Home

Sunday 30 October 2022

பாரதிவாணர் சிவாவின் கதையுலகம்

  

முன்னொரு காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சமாக ஏழு அல்லது எட்டு குழந்தைகள் இருந்தார்கள். வீடு நிறைய குழந்தைகள் இருந்த காலத்தில் அந்த வீட்டில் இருந்த தாத்தாக்களும் பாட்டிகளும் அவர்களுடைய வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தார்கள். குறிப்பாக முன்னிரவுப்பொழுதுகளில் குழந்தைகள் மடிமீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க, அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் நல்ல நல்ல கதைகளை சொன்னார்கள். குழந்தைகளுக்கும் தாத்தா பாட்டிகளுக்கும் இடையில் மகத்தானதொரு உறவு நிலவியது. எல்லாத் தலைவர்களும் தம் வாழ்க்கை வரலாறுகளில் இதைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

பொம்மைகள் - புதிய சிறார் சிறுகதைத்தொகுதி - முன்னுரை

 

அன்புள்ள சிறுவர் சிறுமிகளுக்கு, 

வணக்கம்.

 

ஒரு நாள் எங்கள் வீட்டுக்கருகில் உள்ள ஏரிக்கரையில் நடந்துகொண்டிருந்தேன். அது பெரிய ஏரி. அதன் சுற்றளவு இரண்டு கிலோமீட்டர் இருக்கும். ஏரியில் தண்ணீர் இல்லை. இருக்கும் தண்ணீரும் தூய்மையானதல்ல. அதில் களைகளும் புதர்களும் நாணல்களும் வளர்ந்து மண்டிக் கிடக்கின்றன.

அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள் : புதுமையும் புன்னகையும்

 

எங்கள் பள்ளிக்கூட நாட்களை நினைக்கும்போதெல்லாம் என் நினைவுக்கு வரும் ஒரு பெயர் ராஜசேகர். என்னைவிட சற்றே உயரமானவன். நன்றாக மரம் ஏறுவான். அதைவிட நன்றாக கதைசொல்வான். நாங்கள் ஐந்தாறு பேர் எப்போதும் அவனையே சூழ்ந்திருப்போம். அவன் சொல்லும் கதைகளைக் கேட்கத் தொடங்கிவிட்டால் வீட்டிலிருந்து பள்ளிக்குப் புறப்பட்டதும் தெரியாது, வந்து சேர்ந்ததும் தெரியாது. நேரம் பறந்துவிடும். அவன் சொல்லும் கதைகள் அந்த அளவுக்கு சக்தி கொண்டவை.

Sunday 23 October 2022

ஒரு கூரையின் கீழே - சிறுகதை

 ஊரில் இருக்கிற எல்லா இடங்களிலும் புடவைக்கு இத்தனை ரூபாய், லுங்கிக்கு இத்தனை ரூபாய் என்று கூலிக்கணக்கு இருக்கும் போது, ராமலிங்க நாடார் மாத்திரம் இன்னும் வாரக்கூலிக் கணக்கைத்தான் அமுலில் வைத்திருந்தார். வாரத்துக்கு எழுபத்தைந்து ரூபாய். ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் விடுப்பு. மற்ற நாள்களில் காலை ஏழு மணிக்கு வந்து உட்கார்ந்தால், சாயங்காலம் பொழுது சாய்கிறவரை நெய்யவேண்டுமென்பதில் தயவு தாட்சண்யமற்ற கட்டளை. ஊர் விஷயத்தைச் சொல்லியெல்லாம் அவரோடு வாதாடமுடியாது. வாதாடுகிற மனுஷன் வேலை செய்யமாட்டான் என்பது அவர் அபிப்பிராயம். அடுத்த நிமிஷமேவெளியே போடா!’ என்பார். ‘ஊர்ல அவன் இவ்ளோ தரான், இவன் அவ்ளோ தரான்னு சொல்றதெல்லாம் வீண் பேச்சு. நான் இவ்ளோதா தருவன். இஷ்டமிருந்தா தறிய தொடு. இல்லேன்னா நடய கட்டு!’ என்று கறாராய்ப் பதில் விழும். இன்னொரு தறி எங்கயாச்சும் கிடைக்கிறது என்றால், நடையைக் கட்டிவிடலாம்தான். ஆனால் ஊரில் தறி கிடைப்பதுதான் அபூர்வம். அவனவனும் வேலைக்கு நாயாய் அலைந்தான். மற்றவர்களின் நிராதரவான சந்தர்ப்பமே நாடாருக்கு ஆதாயமாகியது.

