Home

Sunday 26 June 2022

வாசிப்பு என்னும் வரம்

 

மதுரைக்கு அருகில் மேலூருக்கு அருகிலிருக்கும் உலநாதபுரம் என்னும் சிற்றூரில் பிறந்து வளர்ந்தவர் வேலாயுதம். வறுமை சூழ்ந்த அந்தக் காலத்து வாழ்க்கை அவரை பள்ளியிறுதிவரைக்கும் மட்டுமே படிப்பதற்கு அனுமதித்தது. படிப்பைத் தொடரமுடியாவிட்டாலும் மனம் தளராமல் வெவ்வேறு கடைகளில் சிப்பந்தியாகப் பணிபுரிந்து வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டார். பணிவாய்ப்புகள் அவரை கோவைக்குக் குடிபெயரவைத்தன. பணிகள் வழியாகக் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் சொந்தமாக குறைந்த முதலீட்டில் பல்பொருள் அங்காடியொன்றைத் திறந்தார். விற்பனைப்பொருட்களுக்கு இடையில் கடையின் ஓரமாக அலமாரித்தட்டுகளில் புத்தகங்களையும் அடுக்கி விற்கத் தொடங்கினார். மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகங்களை மட்டுமே கடைமுழுதும் நிரப்பி விற்பனைசெய்யும் விற்பனையாளராக மாறினார். நாளடைவில் எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிடும் சிறந்த பதிப்பாசிரியராக உயர்ந்தார். எழுத்தாளர்களோடும் வாசகர்களோடும் அவருக்கு வாய்த்த நட்பையும் நெருக்கத்தையும் பயன்படுத்திக்கொண்டு ஆண்டுதோறும் வாசகர் திருவிழாக்களை நடத்தினார். வெவ்வேறு ஆளுமைகளின் பெயரால் விருதுகளை நிறுவி ஆண்டுதோறும் திருவிழாவைப்போல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மிகச்சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கிப் பாராட்டினார்.

தேனி என்னும் தேனடை

 

01.01.1997 அன்று மதுரையிலிருந்து பிரிக்கப்பட்டு தேனி மாவட்டம் உருவானது. தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர், சின்னமனூர் போன்ற பல ஊர்கள் அந்த மாவட்டத்தில் உள்ளன. அனைத்தும் காடும் மலையும் சூழ்ந்த ஊர்கள். முல்லைப் பெரியாறு அணை, சோத்துப்பாறை அணை, மேகமலை, வெள்ளிமலை, போடிமெட்டு, கும்பக்கரை அருவி, சுருளி நீர்வீழ்ச்சி போன்ற இயற்கைக்காட்சிகள் நிறைந்த இடங்கள் இங்கே நிறைந்துள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வீசும் காற்றைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் காற்றாலைகள் அடிவாரமெங்கும் நிறைந்துள்ளன.

Monday 20 June 2022

பெரும்புதிர்களின் இடையில் : லங்கேஷ் சிறுகதைகள்

  

கன்னடத்தின் சிறந்த நவீன சிறுகதையாசிரியர்களுள் ஒருவர் லங்கேஷ். உளவியலின் துணையோடு லங்கேஷ் தன் சிறுகதைகளில் நவீனத்தன்மையைப் புகுத்தினார். எண்ணற்ற புறஉலக நடவடிக்கைகளுக்கும் ஆழ்மனம் மட்டுமே அறியவல்ல அகஎழுச்சிகளுக்கும் இடையிலான இணைப்பு என்பது ஒரு கால்வாய்ப்பாலம்போல வெளிப்படையானதல்ல, ஒற்றைத்தன்மை உடையதுமல்ல. பலநூறு புள்ளிகளிலிருந்து கிளம்பி ஒரு புள்ளியைநோக்கி நீளும் பலநூறு கோடுகள்போல ஏராளமான இணைப்புகளைக் கொண்டதாகும். ஒரே சமயத்தில் வரையறை செய்யமுடிகிற ஒன்றாகவும் துல்லியமான வரையறையை வழங்க இயலாமல் பல்வேறு சாத்தியப்பாடுகளைநோக்கித் தாவித்தாவிச் செல்கிற ஒன்றாகவும் அந்த இணைப்பு விசித்திரத் தன்மையோடு இருக்கிறது. இந்த விசித்திரத்தன்மை நவீன சிறுகதைகளுக்கு வழங்கக்கூடிய பார்வையை முழுஅளவில் பயன்படுத்திக் கொண்டவர் என்று லங்கேஷைச் சுட்டிக்காட்டமுடியும்.

