Home

Wednesday, 24 April 2024

எஞ்சுதல் - சிறுகதை

 சீக்கிரமே விழிப்பு வந்துவிட்டாலும் எழுந்திருக்காமலேயே அவர் படுத்தபடி இருந்தது சுக்குக்காப்பிக்காரன் வரட்டும் என்றுதான். ரொம்ப சுலபமாய் உணரும்படியாகவே இருக்கும் அவன் வருகை. கிளங் கிளங் என்று வருகிற தள்ளுவண்டி மணியோசை. ‘சுக்காப்பிஎன்று வார்த்தையை நறுக்கி இழுத்து வீசுகிற குரல். பக்கம்வர  பக்கம்வர  ஸ்ஸ்  என்று ஜாஸ்தியாகிக் கொண்டே போகிற ஸ்டவ் சத்தம். பஸ் சத்தம், லாரி சத்தம், மனிதர்கள் சத்தம் என்று வெறும் சத்தங்களாகிப் போய்விடுகிற பகல் பொழுதுகளிலாவது அடையாளங்கள் தவறிப்போகும். ஆனால், இழுத்துப் போர்த்திய மாதிரி இருக்கிற கருக்கிருட்டில் காப்பிக்காரனின் வருகை அடையாளங்களை வைத்து உணர சாத்தியமான விஷயம்தான். ராத்திரி கடை போட்டு தீபாவளி வாடிக்கைகள் தைக்கிற ஜாபர், கோதண்டம், உஸ்மான்சேட் கடைகளின் மிஷின்கள் எழுப்புகிற சின்ன சத்தத்தையும் மீறி.

கண்ணைத் திறந்த முதல் கணம் எதுவும் புரியவில்லை. மங்கலாய்த் தெரிந்தது எல்லாம். கைக்கு எட்டுகிற தூரத்தில் மர ஸ்டூலில் இருந்த சிம்னி விளக்கின் திரியைத் தூக்கி விடலாமா என்று யோசனை வந்தது. கூரையைக் கிழத்து கயிற்றுக் கட்டில்வரை ஊசியாய் இறங்கி இருக்கிற குளிர் ஸ்டூலிலும், சிம்னி விளக்கிலும் நிச்சயம் இருக்கும். தொட்ட மாத்திரத்தில் பனி ஈரத்தில் முதுகுத்தண்டு சொடுக்கிப் போடும். மார்பு சுருங்கிப் பெருக்கிற மாதிரி இருக்கும். திரேகமே சிலிர்ப்புத் தட்டி அடங்கும். சுகம்தான் அது என்றாலும் சுகம் விரும்பாத விரக்தி மனநிலை வந்துவிட்ட  மாதிரி இருந்தது அவருக்கு. திரியை ஏற்றுகிற யோசனையைக் கைவிட்டு மங்கலான கூரையையே திறந்த கண்ணால் பார்த்தடி இருந்தார்.

கூரையையே பார்ப்பது அலுத்தது. விறகுக்கட்டைகள், மிளார்க்கற்றை, தட்டு, சங்கிலி, முள்தண்டு, கல் என்று கூறுகூறாய் இருந்த எடைத்தராசு, ராத்திரி சாப்பாட்டுக்கு வந்த தூக்குவாளி, தண்ணீர்ப்பானை, பித்தளைத்தம்ளர், செத்தையும், செதில்களுமாய் மூலையில் இருந்த குப்பை என்று பார்வையை நகர்த்தியபோது மறுபடியும் மரஸ்டூலும் சிம்னி விளக்கும் வந்தது. ‘எதுக்கு தொட்டுக்னுஎன்கிற யோசனையும் கூடவே வந்தது. எதற்காக ஒரு ஈடுபாடே இல்லாமல் இப்படி ஒரு முரணான முடிவை மனசு எடுத்தது என்று தனியாய் இன்னொரு யோசனை வந்து, சிரிப்பு மூண்டது. ஒரு காலையின் ஆரம்பமே இப்படி பற்றற்ற யோசனையில் தொடங்குவது எத்தனை தூரத்துக்குச் சரியோ தப்போ என்று யோசித்து, அப்படி யோசிக்கத் தொடங்கியதற்காக மறுதரமும் சிரிப்பு வந்தது. கூடவேசாமியாரா போவறதுக்குத்தான்டி ஒங்கப்பா லாயக்கு. நல்லா ஊமச்சிரிப்பு சிரிச்சிக்னுஎன்று பெண்களிடம் அலுத்துக்கொள்கிற மனைவியின் வார்த்தை ஞாபகம் வர மீண்டும் மிதந்துகொண்டு வந்தது சிரிப்பு. அடக்கிக் கடைவாய் வழியே வழியவிடுகிறமாதிரி இல்லாமல் சத்தமாய் சிரித்தால்தான் ஆச்சு என்கிற ரீதியில் சிரிப்பு பீறிட்டது.

