Home

Saturday 8 October 2022

இனிப்பும் கசப்பும் - 1 (சிறுகதை )


வணக்கம் நேயர்களே, மலர் தொலைக்காட்சி வழங்கும் ‘‘இனிப்பும் கசப்பும்’’ நிகழ்ச்சி உலகமெங்கும் நிறைந்துள்ள தமிழ் உள்ளங்களைக் கவர்ந்திருப்பதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. பார்வையாளர்களுடன் நாங்கள் உருவாக்கிய உறவுக்குக் கிடைத்த வெகுமதியாக இதைக் கருதுகிறோம். இந்த நிகழ்ச்சிக்காக மலர் தொலைக்காட்சிக் குழு தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் பயணங்களை மேற்கொண்டு நேயர்களைச் சந்தித்து உரையாடி, அந்த உரையாடல்களைப் பதிவு செய்து வருகிறது. இதுவரைக்கும் நம் மலர் தொலைக்காட்சி உருவாக்கி வைத்துள்ள ஆயிரக்கணக்கான பதிவுகளை ஒருவகையில் சமூக ஆவணம் என்றே சொல்லவேண்டும். பண்ருட்டியைச் சேர்ந்த, சமூகவியல் முதுகலை படித்த, கலைச்செல்வன் என்னும் மாணவர் ஏற்கனவே இந்தப் பதிவுகளை ஆய்ந்து முனைவர் பட்டத்துக்கான ஆய்வேட்டை சமீபத்தில் சமர்ப்பித்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். நூற்றிமுப்பத்தாறு வாரங்களாக வெவ்வேறு தலைப்புகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி தமிழக தொலைக்காட்சி வரலாற்றில் அழுத்தமான தடம்பதித்த ஒன்று எனச் சொல்வது மிகையான கூற்றாகாது. இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கான முக்கியக் காரணம் மனம் திறந்து தம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளும் நேயர்கள். அந்த கோடானுகோடி அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி சொல்வது எங்கள் கடமை.

மலர் நேயர்கள் அனைவரும் அறிந்த செய்தியே என்றாலும் இன்று புதிதாக பார்க்கத் தொடங்கியிருக்கும் புதிய நேயர்களை மனத்தில் கொண்டு நிகழ்ச்சி அமைப்பைப்பற்றி ஒருமுறை சுருக்கமாகச் சொல்கிறேன். இந்த இனிப்பும் கசப்பும் நிகழ்ச்சியை முன்னிட்டு எங்கள் குழு ஒவ்வொரு நகரத்திலும் நூற்றுக்கணக்கானவர்களைச் சந்தித்து குறிப்பிட்ட கருத்தையொட்டி, அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த மறக்கமுடியாத சம்பவங்களைப் பகிர்ந்துகொள்ளும்படி தூண்டி பதிவு செய்துகொள்கிறது. ஒரு பேராசிரியர், ஒரு மருத்துவர், ஓர் எழுத்தாளர் ஆகிய மூவரைக்கொண்ட எங்கள் நிலைய நிபுணர் குழுவொன்று அப்பதிவுகள் அனைத்தையும் பார்வையிட்டு ஐந்து முக்கியமான பதிவுகளைமட்டும் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது. சிந்தனையைக் கிளறக்கூடிய  அந்த ஐந்து பதிவுகளும் அவர்கள் வரிசை எண் கொடுத்துத் தொகுத்த அதே வரிசையில் சிறிதும் மாற்றம் செய்யாமல் இந்த இருபது நிமிடங்களில் ஒளிபரப்பப்படுகின்றன. பதிவில் இடம்பெறும் நேயர்களுக்கு எங்கள் வாழ்த்துகள். இடம்பெறாத நேயர்கள் மனம் தளரத் தேவையில்லை. அவர்கள் பதிவுகளும் முக்கியமானவையே. நிகழ்ச்சிக்கான கால அளவின் காரணமாக மட்டுமே அவற்றை நிகழ்ச்சியில் ஒளிபரப்ப இயலவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நிகழ்ச்சியில்தான் அவை இடம்பெறவில்லையே தவிர, எங்கள் ஆவணத் தொகுப்பில் அவை இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தையும் ஒவ்வொரு கருத்துசார்ந்து தொகுத்து ஒலிஒளித்தகடுகளாக மாற்றி மக்களிடையே பிரபலப்படுத்துவதற்கான எல்லா முயற்சிகளிலும் மலர் தொலைக்காட்சி ஈடுபட்டு வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். திரையுலக ஒலிஒளித் தகடுகளுக்கு இணையாக இன்று தமிழகமெங்கும் இவை விற்பனையாகின்றன. இன்றைய நிகழ்ச்சியின் மையக்கருத்து நட்பு. நண்பர்கள் இல்லாத வாழ்வே இல்லை. நட்பைப் பெற்றதையும் இழந்ததையும் ஆழ்ந்த உணர்வுகளோடு பலரும் பதிவு செய்துள்ளார்கள். இப்பதிவுகள் அனைத்தும் புதுச்சேரியிலும் அதன் அக்கம்பக்கத்துக் கிராமங்களிலும் எடுக்கப்பட்டவை. இந்த ஐந்து பதிவுகளை உங்களுக்காக இப்போது வழங்குகிறோம். எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் தொடர்ச்சியாக நம் நேயர்கள் இப்பதிவுகளைப் பார்க்கவேண்டும் என்கிற விருப்பத்தில் எவ்விதமான விளம்பர நிறுவனங்களின் உதவியும் இல்லாமல் நிலையத்தின் பொறுப்பிலேயே ஒளிப்பரப்பாகி வருகின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நன்றி நேயர்களே, இனி ஒவ்வொரு பதிவாகத் தொடர்ந்து பாருங்கள். இறுதியில் உங்களுக்காக ஒரு வினா விடை போட்டி காத்திருக்கிறது. அது என்ன என்பதை இறுதியில் சொல்கிறேன். அதுவரை தற்காலிகமாக உங்களிடமிருந்து விடைபெறும் என் பெயர் தமிழ்ச்செல்வி.

