Home

Saturday 20 May 2017

அழியாத காதல் - ஞானக்கூத்தனின் "மணல் கோடுகள்"



ஓசூரில் சிதிலமடைந்த ஒரு கோட்டை இருக்கிறதுஊரைச் சுற்றிப் பார்க்கச் செல்கிறவர்கள் அவசியமாக பார்க்கவேண்டிய கோட்டை. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கும் முன்பாக திட்டமிட்டு கட்டப்பட்ட கோட்டை அது. ஊரில் இருப்பவர்கள் அதைக் காதல் கோட்டை என்று அழைக்கிறார்கள்அங்குமிங்கும் விசாரித்து அக்கோட்டையின் கதையைத் தெரிந்துகொண்டேன்திடீர்திடீரென படையெடுத்துத் தாக்கவரும் முகம்மதியர்களின் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு பெரிய ஏரியையும் அதன் நடுவில் ஒரு கோட்டையையும் கட்டிக்கொண்டு வாழ்ந்தான் ராமநாயகன் என்கிற பாளையக்காரன்.  

சீற்றமும் மௌனமும்- சமயவேலின் "எதிர்கொள்ளுதல்"


கோடிக்கணக்கான தற்செயல்கள் நிறைந்த அற்புதம் இந்த வாழ்க்கை.  நீளவாக்கிலும் குறுக்குவாக்கிலும் இழைகளை இணைத்து நெய்யப்படும் துணியைப்போல.  பிறந்ததிலிருந்து இறப்பதுவரை ஏராளமான தற்செயல்கள். தேவாலயத்தில் மணியடிக்கும் வேலை செய்கிற இளைஞனொருவனைப்பற்றிய ஒரு சிறுகதையை எல்லாரும் படித்திருக்கலாம்.  அவன் வாழ்வில் நிகழும் தற்செயல்கள் அக்கதையில் மிகவும் கச்சிதமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். படிப்பறிவு உள்ளவர்களுக்குமட்டுமே வேலை என்ற புதுவிதியை அறிமுகப்படுத்துகிற புதிய பாதிரியார் தற்செயலாக அவனை தேவாலயத்திலிருந்து வெளியேற்றிவிடுகிறார்.  இனி எப்படி பிழைப்பது என்னும் குழப்பத்தோடு தெருவில் நடந்துகொண்டிருந்தபோது தற்செயலாக தன் பதற்றத்தைத் தணித்துக்கொள்ள புகைக்க வேண்டும் என்று நினைக்கிறான் அவன்.  அந்தத் தெருவில் நெடுந்தொலைவு முன்னும்பின்னுமாக நடந்த பிறகும் ஒரு விற்பனைக்கடைகூட இல்லை என்பதைக் கவனிக்கிறான்.  அப்போதுதான் தற்செயலாக தானே அங்கு அப்படி ஒரு கடையைத் திறந்தால் என்ன என்ற யோசனை எழுகிறது.  வேகவேகமாக அதைச் செயல்படுத்த, அவன் வருமானம் மெல்லமெல்ல உயர்கிறது.  வாழ்க்கைத் தரமும் உயர்கிறது. தற்செயலாக வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஒருவன் தற்செயலாக உதித்த யோசனையைப் பின்பற்றி நல்ல நிலைக்கு உயர்ந்துவிடுகிறான். 

Wednesday 10 May 2017

தனிமை என்னும் துயரம் - பிரம்மராஜனின் "அறிந்த நிரந்தரம்"



