Home

Sunday, 13 March 2022

வாழ்க்கையில் ஒரு நாள் - சிறுகதை


சென்னையிலிருந்து திரும்பியதுமுதல் யாரிடமும் பேசாமல்  அறைக்குள்ளேயே அடைபட்டிருந்தான் சண்முகவேலன். அம்மா, அப்பா, இந்திராணி, குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒற்றைச்சொல் பதில்களைமட்டுமே சொன்னான். பூபாளம் இசைக்குழுவிலிருந்து வந்த அலைபேசி அழைப்புகளைக்கூட அவன் மனம் பொருட்படுத்தவில்லை. அடுப்பில் வைத்த விறகுபோல அவன் மனம் எரிந்து கரியாகிக்கொண்டிருந்தது. இனி தன் கனவுகள் பொசுங்கிச் சாம்பலாவதை யாராலும் தடுக்கமுடியாது என்று தோன்றியபடியே இருந்தது.

காப்பித்தம்ளரை அவனுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு உட்கார்ந்த இந்திராணி “ஏன் இப்பிடி இருக்கிங்க? என்னங்க ஆச்சி? இந்த தடவயும் காய் உழுந்திருச்சா? சாவு ஊட்டுக்கு வந்த ஆளாட்டம் மூஞ்சிய தூக்கி வச்சிகினு உக்காந்துட்டா எல்லாம் சரியாயிடுமா? எல்லாத்தயும் உட்டு தள்ளிட்டு நடக்கற வேலய பாருங்க” என்றாள். அவன் கண்கள் ஒருகணம் அவளை ஏறிட்டுப் பார்த்துவிட்டுத் தாழ்ந்தன. மெளனமாக தம்ளரை எடுத்து காப்பியை அருந்தத் தொடங்கினான். . “என்னதான் எண்ணய பூசிகினு மண்ணுல பொரண்டாலும் ஒட்டறதுதான் ஒட்டும். புதுசா ஒன்னும் நான் சொல்லல. எல்லாமே ஏற்கனவே சொன்னதுதான்” என்று மெதுவான குரலில் சொன்னாள் இந்திராணி. அவனுடைய கையைத் தொட்டுத் திருப்பி உள்ளங்கை ரேகைக் கோடுகள்மீது தன் விரல்களால் கோடு போட்டபடி “முத்துங்க மாதிரி மூணு புள்ளைங்க. அதுங்க முன்னால் இப்பிடி தல குனிஞ்சி உட்கார்ந்தா அதுங்க என்ன நெனைக்கும்னு ஒரு நிமிஷம் யோசிச்சி பாருங்க” என்றாள்.

சண்முகவேலனுக்கு ஒரு கணம் சிரிப்பு வந்தது. அடுத்த கணமே அவன் மனம் வறண்டது. பின்னணிப்பாடகனுக்கான வாய்ப்பைத் தேடி ஓடிய சென்னைப்பயணங்களுக்கு அளவே இல்லை. திருமணத்துக்கு முன்பிருந்தே அது தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள். ஒவ்வொரு பயணத்தின்போதும் ஏராளமான கனவுகள். நம்பிக்கைகள். ஆசைகள். மயக்கங்கள். பிரார்த்தனைகள். நெஞ்சில் பாடல்வரிகள் தளும்பிப் புரண்டபடியே இருக்கும். ஒரே ஒரு பாட்டிலேயே அனைவரையும் கவர்ந்திழுத்துவிட வேண்டும் என்ற வேகம் துடிக்கும். கனவுகள் மொட்டென முகிழ்த்து மடலென அவிழ்ந்து விரிந்து வளரும். ஊரெங்கும் அவன் பேரும் படமும் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள். வானொலியில் எல்லா நிலையத்து நிகழ்ச்சிகளிலும் அவன் பாடிய பாடல்கள். வானவெளியில் அல்லும்பகலும் ஒலித்தபடியே இருக்கும் அவன் குரல். ஆனால் எதார்த்தத்தில் ஒவ்வொருமுறையும் ஒருநாள், இரண்டுநாள், மூன்றுநாள் என பொழுதனைத்தையும் விடுதி அறையிலேயே கழிக்கும்படிதான் நேர்ந்தது. அல்லது அந்த ஸ்டுடியோ, இந்த ஸ்டுடியோ என மாறிமாறி அலைந்துதிரிவதில் முடிந்துபோனது. இறுதியில் ஒருநாள் மாலை “என்னமோ தம்பி, இந்த தரம் சரியா அமையலை. அடுத்த தரம் பார்த்துக்கலாம்” என சொல்லப்படுவதைக் கேட்டுக்கொண்டு ஊருக்கு பேருந்து பிடிக்கும்போது மனம் சாம்பல் காடாக மாறிவிடும்.

பள்ளியில் பாடி, கல்லூரியில் பாடி, பூபாளம் குழுவில் பாடத் தொடங்கியபோது சுற்றுவட்டாரங்களில் அவன் குரலைக் கேட்டு மயங்காதவர்களே இல்லை. அடித்துப் பிடித்து ஓட நினைக்கிறவர்கள்கூட அவன் பாடப் போகிறான் என்றால் நின்றுவிடுவார்கள். அலுவலம், உணவுவிடுதி, கடைத்தெரு என அவன்மீது  விசேஷ பார்வை படியாத இடமே இல்லை. அந்த நாட்களில் ஏதோ ஒரு கணம் புகழ்வேட்கையின் விதையை அவன் நெஞ்சில் ஊன்றிவிட்டது. அது முளைவிட்டு, வளர்ந்து, மரமாகி, கிளைவிரித்து பேயாட்டம் போட்டது.

பக்கத்துவீட்டில் வானொலியில் அலைவரிசையை மாற்றும் கரகரப்புச் சத்தத்தைக் கேட்டு அவன் மனம் திசைதிரும்பியது. அலைந்துஅலைந்து ஒரு புள்ளியில் அது நின்றபோது கொழும்பு நிலையத்தின் வர்த்தக ஒலிபரப்பின் குரல் ஒலித்தது. ஏற்ற இறக்கங்களுடன் கூடிய நளினமான அறிவிப்பைத்  தொடர்ந்து ‘கரைமேல் பிறக்கவைத்தான்’ என்ற டி.எம்.எஸ். பாடல். பல மேடைகளில் அவன் மனமுருக பாடிய பாடல். சட்டென அவனுக்குப் புல்லரித்தது. எல்லாம் ஒருகணம் மறந்துவிட, அவன் ஆழ்மனம் அந்தக் குரலைப் பின்தொடர்ந்து சென்றது.

கொடியில் தொங்கிய துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்று தாழ் போட்டுக்கொண்டான். தண்ணீரை அண்டாவில் நிரப்பினான்.  குழாயிலிருந்து பெருகி இறங்கும் நீர்த்தாரையையே இமைக்காமல் பார்த்தபடி நின்றிருந்தான். அருவி, ஆறு, கடல் என எல்லாமே அந்தத் தாரையில் தெரிந்தன. சட்டென மகிழ்ச்சியின் ஒரு கீற்று அவனை வருடியது. ’ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்’ என வரிகள் அவன் நெஞ்சில் பொங்கின. புன்னகையோடு நீரை மொண்டு ஊற்றிக்கொண்டான். அவனுக்கு அந்தப் பாடலைப் பாட மிகவும் பிடிக்கும். அதைப் பாடாத மேடையே இல்லை. ஒவ்வொரு சொல்லையும் சொல்லச்சொல்ல கனவின் இனிமை நெஞ்சில் அலையெனப் புரளும். பத்துப் பாடல்களைப் பாடிவிட்ட பிறகு கிடைக்கும் ஆனந்தம் இந்த ஒரே பாட்டிலேயே கரைபுரண்டு வந்துவிடுவதை அவன் பலமுறை உணர்ந்ததுண்டு. அவனைப் பாடத் தூண்டும் அந்தப் பார்வை மானுடப்பார்வை அல்ல, அவன் ஒவ்வொரு நொடியும் விரும்பித் துடிக்கும் புகழின் பார்வையென அவன் மனம் நினைக்கத் தொடங்கிவிடும்.