*

‘‘என் பேரு பரந்தாமன். பக்கத்தில கதிர்காமம் அரசாங்க ஸ்கூல்லதான் பதினொன்னாவது வரைக்கும் படிச்சேன். அப்ப மதிவாணன்தான் என் உயிர் நண்பன். எங்க போனாலும் ரெண்டுபேருமா ஒன்னாதான் போவோம். ஒன்னாதான் வருவோம். எங்களுக்குள்ள நட்பு உருவான விதத்த ரொம்ப வேடிக்கைன்னுதான் சொல்லணும். ஏழாம் வகுப்புல படிச்சிட்டிருந்தப்போ எங்க ஸ்கூல்ல  ஒரு விளையாட்டுப் போட்டி நடந்திச்சி. அதுல நான் கபடி, சாக்கு ரேஸ், ஓட்டப்பந்தயம், லாங் ஜம்ப்னு நாலஞ்சி போட்டியில கலந்துகிட்டேன். அவனும் சாக்கு ரேஸ், ஓட்டப்பந்தயம், பேஸ்பால்னு ரெண்டுமூணு போட்டியில கலந்துகிட்டான். முதல்ல ஓட்டப்பந்தயம் நடந்திச்சி. அவன்தான் முதலாவதா வந்தான். நான் ரெண்டாவதா வந்தேன். ஐயையோ கோட்ட விட்டுட்டமேன்னு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சி. ஒரு பந்தயம்தானே, போனா போவுது, அடுத்ததுல புடிச்சிரலாம்ன்னு நெனச்சிட்டேன். அப்பதான் சாக்கு ரேஸ் தொடங்கிச்சி. அந்த ரேஸ்க்கு அரிசிமூட்ட சாக்கு, இல்லன்னா சக்கரமூட்ட சாக்குதான் கொண்டாந்து குடுப்பாங்க. ஒவ்வொன்னும் நல்லா ஆளுசரம் இருக்கும். அதுக்குள்ள ரெண்டு காலுங்களயும் விட்டுக்கணும். இடுப்புவரிக்கும் தூக்கி புடிச்சிகிட்டு கீழ விழாம தாவித்தாவி ஓடணும். அதான் சாக்குரேஸ். ரொம்ப ஜாக்கிரதயா செய்யணும். சாக்குடைய அடிப்பகுதியில நம்ம பாதங்கள நல்லா அழுத்தமா வச்சிக்கணும். வாய்ப்பக்கத்த நல்லா இழுத்துப் புடிச்சி இடுப்புக்குப் பகத்துல கெட்டியா புடிச்சிக்கணும். குதிச்சிக் குதிச்சி போக அப்பத்தான் வாட்டமா இருக்கும். புடி கொஞ்சம் தளந்தாலும் ஆள கீழ தள்ளிடும்.

