Home

Sunday 7 April 2024

நினைவுப்பெட்டகமும் ஒளிவிளக்கும்

  

ஒரு வீட்டில் ஜன்னல் கதவுக்கு மறுபுறத்தில், கம்பிகளுக்கும் கதவுக்கும் இடைப்பட்ட இடத்தில் அணில் கூடு கட்டியிருக்கிறது. அதற்குள் அணில் குஞ்சுகள் கீச்சுகீச்சென சத்தம் போடுகின்றன. வீட்டில் இருப்பவர்கள் அவசரத்துக்கு அந்தக் கதவைத் திறக்க முயற்சி செய்யும்போதெல்லாம் திறக்கவேண்டாம் என எச்சரிக்கைக்குரல் கொடுத்துத் தடுக்கிறார் வீட்டுத்தலைவி. அதே வீட்டின் தோட்டத்தில் நிறைய மரங்கள் உள்ளன. அவ்வப்போது பச்சைக்கிளிகள் அந்த மரங்களில் அமர்ந்து இளைப்பாறிவிட்டுச் செல்கின்றன. இளைப்பாறும் பச்சைக்கிளிகளுக்காக பார்வை படும் இடத்தில் கிண்ணத்தில் தண்ணீரும் தட்டில் அரிசியும் வைத்திருக்கிறார் அவர். அந்த வீட்டு வாசலில் ஒரு பெரிய மாமரமும் இருக்கிறது. ஒரு வண்டியில் ஏற்றும் அளவுக்கு அந்த மரத்தில் பழங்கள் பழுத்துத் தொங்குகின்றன. பறிக்கும் பழங்களை அக்கம்பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிடுகிறார் அவர். பறிக்காத பழங்களை அந்த ஊர்க் குரங்குகள் கூட்டமாக வந்து தினந்தினமும் கும்மாளம் போட்டுத் தின்றுவிட்டுச் செல்கின்றன. இன்று, அந்த அணில்கூடு அப்படியே இருக்கிறது. அந்தக் கிளிகளும் தினமும் வந்து இளைப்பாறிவிட்டுச் செல்கின்றன. குரங்குகளும் வந்து பழம் தின்றுவிட்டுச் செல்கின்றன. ஆனால் அந்த வீட்டுத்தலைவிதான் இல்லை. அவர் புற்றுநோய்க்கு இரையாகி மறைந்துவிட்டார். அவர் பெயர் சித்ரா.

தன் அன்பு மனைவிக்கு செலுத்தும் அஞ்சலியாக கடந்தகால நினைவுகளையெல்லாம் தொகுத்து பாண்டியன் எழுதியிருக்கும் புத்தகம் இப்படித்தான் தொடங்குகிறது. அவருடைய இன்மையின் வழியாக அவருடைய இருப்பின் ஒவ்வொரு கணத்தையும் பேருருவாக்கிப் பார்க்கிறது அவர் மனம். மனைவியின் மறைவுக்குப் பிறகு அவருடன் வாழ்ந்த இருபத்தெட்டு ஆண்டு கால இல்வாழ்க்கையை பாண்டியனின் மனம் அசைபோடுகிறது. ஒவ்வொரு கணத்திலும் அவர் ஊட்டிய நம்பிக்கையை நினைத்துக்கொள்கிறார். உயர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் அடைந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் நினைத்துக்கொள்கிறார். தன் முயற்சியில் ஒவ்வொரு தருணத்திலும் அவர் அருந்துணையாக நின்று பக்கபலமாக விளங்கியதையும் நினைத்துக்கொள்கிறார்.

