ஒரு தொலைபேசி நிலையம் நகரத்தில் வெவ்வேறு மூலைகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மனிதர்களுடைய வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் தொலைபேசிகளை ஒருங்கிணைத்து வைத்திருக்கிறது. எண்ணற்ற கம்பங்கள் வழியாக நீண்டு செல்லும் கம்பிகள் வழியாகவும் நிலத்துக்கடியில் புதைக்கப்பட்ட கேபிள் வழியாகவும் அந்த ஒருங்கிணைப்பு நிகழ்கிறது.
குறிப்பிட்ட தொலைவு வரைக்கும் கேபிள், குறிப்பிட்ட தொலைவு வரைக்கும் கம்பி என்பதுதான் எளிய கணக்கு. அவ்விணைப்புகளைப் பராமரிப்பதற்கு மூன்று விதமான ஊழியர்களை தொலைபேசித்துறை வைத்திருக்கிறது. நிலைய வளாகத்திலேயே ஏற்படும் பழுதுகளைச் சரிசெய்யும் தொழில்நுட்பம் தெரிந்தவர் முதல் ஊழியர். கம்பிகளில் ஏற்படும் பழுதுகளைச் சரிசெய்யும் தொழில்நுட்பம் தெரிந்தவர் இரண்டாவது ஊழியர். கேபிள்களில் ஏற்படும் பழுதுகளைச் சரிசெய்யும் தொழில்நுட்பம் தெரிந்தவர் மூன்றாவது ஊழியர். இவர்கள் துறையின் கீழ்நிலை ஊழியர்கள். இவர்களை ஒருங்கிணைத்து, அவ்வப்போது இணைப்புகளில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்து பராமரிக்கும் பணிகளில் சின்னச்சின்ன அதிகாரிகள் முதல் பெரிய அதிகாரிகள் வரைக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் மேல்நிலை ஊழியர்கள்.
இவ்விரு பிரிவினரையும் சாராது, துறையின் முதுகெலும்பாக பணிபுரியும் சிலர் உண்டு. அவர்கள் இடைநிலை ஊழியர்கள். வாடிக்கையாளருக்கு என்ன எண் வேண்டும் என்று விசாரித்துத் தெரிந்துகொண்டு அந்த எண்ணோடு இணைப்பை அவர்களே ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். ஒவ்வொருவரும் தானே தனக்குத் தேவையான எண்ணை டயல் செய்துகொள்ளும் வசதியைக் கொண்ட கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டதும், அயலூர்களிலும் அயல்நாட்டிலும் தேவைப்படும் எண்ணுக்குரியவரை இணைக்கும் சேவையை அளிக்கிறார்கள். பொதுமக்களின் பார்வையில் தென்படாலேயே இப்படி பற்பலவிதமான சேவைகளை அளிப்பவர்கள் இடைநிலை ஊழியர்கள்.
விட்டல்ராவ் தொலைபேசித் துறையில் முப்பத்தைந்து
ஆண்டுகளுக்கும் மேலாக இடைநிலை ஊழியராகப் பணிபுரிந்திருக்கிறார். அதனால் கீழ்நிலை ஊழியர்களோடும்
மேல்நிலை ஊழியர்களோடும் சேர்ந்து பழகும் வாய்ப்பை அவர் பெற்றிருக்கிறார். பணிக்காலத்தில்
அவர்களுடைய நெருக்கத்தின் விளைவாக அவர் பெற்ற அனுபவங்கள் ஏராளமானவை. அவற்றில் தம் நினைவில்
பதிந்திருக்கும் ஒருசில அனுபவங்களை மட்டும் ’தொலைபேசி நாட்கள்’ என்னும் தலைப்பில் அம்ருதா
இதழில் இருபத்தைந்து மாதங்களாக ஒரு தொடராக எழுதினார் விட்டல்ராவ். அந்தத் தொடரை அம்ருதா
பதிப்பகமே இப்போது நூலாக வெளியிட்டிருக்கிறது.