தலையைத் துவட்டியபடியே அறைக்குள் வந்து மின்விசிறியை ஓடவிட்டு அதன்கீழ் சில நிமிடங்கள் நின்றான். காற்று ஈர உடலைத் தழுவியபடி விலகும் மகிழ்ச்சியில் லயித்தபடி கண்களை மூடினான். ‘புத்தம்புதிய புத்தகமே’ என்னும் பாடல் வரிகள் மிதந்துவருவதை மனம் உணர்ந்தது. கண்களைத் திறந்தபோது மேசைமீது சட்டம்போட்டு வைத்திருந்த அவனுடைய படத்தின்மீது பார்வை விழுந்தது. கல்லூரிப் படிப்பு முடிந்ததும் முழுநேரமும் பூபாளம் குழுவுடன் மேடைமேடையாக அலைந்த காலத்தில் பாண்டிச்சேரி குபேர் கல்யாண மண்டபத்து மேடையில் எடுத்த படம். அன்று யாரோ ஒருவர் அவனை மிகவும் புகழ்ந்து பேசி கண்ணாடி சட்டம் போட்ட ஒரு பாராட்டு மடலைப் படித்துவிட்டு அவனிடம் கொடுத்தார். பாட்டுநோட்டு வைக்கிற மேசைமீது அவன் அந்தப் பத்திரத்தை சாய்ந்தவாக்கில் வைத்திருந்தான். அதுகூட அந்தப் படத்தில் தெரிந்தது.

பத்திரத்தை வீட்டுக்குக் கொண்டுவந்த அன்று இரவு படுக்கையில் படுத்தபடி அதை மீண்டும்மீண்டும் படித்தபடியே இருந்தான். ஒவ்வொரு எழுத்திலும் அவனுக்குரிய ஒரு செய்தி மறைந்திருப்பதுபோலத் தோன்றி அவனை அலைக்கழித்தது. ஆனந்தத்தில் அவன் மனம் விம்மியபடியே இருந்தது. புகழின் இன்பத்தையும் விருப்பத்தையும் அவன் அக்கணத்தில் உணர்ந்தான். அந்தச் சமயத்திலேயே அவனுக்கு ஊர்முழுதும் பல ரசிகர்கள் தோன்றிவிட்டிருந்தார்கள். அவன் பாடும் மேடைகளுக்கெல்லாம் அவர்கள் தவறாமல் வந்து பாட்டு கேட்பார்கள். தனிப்பட்ட வகையில் நின்று பேசுவார்கள். “சீக்கிரம் நீங்க சினிமாவுல பாடறத நாங்க கேக்கணும் சார்” என்று வாழ்த்துவார்கள். கைகுலுக்குவார்கள். ”எப்படியாவது மகாதேவனயாவது, இல்ல எம்.எஸ்.வி.யவாவது போய் பாருங்க சார். உங்களுக்கு கண்டிப்பா ஒரு வாய்ப்பு தருவாங்க” என்று நம்பிக்கை ஊட்டுவார்கள். ”எஸ்.பி.பாலசுப்ரமணியன்னு புதுசா ஒருத்தருக்கு அடிமைப்பெண்ல மகாதேவன் வாய்ப்பு குடுத்திருக்காரு. நீங்களும் முயற்சி செஞ்சா கண்டிப்பா கிடைக்கும்” என்றார்கள்.  “எதிர்காலத்து டி.எம்.எஸ். நீங்கதான் சார். அதுல சந்தேகமே இல்லை. சார் பெரிய ஆளாவும்போது எங்களயெல்லாம் மறந்துடக்கூடாது”  என்று வேண்டிக்கொள்வார்கள். புறப்பட்டுச் செல்லும்போது சின்னச்சின்ன பரிசுகளைக் கொடுப்பார்கள். ”சும்மா இருங்கப்பா. டி.எம்.எஸ். எவ்ளோ பெரிய ஆள். அவருக்கு இணையா வச்சி பேசறது ரொம்ப தப்பு………..” என்று கூச்சத்தில் அவன் பலமுறை பின்வாங்கியதுண்டு. அப்போதெல்லாம் யாரோ ஒருவன் ஆவேசமாக, “உங்கள உசுப்பேத்திவிடறதுக்கு சொல்றதா  தயவுசெஞ்சி நினைச்சிக்காதிங்க சார். சத்தியமா சொல்றோம். இந்த நிமிஷம் நீங்க வந்து ஒரு பொது இடத்துல நின்னு பாடுங்க. கேக்கற ஒவ்வொரு ஆளும் உங்க குரல் டி.எம்.எஸ் குரல்மாதிரியே இருக்குதுன்னு சொல்லாம போவமாட்டான். அப்படி சொல்லாம எவனாச்சிம் போனான்னா, அந்த எடத்துலயே நான் என் பேர மாத்திக்கறேன்…..” என்றான்.

பெருமூச்சு விட்டபடி எழுந்து, அலமாரிக்குள் துவைத்து அடுக்கிவைக்கப்பட்டிருந்த வரிசையில் இருந்து ஒரு பேண்ட்டையும் சட்டையும் எடுத்துப் போட்டுக்கொண்டான். மேசையில் இருந்த படத்தை கையில் எடுத்து ஒருமுறை பார்த்தான். ஓரங்களில் தூசு படிந்து மங்கியிருந்தது. ஒரு துணியை எடுத்து, அழுக்குப் போக அதைத் துடைத்தபிறகு சற்றே தொலைவில் வைத்துக்கொண்டு தலையைச் சாய்த்துப் பார்த்தான். கல்யாண வீட்டுச் சந்தடியும் பேச்சுச்சத்தமும் கேட்பதுபோல இருந்தது. பிறகு, ஒலிபெருக்கியின் குரல் அத்துடன் சேர்ந்து ஒலித்தது. அப்புறம் அவனுடைய அழுத்தம் திருத்தமான இனிய குரலும் கேட்டது..

பத்து ஆண்டுகள். இருநூறு ருபாய் சம்பளம் நானூறு ரூபாயாக உயர்ந்ததுமட்டுமே அவன் வாழ்வில் நிகழ்ந்த ஒரே மாற்றம். ”ஒன் கூட குமாஸ்தாவா சேர்ந்தவன்லாம் இன்னிக்கு தாசில்தார், சப்கலெக்டர்னு எங்கயோ உயரத்துக்கு போயிட்டான். நீங்க ஏன் சார் இன்னும் இப்பிடியே நாற்காலிய தேச்சிகினு ஒக்காந்திருக்கிங்க…………” என்று கேட்காத ஆளே இல்லை. இந்திராணியே நூறுதரம் கேட்டதுண்டு. ஒருமுறை டெஸ்பாட்ச் தேவனாதன் ஸ்டாம்ப் ஒட்டியபடியே, “சார் ஒன்னும் நம்மப்போல சாதாரணப்பட்ட ஆள் கிடையாது தெரியுமா? எதிர்காலத்து டி.எம்.எஸ். அந்த அளவு திறமை அவர்கிட்ட இருக்குது. ஒரே ஒரு வாய்ப்பு கிடைச்சா போதும், ஒரே ராத்திரியில பெரிய ஸ்டாராய்டுவாரு. அந்தஸ்து, கார், பங்களானு எல்லாம் அதுக்கப்புறம் தானா தேடி வந்துடும்……..” என்று சொன்ன வார்த்தைகளை அவன் மனம் மறந்ததே இல்லை. அது ஞாபகத்துக்கு வந்ததும், அது பாராட்டுக்காக சொல்லப்பட்டதா சாபமாகச் சொல்லப்பட்டதா என முதன்முறையாக அவனுக்குள் சந்தேகமுள் இடறியது.

கூடத்துக்கு வந்தபோது  காய் நறுக்கிக்கொண்டிருந்த அம்மாவும் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த அப்பாவும் ஒரே நேரத்தில் அவன் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு மெளனமாக தலையைக் குனிந்துகொண்டார்கள். அவன் சமையலறையின் பக்கம் திரும்பி, “இந்திராணி, ஏரிக்கரையில சாமிக்கண்ணு மாமாவ பார்த்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு நடந்தான். “அப்பா, வரும்போது எனக்கு பிரிட்டானியா பிஸ்கட் வாங்கிவாங்க” என்றான் சின்னவன். ”அப்பா எனக்கு முறுக்கு” என்றாள் பெரியவள். “எனக்கு அதிரசம்பா” என்றாள் நடுப்பெண். ”சரிசரி” என்று தலையசைத்தபடி சிரித்தான்.

“மதியான சாப்பாட்டுக்கு வந்துருவிங்களா?” கரண்டியோடு வெளியே வந்தபடியே இந்திராணி கேட்டாள்.

“அதுல என்ன சந்தேகம்?”

“மாமாவோடு சேர்ந்து கச்சேரிய ஆரம்பிச்சிட்டா, பசியும் தெரியாது, தாகமும் தெரியாது. பாடிப்பாடியே மனசும் வயிறும் ரொம்பிடும். நேரம் காலம் தெரிஞ்சாத்தானே எழுந்துவரத் தோணும்…….”

பதில் எதுவும் சொல்லாமல் இந்திராணியைப் பார்த்து புன்னகைத்தபடியே சண்முகவேலன் வெளியே நடந்தான்.

