‘‘என் பேரு மீனாட்சி. போஸ்ட் ஆபீஸ்ல குமாஸ்தாவா இருக்கேன். பதினாறு வருஷ சர்வீஸ்ல நாலு ஆபீஸ் மாறிட்டேன். மொதல்ல வேல செஞ்ச ஆபீஸ் வீட்டுக்கு பக்கத்திலயே இருந்திச்சி. இப்ப தெனமும் போவ முக்காமணிநேரம் வர முக்காமணிநேரம் ஆவுது. இந்த டவுன்பஸ்ல ஏறி இறங்கறதுக்குள்ளே பாதி உயிரு போயிரும். உலகத்துலயே இல்லாத வழக்கமா இந்த பாண்டிச்சேரி பஸ்ங்கள்ளமட்டும் ரெண்டு ரெண்டு செக்கருங்க இருக்கானுங்க. தடித்தாண்டவராயனுங்கமாதிரி இந்த வாசல்ல ஒருத்தன் அந்த வாசல்ல ஒருத்தன் நின்னுகிட்டு உள்ள போ உள்ள போன்னு ஆடுமாடுங்கள வெரட்டறமாதிரி வெரட்டிகிட்டே இருப்பானுங்க.”
“ என்னமோ பஸ் நடுவுல பங்களா கட்டி வச்சிக்கறமாரி. வயித்தெரிச்சலுக்கு கொறச்சல் இல்ல. போகவர பிராயணத்துலதான் இந்த இம்சன்னா ஆபீஸ்ல ஒரு இம்ச தலவிரிச்சி ஆடும். அங்க ஏன் பாக்கற? இங்க ஏன் பாக்கற? அந்த வேல என்னாச்சி? இந்த வேல என்னாச்சி? போன்ல என்ன இவ்வளோ நேரம் பேச்சு? இது என்ன ஆபீஸா சந்தக்கடயான்னு ஆயிரத்தெட்டு கேள்விங்க கேட்டு நச்சி எடுத்துருவாரு எங்க போஸ்ட் மாஸ்டர். தாலி கட்டன ஊட்டுக்காரன் கேள்விக்கு கூட பதில் சொல்லிரலாம். அந்த போஸ்ட் மாஸ்டர் கேள்விக்கு நம்ம படைச்ச ஆண்டவனாலயேகூட பதில் சொல்லமுடியாது. பொண்ணுங்க கற்ப காப்பாத்தற காவல் தெய்வம்னு நெனப்பு அவருக்கு.
எதுக்கு இந்தக் கதய சொல்றேன்னா, இங்க தினசரிப் பொழப்பே இப்படி இம்சபுடிச்ச பொழப்பா இருக்கும்போது பேசறதுக்கும் பழகறதுக்கும் நேரத்த எங்கேருந்து கண்டுபுடிக்கறது? அப்படியே கொஞ்ச நஞ்ச நேரம் இருந்தாலும் யார்கிட்ட நம்பிக்கயா பழகமுடியும் சொல்லுங்க? ஏதோ வேலைக்கு போனமா, நாலு காசு சம்பாதிச்சமா, கொழந்த குட்டிங்களோட சந்தோஷமா கழிச்சமான்னு போவுது பொழப்பு. இந்த லட்சணத்துல நட்புக்கெல்லாம் எங்கங்க இருக்குது நேரம்? பூக்கறதுக்கு ஒரு பருவம் இருக்கறமாதிரி நட்புக்கும் ஒரு காலகட்டம் இருக்குதுங்க. நட்பு உருவானதெல்லாம் அப்படி ஒரு காலத்துல. அது உருவாகி வளந்து அப்பவே செத்து மண்ணோட மண்ணாயி மக்கிடுச்சி.
கிராமத்துல படிச்ச பொண்ணு சார் நானு. அந்தப் பள்ளிக்கூடத்துல பெரிசா யாரும் தோழிங்க கெடையாது. தோழனும் கெடையாது. எங்க எச்.எம். ரொம்ப ஸ்டிரிக்ட். கையில எப்பவும் பெரம்ப உருட்டிகிட்டே இருப்பாங்க. பள்ளிக்கூடத்துல எந்த மூலையில யாரும் ரெண்டுபேரா ஒரு நிமிஷம் நின்னு பேசிறக்கூடாது. உடனே அவுங்களுக்கு மூக்குல வேர்த்துரும். மந்திரம் போட்ட மாடுமாரி வந்து நின்னுருவாங்க. நீட்டுடி கையன்னு அடி பின்னிருவாங்க. திரும்பி நில்லுங்கடின்னு சொல்லி இடுப்புக்குக் கீழ வெளுத்து வாங்கிருவாங்க. இன்னிக்கு சின்னதா சிரிப்பா ஆரம்பிக்கற பேச்சுப்பழக்கம்தான்டி நாளைக்கு வெனையில போயி முடியும். அப்பறம் தற்கொலையிலயும் போலீஸ் ஸ்டேஷன்லயும் முடியும்டி தரித்திரங்களா... உங்க கற்ப காப்பாத்தி உங்க குடும்ப மானத்த காப்பாத்தணும்னுதான்டி
இங்க நான் ஒருத்தி நாய்மாரி காவல் காக்கறேன்னு அடிக்கடி மார்தட்டிக்குவாங்க.
பேச்சுரிமையே இல்லாத ஒரு எடம்போல இருந்திச்சி பள்ளிக்கூடம். தனலட்சுமின்னு ஒரு பி.டி.மேடம் இருந்தாங்க. ஒரு நாளைக்கு நூறு தரமாச்சிம் மாராப்ப சரியா போடுடி மாராப்ப சரியா போடுடின்னு பொலம்பிகிட்டே இருப்பாங்க. புள்ளைங்க மாராப்பு மேலயே அந்த அம்மாவுக்கு கண்ணு இருக்கும். எவளாவது ஒருத்திக்கு அப்படி இப்படி இருந்துட்டா போதும் என்னடி கரகாட்டக்காரி? எந்த ஊர்ல ஆடறதுக்கு ஒத்திகை நடக்குதுன்னு நாக்க புடிங்கிட்டு சாவலாம்போல கேள்வி கேப்பாங்க. இந்த லட்சணத்துல யார்கூட பழகறது சொல்லுங்க. பள்ளிக்கூடத்துலதான் இந்தக் கதைன்னா, காலேஜ் கதை இதவிட பெரும் கொடும.
