கடந்த பத்தாண்டுகளில் எழுதத் தொடங்கி, தனித்தன்மையுடைய சிறுகதைகளை அளித்து, தமிழ்ச்சூழலின் கவனம் பெற்ற இளைய சிறுகதையாளர்கள் என ஒரு பத்து பேரையாவது உடனடியாகச் சொல்லிவிடமுடியும். செந்தில் ஜெகன்னாதன், சுஷில்குமார், மயிலன்.ஜி.சின்னப்பன், ரா.செந்தில்குமார், பாலசுப்பிரமணியம் பொன்ராஜ், ஐ.கிருத்திகா, கமலதேவி, வைரவன், லோகேஷ் ரகுராமன், அமுதா ஆர்த்தி, பொன்.விமலா என நீளும் அந்தப் பட்டியலில் புதிய இளைய எழுத்தாளராக அஜிதன் தன் முதல் சிறுகதைத்தொகுதி வழியாக இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே மைத்ரி, அல்கிஸா ஆகிய இரு சிறிய நாவல்கள் வழியாக அவர் ஈட்டிவைத்திருக்கும் இடத்தை, மருபூமி என்னும் புதிய சிறுகதைத்தொகுதி உறுதி செய்திருக்கிறது.
இத்தொகுதியில் ஆறு சிறுகதைகளும் இரு
குறுநாவல்களும் உள்ளன. எட்டு படைப்புகளையும் தனித்தன்மையோடு எட்டு விதமாக அஜிதன் படைத்திருக்கிறார். ஒரு தொடக்கநிலை எழுத்தாளராக, ஒரு கட்டமைப்பை சிறப்பான
முறையில் உருவாக்கிய பிறகு, அதே அமைப்பில் மேலும் சிறப்பானதொரு படைப்பை எழுதும் ஆவலில்
இன்னொரு முயற்சியில் இறங்குவதற்குத் தூண்டும் ஆவலை வெற்றிகொள்வது அவ்வளவு எளிதல்ல.
மேல்மனம் வேண்டாம் வேண்டாம் என விலகிச் சென்றாலும் ஆழ்மனம் நம்மையறியாமல் அதையே சுற்றிச்சுற்றி
வட்டமடித்தபடி இருப்பதுதான் இயற்கை. ஆனால் தொப்புள்கொடியை அறுப்பதுபோல, ஒவ்வொரு அமைப்பையும்
அறுத்துவிட்டு, அடுத்து அடுத்து என சென்றுவிடுகிறார் அஜிதன். ஒரு தொடக்கநிலை எழுத்தாளராக
அவரிடம் படிந்திருக்கும் தன்னம்பிக்கையும் வேகமும் பாராட்டுக்குரியவை.
ஏற்கனவே தமிழ்க்கதை உலகில் நாம் கண்ட
எந்தப் பாத்திரத்தின் சாயலும் இல்லாமல் புத்தம்புதிதான பாத்திரங்களை தம் கதைகளில் முன்வைத்திருக்கிறார்
அஜிதன். ஜஸ்டின் அத்தகைய பாத்திரங்களில் ஒருவன். அவன் வேலை என்பது கிட்டத்தட்ட கூலிப்படை
வேலை. அவன் மாமா ஏவி விடுவார். இவன் சென்று முடித்துவிட்டு வருவான். சரியான அடிதடி
ஆள். ஆனால் தனக்கென ஒரு விசித்திரமான நியாயத்தை வைத்துக்கொண்டிருப்பவன். ஒருநாள் மாமா
ஒரு குறிப்பிட்ட ஆளை வெட்டிவிட்டு வருமாறு அனுப்பிவைக்கிறார். அதைச் செய்துமுடிக்கும்
வெறியோடு ஜஸ்டின் அந்த இடத்துக்குச் செல்கிறான். இடத்தையும் சூழலையும் கச்சிதமாக வேவு
பார்த்துவிட்டு, ஆளை முடிக்க உள்ளே செல்கிறான். ஆனால் வெட்டவில்லை. திரும்பிவிடுகிறான்.
