Home

Wednesday 10 May 2017

கரைந்துபோகும் கணம் - ஆனந்தின் "உள்ளேயும் வெளியேயும்"



தனக்குக் காட்சியளித்த  இறைவனிடம் இரணியன் வரம் கேட்ட கதை மிகவும் சுவாரஸ்யமானது.  மரணம் நேரக்கூடிய வழிகள் அனைத்திலிருந்தும் தப்பிக்க விழைந்த இரணியனின்  ஆவல் அந்த வரத்தில் வெளிப்படுகிறது.  மரணம் நேரக்கூடிய எல்லா வாய்ப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு தர்க்கவலையைப் பின்னுகிறான் அவன்.  மரணம் இரவிலும் நேரக்கூடாது.  பகலிலும் நேரக்கூடாது.  வெளியேயும் நேரக்கூடாது. வீட்டுக்குள்ளேயும் நேரக்கூடாது.  தரையிலும் நேரக்கூடாது.  விண்ணிலும் நேரக்கூடாது.  எவ்வித ஆயுதத்தாலும் நேரக்கூடாது.  ஆயுதமின்றியும் நேரக்கூடாது.  இப்படி ஏராளமான நிபந்தனைகளை அடுக்குவதன்வழியாக தர்க்கரீதியாக மரணம் நெருங்கும் வழி ஒவ்வொன்றையும் அடைத்துவிடலாம் என்பது அவன் நம்பிக்கை. 


பக்தனை நிராசைக்குள்ளாக்கக்கூடாது என எண்ணிய இறைவனும் வரத்தை அளித்துவிட்டு மறைந்துபோகிறார்.  மரணமில்லாத பெருவாழ்வுக்கான வரத்தை அடைந்த ஆனந்தத்தில் திளைப்பதற்கு மாறாக அவன் மனம் தனக்கு நிகர் யாருமில்லை என்னும் செருக்கில் திளைக்கத் தொடங்குகிறது.  இறைவன் பெரியவர் என முதலில் உணர்கிற மனம் பிறகு இறைவனுக்கு நிகரானவனாக தன்னை நினைத்து இறும்பூதெய்துகிறது.  அதன்பிறகு, இறைவனைவிட பெரியவனாகவே தன்னை நினைத்து அகம்பாவத்தில் மிதக்கிறது.  அனைவரும்  தன்னையே இறைவனாகத் துதிக்கவேண்டும் என்னும் எதிர்பார்ப்பும் உருவாகிறது.  அப்படி துதிக்கத் தயங்குகிறவர்களுக்கு தண்டனை வழங்குகிறது.  துதிக்க மறுக்கும் பிரகலாதனைக் கண்டு இரணியன் அடையும் பதற்றம் கொஞ்சநஞ்சமல்ல.  பதற்றம் அவனைத் தடுமாறவைக்கிறது.  மரணமில்லாப் பெருவாழ்வுக்கு வரம் பெற்றிருந்தவனையும் இறுதியில் மரணம் தழுவுகிறது.  அவன் அடுக்கி வைத்த தர்க்கங்களில் பொதிந்திருந்த ஓட்டை அவனுடைய மரணத்துக்கு வழிவகுக்கிறது. எல்லாக் கணக்குகளும் தற்காலிகமானவையே. நீரைக் குடத்தில் நிரப்பியெடுத்தபிறகும் ஓடிக்கொண்டே இருக்கும் ஆற்றில் நீர் நிரம்பியிருப்பதுபோலவே தற்காலிகக் கணக்குக்கு அப்பால் எப்போதும் ஏராளமான விஷயங்கள் உண்டு.  பாதுகாப்பு வளையத்தைக் கணக்கிடும் அவசரத்தில் அந்த அம்சத்தையே மறந்துபோகிறான் இரணியன். அப்பால் என்பது ஒருபோதும் எல்லையல்ல.  அப்பால், அப்பால், அப்பால் என எல்லைகளின் கோடுகள் விரிவடைந்தபடி இருக்கின்றன.

எல்லாவற்றின்மீதும் ஆதிக்கம் செலுத்த விழையும் மனநிலை சிறுகச்சிறுக அதிகாரச்சுவையை வளர்த்து இறுதியில் அச்சுவைக்கே அடிமையாக்கிவிடுகிறது.  ஒருபுறம் சகிப்புத்தன்மையின்மையும் மறுபுறம் அகங்காரத்தையும் வளர்த்துக்கொள்கிறது. அவர்களே வகுத்துக்கொள்கிற கோட்டின் ஒருபுறம் அவர்கள் நிற்கிறார்கள்.  மறுபுறத்தில், மற்றவர்கள் அனைவரும் நிற்கிறார்கள்.  இது எளிய வாழ்க்கைமுறை.  இன்னொரு வாழ்க்கைமுறை இருக்கிறது.  அதில் கோடுகள் இல்லை.  பிரிவுகள் இல்லை.  கரைந்து வாழ்கிற நிலை.  நெஞ்சில் வரம்புநிலை சரிந்து குலைய, ஒவ்வொரு நொடியிலும் உயர் இனிக்கஇனிக்க வாழும் நிலை.  உள்புகுந்து பரவும் சுடரின் ஒளியால் கிளர்ந்தெழும் ஆனந்தத்தாலும் நிறைவாலும் மனம் தளும்பத்தளும்ப திளைத்திருக்கும் நிலை.  வேறொரு பொருளில் அதுவே மரணமில்லாப் பெருநிலை.  துரதிருஷ்டவசமாக, இரணியனுக்கு அது வாய்க்கவில்லை.  மரணமில்லாத வாழ்க்கை என்பதை ஆயுள் கணக்காக அவன் மனம் எண்ணிக்கொண்டதே தவிர, வாழ்க்கை முறைகளைமுன்னிட்ட ஒன்றாக அவன் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை.