பணிக்காலத்தில் சந்தித்த மனிதர்களைப்பற்றிய
சொற்சித்திரங்கள் என்னும் நிலைக்கு அப்பால், சென்னையில் முதன்முதலாக தொலைபேசி வந்த
வரலாறு, ஒரே ஒரு தொலைபேசி நிலையம் என்னும் நிலை மாறி சென்னையில் முக்கியமான இடங்களில்
பல்வேறு தொலைபேசி நிலையங்கள் உருவாகி நிலைபெற்ற வரலாறு, அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ற
வகையில் தொலைபேசி இயங்கும் விதமும் மாறி வந்த வரலாறு என பல்வேறு சமகால மாற்றங்களைப்
பற்றிய கோட்டுச்சித்திரங்களையும் இணைத்திருக்கிறார். மாற்றங்களின் ஊடாக ஊழியர்களின்
வாழ்க்கை கடந்து செல்லும் காட்சிகளை இத்தொகுதியை வாசிக்கும்போது உணரமுடிகிறது. ஒரு
கோணத்தில், இத்தொகுதி எவ்விதமான திட்டங்களும் இல்லாமலேயே விட்டல்ராவின் தன்வரலாறாக மாறிவிட்டது என்று சொல்லலாம்.
தொலைபேசி நிலையத்தில் ஒரு காலத்தில்
ரிங்கர் என்னும் கருவி இயங்கிவந்தது. அந்த நிலையத்தோடு தொடர்புடைய அனைத்து எண்களுக்கும்
ரிங் டோனை அக்கருவிதான் அனுப்பிவைக்கும். மனிதர்களின் இதயத்துடிப்புக்கு இணையானது இந்த
ரிங் டோன். ஒருவருடைய தொலைபேசியில் ரிங் டோன் இல்லையென்றால், அது வேலைசெய்யவில்லை என்பதன்
அடையாளமாகும். ஒரு குறிப்பிட்ட எண் வேலை செய்யவில்லை என்றால், அதை இன்னொரு எண் வழியாக
தொலைபேசி நிலையத்தை அழைத்து புகார் செய்யலாம். சரிசெய்து கொள்வதற்கு அது ஒரு வழி. ஒரு
தொலைபேசி நிலையத்தைச் சேர்ந்த எல்லா எண்களும் ஒரே சமயத்தில் ரிங் டோன் இல்லாமல் அமைதியாகி
விட்டன என்றால் என்ன செய்யமுடியும்? அப்படி ஒரு நிலையை கற்பனை கூட செய்யமுடியாது. ஆனால்
தன் பணிக்கால அனுபவத்தில் அப்படி ஒரு தருணத்தை எதிர்கொண்ட நாளை ஒரு அத்தியாயத்தில்
எழுதியிருக்கிறார் விட்டல்ராவ். இத்தொகுப்பின் மிகமுக்கியமான கட்டுரை.
பரங்கிமலை தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த
நேரம். இரவு நேர வேலைக்கு வருபவர் அழைப்புகளே அற்றுப்போகும் ஒரு தருணத்துக்குக் காத்திருந்து
ரிங்கரின் இயக்கத்தை நிறுத்தி துடைத்து ஒழுங்குபடுத்தி அதை மீண்டும் இயக்கத்துக்குக்
கொண்டுவரவேண்டும். அது நிரந்தர விதி. ரிங்கர் சுழலும்போது ஒருபோதும் கைவைக்கக் கூடாது.
நிறுத்தப்பட்ட கால அளவு குறித்து அலுவலக ஆவண ஏட்டில் குறித்துவைக்கவேண்டும். அதுவும்
ஒரு விதி.
ஒருநாள் இரவு தொலைபேசி நிலையத்துக்கு
அருகிலுள்ள பாழடைந்த கட்டடமொன்றில் தெலுங்குப்படத்துக்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது.
படப்பிடிப்பு காணும் ஆவலில் விட்டல்ராவும் காவலரும் சென்றுவிடுகின்றனர். அரைகுறையாக
வேலை தெரிந்த ஒரே ஆள் நிலையத்துக்குள் இருக்கிறார். எல்லாவற்றையும் தான் பார்த்துக்கொள்வதாக
தைரியமூட்டி, அவர்கள் இருவரையும் படப்பிடிப்பைப் பார்க்க அனுப்பி வைத்துவிடுகிறார்.
நள்ளிரவில் ரிங்கரைத் துடைக்கச் செல்கிறார்
அந்த ஊழியர். முன்னனுபவம் இல்லாத காரணத்தால், அது சுழலும்போதே வெள்ளைத் துணியை எடுத்து
துடைக்கிறார். துரதிருஷ்டவசமாக, துணி இயந்திரத்தில் சிக்கிக்கொள்ள ரிங்கர் தன் இயக்கத்தை
நிறுத்திவிடுகிறது. துணியை எடுக்க வரவில்லை
என்றதும் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு மற்ற வேலையைப் பார்க்கச் சென்றுவிடுகிறார்
அவர். அதன் விபரீத விளைவுகள் எதுவும் அவருக்குத் தெரியவில்லை.
