Home

Sunday 26 September 2021

பார்வை - சிறுகதை

 

மது நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் இல்லத்தில் ஒரு மாதம் கழித்து நடக்கவிருக்கும் ஆண்டுவிழாவில் போட்டிகளுக்குப் பரிசு வழங்கி சிறப்புரையாற்றவேண்டுமென்று கேட்டுக்கொண்டார் செல்லப்பா. திடீர்திடீரென்று அலுவலக ஆணைக்குக் கட்டுப்பட்டு மும்பை, கொச்சின், கல்கத்தா என்று புறப்பட்டுச் செல்கிற சூழல்களுக்கிடையே பணிபுரிகிறவன் இப்படியெல்லாம் விசேஷநிகழ்ச்சிக்கு தீர்மானமாக தேதி ஒதுக்கித்தருவதில் இருக்கிற சிரமங்களை அவருக்குப் புரியவைப்பது எப்படி என்று தடுமாற்றமாக இருந்தது. பத்திரிகைகளில் கதையெல்லாம் எழுதுகிறவன் கேட்டால் மறுக்கமாட்டான் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் வந்திருந்தார். 

மாறுபட்ட கோணங்கள் - புத்தக அறிமுகம்


     நவீன சிறுகதைக்கான பாதையை உருவாக்கிய படைப்பாளிகளில் முக்கியமானவர் ரஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செகாவ். அவருடைய முதல் சிறுகதைத்தொகுதி 1884இல் வெளிவந்தது. கச்சிதமான வடிவ அமைப்பு, நுட்பமான சித்தரிப்பு, வசீகரமான மொழி ஆகியவற்றின் காரணமாக இலக்கிய உலகில் அவருடைய சிறுகதைகளுக்கான இடம் அப்போதே உறுதிப்பட்டுவிட்டது. அடுத்த இருபதாண்டுகளில் அவர் எழுதிய சிறுகதைகள் பதிமூன்று தொகுதிகளாக வெளிவந்தன. ரஷ்யாவுக்கு வெளியே பல மொழிகளில் அக்கதைகள் மொழிபெயர்க்கப்பட்டன. அவற்றின் வழியாக உலகெங்கும் அவருக்கு வாசகர்கள் உருவானார்கள். கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் புதிய தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்படும் எழுத்தாளராகவும் மீண்டும் மீண்டும் மொழிபெயர்க்கப்படும் எழுத்தாளராகவும் விளங்குகிறார் ஆன்டன் செகாவ்.

Wednesday 22 September 2021

குழந்தைப்பாடல்கள் : வகைகளும் வளர்ச்சியும்

  

குழந்தைப் பாடல்களை இரண்டு பெரும்பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். முதல் பிரிவில் குழந்தைகள் தம் உணர்வுகளை வெளிப்படுத்த தாமே சொற்களைக் கூட்டிக்கூட்டி உருவாக்கும் பாடல்கள் அடங்கும். குழந்தைகளின் மனநிலைக்கு இணையாக தம் மனநிலையை தகவமைத்துக்கொள்ள முடிந்த பெரியவர்கள், குழந்தைகளின் பார்வையில் ஒவ்வொன்றயும் பார்த்து சொற்களை இணைத்து உருவாக்கும் பாடல்கள் இரண்டாவது பிரிவில் அடங்கும்.

’அக்பர் சாஸ்திரி’ சிறுகதைகள் : பாலைவனக்கள்ளி படர்ந்திருக்கும் உலகில்


நடந்தாய் வாழி காவேரி புத்தகத்தைப்பற்றி ஒருநாள் என் கன்னட நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். நதியை ஒட்டிய பயணம் என்பதைக் கேட்டு அவர்கள் மலைத்துவிட்டார்கள். அதுவும் முன்னொரு காலத்தில் நிகழ்ந்த பயணம் என்பதைக் கேட்டு அவர்களுடைய வியப்பு பல மடங்காகப் பெருகியது. அப்படி ஒரு பயணம் நாமும் செல்லவேண்டும் என்று கனவு மிதக்கும் கண்களோடு ஒவ்வொருவரும் மாறிமாறிச் சொன்னார்கள். இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் அப்படி ஒரு தருணம் வாய்க்கவே இல்லை. அதனால் ஒரு மாற்றுத் திட்டமாக ஒருநாள் பயணமாக சிவசமுத்திரம், தலக்காடு, திருமுக்கூடல், சோமநாதபுர ஆகிய இடங்களுக்கு மட்டும்  சென்றோம். அருவிச்சாரல், சோழர் காலத்துக் கோவில், ஒரு காலத்தில் ஊரையே மூடியிருந்த மணல்மேடு, குறுகியும் விரிந்தும் பரவியோடும் காவிரி என எண்ணற்ற காட்சிகளைக் கண்டு மகிழ்ந்துவிட்டுத் திரும்பினோம். என்னிடம் அப்போதுதான் புதுசாக வாங்கிய ஒரு டிஜிட்டல் கேமிரா இருந்தது. அதைப் பயன்படுத்தி ஒவ்வொரு இடத்திலும் ஏராளமான படங்களை எடுத்தேன்.

