Home

Sunday, 14 April 2024

தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் மாயக்கலை

  

நாம் சாலையில் நடந்து செல்கிறோம். நம் காலடியிலேயே நம் நிழல் விழுகிறது. நம்மோடு சேர்ந்து அதுவும் நடந்து வருகிறது. நம்மைச் சுற்றியிருக்கும் மரங்கள், கட்டிடங்கள், வாகனங்கள் , பாலங்கள் எல்லாவற்றுக்கும் நிழல்கள் இருக்கின்றன. நாம் அதையெல்லாம் பெரும்பாலும் கவனிப்பதே இல்லை. அது வெறும் நிழல்தானே, வேறென்ன என்றபடி கடந்துவிடுகிறோம்.

அதே சாலையில் ஒரு சிறுமி வருகிறாள் என்று வைத்துக்கொள்ளலாம். அவளும் அந்நிழல்களைப் பார்க்கிறாள். தன் காலடியில் தொடர்ந்து வரும் நிழல், அவளுக்கு ஒரு நிழலாக மட்டும் தோன்றவில்லை.  தன்னோடு தொட்டுத்தொட்டு விளையாடிக்கொண்டு வரும் இன்னொரு சிறுமியாகத் தோன்றுகிறது. அவளுடன் விளையாடி மகிழும் தோழியாகத் தோன்றுகிறது. மண்ணில் திட்டுத்திட்டாக அங்கங்கே தெரியும் நிழல்கள் அனைத்தும் சேர்ந்து அவளுடைய தோழிகளின் அணி பெரிதாகிவிடுகிறது. அந்த எண்ணம் அவளுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சில கணங்களுக்குப் பிறகு, அவள் அத்தோழிகளின் அணியை ஒரு கால்நடைக்கூட்டத்தின் அணியாக மாற்றிவிட்டு வேடிக்கை பார்க்கிறாள். இன்னும் சில கணங்களுக்குப் பிறகு, விதவிதமான கருவண்ண ஓவியங்களாகப் பார்க்கிறாள். ஒவ்வொன்றையும் வேறொன்றாக மாற்றும் ஆற்றல் அவளுடைய கற்பனைக்கு இருக்கிறது. அது அவள் உலகத்தை விரிவாக்கியபடி இருக்கிறது.

நமக்கும் அந்தச் சிறுமிக்கும் இடையில் ஒரே ஒரு வேறுபாடுதான். நம் கண்கள் எதார்த்தத்தை எதார்த்தமாகவே பார்க்கின்றன. சிறுமியின் கண்கள் அதே எதார்த்தத்தை கற்பனையின் துணையோடு பார்க்கின்றன. அந்தக் கற்பனை அவளுக்கு கட்டற்ற கனவுகளை ஊட்டுகின்றன. ஒன்றை இன்னொன்றாக மாற்றிப் பார்க்கும் சுதந்திரத்தை எடுத்துக்கொள்கின்றன. புதிதுபுதிதாக சித்திரங்களை உருவாக்கிக்கொண்டே செல்கின்றன.

அந்தச் சிறுமியை ஒத்தவன் கவிஞன். புதிய புதிய கற்பனைகள் அவனுக்குள் ஊற்றெடுத்தபடியே இருக்கின்றன. புறக்காட்சிகள் கணந்தோறும் மாறியபடியே உள்ளன. ஒன்றை இன்னொன்றின் வடிவமாக பார்க்கத் தெரிந்தவன் பெறற்கரிய பேறு பெற்றவன். பயிற்சியின் விளைவாக அடைந்ததாக இல்லாமல், குழந்தையைப்போல தன்னியல்போடு புதுப்புது கற்பனைகளில் திளைக்கத் தெரிந்தவன் மிகப்பெரிய கவிஞன்.

தற்காலத்தில் மலையாளத்தில் எழுதி வரும் வீரான்குட்டி அத்தகு கவிஞர்கள் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர். கற்பனையும் குழந்தைமையும் அவருடைய வலதுகையும் இடதுகையுமாக இருக்கிறது. ஒரு கவிதையில் கூட அவர் காணும் காட்சியை  மாற்ற முயற்சி செய்யவில்லை. இருப்பதுபோலவே முன்வைக்கிறார். ஆனால் அக்காட்சியைக் காணும் கோணத்தில் ஓர் எளிய மனிதனின் விழிகளுக்கும் அவருடைய விழிகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. அந்த வேறுபாடுதான் அவரைக் கவிஞராக நம் முன் நிறுத்துகிறது.