இருவரும் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். சித்ரா பொருளாதாரம் படித்தவர். பாண்டியன் வணிகவியல் படித்தவர். முதுநிலை பட்டப்படிப்புக்குப் பிறகு, சித்ராவுக்கு பள்ளத்தூரில் சீத்தாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியில் வேலை கிடைத்தது. பாண்டியனுக்கு பொறையாறு தரங்கை பேராயர் மாணிக்கம் கல்லூரியில் வேலை கிடைத்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவனின் தலைமையில் திருமணம் செய்துகொள்கிறார்கள். பள்ளத்தூரில் நிலம் வாங்கி வீடு புது வீடு கட்டி குடிபோகிறார்கள்.  மனைவி பள்ளத்தூரிலேயே இருக்க, அவர் மட்டும் தன் கல்லூரிக்கு அருகிலேயே தங்கிக்கொள்கிறார். வார விடுப்பில் மட்டும் வீட்டுக்கு வந்து செல்கிறார்.  குடும்பப் பொறுப்புகளையெல்லாம் தனியே சுமந்து சமாளிக்கிறார் சித்ரா. அவர்களுக்கு முதலில் பெண் குழந்தையும் அடுத்து ஆண் குழந்தையும் பிறக்கிறார்கள். இருவரும் படித்து கல்வியில் நல்ல நிலையை எய்துகிறார்கள். தக்க பருவத்தில் மகளுக்கு வரன் பார்த்து திருமணம் செய்துவைக்கிறார். சட்டக்கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் மகனுக்கு ஊடகத்துறையில் உள்ள ஆர்வத்தைக் கண்டு ஊக்கப்படுத்துகிறார். நுரையீரலில் அல்லது இதயத்தில் பிரச்சினை இருக்கக்கூடும் என நினைத்து மருத்துவமனையில் சேர்ந்தவருக்கு பரிசோதனைகளுக்குப் பிறகு மிகமுற்றிய நிலையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. உரிய மருத்துவம் அளிக்கப்பட்டபோதும், தீவிரநிலையை அடைந்துவிட்ட நோய் அவருடைய உயிரைக் குடித்துவிடுகிறது.

இருபத்தெட்டு ஆண்டுகால இல்வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் பொங்கியெழும் மனைவி சார்ந்த நினைவுகளை ஏறத்தாழ 230 பக்கங்களில் காட்சிகளாக சித்தரிக்கிறார் முருகுபாண்டியன். அவர் சித்தரிக்கும் தருணங்களின் தனித்தன்மை சித்ரா அவர்களுடைய அன்புள்ளத்தையும் தாய்மையுணர்வையும் கல்வியால் விரிந்த உள்ளத்தையும் புரிந்துகொள்ள உறுதுணையாக உள்ளது.

ஒருமுறை ஏதோ ஊருக்குச் சென்றுவிட்டு இருவரும் காரில் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். பாண்டியன்தான் வண்டியை ஓட்டிக்கொண்டு வருகிரார். எதிர்பாராத விதமாக சாலையில் ஒரு பெரிய நண்டு ஊர்ந்துசெல்கிறது. இருவருமே அதைப் பார்க்கிறார்கள். பாண்டியன் அந்த நண்டைத் தவிர்க்க எந்த முயற்சியும் செய்யாமல் அந்த நண்டின் மீது வண்டியை ஏற்றிவிடுகிறார். நண்டு அந்த இடத்திலேயே நசுங்கிக் கூழாகிவிடுகிறது. பாண்டியன் காட்டிய அலட்சியமும் நண்டின் மரணமும் சித்ராவின் மனத்தைப் பெரிதும் பாதித்துவிடுகின்றன. ஏன் நண்டின் மீது வண்டியை ஏற்றினீர்கள் என்று கணவனைப் பார்த்துக் கேட்கிறார். வேகமாக வந்ததில் கவனிக்கவில்லை என்று அவர் சொன்ன பதிலை அவரால் செரித்துக்கொள்ளமுடியவில்லை. “இந்த ரோடு என்ன உங்களுக்கு மட்டும் சொந்தமானது என நினைத்துக்கொண்டீர்களா?” என்று கணவனைக் கடிந்துகொள்கிறார். மனைவியின் கோபத்தைக் கண்ட கணவன் தன் தவற்றை உணர்ந்தவராக இனிமேல் ஒழுங்காக கவனத்துடன் ஓட்டுவதாக வாக்களிக்கிறார். ஆனாலும் அந்த நண்டின் மரணத்தால் திகைத்துவிட்ட அவர் அடுத்த நாள் காலை வரைக்கும் கணவருடன் பேசாமலேயே பொழுதைக் கழிக்கிறார். ஓர் எளிய உயிரினத்தின் மீது அவர் கொண்ட அன்புதான், குடும்பத்தினர் மீதும், உற்றார் உறவினர் மீதும், பணிசார்ந்த சூழலிலும், பிற பொது இடங்களிலும் பேரன்பாக வெளிப்படுகிறது.