சாக்குக்குள்ள காலுங்கள் விட்டு எல்லாருமே ஓடறதுக்கு தயாரா இருந்தோம். ராஜாராம் சார்தான் எங்க டிரில் மாஸ்டர். விசிலடிச்சி கொடிய அசச்சாரு. உடனே ஓட ஆரம்பிச்சோம். நான்தான் முன்னால போய்க்கிட்டிருந்தேன். மதிவாணனும் எனக்கு சமமா பக்கம்பக்கமா வந்துட்டிருந்தான். எப்படியாவது முதலாவதா வந்துரணும்னு ஒரு வேகம் எனக்குள்ள ஓடிச்சி. கொஞ்சம் வேகத்த அதிகமாக்கலாம்னு கால எட்டி வச்ச சமயத்துல புடி தளர்ந்து மடால்னு கீழ விழுந்துட்டேன். ஒரு வினாடி என்ன நடந்ததுன்னே எனக்குப் புரியலை. தலை கிர்னு சுத்திச்சி. அடிபட்ட மாடுமாரி நான் கீழ விழுந்து கெடக்கறத என்னாலயே நம்பமுடியலை. அப்ப எல்லாருமே கடகடன்னு எனக்கு முன்னால தாண்டி போயிட்டாங்க. ஆனா மதிவாணன் போவலை. சட்டுனு சாக்க உருவி கெடாசிட்டு எங்கிட்ட ஓடியாந்தான். என் காலச் சுத்தி இருந்த சாக்கயும் உருவி வீசினான். கால்முட்டியில் நல்ல காயம். எட்டணா அளவுக்கு ரெண்டு முட்டியிலயும் தோல் பிஞ்சி ரத்தக்களறியாயிடுச்சி. நெத்தியிலயும் சரியான அடி. புஸ்னு வீங்கிடுச்சி. தரையில் இருந்த சின்னச்சின்ன பொடிக்கல்லுங்க உள்ளங்கையில் குத்தி அங்கங்க ஊசியால குத்தனமாரி காயம். என்ன தூக்கி நிக்க வச்சான். ரெண்டு காலயும் புடிச்சி நல்லா உருவிவிட்டான். ஒதறு ஒதறுன்னு சொன்னான். என்னால கால தூக்கவே முடியலை. வலியில அழுதுட்டேன். அழாதடா அழாதடான்னு சொல்லிகிட்டே புண்ணுல ஒட்டிட்டிருந்த மண்ண ஊதனான் மதிவாணன்.