 

உதிர்ந்து போவதற்கு

ஏன் துக்கப்படவேண்டும்?

 

முறிவதற்கும்

விழுவதற்கும் இடையிலுள்ள

நொடிநேரத்தில்

ஒரு பறவையின்

வாழ்க்கையை

அது

வாழ்ந்துவிடுகிறதல்லவா?

 

இக்கவிதையில் இருப்பது மிகச்சிறிய காட்சி. கிளையிலிருந்து இலை விடுபட்டு மெல்ல மெல்ல இறங்கி வந்து தரையில் விழுந்து படியும் காட்சி. அது உதிர்வது தொடர்பாக ஏன் துக்கப்படவேண்டும் என்றொரு கேள்வியை முதலில் முன்வைத்துவிட்டு,  பிறகு தன் எண்ணத்தையும் சொல்கிறார். அந்த எண்ணம் எல்லோருக்கும் தோன்றக்கூடிய ஒன்றல்ல.

உதிரும் இலையை கவிஞரின் குழந்தைமைப்பார்வை ஒரு பறவையாகப் பார்க்கிறது. இலை உதிரவில்லை, இலை பறவையாக மாறி தனக்குக் கிடைத்த கண நேர வாழ்வை ஆனந்தமாகப் பறந்து பறந்து மகிழ்ச்சி அடைகிறது. அந்த இலை அந்த உதிர்தலை ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டாடும்போது மானுடக்கண்களுக்கு அது ஏன் ஒரு துக்கமாகத் தெரிகிறது? ஒரு கோணத்தில் துக்கமாகத் தோன்றும் காட்சி, அந்தக் கோணத்தை சற்றே மாற்றியதும் ஆனந்தமாக மாறிவிடுகிறது.

இந்த அமைப்பை வீரான்குட்டியால் மிக இயல்பாக தன் கவிதைகளில் முன்வைக்க முடிகிறது என்பதுதான் அவருடைய கவிதைகளின் வெற்றி. மாற்றுக்கோணம் அல்லது மாற்றுப்பார்வை என எந்த இடத்திலும் அவர் முயற்சியெடுத்து வரையறுக்க முயற்சி செய்யவில்லை. அனைத்தும் இயல்பாக நிகழ்கின்றன. அதே சாயத்தில் காற்றிலாடும் மலரென, அவருடைய கவிதைகள் நம்மை வசீகரிக்கின்றன.

மரத்திலிருந்து உதிரும் இதே மாதிரியான இலையொன்றை வேறொரு கவிதையில் வேறொரு விதமாக கற்பனை செய்து பார்க்கிறது அவருடைய மனம்.

 

பார்

நமக்கிடையே காம்புதிர்த்துப் பறக்கும்

இந்த இலை

ஒரு புத்தக விற்பனைக்காரி

எங்கும் போயிராத

காதல் கவிதை

அதன் கைகளில்

 

இலையை பறவையாகக் கற்பனை செய்து பார்த்த மனம், வேறொரு கணத்தில் புத்தகம் விற்கும் பெண்ணாக கற்பனை செய்து பார்க்கிறது. அவள் கையில் இருப்பது சாதாரணப் புத்தகமல்ல. காதல் கவிதைகளைக் கொண்ட புத்தகம். காதல் வசப்பட்டவர்களுக்குத்தான் காதலின் அருமை தெரியும். காதலை கசப்புமருந்தென நினைப்பவர்களிடம் கவிதைப் புத்தகத்தை நீட்ட முடியாது. பரிசீலிக்கும்படி கேட்கவும் முடியாது. காதல் மின்னும் கண்களைக் கொண்டவர்கள் தென்படுகிறார்களா என பார்த்துப் பார்த்துத்தான் பகிர்ந்துகொள்ள முடியும். கிளைக்கும் மண்ணுக்குமான இடைவெளியில் நிகழும் பயணத்தில் அத்தகு மனம் கொண்டவர்களைக் கண்டு தன்னிடம் இருக்கும் புத்தகங்களை ஒப்படைக்க ஆவலோடு அலைகிறாள் அந்த இலையென்னும் விற்பனைப்பெண்.  எவ்வளவு அழகான கற்பனை.