சித்ராவின் அக்கா மகாராஷ்டிரா மாநிலத்தில் போலாட்பூர் என்னும் இடத்தில் மருத்துவராகப் பணிபுரிகிறார். ஒரு கோடை விடுமுறையில் பாண்டியன் குடும்பத்துடன்  அங்கே செல்கிறார். போலாட்பூருக்கு அருகில் உள்ள நகரம் மஹத். அம்பேத்கர் தலைமையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சத்தியாகிரகம் அந்த நகரத்தில்தான் நடைபெற்றது. சாதி இந்துக்கள் பயன்படுத்தும் குளங்களையும் கிணறுகளையும் தாழ்த்தப்பட்டோர் பயன்படுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த சூழலில் 1923 ஆகஸ்டு மாத்தில் பம்பாய் சட்டமன்றம், அரசால் நிறுவப்பட்டும் பராமரிக்கப்பட்டும் எல்லா இடங்களையும் ஒடுக்கப்பட்ட மக்களும் பயன்படுத்த அனுமதி வழங்கி ஒரு சட்டம் இயற்றியது. நான்கு மாத இடைவெளியில் அதே போன்ற ஒரு தீர்மானத்தை மஹத் நகராட்சி  இயற்றியது. ஆயினும் மஹத் நகரத்தைச் சேர்ந்த சாதி இந்துக்களின் எதிர்ப்பால் அத்தீர்மானம் தோல்வியடைந்தது. 19.03.1927, 20.03.1927 ஆகிய இரு தினங்களில் மஹத் நகரில் மோரே என்பவர் மாநாடு ஒன்றை நடத்தினார். அம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அம்பேத்கர் வந்தார். மாநாட்டின் முடிவில் அம்பேத்கர் தலைமையில் ஒரு பெரிய ஊர்வலமொன்று அருகிலிருந்த சவதார் குளத்தை நோக்கிச் சென்றது. அக்குளத்தில் இறங்கி நின்ற அம்பேத்கர் முதன்முதலாக தன் கைகளால் நீரை அள்ளி அருந்தினார். அவரைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் அருந்தினர். அவ்வரலாற்றுத் தருணத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் அறியும் வகையில் அக்குளத்துக்கு அருகில் அம்பேத்கருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்தச் சத்தியாகிரகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த சித்ரா அருகிலிருந்த பூக்கடைக்குச் சென்று பூக்களை வாங்கி வந்து அண்ணலின் காலடியில் வைத்து வணங்கினார். குளத்தைச் சுற்றி வந்து, தூய்மையான அதன் தண்ணீரை அள்ளிப் பருகி மகிழ்ந்தார்.

இரக்கமனம் கொண்ட சித்ரா எந்த வேறுபாடும் பார்க்காமல் எளியோருக்கு எப்போதும் உதவி வந்தார். செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வறுமையின் காரணமாக ஒவ்வொரு வீடாகச் சென்று பழைய செய்தித்தாட்களைச் சேகரித்துச் சென்று கடையில் விற்கும் வேலையைப் பார்த்துவந்தார். ஒவ்வொரு மாதமும் தவறமால் சித்ராவின் வீட்டுக்கும் வந்து செய்தித்தாட்களைச் சேகரித்துக்கொண்டு செல்வார். ஒருமுறை அவருடன் பேசி, அவருடைய கதையைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பிறகு, பழைய செய்தித்தாட்களை இலவசமாகவே எடுத்துச் செல்லும்படி சொல்லத் தொடங்கினார் சித்ரா. நீண்ட காலம் அப்பழக்கம் தொடர்ந்தது. ஒருமுறை அவர் தன் மகளுக்குத் திருமணம் வைத்திருப்பதாகவும் ஏதாவது உதவி செய்யமுடியுமா என்றும் கேட்டார். உடனே அவரோடு பாத்திரக்கடைக்குச் சென்று திருமணச்சீருக்குத் தேவையான பாத்திரங்களை வாங்கி தன் அன்பளிப்பாகக் கொடுத்தனுப்பினார்.

ஒருமுறை ஏதோ ஒரு வாரப்பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளிவந்தது. பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணியாற்றிய ஒருவர் துணைவேந்தராக பதவி உயர்வு பெற்றதை பிழைபடச் சித்தரித்து அந்தப் பத்திரிகை  ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. ஒரு மூத்த அரசியல்வாதியின் துணையோடுதான் அவர் அப்பதவியை அடைந்தார் என  அக்கட்டுரையில் சிறுமைப்படுத்தி எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்து சீற்றம் கொண்டார் சித்ரா. ஒரு பெண் இச்சமூகத்தில் முன்னேறி வருவது என்பது மிகப்பெரிய போராட்டம். அது நடைமுறை உண்மை. அந்த உழைப்பைச் சிறுமைப்படுத்தி கண்ணியக்குறைவாக கட்டுரையாளர் எழுதியதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதைக் கொண்டுவந்து படிப்பதற்குக் கொடுத்த கணவரையே அவர் கடிந்துகொள்ளும் அளவுக்கு அவர் உள்ளூர சீற்றம் கொண்டிருந்தார்.