ஸ்கூல்லயோ காலெஜ்லயோ கெடைக்காத ஒரு நட்பு முதன்முதலா எனக்கு ஆபிஸ்ல கெடைச்சிது. அவன் பேரு வைத்தியநாதன். என்னவிட ரெண்டுமூணு வயசு அதிகமா இருக்கும். செக்ஷன்ல சீனியர். தொடக்கத்துல கௌண்டர் வேலைன்னா ரொம்ப பயந்துடுவேன். பப்ளிக் வந்து ஸ்டாம்ப் வேணும்ன்னு கேட்டாக்கூட என்ன ஏதோ திட்டறதுக்குத்தான் வந்துட்டாங்கன்னு நெனைச்சி நடுங்கிடுவேன். இந்தப் படபடப்புலயே தெனமும் இருபது முப்பது ரூபாய் தொலைச்சிடுவேன். வைத்திதான் பக்கத்துலயே இருந்து எல்லாத்தயும் ஒவ்வொன்னா சொல்லிக் குடுத்தான். போஸ்ட் ஆபீஸ பொறுத்தவரைக்கும் என்னுடைய ப்ராக்டிக்கல் நாலெட்ஜ் வளர்றதுக்கு ரொம்ப உதவியா இருந்தான். மனசுக்குள்ள இருந்த பயம் விலகி ஒரு தன்னம்பிக்கை பிறக்கறதுக்கு அவன்தான் காரணம். வாழ்க்கையில் இருபது இருபத்திநாலு வயசுலதான் நட்புன்னா எப்படி இருக்கும்ன்னு உணர ஆரம்பிச்சேன்.
ஆரம்பத்துல நியூஸ்பேப்பர் படிக்கற பழக்கம், ரேடியோ படிக்கற பழக்கம் எதுவுமே எனக்கு கெடையாது. பொது விஷயங்கள தெரிஞ்சிக்கறது ரொம்ப முக்கியம்ன்னு அவன்தான் சொல்லிச்சொல்லி அதுல ஒரு நாட்டத்த உண்டாக்கனான். ஒரு உலகச்செய்தியும் ஒரு குடும்பச்செய்தியும் எந்த அளவுக்கு நெருக்கமா இருக்குதுன்னு நான் பலமுறை உணர்ந்திருக்கேன். இந்திராகாந்தி சுடப்பட்ட செய்தியயும் தில்லியில் சீக்கியர்கள கூட்டம்கூட்டமா அடிச்சி கொன்ன செய்தியயும் படிச்சிட்டு நம் ஊட்டுக்குள்ளயே ஏதோ ஒரு துக்கம் நடந்தமாரி தேம்பித் தேம்பி
அழுதிருக்கேன். ஹாக்கியில நம்ம நாடு ஜெயிருச்சிருச்சின்னு செய்தி வந்தா நாமே ஜெயிச்சாப்ல ஒரு சந்தோஷம் ஓடும். இதுக்குலாம் அவன்தான் காரணம். திடீர்னு ஒருநாள் மெட்ராஸ் யுனிவர்சிட்டியில கரெஸ்பான்டன்ஸ் கோர்ஸ் ஆரம்பிச்சிருக்காங்க, எம்.ஏ., எம்.எஸ்.ஸின்னு ஏதாவது படிக்கறிங்களான்னு கேட்டான். படிச்சிமுடிச்சி வேலைக்கு வந்து சம்பாதிக்கறமே, இதுக்குமேல எதுக்காக படிப்புன்னு கேட்டேன். கடைசி வரைக்கும் போஸ்ட் ஆபீஸ்தான்னு முடிவே கட்டிட்டிங்களா? மணியார்டர் ஆப்ளாங் ஸ்டாம்ப்லயே காலத்த ஓட்டிடலாம்னு நெனைச்சிங்களா? கல்வித்தகுதிய வளத்துகிட்டு வேற நல்ல டிப்பார்ட்மென்ட்டா பாத்து போயிரலாம்னு ஆசையெல்லாம் இல்லயான்னு கேட்டான். அப்படி ஒரு வழி உண்டுங்கற விஷயம்கூட எனக்கு தெரிலை. அந்த அளவுக்கு மக்கா இருந்தேன் நானு. எதஎதயெல்லாம் படிச்சா எந்தஎந்த வேலைக்கெல்லாம் போவலாம்ங்கற விஷயமெல்லாம் அவனுக்கு அத்துபடியா இருந்திச்சி. இதுக்கெல்லாம் நேரம் எப்படி கெடைக்கும்ன்னு எனக்குத்தான் சந்தேகமா இருந்திச்சி. எல்லாருக்கும் இருக்கற நேரம்தான் நமக்கும் உண்டு. அது கூடவோ கொறயவோ செய்யாது. நம்மால முடியும்ன்னு மொதல்ல நம்புங்க. அப்பறம் நேரத்த நம்ம மனசு தானா ஒதுக்கித் தரும்ன்னு திரும்பித்திரும்பிச் சொன்னான். கையெழுத்து போட்டு அனுப்பறவரிக்கும் எனக்கும் குழப்பம்தான். ரெண்டு மாசம் கழிச்சி தபால்ல பாடம் வந்தப்பறம் தானாவே எல்லாத்துக்கும் நேரம் உருவாயிடுச்சி. இதுக்கு நடுவுல அந்த டிப்பார்மென்ட்ல அக்கௌண்ட் போஸ்ட்டுக்கு விளம்பரம் வந்திருக்கே பாத்திங்களா? இந்த டிப்பார்ட்மென்ட்ல ரிசர்ச் அஸிஸ்டென்ட் வேலைக்கு விளம்பரம் போட்டிருக்கானே பாத்திங்களான்னு தெனமும் எதயாவது கொண்டாந்து காட்டிகிட்டே இருப்பான். இருக்கற வேலையவிட நல்ல வேலை கெடைச்சா விட்டுட்டு போய்ட்டே இருக்கணுங்க, சென்டிமென்ட் வாழ்க்கை ரொம்ப ஆபத்துன்னு சொல்வான்.
திடீர்னு ஒருநாள் எங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் ஆயிடுச்சி. ஆஸ்பத்திரி, ஆபரேஷன்னு ஒரே அலைச்சல். எங்களுக்கு என்ன செய்றதுன்னே தெரியலை. கையில சேமிப்புன்னு ஒன்னும் பெரிசா இல்லை. சொந்தக்காரங்ககூட அந்த ஆபத்து நேரத்துல கைவிரிச்சிட்டாங்க. அப்ப அவன்தான் ஒரு லட்ச ரூபா கைமாத்தா குடுத்தான். அந்தப் பணம் இல்லைன்னா அப்ப எங்க அப்பாவ காப்பாத்தியே இருக்க முடியாது. குடும்பத்தலயும் அவன் மேல நல்ல மரியாதை. என் நண்பன் வைத்தின்னு சொல்லிக்கறதுல
எனக்கும் ரொம்ப பெருமைதான்.