மாமா அவன் மீது சீற்றம் கொள்கிறார். அவன் சபரிமலைக்கு மாலை போட்டிருப்பதைப் பார்த்ததாகவும்
இறைப்பழிக்கு அஞ்சி வெட்டாமல் வந்ததாகவும் மாமாவுக்குப் பதில் சொல்கிறான் ஜஸ்டின்.
அந்த இடத்தில் தொடங்கிய புன்னகையை கதையின் இறுதிவரியைப் படித்து முடிக்கும் வரை நிறுத்தவே
முடியவில்லை.
விரத நாட்களான நாற்பத்தொரு நாட்களும் வீணாகவே கழிகின்றன.
அதற்குள் அந்தப் பகையைக் கூட அவன் மாமா மறந்துவிடுகிறார். ஆனால் ஜஸ்டின் மறக்கவில்லை.
விரதம் முடித்து கோயிலுக்குச் சென்று திரும்பி வந்து மாலையைக் கழற்றிய அன்று அந்த எதிரியை
வெட்டிவிடுகிறான் ஜஸ்டின். நீண்ட காலத்துக்குப் பிறகு நியாயத் தீர்ப்பு தினத்தன்று
ஏசுராஜன் முன்னால் அதே ஜஸ்டின் வந்து நிற்கிறான். அவன் கதையைக் கேட்ட ஏசுராஜன் அவனை
சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கிறார். நீண்ட காலத்துக்குப் பிறகு புன்னகைத்தபடியே படித்த
கதை இது. ஜஸ்டினைப் பற்றிய சித்திரம் உருவாக, உருவாக நம் புன்னகையும் பெருகிக்கொண்டே
போகிறது. ஒரு கட்டத்தில் ஜஸ்டினுக்குள் உறைந்திருக்கும் ஏசுராஜனையும் ஏசுராஜனுக்குள்
உறைந்திருக்கும் ஜஸ்டினையும் உணர்ந்துகொள்ளும்போது அந்தப் புன்னகை, இன்னும் மலர்ந்த
புன்னகையாக மாறிவிடுகிறது. அஜிதன் எழுதியிருக்கும் எல்லாக் கதைகளிலும் அந்த மாறாத புன்னகை
சுடர்விட்டபடி இருக்கிறது
அஜிதனின் இரு குறுநாவல்களும் அவருடைய
அடையாளமாக தமிழிலக்கியப் பரப்பில் இன்னும் நீண்ட காலத்துக்கு இடம்பெற்றிருக்கும் என்பது
உறுதி. முன்னுதாரணம் இல்லாத வகையில் அவை அமைந்திருக்கின்றன என்பதே அப்படைப்புகளின்
முதல் தகுதி. ’ஆயிரத்து முந்நூற்றுப்பதினான்கு கப்பல்கள்’ என்னும் குறுநாவல் சின்னஞ்சிறு
பாலகன் என்ற நிலையிலிருந்து சற்றே பெரிய சிறுவன் என்னும் நிலைக்கு மாறும் பருவ வேறுபாட்டின்
சித்திரமாக விரிந்திருக்கிறது. ’மருபூமி’ என்னு குறுநாவல் மலையாள எழுத்தாளரான பஷீரின்
பாலைவனப் பயணமொன்றின் சித்திரமாகவும் அவர் அடையும் ஞானத்தின் சித்திரமாகவும் அமைந்திருக்கிறது.
குறுநாவல் என்னும் வடிவத்தை அஜிதன்
மிகவும் சுதந்திரத்தோடு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதை இவ்விரு குறுநாவல்களையும்
படிக்கும்போது உணர்ந்துகொள்ள முடிகிறது. ஒரு மையக்கதை நேர்க்கோடாக ஓடிக்கொண்டிருக்கும்போதே,
அத்துடன் பல கிளைக்கதைகள் அவற்றுக்குத் தேவையான அளவு நீளத்துடன் இணைந்துகொள்கின்றன.
அதனால், ஒரு குறுநாவல் ஒற்றைக்கதையாக இல்லாமல் ஒரு கதைத்தொகுப்பாக அமைந்துவிடுகின்றது.