சிரிப்பதற்கென்றே வெடித்துவிட்டமாதிரி ஒரு சிரிப்பு. எதிர்ச்சிரிப்பு ஒன்று இருந்தால் இன்று பூராவும் சிரிக்கமுடியும் என்கிறமாதிரி மத்தாப்பு கொளுத்தியதுபோல பிரகாசமாக உதிர்ந்த சிரிப்பு. சுற்றி இருக்கிற பொருள்களுக்கெல்லாம் ஒரு ஜீவனைச் செதுக்குகிற சிரிப்பு. ரணம், வேதனை, மூப்பு எல்லாவற்றையும் மறந்து உதிர்ந்துவிட்ட சிரிப்பு. ஏகப்பட்ட சங்கிலிகளுக்கு இடையே மாட்டிக்கொண்டு அனுபவித்த அவஸ்தைகளையெல்லாம் சட்டென்று ஒரு உதறு உதறி மேல்பாகத்துக்கு எம்பி வந்த சிரிப்பு.

சிரிக்கச்சிரிக்க கண்களில் நீர் கோர்த்தது. மல்லாந்து சிரித்ததில் தூக்கிப் போட்ட மார்பு வலித்தது. வலியை சகித்துக்கொள்கிற முயற்சியினால் சிரிப்பை அடக்கப் பிரயத்தனப்பட்டபோது இருமல் வந்தது. இளைத்தது. உள்ளுக்குள்ளேயே குதித்துக்குதித்து மூச்சு புரண்டது. சுவாசிப்பது கஷ்டமாகிச் சிரமம் தந்தது. தொண்டையில் கோழை கட்டிக்கொள்ள சட்டென்று போர்வையை உதறி எழுந்தார். ஜீவமரணப் போராட்டமாய் இருந்தது. நின்று  நிதானித்து ஸ்டூலுக்குக் கீழே இருந்த கொட்டாங்கச்சியில் கோழையைத் துப்பினார். ஹ்க்க் ஹ்க்க் என்று தொண்டையைச் செருமிச்செருமி ஆழத்துக்குப் போய்விட்ட சளியை இழுத்துத் துப்பினார்.

மீண்டும் போய் கட்டிலில் உட்கார்ந்தபோது தூக்கம் வரவில்லை. வீட்டு ஞாபகம் வந்தது. நாலு பெண் பிள்ளைகளும் பெண்டாட்டியும் வத்திப்பெட்டி மாதிரியான சின்ன வீட்டுக்குள் குறுக்கும் நெடுக்குமாய் படுத்துக் கிடக்கிற காட்சி ஞாபகம் வந்தது. கல்யாணம் கட்டியபின் ஒருவன், கட்டாமலேயே ஒருவன் என்று இரண்டு பிள்ளைகளும் துவேஷம் பாராட்டிவிட்டு ஓடிப்போனது ஞாபகம் வந்தது. மூணாவது பையன் எஸ்.எஸ்.எல்.சி. பெயிலான துக்கத்தில் ரயிலில் தலைகொடுத்துச் செத்துப்போனது ஞாபகம் வந்தது. விறகுக்கடை வருமானத்தில் கடை வாடகை தந்து, கடைக்கு முதல் வைத்து, சாப்பிட்டு, வைத்தியம், அது, இது என்று அலைந்து கடைசியில் இந்த நிமிஷம்வரை வெறும் மனுஷனாகவே நிற்பது ஞாபகம் வந்தது. கண்ணுக்குத் தெரியாத ஒரு பொறியில் எல்லாரையும் சிக்கவைத்துவிட்டு தான் மட்டும் தப்பி இங்கு வந்து கட்டிலில் உட்கார்ந்துகொண்டு இருமுகிறோமோ என்ற குற்றஉணர்வு ஞாபகம் வந்தது.

