Home

Monday 29 April 2024

இருவேறு நிலைகள்


எப்போதும் ஒரே திசையில் ஒரே சீராக  இயங்கும் எந்திரம்போல மனிதமனம் இயங்குவதில்லை. அது இயங்கும் சூத்திரம் ஒவ்வொரு மனத்துக்கும் வேறுபடுகிறது. எத்தனை கோடி மனிதர்கள் இந்த உலகில் இருக்கிறார்களோ, அத்தனை கோடி சூத்திரங்கள் மனத்துக்குண்டு. அவை அனைத்தையும் ஒரு வாழ்நாளில் ஒருவரால் அறிந்துகொள்ள முடிவதில்லை. அந்த முயற்சியை கதைகள் ஆற்றுகின்றன. கீழ்ப்புள்ளியையும் மேல்புள்ளியையும் இணைத்தபடி மேலும்கீழுமாக அலையும் சிக்குக்கோலம்போல உன்னதத்துக்கும் கீழ்மைக்கும் நடுவில் எப்போதும் ஊடாடி அலைகிறது மனம். வண்ணதாசனின் கதைகள் இந்தப் பயணத்தைப் பின்தொடர்ந்து செல்கின்றன. வெவ்வேறு களங்கள், வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு தருணங்கள் என அவருடைய கதைகள் அமைந்தாலும் அவை மனத்தின் விசித்திர இயக்கத்தை முன்வைப்பவையாகவே உள்ளன. ஒரு மரத்துப்பழங்கள் என்பதாலேயே எல்லாம் ஒரே சுவையுள்ளவையாக இருப்பதில்லை. ஒரே மனத்திலிருந்து  உதிப்பவை என்பதாலேயே எண்ணங்கள் அனைத்தும் ஒரே தரத்தில் அமைந்துவிடுவதில்லை. ஒன்றில் மலர். ஒன்றில் முள். மற்றொன்றில் வெறும் அழுக்கு.

வண்ணதாசனின் மதுரம் தொகுப்பு இந்தக் கோணத்தில் இயங்கும் கதைகளை முதன்மையாகக் கொண்டிருக்கிறது.  தொகுப்பின் முக்கியமான சிறுகதை என்று சொல்லத்தக்க நடுவில் இருக்கிற பெண். வரையறுத்துச் சொல்லமுடியாதபடி ஆண்களிடமும் பெண்களிடமும் இயங்கும் இருவேறு விசித்திரமான மனநிலைகளை அடையாளம் காட்டும் கதை. ’உடம்பு மட்டுமே உடம்பில் இருக்கும் ஒரு பெண் நான் உயரத்தில் தூக்கியிருந்த வெற்றுச்சட்டகத்துக்குள் தூரத்தில் போய்க்கொண்டிருந்தாள்என்று முடிகிறது அந்தக் கதை. மறைந்துபோன ஓவியர் ஒருவரின் மனைவிக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு இன்னொரு ஓவியர் தன்னுடைய ஓர் ஓவியத்தைச் சட்டகமிட்டு எடுத்துச் செல்கிறார். கடலைப் பார்த்தபடி ஒரு பாறையின் மீது அமர்ந்திருக்கும் ஒரு பூனையின் ஓவியம் அது. தந்திரக்காரப்பூனை கடலைப் பார்த்து ஏன் நிற்கிறது? கடலைக் கண்டு என்ன நினைக்கிறது? கடல்முழுக்க பாலாக இருந்தால் குடித்துத் தீர்த்துவிடலாம் என நினைக்கிறதா? அல்லது தான் அருந்துவதற்குத் தேடிவந்த பால் கடலில் கரைந்துநிற்பதைப் பார்த்துத் திகைத்துநிற்கிறதா?  ஒருவேளை அந்த ஓவியர் தன் விழைவையே பூனையின் கண்களில் நிறைத்து வரைந்திருக்கிறாரா? தன்னையறியாமலேயே தன்னைத்தானே அவர் வரைந்துகொண்டாரா? இப்படி அந்த ஓவியம் சார்ந்து மனத்தில் எண்ணற்ற கேள்விகளை அடுக்கிக்கொள்ளும் தருணத்தில்தான் அந்தச் சந்திப்பு நிகழ்கிறது.  சந்திப்பின் முடிவில்தான் மேலே எழுதப்பட்டிருக்கும் எண்ணம் அவர் மனத்தில் எழுந்து உறைகிறது.