Sunday 19 June 2022

கலைக்கு ஓர் அர்த்தம்

 

கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் வேலைவாய்ப்பின் காரணமாக சேலத்திலிருந்து சென்னையை நோக்கி வந்த தலைமுறையைச் சேர்ந்தவர் விட்டல்ராவ். ஆனால் வேலைக்கும் அப்பால் கலையிலக்கிய வான்வெளியில் சிறகடித்துப் பறக்கும் விழைவும் விசையும் அவர் மனத்தில் நிறைந்திருந்த காரணத்தால், ஒருபுறம் வேலை பார்த்தபடியே மறுபுறத்தில் அவர் ஓவியக்கல்லூரியில் சேர்ந்து ஓவியம் பயிலத் தொடங்கினார். ஓவியம் அவருடைய விருப்பத்துக்குரிய கலைத்துறைகளில் முதன்மையானதாக இருந்தது.

போற்றத்தக்க பெருவாழ்வு

 

அந்தக் காலத்தில் கதை கேட்கும் பேரக்குழந்தைகளிடம் “நான் வாழ்ந்த கதையைச் சொல்லவா, வளர்ந்த கதையைச் சொல்லவா?” என்று சற்றே செல்லமான சலிப்போடுதான் பெரியவர்கள் தொடங்குவார்கள். பிறகு சுவரோடு ஒட்டிச் சாய்ந்தபடி காலை நீட்டி உட்கார்ந்துவிட்டால், கதைகள் அருவியாகக் கொட்டத் தொடங்கிவிடும். கால்மீது படுத்துக்கொண்டிருக்கும் பேரனின் முதுகைத் தட்டியபடியோ அல்லது தோள்மீது சாய்ந்திருக்கும் பேத்தியின் காலைத் தட்டியபடியோ ஒன்றையடுத்து ஒன்றென கதைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில் அவர்கள் கண்ட ஒவ்வொரு அனுபவத்துக்கும் காலும் கையும் இறக்கையையும் ஒட்டி கதைகளாக மாற்றிவிடுவார்கள். விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடமும் அத்தகு கதைகள் இருக்கும். வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடமும் அத்தகு கதைகள் இருக்கும். கதைகள் இல்லாத மனிதனே இல்லை.

Saturday 11 June 2022

வாழ்விற்கு நெருக்கமான கதைகள்

  

தமிழ்ச்சூழலில் இலக்கிய மதிப்பீடுகளுக்கு வித்திட்டவர் க.நா.சு. இலக்கிய விமர்சகராக மட்டுமின்றி, மிகமுக்கியமான படைப்பாளியாகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். அவர் எழுதிய பொய்த்தேவு தமிழின் முதன்மை நாவல்களில் ஒன்று. க.நா.சு.வின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருடைய நாவல்களும் சிறுகதைத்தொகுதிகளும் மொழிபெயர்ப்புகளும் ஒவ்வொன்றாக வெளிவந்துள்ளன. புதிய தலைமுறை வாசகர்கள் அவற்றை விரும்பிப் படிக்கிறார்கள். இச்சூழலில் க.நா.சு. எழுதி, எத்தொகுதியிலும் சேர்க்கப்படாத சிறுகதைகளைத் தேடியெடுத்து விசிறி என்னும் தலைப்பில் ஒரு தொகுதியாகக் கொண்டுவந்திருக்கிறார் ராணிதிலக். அவருடைய தேடலுக்கு தமிழ்வாசக உலகம் கடமைப்பட்டுள்ளது.

வ.சுப்பையா : எளிமையும் வலிமையும்

 

வடமாநிலங்களில் கதர்ப்பிரச்சாரப் பயணத்தை முடித்துக்கொண்டு தென்னகத்துக்கு வந்த காந்தியடிகள் கர்நாடகம் வழியாக தமிழகத்துக்குள் வந்தார். ஒசூர், கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் வழியாகச் சென்னைக்குச் சென்று, பிறகு அங்கிருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் பயணம் செய்து 10.09.1927 அன்று அதிகாலை 03.30 மணியளவில் கடலூருக்கு வந்துசேர்ந்தார். நகராட்சி மன்ற உறுப்பினர்கள் காந்தியடிகளை வரவேற்று அழைத்துச் சென்றனர். முதலில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பங்களாவிலும் பிறகு திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த முத்தையா செட்டியாரின் இல்லத்திலும் காந்தியடிகள் தங்கி ஓய்வெடுத்தார்.