பரங்கிமலை வட்டாரமே தொடர்பு வளையத்திலிருந்து
வெளியே போய்விட்டது. புகார்கள் பறக்கின்றன. சின்ன அதிகாரி முதல் பெரிய அதிகாரிகள் வரை
தத்தம் வாகனங்களில் தொலைபேசி நிலையத்தை நோக்கி வருகிறார்கள். பூட்டியிருக்கும் வாசலைப்
பார்த்து திகைக்கிறார்கள். எப்படியோ மதிலைக் கடந்து நிலையத்துக்குள் சென்று பார்த்ததும்
உண்மை புரிகிறது. அவர்களில் வேலை தெரிந்த ஒருவர் அக்கணமே துரிதமாக செயல்பட்டு சிக்கிக்கொண்ட
துணியை விடுவித்து எடுக்கிறார். ரிங்கர் மீண்டும் இயங்கத் தொடங்குகிறது. எல்லோரும்
நிம்மதியாக மூச்சு விடுகிறார்கள். படப்பிடிப்பைக் காண வெளியே சென்றிருந்தவர்கள் திரும்பி
வந்ததும் விசாரணைக்கு உள்ளாகிறார்கள். அவர்களுடைய பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
எவ்விதமான தண்டனையும் இல்லாமல் எச்சரிக்கையோடு அந்த விசாரணை முடிவடைகிறது. ஒரு சிறுகதைக்கே உரிய விவரணைகளோடும் திருப்பங்களோடும்
இக்கட்டுரையை எழுதியிருக்கிறார் விட்டல்ராவ்.
’ஒரு மரணமும் ஒரு விருதும்’ என்னும்
தலைப்பில் அமைந்த கட்டுரையில் இணைபிரியாத இரு நண்பர்களைப்பற்றிய சித்திரத்தை எழுதியிருக்கிறார்
விட்டல்ராவ். இருவரும் லைன்மேன் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பெயர் ரவிக்கண்ணன்.
இன்னொருவர் சடகோபன். அடுத்தடுத்த கிராமப்பகுதிகளில் வசிப்பவர்கள். விவசாயக் குடும்பப்
பின்னணியை உடையவர்கள். இருவரும் நேர்மையும் அர்ப்பணிப்புணர்வும் மிக்கவர்கள்.
மெக்கானிக் போட்டித் தேர்வு எழுதி வெற்றி
பெற்ற ரவிக்கண்ணன் புதிய பணிக்கான உத்தரவுக்காகக் காத்திருந்தார். ஒரு நாள் நிறைய புகார்களை
சரிசெய்யும் வேலை சடகோபனுக்கு அளிக்கப்பட்டது. பரங்கிமலை, பட்ரோடு, முகலிவாக்கம், நந்தம்பாக்கம்,
மணப்பாக்கம் என பல பகுதிகளில் அப்பழுதுகள் விரவிக் கிடந்தன. அன்று ரவிக்கண்ணனுக்கு விடுப்புநாள். ஆயினும் நண்பரோடு
ஒவ்வொரு இடமாகச் சென்று அவரும் பழுது நீக்கத்தில் உதவி புரிந்தார். ஒரு குறிப்பிட்ட
எண்ணின் பழுதுக்காக சடகோபன் நாற்பத்தொன்பது கம்பங்களில் ஏறி இறங்கிவிட்டார். பழுதுக்கான புள்ளியைக் கண்டுபிடிக்க
முடியவில்லை. ஐம்பதாவது கம்பத்தில் ஏற முனைந்தவரை உரிமையோடு தடுத்து நிறுத்திய ரவிக்கண்ணன்
கம்பத்தில் ஏறிவிட்டார்.
அந்தக் கம்பத்தில்தான் பழுது இருக்கிறது
என்பதையும் ரவிக்கண்ணன் கண்டுபிடித்துவிட்டார். வேலையை நல்லபடியாக முடித்துவிட்டால்
வீட்டுக்குக் கிளம்பிவிடலாம் என்ற எண்ணத்தில் உற்சாகத்தோடு கீழே நின்றிருக்கும் சடகோபனிடம்
கட்டிங் பிளையரை வீசும்படி கேட்டார். சடகோபன் வீசிய பிளையரை லாவகமாகப் பிடித்துக்கொண்டு
நிமிர்ந்த வேகத்தில் அந்த வழியாகச் செல்லும் உயர்வோல்டேஜ் திறன் கொண்ட மின்சாரக்கம்பியில்
அவர் கை உரசி விட்டது. அக்கணமே அங்கிருந்து தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்துவிட்டார்.