காதுப்பக்கத்தை மறைத்தபடி தலையைச் சுற்றி மப்ளரை இழுத்துக் கட்டிக்கொண்டு கதவுப்படலைத் திறந்தார். தண்ணீர் தெளிக்கிற மாதிரி முகத்தை ஜில்லென்று கவ்விக்கொண்டது பனி. கண்ணுக்குள் ஈரம் இறங்குகிறமாதிரி இருந்தது. படுத்திருந்தபோது கேட்டதைவிட கொஞ்சம் அதிகமான ஸ்தாயியில் மிஷின் சத்தம் கேட்டது. கதவை இழுத்துப் பூட்டிவிட்டு போர்வையை இறுக்காமல் இழுத்துப் போர்த்தியபடி நடுத்தெருவுக்கு வந்து அந்தப் பக்கமும் இந்தப்பக்கமும் அளக்கிறமாதிரி பார்த்தார்.

டி.வி.எஸ். ஆபீஸ் வராண்டாவில் காவல்காரன் படுத்திருந்தான். ரேஷன் கடை வாசலில் வரிசையாய் ஜனங்கள் நிற்க, நட்டு வைத்திருந்த மூங்கில்கள் தட்டியாய் நின்றிருந்தன. ராதாகிருஷ்ணா அச்சகத்தின் ஒட்டுத் திண்ணையில் நாய் தூங்கியது. சாக்கடையில் தெருவிளக்கு வெளிச்சம் வெள்ளியாய் சிதறி இருந்தது. கோயில் பூட்டு அளவுக்குப் பெரிசாய்த் தொங்கிய நகைக்கடைப் பூட்டு மின்னியது. பலசரக்குக் கடைவாசலில் கோணிப்பை தொங்கியது. இழுத்துத் தேய்த்த மாதிரி பனி ஈரமும் குளிரும் எல்லா இடத்திலும் இருந்தது.

மணி அடித்தபடி வந்த சுக்குக்காப்பிக்காரனின் வருகை சந்தோஷம் தந்தது. சூடாய் இறங்கிய முதல் மிடறு காப்பி இதமாய் இருந்தது. மார்பில் சாயவைத்துக் கொண்டு யாரோ நீவி விடுகிற இதம். ‘எரியுதா எரியுதாஎன்று பரிவோடு வாய்குவித்து ஊதிவிடுகிற இதம். உற்சாகமாய் தெருவிளக்குக் கம்பத்தில் சாய்ந்தபடி பேச்சுக்கொடுத்தார். பேச ஆள் கிடைத்தமாதிரி காப்பிக்காரனும் பேச ஆரம்பித்தான்.

கொல்லம் பக்கத்தில் ஊரிலிருந்து ராத்திரி தந்தி வந்தது. படுத்த படுக்கையாய் நோய்முற்றிக் கிடந்த பெண்டாட்டியுடைய அண்ணன் ஆபத்துக்கட்டத்தில் இருப்பதாக செய்தி வந்தது. அழுது புரண்ட மனைவியை சமா£னம் செய்தது, கையில் பணம் இல்லாமல் ரைஸ்மில்காரரைப் பார்க்க ஓடியது, ராத்திரியில்பணமுமில்ல பொணமுமில்லஎன்று ஆயிரம் பிகு அவர் செய்துகொண்டது. கடைசியில் வட்டி எடுத்துக்கொண்டு பணம் தந்தது, விழுப்புரம் போய், மனைவியையும், பிள்ளைகளையும் வண்டியேற்றி வந்தது. திரும்பிவர பஸ் கிடைக்காமல் லாரி பிடித்து கோலியனூர்வரை வந்து அங்கிருந்து நாலுமைல் நடந்தே வந்தது. அதன் பிறகு சுக்கு இடித்து, வேக வைத்து, தண்ணீர் இறக்கி கடைக்குத் தயார் செய்தது என்று எல்லாம் ஒரே அலுப்பாய்ச் சொன்னான்.

டீயை உறிஞ்சியபடி வெறுமனே கொட்டுவது தப்பு மாதிரி பட்டது அவருக்கு. ஏதாவது சமாதானம் சொல்லவேண்டும் போல இருந்தது. ‘புட்டு பாத்தா தெரியும் எருமட்ட. சுட்டுப் பாத்தா தெரியும் வெறகுக்கட்ட. எல்லா ஊட்லியும் இப்படித்தான். வெளில தெரியில. அதான் வித்தியாசம்என்று வார்த்தைகளைத் தயார் செய்துகொண்டு வெறும் கிளாஸைத் தட்டில் வைத்தபடி பேச ஆரம்பித்த தருணம்அந்த குருவாயூரப்பன்தா எல்லாரையும் பார்த்துக்கிடணும்என்று காப்பிக்காரனே முடித்துவிட்டதும் அடங்கிப்போனார். த்ச் த்ச் என்று சப்புக்கொட்டிக் கொண்டார்.