அவருடைய கல்லூரியில் மெய்யர் என்னும் பெயருடைய ஒருவர் தற்காலிகமாக தச்சுவேலை செய்துவந்தார். புத்தகத்தாங்கிகளைச் செய்து பராமரிப்பதுதான் அவர் வேலை. எதிர்பாராத விதமாக ஒருநாள் அவர் பேருந்து மோதி உயிரிழந்தார். எளிய ஊழியர் என்றபோதும், அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு திரும்பினார். அவருடைய குடும்ப நிலையை நேரில் கண்ட பிறகு, அவர்களுக்கு ஏதேனும் நிதியுதவி செய்யவேண்டும் என விரும்பினார். அக்கணமே கல்லூரியில் பணிபுரியும் பிற ஆசிரியர்களிடமும் அதைப்பற்றி கலந்து பேசினார். உடனே தன் மேசையிலிருந்து ஒரு தாளை எடுத்து முதலாவதாக தன் பெயரை எழுதி  தன் பையிலிருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து நிதி வசூலைத் தொடங்கினார். கல்லூரியில் பனிபுரிந்த அனைவருமே தம்மால் ஆன உதவிகளைச் செய்தனர். பிறகு அத்தொகை அக்குடும்பத்திடம் சேர்க்கப்பட்டது. அக்குடும்பத்தினரிடம் தொகையைச் சேர்த்துவிட்டுத் திரும்பிய சிப்பந்தி சித்ராவிடம் வந்து “உங்களுக்கு ரொம்ப நல்ல மனசும்மா. எல்லாரையும் விட நீங்கதாம்மா ரொம்ப ரொம்ப அதிகமா கொடுத்திருந்தீங்கம்மா” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

பள்ளத்தூரில் வழக்கமாக அவருக்குரிய ஆடைகளைத் தைத்துக்கொடுக்கும் தையல்கலைஞர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ஆண்டியப்பன். ஒருநாள் அவர் ஓர் உதவி கேட்டு சித்ராவைச் சந்திக்க வந்தார். தையல்கலைஞரின் மகள் பொறியியல் படிப்பை முடித்த பட்டதாரி.  அவருக்கு டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.  ஆனால் அவருடைய நன்னடத்தைக்கும் நிதிநிலைமைக்கும் வேறொருவர் உறுதிப்பத்திரம் அளிக்கவேண்டும். பத்திரம் அளிப்பவர் அரசு வேலையில் இருப்பவராக இருக்கவேண்டும். ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவராகவும் இருக்கவேண்டும். அதற்கு ஆதாரமாக, அவர்கள் தன்னுடைய சம்பளச்சான்றிதழையும் அளிக்கவேண்டும், ஆண்டியப்பன் பல இடங்களில் முட்டி மோதி அலைந்தார். அவ்வளவு நிபந்தனைகளுடன் அவருக்கு உறுதிப்பத்திரம் அளிக்க ஒருவரும் முன்வரவில்லை.  பல இடங்களில் அலைந்து திரிந்துவிட்டு சித்ராவைச் சந்திக்க ஒருநாள் வந்தார் அவர். அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு, ஓர் இளம்பெண் முன்னேற்றத்திசையில் செல்வதற்குத் துணையாக இருக்கவேண்டியது தம் கடமை என்ற ஒரே எண்ணத்தில், ஒரே நாளில் சம்பளச் சான்றிதழோடு உறுதிப்பத்திரத்தையும் கொடுத்து அனுப்பிவைத்தார்.

ஒருமுறை அவருடைய வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மறைந்துவிட்டார். வழக்கமாக நகரங்களில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களை, சொந்த வீட்டுக்காரர்கள் மரணவீட்டுச் சடங்குகளைச் செய்ய அனுபதிப்பதில்லை, என்ன செய்வது என்று புரியாமல் வாடகைக்குக் குடியிருப்பவர் தயங்கிக்கொண்டிருந்த போது சித்ரா எந்த மறுப்பும் சொல்லாமல் மருத்துவமனையிலிருந்து உடலை வீட்டுக்கு எடுத்துவந்து இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்யுமாறு சொன்னார். சம்பிரதாயங்களைவிடவும் நம்பிக்கைகளைவிடவும் மனித நேயமே முக்கியம் என்ற எண்ணம் கொண்டவராக வாழ்ந்தார் சித்ரா.

பாண்டியனின் இலக்கிய ஆர்வத்தால் உருவான அமைப்பின் பெயர் போதி. அதன் சார்பில் மாதந்தோறும் ஓர் இலக்கிய நிகழ்ச்சியை தன் வீட்டு மாடியிலேயே நடத்தினார் அவர். ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 75 பேர் கலந்துகொள்ளும்  அந்நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் அவர் வீட்டிலேயே இரவு உணவும் கிடைக்க ஏற்பாடு செய்தார். அதே உபசரிப்புடன் எழுபதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் தன் வீட்டு மாடியிலேயே தொடர்ந்து நடைபெற உறுதுணையாக இருந்தார் சித்ரா.