அதுக்குள்ள ராஜாராம் சார், மகாலிங்கம் சார் எல்லாரும் ஓடியாந்துட்டாங்க. தூக்கிம்போயி காயங்கள தொடச்சி மருந்து வச்சி கட்டு போட்டாங்க. வைத்தி சார் ஸ்கூல் பக்கத்தில இருந்த ஒரு டாக்டர்கிட்ட காட்டி ஒரு தடுப்பூசி போடவச்சாரு. அன்னைக்கு பூரா மதிவாணன் என்கூடவே இருந்தான். எங்க வீடுவரைக்கும் அவன் தொணைக்கு வந்து அம்மாஅப்பாகிட்ட விஷயத்த சொல்லிட்டு போனான். திடீர்னு ஒரு பெரிய மனுஷனாட்டம் அவன் மாறிட்டாப்ல இருந்திச்சி. பந்தயத்துல இவனயா ஜெயிக்க நெனச்சம் எனக்குள்ள ஒரே வெக்கம். தன்னுடைய வெற்றியபத்தி கொஞ்சம்கூட கவலப்படாம எப்படி அவனால எல்லாத்தயும் செய்யமுடிஞ்சதுன்னு ஒரே ஆச்சரியம். அவன் எடத்துல நான் இருந்தாகூட அப்படி செஞ்சிருப்பேனாங்கறது சந்தேகம்தான். அந்த நிமிஷத்துலயே மதிவாணன்தான் என்னுடைய உயிர்நண்பன்னு மனசுல ஒரு கோடு விழுந்திடுச்சி. அதுக்கப்புறம் ஒருநாள்கூட அவனும் நானும் பிரிஞ்சே இருந்ததில்ல. எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்னுன்னு எல்லா வகுப்புலயும் ஒன்னாவே இருந்தோம். எங்க போனாலும் ரெண்டு பேரும் ஒன்னாவே போவோம். பி.யு.சி., டிகிரி படிக்கறதுக்காக தாகூர் ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்ந்தப்போகூட ரெண்டுபேரும் ஒன்னாவே சேர்ந்தோம். அவனுக்கு கணக்கு அவ்வளவா சரியா வராது. ஆனா ரெண்டு பேரும் ஒன்னா இருக்கணும்ங்கறதுக்காகவே அவனும் கணக்குப் பாடத்தயே மெய்ன் சப்ஜெக்ட்டா எடுத்துக்கிட்டு கூடவே இருந்தான். அதுவரைக்கும் எங்க நட்புக்கோ நெருக்கத்துக்கோ எந்தப் பிரச்சனையும் இல்ல. அதுக்கப்புறம் எல்லாமே கசப்பும் வேதனையும்தான்.

நாங்க ரெண்டாவது வருஷம் படிக்கறப்போ காரைக்கால்லேருந்து நிர்மலான்னு ஒரு பொண்ணு எங்க வகுப்புக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்து சேந்தா. செவசெவன்னு நல்ல அழகு. களையான முகம். அளவான உயரம். ரெட்டைஜடை போட்டுகிட்டு பாவாடை தாவணியில அந்தப் பொண்ணு வகுப்புக்குள்ள வந்தபோதே பலபேருக்கு தலையில பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிச்சிட்டுது. ஒரு ரெண்டு நிமிஷமாச்சிம் அவ பக்கத்துல நின்னு பேசமாட்டமான்னு எல்லாருக்குள்ளும் ஒரு ஆச. அவளுடைய மெய்ன் சப்ஜெக்ட்  வேற. கெமிஸ்ட்ரி. லாங்வேஜ் வகுப்புமட்டும் எல்லாருக்கும் பொது. எல்லா சப்ஜெக்ட்காரங்களுக்கும் பொதுவா ஒரு பெரிய ஹால்ல நடக்கும். கலித்தொகை, புறநானூறுன்னு உயிரக்குடுத்து தமிழ ஐயா பாடம் நடத்துவாரு. ஆனா பசங்க கவனம் மொத்தமும் அவள் மேலதான் இருக்கும்.

ஒரு நாள் கட்டுரை வகுப்புல தமிழ் ஐயா நான் எழுதன ஒரு கட்டுரைய ரொம்ப நல்லா இருக்குதுன்னு பாராட்டி சொன்னாரு. அன்னைக்கி வகுப்பு முடிஞ்சி போவும்போது நிர்மலா எங்கிட்ட வந்து உங்க கட்டுரை நோட்ட நான் படிக்கலாமான்னு கேட்டா. படிச்சிப் பாருங்களேன்னு உடனே எடுத்து குடுத்துட்டேன். இங்க இல்ல, வீட்டுக்கு எடுத்தும்போயி படிச்சிட்டு நாளைக்கு தரேன்னு சொன்னா. பரவாயில்ல, எடுத்தும் போங்கன்னு சொல்லிட்டேன். இப்படி அவ எங்கிட்ட வந்து திடீர்னு பேசனதும் பழகனதும் எதுவுமே மதிவாணனுக்கு புடிக்கலை. அவள பாத்ததுமே ஏன்டா இப்படி இளிக்கறேன்னு ரொம்ப கிண்டல் செஞ்சான். நான் அத பெரிசா எடுத்துக்கலை. ஆனா விட்டுக்கு திரும்புற வழியில இந்த ஒரு தரத்தோடு நிறுத்திக்கோ. இனிமே அவ நோட்ட கேட்டா குடுக்கக்கூடாது, புரியுதான்னு அதட்டறமாரி சொன்னான்.