கடன் அன்பை முரிக்கும்ன்னு பெரியவங்க சொல்றதுல உண்மை உண்டுன்னு அனுபவத்துமூலமா தெரிஞ்சிகிட்டவ நான். ஒரு வாரத்துல அப்பா ஆஸ்பத்திரிலேர்ந்து வீட்டுக்கு வந்துட்டாரு. ஒரு மாசம் ஓய்வெடுத்துகிட்ட பிறகு வேலைக்கும் போவ ஆரம்பிச்சாரு. இதுக்கு நடுவுல வீட்டுக்கு வரபோவ இருந்த வைத்திய எல்லாருக்கும் புடிச்சிபோச்சி. ஆனா அவன் மனசுல என்ன ஓடுச்சோ தெரியலை. ஒருநாள் திடீர்னு சிரிச்சிகிட்டே என்ன பாத்து நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டான். அதக்கேட்டு எனக்குள்ள பெரிய அதிர்ச்சி. என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை. வைத்திமேல எனக்கு அப்படி ஒரு எண்ணம் வந்ததே இல்ல. எனக்கு கெடைச்ச நல்ல நண்பன்னுதான் நெனச்சிருந்தேன். மெதுவா என் மனசுக்குள்ள இருந்தத சொன்னேன். உடனே அவன் என்னப்பத்தி ஏதேதோ சொல்ல ஆரம்பிச்சிட்டான். கோழை, மனசுல ஒன்னு வெளிய ஒன்னுன்னு பேசற ஆளு, வேஷம் போடறவ அப்படி இப்படின்னு என்னென்னமோ சொன்னான். அத என்னால தாங்கவே முடியலை. அவன் முகம், பேச்சு, சுபாவம் எல்லாமே அந்த நிமிஷம் மாறிப் போயிடுச்சி. அப்ப நாம பழகறதுக்கு என்னதான் அர்த்தம்னு சத்தமா கேட்டான். நம்ம பழக்கம் நட்பு வைத்தின்னு நான் சொன்னதை அவன் கேக்கறதுக்கே தயாரா இல்ல. நட்பு ஒரு தொடக்கம். அதுதான் காதலாவும் கல்யாணமாவும் படிப்படியா கனியும்ன்னு சொன்னான். இருக்கலாம் வைத்தி, எல்லா நட்பும் காதலாவும் கல்யாணமாவும்தான் முடியணும்ன்னு அவசியம் இல்லையே வைத்தி. நட்புக்கு அழகு நட்பா இருக்கறதுதானேன்னு சொன்னேன். கோவிச்சிகிட்டு பேசாமலேயே எழுந்து போயிட்டான். ரெண்டுமூணு நாளு ஆபீஸ்லயும் சரியா முகம்கொடுத்து பேசலை. ம்ன்னுதான் இருந்தான். ஏதாச்சிம் கேட்டா ஒரு வார்த்த ரெண்டு வார்த்தயில பதில் சொல்லிட்டு ஒதுங்கனான். என்னடா இப்படி ஆயிடுச்சேன்னு எனக்குள்ள ரொம்ப சங்கடமா இருந்தது. ஒருநாள் சாய்ங்காலம் டீ குடிக்கலாமான்னு கூப்பிட்டான். டீ குடிச்சிட்டிருக்கும்போதே திடீர்னு என்னப் பாத்து அன்னைக்கு சொன்னதைப்பத்தி அப்பறம் ஏதாச்சிம் யோசிச்சி பாத்திங்களான்னு கேட்டான். என்னடா இது வேதாளம் மறுபடியும் முருங்கைமரத்துல ஏறுதேன்னு நெனைச்சிகிட்டு அதான் அன்னைக்கே சொல்லிட்டனே வைத்தின்னு சொன்னேன். அதுதான் உங்க முடிவுன்னா என் முடிவயும் சொல்லிடறேன் கேக்கறிங்களான்னு கேட்டான். என்னங்க வைத்தி, சொல்லுங்கன்னு
கேட்டேன். பதிலே பேசாம கடையவிட்டு வெளியே வந்து கொஞ்ச தூரம் கடற்கரபக்கமா நடந்தான். மெதுவாக என்பக்கமா திரும்பி எனக்கு என் பணம் உடனே வேணும். ரொம்ப அவசரம். அத தர முடியலைன்னா எனக்கு நீ வேணும்ன்னு அழுத்தமா சொன்னான். எனக்கு கைகாலெல்லாம் ஒரே நடுக்கம். இப்படியெல்லாம் அவன் கேப்பான்னு நான் கனவுலகூட நெனைக்கலை. என்ன வைத்தி மெரட்டிப் பாக்கறியா? பணமில்லாதவதானே? மெரட்டிப் பணிய வச்சிரலாம்ன்னு எண்ணமான்னு கேட்டேன். கல்யாணம்கூட வேணாம் மீனாட்சி. ஒரே ஒருநாள் மட்டும் என்கூட இருந்துட்டு போயிடு. அது போதும்ன்னு சினிமா வில்லன்மாரி பேசனான். ஏன் இப்படி ஆள் திடீர்னு மாறனான்னு புரியலை. சொந்த புத்தியாலதான் பேசறானா, யாராவது சொல்லிக் குடுத்து பேசறானான்னு தெரியலை. வைத்தி, நீ எந்த அளவுக்கு அசிங்கமா பேசறேன்னு புரிஞ்சிக்காம பேசற. இந்த பேச்சுக்காக நீ வருத்தப்படப்போற £ள் என்னைக்காவது வரும் வைத்தி. அன்னிக்கு நீயும் இருப்பே, நானும் இருப்பேன், ஆனால் நம்ம நட்பு இருக்காது வைத்தி. உனக்கு உன் பணம்தானே முக்கியம். ரெண்டு நாள் டைம் குடு. மூணாவது நாள் இதே நேரத்துல தரேன்னு திரும்பிக்கூட பாக்காம விடுவிடுன்னு வந்துட்டேன். மறுநாள் காலையிலயே வீட்டுப் பத்திரத்த அடமானம் வச்சி அவன் பணத்த திருப்பிக் குடுத்துட்டேன். அதுக்கப்புறமா அந்த பிராஞ்ச்ல வேல செய்யக்கூட புடிக்கலை. வேற பிராஞ்ச்க்கு டிரான்ஸ்பர் கேட்டு வாங்கிட்டு வந்துட்டேன். இதோ இருபது வருஷம் ஓடிப்போயிடுச்சி. இன்னும் எனக்குள்ள அந்தக் காயம் ஆறலை. ஒரு நல்ல நண்பன் தப்பான எண்ணத்தால எப்படியெல்லாம் வீணாப் போயிட்டான்னு நெனைச்சா வேதனையா இருக்குது.’’