தெருவைக் கடந்து தென்னந்தோப்பைக் கடந்ததும் ரயில்வே ஸ்டேஷன் தெரிந்தது. இலுப்பைமரத்தின் நிழலில் மாமா கால்நீட்டி உட்கார்ந்திருப்பதும் தெரிந்தது. ஸ்டேஷன் வழியாக வந்துபோகும் ரயில்களுக்கு சிக்னல் கொடுப்பதும் பாய்ண்ட் அடித்து திசைதிருப்பி விடுவதுதான் மாமாவின் வேலை. இரும்புத்தூண்கள்மீது இருக்கும் கூடாரம்தான் அவர் வேலை செய்யும் களம். ஏறி இறங்க ஒரு ஏணி உண்டு. வேலை நேரத்தில்மட்டுமே மாமா கூடாரத்துக்குச் செல்வார். மற்ற நேரங்களில் மரத்தடிதான் அவர் இடம். ஆள் நல்ல உயரம். ஆனால் முருங்கைக்காய்போல மெலிந்த உடம்பு. ’பெரிய பாட்டுகாரன்’ என்று அந்தக் காலத்திலேயே பேர் எடுத்தவர். ஓயாமல் பாட்டு பாடியபடி ஏரிக்கரையிலும் ஸ்டேஷன் நிழலிலும் எல்லாரையும் ஆச்சரியப்படுத்தியபடி நடமாடிக்கொண்டிருந்தவரை, பட்டம் விடுவதற்கும் சடுகுடு விளையாடுவதற்கும் அந்த இடத்தை நாடிய சின்ன வயதுமுதல் பார்த்துப்பார்த்து ஒரு நெருக்கம் உருவாகியிருந்தது. ஒருநாள் அறுந்து விழுந்த பட்டத்தை எடுப்பதற்காக மரத்தடியை நெருங்கியபோது, கண்கள் மூடியநிலையில் ‘வாழ்க்கை என்னும் ஓடம்’ என அவர் பாடியதைக் கேட்டு மனமுருக அங்கேயே உட்கார்ந்துவிட்டான். அதுதான் தொடக்கம். நெஞ்சை அடைத்துக்கொண்டிருந்த ஒரு பெரிய பனிப்பாறை சட்டென உடைந்து உருகி நீராகி ஓட, எடையற்று மிதப்பதுபோல உணர்ந்தான். அந்தப் பாடல் முடிந்த கணமே அவர் ‘எங்கே செல்வேன் இறைவா’ என்று தொடர்ந்து பாடினார். அவனுக்கு கையும் காலும் இந்தத் தரையிலேயே ஊன்றவில்லை. ஏதேதோ உணர்வுகள். பறந்துபோவதுபோல. காற்றில் அலைவதுபோல. மேகத்தைத் தொடுவதுபோல. தன் கட்டுப்பாட்டை இழந்து தன் கண்கள் தானாகவே மூடிக்கொள்வதை அவன் உணர்ந்தான்.  தன் தோள்கள் மீண்டும் மீண்டும் தட்டப்படுவதை தாமதமாக உணர்ந்து கண்களைத் திறந்தபோதுதான் அவன் இந்த உலகத்துக்குத் திரும்பினான். அவர் எத்தனை பாடல்கள் பாடினார் என்பதுகூட அவனுக்கு நினைவில் இல்லை.

“என்ன தம்பி, அப்படியே ஆழ்ந்துட்டியா?” என்று கேட்டபடி அவன் தோளை செல்லமாக அழுத்தினார் அவர். ”அதல விதல நிதல சுதல தலாதல ரஸாதல பாதாளம்லாம் தெரிஞ்சதா?” என்று உதட்டில் சிரிப்போடு கேட்டார். அவன் கூச்சத்தில் சிரித்தான். “எனக்குக் கூட பாடத் தெரியும். பள்ளிக்கூடத்துல போட்டியில எல்லாம் பாடியிருக்கேன்” என்று மெதுவாகச் சொன்னான். ”அடி சக்கை, எனக்காக ஒரு ஜோடிய கடவுள் இன்னைக்குத்தான் கண்ணுல காட்டியிருக்கான்” என்று தன் தொடையில் வேகமாக அடித்துக்கொண்டு பல்லெல்லாம் தெரிய சிரித்தார். பிறகு கைகளைக் குவித்தபடி உயர்த்தி ”ஆஹா, வாழ்க வாழ்க, நமச்சிவாயன் வாழ்க, நாதன் தாள் வாழ்க” என்று வானத்தைப் பார்த்துச் சொன்னார். அப்புறம் “எங்க, ஒரு பாட்டு பாடு. கேக்கலாம்” என்று மறுநொடியே அவனைப் பார்த்துக் கேட்டார். அப்படி அவர் உடனே கேட்கக்கூடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. எதைப் பாடுவது என மிகவும் யோசித்தான். “சும்மா தைரியமா பாடு தம்பி, யாரு வந்து கேக்கப் போறா இங்க? நாம ரெண்டு பேரும்தான இருக்கோம்” என்று தூண்டிவிட்டார் அவர்.  அவன் ஒருகணம் மூச்சை இழுத்து சீராக்கிக்கொண்டு ‘சிந்தனை செய் மனமே’ என்று தொடங்கினான். பாட்டின் வரிகள் மறந்துவிடுமோ என அவன் மனம் அஞ்சியது. அது பிசிறில்லாமல் ஒழுங்காக வரிசையில் வரவேண்டும் என்பதற்காக அவன் கண்களை மூடிக்கொண்டான். கடைசிவரியை முடித்தபிறகுதான் கண்களைத் திறந்தான். அவர் முகத்தில் ஆனந்தம் அருவியாகப் பொங்கி வழிவதை அவனால் பார்க்கமுடிந்தது. அவர் அவசரமாக அவனை எழுப்பி நிறுத்தி தன் மார்போடு இறுக்கித் தழுவிக்கொண்டார். ”அருமை அருமைடா தம்பி” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ”உண்மையிலேயே என் ஜோடிடா நீ” “அபூர்வமான ஒரு சக்தி உன் குரல்ல ஒலிக்குது” “இந்த பட்டிக்காட்டுல ஒரு ஞானிடா நீ” என்று ஏதேதோ ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் சொன்னபடி அவன் கன்னத்தைத் தட்டினார். அப்புறம் “அது சரி, யார்கிட்டயாவது பாட்டு கத்துக்கறியா?” என்று மெதுவாகக் கேட்டார். “அதெல்லாம் எதுவுமில்லைங்க. சும்மா இருக்கற நேரத்துல ரேடியோவுல கேட்டுகேட்டு கத்துகிட்டதுதான்……..” என்றான் அவன். “பார்த்துகிட்டே இரு, இந்த ஞானம் உன்னை எங்கயோ உயரத்துக்கு கொண்டுபோவப் போவுது….” என்று சிரித்தார் அவர். மறுபடியும் செல்லமாக கன்னத்தில் ஒரு தட்டு. முதுகில் ஒரு தட்டு. அன்று முழுதும் அவனைப் பார்க்கும்போதெல்லாம் அவர் சிரித்துக்கொண்டே இருந்தார்.

ஆண்டுகள் ஒரு கனவுபோல ஓடி மறைந்துவிட்டன. பூபாளம் கச்சேரியில் அவன் மேடையேறிப் பாடுவதைக் கேட்க அவர் ஒருமுறை வந்திருந்தார். அவர் முகத்தில் பிரகாசம் தெரிந்தது. கச்சேரி முடிந்து மேடையிலிருந்து இறங்கி அவன் அவரைப் பார்க்கத்தான் ஓடோடி வந்தான். அவர் கண்களில் நீர் நிறைந்திருந்தது. கண்களைத் துடைத்தபடி “நல்லா வருவடா நீ, நல்லா வருவடா நீ. கடவுள் ஒனக்கு தொணயிருக்கணும்” என்று அவன் தோளைப் பற்றி அழுத்தினார். அப்போது அவன் மனம் விண்ணிலேறிப் பறந்தது. அவர் குனிந்து தரையிலிருந்து மண்ணைத் தொட்டு அவன் நெற்றியில் பூசிவிட்டார். ஒருகணம் அவன் உடல் பெருமையில் விம்மி வெடித்து அடங்கியது. அவனால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தாளம் வாசிக்கும் கூட்டத்தைப் பார்ப்பதுபோல பார்வையைத் திருப்பிக்கொண்டான். அவர் அவனுடைய தோளை அழுத்தித் தட்டிவிட்டுப் புறப்பட்டுவிட்டார்.