குறிஞ்சிவேலன்: ஓர் உறவுப்பாலம்

  

1982இல் என்னுடைய முதல் சிறுகதை தீபம் இதழில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து, சிற்சில மாத இடைவெளியில் என்னுடைய கதைகள் தீபம் இதழிலும் கணையாழி இதழிலும் அடுத்தடுத்து வரத் தொடங்கின. நான் அப்போது கர்நாடகத்தில் பணிபுரிந்தாலும், எங்கள் பிரிவின் தலைமை அலுவலகம் சென்னையில்தான் இருந்தது. சிற்சில சமயங்களில் தலைமை அலுவலகத்திற்கு சில தகவல்களைக் கொண்டுசெல்ல வேண்டிய வேலை வரும். அப்போதெல்லாம் என்னை அனுப்பிவிடுவார்கள். அந்த வகையில் 1983இல்  ஒருமுறை சென்னைக்கு வந்தேன். முதல் இரு நாட்கள் அலுவலகத்திலேயே உட்கார்ந்து வேலையை முடித்தேன். அடுத்தநாள் இரவு புறப்படும் ரயிலில்தான் நான் பயணச்சீட்டு எடுத்திருந்தேன். அதனால் மூன்றாவது நாள் காலையில் பத்தரை மணியளவில் தீபம் அலுவலகத்துக்கு வழி விசாரித்துக்கொண்டு சென்றேன்.

Sunday 16 October 2022

பெரிய மீனும் சின்ன மீனும்

 

ஒரு நாட்டுப்புறக்கதை. ஒரு குளத்தில் ஏராளமான மீன்கள் வாழ்ந்து வந்தன. அந்தக் கூட்டத்தில் ஒரு பெரிய மீன் இருந்தது. அதற்கு உணவு தேவைப்படும்போதெல்லாம், தன்னைச் சுற்றி நீந்தி விளையாடிக்கொண்டிருக்கும் சின்ன மீன்களை விழுங்கியது. பெரிய மீனைக் கண்டாலே சின்ன மீன்கள் அஞ்சத் தொடங்கிவிட்டன. அதன் வருகையை உணர்ந்ததுமே எல்லா மீன்களும் வேறு திசையை நோக்கி நீந்தித் தப்பிக்க முயற்சி செய்தன. ஆனால் பெரிய மீனின் வேகத்துக்கு அவற்றால் ஈடுகொடுக்க முடிவதில்லை. இப்படியாக சின்ன மீன் கூட்டத்தில் ஒரு பகுதி தொடர்ந்து பெரிய மீனுக்கு இரையாகி வந்தது.

உரையாடலுக்கான வாசல்

 