படிமமும் பார்வையும் : எஸ்.வைத்தீஸ்வரன் கவிதைகள்

 

 ஒரு கவிதையைப் படிக்கும்போது  அக்கவிதையில்  காண நேர்கிற

அபூர்வமான சொல்லிணைவுகளும் படிமங்களும் படிப்பவர் மனத்

தில் உடனடியாக அழுத்தமாக  இடம்பெற்றுவிடுகின்றன.அபூர்வ

மான சொல்லிணைவுகள் ஒருபோதும் திட்டமிட்டு உருவாக்

கப் படமுடியாதவை.

Wednesday 8 June 2022

அன்னபூரணி மெஸ் - சிறுகதை

  

”வணக்கம். வாங்கவாங்க. நான்தான் ராஜாராமன். இதான் கடைசி பந்தி சார். இதோ இப்ப முடிஞ்சிடும். அதுக்கப்பறமா ரூம பார்க்கலாம். ஒரு பத்து நிமிஷம் அப்படி ஃபேன் கீழ காத்தாட உக்காருங்க.  நல்ல வெயில்ல வந்துருக்கிங்க. வேர்த்துவேர்த்து ஊத்துதே” என்று சொன்னவரின் முகத்தைப் பார்த்ததுமே தனக்கு இந்த இடம் உறுதியாகப் பொருந்திவரும் என்ற நம்பிக்கை பாலகுருவின் மனத்தில் பிறந்தது. ஆனால் எப்படி அந்த எண்ணம் வந்தது என்று தெரியவில்லை. அவனுடைய குரல் அல்லது உடல்மொழி என ஏதோ ஒன்று அதை விதைத்துவிட்டது.

Monday 6 June 2022

திருத்தி எழுதப்பட்ட வரலாறு - புத்தக அறிமுகக்கட்டுரை

   

ஒரு பழைய வரலாற்றுச் செய்தி. முதலாம் நூற்றாண்டில் தோன்றிய காளிதாசர் சமஸ்கிருத மொழியில்  சாகுந்தலம், மேகதூதம் போன்ற மிகமுக்கியமான நாடகங்களை எழுதியவர். முதல் நாடக ஆசிரியர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர். ஆனால் அவருடைய காலத்துக்கு முன்பாகவே பஸன் என்னும் நாடக ஆசிரியர் வாழ்ந்தார். அவருடைய நாடகங்களுக்கு அவர் வாழ்ந்த காலத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. எனினும் பஸன் எழுதிய எந்தப் பிரதியும் கிடைக்கவில்லை. காவ்யமீமாம்சையில் பஸனைப்பற்றிய ஒரு சிறுகுறிப்பு மட்டுமே கிடைத்தது. அந்தக் குறிப்பை மட்டும் வைத்துக்கொண்டு பஸனுக்கு முதல் நாடக ஆசிரியர் என்னும் புகழை அளிக்க ஆய்வாளர்கள் விரும்பவில்லை. ஆதாரமான நாடகப்பிரதி எதுவும் இல்லாத நிலையில் பஸனை யாராலும் எந்த அவையிலும் முன்வைக்க இயலவில்லை.

புதிய சாத்தியங்களின் திசையில் - புத்தக அறிமுகக்கட்டுரை

  

கலைப்படைப்புகள் என்பவை, வாழ்வில் ஒரு சின்னஞ்சிறிய தருணத்தை காலமெல்லாம் ஆழ்மனத்தில் எண்ணற்ற திசைகளில் விரித்துவிரித்து, அந்த உணர்வில் என்றென்றும் திளைக்கவைக்கின்றன.  மெல்ல மெல்ல அவை படிமங்களாக உருமாறி ஆழ்மனத்தில் புதைந்துவிடுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட பல சங்கப்பாடல்கள் அத்தகு தருணங்களால் நிறைந்தவை. இன்று அந்த இடத்தை கவிதைகளும் சிறுகதைகளும் நாவல்களும் உருவாகி நிரப்பிக்கொண்டிருக்கின்றன. கவிதையில் அத்தருணம் ஒற்றை வைரக்கல்லாக அமைந்திருக்கிறது. சிறுகதையில் அத்தருணம் ஓர் அணிகலனில் பதிக்கப்பட்ட வைரக்கல்லாக ஒளிவீசுகிறது. நாவலில் அதே தருணம் ஒரு பெரிய நகைப்பெட்டிக்குள் மின்னும் வைரநகையாக சுடர்விடுகிறது.