*
‘‘சிரிச்ச சிரிச்சி பேசறதெல்லாம் நட்பு கெடையாது. மனசுக்கு நெருக்கமா இருக்கறதுதான் நட்புன்னு பெரியவங்க சொல்வாங்க. அதெல்லாம் தத்துவமா பேசறதுக்குத்தான் சரி சார். நடைமுறையில அதுக்கெல்லாம் ஒரு அர்த்தமும் கெடையாது. சிரிச்சிசிரிச்சி நம்பவச்சி கழுத்தறுக்கறதுதான் இங்க நட்பு செய்யற வேல. இப்படி பொதுவா பேசறது உங்களுக்கு தப்பா படலாம். ஆனா என் அனுபவத்துல நான் பாத்ததயும் பட்டதயும் வச்சித்தானே பேசமுடியும். என் நெஞ்சுல கசப்புங்கதான் ஒரே குப்பமோடுமாதிரி மண்டியிருக்குது சார். இருந்த ஒன்னு ரெண்டு இனிப்புமேல இந்த கசப்பு விழுந்து எல்லாத்தயும் கசப்பாக்கிருச்சி சார். என் பேர சொல்ல எனக்கே வெக்கமா இருக்குது சார். அந்த அளவுக்கு இந்த நட்பால நான் வேதனைக்கு ஆளாயிட்டேன். என் பேரு சாமிநாதன். டிரில் மாஸ்டர் சாமிநாதன்னுதான் என்ன எல்லாரும் கூப்புடுவாங்க. இன்னிக்கு என் கோலத்த பாத்துட்டு நானா டிரில் மாஸ்டரா இருந்தேன்னு உங்களுக்குத் தோணுதில்லயா? சொல்றேன் சார், அதானே நம்ம கத.
இங்கதான் வில்லியனூர் பக்கத்துல ஒரு மேனேஜ்மென்ட் ஸ்கூல்ல டிரில்மாஸ்டரா வேல பாத்தேன். காலையில வாக்கிங், யோகா. சாயங்காலம் மறுபடியும் வாக்கிங், உடற்பயிற்சி. பாக்கறதுக்கு சீனாக்காரனாட்டம் சும்மா கிண்ணுனு இருப்பேன். ஜிம்னாஸ்டிக்ஸ்ல சேம்பியன். புள்ளைங்களுக்கு என் மேல உசுரு. பாண்டிச்சேரி ஆல் ஸ்கூல் லெவல் போட்டியில நான் தயாரிச்சி அனுப்பன பசங்களுக்கு நாலுதரம் விருது கெடைச்சிருக்குது. இந்த பக்கத்துல வாக்கிங், ரன்னிங்னு காலங்கார்த்தால ஆரம்பிச்சி வச்சதே நான்தான் சார். நாலர அஞ்சி மணிக்கே தயாராகி வில்லியனூர்வரைக்கும் ஓடிட்டு வருவேன். அப்படியே பூமாதிரி உடம்ப வச்சிட்டிருந்தேன் சார். ஆனா இன்னிக்கு என் உடம்புல இல்லாத நோயே இல்ல. ஹைப்ரஷர். நூத்திஐம்பதுக்கு நூறு. எவ்வளவு மாத்திரய போட்டாலும் எறங்கறதே இல்ல. தலைக்குள்ள ஏதோ ஒரு நாலுசக்கர வண்டி தடதடன்னு ஓடறமாதிரியே எப்பவும் இருக்குது. சக்கர, கொலாஸ்ட்ரல் எல்லாமே இருக்குது. ரெண்டு மாசத்துக்கு முன்னால இந்த வலது கால் விழுந்திடுச்சி. கட்ட வச்சிக்குனு தான் நடக்கறேன். எங்க ஸ்கூல் மைதானத்துல ஒரு கிலோ மீட்டர் தூரத்த ரெண்டரை நிமிஷத்துல ஓடன ஆளு நான். அப்படி ஒரு ஓட்டம். இன்னிக்கு ரெண்டு அடி எடுத்து வைக்கறதுக்கே ஒரு நிமிஷம் வேணும்ங்கறமாதிரியான நிலைமை. எல்லாமே நட்பால வந்த சோதன.
இருபது வருஷ சர்வீஸ்ல சேமிச்ச பணம், ஊருல பாகம் பிரிச்சி அப்பா குடுத்த பணம் எல்லாத்தயும் போட்டு ஆசஆசயா ஒரு ஊடு கட்டனன் சார். நான், என் பெண்டாட்டி மீனா, ரெண்டு புள்ளைங்கன்னு சந்தோஷமா இருந்தம் சார். புள்ளைங்க ரெண்டுபேரும் இமாகுலேட்லதான் படிச்சாங்க. கட்டடம் முடிக்கற நேரத்துல ஒரு அம்பதாயிரம் ரூபா அவசரமா தேவைப்பட்டுது. வேற வழி தெரியாம வட்டிக்கு கடன்வாங்கி வேலய முடிச்சிட்டேன். நாலு பைசா வட்டி. மாசம் ரெண்டாயிரம் ரூபா வட்டி குடுக்கணும். வாழ்க்கையில கஷ்டம்ன்னு ஆரம்பிச்சது அப்பதான் சார். ஒரு ரெண்டு மூணு வருஷத்துக்கு மாடி போர்ஷன் வாடகைக்கு குடுத்தா, வர வாடகைய வச்சி வட்டிய கட்டிடலாம். கடனயும் கொஞ்சம் கொஞ்சமா அடச்சிரலாம்ன்னு கூட இருந்தவங்க யோசன சொன்னாங்க. அந்த நேரத்துல எனக்கு எல்லாமே சரின்னு பட்டுது. முருகேசன்னு ஒருத்தர் குடும்பத்தோட குடிவந்தாரு. பி.டபிள்யு.டி.ல இருக்கறதா சொன்னாரு. புருஷன் மனைவி ஒரு புள்ளைன்னு சின்ன குடும்பம்தான். நல்லா இனிக்கஇனிக்க பேசுவாரு. மேலிடங்கள்ல ரொம்ப செல்வாக்கு உள்ள கை. ஒருதரம் எங்க மீனாவுக்கு உடம்பு முடியாம போயிடுச்சி. வயித்து வலியால துடிச்சிட்டா. ஜிப்மருக்குத்தான் போனம். பெட் இல்லைன்னு சொல்லிட்டாங்க. என்ன செய்யறதுன்னே புரியலை. அப்ப முருகேசன்தான் உதவி செஞ்சாரு. உள்ள போயி ரெண்டு மூணு டாக்டருங்கள பாத்தாரு. வெளிய வந்து மினிஸ்டர் லெவல்ல ரெண்டு பேருக்கு போன் பேசனாரு. அரமணி நேரத்துல தானா பெட் கெடைச்சிது. ஸ்பெஷல் வார்ட். நல்ல கவனிப்பு. பித்தப்பைய எடுக்கணும்ன்னு சொன்னாங்க. ஆபரேஷன் நல்லபடியா நடந்திச்சி. பத்து நாள் வரைக்கும் இருந்து தையல் பிரிச்சி பாத்து முழுக்கமுழுக்க குணமானதுக்கு அப்பறமாதான் அழச்சிகிட்டு வந்தோம். அந்த சந்தர்ப்பத்துலதான் முருகேசன் எங்களோட நெருக்கமானாரு. கூடப் பொறந்த தம்பியாட்டம் அண்ணன் அண்ணன்னு கூப்புட்டாரு. அப்பல்லாம் நட்புன்னா இப்பிடித்தான் இருக்கணும்ன்னு நெனைச்சிக்குவேன்.