அந்த ஓவியரின் மனைவியும் இவருக்குக் கொடுப்பதற்கென தன் கணவர் வரைந்த ஓவியமொன்றை எடுத்துவந்திருக்கிறார். ஏசுவும் அவரைச் சூழ்ந்து நிற்கிற ஆண்களும் பெண்களும் நிறைந்த ஈஸ்டர் சித்தரிப்பைக் கொண்ட ஓவியம். மேலைநாட்டு ஓவியமொன்றின் பிரதியாக வரைந்த ஓவியர் ஒரே ஒரு மாற்றத்தைச் செய்திருக்கிறார். தன் மனைவியின் முகச்சாயல் கொண்டவளாக நடுவில் நிற்கும் பெண்ணொருத்தியைத் தீட்டியிருக்கிறார். ஏசுவுக்கு அருகில் நடுவில் நிற்கும் பெண்ணாக மனைவியைத் தீட்டிப் பார்த்த ஓவியர் நடுவயதிலேயே ஏசுவோடு கரைந்துவிட, ஓவியரின் நினைவுகளை மனத்தில் நிறைத்துக்கொண்ட நடுவயது மனைவி, அந்த நினைவுகளிலேயே திளைத்துத்திளைத்து அசைபோட்டபடி வாழ்கிறார்தன் கணவர் தீட்டிய அந்த ஓவியத்தைத்தான் அன்பளிப்பாகக் கொடுப்பதற்குக் கொண்டுவந்திருக்கிறார். இருவருக்கும் இருவேறு மனநிலைகள். உடம்பை வெறும் உடம்பாக மட்டுமே பார்க்கும் ஆண். ஓவியத்திலிருந்து ஓவியம் முற்றிலுமாக மறைந்துவிட, வரைந்த ஓவியரின் நினைவுகளைப் பொங்கவைக்கும் ஊற்றாக மாற்றி வாழ்வில் திளைக்கும் பெண்.

இதற்கு நேர்மாறான ஆணும் பெண்ணும்கூட இதே கதையில் இடம்பெற்றிருக்கிறார்கள். நோயில் விழுந்திருக்கும் ஆண். அவர் பழங்கால உணர்வின் உச்சத்தில் தன்னிலை இழக்கும்போதெல்லாம் அருகில் நின்று அவரைத் தணித்து நிகழ்காலத்துக்கு அழைத்துவரும் பெண். தன்னைச் சமநிலையில் வைத்திருக்கும் பொருட்டு அவர் பாடுவது திருவையாறு பதிக வரிகள். கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ்வதற்குப் பாடப்படவேண்டிய பதிகமாக நம்பப்படும் அப்பரின் வரிகள். இந்த உலகமே சிவசக்தி வடிவமென எழுந்த எண்ணத்தால் உருவான வரிகள். உடல்கள் என்பதே இல்லாத உலகம் அது.

இன்னொரு விசித்திரமான ஆணும் பெண்ணும் இதே கதையில் வாய்மொழிக்குறிப்புகள் வழியாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதையும் சொல்லவேண்டும். மூன்று மனைவிகளை மணந்துகொண்டு அழகான வீடு, தோட்டம் என வாழும் ஆண். உடம்பில் உடம்பு மட்டுமே இருக்கிற  நிர்வாண ஓவியங்களை பொழுதுபோக்காக வரையும் அவருடைய மூன்றாவது மனைவியான பெண்.

இவர் இப்படித்தான் என வரையறுத்துச் சொல்லமுடியாதபடிதான் மனிதர்கள் வாழ்கிறார்கள். புதிரான மனிதர்களின் கலவையை, புதிரின் சிக்கலை விலக்கி நமக்குக் காட்டுகின்றன வண்ணதாசனின் கதை.  இக்கதையில் நோயாளியின் வீட்டில் தொங்கும் ஓர் ஓவியம்பற்றி போகிறபோக்கில்  எழுதிச் செல்கிறார் வண்ணதாசன். படித்துச் செல்கிற வேகத்தில் வாசகனின் கவனத்திலிருந்து பிசகிவிடச் சாத்தியமுடையவை அவ்வரிகள். ஆனால் மிகமுக்கியமான குறிப்பு அது. வீட்டிலிருந்து அமலியம்மா வருவதற்குக் காத்திருக்கும் ஓவியனின் பார்வை அந்த ஓவியத்தின்மீது படிகிறது. அந்த ஓவியத்தில் நாக்கைத் தொங்கப் போட்டிருக்கும் ஒரு நாயும் அதை மடிமீது வைத்து வருடிக்கொடுக்கும் ஒரு பெண்ணும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எல்லா ஆண்களுமே ஏதேனும் ஒரு கணத்தில் இப்படி நாக்கைத் தொங்கப்போட்டபடி நிற்கும் நாய்களாகவே   இருக்கிறார்கள். நாய்களின் எண்ணங்களை அறிந்தோ அறியாமலோ மடியில் தூக்கிவைத்துக் கொஞ்சுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். விசித்திரமான இருவேறு நிலைகள்.