"குக்கூ என்றது கோழி அதனெதிர் துட்கென்றன்று என் தூய நெஞ்சம்" என்னும் குறுந்தொகை வரிகள் சுட்டிக்காட்டும் சித்திரம் உணர்வுமோதல்கள் மிகுந்த ஒன்று.  ஒருபுறம் கோழியின் கூவல் இன்னொருபுறம் இளம்தலைவியின் துணுக்குறலும் ஆற்றாமையும்.  ஒரு முழு இரவு வேகவேகமாகக் கடந்து ஒரு முடிவை நோக்கி நெருங்குகிறது.  ஒரு வாள் நெஞ்சில் இறங்குவதுபோல வைகறை இந்த மண்ணில் இறங்கப் போகிறது.  காதலனின் அருகாமையும் உற்ற துணையும் ஒரு முடிவுக்கு வந்துவிமே என்கிற பதற்றம் அவளைப் பைத்தியமாக்குகிறது. இந்த இரவு விடிந்துவிடக்கூடாதே என்று தவித்த தவிப்புகளை மீறி இரவு கரைந்து முடிந்துவிட்டது.  தன் பிரார்த்தனைகள் பொய்த்துவிட்டதே என்னும் தன்னிரக்கம் அவளை அலைக்கழிக்கிறது.  இரவு துளித்துளியாக கரைவதை தூக்கமின்றி விழித்தபடி துயரத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

கரைந்துபோகும் கணம் - ஆனந்தின் "உள்ளேயும் வெளியேயும்"



தனக்குக் காட்சியளித்த  இறைவனிடம் இரணியன் வரம் கேட்ட கதை மிகவும் சுவாரஸ்யமானது.  மரணம் நேரக்கூடிய வழிகள் அனைத்திலிருந்தும் தப்பிக்க விழைந்த இரணியனின்  ஆவல் அந்த வரத்தில் வெளிப்படுகிறது.  மரணம் நேரக்கூடிய எல்லா வாய்ப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு தர்க்கவலையைப் பின்னுகிறான் அவன்.  மரணம் இரவிலும் நேரக்கூடாது.  பகலிலும் நேரக்கூடாது.  வெளியேயும் நேரக்கூடாது. வீட்டுக்குள்ளேயும் நேரக்கூடாது.  தரையிலும் நேரக்கூடாது.  விண்ணிலும் நேரக்கூடாது.  எவ்வித ஆயுதத்தாலும் நேரக்கூடாது.  ஆயுதமின்றியும் நேரக்கூடாது.  இப்படி ஏராளமான நிபந்தனைகளை அடுக்குவதன்வழியாக தர்க்கரீதியாக மரணம் நெருங்கும் வழி ஒவ்வொன்றையும் அடைத்துவிடலாம் என்பது அவன் நம்பிக்கை. 

Friday 5 May 2017

படகோட்டியின் பயணம் - புதிய கட்டுரைத்தொகுதி - முன்னுரை






ஒரு குறுந்தொகைப்பாட்டு நினைவுக்கு வருகிறது. கடற்கரையோரத்தில் இரவு நேரத்தில் ஒரு புன்னைமரத்தடியில் இளம்பெண்ணொருத்தி நின்றிருக்கிறாள். அவள் கண்கள் அவ்விடத்துக்கு வந்து சேரும் பாதையில் படிந்திருக்கின்றன. காதலனைக் காண அவள் நெஞ்சம் துடித்தபடி இருக்கிறது. அவன் வராததால் உருவாகும் ஏமாற்றத்தை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இதோ இந்த நொடி, இதோ இந்த நொடி என அவள் ஒவ்வொரு நொடியிலும் கற்பனையாக உருவாக்கிக்கொள்ளும் எதிர்பார்ப்பு அலைபட்ட மணலென கரைந்துபோகிறது. தன்னிச்சையாக அவள் விழிகளில் கண்ணீர் திரண்டு வழிகிறது. புன்னைமரத்தில் சாய்ந்தபடி கலங்கியழும் கோலத்துடன் அவள் நின்றிருக்கும் காட்சியை இரண்டு மூன்று வரிகளில் சித்தரித்துவிடுகிறது அப்பாடல். 

Wednesday 3 May 2017

எச்.எஸ்.சிவப்பிரகாஷின் ஐந்து கன்னடக் கவிதைகள்



1.இரவு முழுதும்

இரவு முழுதும்
ஓவென்ற காற்றின் ஊளை
உடல்மீது பாய்வதுபோல இருந்தது
இந்நேரம்
சுக்குநூறாகச் சிதைந்திருக்கலாம்
என் வாடகை வீடு

பகல் முழுதும்
பொழிந்தபடியே இருந்தது
மழைமழைமழை
இந்நேரம்
கரைந்துபோயிருக்கலாம்
என் வாடகை வீடு