ஒரு சிறுவன் பத்மநாபபுரம் வீட்டில்
வசித்த காலத்திலிருந்து நாகர்கோவில் புதுவீட்டுக்குச் செல்லும் காலம் வரைக்குமான சில
ஆண்டுகளில் கண்டதையும் கேட்டதையும் முன்வைக்கும் ஒரு நினைவுத்தொகுப்பாக ’ஆயிரத்து முந்நூற்றுப்பதினான்கு
கப்பல்கள்’ குறுநாவல் அமைந்துள்ளது.
சிறுவனின் வீட்டுக்குப் பக்கத்தில்
நிஷா மாமி வீடு இருக்கிறது. அந்த வீட்டில் ஒரு நாய் இருக்கிறது. அதன் பெயர் குட்டன்.
ஒருநாள் பெருமழையில் அவர்களுடைய வீடு மூழ்கிவிடும் அபாயம் உருவாகிறது. அதனால் அவர்கள்
அவசரமாக அந்த வீட்டிலிருந்து எங்கோ உறவினர் வீட்டுக்குச் சென்றுவிடுகின்றனர். அந்த நெருக்கடிக்கு நடுவிலும் அவர்கள் தம் வளர்ப்புநாயை
அழைத்துச் செல்லவே முயற்சி செய்கின்றனர். ஆனால் வீட்டைவிட்டு எங்கோ சென்றுவிட்டிருந்த
நாயைக் கண்டுபிடிக்க முடியாததால், வேறு வழியில்லாமல் அவர்கள் சென்றுவிடுகிறார்கள்.
ஒரு வாரத்துக்குப் பிறகுதான் மழை நிற்கிறது. அந்த மழைக்காலத்தில் காகிதக்கப்பல் செய்யக்
கற்றுக்கொண்டு கிடைத்த தாளிலெல்லாம் கப்பல் செய்து மழைத்தண்ணீரில் மிதக்கவைத்து வேடிக்கை
பார்த்தபடி பொழுதைப் போக்குகிறான் சிறுவன்.
ஒரு நாள் நிஷா மாமி வீட்டு நாய் அவனுக்கு எதிரில் வந்து நிற்கிறது. அவன் அதை
அருகில் இழுத்து அமரவைத்துக்கொள்கிறான். எதையோ சொல்லி அரற்றுகிறது அந்த நாய். நீண்ட
நேரமாக தன் முதுகைத் தடவிக்கொடுக்கும் சிறுவனின் கையை நாவால் நக்குகிறது. பிறகு ஒரு
முனகலுடன் எழுந்து போய்விடுகிறது. ஒரு விளையாட்டு நாய், அனுபவம் பெற்ற நாயாக முதிர்ச்சியுடன்
விலகிச் செல்கிறது. மழைக்காலம் முடிந்து வெயில் தொடங்கியதும் வீட்டுக்காரர்கள் திரும்பி
வருகிறார்கள். நாயும் திரும்பி வருகிறது. ஆயினும் அவர்கள் தென்னைமரத்தை வெட்டிய இரவில்
நிரந்தரமாகவே வெளியேறிவிடுகிறது.
நாயின் கதையைப்போலவே அந்நினைவுத்தொகுப்பில்
பல கதைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீதேவி டீச்சரின் கதை, பாப்புவின் கதை, அரண்மனையின்
கதை, அ.முத்துலிங்கம் அனுப்பும் சங்கீத வாழ்த்தட்டையின் கதை என சுவாரசியமான நினைவுகள்
கதைநெடுக முன்வைக்கப்பட்டபடி இருக்கின்றன. ஏதோ ஒரு தருணத்தில் அந்த வாழ்த்தட்டை தொலைந்துவிடுகிறது.
பிறகு எப்படியோ கிடைக்கிறது. ஆனால் ஈரத்திலேயே கிடந்ததால் சங்கீதம் கேட்கவில்லை. மனமுடைந்து
அழும் சிறுவனை அவன் தந்தை தேற்றி ஆறுதல் சொற்களைச் சொல்கிறார். பேட்டரி தீர்ந்துபோயிருக்கலாம்
என்று சொல்கிறார். ’தீராத பேட்டரின்னு ஒன்னு உலகத்திலேயே இல்லை’ என்று சொல்கிறார்.
எல்லாவற்றையும் சின்ன விஷயமென நினைத்துக்கொண்டால், கடந்து செல்வது எளிதாகிவிடும் என்பதை
சிறுவனும் புரிந்துகொள்கிறான்.