ஆறுமாத காலம் மருத்துவமனையில் வைத்து மருத்துவம் அளித்துவந்த போதும் அவரைக் காப்பாற்ற
இயலவில்லை. இறந்துவிட்டார். மகன் மெக்கானிக்காக வருவான் என எதிர்பார்த்திருந்த அவன்
குடும்பத்தின் கனவு கரைந்துவிட்டது.
தன் நெருங்கிய நண்பனின் மரணத்துக்குத்
தானே காரணமாகிவிட்டோமே என்னும் குற்ற உணர்வில் வாழ்நாள் முழுதும் கண்ணீர் விட்டபடி
சந்நியாசி கோலத்தில் வாழ்ந்தார் சடகோபன். மெக்கானிக் பதவிக்கான பயிற்சி ஆணை அவரைத்
தேடி வந்தபோதும், தன் நண்பனுக்குக் கிட்டாத அந்த வாய்ப்பு தனக்கும் வேண்டாமென ஒதுக்கி
கடைசி வரைக்கும் லைன்மேனாகவே தொடர்ந்தார். அவருடைய நேர்மையையும் வேலை சார்ந்த அர்ப்பணிப்புணர்வையும்
மெச்சி தொலைபேசித்துறை அவருக்கு தேசத்தின் மிக உயர்ந்த விருதான சஞ்சார் ஸ்ரீ என்னும்
விருதை அறிவித்து கெளரவித்தது. குடியரசுத்தலைவர் அந்த விருதை அவருக்கு வழங்கினார்.
ரவிக்கண்ணன், சடகோபன் போன்ற மாணிக்கங்கள்
நிறைந்த அதே உலகத்தில்தான் பென்னிஸ், கிருஷ்ணன், கன்னிப்பன், செளகிதார் கண்ணன், சாரங்கபாணி,
போன் இன்ஸ்பெக்டர் எஸ்கே போன்ற கூழாங்கற்களும் துறையில் நிறைந்திருக்கிறார்கள். இரு
பிரிவினர் சார்ந்தும் தாம் பெற்ற அனுபவங்களை ஒவ்வொரு கட்டுரையிலும் முன்வைத்திருக்கிறார்
விட்டல்ராவ். மானுட வாழ்வில் நாம் காணும் வெவ்வேறு
கதாபாத்திரங்களை தொலைபேசி நிலையம் என்னும் ஒரு கூரையின் கிழேயே பார்க்கும் வாய்ப்பு
விட்டல்ராவுக்குக் கிடைத்திருக்கிறது. அந்த வாழ்நாள் அனுபவங்களை இக்கட்டுரைகள் வழியாக
நம்மிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் விட்டல்ராவ்.
பென்னிஸ் ஒரு கடைநிலை ஊழியர். வேலை
செய்யத் தெரியாதவர். தொலைபேசித்துறையில் அதிகாரியாக வேலை செய்வதாகப் பொய்சொல்லி படிப்பறிவில்லாத பணக்கார வீட்டிலிருந்து
பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வந்தவர். தன்னிடம் இருந்த பணத்தை தொலைபேசி ஊழியர்களுக்கு
கடன் கொடுத்து வட்டி வாங்கி வளர்ந்தவர். அது சென்னையில் குதிரைப்பந்தயம் நடந்துகொண்டிருந்த
காலம். ஆண்களும் பெண்களும் பந்தயத்தைக் காணவும் பணம் வைத்து சூதாடவும் வெறிபிடித்தவர்கள்
போல சென்றுவந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு ஆபத்துக்கு உதவுவதைப்போல பணத்தைக் கொடுத்துவிட்டு,
அவர்களுக்கு சம்பளம் வரும் நாளில் பக்கத்திலேயே நின்று வட்டியோடு வசூல் செய்துகொண்டு
செல்வார் பென்னிஸ். அவர்கள் ஏதேனும் அலுவலகத்துக்கு லோன் விண்ணப்பித்திருந்தால் அவர்களிடமிருந்து
‘ஆத்தரைசேஷன் கடிதம்’ வாங்கிச் சென்று அந்தப் பணத்தை அவரே வாங்கிக்கொள்வதும் உண்டு.