Tuesday 21 September 2021

புன்னகை பூக்க வைக்கும் வரிகள்

 

கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் நவீன கல்வியின் அறிமுகத்துக்குப் பிறகு குழந்தைகளுக்கான பாடல்களுக்கும் கதைகளுக்கும் ஓர் அவசியத்தேவை உருவானது. அதையொட்டி குழந்தைகளுக்கென எழுதும் பல கவிஞர்களும்  கதையாசிரியர்களும் உருவாயினர். ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் ஆங்கிலவழிக் கல்வி எங்கெங்கும் வேரூன்றி தழைத்துப் பெருகத் தொடங்கியதும், அந்தத் தேவை மெல்ல மெல்ல குறைந்து இல்லாமலானது.

Sunday 19 September 2021

காதலென்னும் ஊஞ்சல் - புத்தக அறிமுகம்

     

சூர்யநிலாவின் கவிதைத்தொகுதியின் முகப்பில் பரணர் எழுதிய நற்றிணைப்பாடலை வழங்கியிருப்பது ஏதோ ஒரு வகையில் புதுமையாகத் தோன்றியது. முன்னுரை வாக்கியங்களைப்போலத் தோன்றிய அப்பாடல் வரிகள் கவிதைத்தொகுதிக்குள் அழைத்துச் செல்ல, வாசலில் நின்று வரவேற்பதுபோலத் தோன்றியது. என்ன தொடர்பு இருக்கக்கூடும்  என்றொரு கேள்வி ஒரு பறவையைப்போல சிறகடித்தபடி இருக்க, அப்பாடலை நாலைந்து முறை படித்துவிட்டேன். அதன் உள்ளோசைக்காக ஒரு முறை. அதன் காட்சியமைக்காக ஒரு முறை. அதன் கற்பனையழகுக்காக ஒரு முறை. அதன் பொருளுக்காக ஒரு முறை. படிக்கப்படிக்க அதன் அழகு பெருகியபடியே இருந்தது.  

ஜி.இராமச்சந்திரன்: இலட்சியப்பறவை


1920இல் நாகர் கோவிலில் ஸ்காட் கிறித்துவ உயர்நிலைப்பள்ளியில் படித்துவந்த பதினாறு வயது நிரம்பிய ஒரு மாணவருக்கு பள்ளிக்கூட நூல்களுக்கு அப்பால் யங் இந்தியா பத்திரிகையைப் படிக்கும் பழக்கம் இருந்தது. அதில் தீண்டாமையை ஒழிக்கவேண்டியதன் அவசியத்தைப்பற்றி காந்தியடிகள் எழுதும் கட்டுரைக்குறிப்புகளை அந்த மாணவர் தொடர்ந்து ஆர்வத்துடன் படித்துவந்தார். திருவனந்தபுரத்தில் தேசியக்கல்வியைப் புகட்டும் ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்திவந்த அம்மாணவருடைய மாமாவான மார்த்தாண்டன் தம்பியின் நெருக்கத்தால் தீண்டாமை என்னும் சமூகத்தீமையைப்பற்றி ஏற்கனவே அவர் கொண்டிருந்த எண்ணம் காந்தியடிகளின் கட்டுரையைப் படித்ததைத் தொடர்ந்து ஆழமாக வேரூன்றியது.