இருவேறு மனநிலைகளைக் காட்டும் இன்னொரு சிறுகதை மதுரம். சி.ஜி. என நட்பு வட்டாரத்தில் அழைக்கப்படும் சிதம்பரம் கணபதியப்பன் தன் இறுதிக்காலத்தில் மகன் பழனியப்பன் வீட்டில் கழித்து மறைந்துபோகிறார். அவர் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவ்வப்போது அவரை தொலைபேசியில் அழைத்து உரையாடுபவர் அவருடைய தோழி மதுரம். இப்படி இருவர் இந்தக் கதையில் இடம்பெற்றிருக்கிறார்கள். ”மத்த நேரத்துல எல்லாம் பேசுதது எட்டு வீட்டுக்குக் கேக்கும். இப்ப மாத்திரம் ஊமைப்படம் மாதிரி உதடு அசையுதது மட்டும்தான் தெரியுதுஎன்று வாய்விட்டுச் சொல்லிச் சுட்டிக்காட்டும் பழனியப்பனின் மனைவி தெய்வானை. ஒரு தொலைபேசிக்காகக் காத்திருந்து தணிந்த குரலில் பேசுவதை ரம்மியமான காட்சியாக மனத்துக்குள் நினைத்துக்கொள்ளும் அவள் கணவன் பழனியப்பன். இப்படியும் இருவர் இதே கதையில் இடம்பெற்றிருக்கிறார்கள். புற்றுநோயின் காரணமாக தெய்வானையின் ஒருபக்க மார்பை எடுத்துவிடுகிறார்கள்.  ஒருநாள் அவளைப் பார்க்க மருத்துவமனைக்கு வருகிறாள் மதுரத்தின் மகள் ஷைலஜா. அவள் வருகையை ஒட்டிய சம்பங்களாகத்தான் கதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

அவளைப் பெயர்சொல்லிக் கூப்பிட வாய்வராத பழனியப்பன் அவள் தன் தந்தையைப்பற்றியும் மதுரத்தைப்பற்றியும் சொல்லும் பழைய சம்பவங்களையெல்லாம் கேட்டுக்கொள்கிறான். வீட்டுக்குள் முதன்முதலாக வந்த மதுரத்தை வா என்று கூட அழைக்காத விஷயம் முதல் ஒரு சொல்கூட  உரையாடாமல் மெளனமாக இருந்து தன்னுடைய தோழியை வீட்டிலிருப்பவர்கள் அவமதித்துவிட்டதாகக் கருதி மனச்சுமை தாளாமல் கண்ணீர்விட்ட தந்தையை நெற்றியில் முத்தமிட்டு மார்போடு அணைத்து மதுரம் அமைதிப்படுத்திய விஷயம் வரைக்கும் ஷைலஜா சொல்கிறாள். அப்படி ஒரு விஷயம் நடந்ததே பழனியப்பனுக்குத் தெரியவில்லை. அவனுக்கு இது ஆச்சரியமாகவே இருக்கிறது. ஆனால் தன் மனைவி தெய்வானை அதை நேருக்குநேர் பார்த்திருக்கிறாள் என்னும் விஷயம் இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. அவள் தன்னிடம் அதைப் பகிர்ந்துகொள்ளாமல் தவிர்த்திருக்கும் விஷயம் அதைவிட ஆச்சரியமாக இருக்கிறது. தொலைபேசியில் உரையாடுவதை ஊமைப்படம் மாதிரி பேசறாருஎன்று சொல்லிப் பகிர்ந்துகொள்ளும் தெய்வானை முத்தமிட்ட காட்சியைப்பற்றி ஒரு சொல்கூட இன்றி மெளனமாகத் தவிர்த்துவிடுகிறாள். அவளுக்கிருக்கும் அந்தப் பக்குவமான மனநிலை ஒருபுறம். ஒரு பெண்ணின் பெயரைக்கூட சொல்லி அழைக்க வாய்வராத ஆணாகவே இருக்கிற பழனியப்பன் இன்னொருபுறம். இரண்டும் இருவிதமான மனநிலைகள். இவர்களுக்கு இடையில்தான் மதுரத்தின் அன்பும் தன் ஸ்கூட்டியில் தனக்குப் பின்னால் பழனியப்பனை உட்காரவைத்து அழைத்துவரும் ஷைலஜாவின் தயக்கமின்மையும்கணேஷ் பெரியப்பாவின் ரூம் எங்க இருக்கு?” என்று கேட்கிற வெளிப்படைத்தன்மையும் இடம்பெற்றிருக்கின்றன. வாழ்க்கை சிலரை மதுரமான வகையில் வாழ அனுமதித்திருக்கிறது. ஏதோ ஒரு கணத்தில் எப்படியோ இருந்தாலும் இன்னொரு கணத்தில் மதுரம் நிறைந்தவர்களாக மாறி வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள். எப்படி வாழ்ந்தாலும் மதுரத்தை எட்ட முடியாதவர்களும் இருக்கிறார்கள். தண்டாமரையின் உடன்பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம் போல மதுரத்தின் அருகில் நிற்கும் வாய்ப்பு அமையப்பெற்றாலும் மதுரத்தை அறியவே முடியாத வாழ்க்கை அது.

