையும் உறுதியையும் வழங்கிய குரலை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறார். தன் இலக்கை தன்னால் இனி அடையமுடியும் என்னும் நம்பிக்கை சித்தார்த்தனுக்குள் பிறந்துவிடுகிறது. இனி தடையின்றி செல்லலாம், ஒளியை நாடியும் ஞானத்தை நோக்கியும் தன் பயணத்தை மேற்கொள்வதற்கான இசைவும் கட்டளையும் தனக்குக் கிடைத்துவிட்டதாகவே சித்தார்த்தன் நினைக்கிறார். தன்னை அழைத்துச் செல்லும் அக்குரலைப் பின்பற்றி அரண்மனையை விட்டு வெளியேறுகிறார்.

நாடக மொழியின் வழியாக ஒரு கலைஞன் தொடக்கூடிய அழகான ஒரு புள்ளி இது. யசோதரை, சித்தார்த்தன் என்கிற எல்லைகளைக் கடந்து அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரிய ஒரு பொதுப்பண்பை அறிந்துகொள்ள இந்தப் புள்ளியை ஆற்றலுடன் பயன்படுத்திக்கொள்கிறார் மூர்த்தி.

அமைதியும் இன்பமும் பொருந்திய இல்வாழ்க்கையின் மீதான விருப்பம் என்பது ஒருமுனை. அதே சமயத்தில் எளிய அடையாளங்களைக் கடந்த சமூக அடையாளத்தை அடைவதற்கான கனவு என்பது மறுமுனை. இன்பத்தில் திளைப்பவர்கள் அடையாளத்தை நோக்கி எழுவதில்லை. அடையாளத்தை நோக்கி எழுபவர்கள் இன்பத்தில் மூழ்கியிருக்க வாய்ப்புகள் அமைவதில்லை. ஒன்றைத் துறந்தே இன்னொன்றை அடையமுடியும். இருளில் தெரியும் விண்மீன்களாக இந்த இருமுனைகளை யசோதரையிலும் சித்தார்த்தனிலும் நம்மைப் பார்க்க வைக்கிறார் மூர்த்தி. அதன் வழியாக நம்மிடம் செயல்படும் இருமுனைகளையும் பரிசீலிக்கவைக்கிறார்.

விடைகொடுக்கும் யசோதரையும் இல்வாழ்வின் போக்கை நினைத்து படுக்கையிலேயே கிடக்கும் யசோதரையும் அருகருகே நிற்கும் மேடைக்காட்சி நாடகப் பார்வையாளர்களுக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும்.

ஒரு நாடகப் பிரதியின் நூலில் முன்னுரையாக இதற்கு மேல் சொல்வது அழகல்ல.  வாசகர்கள் ஒவ்வொரு காட்சியையும் வாசித்து மனத்தில் நிகழ்த்திப் பார்க்கவேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு நல்ல பிரதியை கன்னடத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவந்திருக்கும் கே.நல்லதம்பிக்கு என் வாழ்த்துகள். தமிழில் செயல்பட்டுவரும் நாடகக்குழுக்கள் இந்த நாடகத்தை அரங்கேற்ற வேண்டும் என்பது என் விருப்பம்.

 

(பெங்களூரைச் சேர்ந்த பூமி பதிப்பகத்தார் வழியாக வெளிவந்திருக்கும் ’யசோதரை உறங்கவில்லை’ என்னும் நாடகநூலுக்கு (கன்னடத்தில் :முனைவர் எம்.எஸ்.மூர்த்தி, தமிழில் : கே.நல்லதம்பி ) எழுதிய முன்னுரை)