நாய் தொலைவதிலிருந்து அட்டை தொலைவது
வரையிலான காலம், சிறுவனுடைய வாழ்க்கையில் முக்கியமான ஒரு பகுதியாகும். மீண்டும் சில
மழைக்காலங்களுக்குப் பிறகு அவர்கள் வீடு மாறிச் செல்கிறார்கள். பெட்டி நிறைய சேர்த்துவைத்திருக்கும்
ஆயிரத்து முந்நூற்றுப் பதினான்கு கப்பல்களை என்ன செய்வது என்று கேட்கிறார் சிறுவனின்
தாயார். அவை எதுவும் வேண்டாம் என்று பதில் சொல்கிறான் சிறுவன். அவனுடைய சிந்தனை முதிர்ச்சியின்
அல்லது மனவிரிவின் அடையாளமாக அந்தப் பதில் அமைந்திருக்கிறது.
மக்காவிலிருந்து ரியாத் வழியாக பஹ்ரைனுக்குச்
செல்லும் பஷீரின் பாலைவனப்பயணத்தை களமாகக் கொண்டது மருபூமி குறுநாவல். பாலை என்பதை
பிரிவையும் பிரிவுத்துயரத்தையும் முன்வைக்கும் நிலமென தமிழிலக்கியம் வகுத்துவைத்திருக்கிறது.
பொருளீட்டும் பொருட்டு அனைவரும் பிரிந்து செல்கிறார்கள். நாவலில் பல வணிகக்குழுக்களின்
பயணங்களும் இடம்பெற்றிருக்கின்றன. வணிகம் அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது. ஆனால் பஷீரின்
பயணம் வேறொன்றை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. அந்தப் பயணத்தில் அவர் சந்திக்கும் மனிதர்கள்
அற்புதமானவர்களாக இருக்கிறார்கள். ஒரு வணிகக்குழு அவரைத் தம்மோடு தங்கவைத்து உணவுகொடுத்து,
வழிச்சாப்பாடும் கட்டிக்கொடுத்து அடுத்தநாள் வழியனுப்பி வைக்கிறது. வேறொரு வணிகக்குழு பித்துப் பிடித்த நிலையில் அவரைக் கண்டுபிடித்து
அழைத்துச் சென்று மருத்துவம் செய்து குணப்படுத்தி கப்பலேற்றி வைக்கிறது. அவரும் தம்
கண்ணெதிரில் மரணமடைந்து விழுந்த ஒருவனை அடக்கம் செய்யும் அளவுக்கு மனவிரிவு கொண்டவராக
இருக்கிறார். நிலம்தான் பாலையே தவிர, பாலைமனிதர்கள் அனைவரும் வற்றாத அன்புடன் ஈரம்
நிறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். வற்றாத அன்பு ஒன்றே இந்த உலகில் நாம் அடையத்தக்க
ஞானம் என்று தோன்றுகிறது.
அஜிதன் தன் முன்னுரையில் இந்தத் தொகுப்புடன்
தன் இலக்கியப்பயணத்தை தற்காலிகமாக நிறைவு செய்வதாகவும் ஓரிரு திரைப்படங்களை இயக்கிமுடிக்கும்
வரைக்கும் எதையும் பதிப்பிக்கும் எண்ணம் இல்லை என்று குறிப்பிட்டிருப்பதைப் படிக்கும்போது
அதிர்ச்சியாக இருக்கிறது. அப்படி ஒரு முடிவை அவர் அவசரத்தில் எடுக்கவேண்டாம் என்று
சொல்லத் தோன்றுகிறது. இரு துறைகளிலும் திறம்பட
அவரால் செயல்பட முடியும் என்பது என் நம்பிக்கை.
(மருபூமி.
அஜிதன். சிறுகதைகளும் குறுநாவல்களும். விஷ்ணுபுரம் பதிப்பகம். 1/28. நேரு நகர், கஸ்தூரிநாயக்கன்பாளையம்,
வடவள்ளி, சோவை -641041. விலை. ரூ.330)
(சொல்வனம்
– இணைய இதழ் - 14.04.2024)