ஒரு நினைவையே மதுரமாகக் கருதி தனக்குள் நிரப்பிவைத்திருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சொல்லும் சிறுகதை அதற்கு மேல். தன் திருமணத்தை ஒட்டி அன்பளிப்பாக பூபதி கொண்டுவந்த நாய்க்குட்டியை அனைத்திற்கும் மேலாக நினைக்கிற சுலோச்சனா. அவள் விருப்பப்படி நாயை வளர்க்கவும் செல்லம்கொஞ்சவும் அருகிலேயே வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கும் சுலோச்சனாவின் கணவன் பரிமேலழகர். இவர்கள் ஒருபுறம். மனவளக்கலை மன்றத்துக்கு பயிற்சிக்குச் சென்ற இடத்தில் அறிமுகமான சுலோச்சனாவை நெருங்கிய தோழியாக நினைத்துப் பழகும் காந்திமதியும் அவள் கணவன் ராமராஜனும் இன்னொரு புறம். வெளியூர் போகும்போது தன் வளர்ப்புநாயைக் கொண்டுவந்து பார்த்துக்கொள்ளும்படி விட்டுச்செல்லும் அளவுக்கு காந்திமதிக்கும் சுலோச்சனாவுக்கும் இடையில் நட்பு வளர்ந்துவிடுகிறது. ஒரு மழைநாளில் ஆட்டோவில் திரும்பிவரும்போது தற்செயலாக ஒரு கடையின் விளிம்பில் நாயை அணைத்தபடி ஒதுங்கி நிற்கும் சுலோச்சனாவை இருவரும் பார்க்கிறார்கள். அவளை அழைத்து ஆட்டோவுக்குள் உட்கார வைக்கிறார்கள். அப்போதுதான் அவள் நாய்க்கு உடல்நிலை சரியில்லாததையும் மருத்துவரைப் பார்த்துவிட்டு வருவதையும் சொல்கிறாள் சுலோச்சனா. அந்தத் தருணத்தில்தான் நாய்க்குட்டியின் துக்கத்தைப் பார்க்க தாளாமுடியாமல் உடைந்த குரலில் அது தன் திருமணத்தன்று பூபதி கொடுத்த நாய்க்குட்டி என்றும் மூன்று நாட்களுக்கு முன்னால் அவன் தற்கொலை செய்துகொண்டான் என்றும் மனமுடைந்து சொல்கிறாள். ஒன்பது ஆண்டுகளாக தன்னோடு வளர்ந்துவரும் நாய் அவன் மரணமடைந்த நாள்முதலாக உணவைத் தொடாமல் ஒதுங்கி வாடி வருவதையும் சொல்லி அழுகிறாள். மகிழ்ச்சியாக இருப்பவளாகத் தோற்றம் தரும் ஒரு பெண் தனக்குள் பல எண்ணங்களையும் ரகசியங்களையும் புதைத்து வாழும் விசித்திரம் ஒருபுறம். ஒருத்தியின் புடவைத்தலைப்பு விலகியிருப்பதைப் பார்த்துச் சொல்லத் தெரிகிற ஒருவன்  மேல் அடுக்குகளை விலக்கி மன ஆழத்தைப் பார்க்கும் நுட்பத்தை மிகமிகத் தாமதமாக அறிந்துகொள்ளும் விசித்திரம் இன்னொருபுறம். ஒன்பது ஆண்டுகளாக வளர்த்தவர்களைவிட குட்டிப் பருவத்தில் தூக்கிவைத்திருந்தவனின் மரணத்தை எப்படியோ அறிந்துகொண்டு தானும் மரணத்தைத் தழுவ நினைத்து அமைதி காக்கும் நாயின் மனநிலை எல்லாவற்றையும்விட விசித்திரம் நிறைந்தது. மங்கலான படக்காட்சிகளைப்போல எல்லா விசித்திரங்களையும்  தொட்டுக்காட்டிச் செல்கிறது வண்ணதாசனின் சிறுகதை.