இறுதிக்கணம் வரைக்கும் அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பாங்கு கொண்டவராகவே சித்ரா வாழ்ந்தார் என்பதை உணரமுடிகிறது. மருத்துவமனையில் தங்க நேர்ந்தால் கூடுதலாக உடைகள் தேவைப்படும் என நினைத்து ஒரு பையில் நான்கைந்து புடவைகளை வைத்துக்கொண்டு எடுத்து வந்தார் பாண்டியன். ஏதோ ஒரு புள்ளியில் இனி அவை தனக்குத் தேவைப்படாது என உணர்ந்ததும் கணவரை அழைத்து அந்தப் புடவைகளை மருத்துவமனையில் பணிபுரியும் பணிப்பெண்ணிடம் கொடுத்துவிடும்படி சொல்கிறார்.

வாழ்க்கையை இருவிதமாகப் பிரித்துப் பார்க்கமுடியும் என்று சொல்வதுண்டு. கண்ணுக்குத் தென்படுவதையெல்லாம் எனக்கு எனக்கு என்று தொட்டுப் பார்த்து எல்லாவற்றிலிருந்தும் முடிந்தவரை தனக்குரிய பங்கை எடுத்துக்கொண்டு தன்னிடம் வைத்துக்கொள்வதும் அதையே காலம் முழுதும் பார்த்துப்பார்த்து பூரிப்பதும் பெருமைப்படுவதுமாக வாழ்வது ஒரு வாழ்க்கை.  தன்னிடம் இருப்பதையெல்லாம் அவை தேவைப்படுகிற நிலையில் உள்ள பிறருக்கு முடிந்த அளவுக்கு எடுத்து எடுத்துக் கொடுப்பதும் அவர்களுக்கு நிறைவளிக்கும் வகையில் ஏதோ ஒரு செயலைச் செய்வதற்கு தனக்குக் கிடைத்த வாய்ப்பாக அதைக் கருதி மகிழ்ச்சியடைவதும் நிறைவடைவதுமாக வாழ்வது இன்னொரு வாழ்க்கை. எப்படி வாழப் போகிறோம் என்பது நம்முடைய தேர்வாகவே அமைந்திருக்கிறது. அறச்செல்வி சித்ரா இரண்டாவது வழியிலான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து மனநிறைவான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் என்பதை பாண்டியனின் சொற்சித்திரங்கள் உணர்த்துகின்றன. குறுகிய காலமே வாழ்ந்தார் என்பது ஒரு சிறிய மனக்குறையாகத் தோன்றலாம். ஆனால் தம் வாழ்நாள் முழுதும் நிறைவாக வாழ்ந்தார் என்ற கோணத்தில் நினைத்தால், அது மிகப்பெரிய பேறு என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

தமிழ்ச்சூழலில் பொதுவாக கணவன்மார்கள் தன் மனைவியைப்பற்றியோ, மனைவிமார்கள் தன் கணவனைப்பற்றியோ புத்தகம் எழுதியதில்லை. நெடுங்காலம் முன்பு ’பாரதியார் சரித்திரம்’ என்ற தலைப்பில் அவருடைய மனைவி செல்லம்மாள் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். வெ.சாமிநாத சர்மா தன் மனைவியின் பிரிவால் உருவான துயரத்தை ஆற்றிக்கொள்ளும் விதமான ’அவள் பிரிவு’ என்னும் நூலை எழுதினார். இப்போது அரச.முருகுபாண்டியன் தம் இணையரைப்பற்றி எழுதிய நூல் வந்திருக்கிறது.

அரச.முருகபாண்டியன் – சித்ரா இணையரின் குடும்பத்தினருக்கு இது ஒரு முக்கியமான நினைவுப்பெட்டகமாக இருக்கும். நம் சமூகத்துக்கு, ஒத்த மனப்போக்கு கொண்ட இணையரால் எத்தகைய உயர்வான வாழ்க்கையை வாழமுடியும் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கும் ஒளிவிளக்காகவும் இருக்கும்.

 

(அறச்செல்வி சித்ரா . வாழ்க்கைக்குறிப்புகள். அரச.முருகுபாண்டியன், புலம் வெளியீடு, 133, தரைத்தளம், 3வது பிரதான சாலை, நடேசன் நகர், சென்னை – 92. விலை. ரூ.300 )

 

(புக் டே – இணையதளம் – 02.04.2024)