Home

Friday 5 May 2017

படகோட்டியின் பயணம் - புதிய கட்டுரைத்தொகுதி - முன்னுரை






ஒரு குறுந்தொகைப்பாட்டு நினைவுக்கு வருகிறது. கடற்கரையோரத்தில் இரவு நேரத்தில் ஒரு புன்னைமரத்தடியில் இளம்பெண்ணொருத்தி நின்றிருக்கிறாள். அவள் கண்கள் அவ்விடத்துக்கு வந்து சேரும் பாதையில் படிந்திருக்கின்றன. காதலனைக் காண அவள் நெஞ்சம் துடித்தபடி இருக்கிறது. அவன் வராததால் உருவாகும் ஏமாற்றத்தை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இதோ இந்த நொடி, இதோ இந்த நொடி என அவள் ஒவ்வொரு நொடியிலும் கற்பனையாக உருவாக்கிக்கொள்ளும் எதிர்பார்ப்பு அலைபட்ட மணலென கரைந்துபோகிறது. தன்னிச்சையாக அவள் விழிகளில் கண்ணீர் திரண்டு வழிகிறது. புன்னைமரத்தில் சாய்ந்தபடி கலங்கியழும் கோலத்துடன் அவள் நின்றிருக்கும் காட்சியை இரண்டு மூன்று வரிகளில் சித்தரித்துவிடுகிறது அப்பாடல். 


இது பாட்டின் ஒரு பகுதிதான். இதன் மறுபகுதி புன்னைமரத்தின் சித்திரத்தை வழங்குகிறது. இரவில் நிலத்தை நோக்கிவீசும் கடற்காற்றால் புன்னைமரத்தின் இலைகள் அமைதியின்றி அசைகின்றன. ஆர்ப்பரித்தெழும் அலைகள் கரையில் மோதும்போதெல்லாம் வீச்சோடு உயர்ந்தெழும் ஒருசில அலைத்துளிகள் புன்னை இலைகளில் பட்டுத் தெறிக்கின்றன. புன்னை இலைகளில் தேங்கும் நீர்த்துளிகள் வழிந்து விளிம்பில் திரண்டு சொட்டுச்சொட்டாக நிலம்நோக்கி உதிர்கின்றன.

எவ்வளவு அழகான உயிரோட்டமான சித்திரம்! பாட்டின் ஒவ்வொரு சொல்லிலும் படிந்திருக்கும் துயரத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது. ஒருபுறம் அழுகைபோலத் தோற்றம் தரும் இலையிலிருந்து உதிரும் நீர்த்துளிகள். மறுபுறம் காதலால் காத்திருக்கும் இளம்பெண்ணின் அழுத கண்ணீர்த்துளிகள். இந்த இணைப்பின் காரணமாகவே அந்தப் பாடலை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறேன்.

இந்தப் பாடல் மனத்தில் பதிந்த பிறகு, சொட்டுச்சொட்டாக நீர் திரண்டு விழும் காட்சியை எந்த இடத்தில் பார்த்தாலும் அந்தக் குறுந்தொகைப்பாட்டின் வரிகளையும் நினைத்துக்கொள்வது வழக்கமாகிவிட்டது.

ஒரு நாள் இரவு ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். விரிந்து பரந்த ஒரு தோட்டத்துக்கு நடுவில் இருந்தது அந்த விடுதி. பழைய காலத்துக் கட்டடம். வெளியே கடுமையான மழை. சிறிது நேரம் மழையை வேடிக்கை பார்த்துவிட்டு பெட்டியிலிருந்த புத்தகத்தை எடுத்து படிப்பதில் மூழ்கிவிட்டேன். முடிக்கும்போது நள்ளிரவைக் கடந்துவிட்டது. படித்ததை அசைபோட்டபடி ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்க்கத் தொடங்கினேன். மழை நின்றுவிட்டிருந்தது. குளிர்க்காற்று இதமாக இருந்தது. சிறுசிறு பசுங்குன்றுகளென காட்சியளித்த மரங்களையும் புதர்களையும் பார்த்த விழிகள் திரும்பிய கணத்தில் அறைச்சுவருக்கு அருகில் நின்றிருந்த  குழல்விளக்குக்கம்பத்தைப் பார்த்தேன். வெளிச்சத்தைப் பொழிந்தபடியிருந்த வெண்குழல் விளக்கின் தோற்றம் வசீகரமாக இருந்தது. குழல்விளக்கின் மேல்பக்கத்திலிருந்து வழிந்து அடிவிளிம்பில் முத்துகளெனத் திரண்டு நின்ற மழைத்துளிகள் சொட்டுச்சொட்டென விழும் காட்சியைப் பார்த்தபடி வெகுநேரம் நின்றுவிட்டேன். எதிர்பாராத கணமொன்றில் என் மனம் குறுந்தொகைப் பாடல் வரியைத் தொட்டு மீண்டது.

எப்போதோ படித்த அல்லது கேட்டுத் தெரிந்துகொண்ட ஒரு விஷயத்தை வேறு ஏதோ ஒரு புத்தகத்தைப் படிக்கும்போதோ அல்லது வேறு ஏதோ ஒரு கருத்தையொட்டிய விவாதத்தில் ஈடுபட்டிருக்கும்போதோ நினைத்து அசைபோடுவதும் இணைத்துப் பார்த்துக்கொள்வதும் எப்போதுமே எனக்கு மிகவும் பிடிக்கும். என்னைப் பொறுத்தவரையில் ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பதை புத்தக மையத்தோடு தொடர்புடைய பல விஷயங்களை இணைத்துத் தொகுத்துக்கொள்ளும் முயற்சியாக வரையறுத்துக்கொள்ளவே விழைகிறேன். இந்த இணைப்பை நிகழ்த்தும்போதுதான் ஒரு படைப்பை வாழ்வின் முழுமைக்குள் வைத்து விரித்தெடுப்பது சாத்தியமாகும்.