 

இந்த பூமியை

உனக்கு விரிப்பாகவும்

வானத்தை போர்வையாகவும்

தந்திருக்கிறேன் என்று

கடவுள் சொன்னதை

பூமியை ஏனமாகவும்

வானத்தை அதன் மூடியாகவும்

தந்திருக்கிறது என்றே

மனிதன் கேட்டிருப்பான் போலும்

அதன்படி பூமியை எடுத்து

அவன் அடுப்பில் வைத்துவிட்டான்

தீயும் மூட்டிவிட்டான்

கடவுளே

 

சமீப ஆண்டுகளாக, நாம் வாழும் பகுதிகளில் சரியான அளவில் மழை பொழியவில்லை. கிணறுகள் வற்றிக்கொண்டே போகின்றன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே போகிறது. சில மாவட்டங்களில் ஆயிரம் அடி ஆழத்துக்கு இறங்கினால்தான் தண்ணீர் கிடைக்கிறது. இத்தனை கடுமையாக முயற்சி செய்து பாய்ச்சும் நீரில்தான் இன்றைய விவசாயம் சாத்தியமாகிறது. மழை இல்லாததால் ஆற்றில் நீர் இல்லை. காடுகள் இல்லாததால் மழை இல்லை. இப்படி புவியியல் வறட்சி குறித்து ஆய்வுத்தகவல்களையெல்லாம் அடுக்கிக்கொண்டே செல்லலாம். மனிதத்தவறுகளைச் சுட்டிக்காட்டி சொல்லிக்கொண்டே செல்லலாம். வறட்சி ஏன் ஏற்பட்டது என்னும் கேள்விக்கு அது ஆய்வின் அடிப்படையிலான பதிலாக அமையக்கூடும். அதெல்லாம் நிகழவேண்டியதுதான். அதில் பிழை இல்லை. ஆனால் கவிஞரின் வழி வேறாக உள்ளது. ஒரு குழந்தைக்குக் கூட புரியும் அளவுக்கு, இன்னொரு குழந்தையாக நின்று ஒரு கதையைப்போல தன் மனம் உணர்ந்த உண்மையை ஒரு கவிதையில் முன்வைக்கிறார். பூமியை ஒரு பாத்திரமாக நினைத்து அடுப்பில் வைத்து தீமூட்டிவிட்டது மனிதக்கூட்டம். செவியிருந்தும் கேளாதவர்களாக, கண்ணிருந்தும் குருடர்களாக வாழ்ந்துவரும் மனிதர்களின் பார்வைக்கு இவையெல்லாம் போகுமோ, போகாதோ, தெரியவில்லை.

 

செத்தவரை

கொண்டுபோகும் கூச்சல்

எங்களை

சட்டென்று பெரியவராக்கியது

 

ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம்

என்றொரு குரல்

சைக்கிள் பெல்லோடு

எதிரே வந்து

எங்களைச் சின்னஞ்சிறு

குழந்தைகளாக்கும் வரை

 

எவ்விதமான கூடுதல் விளக்கமும் இல்லாமலேயே உணர்ந்துகொள்ளும் வகையில் இரு காட்சிகளை இணைத்து கவிதையாக்கியிருக்கிறார் வீரான்குட்டி. ஓர் இறுதி ஊர்வலக்காட்சி,  தெருவோரம் விளையாடிக்கொண்டிருக்கும் சிறார் கூட்டத்தை பெரியவர்களாக்கி மெளனத்தில் உறையவைத்துவிட்டுச் செல்கிறது.  தடபுடலான விற்பனை அறிவிப்போடு மணியோசையை எழுப்பிக்கொண்டு வண்டியை உருட்டிக்கொண்டு வரும் ஐஸ்கிரீம் விற்பனைக்காட்சி, அவர்களிடம் படிந்திருந்த மெளனத்தைக் கலைத்து மீண்டும் விளையாட்டுச் சிறுவர்களாக கலகலப்பாக்கிவிட்டுச் செல்கிறது. அயல் குரல்களுக்கு இருக்கும் மாய ஆற்றலை நினைத்தால் வியப்பாகவே  இருக்கிறது. ஓர் அனிச்சைச்செயலைப் போல நிகழும் உணர்வு மாற்றத்தைக் கவனிப்பவர்கள் இந்த உலகத்தில் கவிஞர்களைத் தவிர யார் இருக்கிறார்கள்?