பாடச் சென்ற இடங்களில் கிடைத்த புதியபுதிய நட்புகளின் தூண்டுதலால் திரைப்படங்களில் பின்னணி பாடும் வாய்ப்புக்காக அவன் ஆசைப்படுவதையும் அலைவதையும் அறிந்து அவர் சொன்ன சொற்கள் தொடக்கத்தில் அவனைத் தடுமாறவைத்தன. தன் முயற்சியிலிருந்து உடனடியாகப் பின்வாங்கிவிடலாமா என அவன் முதலில் யோசித்தான். ஆனால் கண்ணெதிரில் விரிந்த வானத்தில் பிரகாசம் காந்தமென இழுப்பதை அவனால் தடுக்கமுடியவில்லை. “உன் வயசுல என்னயும் பல பேரு தூண்டியதுண்டு சண்முகம். ஆனா புகழ்ங்கற போதை நமக்கு வேணாம்ன்னு நான் ஒரே முடிவா ஒதுங்கி இருந்துட்டேன்” என்று மெதுவாகச் சொன்னார். பிறகு இரண்டு கணங்கள் மூச்சு வாங்கிவிட்டு “வாய்ப்புகளத் தேடி நாம ஓடக்கூடாது சண்முகம். அதுவா வந்தா சரி. வரலைன்னா ஒரு நஷ்டமும் இல்லை. நம்முடைய ஞானம் நமக்காக சண்முகம். வாய்ப்புக்காக இல்ல” என்றார். சில கணங்களுக்கு பேச்சே இல்லை. அப்புறம் அவர் ”என்னால பாடாம இருக்கமுடியாது. மூச்சுவிடறதுபோல, மூணுவேள சாப்படறதுபோல, நான் பாடிகிட்டே இருக்கணும்ங்கறதுதான் என் ஆசை. சாவுகூட பாடிகிட்டிருக்கும்போதே வந்துட்டா நல்லதுங்கறதுதான் என் கனவு” என்றார்.  தொடர்ந்து அவர் உதடுகளில் ஒரு புன்னகை படர்ந்து மறைந்தது. ”என்னை பைத்தியம்னு சொல்லி என் ஊட்டுக்காரி என்ன ஊட்டுலயே சேர்க்கலை. எங்கயாவது ஓடிப் போயிடுன்னு சொல்லிட்டா. அவ ஒரு மடச்சி. ஆத்திரத்துல அவ சொல்லிட்டாங்கறதுக்காக பொண்டாட்டி புள்ளைங்கள ஒதுக்கிவைக்க முடியுமா? இன்னைக்கும் மாசாமாசம் சம்பளம் வாங்கனதும் மொதல் நாளு அவள போயி பாத்து பேசிட்டு வேண்டிய பணத்த குடுத்துட்டு வந்துட்டுதான் இருக்கேன். இன்னைக்கி நீ தேடற புகழ, அன்னைக்கி நான் தேடி போகலைங்கறதாலதான் அப்படி அவ சொன்னாளோ என்னமோ. என்னால சரியா சொல்லமுடியலை சண்முகம். என் ஆலோசனை உனக்கு எந்த அளவுக்கு பயன்படும்ன்னு  தெரியலை. உனக்கு என்ன தோணுதோ அப்பிடி செய்…..” என்று மெதுவாகச் சொல்லிமுடித்தார்.

மாமாவை நெருங்கநெருங்க அவர் பாடிக்கொண்டிருப்பது கேட்டது. ’பொய்நெல்லைக் குத்தியே பொங்க நினைத்தவன் கைநெல்லை விட்டானம்மா’ என்ற வரிகளைக் கேட்டு அவன் முதலில் திகைத்து நின்றுவிட்டான். அதிர்ச்சியில் இறுக்கத்திலிருந்து விடுபடவிடுபட அவன் உதடுகளில் புன்னகை தோன்றியது. அந்தச் சரணத்தின் வரிகளைக் கொண்டு பாட்டின் முதல் வரியை நினைவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது அவன் மனம். ஏதோ ஒரு அடுக்கில் ஒளிந்திருக்கும் அந்த வரி மேலே எழ மறுத்தது.  அசைபோட அசைபோட, அந்த வரியின் தாளக்கட்டு மட்டும் முதலில் மெதுவாக பிடிபட்டுவிட்டது.  அதைச் சொல்லிச்சொல்லி அந்த வரியை எடுப்பதற்குள் மாமாவே ’தப்பித்து வந்தானம்மா’ என அந்த வரியைப் பாடிவிட்டார். ‘அவனால் சிரிப்பைத் தாங்கவே முடியவில்லை. சிரிப்புச் சத்தத்தைக் கேட்டு கண் திறந்த மாமா பாட்டை நிறுத்தினார். சட்டென சண்முகவேலன் உற்சாகம் கொண்டு, அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்கி ‘அவன் போட்ட கணக்கொன்று இவள்போட்ட கணக்கொன்று’ என கணீரென பாட ஆரம்பித்தான். பிறகு மாமாவும் அவனோடு சேர்ந்து இருவருமாக  அந்தப் பாட்டைப் பாடி முடித்தார்கள்.

“என்ன மாமா, எனக்காகவே பாடன பாட்டுபோல இருக்குது….” என்றபடி அவர் அருகில்  உட்கார்ந்தான். அவர் “அப்படிலாம் ஒன்னுமில்ல. நீ வந்ததே எனக்குத் தெரியாது” என்று தலையசைத்தார். பிறகு “அது சரி, போன காரியம் என்னாச்சி?” என்று மெதுவாகக் கேட்டார்.

“எல்லாம் வழக்கம்போலதான் மாமா. ஒன்னுமே நடக்கலை. இனிமேலயும் நடக்குமான்னு தெரியலை. பத்து வருஷமா நானும் எவனெவன் பேச்சயோ கேட்டு ஓடிட்டே இருக்கேன். ஒன்னும் விடிய மாட்டேங்குது. அவ்ளோதான் மாமா. எல்லாத்தயும் இனிமேல ஏறக்கட்டி நிறுத்திடப் போறேன்……” பெருமூச்சோடு பக்கத்தில் இருந்த குச்சியை எடுத்து தரையில் கோடு கிழித்தான். பிறகு சிறிது நேரம் குனிந்த தலையை நிமிர்த்தாமல் அருகில் ஊர்ந்து செல்லும் ஒரு எறும்பையே பார்த்தபடி இருந்தான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, “எதுக்கு மாமா பாட்ட நிறுத்திட்டிங்க? எனக்காக நல்ல பாட்டா ஒன்னு பாடுங்க…..” என்று அவரைப் பார்த்து சிரித்தான். மாமா நரைத்திருந்த தன் மீசையை சிறிது நேரம் வருடியபடி இருந்தார். பிறகு செருமி குரலை மாற்றிக்கொண்டு, கனிவும் குழைவுமாக ‘காதல் கனிரசமே’ என்று தொடங்கினார். ஒவ்வொரு வரியும் ஏற்றமும் இறக்கமும் குழைவும் நெளிவும் அவன் துவண்ட இதயத்தைத் துடிப்புள்ளதாக்கின. அந்தப் பாடல் முடிந்ததுமே மாமா ‘ஆனந்தரூபினியே ஆர்யமாலா’ என்று மற்றொரு பாடலை துள்ளலோடு தொடங்கினார். மாமாவின் குரல்மாயம் ஒவ்வொரு வரியையும் ஒரு காட்சியாகவே விரித்தது. அடுத்த பாட்டாக ‘எல்லாரும் நல்லவரே’ என்று தொடங்கினார். பாரமெல்லாம் இறங்கிவிட ஓர் இறகுபோல தன் மனம் மாறியிருப்பதை அவன் அக்கணம் உணர்ந்தான்.

“என்ன மாமா, எல்லாமே சின்னப்பா பாட்டா இருக்குது?” என்று சிரித்தான் சண்முகவேலன்.