வெளிச்சம் லேசாய்ப் பிரிகிறமாதிரி இருந்தது. ஜாபரும் கடைப்பையன்கள் நாலுபேரும் வந்து பக்கத்தில் நின்றதும் வியாபாரம் களைகட்டியது. வண்டிக்கால்களுக்கு நடுவில் இருந்த கண்டாமணியை அடித்துசுக் காபி...’ என்று வேகமாய் இழுத்துக் கூவிவிட்டு ஆளுக்கொரு தம்ளரை நிரப்பிக்கொடுத்தார்.

வேல ஜோரா ஜாபரு?’

பரவாயில்லிங்க, போன வருஷத்துக்கு இந்த வருஷம் தேவலாம்.’

அதற்குமேல் பேசத் தோன்றாமல் காப்பிக்குக் காசு கொடுத்து விட்டு குட்டையைப் பார்த்து நடந்தார் அவர். தொண்டை எரிச்சல் அடங்கியமாதிரியும் இருந்தது. நெஞ்சுப்பக்கம் வேர்த்தது. போர்வைக்குள் கையைவிட்டு மாரைத் தடவிக்கொண்டார்.

சலனமில்லாமல் இருந்த தெருவை ரொம்பவும் பிடித்திருந்தது அவருக்கு. எல்லாமே இன்னும் கொஞ்ச நேரம்தான். குட்டைக்குப் போய்த் திரும்புகிற சமயத்துக்குள் எல்லாம் களை கட்டிவிடும். ஒன்று இரண்டு என எல்லாக் கடைகளும் வாசல் திறக்கும். தெரு பெருக்குகிற சத்தம் கேட்கும். வாகனங்கள் ஓடும். பட்சிகள் பறக்கும். ஜன நடமாட்டம் ஆரம்பம் ஆகும். அப்புறம் ஒரே சத்தம்தான். ஆளை அசத்துகிற சத்தம்.

குட்டைக்குப் போய் அப்படியே குள்ள உடையார் பம்ப்பில் குளித்துமுடித்து திரும்பி நேதாஜி மன்றத்தில் தினத்தந்தி பார்த்துவிட்டு வரும்போது எல்லாமே சத்தமாய்த்தான் இருந்தது. நினைத்ததைவிட அதிக சத்தம். காப்பிக்காரன் போய்விட்டிருந்தான். கடைவாசலை எதற்காகவோ நாய் ஒன்று முட்டிக் கொண்டிருந்தது. பார்சல் ஆபீஸின் வாசலில் ஒரு லாரி நின்றது. ‘ஹம் தள்ளு. ஹ்ம் புடிஎன்று மாறிமாறிச் சத்தமிட்டு மூச்சுப் பிடித்து பெரியபெரிய பார்சல்களை இறக்கி உள்ளே தூக்கிக்கொண்டு போனார்கள். அத்தனை காலையில் வேர்க்கிற கூலிக்காரர்களின் தேகத்தைப் பார்க்கும்போது பாவமாய் இருந்தது அவருக்கு.

கடையைத் திறந்து விளக்கை நிறுத்திச் சுவரோரம் கொண்டு போய் வைத்தார். கட்டிலையும் ஸ்டூலையும் ஓரமாக்கினார். வாரியலால் குப்பையை ஒதுக்கித் தள்ளினார். புழுதிப்புகை லேசாய் நெஞ்சை அடைப்பதுமாதிரி இருந்தபோது சுவரில் சரிந்து சமாளித்துக்கொண்டார். தராசுப் பாகங்களை ஒவ்வொன்றாய்த் தூக்கிவந்து வெளியே பொருத்தினார். மாதிரிக்கு வைக்கிறமாதிரி நாலு கொத்து விறகு, நாலுகட்டு மிளார்களைத் தூக்கிவந்து வெளியே வைத்தார். உள்ளுக்கும் வெளியேயுமாய் நடந்ததில் மார்பு வலித்தது. இளைப்பு வந்தது. கொஞ்ச நேரத்துக்கு இடுப்பில் கைவைத்தபடிஹம் ஹ்ம்...’ என்று மூச்சு வாங்கினார்.

ஒங்கள யாரு இதெல்லாம் செய்யச் சொல்றா நா? வந்தா செய்ய மாட்டனா?’