இயற்கை மாபெரும் புதிர்.  விஸ்வரூபம் புலன்களால் அறியக்கூடிய ஒன்றல்ல.  கைப்பிடி அளவு முகர்ந்த கடல்நீர் சிறிதளவுதான். பொங்கிக் கொந்தளித்தபடி கடல் எப்போதும் பரந்துவிரிந்திருக்கிறது.  கண்முன் பாய்ந்து செல்லும் ஆறு, எங்கோ பிறந்து, எங்கெங்கோ அலைந்து திரிந்து, எதையோ நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறது. நம் கண்முன் சூரிய ஒளி பட்டு வெள்ளித் தட்டாகப் பளபளக்கும் வெட்டவெளி எங்கோ ஒரு மூலையில் இருளடர்ந்த பனிப்படலமாக செறிவுற்றிருக்கிறது.  புதிரைப் புரிந்துகொண்டால் ஒரு புன்னகையோடு அதன்முன் மண்டியிட்டு மகிழலாம்.

"உள்ளேயும் வெளியேயும்" கவிதையில் ஆனந்த் ஒரு புனைகதைக்கு நிகரான கற்பனைச் சித்திரமொன்றை கட்டியெழுப்புகிறார்.  ஒரு மாபெரும் மரம்.  அந்த மரத்தைத் தாங்கிநிற்கிற வெளி.  அந்த வெளியை அழகு நிறைந்ததாக மாற்றும் மாலைப்பொழுது.  அவை அனைத்தையும் ஒரே கணத்தில் சேர்த்து விழுங்குகிறான் ஒருவன்.  இப்போது காலை, மாலை என மாறும் காலம் அவனுள் மாற்றம் கொள்கிறது.  வானைநோக்கித் தாவும் பறவைகளும் கூட்டைநோக்கித் திரும்பும் பறவைகளும் அவனுள் பறந்து திரிகின்றன.  காலம், வெளி, இயற்கை, பறவை என பிரபஞ்சமே தனக்குள் ஐக்கியமாகி ஒரே சீரான அலைவரிசையில் அவை இயங்குவதைக் கண்டு அவன் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. எல்லாம் சிறிதுநேரம்தான்.  சில கணங்களுக்குப் பிறகு, ஒரு பறவையைக் காண்கின்றன அவன் கண்கள்.  ஒரு கோடியிலிருந்து கிளம்பி இன்னொரு கோடியைநோக்கி பறந்துபோகிறது.  எல்லாவற்றையும் விழுங்கிவிட்ட நிறைவில் திளைத்திருப்பவனுக்கு, கண்முன்னாலேயே இன்னொரு பறவை, இன்னொரு வெளி உருவாகி நிற்பதைக் கண்டு குழப்பமுற்று நிற்கிறான் அவன். 

எங்கு, எப்போது என்பதுதான் தெரியவில்லை என்கிற வரி முக்கியமானது.  எங்கு பறக்கிறது அந்தப் பறவை? விழுங்கிவிட்ட வெட்டவெளியிலா? விழுங்காத வெட்டவெளியிலா? எல்லாவற்றையும் விழுங்கியபிறகு, விழுங்காத வெளி என்பதற்கு வாய்ப்பே இல்லை.  விழுங்கிய வெளியில்தான் பறவை பறந்துகொண்டிருக்கிறது.  விழுங்கிவிட்ட பிறகு, கண்ணால் அதை எப்படிப் பார்க்கமுடியும்?  வெளியை இழுத்துக்கொள்ளும் முயற்சியில் உள், வெளி பேதமே இல்லாமல் போகிறது. உள்ளும் வெளியும் ஒன்றுடன் ஒன்று கலந்துபோகிறது.   உள்ளை தன்வயப்படுத்தும் வெளி, மனம் உணரும் முன் மிக இயல்பாக ஒரே கணத்தில் மீண்டுவிடுகிறது. வேகமான இந்த இரசாயன மாற்றத்தால் பறவை பறக்கும் காட்சி மீண்டும் வெட்டவெளியில் தோற்றம் தருகிறது.  கரைந்துவிடுபவர்கள் ஒருவகையில் நற்பேறு பெற்றவர்கள்.  கரைய மறுத்து, இரணியன்போல நிற்க விழைகிறவர்ளும் உண்டு.  வாழும் முறைபற்றிய தேர்வை வாழ்க்கை யார்மீதும் சுமத்துவதில்லை.


**

உள்ளேயும் வெளியேயும்

ஆனந்த்

ஒரு மாபெரும் மரத்தையும்
சூழ்ந்து நின்ற வெளியையும்
மழை பெய்த மாலை ஒன்றுடன்
சேர்த்து விழுங்கினேன்

காலையும் மாலையும்
கூடு திரும்பும்
பறவைக் கூட்டங்களும்
நிகழ்கன்றன உள்ளே
காலமும் ஓடுகிறது

வெளியே
அக்கோடிக்கும் இக்கோடிக்கும்
நீளும் சிறகு விரித்து
வண்ணங்கள் கடந்த
இந்தப் பறவை மட்டும்
மெல்லப்பறந்து
கொண்டு இருக்கிறது

எங்கு
எப்போது
என்பதுதான்
புரியவில்லை.


*



எழுபதுகளில் வெளிப்பட்ட கவிஞர்களில் முக்கியமான ஒருவராகக் கருதப்படுபவர் ஆனந்த்.  சொற்செறிவும் படிம அழகும் இவர் கவிதைகளின் சிறப்பம்சங்கள். தேவதச்சனும் இவரும் இணைந்து வெளியிட்ட "அவரவர் கைமணல்" என்னும் தொகுதி வெகுவாக வாசக கவனம் பெற்ற ஒன்று.