“சரி, மாத்திடுவமா?” என்று மாமாவும் சிரித்தார். சில கணங்கள் தொலைவில் அசைந்தாடும் வேப்பமரங்களையே பார்த்தார். பாட்டின் வரிகளை அங்கிருந்து எடுக்கப்போவதுபோல இருந்தது அப்பார்வை. குரலை மெதுவாகச் செருமிக்கொண்டு ‘காலத்தில் அழியாத காவியம் தரவந்த மாபெரும் கவிமன்னனே’ என்று தொடங்கினார். அந்த ஏகாரத்தில் அரைக்கணம் அவர் குரல் நின்று மிதந்தபோது தெய்வமே தரிசனம் தந்து பாடுவதுபோல உடல் புல்லரித்தது. தெய்வத்தின்முன்பு கைகூப்பிய பக்தனைப்போல அவன் அமர்ந்திருந்தான். அனிச்சையாக கண்கள் தளும்புவதை அவன் உணர்ந்தான். சீரான ஒரு நதியின் ஓட்டத்தைப்போல அவர் ஒவ்வொரு சரணமாகப் பாடி கடந்து போய்க்கொண்டே இருந்தார். இறுதியாக ’யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு, அதுவரை பொறுப்பாயடா மகனே என் அருகினில் இருப்பாயடா’ என அவனைப் பார்த்துச் சிரித்தபடி அவர் பாடிமுடித்தபோது, அவர் தனக்காகவே அந்தப் பாட்டைத் தேர்ந்தெடுத்துப் பாடியதாக நினைத்தான். நெகிழ்ச்சியால் அவரை நேருக்குநேர் பார்க்கமுடியாமல் தலையைத் திருப்பி புல்தரையில் உட்கார்ந்திருந்த ஒரு துடுப்புவால் குருவியின்மீது பார்வையைப் பதித்தான். “சண்முகம், இப்ப நீ பாடு” என்று அவர் சொன்ன பிறகுதான் மறுபடியும் அவரைப் பார்த்தான். ”ம். பாடு” என்று அவர் மீண்டும் சொன்னார்.

அவன் மெதுவாக ‘ஞாயிறு என்பது கண்ணாக’ என்று தொடங்கினான். பாடப்பாட அந்த வரிகளில் இருந்த காதலும் வேகமும் தன் நெஞ்சில் ஊறிப் பொங்குவதை அவன் உணர்ந்தான். ஒருநாள் கூட தன் மனைவி தன்னை இப்படி பாடச் சொல்லி கேட்கவில்லையே என்ற எண்ணம் ஒருகணம் எழுந்து மறைந்தது. அதனாலென்ன, அவள் அருகில் இருப்பதாகவே எண்ணிப் பாடுவோம் என அமைதியுற்று ஒவ்வொரு வரியாக அவன் பாடிக்கொண்டே போனான். முடிக்கும்போது உற்சாகம் ஒரு காட்டருவியாக தன் நெஞ்சில் பொங்கி வழிவதாக அவன் உணர்ந்தான்.  மாமா அவனைப் பார்த்தபடி மீசையை வருடிக்கொண்டே இருந்தார். அவன் தானாகவே ’மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்று வேகமாகத் தொடங்கினான். மாமா தலையாட்டிக்கொண்டே தன் தொடையில் அடித்து தாளம் போட ஆரம்பித்தார். அவனுக்கு மீண்டும் இந்திராணியின் நினைவு பொங்கியெழ ‘அன்புள்ள மான்விழியே’ தொடங்கி பாடிமுடித்தான். மழையீரத்தால் குளிர்ந்த தரையென தன் மனம் குளிர்ந்திருப்பதை அவனால் உணரமுடிந்தது. மறுபடியும் புன்னகை ததும்ப அவன் ‘போயும்போயும் மனிதனுக்கு இந்த புத்தியை கொடுத்தானே’ என்று பாடத் தொடங்கினான்.

ஏணிக்கூண்டிலிருந்த தொலைபேசியின் மணியோசை அந்தக் கச்சேரியைப் பாதியில் நிறுத்தியது. சட்டென சுறுசுறுப்படைந்த மாமா  தாவியோடி கூண்டில் ஏறினார் தொலைபேசியை எடுத்துப் பேசினார். பிறகு கீழே நின்றிருந்தவனிடம் “சண்முகம் , ஒரு பத்து நிமிஷம். என்னமோ ஒரு கூட்ஸ் வருதாம். அனுப்பிட்டு வரேன்” என்று சிக்னல்களை மாற்றிவிட்டு இருபுறங்களிலும் கம்பங்களில் விளக்கெரிவதைப் பார்த்தார். கூட்ஸ்க்குரிய தடத்தில் இணைப்பை மாற்றி பாய்ண்ட் அடித்துவிட்டு காத்திருந்தார். எங்கோ தொலைவில் எஞ்சின் சத்தம் கேட்டது. அது மெல்லமெல்ல நெருங்கிவந்து நிற்காமல் தடதடவென்று பெருத்த ஓசையுடன் கடந்துபோனது. தொலைபேசியில் அவர் யாரையோ அழைத்து தகவல் சொல்லிவிட்டு சிக்னல் விளக்குகளை மாற்றிவிட்டு கீழே இறங்கினார்.

அவர் இறங்கிவர காத்திருந்ததுபோல, அவன் அவரிடம் “மாமா, திருணாமலைக்கி போய்வரலாமா?” என்று கேட்டார்.

மாமாவுக்கு ஒரு நிமிஷம் ஒன்றும் புரியவில்லை. “இப்ப என்ன விசேஷம் அந்த ஊருல?” என்று கேட்டார்.

“விசேஷம்லாம் எதுவுமில்ல. சும்மா போய்வரலாம்ன்னு….”

அவனை அவர் ஒருகணம் விசித்திரமாகப் பார்த்தார்.

”என்ன திடீர்னு?”

“சும்மா ஒரு ஆசை. அவ்ளோதான்”

“வீட்டுல ஏதாச்சிம் பிரச்சினையா?” மெதுவான குரலில் கேட்டார் மாமா. ”எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கோ. எதுலயும் அவசரப்படாதே”

”அடடே, அப்பிடிலாம் ஒன்னுமில்லை மாமா” அவன் கைகளை விரித்துச் சொன்னான்.

”இப்படி திடுதிப்புனு கெளம்பனா, வீட்டுல ஒன்னும் நெனச்சிக்கமாட்டாங்களா?” என்று அவன் கண்களைப் பார்த்துவிட்டுக் கேட்டார் மாமா. அவன் ஒரு பதிலும் சொல்லாமல் தலையை குனிந்துகொண்டான்.

சில நொடிகளுக்குப் பிறகு, அவன் தோளைத் தொட்டு, “சரிசரி, போவலாம். ஆபீஸ்ல நான் லீவு சொல்லிட்டு வரேன். நீயும் போயி வீட்டுல சொல்லிட்டு ஏதாச்சிம் வயித்துக்கும் போட்டுகிட்டு பஸ்ஸ்டான்டுக்கு வா. அங்க பாத்துக்கலாம்” என்றார்.

அரைமணி நேரத்துக்குப் பிறகு அவர்கள் பஸ் பிடித்து விழுப்புரம் சென்றார்கள். திருவண்ணாமலை ரயில் கிளம்பிப் போய்விட்டிருந்தது. அதனால் திருவண்ணாமலைக்குச் செல்லும் பஸ்ஸைத் தேடிப் பிடித்து உட்கார்ந்தார்கள். பஸ் ஸ்டான்டின் எல்லாப் பக்கங்களிலும் டி.எம்.எஸ்.ஸின் படம் உள்ள சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை அப்போதுதான் கவனித்தான் அவன். தன் மனம் ஒருகணம் சுருங்கி விரிவதை அவனால் உணரமுடிந்தது. ”அங்க பாருங்க மாமா” என்று அருகிலிருந்த மாமாவிடம் காட்டினான். “ஏதோ பாராட்டுவிழா நடத்தறாங்க போல. அதுக்கு வராரு. எவ்ளோ பெரிய படம். எவ்ளோ பெரிய போஸ்டர்” என்றான். பதில் எதுவும் சொல்லாமல் சுவரொட்டியைப் படித்தார் மாமா.

“வர பத்தாம் தேதிதான் விழா மாமா. நாமளும் வரலாமா?” ஆவலுடன் கேட்டான் அவன். அவர் தலையசைத்தார். பஸ் கிளம்பியதும் ஒலிநாடா ஒலிக்கத் தொடங்கியது. “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என ஒலித்த குரல் கேட்டு சண்முகத்தின் முகம் மலர்ந்தது.  அடுத்தடுத்து பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. கொஞ்சம்கொஞ்சமாக உருமாறி அவன் வேறொரு உலகத்துக்குள் நுழைந்ததுபோல இருந்தது. மேகம்போல அவன் மனம் நகர்ந்தது. மேகங்களையே இறகுகளாக்கிக்கொண்டு பறந்தது.

திருவண்ணாமலையில் இறங்கியதும் “மலைய சுத்தலாமா மாமா?” என்று கேட்டான் அவன். “பெளர்ணமியா இருந்தாலும் பரவாயில்லை. எதுவுமே இல்லாத நாள்ல…..” என்று இழுத்தார் மாமா. “இருக்கற நெலா போதும் மாமா. எதயாச்சிம் பேசிகிட்டும் பாடிகிட்டும் நடந்துரலாம்” என்றான் அவன். அவரால் அதைத் தட்டமுடியவில்லை. இருவரும் மலையைச் சுற்றி நடக்க ஆரம்பித்தார்கள்.