சின்ன வாளியில் பழைய சோறு கொண்டுவந்த மனைவி சொல்லிக்கொண்டே பக்கத்தில் வந்தாள். அவளைப் பார்த்த பிறகும் இரண்டுதரம் இழுத்து மூச்சு வாங்கிக்கொண்டு கட்டிலில் போய் உட்கார்ந்தார்.

பெரிசிலேர்ந்து சின்னதுவரிக்கும் எதுதான் நான் ன்சொல்ற பேச்ச கேக்குது? எல்லாம் அததும் இஷ்டப்படிதா நடக்கணும்குதுங்க..’

வாளியை ஓரமாய் வைத்துவிட்டு தண்ணீர்ப்பானையைக் கழுவியபடி சொன்னாள் அவள்.

இப்ப யாரு ஒன் பேச்ச கேக்கலனு காலங்கார்த்தாலே ஒப்பாரி வய்க்கறே...’

ஆமா.. நா ஒருத்தி பேச வந்துட்டா எல்லார்க்கும் ஒப்பாரி மாதிரிதான் படுது...’

சரி. இப்ப இன்னா நடந்திருச்சின்னு சிணுங்கற...’

ஒரு பையன வேலக்கி வச்சிக்கங்கன்னு எத்தினிதரம் நா சொல்றன். கொஞ்சமாச்சும் காதுல வாங்கிக்குறிங்களா...?’ பதில் சொல்லாமல் அவர் வாசலைப் பார்த்தார். வாசல் கம்பியில் தொங்கத்தொங்க ஜனங்களை ஏற்றிக்கொண்டு போகிற டவுன்பஸ்ஸைப் பார்த்தார். பின்னாலேயே எதையோ துரத்திக்கொண்டு போகிறமாதிரி போன குதிரைவண்டியைப் பார்த்தார்.

வாயத் தொறக்க மாட்டிங்களே இதுக்கு. கோந்து வச்சி ஒட்டனமாதிரி ஒட்டிக்குமே வாயி.’

சளக்சளக்கென்று பழந்தண்ணீர்ப் பானைக்குள் கையைவிட்டு அலசி தெருவில் ஊற்றிவிட்டு சொல்லிக்கொண்டே போனாள் அவள். அவள் போகிற திசையைப் பார்த்தபோது விசனத்துடன் சிரிக்கத் தோன்றியது அவருக்கு, காலையில் வந்தமாதிரி சிரிப்பு இல்லை இது. துக்கம், தாளாமை, இயலாமையில் நனைந்து வருகிற சிரிப்பு. ‘எதுக்குத்தான் பொறந்தோம்என்று அலுப்பு தெரிவிக்கிற சிரிப்பு. வாஸ்தவம்தான். ஒத்தாசைக்கு ஆள் வைத்துக் கொள்ளலாம்தான். ஆனால் அவனுக்குக் கொடுக்கிற நாலோ ஐந்தோ இருந்தால் ஒரு கிலோ அரிசி வாங்கலாமே என்கிற யோசனைதான் லொக்கு லொக்கு என்று நாலு நிமிஷத்துக்கு மூணுதரம் வருகிற இருமலையும் சகித்துக்கொண்டு ஒண்டியாய்   வேலை செய்யச் சொன்னது. இல்லாத குறைதான் எல்லாம்.

கும்பிடறங்க..’

சட்டென்று யோசனை அறுந்துவிட நிமிர்ந்தார் அவர். கையில் குழந்தையுடன் கருப்பாய்ப் பெண் ஒருத்தி நின்றிருந்தாள். தன்னைப் பார்ப்பதை உணர்ந்ததும் சிரித்தாள். அந்தச் சிரிப்பும் சங்கடமும் வேதனையாய்த்தான் இருந்தது.

இன்னாமா..?’

தெரிலங்களா என்ன...’

தெரிலியே

வீராசாமி சம்சராம்

எந்த வீராசாமி... வெறவு பொளக்க வரானே...’

அதான். அதுதான் ஒங்கக்கிட்ட அனுச்சிது

என்ன சொல்என்கிற மாதிரி பார்த்தார் அவர். தாயின் கழுத்தில் இருந்த மணியைத் தொடுவதும் தடவுவதுமாய் வாயில் ஜொள் விழ இருந்தது வதங்கலான குழந்தை.

கோடாலி கால்ல உழுந்து நாலு நாளா வேலக்கிப் போவல அது. அடுப்புல வய்க்க ஒன்னும் இல்ல. ஒரு கட்டு மெளார் வேணும். அடுத்த லோடு பொளக்க வர்றப்போ கழிச்சிக் கலாம்னுச்சி. காசி இருந்தா ரெண்டு ரூவாயும் வேணும்...’