மனத்தின் விசித்திர நிலைகளை முன்வைக்கும் இன்னொரு சிறுகதை வித்தை. இக்கதையில் இடம்பெறும் சாஸ்தா ஒரு தச்சுக்கலைஞன். அவன் மணம்செய்ய விரும்பிய பெண் பெத்தம்மா. திருமணத்துக்கு தடைசொன்னதால், அவளை அழைத்துக்கொண்டு குன்றின் அடிவாரத்தில் வீடுகட்டிக்கொண்டு வாழ்க்கையை வாழத் தொடங்குகிறான் அவன். அவன் கைவண்ணத்தால் உருவாகும் சிற்பக்காட்சிகள் நிறைந்த  நிலைக்கதவுகளை விரும்புகிறவர்கள் பல ஊர்களிலும் இருந்தார்கள். அதனால் அடிக்கடி அவன் வெளியூர் செல்லவேண்டியிருந்தது. தனிமையில் வாடும் பெத்தம்மாவுக்குத் ஒரு நாயைக் கொண்டுவருகிறான். கம்பிக்கூண்டுபோலவே காட்சியளிக்கும் மரக்கூண்டைச் செய்துகொடுத்து, அதில் வளர்க்க இரு கிளிகளையும் எங்கிருந்தோ கொண்டுவந்து அளிக்கிறான். கூண்டுக்கிளிகள் வாழ்ந்து வளர்ச்சியடைகின்றன. வேலைக்காக ஒருநாள் வெளியூருக்குப் புறப்படும்போதுகூண்டுக்கதவைத் திறந்துவை. சாத்தவேண்டாம். தானாகவே ஒன்று பறந்துபோகும். ஒன்று அப்படியே இருக்கும்என்று சொல்லிவிட்டுச் செல்கிறான். அவன் சொன்னபடியே ஒரு கிளி பறந்துவிட, ஒன்று மட்டுமே எஞ்சிநிற்கிறது. ஒருநாள் குஞ்சுகள் பெருகி நிற்கின்றன. பெத்தம்மாவுக்கு அய்யம்மா பிறக்கிறாள். கிளிகள் வளர்கின்றன. ஆனால் வழக்கம்போல ஒன்றுமட்டுமே எஞ்ச, மற்றவை பறந்துவிடுகின்றன. பறந்துபோகும் கிளிபோல சாஸ்தாவும் ஒருநாள் பெத்தம்மாவைவிட்டு பறந்துபோய்விடுகிறான். அய்யம்மா வளர்ந்து வாழ்ந்து பிள்ளைப்பேறுக்குக் காத்திருக்கும் தருணத்தில் பெத்தம்மாவும் போய்விடுகிறாள். வாயும் வயிறுமாக இருக்கிற அய்யம்மாவையும் அவள் ஆசையோடு வளர்த்த நாயையும் கூண்டுக்கிளியையும் அழகர் வீட்டுக்கு அழைத்து வருகிறாள் மீனா.

