Home

Wednesday 3 May 2017

எச்.எஸ்.சிவப்பிரகாஷின் ஐந்து கன்னடக் கவிதைகள்



1.இரவு முழுதும்

இரவு முழுதும்
ஓவென்ற காற்றின் ஊளை
உடல்மீது பாய்வதுபோல இருந்தது
இந்நேரம்
சுக்குநூறாகச் சிதைந்திருக்கலாம்
என் வாடகை வீடு

பகல் முழுதும்
பொழிந்தபடியே இருந்தது
மழைமழைமழை
இந்நேரம்
கரைந்துபோயிருக்கலாம்
என் வாடகை வீடு


இந்தக் கோடை முழுவதும்
எரிந்தபடியே இருந்தது
வானுயர்ந்த நீல அடுப்பு
இந்நேரம்
எரிந்து பொசுங்கியிருக்கலாம்
என் வாடகை வீடு

குளிர்காலம் முழுவதும்
கவிந்து மூடிக்கொண்டிருந்தது
கடுமையான குளிர்
உறைந்துபோயிருக்கலாம்
என் வாடகை வீடு

இன்னும் உயிரைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது
என் வாடகை வீடு
காத்துக்கொண்டிருக்கிறது
என் வாடகை வீடு
என்னுடையதாக மாறாத என் சொந்த வீடு



2.அடுப்பு


திருமணம் திவசங்களெல்லாம்
முடிந்துவிட்டன.
பூமியகலமுள்ள அடுப்பு
இப்போது அணைந்திருக்கிறது.
கோடானுகோடி வயிறுகளுக்கு
உணவு கிடைக்கட்டுமென
சுட்டழித்த காடு.
வடதுருவத்திலிருந்து தென்துருவம் வரைக்கும்
பச்சைப்பசேலென நீண்டிருந்த காடு
இப்போது எரிந்து சாம்பலாகிவிட்டது.
நீங்களே தொட்டுப் பாருங்கள் !
எவ்வளவு குளிர்ச்சி.
காடு விழுங்கிய நெருப்பு
நாட்டிலும் எரிந்து
நாட்டினரின் கதைகளும் முடிந்துவிட்டன.
அந்த அழிவுகளின் விசித்திர அலங்கோலப் படங்களை
நான் தன்னந்தனியே தீட்டிக்கொண்டிருக்கும்போது
அந்தச் சாம்பலின் அகன்ற பரப்பில்
இதோ
சூரியன் !
அந்த மாபெரும் அடுப்பின் கருப்பையின் ஆழத்தில்
புதிய கரு.

3.ஐந்து குருடர்கள்


ஐந்து குருடர்கள்
யானையைத் தொட்டபோது
ஐந்து குருடர்களையும்
யானை முகர்ந்து பார்த்தது

முதல் குருடன் சொன்னான்
‘ஆகா, யானை தூண்போல இருக்கிறது’
அவனை முகர்ந்தது யானை
‘இவன் கட்டட வேலை செய்பவன்’

இரண்டாமவன் சொன்னான்
‘ஆகா, யானை ஒரு கொடி’
அவனை முகர்ந்தது யானை
‘இவன் ஒரு படைவீரன்’

மூன்றாமவன் சொன்னான்
‘யானை சுவரைப்போல உள்ளது’
யானை முகர்ந்தது அவனை
‘சிறைக்கூடமே இவன் தாய்வீடு’

நான்காமவன் சொன்னான்
‘யானை ஒரு கயிறாகும்’
அவனை முகர்ந்தது யானை
’ம், கயிற்றுக்கு முறுக்கேற்றுபவன்’

ஐந்தாவது ஆள் சொன்னான்
‘யானை ஓர் ஊதுகுழல்’
அவனை முகர்ந்தது யானை
‘ஏய், நீ வாத்தியம் இசைப்பவன்’

யானை என்றால் என்னவென்று
ஐந்து பேர்க்கும் தெரியவில்லை
அவர்கள் யார் என்பது
யானைக்கும் தெரியவில்லை



4.மூன்று குருடர்கள்


மூன்று உயிர்த்தோழர்கள்
மூன்று குருடர்கள்
மூன்று காலத்தையும் அலசி ஆய
மூன்று திசைகளில் சென்றனர்

ஒருவன் பின்னோக்கிப் பின்னோக்கி நடந்தான்
காலத்தை தாண்டிக்கொண்டே சென்றான்
தாயின் கருப்பைக்குள் மீண்டும் புகுந்தான்
கல்லோடு கல்லானான்
தண்ணீரோடு தண்ணீரானான்
வழிமுழுதும் தண்ணீராக மாறியது
ஆதி மூலத்தை நோக்கிப் பாய்ந்தது

ஒருவன் முன்னோக்கி முன்னோக்கி நடந்தான்
சிறகை விரித்து முன்னோக்கிப் பறந்தான்
பறவையைவிட வேகமாக
பூமியின் எல்லையைக் கடந்து
தாவித்தாவி முன்னோக்கிப் பறந்தான்
இன்னும் இன்னுமென முன்னால் தாவி
திசைகளின் விளிம்பைத் தொட்டதுமே
புள்ளியாகக் காணாமல் போனான்
கடந்துசென்ற பாதைமட்டும் எஞ்சியிருந்தது

ஒருவன் நின்ற இடத்திலேயே நின்று
உடற்பயிற்சியில் மூழ்கியிருந்தான்
பூமியே நிலையானது என்றுணர்ந்து
பம்பரம்போல சுற்றிச்சுழன்று களைத்து
பகலின் வேட்கை இருளுக்கிருந்தது
இருளின் காதல் பகலுக்கிருந்தது
சுற்றிச்சுற்றிக் கண்டறிந்தான்
அறிந்துகொள்ளமுடியாதவனாக மாறினான்

மூன்று குருடர்கள்
மூன்று காசுக்குக்கூட பெறுமானமற்ற
மூன்று வழிகளையும் துறந்து மீண்டும்
முதலில் தொடங்கிய இடத்துக்கே வந்தான்

மூன்று குருடர்கள்
மூன்று உயிர்த்தோழர்கள்
நான்காவது வழியில்
இப்போது சென்றுகொண்டிருக்கிறார்கள்.