ஒருமுறை அவரிடம் கடன் வாங்கியிருந்த
பட்டாபி என்றொரு ஊழியர் திடீரென இறந்துவிட்டார். ஏறத்தாழ ஐயாயிரம் ரூபாய் வரைக்கும்
பாக்கி இருந்தது. பணத்தை வசூல் செய்ய வழி தெரியாத பென்னிஸ் மரண வீட்டுக்கு வந்து அவன்
மனைவியிடம் சில ஆத்தரைசேஷன் கடிதங்களை வாங்கிவைத்துக்கொண்டார்.
தொழிற்சங்கத் தலைவரும் பிற உறுப்பினர்களும்
இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு வந்தனர். பட்டாபியின் மனைவியை தனியே அழைத்து சில
மாதங்களுக்குப் பிறகு கருணை அடிப்படையில் ஏதேனும் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி சமாதானப்படுத்தினார்.
பிறகு துறையிடமிருந்து என்னென்ன தொகைகள் வரும், எப்படியெல்லாம் அவற்றைப் பெற வேண்டும்
என்பதையெல்லாம் விரிவாக விளக்கிக்கொண்டிருக்கும்போது ஆதரைசேஷன் கடிதங்களை பென்னிஸ்
பெற்றுச் சென்றிருக்கும் செய்தியை அறிந்துகொண்டார் தலைவர். உடனே பென்னிஸை அழைத்து கடிதங்களைத்
திருப்பி அளிக்குமாறு சொன்னார். பென்னிஸ் அதற்கு உடன்படவில்லை. சக ஊழியர் என்று கூட
நினைத்துப் பார்க்காமல் பணத்தையே பெரிதென நினைக்கும் பென்னிஸின் இயல்பு அவருக்கு ஆத்திரமூட்டியது.
ஒரு வேகத்தில் அவர் கன்னத்தில் அறைந்துவிட்டார். அந்தத் தருணத்துக்காகவே காத்திருந்ததுபோல,
அங்கே கூடியிருந்த சிலரும் அவனைத் தாக்கிவிட்டனர். வேறு வழியில்லாமல் பட்டாபியின் மனைவியிடமிருந்து
பெற்ற கடிதங்களை எல்லோருடைய முன்னிலையிலும் கிழித்தெறிந்தார் பென்னிஸ்.
கிருஷ்ணன் ஓர் இடைநிலை ஊழியர். கடன்
வாங்குவதற்காக பொய் சொல்ல மனம் கூசாதவர். தந்திரங்கள் நிறைந்தவர். ஒருமுறை ஏதேதோ செலவுகள்
இருப்பதாக மனைவியிடமே பொய் சொல்லி அவருடைய நகைகளை வாங்கிச் சென்று அடகு வைத்துவிட்டார். ஒருநாள் அவருடைய தங்கைக்குத் திருமணம் நிகழவிருந்தது.
அதற்குப் புறப்படவேண்டும். அதனால் தன் நகைகள் தனக்கு உடனடியாக வேண்டும் என அழுது அடம்பிடித்தார்.
உடனே அடகுச்சீட்டை எடுத்துக்கொண்டு புறப்பட்டார் கிருஷ்ணன்.
அந்த நேரத்தில் பாதையில் மிதிவண்டியில்
தொலைபேசி நிலையத்துக்கு வேலைக்குச் சென்றுகொண்டிருந்த மற்றொரு இடைநிலை ஊழியரான மாணிக்கத்தைப்
பார்த்தார். உடனே அவரை நிறுத்தி கடன் கேட்டார். அந்த நேரத்தில் ஆபத்து இல்லாமல் தப்பித்தால்
போதும் என்ற எண்ணத்தில் மாணிக்கம் ஆயிரம் ரூபாய் அளித்தார்.
பணத்தைப் பெற்றுக்கொண்டாலும் மாணிக்கத்தை
அனுப்பாமல் அவருடைய மிதிவண்டியிலேயே அடகுக்கடைக்குச் சென்றார் கிருஷ்ணன். அடகுக்கடைக்காரரிடம்
ஆயிரம் ரூபாயைக் கொடுத்து நகைகளைக் கேட்டார். கணக்கு பார்த்த கடைக்காரர் மூவாயிரம்
ரூபாய் தரவேண்டிய ஆள் ஆயிரம் ரூபாய் தருவதைக் கண்டு வாங்க மறுத்தார். மிச்சப்பணம் வீட்டில்
இருப்பதாகவும் அரைமணி நேரத்தில் திரும்பி வருவதாகவும் அதுவரை தனக்குப் பதிலாக தன் நண்பர்
அங்கே காத்திருப்பார் என்று கூசாமல் பொய் சொன்னார்
கிருஷ்ணன். கடைக்காரரை நம்பவைத்து நகைகளையும் பெற்றுக்கொண்டு, நண்பரின் சைக்கிளையும்
எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அந்த மிதிவண்டியை ரயில் செலவுக்காக நூறு ரூபாய்க்கு
இன்னொரு கடையில் அடமானம் வைத்து பெற்றுக்கொண்டார் கிருஷ்ணன். வீட்டுக்குச் சென்று மனைவியை
அழைத்துக்கொண்டு ரயிலேறி திருமணத்துக்குப் போய்விட்டார் கிருஷ்ணன்.