சிக்கலான நேரங்கள்ள உதவின்னு கூப்புட்டா போதும் கொஞ்சம்கூட தயங்காம எந்த நேரமா இருந்தாலும் ஓடிவருவாரு. சொந்த வேலபோல எல்லாத்தயும் இழுத்துப் போட்டு செய்வாரு. ஒருசமயம் எங்க ஸ்டுடன்ட் ஒருத்தன்மேல ஒரு லாரிக்காரன் ஏத்திட்டு நிறுத்தாம போயிட்டான். ஆஸ்பத்திரி வேல, போலீஸ் கேஸ்ன்னு எல்லாத்தயும் கச்சிதமா கவனிச்சிட்டாரு. ஹை க்ளாஸ் ட்ரீட்மென்ட். இன்னும் கொஞ்ச நேரம் போயிருந்தா கால எடுத்துருக்க வேண்டிய நெலையாயிருக்கும். பையன் பொழச்சதே அவர் புண்ணியம்தான்னு சொல்லணும்.
வேடிக்க பாத்த பையன் வண்டி நெம்பர குறிச்சி வச்சிருந்தான். அதவச்சி ஆளயே நாலு நாள்ளல புடிக்க வச்சிட்டாரு முருகேசன். எல்லா எடங்கள்ளயும் ஆளுங்க இருந்தாங்க அவருக்கு. பட்டன தட்டனா லைட் எரியறமாதிரி அவரு பல காரியங்கள ரொம்ப சுலபமா நடக்க வச்சாரு. பாக்கறதுக்கு நமக்கு ஆச்சரியமா இருக்கும். அவர் முகத்துக்கும் பேச்சுக்கும் அப்படி ஒரு ராசி
இருந்திச்சி. ஒரு கடையில நின்னு ஒரு பொருள் வாங்க நமக்கெல்லாம் கால்மணிநேரம் ஆவும்ன்னா, அவருக்கு ரெண்டே ரெண்டு நிமிஷம் போதும். ஒரு கௌண்டர் முன்னால போயி நாம சார்சார்ன்னு ஆயிரம் தரம் தொண்டத்தண்ணி போவ கத்தணும். அப்பகூட அவனுங்க காதுல ஏறாது. அவருக்கு அது பிரச்சனயே இல்லை. கௌண்டர்கிட்ட வேகமா வந்து சும்மா நின்னாலே போதும், என்ன சார் வேணும்னு அவன் நிமுந்து பார்ப்பான். அப்படி ஒரு முகஅமைப்பு.
நாலஞ்சி நாள் லீவ் கெடைச்சா போதும். வாங்கண்ணா போயிட்டு வரலாம்ன்னு ஒரு வேன் வச்சி மகாபலிபுரம், தஞ்சாவூர்ன்னு அழச்சிட்டு போவாரு. போற எடங்கள்ள யாரயாவது புடிச்சி அரசாங்க கெஸ்ட் அவுஸ்ல தங்க ஏற்பாடு செஞ்சிக்குவாரு. அப்பல்லாம் அதிகாரம் -தூள்பறக்கும். அவர் பேசற பேச்சில -நூத்துல ஒரு பங்கு கூட நம்மால பேச முடியாது. அந்த அளவு நயமா பேசுவாரு.
ரெண்டு மூணு வருஷத்துல கடன அடச்சிட்டோம். ஆனா அவர காலி பண்ண சொல்ல மனசு வரலை. ரெண்டு பொம்பளைபுள்ள வச்சிருக்கம். கையில நாலு காசு மிச்சமிருந்தர் எதிர்காலத்துல உதவியா இருக்கும்ன்னு மீனாவும் சொன்னா. சரி, இருக்கறவரைக்கும் இருந்துட்டு போவட்டும்ன்னு உட்டுட்டம். அதுதான் சார் வாழ்க்கையில் நான் செஞ்ச மிகப்பெரிய தப்பு.
திடீர்னு ஒரு நாள் ஒரு ஆளு நாலு போலீஸ்காரங்ககூட வீட்டுக்கு வந்தாரு. என்னய்யா ஊட்ட காலி பண்ணித் தரமாட்டேன்னு சொல்றியாமே? உள்ள வச்சி நாலு சாத்து சாத்தணுமா? வாத்தின்னு மரியாத குடுத்தா வேல காட்டறியான்னு என்னென்னமோ பேசனாங்க. பதினாறு லட்ச ரூபாய சொளயா வாங்கத் தெரியுது, ஊட்ட வாங்கனவங்களுக்கு காலிபண்ணித் தரணும்னு தெரியலையா? அராஜகமாடா பண்றேன்னு ஆளு£ளுக்கு சத்தம் போட்டாங்க. நான் வித்த மாதிரி எழுதி குடுத்த பத்தரம் அவன் கையில இருந்திச்சி. எனக்கு தலையும் புரியலை. காலும் புரியலை. அந்த நேரம் பாத்து முருகேசன் தம்பியும் இல்ல. குடும்பத்தோட காரைக்கால் பக்கமா போய்வரேன்னு போனவரு வரலை. இன்னும் நாப்பத்தெட்டு மணிநேரத்துல காலி பண்ணிட்டு சாவிய ஒழுங்கா அவர் கையில குடுக்கணும். இல்லன்னா கம்பி எண்ணணும்ன்னு மெரட்டிட்டு போயிட்டாங்க. எங்க தலையில இடி உழுந்தமாதிரி இருந்திச்சி. எங்க வீட்ட எனக்கே தெரியாம என் கையெழுத்த போட்டு எவன் வித்தான்னே புரியலை. எந்தப்
படுபாவி இந்த வேலை செஞ்சான்னு தெரியாம வாயிலயும் வயித்திலயும் அடிச்சிக்கிட்டோம்.