கடந்த நூற்றாண்டில் நிலவிய சாதியப்பார்வைக்கும் இந்த நூற்றாண்டில் இப்போது நிலவும் சாதியப்பார்வைக்கும் நுட்பமான அளவில் சில வேறுபாடுகள் உள்ளன. கொரானா வைரஸ் போல அதுவும் தன்னை காலந்தோறும் உருமாற்றிக்கொண்டே இருக்கிறது. தீண்டாமையின் பெயரால் முன்னொரு காலத்தில் சொன்னதுபோல யாரும் யாரையும் தெருவுக்குள் வராதே, கோவிலுக்குள் வராதே, குளத்துக்குள் இறங்காதே என இன்று தடுத்துவிட முடியாது. அனைவரும் கலந்து நடமாடுவது இன்று இயல்பாக மாறியிருக்கிறது. இந்த மாற்றத்துக்குத் தகுந்தபடி தம்மைத் தகவமைத்துக்கொண்டு தம் சாதியப்பற்றை உதறியும் சாதியக்கோட்டைக் கடந்தும் வந்தவர்கள் நம்மிடையே பலருண்டு. அதே சமயத்தில் தம்மை அறியாமலேயே ஆழ்மனத்தில் இன்னும் சாதியப்பார்வையைச் சுமந்து வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள். சாதியப்பார்வையை முற்றிலுமாகக் கடந்து அனைவரும் நல்லிணக்கப்பார்வையுடன் இணைந்திருக்கும் ஒரு வாழ்க்கைமுறை எதிர்காலத்தில் சாத்தியமாக வேண்டும். அதற்கு, சாதியத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிப்புகளை உருவாக்கியவர்களுக்கும் இடையில் ஓர் உரையாடல் நிகழ்ந்தாக வேண்டியிருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். அந்தப் புள்ளியை நோக்கி அனைவரும் நகர்ந்துவர வேண்டும்.

Saturday 8 October 2022

இனிப்பும் கசப்பும் - 2 (சிறுகதை )

 

‘‘என் பேரு மீனாட்சி. போஸ்ட் ஆபீஸ்ல குமாஸ்தாவா இருக்கேன். பதினாறு வருஷ சர்வீஸ்ல நாலு ஆபீஸ் மாறிட்டேன். மொதல்ல வேல செஞ்ச ஆபீஸ் வீட்டுக்கு பக்கத்திலயே இருந்திச்சி. இப்ப தெனமும் போவ முக்காமணிநேரம் வர முக்காமணிநேரம் ஆவுது. இந்த டவுன்பஸ்ல ஏறி இறங்கறதுக்குள்ளே பாதி உயிரு போயிரும். உலகத்துலயே இல்லாத வழக்கமா இந்த பாண்டிச்சேரி பஸ்ங்கள்ளமட்டும் ரெண்டு ரெண்டு செக்கருங்க இருக்கானுங்க. தடித்தாண்டவராயனுங்கமாதிரி இந்த வாசல்ல ஒருத்தன் அந்த வாசல்ல ஒருத்தன் நின்னுகிட்டு உள்ள போ உள்ள  போன்னு ஆடுமாடுங்கள வெரட்டறமாதிரி வெரட்டிகிட்டே இருப்பானுங்க.”

இனிப்பும் கசப்பும் - 1 (சிறுகதை )


வணக்கம் நேயர்களே, மலர் தொலைக்காட்சி வழங்கும் ‘‘இனிப்பும் கசப்பும்’’ நிகழ்ச்சி உலகமெங்கும் நிறைந்துள்ள தமிழ் உள்ளங்களைக் கவர்ந்திருப்பதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. பார்வையாளர்களுடன் நாங்கள் உருவாக்கிய உறவுக்குக் கிடைத்த வெகுமதியாக இதைக் கருதுகிறோம். இந்த நிகழ்ச்சிக்காக மலர் தொலைக்காட்சிக் குழு தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் பயணங்களை மேற்கொண்டு நேயர்களைச் சந்தித்து உரையாடி, அந்த உரையாடல்களைப் பதிவு செய்து வருகிறது. இதுவரைக்கும் நம் மலர் தொலைக்காட்சி உருவாக்கி வைத்துள்ள ஆயிரக்கணக்கான பதிவுகளை ஒருவகையில் சமூக ஆவணம் என்றே சொல்லவேண்டும். பண்ருட்டியைச் சேர்ந்த, சமூகவியல் முதுகலை படித்த, கலைச்செல்வன் என்னும் மாணவர் ஏற்கனவே இந்தப் பதிவுகளை ஆய்ந்து முனைவர் பட்டத்துக்கான ஆய்வேட்டை சமீபத்தில் சமர்ப்பித்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். நூற்றிமுப்பத்தாறு வாரங்களாக வெவ்வேறு தலைப்புகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி தமிழக தொலைக்காட்சி வரலாற்றில் அழுத்தமான தடம்பதித்த ஒன்று எனச் சொல்வது மிகையான கூற்றாகாது. இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கான முக்கியக் காரணம் மனம் திறந்து தம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளும் நேயர்கள். அந்த கோடானுகோடி அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி சொல்வது எங்கள் கடமை.