“டி.எம்.எஸ்.க்கு எவ்ளோ போஸ்டர்ங்க பாத்திங்களா மாமா? அவருக்குதான் எவ்ளோ புகழ்? எவ்ளோ பேர்? உலகத்துல எத்தனயோ கோடி பேரு அவருக்கு ரசிகர்களா இருப்பாங்க, இல்லையா மாமா?” அவன் கண்களில் பரவசம் சுடர்விட்டது. மாமா எதுவும் பேசவில்லை.

”இன்னும் நூறு வருஷம், ஆயிரம் வருஷம்கூட அவர் பேர் சரித்திரத்துல இடம் புடிச்சிருக்கும். யாராலயும் அழிக்கமுடியாத இடம். எவ்ளோ பெரிய புகழ் அது? எவ்ளோ பெரிய பாக்கியம் அது?” பித்து பிடித்ததுபோலப் பேசினான்.

“இப்ப அதுக்கு என்ன?”

“புகழே வேணாம்ன்னு நெனைக்கிறவரு நீங்க? உங்களுக்கு எப்படி சொல்றதுன்னு புரியலை எனக்கு”

“இதுல புரிஞ்சிக்க என்ன இருக்கு சண்முகம்? விதி ஒரு சக்கரமாவும், நம்ம விருப்பம் இன்னொரு சக்கரமாவும் ஓடக்கூடிய வண்டிதான் நம்ம வாழ்க்கை. உன் விருப்பம் புகழா இருந்தாலும் விதிக்கு அதுல விருப்பம் இல்லைன்னா ஒன்னும் செய்யமுடியாதுன்னு நம்பறவன் நான். ரெண்டு சக்கரமும் ஒன்னா நவுந்தாதான் வண்டி ஓடும்……”

“புகழ் முக்கியமில்லாத விஷயம்ன்னா, எதுக்கு தோன்றிற் புகழொடு தோன்றுகன்னு வள்ளுவர் சொல்லணும்?”

“புகழ் வேற, பாராட்டு வேற சண்முகம். ஈதல் இசைபட வாழ்தல்னு புகழ்ன்னா என்னன்னு ஆரம்பத்திலேயே ஒரு அடிப்படைய போட்டிருக்காரு வள்ளுவர். அதுக்கப்பறம்தான் அதுபோல தோன்றுகன்னு சொல்றார். எதையும் தேடி ஓடுகன்னு எங்கயும் சொல்லலை”

அடிபட்டதுபோல அவன் ஒருகணம் திகைத்து நின்று அவரை நோக்கினான். பிறகு மெதுவாக, “அந்தக் காலத்திலேருந்து இந்தக் காலம் வரைக்கும் வள்ளல்களெல்லாம் வாரிவாரி குடுக்கறதுலாம் எதுக்காக, இந்தப்  பாராட்டுக்கும் புகழுக்காகவும்தானே?.......”என்றான்.

“இல்லை சண்முகம், அது அவுங்க சுபாவம்…..” மாமா மெதுவான குரலில் சொன்னார்.

”வள்ளுவர், கம்பர், கபிலர், இளங்கோன்னு எத்தனை எத்தனை கவிஞர்கள் எழுத்தால புகழ் அடைஞ்சிருக்காங்க? பதினஞ்சி இருபது நூற்றாண்டுகள் தாண்டியும் அவுங்க பேர் நிலைச்சிருக்கறதுக்கு அவுங்க புகழ்தானே காரணம்?” ஆற்றாமையோடு அவன் மீண்டும் கேட்டான்.

எதைச் சொன்னாலும் அவன் மனத்தில் அக்கணம் எதுவும் பதியப்போவதில்லை என நினைத்து அமைதியாக நடந்தார் மாமா. சிறிது நேரத்தில் அவன் மறுபடியும் ஒரு விவாதத்தைத் தொடங்கினான். பேச்சு. பேச்சு.  பேச்சு. இறுதியில் “புகழ் இல்லாத வாழ்க்கையில ஒரு அர்த்தமும் இல்லை மாமா” என்று சலிப்போடு சொல்லி முடித்தான். மாமா சில கணங்கள் அவனையே பார்த்திருந்துவிட்டு, “புகழ் இல்லாத வாழ்க்கைன்னு சொல்லாத சண்முகம். மனநிறைவு இல்லாத வாழ்க்கைன்னு சொல்லு. ஆனந்தம் இல்லாத வாழ்க்கைன்னு சொல்லு. அதுதான் சரி…….” என்றார்.

அவன் ஒருகணம் நின்று அவரைப் பார்த்தான். நிற்கமுடியாதவனாக ஒரு பாறைமீது உட்கார்ந்து மூச்சு வாங்கினான். இருட்டத் தொடங்கியதுமே குளிரத் தொடங்கியது. மலைப்பாதையின் இரு புறங்களிலும் உயர்ந்த மரங்கள். காற்று மரங்களை உரசிக்கொண்டு வீசியபோது, அது ஒரு பெரிய வாத்தியத்தை மீட்டியதுபோல இருந்தது. மலையின் தோற்றம் கரிய போர்வையால் போர்த்தப்பட்ட ஒரு வண்டிபோல காணப்பட்டது. எங்கோ தொலைவில் ஆந்தையின் அலறல் கேட்டது.

“புகழ்னா என்ன சண்முகம். போற எடமெல்லாம் நாலு கைதட்டல்.  என்னமா பாடறான் பாருன்னு சொல்ற நாலு வார்த்தைகள். நாலு ஜேஜே. நாலு வாழ்ககோஷம். அதுக்கு மேல என்ன…..?” மாமா மெதுவாக பேச்சைத் தொடங்கினார்.

“அது போதும் மாமா. அது ஒரு ஆரம்பம். சரித்திரத்துல பேரு விழுந்திரும். காலகாலத்துக்கும் அந்தப் பேர் நிக்கும். இத்தன வருஷங்கள் நம்பிக்கையோட சென்னை சென்னைன்னு ஓடனதுலாம் அந்தப் பேருக்குத்தான் மாமா……”

அவன் மிகுந்த கழிவிரக்கத்தோடு பேசத் தொடங்கி, நிறுத்தாமல் பேசிக் கொண்டே சென்றான்.

”தியாகராஜ பாகவதர், சின்னப்பா, கிட்டப்பா, சிதம்பரம் ஜெயராமன், டி.ஆர்.மகாலிங்கம்னு சரித்திரத்துல ஒரு பெரிய பட்டியலே இருக்குது மாமா. அதுல நம்ம பேரும் ஒன்னா இருந்தா, அது எவ்ளோ பெரிய சந்தோஷம்? எவ்ளோ பெரிய மரியாதை”

ஒருகணம் பேச்சை நிறுத்தி இருண்ட வானத்தை அண்ணாந்து பார்த்து பெருமூச்சு விட்டான். பிறகு நாக்கைத் தட்டி சப்புக்கொட்டினான். வலது கை விரல்களை மடக்கி இடதுகையில் குத்தி அழுத்திக்கொண்டான். தொடர்ந்து தன் ஏக்கத்தையெல்லாம் வார்த்தைகளாக மாற்றி கொட்டத் தொடங்கினான். அவனுடைய நாட்டங்கள். அவன் சென்று அலைந்த இடங்கள். ஒவ்வொரு இடத்திலும் அவன் எதிர்கொண்ட அவமதிப்புகள். கேலிப்பேச்சுகள். கிண்டல்கள். சமாதானங்கள். பல ஆண்டுகளாக அவன் மனத்தை அழுத்திக்கொண்டிருந்த சுமைகள் ஒவ்வொன்றாக சரிந்துவிழுந்தபடி இருந்தன. ஒரு பதிலும் சொல்லாமல் அவன் சொல்வதைமட்டும் மாமா கேட்டுக்கொண்டே இருந்தார்.

மலைவலத்தை முடித்துக்கொண்டு பாதையிலிருந்து விலகி கோவில் பக்கமாக வரும்போது நேரம் நள்ளிரவைக் கடந்துவிட்டது.  தெருக்குழாயில் கைகால்களைக் கழுவிக்கொண்டு இருவரும் கோவில் வாசலில் கைகூப்பி வணங்கியபடி விழுந்து எழுந்தார்கள். சாலையின் இருபுறங்களிலும் துணியால் மூடப்பட்ட தள்ளுவண்டிகள் நின்றிருந்தன. வண்டிக்குக் கீழே படுத்திருந்த ஒரு நாய் தலையைத் தூக்கி அவர்களைப் பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டது.