எங்களுக்கு யார பாக்கறது, என்ன கேக்கறதுன்னு தெரியலை. தெருவுல தெரிஞ்சவங்க, ஸ்கூல்ல தெரிஞ்சவங்கன்னு நாலுபேர அழச்சிகிட்டு வீட்ட வாங்கனன்னு சொன்ன ஆள்கிட்ட போனம். பதினாறு லட்சம் குடுத்துட்டுதான் வாங்கனேன்னு ஆயிரம் சத்தியம் பண்ணான். பத்தரம் பக்காவா இருந்திச்சி. அவமானமா போயிடுச்சி. தலய குனிஞ்சிட்டு திரும்பிட்டோம்.
அன்னிக்கு ராத்திரி முருகேசன் தம்பி வந்தாரு. நடந்ததயெல்லாம் எடுத்து சொன்னன். பணம் குடுத்தவன் காலிபண்ணுங்கன்னு சொல்லத்தானே செய்வான்? இத அநியாயம்னு எப்படி சொல்லமுடியும்? நான் வேணும்ன்னா நாளைக்கு காலையிலேயே காலி பண்ணிடறன். அவ்வளவுதான் நான் செய்யமுடியும். நீங்க யோசிச்சி செய்ங்கன்னு பட்டும்படாம சொல்லிட்டு போயிட்டாரு. போவப் போவத்தான் தெரிஞ்சிது, அவர்தான் எல்லாத்துக்கும் மூலகாரணமான ஆளு. என்ன மாதிரி திருட்டு கையெழுத்து போட்டது அவரு. பணம் வாங்கனது அவரு. பத்தரம் தயாரிச்சது அவரு. அதிகாரிங்கள கையில போட்டுகினு மோசம் பண்ணிட்டாரு. செய்யறதயெல்லாம் செஞ்சிட்டு நழுவிட்டாரு-. எங்களுக்கு தொணயா நிக்க ஒரு ஆளு கூட இல்ல. என்னுடைய இருபது வருஷ வாழ்க்கை, உழைப்பு, சேமிப்பு, கனவு எல்லாமே ஒரே நொடியில தரமட்டமாயிடுச்சி. நிக்க ஒரு நெழல்கூட இல்லாம நடுத்தெருவுக்கு வந்துட்டம். கையில இருந்தத வச்சி சின்னதா ஒரு வாடக வீட்டுல ஒண்டிகிட்டோம். ஹை ப்ரஷரால பேரலிஸ் வந்து இந்த கால் போயிடுச்சி. கால் இல்லாத டிரில் மாஸ்டருக்கு ஸ்கூல்ல என்ன வேலைன்னு கணக்க முடிச்சி அனுப்பச்சிட்டாங்க. இந்த ஊருலயும் தெருவுலயும் எந்த அளவுக்கு கம்பீரமாவும் கௌரவமாவும் இருந்தமோ, அதுக்கு நேர்மாறா அசிங்கப்பட்டு அவமானப்பட்டு நிக்கற அளவுக்கு ஆளாக்கிட்டுது என் நட்பு.
படிக்கவேண்டிய வயசுல புள்ளைங்க ஸ்டீல் கம்பெனி வேலைக்கு போறாங்க. நாள்பூரா தையல் மிஷின மெரிச்சி மெரிச்சி பொண்டாட்டிக்காரிக்குக் கால்வலி. இப்படி கால இழுத்துஇழுத்து வந்து தினமும் இந்த பஸ் ஸ்டாப் வாசல்ல கர்சிப் விக்கறேன். ஒரு வேள சோத்துக்குத்தான் இந்தக் கஷ்டம். அஞ்சி ரூபாய்க்கு ஒரு கர்ச்சிப் சார், மூணா வாங்கனா பன்னெண்டு ரூபாதான். நீங்களும் ஒரு செட் வாங்கிக்குங்க சார். என் கதய கேக்கறதவிட
இந்த கர்சிப்ப காசு குடுத்து நீங்க வாங்கறதுதான் எனக்கு ரொம்ப உதவியா இருக்கும். ஒரு கவர்ல போட்டு தரட்டுங்களா சார்?’’
*
‘‘என்னங்க சார் இது? ஜெயில் வாசல்ல மறிச்சி பேரு ஊரெல்லாம் கேக்கறிங்க. நாட்டுக்கு நல்ல சேதி சொல்ல நான் என்ன கஸ்-தூரிபாய் காந்தியா, இந்திரா காந்தியா? செய்யாத கொலைக்காக சந்தேகம்ங்கற பேர்ல ஏழு வருஷம் உள்ள இருந்துட்டு இப்பதான் வரேன். நொந்துபோயி உலகத் தொடர்பே இல்லாம அனாதயா இருந்திட்டு வர நான் உங்களுக்கெல்லாம் சொல்ல என்ன இருக்குது சார்?
என் பேரு சரளா. ஊரு முருங்கப்பாக்கம். அம்மா அப்பா கெடையாது. ரெண்டு அண்ணங்காரங்கதான் வளத்து கட்டிக் குடுத்தாங்க. அதோட அவுங்க கடமை முடிஞ்சிது. எப்பனா நல்ல நாள் கெட்ட நாள்னா கூப்புட வருவாங்க. பேசுவாங்க. போயிருவாங்க. அன்பா பாசமா பேசனா எங்க நம்மகூட ஒட்டிக்குவாளோன்னு அவுங்களுக்கு ஒரு பயம். அம்மா அப்பா வச்சிட்டு போன சொத்துல பாகம் கேட்டு வந்துரப்போறாளேன்னு ஒரு சந்தேகம். அன்பில்லாதவங்க பணம் யாருக்கு சார் வேணும்?
என் ஊட்டுக்காரர் பேரு செல்வராஜ். பெரியாஸ்பத்திரில கம்பௌண்டரா இருந்தாரு. எங்கிட்ட ரொம்ப பாசமா இருந்தாரு. நெனச்ச நேரம் கடற்கரைக்கு போவோம். நெனச்ச நேரத்துக்கு ஓட்டல்ல சாப்புடுவோம். எனக்கு வஞ்சிரம் மீன் ரொம்ப புடிக்கும். எனக்காக அவரே வாங்கிவந்து அழகா துண்டுபோட்டு அவரே கழுவி பொரிச்சி குடுப்பாரு. அவருக்கு போட்டிக்கறின்னா ரொம்ப இஷ்டம். ரெண்டு மூணு வருஷம் போனதே தெரியலை. அதுவரைக்கும் நான் வாழ்க்கையிலே அனுபவிக்காத சந்தோஷத்த அவர்மூலமா அனுபவிச்சேன். அதுவரைக்கும் அனுபவிக்காத கஷ்டத்தயும் அவர்மூலமாதான் அனுபவிச்சேன்ங்கறதுதான் கொடும.