விட்டல்ராவின் படைப்புலகம்

 

அரைநூற்றாண்டுக்கும் மேலாக தமிழிலக்கிய வெளியில் நாவல்கள், கட்டுரைகள் என பல தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் மூத்த படைப்பாளியான விட்டல்ராவ் அவர்களே. அவருடைய இலக்கியப் பங்களிப்பைக் கெளரவிக்கும் விதமாக இந்த ஒருநாள் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருக்கும் விழாக்குழுவைச் சேர்ந்த நண்பர்களே. சிறுகதை, நாவல்கள், திரைப்படக்கட்டுரைகள், நுண்கலைசார் கட்டுரைகள் என விட்டல்ராவ் இயங்கிய வெவ்வேறு தளங்கள் சார்ந்து அவருடைய ஆளுமையை இன்றைய தலைமுறை வாசகர்கள் புரிந்துகொள்வதற்கு உதவியாக ஆழமான கட்டுரைகளுடன் வந்திருக்கும் கருத்தரங்கப் பேச்சாளர்களே. சேலத்திலிருந்து மட்டுமன்றி, வெவ்வேறு நகரங்களிலிருந்து வந்து அவையில் நிறைந்திருக்கும் பார்வையாளர்களே. உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Sunday 2 October 2022

பற்றுதல் - சிறுகதை

 

போய்வரட்டா தாத்தாஎன்று கேட்ட மாணிக்கத்தின் குரல் காதிலேயே விழாததைப்போல ஒயர் கண்டுகளை பைக்குள் அடுக்கிக் கொண்டிருந்தார் தாத்தா. சிறுவனுடைய குரலில் கெஞ்சுதலும் எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டே சென்றன. நாலைந்துதரம் கேட்டு பதில் வராததால் அவரை நெருங்கி மணிக்கட்டுகளைத் தொட்டு மீண்டும்போய் வரட்டா தாத்தாஎன்றான். தாத்தா அவன் விரல்களை உடனே தட்டிவிட்டார்.

கி.ராஜநாராயணன் : மகத்தான ரசிகர்

 

1989இல் ஒருநாள் வழக்கம்போல புதுவையிலிருக்கும் நண்பரோடு தொலைபேசியில் பேசியபோதுஒரு முக்கியமான விஷயம் சொல்றேன். கேட்டுக்கோ. எழுத்தாளர் கி.ரா. இங்க பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துக்கு விசிட்டிங் ப்ரொஃபசரா வந்திருக்காருஎன்றார். ”ஜாய்ன் பண்ணிட்டாரா?” என்று ஆவலுடன் கேட்டேன். “ஜாய்னிங்லாம் முடிஞ்சது. லாஸ்பேட்டைக்கு பக்கத்துல வாடகைக்கு வீடு எடுத்திருக்காரு. நான் அடுத்த வாரம் போய் பார்க்கலாம்ன்னு இருக்கேன்என்று சொன்னார். அதைக் கேட்டதும் அந்தக் கணமே வண்டி பிடித்துச் சென்று அவருடைய வீட்டு முன்னால் நிற்கமாட்டோமா என்று இருந்தது.