தண்ணீருடன் வந்த அவர் மனைவிக்கு கடைசி வார்த்தைதான் காதில் விழுந்தது. உள்ளே போய் வைத்த வேகம் தெரியாமல் வெளியே வந்தாள். ‘எதுக்குடி ரெண்டு ரூவா?’ என்று ஆரம்பித்து அந்தப் பெண்ணின் சரித்திரம் அவள் புருஷனின் சரித்திரம், காலில் காயம்பட்ட சரித்திரம், கடன் வாங்க வந்த சரித்திரம், எல்லாம் கேட்டு தனக்கும் நெருக்கடிகள் இருக்கிற சரித்திரம், சம்பாதிக்கிற சரித்திரம், கடன் தர முடியாத சரித்திரம் எல்லாவற்றையும் டாண் டாண் என்று அடுக்கி அடுக்கிப் பேசினாள். ஒடுங்கிப்போய் அவள் வாயையே பார்த்தபடி இருந்தது அந்தப் பெண். முப்பது வருஷத்துக்கு முன்புபேசனா கீழ உழற முத்துங்கள பொறுக்கிக்குவம்கற பயமாடி?’ என்று மற்றவர்கள் கேட்கிற மாதிரி கல்யாணப் பெண்ணாய் வந்தவள் இப்படி வார்த்தை இறையஇறையப் பேசுகிற தினுசை அவரும் பார்த்தபடி இருந்தார்.

அரை நொடி சலிப்பு. அரைநொடி நெற்றிச்சுளிப்பு. அரை நொடி யோசனை என்று கழித்துப் பார்க்கும்போது அவள் பேசிக்கொண்டே இருந்தாள். பேரைச்சொல்லி கூப்பிட்டார் அவர். ‘இன்னாதுஎன்றாள் அவள்.

இங்க வா...’

அருகில் வந்துக்கொண்டே மீண்டும்இன்னாதுஎன்றாள் அவள்.

கொஞ்சம் தண்ணி குடு

காலங்காத்தால எதுக்குத் தண்ணி?’

குடிக்கத் தண்ணி கேட்டா எதுக்கு எதுக்குன்னு கேக்கறியே

அவள் தண்ணீர் எடுத்துவர உள்ளே போனதும் அவர் சட்டைப் பையில் இருந்த இரண்டு ரூபாயை அந்தப் பெண்ணிடம் தந்து மிளார்க்கட்டுக்குப் பக்கம் கைகாட்டி எடுத்துப்போகச் சொன்னார். இடுப்புக் குழந்தையோடு காலை அழுத்தி ஊன்றி குனிந்து கற்றையைத் தூக்கி நிமிர்ந்த சமயம் தண்ணீர்த் தம்ளருடன் வந்த அவர் மனைவிக்கு எரிச்சலாய் வந்தது. கோபம் வந்தது.

என்ன இன்னா பைத்தியக்காரின்னு நெனச்சாச்சா?. கத்திட்டு கத்திட்டு அடங்கிக்க. காலங்காத்தால மொத யேவாரம் கடன் தராதிங்க கடன் தராதிங்கன்னு நூறுதரம் சொல்றன். கொஞ்சமாச்சும் கேக்குதா. எல்லாத்தையும் கடனா தந்தா கடைசியில இன்னா மிச்சமாவும், இல்ல இன்னா மிச்சமாவும்னு கேக்கறன்...’

மிளார்க்கற்றையை எழுப்புகிற வேகத்தில் கிளம்பிய சின்னப் புழுதியில் அவருக்கு இருமல் வந்தது. மூச்சுக்குத் திண்டாடியது மார்பு. மார்புக்கும் தொண்டைக்குமாய் அடைத்துப் பம்மியது சளி. கண் பிதுங்கப்பிதுங்க ஒரு நிமிஷத்துக்கு நீடித்த இருமல் லேசாய் அடங்க சளியை இழுத்துத் துப்பினார். இரண்டு சொட்டு இரத்தத்துடன் மண்ணில் விழுந்து சுருண்டது சளி.

இந்த கக்கற இருமலும் துப்பற சளியும்தா மிச்சமாவும் போ...’

வறட்சியாய் சொல்லிவிட்டு அவள் கையில் இருந்த தண்ணீர்த் தம்ளரை வாங்கினார் அவர்.

(பிரசுரமாகாதது -1986)