ஒரு புதிய தொகுப்புக்காக இக்கட்டுரைகளை வரிசைப்படுத்தும்போது தற்செயலாக ஒரு படகோட்டியின் சித்திரம் கற்பனையில் விரிந்தது. ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு அவன் வாழ்நாள் முழுதும் தன் படகை செலுத்திக்கொண்டே இருக்கிறான். அவன் வீட்டுக்குச் சென்றாலும் அவனுடைய படகு நீரோட்டத்தின் மடியில் எப்போதும் மிதந்தபடியே இருக்கிறது. ஒரு வாசகனாக கதை, கவிதை, கட்டுரை என வகைவகையான இலக்கிய ஆக்கங்களை மாறிமாறி வாசிக்கும்போது, அவ்வாசிப்புப்பயணத்தை ஒரு படகோட்டியின் பயணமாகவே உருவகிக்கலாம் என்று தோன்றியது. அக்கணமே இத்தொகுதியின் தலைப்பைத் தீர்மானித்துக்கொண்டேன்.

வாசிப்பு என்பது ஒரு கலை. ஒரு தேர்ந்த வாசகன் தன் வாசிப்பின் வழியே அறிமுகமாகும் பெரும்படைப்புகளின் மூலம் தன் ஆளுமையை உருவாக்கிக்கொள்கிறான். ஒரு சிற்பம் உருப்பெறுவதுபோல அவனுக்குள் அந்த ஆளுமை எழுகிறது. வாசிப்பின் வழியாகவே ஒரு வாசகன் தன் மொழியின் ஆழத்தையும் விரிவையும் அறிந்துகொள்கிறான். இந்த வாழ்வின் சாரமாக ஒரு வாசகன் கண்டடையும் ஏராளமான படிமங்கள் முக்கியமானவை. மொழியில் மறைந்திருக்கும் அத்தகு புதையல்கள் வாசகன் வழியாகவே கண்டடையப்படுகின்றன. முக்கியமாக, வாசிப்புக்கலை எதிர்காலம் குறித்த மகத்தான கனவை ஒரு வாசகனுக்குள் கட்டியெழுப்புகிறது. ஒரு கலங்கரை விளக்கத்தின் வெளிச்சம்போல அக்கனவு வாசகனுடைய முன்னோக்கிய பயணத்துக்கு சதாகாலமும் ஒளியைப் பொழிந்தபடி இருக்கிறது.

இந்தத் தொகுதியில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் கடந்த மூன்றாண்டாண்டுகளில் அவ்வப்போது எழுதப்பட்டவை. மறைந்த மூத்த திறனாய்வாளரான வெங்கட் சாமிநாதன்  அவர்களை இத்தருணத்தில்  நினைத்துக்கொள்கிறேன்.   புதுமைப்பித்தன், மெளனி, ந.பிச்சமூர்த்தி, தி.ஜானகிராமன் போன்ற பல மூத்த இலக்கிய ஆளுமைகள் உருவாக்கிய படைப்புகள் சார்ந்து தன் ரசனையை அவர் முன்வைத்தபடி உரையாடிய பல தருணங்களில் நான் அவருடன் இருந்திருக்கிறேன். என் ரசனையை மேம்படுத்திகொள்ள அந்த உரையாடல்கள் பெருமளவில் எனக்கு உதவியிருக்கின்றன. கலை என்பது அவருக்கு இலக்கியம் மட்டுமல்ல, நாடகம், கூத்து, திரைப்படம், நடனம், நாட்டார் கதைகள், நாட்டார் பாடல்கள் என பல வடிவங்களாக விரிந்து செல்லும் பேருருவம். அதன் வீச்சை, அதை ரசனை மனத்துடன் நுட்பமாக உள்வாங்கிச் செரித்துக் கொள்பவனால் மட்டுமே உணரமுடியும். உயர்ந்த ரசனை இந்த உலகத்தை நம் மனத்துக்கு மேலும் மேலும் நெருக்கமுள்ளதாக மாற்றிவிடுகிறது. ரசனையின் அடிப்படையில்  எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட  இத்தொகுதியை வணக்கத்துடன் அவருக்கு சமர்ப்பணம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இக்கட்டுரைகளை வெளியிட்ட உங்கள் நூலகம், தீராநதி, காலச்சுவடு,  புத்தகம் பேசுது, அம்ருதா ஆகிய அனைத்து அச்சிதழ்களுக்கும் திண்ணை, மலைகள் ஆகிய இணைய இதழ்களுக்கும் அவற்றின் ஆசிரியர்களுக்கும் என் நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். என் துணைவி அமுதாவின் அன்பே எப்போதும் என்னை இயக்கும் விசை. இந்த உலகத்தில் நான் எதைச் செய்தாலும் அந்த அன்புக்கு ஈடாகாது. அவரையும் இத்தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன். இத்தொகுப்பை மிகச்சிறந்த முறையில் வெளிக்கொண்டு வரும் என்.சி.பி.எச். நிறுவனத்துக்கும் என் அன்பார்ந்த நன்றி.

நியு செஞ்சிரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி. சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர்
சென்னை -98
விலை. ரூ  210