 

பிச்சிமரம் குலுக்கி தலையில் சூட

நான்கு பூவாவது

விழவைக்க வக்கில்லாதவள் என்ற

பழி கேட்டுக்கேட்டு

மனமொடிந்துதான்

குளக்கரைக்குப் போயிருந்தாள் அவள்

 

இருட்டிய பின்னும்

திரும்பி வராததால்

பதறிப்போய் வந்து பார்த்தால்

அவள் குளத்தின் நிச்சலனத்தில்

சிறு கற்களைப் போடுகிறாள்

அதில் குலுங்குகிறது வானம்

விழுகின்றன நட்சத்திரங்கள்

 

வெண்ணெயை உண்டாயா என்று கேட்ட கேள்விக்கு சிறுவனான கிருஷ்ணன் இல்லை என்று தலையசைத்ததையும், அதை நம்பாத அன்னை யசோதா அவனை வாய்திறந்து காட்டும்படி கேட்டதையும் கண்ணனின் திறந்த வாய்க்குள் உலகத்தையே பார்த்து அதிசயப்பட்டு நின்றதையும் விவரிக்கும் பிருந்தாவனத்துப் புராணக்கதையை எல்லோருமே படித்திருப்போம். இதற்கு இணையான இன்னொரு அதிசயக்கதையை வீரான் குட்டி இக்கதையில் விவரித்திருக்கிறார். புராணக்கதையில் வரும் யசோதையைப்போல இந்தக் கதையில் யாரோ ஓர் அம்மாவோ, அக்காவோ வருகிறார்கள். தன் சிறுமிக்கு மரத்திலிருந்து மலரை உதிர்க்கத் தெரியவில்லை என்று ஏளனம் செய்துவிட்டுச் செல்கிறார்கள். ஏளனம் பொறுக்க இயலாத சிறுமி மனமுடைந்து குளக்கரைக்கு வந்து உட்கார்ந்துவிடுகிறாள். பொழுது கடந்த பிறகும் திரும்பி வராத சிறுமியைத் தேடி வருகிறாள். மன அமைதிக்காக கரையிலிருக்கும் கல்லை ஒவ்வொன்றாக எடுத்து குளத்துக்குள் வீசி வீசி  பொழுதுபோக்கிக்கொண்டிருக்கும் சிறுமியைப் பார்க்கிறாள். சிறுமியைப் பார்ப்பதற்கு முன்னால் சிறுமி வீசிய கல்லின் விளைவாக குளமெங்கும் படிந்திருந்த வானத்தின் பிம்பம் குலுங்குவதையும் அங்கிருந்த நட்சத்திரங்கள் பூக்களைப்போல உதிர்வதையும் பார்த்து அதிசயிக்கிறாள். யசோதையின் அதிசயத்துக்கு நிகரான நவீன அதிசயம்.

 

புரியவே இல்லை அவளுக்கு

பட்டாம்பூச்சியின் படத்தைக் காட்டி

சித்ரசலபம் என்று

டீச்சர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்

 

முடிவில்

வருத்தத்துடன்தான் என்றாலும்

அவளும்

சித்ரசலபம் என்று சொல்லத் தொடங்கினாள்

பட்டாம்பூச்சி என்பது

அதனை, அதன் வீட்டில்

அழைக்கும் பெயர் என்று

சமாதானம் செய்துகொண்டு

 

ஒரு பள்ளிச்சிறுமியின் ஆற்றாமையை ஒரு வகுப்பறைக் காட்சியாக முன்வைக்கிறது வீரான்குட்டியின் கவிதை. தொடக்கப்பள்ளியில் சேர்ந்திருக்கும் சிறுமி அவள். ஒவ்வொரு சொல்லாக அவள் தன் மொழியை அறிந்துகொள்கிறாள். அது வரை தன் தோட்டத்திலும் மலைப்பாதையிலும் பறந்துபோகும் பட்டாம்பூச்சியை பட்டாம்பூச்சி என்றே குறிப்பிட்டும் அழைத்தும் பிடித்து விளையாடியும் பழகியவள் அச்சிறுமி. வகுப்பறையில் பாடம் நடத்தும் டீச்சர் அந்தப் பட்டாம்பூச்சியை அவள் அதுவரை அறியாத  சித்ரசலபம் என்றொரு புதிய சொல்லால் குறிப்பிடத் தொடங்கியதும் அவள் திகைத்து நிற்கிறாள். எல்லோரும் அறிந்த பட்டாம்பூச்சியை டீச்சர் ஏன் சித்ரசலபம் என்று குறிப்பிடுகிறார் என்பது அவளுக்குப் புரியவில்லை. மேல்தட்டு சமஸ்கிருதமயமாக்கலின் விளைவாக புழங்குதளத்தில் உள்ள சொற்கள் மாறிவிட்ட செய்தி அவளுக்குத் தெரியவில்லை. கடைசியில் டீச்சர் சொல்தானே இறுதி என்பதால், அவள் தனக்குத் தெரிந்த சொல்லை விழுங்கிக்கொண்டு அவளும் சித்ரசலபம் என சொல்லக் கற்றுக்கொள்கிறாள். அதை அப்படி நேரடியாகச் செய்வதற்கு அவள் மனம் இடம்தரவில்லை. அதனால் அந்தப் பூச்சிக்கு பட்டாம்பூச்சி என்பது வீட்டுப்பெயர் என்று தானாகவே ஒரு கட்டுக்கதையை உருவாக்கி தன்னைத் தானே நம்பவைத்துக்கொள்கிறாள். ஒரு வகுப்பறைக்காட்சி வழியாக ஒரு மாநிலம் முழுமைக்குமான ஒரு அரசியல் காட்சியை, வாசிப்பவர்கள் நெஞ்சில் பதியும் வண்ணம் வலிமையோடு எழுதியிருக்கிறார் வீரான்குட்டி.