ரயில்வே ஸ்டேஷன் செல்லும் திசையில் சாலையோரம் திறந்திருந்த கடையில் வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டார்கள். கடைக்காரரிடமே தண்ணீர் கேட்டு வாங்கிக் குடிக்கும்போது, அழுதுகொண்டே இருக்கும் ஒரு குழந்தையை தோளோடு சாய்த்துக்கொண்டு “ஐயா ஐயா” என்று ஒருத்தி கைநீட்டினாள். சண்முகவேலன் அவள் பக்கம் திரும்பியபோது  ”காலையிலேருந்து பட்டினிய்யா. எதாச்சிம் வாங்கிக் குடுங்கய்யா” என்று கேட்டாள். அவள் தோளில் தங்காமல் நழுவி விழுந்துவிடுவதுபோல பிளாஸ்டிக் தண்டென உடலை வளைத்து அழுதுகொண்டே இருந்தது குழந்தை. கொஞ்சம்கூட யோசிக்காமல் சண்முகவேலன் ஒரு சீப்பு வாழைப்பழமும் ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் வாங்கி அந்தப் பெண்ணிடம் நீட்டினான். ”நீங்க நல்லா இருக்கணும்யா” எனச் சொல்லிக்கொண்டே அவற்றை வாங்கிக்கொண்டாள் அவள். ஸ்டேஷன் ஓரமாக வெளிச்சமுள்ள இடத்தில் உட்கார்ந்து குழந்தைக்கு பிஸ்கட்டை உடைத்துத் தூளாக்கி ஊட்டினாள்.

ஸ்டேஷன் ஓரமாக சுவரில் சாய்ந்தபடி இரண்டு பேரும் உட்கார்ந்தார்கள். ஏராளமான ஆண்களும் பெண்களும் அங்கே படுத்திருப்பதைப் பார்க்கமுடிந்தது. உடல்முழுக்க மூடிக்கொண்டு அவர்கள் கிடந்த கோலம் மூட்டைகள் சிதறிக்கிடப்பதுபோல இருந்தது. குடம்சரிந்து பரவியோடிய பாலென இருண்ட வானில் அங்கங்கே வெண்மேகங்கள் மிதந்தன. கைநீட்டித் தாவத் துடிக்கும் குழந்தைகளென மரக்கிளைகள் வானத்தைநோக்கி நீண்டுநீண்டு அசைந்தன.

அந்தக் குழந்தை அழும் சத்தம் மீண்டும் கேட்டது. மீண்டும் அதற்கு பசியெடுத்துவிட்டதோ என நினைத்தபடி, அதன் பக்கம் பார்த்தான். ம்ஹ்ம் ம்ஹ்ம் என்று கையை உதறியபடி அது அழும் வேகம் கூடிக்கொண்டே  இருந்தது. “என்னடா என்னடா” என அதன் தாய் அதை பல விதங்களில் அமைதிப்படுத்த முயற்சிசெய்தபடி இருந்தாள். அவன் பார்ப்பதை அறிந்துவிட்டதுபோல அவள் திரும்பி “தூங்கமாட்டுதுய்யா” என்று துக்கம் தொண்டையை அடைக்க சொன்னாள். “ஒன்னொன்னுக்கும் இப்பிடி அழுதுகிட்டே இருந்தா ஒண்டிக்கட்டயா நான் என்ன செய்வன்? இப்பிடி தனியா பொலம்ப உட்டுட்டு போயிட்டானே பாவி” என்று அவள் முனகும் சத்தத்தைக் கேட்டு அவன் மனம் இளகியது.

சண்முகவேலன் சட்டென எழுந்து நடந்துபோய் ”இப்பிடி குடும்மா” என்று குழந்தையை வாங்கி கைகளுக்குள் மடித்து ஏந்தி  ஆராரோ ஆரிரரோ என்று இழுத்தான். தன் சின்ன விழிகளைத் திறந்து அவன் முகத்தையே பார்த்தது அது. ”என்ன பாக்கற? தூங்கும்மா” என்று சொல்லிவிட்டு மறுபடியும் ஆராரோ ஆரிரரோ என இழுத்தான். அவனையறியாமல் அவன் உதடுகள் ’செல்லக்கிளியே மெல்லப் பேசு….’ என்று பாடத் தொடங்கியது. ஆச்சரியத்தோடு மாமா அவனையே பார்த்தபடி இருந்தார். அவன் முகத்தில் அவர் கண்ட பிரகாசம் மிகவும் புதுசாக இருந்தது. அந்தக் குழந்தையின் தாய் தலையைக் குனிந்து அழுவதை, குலுங்கும் அவள் தோள்கள் உணர்த்தின. படுத்திருந்தவர்கள் பலரும் அந்தப் பாட்டின் சத்தம் கேட்டு ஒவ்வொருவராக எழுந்து உட்கார்ந்தார்கள். குழந்தை அவனைப் பார்த்து விரலை நீட்டி ங்க்ரீ ங்க்ரீ என்று ராகமெழுப்பிச் சிரித்தது. அந்தப் பாட்டை முடித்து அவன் மெதுவாக ‘வெள்ளிமணி முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய….’ என்று வரிகளைத் தொடங்கினான்.  அந்த வளாகமே அமைதியாக அந்தப் பாட்டின் இனிமையில் மூழ்கியிருந்தது.

குழந்தை உறங்கியதும் அதன் தாயிடம் கொடுத்துவிட்டு திரும்பினான். அவன் நடந்த திசையைப் பார்த்து அவள் கைகுவித்து வணங்கியதை அவன் கவனிக்கவில்லை. மாமா மட்டும் கவனித்தார். நெகிழ்ச்சியில் அவருக்கும் தொண்டை அடைத்தது. எழுந்து அவனோடு ஸ்டேஷனுக்குள் சென்றார். “சார், சினிமாக்காரங்களா நீங்க? அருமயா பாடறிங்க” ”டி.எம்.எஸ்.ஸே ஸ்டேஷன் வாசல்ல வந்து நின்னுட்டமாதிரி இருக்குது சார். அவரப்போலவே குரல் சார் உங்களுக்கு” என்று மாறிமாறிச் சொல்லப்பட்ட சொற்கள் ஒலித்தபடியே இருந்தன.

அதிகாலை நான்குமணிக்கு புறப்படக்கூடிய விழுப்புரம் ரயில் முதல் நடைமேடையில் நின்றிருந்தது. சீட்டு வாங்கிக்கொண்டு இருவரும் அதில் ஏறிப் படுத்தார்கள். சில கணங்களுக்குப் பிறகு தொண்டையைச் செருமியபடி ”சண்முகம்” என்று அழைத்தார். ”என்ன மாமா?” என்று திரும்பிப் பார்த்தான் அவன். “உன் குரல்ல அந்த தெய்வமே நின்னு பாடினமாதிரியே இருந்தது சண்முகம். எவ்ளோ இனிமை. எவ்ளோ குழைவு. எனக்கு உடம்பே சிலிர்த்துப்போயிடுச்சி” என்றார். அவன் சில கணங்கள் பேசாமல் மெளனமாக இருந்தான். பிறகு அடங்கிய குரலில், “அந்த கொழந்தய தொட்டு தூக்கனதும் என் மகன் ஞாபகம் வந்திட்டுது மாமா.  மாமா, ஒரு உண்மைய சொல்லட்டுமா. என் மூணு புள்ளைங்கள்ள ஒரு புள்ளையயும் தொட்டு தாலாட்டு பாடி தூங்க வச்சதில்லை. என் பாட்டு பைத்தியம் அதுங்களுக்கும் ஒட்டிக்கும்ன்னு இந்திராணி, அம்மா, அப்பா யாருமே பாட உடமாட்டாங்க” என்று நிறுத்தினான். பிறகு ஒரு பெருமூச்சோடு “இன்னைக்கு ரொம்ப நிம்மதியா இருக்குது. இந்த நிம்மதிக்காகத்தான் திருணாமலைக்கு வந்தனோ என்னமோ. யாருக்கு பாடன பாட்டா இருந்தா என்ன மாமா? எல்லா புள்ளைங்களும் கடவுளுடைய புள்ளைங்கதான” என்று சொல்லி முடித்தான். அந்தப் பக்கம் மாமாவும் பெருமூச்சுவிடும் சத்தம் கேட்டது. இருவரும் வெகுநேரம் பேசிக்கொள்ளவே இல்லை. ஜன்னலுக்கு வெளியே தெரிந்த வெண்மேகத்துண்டைப் பார்த்தபடியே எப்போது தூங்கினோம் என்பது தெரியாமலேயே தூங்கிப் போனார்கள்.