அடுத்த நாள் தமிழ் வகுப்பு ஆரம்பிக்கறதுக்கு முன்னாலயே வந்து கொஞ்ச நேரம் பேசிட்டிருந்தா நிர்மலா. கட்டுரையபத்தி, பாடத்தபத்தி, எங்க காலேஜ்பத்தி, காரைக்கால் காலேஜ் பத்தின்னு நெறய பேசிட்டே இருந்தா. என்னப்பத்தியும் கேட்டா. இதெல்லாம் மதிவாணனுக்கு புடிக்கவே இல்லை. திடீர்திடீர்னு ஊமயாயிடுவான். அப்பறம் மொணறிட்டு கெடப்பான். கோவமா பாப்பான். மனசுக்குள்ளயே திட்டுவான். ஒரு தாள எடுத்து அதுல எம் பேர எழுதி அதும்மேல தப்புங்கறாமரி குறுக்கும் நெடுக்குமா நூறுதரம் பெருக்கல் குறி போட்டு காட்டுவான். வாயத் தெறந்தா போதும், அவகிட்ட பேசாத, அவகிட்ட பேசாதன்னு சொல்ல ஆரம்பிச்சிடுவான். அவள விட்டு விலகுவிலகுன்னு அவன் சொல்லச்சொல்லத்தான் அவள்கூட பழக்கம் ரொம்ப நெருக்கமாயிடுச்சி.

ஒரு கட்டத்துல மதிவாணன் எங்கிட்ட பேசறதயே நிறுத்தற அளவுக்கு போயிட்டான். ஊட்டுக்கு வர்ரதையும் நிறுத்திகிட்டான். எங்க போனாலும் ஒன்னா போறவங்க நாங்க. ஆனா இந்த விஷயம் இப்படி வளந்துட்ட பிறகு திடீர்னு ஒதுங்கி போவ ஆரம்பிச்சான். லைப்ரரிக்கு போவணும், நோட்ஸ் எழுதணும், நீ வேணும்னா போய்க்கோன்னு சொன்னான். அவன எப்படி பழையமாதிரி மாத்தறதுன்னு எனக்கு புரியலை. அதே சமயத்துல நிர்மலாகூட பழகறதயும் நிறுத்த முடியலை. அவ பேசப்பேச அவகிட்ட இருக்கற உற்சாகம் நமக்கே வந்துட்ட மாரி இருக்கும். அந்த ஆனந்தத்த என்னால எப்படி இழக்கமுடியும். ஏன் இவன் இப்படி பைத்தியக்காரனாட்டம் பேசறான்னு புரியாம தவியா தவிச்சேன். ஒருநாள் தோப்புல தனியா மாட்டனான். இதுதான்டா நேரம்ன்னு பேச ஆரம்பிச்சேன். அவன் வாய தெறக்கவே இல்லை. உம்மணாம் மூஞ்சிமாரி இருந்தான். ஏதேதோ சொல்லி அவன் வாய தெறக்கவச்சேன்.