 

கல்லிடம் கேள்

எவ்வளவு காத்திருந்து

ரத்தினமாகியது என

நீர்த்துளியிடம் விசாரி

எத்தனை காலக் காத்திருப்பு

முத்தாவதற்கென

உதடுகள் இருந்திருந்தால்

அவை சொல்லியிருக்கும்

’அன்புடன் ஒரு கை தொடுவதற்கு

எடுத்துக்கொள்ளும் நேரம்’ என்று

 

கல் ரத்தினமாக மாற்றமடைவதும் நீர்த்துளி முத்தாக மாற்றமடைவதும் ஓர் அற்புதக்கணம். அது இயற்கையின் அலகிலா விளையாட்டுகளில் ஒன்று. ஆனால் அந்த அற்புதம் எல்லாக் கணங்களிலும் நிகழ்வதில்லை. யுகம்யுகமாக காத்திருந்த பின்னர் நிகழும் கணம் அது. அந்த அற்புதம் நிகழ்வதற்காக கல்லும் நீரும் காலம்காலமாகக் காத்திருக்கின்றன. அந்த அற்புதத்துக்குத் தேவை, ‘அன்புடன் ஒரு கை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம்’ மட்டுமே. ஒரு கணத்தை ஒரு தட்டிலும் ஒரு யுகத்தை இன்னொரு தட்டிலும் ஏந்தியிருக்கும் விசித்திரமான தராசு இந்த உலகம்.

வீரான்குட்டியின் கவிதைகளை வாசித்தபோது, பூந்தோட்டத்துக்குள் புகுந்துசென்ற சிறுமி கிடைத்த பூக்களையெல்லாம் தன் மடியில் சேகரித்துக்கொண்டு வந்து கொட்டியதைத் தொட்டதைப்போல இருந்தது. ஒரே வகையிலான பூக்களுக்காகக் காத்திருக்காமல், ஒரே நிறத்துப் பூக்களுக்காகவும் காத்திருக்காமல், கைக்குக் கிடைத்ததையெல்லாம் பறித்து மடியை நிறைத்துக்கொண்டு வந்து நிற்கும் சிறுமியைப்போல அவர் தன் கண்ணில் பட்ட காட்சிகளையெல்லாம் எழுதியிருக்கிறார். எந்தக் கருத்துக்காகவும் அவர் மெனக்கிடவில்லை. எந்த எண்ணத்தையும் அதன் மீது ஏற்றி நிறுத்த முயற்சி செய்யவில்லை. ஒவ்வொரு காட்சியும் தன்னியல்பாக ஒரு படிமமாக மலர்ந்திருக்கிறது. தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் மாயக்கலையை அவருடைய மனம் அறிந்துவைத்திருக்கிறது.

வீரான் குட்டியின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கும் சுஜா பாராட்டுக்குரியவர். அழகான, பொருத்தமான சொற்களைப் பயன்படுத்தி கவிதையில் தோய்வதற்கு வழிசெய்துள்ளார். இதற்கு முன்பு மலையாளக்கவிதைகளை தமிழில் அறிமுகம் செய்துவைத்த நிர்மால்யா, ஜெயமோகன், சுகுமாரன் போன்றோர் வரிசையில் இப்போது சுஜாவும் சேர்ந்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.

 

(வீரான்குட்டி கவிதைகள். மலையாளத்திலிருந்து தமிழில் :சுஜா. தன்னறம் நூல்வெளி, குக்கூ காட்டுப்பள்ளி, புளியானூர் கிராமம், சிங்காரப்பேட்டை -635307. விலை. ரூ.100)

 

(உங்கள் நூலகம் – ஏப்ரல் 2024)