ஜெயப்பிரகாஷ் நாராயண் : நம்பிக்கையின் சின்னம்

     13.04.1919 அன்று ஜாலியன்வாலாபாக் என்னும் இடத்தில் கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை காரணமின்றி சுட்டுவீழ்த்திய ஜெனரல் மைக்கேல் டயர் என்னும் ஆங்கில அதிகாரி தண்டிக்கப்படவேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை எழுப்பியது. ஆனால் பெயரளவில் மட்டும் கண்துடைப்பாக ஒரு விசாரணையை நிகழ்த்திய அரசு 1920இல் எல்லாக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் டயரை விடுவித்துவிட்டது. இதையொட்டி 1920இல் செப்டம்பர் மாதத்தில் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் மாநாடு அந்த விடுதலையை கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தது. தொடர்ந்து நாடு சுயராஜ்ஜியம் அடைந்தால் மட்டுமே   எதிர்காலத்தில் இத்தகு குற்றங்கள் மீண்டும் நிகழாதவகையில் தடுக்கமுடியும் என்றும் நாட்டின் கெளரவத்தை நிலைநாட்டமுடியும் என்றும் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார் காந்தியடிகள்.

Sunday 12 September 2021

பேறு பெற்ற இலைகள் - புத்தக அறிமுகம்

 

     கேட்டுக்கேட்டுப் பழகிய கைவிடப்பட்டவர்களின் குரலாகவோ, ஏமாந்தவர்களின் குமுறலாகவோ, சீற்றம் கொண்டவர்களின் அறைகூவலாகவோ, சாபமாகவோ, அழுகையாகவோ இல்லாத ஒரு புத்தம்புதிய குரலாக இருக்கிறது,   விஜயானந்தலட்சுமியின் கவிதைக்குரல். அது உடன்பாட்டு வெயில்தொகுதியெங்கும் குயிலோசையென சீராக ஒலித்தபடி இருக்கிறது. அந்தக் குரல்  வாழ்க்கையின் வெவ்வேறு பக்கங்களில் கண்ட காட்சிகளை முன்வைக்கிறது. தான் அடைந்த பரவசத்தைப் பகிர்ந்துகொள்கிறது. தனக்குள் எழும் பெருமூச்சையும் கேள்விகளையும் முன்வைக்கிறது. குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் கூட எடுத்துரைக்கிறது. கச்சிதமான கவிமொழியில் அனைத்தையும் நவீனவாழ்வின் தரிசனங்களாகவும் சாரமாகவும் உருமாற்றிக் காட்டுகிறது. அதுவே விஜயானந்தலட்சுமியின் முதன்மைச்சிறப்பு. சங்கச்செய்யுளின் சாயலில் மிக எளிமையான அழகுடன் சித்தரிக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் விஜயானந்தலட்சுமியின் தன்னம்பிக்கையையும் ஆளுமையையும் தேடலையும் பார்க்கமுடிகிறது. நவீன தமிழ்க்கவிதையுலகில்  சிறப்பானதோர் இடம் விஜயானந்தலட்சுமிக்காகக் காத்திருக்கிறது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

சித்தலிங்கையாவுக்கு அஞ்சலி

 

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழிலக்கியச் சூழலில் தலித் இலக்கியச் செயல்பாடுகள் தீவிரமடையத் தொடங்கின. அதைப்பற்றிய உரையாடல்கள் எல்லா இடங்களிலும் நிகழ்ந்தன. 1991இல் கோமல் சுவாமிநாதனைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு வெளியான சுபமங்களா பல எழுத்தாளர்களுடைய விரிவான நேர்காணல்களைப் பிரசுரித்தது. எழுத்தாளர்களை ஒரு கருத்தியல் தரப்பாக தமிழ்ச்சூழலில் அந்த நேர்காணல்கள் முன்னிறுத்தின. வாசிப்புப்பழக்கம், எழுத்துக்கான களத்தேர்வு, மொழியின் பயன்பாடு, இளமைக்கால வாழ்க்கை, பிடித்த படைப்புகள், பிடித்த ஆளுமைகள் சார்ந்து ஒவ்வொரு எழுத்தாளரிடமும் கேட்கப்பட்ட கேள்விப்பட்டியல் வெவ்வேறு விதமாக இருந்தாலும் தலித் இலக்கியம் பற்றிய ஒரு கேள்வி மட்டும் அந்த நேர்காணல்களில் பொதுவாக இருந்தது. தலித் இலக்கியம் பற்றிய எழுத்தாளர்களின் எண்ணங்களைத் தொகுத்தளிப்பதன் வழியாக அதைப்பற்றிய வரையறையை செழுமைப்படுத்த முடியும் என்று கோமல் நம்பினார். மராட்டிய மொழியில் தலித் இலக்கியம், கன்னட மொழியில் தலித் இலக்கியம் போன்ற கட்டுரைகளை, அம்மொழியுடன் தொடர்புடைய  நண்பர்கள் வழியாகப் பெற்று அவ்வப்போது சுபமங்களாவில் வெளியிட்டார். நாளடைவில் இலக்கியச் சந்திப்புகளில் தலித் இலக்கியம் பற்றிய உரையாடல் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியது.