பேச ஆரம்பிச்சதுமே திடீர்னு அழ ஆரம்பிச்சிட்டான். எனக்கு கொஞ்சம் பயம், கொஞ்சம் கொழப்பம். என்னடா என்னடான்னு அவன உலுக்கனேன். இங்க பாரு பரந்தாமா, நிர்மலாவ நான் உயிருக்குயிரா காதலிக்கறேன். அவ இல்லாம என்னால ஒருநாள் கூட வாழமுடியாது. நீ அவகிட்ட பேசறத நிறுத்திடு. அவ்ளோதான் சொல்வேன் நான்னு சொன்னான். எனக்கு அதிர்ச்சி. என்னடா சொல்றே, நிர்மலாவுக்கு தெரியுமா இதுன்னு கேட்டேன். தெரியாதுன்னு சொன்னான். அவ முடிவு என்னன்னு தெரியாம நீயா எப்படிடா முடிவு செஞ்சன்னு கேட்டான். அது அப்படிதான்டா, ஏன் எப்படின்னு நோண்டிநோண்டி நீ கேக்கற கேள்விக்கல்லாம் பதில் சொல்லணும்ங்கற அவசியம் எனக்கு இல்ல தெரிஞ்சிதா? அவகிட்ட நீ பேசக்கூடாது, பழகக்கூடாது. அதான் எனக்கு வேணும்ன்னு சொல்லிட்டு விடுவிடுன்னு நடந்து போயிட்டான்.

நிர்மலாவா, மதிவாணனான்னு மனசுக்குள்ள ஒரு பெரிய போராட்டம், என் உயிர் நண்பன் மதிவாணன். என் உணர்வுகளுக்கு சந்தோஷம் குடுக்கறவ நிர்மலா. எனக்கு ரெண்டு பேருமே வேணுமின்னு தோணிச்சி. மதிவாணன் ரொம்ப புடிவாதக்காரன். நான்தான் முக்கியம்ன்னா நான் சொல்றத கேக்கணும். இல்லன்னா நம்ம நட்பு உடையறத யாராலயும் தடுக்க முடியாதுன்னு சொன்னான்.

எனக்கு முடிவு எடுக்கத் தெரியலை. தடுமாறிகிட்டே இருந்தேன். நாளாக நாளாக அவன் நெலைமை ரொம்ப மோசமா போயிடுச்சி. அர ஆளா போயிட்டான். பரீட்சயே எழுதலை. பாத்து பேசிட்டு வரலாம்ன்னு அவுங்க வீட்டுக்கு போனா, என்ன பாத்ததுமே கதவ மூடிகினு உங்கூட எனக்கு எந்தவிதமான பேச்சுவார்த்தயும் வேணாம் போயிடுன்னு சொல்லிட்டான். அவமானம்தான். ஆனா என் உயிர் நண்பன் இப்படி ஆயிட்டானேன்னு வருத்தமா  இருந்திச்சி. எத்தனயோ தரம் மறுபடியும் மறுபடியும் போயி முயற்சி செஞசேன். ஒவ்வொரு தரமும் ஊசியால தைக்கறமாரி ஏதாவது பேசி அவமானப்படுத்தி அனுப்பிடுவான். திடீர்னு ஒருநாள் அவுங்க ஊடு பூட்டியிருந்தத பாத்தேன். ஏதோ வைத்தியத்துக்காக மெட்ராஸ் பக்கமா போயிருக்காங்கன்னு வீட்டு ஓனர் சொல்லித்தான் தெரிஞ்சிகிட்டேன். அப்பறம் படிக்கறதுக்கு காலேஜ்க்கே வரலை அவன். என் உயிர் நண்பன் என்ன ஆனான்னே தெரியாம போயிடுச்சி. நிர்மலா நட்பும் நிலைச்சி நிக்கலை. நம்ம சமுதாய சூழல் அதுக்கு இடம் தரலை. டிகிரி முடிச்சதுக்குப் பிறகு பாக்கலாம்ன்னு ரொம்ப ஆசயா அவ வீட்டுக்கு ஒருநாள் போனேன். தயவுசெஞ்சி வீட்டுப்பக்கம்லாம் வராதடா, எங்க வீட்டுல கட்டுப்பாடு ரொம்ப அதிகம்ன்னு சொன்னா. எனக்குள்ள ஏதோ தப்பு பண்ணிட்டமாரி ஒரு குற்ற உணர்ச்சி. சட்டுனு திரும்பிக்கூட பாக்காம வெளிய வந்துட்டேன். இந்த நிமிஷம்வரைக்கும் என் உயிர்நண்பன் மதிவாணன், நிர்மலா ரெண்டுபேரயுமே என்னால பாக்கமுடியலை. ஆனா ஒருநாளைக்கு ஒரு தரமாச்சிம் ரெண்டுபேரபத்தியும் நெனைக்காம இருந்ததும் இல்ல.’’