’அரஹரா என்றொரு குழிநட்டால் ஐங்கலம் விளையுமே’ என்றொரு பாட்டின் வரி மிதந்துவருவதைக் கேட்டு சட்டென கண்விழித்த மாமா அக்கம்பக்கம்  பார்த்தார். ரயில் ஓடிக்கொண்டிருந்தது. பெட்டியில் பலரும் உட்கார்ந்தும் படுத்தும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். அந்தப் பாட்டின் ஒலியை அவரால் இன்னமும் கேட்கமுடிந்தது. ஆனந்தத்தை முறையிடும் அந்தக் குரலின் இனிமையில் அவர் நெஞ்சம் நிரம்பி வழிந்தது. அவர் மெதுவாக அருகில் உறங்கும் சண்முகவேலனை எழுப்பினார். அவன் கண்விழித்ததுமே “யாரோ பாடற மாதிரி இருக்குது. உனக்குக் கேக்குதா சண்முகம்?” என்று கேட்டார். ஒரே கணத்தில் தூக்கக்கலக்கம் விலகிவிட அவன் காதுகள் கூர்மை பெற்றன. ’சிவசிவா என்றொரு தரம் சொன்னால் ஜென்மசாபல்யமாச்சு’ என்ற வரி அலைபோல மிதந்து வந்தது. “ம்.கேக்குது மாமா” என்றபடி வேகமாக எழுந்து நின்றான்.

இருக்கையிலிருந்து இறங்கி, பாட்டு மிதந்து வந்த திசையில் அவர்கள் மெதுவாக நடந்தார்கள். வழியெங்கும் பலர் கோணல்மாணலாகப் படுத்திருந்தார்கள். கிடைத்த சிறுசிறு இடைவெளியில் பாதத்தை வைத்து தாண்டித்தாண்டி சென்றார்கள். பெட்டியின் இறுதியில் கதவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒருவன் வெட்டவெளியைப் பார்த்துப் பாடுவதை அவர்கள் பார்த்தார்கள். அவனுக்குப் பக்கத்தில் ஒரு அலுமினியத் தட்டும் ஒரு தடியும் இருந்தன. முடியெல்லாம் நரைத்து தாடி தொங்கியது. சத்தம் காட்டாமல் அவர்கள் அப்படியே நின்றார்கள். அவன் ‘தில்லையம்பல தரிசனம் கண்டால் தேவரும் வருந்தாரோ’ என அடுத்த வரியைத் தொட்டான். ஒவ்வொரு வரியையும் அவர் பல விதங்களில் இணைத்தும் பிரித்தும் குரலை ஏற்றியும் இறக்கியும் அவர் பாடியதைக் கேட்டு இருவரும் மனமுருக நின்றார்கள்.  

ஏதோ ஒரு கணத்தில் நிழலாடியதை உணர்ந்து திரும்பிய பெரியவர் இருவரையும் பார்த்து சட்டென பாட்டை நிறுத்தி தலையைக் குனிந்துகொண்டார். “பாடுங்க ஐயா, நிறுத்தாதிங்க. நந்தனாரே கண்முன்னால நின்னு பாடறதுபோல இருக்குது” என்றார் மாமா.

“ஐய, இதுலாம் ஒரு பாட்டுங்களா சாமி. நான் ஒரு பிச்சைக்காரன். காத்து சொகமா இருக்குதேன்னு இங்க வந்து கால நீட்டி உக்காந்தேன். ஆஹான்னு அத அனுபவிச்சிகிட்டே அண்ணாந்து பார்த்தா திட்டுதிட்டா மேகங்கள். ஒவ்வொரு மேகமும் சிவலிங்கத்தப்போல தெரிஞ்சிது. சட்டுனு ஒரு சந்தோஷத்துல தெரிஞ்ச அளவுக்கு ஒரு நாலு வரிய எடுத்து உட்டேன். அத போயி பெரிசா பேசறிங்களே” என்றார்.  பிறகு, “உங்க தூக்கத்த கெடுத்திட்டன்போல….”  என்று வருத்தம் தெரிவித்தார்.

அப்படியெல்லாம் இல்லை என்பதுபோல இரண்டு பேரும் தலையசைத்தார்கள். மாமா மெதுவாக அவரிடம் ”மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது. எங்களுக்காக இன்னொரு பாட்டு பாடறிங்களா…..” என்று கேட்டார். “அப்படியா, பாடவா?” என்று ஆச்சரியமாக கேட்டபடியே, முகம்திருப்பி ஒருகணம் வானத்தைப் பார்த்த பெரியவர் ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ’ என்று தொடங்கினார்.  சண்முகவேலனும் மாமாவும் அந்த இசைவெள்ளத்தில் மெய்மறந்து அமிழ்ந்திருந்தார்கள்.

பாடிமுடிப்பது வரைக்கும் காத்திருந்து அவரைப் பார்த்து மாமா “அருமையான பாட்டுங்க ஐயா. இதே பாட்ட மேடையில  பாடினிங்கன்னா, பெரியபெரிய சங்கீத மேதைகளெல்லாரும் அசந்து போயிடுவாங்க….. அந்த சிவபெருமானயே கண்ணால பார்க்கவச்சிட்டிங்களே…. இதவிட வேற என்ன வேணும்?.. ரொம்ப அருமையான பாட்டு….” என்றார். அவரைத் தொடர்ந்து ஏதோ சொல்ல நினைத்த சண்முகவேலன் அவர் அருகில் குனிந்து, அவர் கைகளை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டான். பிறகு, தன் பைக்குள் இருந்த பணத்தை எடுத்து அவருடைய கைகளுக்குள் வைத்து மூடினான்.

“ஐயையோ, நீங்க ரெண்டுபேரும் என்ன சங்கீதக்காரன்னு நெனச்சிகிட்டிங்க போல. நான் சாதாரணமான ஒரு பிச்சைக்காரன் சாமி….”

மாமாவுக்கு கண்கள் தளும்பின. மீண்டும் அவரை நோக்கி, “அதனால என்ன? நீங்கமட்டும் மேடையேறி பாடினா,  ஜி.என்.பி., மதுரை மணி, ராமனாதன் மாதிரி பேரோடும் புகழோடும் பெரிய ஆளா ஆயிருப்பிங்க. அதுமட்டும் உண்மை” என்று உணர்ச்சிப்பெருக்கோடு சொன்னார்.

“புகழ வச்சிட்டு என்ன செய்ய சாமி? இந்த அலுமினியத்தட்டோடு அதயும் தூக்கிகிட்டு அலயணுமா?” அவர் வெடித்ததுபோலச் சிரித்தார். மாமா அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“பாட்டுன்னா என்ன ஐயா? நெஞ்சில கனிஞ்சி வரக்கூடியத வார்த்தையா கொடுக்கறதுதான பாட்டு. ஒரு மரம் காய்காய்க்கிறமாதிரி. ஒரு பசு கன்னுபோடறமாதிரி. ஊத்துல தண்ணி பொங்கறமாதிரி. இதுல புகழுக்கு எங்க சாமி இருக்குது எடம்?”

சண்முகவேலன் பேச்சின்றி உறைந்துபோய் உட்கார்ந்தான். அவன் பார்வை கரிய போர்வையென நெளிந்த வானத்தில் பதிந்திருந்தது. மாமா அவரை இன்னொரு பாட்டைப் பாடும்படி கேட்டுக்கொள்வதை அவன் காதுகள் கேட்டன. ’ஆகாச லிங்கத்தை கண்டேன்டி, இங்கே யாரும் அறியாமல் நின்றேன்டி’ என அவர் பாடுவதும் கேட்டது. ‘யாருக்கு பொன்னம்பலம் கிருபையிருக்குதோ அவனே பெரியவனாம்’ என்று தொடர்ந்ததும் கேட்டது.

பளபளவென விடிகிற சமயத்தில் வண்டி விழுப்புரத்தை அடைந்தது. எழுந்து நின்றபோது கால்துவள ஒருகணம் தடுமாறினான் சண்முகவேலன்.  “என்ன?” என்று கேட்டார் அவர். “ஒன்னுமில்லைங்க ஐயா, கிளம்பறோம்” என்று கைகுவித்து வணங்கினான் அவன். மாமாவும் வணங்கினார். “வணக்கம்லாம் எதுக்குங்க சாமி இந்த பிச்சைக்காரனுக்கு? நல்லபடியா போய்வாங்க சாமி” என்றபடி வழியனுப்பிவைத்தார் அவர். அதற்குப் பிறகு பஸ் பிடித்து பாண்டிச்சேரிக்கு வந்து வீட்டை அடைகிறவரைக்கும்கூட பேச்சையே மறந்ததுபோல சண்முகவேலன் அமைதியாகவே வந்தான்.

 

(காவ்யா – 2014)