Thursday 2 September 2021

திரை - சிறுகதை

 சூரியன் மறைந்து சரியத் தொடங்கிய வேளையில் காலணிகள் அழுத்தமாகப் பதிந்து நெருங்கி வரும் ஓசை கேட்டது. தலையைத் திருப்பி ஓசை வந்த திசையில் பார்க்க முயன்றான் துரியோதனன். பிடறி நரம்புகள் முறுக்கிக் கொண்டதில் வலி தாளாமல் உதட்டைக் கடித்தான். அதற்குள் நெருங்கி வந்துவிட்ட அஸ்வத்தாமன் அவன் தோள்களைப் பற்றினான். வலியில் சரிந்த துரியோதனனின் கண்களைச் சில கணங்களுக்கு மேல் பார்க்க இயலாமல் பதற்றத்துடன் துரியோதனாஎன்றபடி தரையில் உட்கார்ந்தான். புன்னகையுடன் நீ பிழைத்திருக்கிறாயா அஸ்வத்தாமா?” என்று கேட்டான் துரியோதனன்.

 

பிரிவு - சிறுகதை


சுகர் தன்னைவிட்டுப் பிரிவது உறுதி என்று புலப்படத் தொடங்கியதும் மனம் நொறுங்கிய வியாசர் கொழுகொம்பற்ற கொடிபோலத் துவண்டு சரஸ்வதி நதிக்கரையில் உட்கார்ந்திருந்தார். அவர் கண்ணுக்குத் தெரிந்ததெல்லாம் எங்கெங்கும் கவிந்திருந்த இருள் மட்டும்தான். நதிக்கு மறுபுறம் மலைச்சிகரமொன்று நின்றிருந்தது. வாழைப்பூமொக்கு போன்ற அதன் உச்சியின் பின்புறத்திலிருந்து நிலா ஊர்ந்து வரத் தொடங்கியது. அதற்கு முந்தைய தருணம் வரைக்கும் சிகரத்தின் மடியிலும் தோளிலும் விளையாடிய நிலா அது. இப்போது சிகரத்தைத் துறந்து மேகவெளியில் உருளத் தொடங்கியது. வியாசருக்கு மறுபடியும் சுகரின் ஞாபகம் வந்தது. அவனும் பிரிந்துவிட்டால் இந்தப் பரந்த உலகில் தான் மட்டும் தனிமையில் வீசப்பட்டுவிடுவோம் என்ற பிரமை எழுந்தது. சுகரைப்பற்றி இனி நினைக்கக்கூடாது என்று அந்நொடி முடிவு செய்தார் வியாசர். மறுநொடியே சுகரின் முகம், சுகரின் சிரிப்பு, சுகரின் பிஞ்சுக் கை, சுகரின் ஒளிவீசும் கண்கள் என அடுத்தடுத்து எல்லாமே மனத்தில் விரிந்தன. அவனைப்பற்றிய நினைவுகள் அவரைப் பாடாய்ப்படுத்தின. அவன் நாளை தன்னுடன் இருக்கமாட்டான். தன்னிடமிருந்து விலகி நெடுந்தூரம் சென்று விடுவான் என்கிற ஒரு குரல் சதாநேரமும் ஒலித்தபடி இருந்தது. அக்குரலை மறுத்து அவனை எப்படியும் தடுத்துவிடலாம் என்று அவர் மனம் நம்பியது. இது எல்லாம் கனவு. அவன் பிரியப் போவதும் இல்லை. நான் கெஞ்சப் போவதும் இல்லை என்றெல்லாம் இருந்தால் எவ்வளவு நல்லது என்று நினைத்துப் பார்த்தார் வியாசர்.