*

‘‘பேரயெல்லாம் எதுக்கு தம்பி கேக்கறிங்க. யாருக்காவது நல்லது செஞ்சிருந்தா, யாராவது நாலுபேரு முன்னேற்றம் அடையறதுக்கு ஒத்தாசயா நின்னிருந்தா பெருமையா ஊரயும் பேரயும் சொல்லிக்கலாம். சொல்றதுக்கும் ஒரு மரியாதயா இருக்கும். கேக்கறதுக்கும் ஒரு கௌரவமா இருக்கும். மானம் கெட்டு மரியாத கெட்டு, நம்பி ஏமாந்துபோயி நிக்கற என்ன மாதிரியான பொம்பளைங்களுக்கு பேர சொல்றதுக்கு எந்தத் தகுதியும் இல்ல தம்பி. இருந்தாலும் இப்படி வற்புறுத்தி கேக்கறதால அம்சவல்லின்னு வச்சிக்குங்க. இங்கதான் மூலகுளத்து பக்கத்துல ஊடு.

கம்பன் நகர்ல ரெண்டு சொல்தாங்க ஊட்டுல வேல செய்யறேன். என்னபோல பொம்பளைங்களுக்கு என்ன கௌர்மென்ட் வேலயா கெடைக்கும்? எல்லாம் பாத்திரம் கழுவற வேல. துணிதொவைக்கற வேல. மீன் கழுவிக் குடுக்கற வேல. அவ்ளோதான். மூணு வருஷமா இப்படித்தான் பொழப்பு ஓடுது. இதுக்கும் முன்னால நானும் நாலு பேரப் போல நல்லா பொடவை கட்டிகிட்டு நகநட்டு போட்டுகிட்டு நல்லா இருந்தவதான். என் பொல்லாத நேரம், எல்லாமே போயிடுச்சி. அக்கா அக்கான்னு கூடவே  இருந்து ஒருத்தி கழுத்த அறுத்துட்டா தம்பி. என் குடும்பத்தயே நாசமாக்கிட்டு போயிட்டா படுபாவி. அந்த நாய நெனைச்சாலே என் நெஞ்சு நடுங்குது. அடி வயிறுலாம் எரியுது. இந்தப் பூனையும் பால் குடிக்குமாங்கற மாதிரி இருந்தா தம்பி அவ. வெல்லம்மாதிரி இனிக்க இனிக்க பேசி ஆளயே கவுத்துட்டா, சதிகாரி.

படிப்பெல்லாம் அதிகம் கெடையாது. ஆறாங்கிளாஸ் வரிக்கும்தான் படிப்பு. நான் பொறந்த குடும்பத்துல ஏழு புள்ளைங்க. மூணு வேளசோத்துக்கே கஷ்டப்படற நெலைமை. இதுல படிப்பாவுது, மண்ணாங்கட்டியாவுது, அந்த ஆறு கிளாஸ்கூட மத்தியான சோத்துக்கு ஆசப்பட்டு போனதுதான். பெரிய பொண்ணானதும் எல்லாம் நின்னுடுச்சி. அப்பல்லாம் கூட்டுக்காரின்னு யாரும் கெடையாது. யார்கூடயும் நான் பழகனது கெடையாது. இருபது வயசுல கல்யாணம். முப்பது வயசுக்குள்ள நாலு புள்ளைங்க பெத்தாச்சி. மூணு பொம்பளைபுள்ள. ஒரு பையன். நாமதான் படிக்கலை. புள்ளைங்களாவது படிச்சி முன்னேறட்டும்ன்னு கஷ்டப்பட்டு படிக்கவச்சாரு அவரு. எஸ்ஸெல்சி ப்ளஸ் டூன்னு அததுவும் நல்லாதான் படிக்குதுங்க.