ஒரு கிளி பறந்துபோகும், ஒரு கிளி இருக்கும்என்று தச்சுக்கலைஞன் சாஸ்தா உறுதிபடச் சொன்ன விதம் ஒரு விசித்திரம். விருப்பப்பட்டு மணந்துகொண்டு காரணமே இல்லாமல் பிரிந்துபோன விதம் அதைவிட விசித்திரம். அவன் ஆண் என்பதுதான் அதற்குள்ள ஒரே காரணமா? பேச்சுத்துணைக்காக வளர்ந்த கிளி, பேச்சுக்கு ஆள் கிடைத்த சூழலில் இறுதிக்காட்சியில் கூண்டைவிட்டு வெளியே பறந்துபோவது எல்லாவற்றையும்விட விசித்திரம் நிறைந்தது. பறவை என்றால் பறக்கத்தான் வேண்டும். அது இருப்பதுதான் விசித்திரமே தவிர, பறப்பது விசித்திரமல்ல. ஆனால் இருந்து நிலைத்து வாழவேண்டிய மனிதன் ஏன் பறக்கவேண்டும் என்பதுதான் விசித்திரம். வாழ்க்கை என்னும் கண்கட்டு வித்தையில் எல்லாமே நடக்கிறது.

செல்லப்பாண்டியைவிட்டு தில்லை பிரிந்துபோன விசித்திரத்தையும் அவனைப் பார்ப்பதற்காக சந்திரா வரும் விசித்திரத்தையும் அவள் தாண்டவராயனின் காலில் விழுந்து வணங்கும் விசித்திரத்தையும், அவளுக்கு தான் இதுவரை அணியாத புதுப்புடவையை எடுத்துக் கொடுத்து அணிந்துகொள்ளச் செய்யும் தாண்டவராயனின் மனைவி முத்துமணியின் விசித்திரத்தையும் ஒரே சட்டகத்துக்குள் ஓவியமாகத் தீட்டிக்காட்டும் சிறுகதை குடைநிழல் அமர்ந்து. இந்தத் தலைப்பையொட்டி  நாம் செல்லக்கூடிய தொலைவு அதிகம். குடைநிழல் அமர்ந்து குஞ்சரம் அமர்ந்தோர் நடைமெலிந்து ஓரூர் நண்ணினும் நண்ணுவர் என்பது நறுந்தொகையின் வரி. வாழ்வின் நிலையாமையை முன்வைக்கும் வரி. இந்தக் கதையிலும் அதுதான் நடக்கிறது. நிலைக்கும் என எல்லோரும் நினைத்திருந்த செல்லப்பாண்டி- தில்லை வாழ்க்கை நிலைக்கவில்லை. அவனோடு வாழ்க்கையைத் தொடங்க நினைப்பவளாகத் தோற்றமளிக்கிறாள் சந்திரா.

கைக்குத்தல் அவலும் வெள்ளரிப்பிஞ்சும் சிறுகதையில் கணவன் அழைத்துவந்த அபலைப்பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்து வாழ்க்கையும் கொடுக்கும் விசித்திர மனமுள்ள  மனைவியைப் பார்க்கமுடிகிறது. அபலைப்பெண்ணின் முன்கதைச்சுருக்கமென அவதூறான கதைகளை இரக்கமே இல்லாமல் சொல்லும் ரெங்கமாமா சுக்கு வென்னி இருக்கா?” என கேட்டு வந்து நிற்கும் பாட்டிக்கு செம்புநிறைய தண்ணீர் கொண்டுவந்துமொதல்ல இதக் குடிஎன்று இரக்கமுடன் சொல்லும் விசித்திரத்தையும் பார்க்கமுடிகிறது. சீரங்கம், திருணாமலை, நிரம்பியும் காலியாகவும் சிறுகதைகளிலும் இப்படிப்பட்ட விசித்திரமான மனநிலைகள் கொண்டவர்களைப் பார்க்கமுடிகிறது.  வண்ணதாசன் கதைகள் வழியாக இப்படி எல்லா விசித்திர நிலைகளையும் நாம் அடுத்தடுத்து பார்ப்பதன் வழியாக நம்மால் ஓர் உண்மையை எளிதாகக் கண்டடையமுடிகிறது. இந்த வாழ்வில் ஏற்படும் எந்த இழப்பும் பேரிழப்பல்ல. ஒன்று இன்னொன்றால் ஈடுகட்டப்படும் மாயம் எப்படியோ நிகழ்ந்துகொண்டே இருக்கிறது என்பதுதான் அந்த உண்மை.

 

( மதுரம்சிறுகதைத்தொகுதி. வண்ணதாசன். சந்தியா பதிப்பகம். 77, 53வது தெரு. 9வது அவென்யு, அசோக்நகர், சென்னை-83. விலை. ரூ.130 )

(நவீன விருட்சம் - ஆகஸ்டு 2019)