காலாகாலத்துல ஒரு கொழந்த பொறந்திருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும். ஆனா எனக்கு அந்த பாக்கியம் இல்ல. இப்ப பொறக்கும் நாளைக்கி பொறக்கும்ன்னு ரெண்டு வருஷம் காத்திருந்தோம். ரெண்டு தரம் நின்னு கலைஞ்சிபோச்சி. டாக்டருங்க என்னென்னமோ மருந்தெல்லாம் எழுதிக் குடுத்தாங்க. ஊர் உலகத்துல இல்லாத மாத்திரயெல்லாம் சாப்ட்டேன்.
ஆனா ஒன்னும் நடக்கலை. அதுல அவருடைய கொஞ்சம் மனவருத்தம் உண்டு. ஆனா வெளிய காட்டிக்க மாட்டாரு. யாராவது வெளியூர்லேர்ந்து அவருக்கு சொந்தக்காரங்களோ கூட்டுக்காரங்களோ வந்தா பிரச்சன வந்துடும். ஏன் கொழந்த இல்ல? இன்னும் எத்தன வருஷம் கழிச்சி பெத்துக்குவிங்க? எல்லாத்தயும் காலாகாலத்துல செஞ்சி முடிக்க வேணாமா? எதிர்காலத்துல உங்க பேர் சொல்ல ஒரு புள்ள வேணாமா? டாக்டர்ங்கள பாத்திங்களான்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு உண்டு இல்லைன்னு ஆக்கிருவாங்க. நம்ம சங்கடத்த பத்தி யாரும் கவலப்படமாட்டாங்க. அந்த டாக்டர போயி பாருங்க. ரொம்ப நல்ல கைராசிக்காரர் அவருன்னு சொல்வாங்க ஒருத்தவங்க. தஞ்சாவூருக்குப் பக்கத்துல இருக்கற கர்ப்பரட்சகாம்பிகை கோயிலுக்கு ஒரு தரம் போயிட்டு வாங்க, குழந்தை தானா நிக்கும்ன்னு சொல்வாங்க இன்னொருத்தவங்க. கர்நாடகாவுல சென்னபட்னாவுக்கு பக்கத்துல மளூர்னு ஒரு ஊருல ஒரு கிருஷ்ணன் கோயில் இருக்குது. அங்க போயி தொட்டில் கட்டறேன்னு வேண்டிகிட்டு வாங்க. கூடிய சீக்கிரம் ஒரு கொழந்த பொறக்கும்ன்னு ஆலோசன குடுப்பாங்க. ஆலோசனைங்கள கேட்டுக்கேட்டு காதும் மனசும் புளிச்சிபோச்சி. அவருடைய அக்கா தங்கச்சிங்க வந்தா போதும், நெலைமை ரொம்ப மோசமா போயிடும். அவுங்க சொல்றதயெல்லாம் தலையில வச்சிகிட்டு இவரு தைதைன்னு ரெண்டு நாளு ஆடுவாரு. அப்பறம் ரெண்டுமூணு நாளு ம்ன்னு இருப்பாரு. அதுக்கப்புறம்தான் எல்லாம் சரியாவும்.
ஆஸ்பத்திரியில அவருகூட மாலதின்னு ஒரு நர்ஸ் வேல செஞ்சிது. அதுவும் இவரும் எப்படியோ நெருங்கிப் பழக ஆரம்பிச்சிட்டாங்க. அவருடைய போக்குல மெதுமெதுவா ஒரு மாற்றம் உண்டாச்சி. அந்த பொண்ண ஒரு நாள் ஊட்டுக்கு அழச்சிட்டு வந்தாரு. நல்ல கோதுமை மாவு நெறம். பாக்கறதுக்கு பளிச்சினு இருந்தா. அவ பாத்த மொதல் பார்வையிலயே எனக்கு ஒரு பயம் வந்துடுச்சி. நம்ம புருஷன தட்டிகிட்டு போயிவாளோன்னு அதுக்கு தகுந்தமாதிரி இவரும் ஈஈன்னு அவ பின்னாலேயே இளிச்சிகிட்டு நின்னாரு. கொஞ்சம் உட்டுப் புடிக்கலாமேன்னு சும்மா இருந்தேன். ஆனா என் கணக்கு தப்பாயிடுச்சி. எல்லாமே எல்லை மீறி போயிடுச்சி. ஒருநாள் கடற்கரைக்கு கூப்ட்டும்போயி உக்காரவச்சி அந்தக் கத இந்தக் கதயெல்லாம் பேசி கடசியா நான் மாலதிய கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கறேன். நமக்குன்னு ஒரு கொழந்த வேணுமில்லயான்னு கொழஞ்சாரு. நமக்கு
கொழந்தையே பொறக்காதுன்னு முடிவே கட்டிட்டீங்களான்னு ஆதங்கத்தோட கேட்டேன். இன்னும் ரெண்டு மூணு வருஷம் பொறுத்துப் பாக்கலாமேன்னு சொன்னேன். அதுக்கில்ல சரளா, பாக்கறவங்க கேக்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியலை. அதான் இந்த ஏற்பாடு. அதுக்கப்புறம் நமக்கு பொறந்தா அதயும் வச்சி வளத்து காப்பாத்துவோம்னு சொன்னாரு. இந்தக் கல்யாணத்தால உன்ன ஏமாத்திடுவன்னும் வெளிய அனுப்பிடுவன்னும் நெனச்சி சங்கடப்படாதே. எனக்கு நீயும் வேணும் சரளா. மாலதிக்கு தனியா வீடு எடுத்துக் குடுத்து தங்க வச்சிக்குவம். ஒரு கொழந்தைக்காகத்தான் இந்த ஏற்பாடுன்னு திரும்பத் திரும்ப சொன்னாரு. சம்மதம்ன்னு சொல்றத தவிர எனக்கு வேற வழி தெரியலை. சொன்னமாதிரியே டவுனுக்குள்ளயே அரவிந்தர் தெருவுல அவளுக்காக ஒரு வாடக வீட்ட எடுத்துக் குடுத்தாரு. ரெண்டு நாள் அங்க, ரெண்டு நாள் இங்கன்னு மாத்தி மாத்தி இருந்தாரு. எப்படியோ அவர் நெனச்சது நடந்தா சரிதான்னு விட்டுட்டேன். மூணு நாலு மாசத்துக்குள்ள அவ உண்டாயிட்டான்னு வந்து சொன்னாரு. அதுக்கப்புறம் அவர் இங்க வர்ரது கொறஞ்சிப்போச்சி. வந்தாலும் கொஞ்சம் நேரம் போவறதுக்குள்ளயே வரட்டுமா வரட்டுமான்னு கௌம்பிடுவாரு. கரண்ட்போன ஊட்டுக்கு வந்து ப்யூஸ்கேரியர மாத்திட்டு லைன்மேனுங்க போவறமாதிரி வந்ததும் தெரியாம போவறதும் தெரியாம போயிடுவாரு. அவ்வளவு அவசரம். புள்ளதாச்சி பொண்ண போயி பாக்கணும்ன்னு ரொம்ப ஆசயா இருந்திச்சி. ஆனா அவுங்களா கூப்படாம நாம போயி எப்படி நிக்கறதுன்னு சங்கடத்துல போவாமயே விட்டுட்டேன்.