5.தண்ணீர்த் துறவி


தண்ணீர்த் துறவி, தண்ணீர்த் துறவி
எங்கிருக்கிறது சொல், தண்ணீரின் ஊற்றுக்கண்?
மண்ணின் உயிர்மையில் நனைந்த கண்
கற்பாறையின் கருணையில் தோய்ந்த கண்

கொக்கோ தண்ணீர் லிம்கா தண்ணீர்
புட்டிச்சிறைக்குள் அடைபட்ட தண்ணீர்
கடைத்தெரு மாயாவிகளின்
மயக்கும் சூசூ மந்திரத்தண்ணீர்
வேர்வைத் தண்ணீர் ரத்தத்தின் தண்ணீர்
ஆழாக்கு உழக்கு மாகாணி நாழியென
குடித்துக் குடித்துக் குடித்துக் குடித்து
போதும்போதும்போதுமென்றாகிவிட்டது
நாக்கு சூடேறிய ஓடாகிவிட்டது
ஆசனவாய்க்குள் தீப்பற்றியுள்ளது
கருப்பைக்குள்ளும் வறட்சி படிந்தது

ஏலம் விடப்பட்ட நதிகள் கூக்குரலிடுகின்றன
தண்ணீர்த் துறவி,
தண்ணீர்த் துறவி
நித்தமும் மடியும் கடல் அழைக்கிறது
தண்ணீர்த் துறவி, தண்ணீர்த் துறவி
பிணங்கள் மிதக்கும் கிணறு அலறுகிறது
தண்ணீர்த் துறவி, தண்ணீர்த் துறவி
ஏரிகளின் புலம்பலுக்கு முடிவே இல்லை
தண்ணீர்த் துறவி, தண்ணீர்த் துறவி
ஏரி, கிணறு, நதி, கடல்
ஒரே குரலில் முறையிடுகின்றன
தண்ணீர்த் துறவி, தண்ணீர்த் துறவி
எங்கள் தண்ணீரில் குளிர்ச்சியே இல்லை
தாகத்தைத் தணிக்கும் சுவையே இல்லை
எங்கிருக்கிறாய் சொல், தண்ணீர்த் துறவி
எங்கள் தாகத்தைத் தணிக்கும்
பாதாளத்து சர்க்கரைத் தண்ணீரின் ஊற்றுக்கண்?

பகலில் உடல்வருத்தும் வேலைகளுக்கு நடுவே
இருளின் கொள்ளிப்பிசாசுகளென
பற்றியெரியும் கனவுஜீவிகள்
எல்லா மானுட மொழிகளிலும்
எல்லாப் பிராணிகளின் கூக்குரல்களிலும்
வறண்டுபோன பயிர், மலராத மொட்டு
அஃறிணைகளின் மெளனங்களிலும்
ஓயாத கூச்சல் ஒலித்தபடியே இருக்கின்றன
தண்ணீர்த் துறவி, தண்ணீர்த் துறவி
விழுந்துகிடக்கும் தூணை தட்டி எழுப்புக
ஊற்றுக்கண்ணுக்கருகில் அழைத்துச் செல்க
இதோ இங்கிருக்கிறது, இங்கே இங்கே
நோய்களுக்கெல்லாம் இறுதி மருந்தாக
உயிரை மீட்கும் ஊற்றுக்கண்
என நீ எங்களுக்கு உரைப்பது எப்போதோ?
எங்கிருக்கிறாய் காட்டு, தண்ணீரின் ஊற்றுக்கண்


(எச்.எஸ்.சிவப்பிரகாஷ் தற்காலக் கன்னடக் கவிஞர்களில்  முதல்வரிசைக்கவிஞராகவும் முக்கியமான நாடக ஆசிரியரும் கருதப்படுபவர். தொடக்கத்தில் பெங்களூர்ப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தற்போது தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் அழகியலுக்கான துறையில் பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.  ஏழு கவிதைத்தொகுதிகளும் பன்னிரண்டு நாடகங்களும் இவருடைய நேரடிப் படைப்பாக்கங்கள். இவை தவிர பல ஐரோப்பியக்கவிதைகளை ஆங்கிலம் வழியாக கன்னடத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். கன்னட வசன இலக்கியம் தொடர்பான பல ஆய்வுநூல்களையும் எழுதியிருக்கிறார். தம் கவிதைத்தொகுதிகளுக்காக மாநில சாகித்ய அகாதெமி விருதையும் மைய சாகித்ய அகாதெமி விருதையும் பெற்றிருக்கிறார்.

(பேசும் புதிய சக்தி - ஏப்ரல் மாத இதழில் வெளிவந்த கவிதைகள்)