இரவு ஒன்பது மணியாகியும் கிருஷ்ணன்
திரும்பாததைக் கண்டதும் கடைக்காரரும் மாணிக்கமும்
தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தனர். வேறு வழியில்லாமல் மாணிக்கம் தம் மோதிரத்தையும்
கடிகாரத்தையும் கழற்றிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து விடுதலையானார். தன் நல்லியல்பின் காரணமாக எல்லாவற்றையும் ஒருசேரப்
பறிகொடுத்த மாணிக்கம், பல மைல்கள் தொலைவு நடந்து இரவுப்பணிக்காக தொலைபேசி நிலையத்தை
அடைந்தார்.
கன்னிப்பன் என்பவர் ஒரு கடைநிலை ஊழியர்.
தொலைபேசி நிலைய பராமரிப்பையும் ஆவணங்களையும் சோதிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் தில்லியிலிருந்து
ஒரு குழு வருவது வழக்கம். அதையொட்டி தரையையும் சுவர்களையும் தீயணைப்பான்களையும் பளபளவென
சுத்தப்படுத்த வேண்டும். வேலை நேரத்திலேயே செய்யக்கூடிய எளிய வேலைதான் அது. ஆனால் பணத்தாசை
பிடித்த கன்னிப்பன் வேலை நேரத்தில் அதைச் செய்யமுடியாதென்றும் குறிப்பிட்ட சில மணி
நேரங்களுக்கு கூடுதல்நேரப்பணியாக அனுமதி கொடுத்தால் செய்வதாகவும் தெரிவித்தார். வேறு
வழியில்லாத அதிகாரி அதற்குரிய அனுமதியை அளித்தார். தரையைச் சுத்தம் செய்த கன்னிப்பன்
யாருக்கும் தெரியாமல் நிலையத்தில் உள்ள இருபத்தொன்று தீயணைப்பான்களை இரவோடு இரவாக அங்கிருந்து
எடுத்துச் சென்று இரும்புக்கடையில் ஐநூறு ரூபாய்க்கு விற்றுவிட்டார். அலுவலகத்துக்கு
வராமல் மருத்துவ விடுப்புக் கடிதத்தை அனுப்பிவிட்டார். சோதனைக்கு வந்த தில்லிக் குழு
எல்லாவற்றையும் பார்த்துவிட்டு தீயணைப்பான்களைப் பார்க்க வந்த போது, அறையில் அவை காணப்படவில்லை.
சோதிக்கப்பட்ட நாள், நேரம், கையெழுத்து ஆகியவற்றைக் கொண்ட அட்டைகள் மட்டுமே காணப்பட்டன.
அதிகாரி சிக்கிக்கொண்டார். விசாரணையைத் தொடர்ந்து கன்னிப்பன் வேலையை இழக்க நேர்ந்தது.
கண்ணன் தொலைபேசி நிலைய வாயிற்காவலர். தொலைபேசி நிலையம் ஊரைவிட்டு தள்ளி மரங்களும் புதர்களும்
மண்டிய இடத்தில் இருப்பதால் பாம்புகளின் போக்குவரத்தும் அதிகமாக இருந்தது. சில சமயங்களில்
நிலையத்துக்குள்ளேயே அவை சென்று திரும்பின. பாம்புகளைப் பிடிக்க பாம்பாட்டியை அழைத்துவரும்
பொறுப்பை வாயிற்காவலர் ஏற்றுக்கொண்டார். பாம்புகளைப் பிடித்ததற்குக் கட்டணமாக அவருக்கு
ஒரு தொகை வழங்கப்பட்டது. பணத்துக்கு ஆசைப்பட்ட காவலரும் பாம்பாட்டியும் ஒரே பாம்பை சில நாட்கள் இடைவெளியில் மீண்டும் மீண்டும்
தொலைபேசி நிலையத்துக்குள் ஒரு வழியாக விட்டுவிட்டு இன்னொரு வழியாக பிடித்துச் சென்றனர்.