ஒரு நாள் வந்து வண்டி வச்சிகிட்டு மைலம் கோயிலுக்கு போறோம்ன்னு சொல்லிட்டு போனாரு. நீயும் வான்னு ஒரு வார்த்தகூட சொல்லலை அவரு. இப்படியா மனுஷன் மாறிடுவாங்க கடவுளேன்னு அன்னிக்கு ரொம்ப வேதனைப்பட்டேன். அழுகஅழுகயா வந்திச்சி. மறுநாள் போலீஸ்காரங்க வந்து சொன்னப்பதான் எனக்கு சேதி தெரிஞ்சது. இவுங்க போன வண்டியும் இன்னொரு வண்டியும் மோதி இவரும் வண்டி டிரைவரும் ஸ்பாட்லயே இறந்துட்டாங்க. மாலதி மட்டும் காயத்தோட தப்பிச்சிட்டா. இடிச்ச வண்டிக்காரன் நிக்காமயே போயிட்டான். எந்த ஆஸ்பத்திரில கம்பௌண்டரா இருந்து எல்லாருக்கும் மருந்து குடுத்தாரோ, அதே ஆஸ்பத்திரியில இவர அறுத்து குடுத்தாங்க. எனக்கு ஆறுதல் சொல்ல ஒரு ஆள்கூட இல்ல சார். அதிர்ச்சியில மாலதி வயித்துல இருந்த கரு கலஞ்சி
போயிடுச்சி. எல்லாரும் அவகூட இருந்தாங்க.
அடக்கம்லாம் முடிஞ்சதுக்குப் பிறகு ஒருநாள் போலீஸ்காரங்க மறுபடியும் வந்து என்னமோ விசாரணைன்னு கூப்பிட்டும் போனாங்க. ஸ்டேஷனுக்கு போனதுக்குப் பிறகு தான் தெரிஞ்சிது. எங்க ஊட்டுக்காரரும் அவளும் போன வண்டிய நானே ஆள்வச்சி இடிச்சி தீத்துக்கட்டனேன்னு என் மேல மாலதி ஒரு புகார் குடுத்திருந்தா. என் பேச்சு எடுபடலை. எனக்குன்னு ஆதரவா பேச யாருமே இல்ல. விசாரணைன்னு உள்ள வச்சிட்டாங்க. அப்புறம் கோர்ட், கேஸ், விசாரணைன்னு காலம் ஓடி போச்சி. ஏழு வருஷம். சந்தேகத்துக்கு ஆதாரம் இல்லைன்னு போனவாரம்தான் நீதிபதி தீர்ப்பு குடுத்தாரு. இனிப்பும் இல்லாம கசப்பும் இல்லாம வெறும் மரமா நிக்கறேன். உலகத்துல எனக்குன்னு யாரும் இல்லை. நான் எத நம்பி யாருக்காக வாழணும்னே தெரியலை. கொழப்பத்துல நிக்கறவகிட்ட இவ்வளவு நேரம் கேள்விமேல கேள்வி கேக்கறிங்களே, உங்களுக்கே இது நியாயமா இருக்குதா? என் கதய கேட்டு யாருக்கு என்ன ஆவப் போவுது, சொல்லுங்க. என் தொண்டத்தண்ணி வத்தி போவறதுதான் மிச்சம்.’’
*
நேயர்களே, மனத்தைக் கனக்கச் செய்யும் பதிவுகளின் ஒளிபரப்பைப் பார்த்திருப்பீர்கள். முதலிலேயே அறிவிக்கப்பட்டதைப்போல நேயர்களுக்கான வினாக்களை அறிவிக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. எங்கள் பட்டியலில் மூன்று கேள்விகள் உள்ளன. இந்த மூன்று கேள்விகளுக்கும் சரியான விடைகளை அஞ்சலட்டையில் எழுதி அனுப்பும் நேயருக்கு மலர் தொலைக்காட்சி வழங்கும் பரிசுகள் காத்திருக்கின்றன. உங்கள் விடைகளை வரும் புதன்கிழமை மாலைக்குள் எங்களுக்குக் கிடைக்குமாறு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். அஞ்சல்களை அனுப்ப வேண்டிய முகவரி. இனிப்பும் கசப்பும், மலர் தொலைக்காட்சி, அஞ்சல் பெட்டி எண். 345, சென்னை. இப்போது கேள்விகளைப் படிக்க உள்ளேன். கவனமாக கேட்கவும்.
முதல் கேள்வி. நண்பர்களாக இருந்த பரந்தாமனுக்கும் மதிவாணனுக்கும் இடையே பிளவு நேரக் காரணமாக இருந்த மாணவியின் பெயர் என்ன?
இரண்டாவது கேள்வி. டிரில்மாஸ்டர் சாமிநாதன் வேலை செய்த பள்ளி எந்த ஊரில் இருக்கிறது?
மூன்றாவது கேள்வி. மீனாட்சியின் தந்தைக்கான மருத்துவச் செலவுக்காக வைத்தியநாதன் கொடுத்த தொகை எவ்வளவு?
நேயர்களே, நீங்கள் அனுப்பப் போகிற விடைகளைப் பார்த்துப் பரிசீலிப்பதற்கு நாங்கள் ஆவலாக உள்ளோம். மீண்டும் அடுத்த வாரம் இதே நாளில் இதே நேரத்தில் சந்திப்போம். அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது, உங்கள் தமிழ்ச்செல்வி. நன்றி.
(உயிர் எழுத்து - 2008)