கண்ணனை நேரிடையாகத் தண்டிக்கமுடியாத நிர்வாகம், அவரை வேறு நிலையத்துக்கு மாற்றியது.
பொன்னுசாமி இடைநிலை ஊழியர். அவருக்கு
தையல் தொழிலும் தெரியும். அவருடைய வீட்டில் தையல் எந்திரம் இருந்தது. ஒருமுறை நிர்வாகத்தில்
லைன்மேன்களும் இன்ஸ்பெக்டர்களும் தலைப்பாகை போன்ற ருமால் அணியவேண்டும் என ஒரு விதியைக்
கொண்டு வந்தது. அதற்காக ஆட்களைக் கணக்கெடுத்து, அதற்கு ஏற்றபடி துணியையும் தொலைபேசி
நிலையத்துக்கே அனுப்பிவைத்துவிட்டது. ஐம்பது ருமால் தைக்கவேண்டும். எங்கோ கடைத்தெருவில்
அமர்ந்திருக்கும் யாரோ முகமறியாத ஒரு தையல்தொழிலாளிக்குக் கிடைக்கவேண்டிய பணம் தொலைபேசி
நிலையத்திலேயே இருக்கும் தொழில் தெரிந்த ஒருவருக்குக் கிடைக்கட்டுமே என்ற எண்ணத்தில்
அந்த வேலையை பொன்னுசாமியிடம் ஒப்படைத்தார் ஒருவர். பணம் கிடைக்கிறது என்னும் மகிழ்ச்சியில்
துணியை வீட்டுக்கு எடுத்துச் சென்றார் பொன்னுசாமி. அளந்து பார்த்தபோது ஐம்பது ருமால்கள்
தைத்ததுபோக, நிறைய துணி எஞ்சிவிட்டது. எஞ்சிய துணியில் பாவாடை தைத்து பாவாடைக்குப்
பத்து ரூபாய் என்ற கணக்கில் பெண் ஊழியர்களிடம் விற்று பணமாக்கிவிட்டார்.
குன்றத்தூரில் இயங்கிய தொலைபேசிகளின்
எண்கள் பரங்கிமலை நிலையத்தோடு இணைந்திருந்த காலத்தில் லைன்மேனாக இருந்தவர் சாரங்கி
என அழைக்கப்படும் சாரங்கபாணி. அந்த ஊர் எண்களுக்கு எந்தப் பழுதும் ஏற்படாமல் பாதுகாப்பவரும்,
பழுது ஏற்பட்டாக் உடனடியாக நீக்குபவருமாக அவர் இருந்தார். அங்கிருந்த காவல்நிலையம்,
பொதுத்தொலைபேசி போன்ற எண்கள் பழுதுபட்டால், அந்த வேலையை வேறு வழியில்லாமல் ஒரு கடமை
என நினைத்துக்கொண்டு செய்தார். குவாரிகளிலும் பிற தொழில் நிறுவனங்களிலும் உள்ள தொலைபேசி
எண்கள் பழுதுபட்டால் கூடுதல் அக்கறையோடு அவற்றைக்
கவனித்து உடனடியாகச் சரிசெய்வார். அவர்களிடமிருந்து கிடைக்கும் சிறுசிறு தொகைகளும்
பிற அன்பளிப்புகளும்தான் அதற்குக் காரணம். அந்த அன்பளிப்பில் தாராளமாக தாகசாந்தி செய்துகொள்பவர்.
சாராயத்துக்காக எதையும் செய்யும் எண்ணம் அப்படித்தான் கொஞ்சம்கொஞ்சமாக அவர் நெஞ்சில்
வேரூன்றியது. இருபது அம்சத் திட்டத்தின் விளைவாக குன்றத்தூர் வளர்ச்சிக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட
வங்கி அந்த ஊருக்கு ஒரு பொதுத்தொலைபேசிக் கூண்டை அமைத்துக்கொடுத்தது. ஒருநாள் நாணயங்கள்
நிறைந்த அதன் பெட்டி இரவோடு இரவாக களவாடிக்கொண்டு சென்றுவிட்டனர். சாரங்கபாணியே அதற்குக்
காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தாலும், ஒருவராலும் அதை நிரூபிக்கமுடியவில்லை.
எஸ்கே என்பவர் இராஜ அண்ணாமலைபுரம் பகுதியில்
போன் இன்ஸ்பெக்டராக இருந்தவர். ஐம்பதுகளை ஒட்டிய காலம். வீட்டில் தொலைபேசி இணைப்பு
வைத்திருப்பவர்களுக்கு ப்ளக் அண்ட் சாக்கெட் என்பது ஒரு கூடுதல் வசதி. வீட்டுக்குள்ளேயே
தொலைபேசி இணைப்பை விரிவாக்கம் செய்துவிட்டு,
இரண்டு அல்லது மூன்று இடங்களில் சாக்கெட் பொருத்தி, அதன் வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும்
தொலைபேசியை இணைத்து உரையாடுவதற்கான வசதி அதில் இருந்தது. அப்போது ஒரு நடிகையின் வீடு
அந்த வட்டாரத்தில் இருந்தது. அவருக்கு ஒரே ஒரு தொலைபேசி இணைப்பு மட்டுமே இருந்தது.
ஆனால் அவர் நடிகை என்பதாலும் அவர் மீது கொண்ட மோகத்தாலும் உரிய அனுமதியில்லாமல் ப்ளக்
அண்ட் சாக்கெட் வசதியை அந்த வட்டாரத்தின் எஸ்கே செய்துகொடுத்துவிட்டார்.
எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த
ஒரு கட்டத்தில் ஏதோ அவசர விடுப்பில் சென்றுவிட்டார் எஸ்கே. பக்கத்து வட்டாரத்தில் பணிபுரிந்த
குலசேகரன் என்பவர் அந்த வட்டாரத்தின் பொறுப்பையும் கூடுதலாக ஏற்றுக்கொண்டார். தொலைபேசியின்
பயன்பாடு குறித்து ஏதோ கேள்வி கேட்பதற்காக நடிகையின் வீட்டுக்குச் சென்ற குலசேகரன்
உரிய அனுமதி இல்லாமல் ப்ளக் அண்ட் சாக்கெட் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதைக் கவனித்துவிட்டார்.
அலுவலகத்தில் அது தொடர்பான எந்த ஆவணமும்
இல்லை. மேலிடத்துக்கு தகவல் கொடுத்துவிட்டார். அவர்களும் விசாரணைக்காக ஆட்களை அனுப்பிவிட்டனர்.
ஆனால் விசாரணைக்காக ஆட்கள் மீனாகுமாரியின் வீட்டுக்குள் சென்றபோது, அங்கிருந்த ப்ளக்
அண்ட் சாக்கெட் வசதி மாயமாய் மறைந்துபோயிருந்தது. அப்படி ஒன்று இருந்தது என்பதற்கான
ஒரு தடயம் கூட அந்த வீட்டில் இல்லை. எல்லாவற்றையும் அழித்துவிட்டார்கள். குலசேகரன்
அன்று ஏமாற்றமடைந்தார் என்றபோதும், வெகுநாட்களுக்குப் பிறகு எஸ்கேயின் உதவியாளர் ஒருவருடைய
வழியாக எஸ்கேதான் அந்த நடிகையின் வீட்டில் எஸ்கே பளக் அண்ட் சாக்கெட் வசதியை உருவாக்கிக்
கொடுத்தார் என்பதையும் விசாரணைக்கு வரும் தகவலை முன்கூட்டியே அறிந்துகொண்டதால் எல்லாவற்றையும் அழித்துவிட்டார்
என்றும் தெரிந்துகொண்டார்.
இவ்விதமாக இத்தொகுதியில் இருபத்தைந்து
கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் இப்படி ஏராளமான மனிதர்களைப்பற்றிய சொற்சித்திரங்களால்
நிறைந்திருக்கிறது. பொதுவாக கலைஞர்கள் அனைவரும் மனிதர்களைக் கவனிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.
ஓவியக்கலையிலும் எழுத்திலும் தேர்ச்சி கொண்ட விட்டல்ராவிடம் அத்தகு ஆர்வம் கூடுதலாகவே
உண்டு. அந்த ஆற்றலும் அனுபவமும் அவருடைய கட்டுரைகளுக்கு
வலிமை சேர்க்கின்றன.
( தொலைபேசி
நாட்கள் – விட்டல்ராவ். அம்ருதா பதிப்பகம், மூன்றாவது பிரதான சாலை, கிழக்கு சி.ஐ.டி.நகர்,
நந்தனம், சென்னை -35. விலை. ரூ.250)
(புக்
டே – இணையதளம் 05.04.2024)