பக்கத்துல வாடக வீட்டுக்கு ஒரு குடும்பம் புதுசா வந்து சேந்திச்சி. புருஷன் பொண்டாட்டி ரெண்டு புள்ளைங்க. ஏதோ கெமிக்கல் கம்பெனியில வேலைன்னு சொல்லிகிட்டாங்க. வந்த அன்னிக்கு குடிக்கறதுக்கு ரெண்டு கொடம் தண்ணி தரீங்களாக்கான்னு கேட்டு வாங்கிட்டு போனா. அப்பறம் காய்கறி எங்க வாங்கறது, அரிசி எங்க கெடைக்கும், கோழிக்கறி எங்க கெடைக்கும்ன்னு கேட்டு வந்தா. அப்படி பேசிப் பேசி பழகனவதான் அந்தப் பார்வதி. என் வாழ்க்கையில் கொள்ளி வைக்கப் போறவ அவதான்னு அன்னிக்கு கொஞ்சம்கூட தெரியலை.

பத்தே நாள்ள கூடப் பொறந்தவமாரி ஆயிட்டா. சுதந்திரமா ஊட்டுக்குள்ள வருவா. பேசுவா. கேக்கறதுக்கு முன்னால அவளே கூடமாட ஒத்தாச செய்வா. மாவு அரைக்க உக்காந்தா பக்கத்துலயே உக்காந்து தள்ளிவிடுவா. வத்தல் போட உக்காந்தா, அவதான் அழகா புழிஞ்சிவிடுவா. அக்கா அக்கான்னு உயிரயே விட்டுடுவா. நல்லா சிரிச்ச மொகம் அவளுக்கு. கருப்புதான். ஆனாலும் களயா இருப்பா. ஒரே வருஷத்துல தெருவுக்குள்ள எல்லாருக்கும் நல்லா பழக்கமாயிட்டா.

திடீர்னு ஒருநாள் வந்து சீட்டு புடிக்கப்போறேன், நீங்களும்  சேருங்கக்கான்னு கேட்டா. ஆயிரம் ரூபா சீட்டு. மூணு பொட்டப்புள்ள வச்சிருக்கமே நாளபின்ன நமக்கு உதவாதான்னு எனக்குள்ள சின்னதா ஒரு ஆச. எங்க ஊட்டுக்காரர்கிட்ட மெதுவா கலந்து பேசனேன். அவருக்கு கோவம் வந்திருச்சி. சீட்டும் வேணாம், கீட்டும் வேணாம் சும்மா இருடின்னு அதட்டனாரு. பணம் சேக்கறதுக்கு போஸ்ட் ஆபீஸ், பேங்க்னு நூறு வழி இருக்குது. இவகிட்ட சீட்டு போட்டுதான் சேக்கணுமா, போயி வேலய பாருடின்னு திட்டனாரு. அவகிட்ட எப்படி சொல்றதுன்னு ஒரே கொழப்பம். ரெண்டு நாள் கழிச்சி உண்மைய சொல்லிட்டேன். என்னக்கா நீங்க, உங்க கைராசியால இந்த சீட்டு அமோகமா நடக்கணும், நீங்கதான் மொதல் சீட்டா நின்னு நடத்தி வைக்கணும்ன்னு நெனச்சேனே, இப்படி சொல்றியேக்கான்னு மூக்க சிந்தனா. ரொம்ப சங்கடமா இருந்திச்சி எனக்கு. அதுக்கப்புறம் பத்து பாஞ்சி நாளா இவர்கிட்ட பேசிப்பேசி கடைசியில ஒத்துக்க வச்சேன். எப்படியாவது போய்த்தொலைடின்னு சொல்லிட்டு பணத்த குடுத்தாரு. மொத்தமா பணத்த பாக்கும்போது சிரிக்க சிரிக்க வாங்குவிங்க இல்ல, அப்ப வச்சிக்கறேன்னு நெனைச்சிகிட்டேன்.

வாய வயித்த கட்டிதான் அந்த ஆயிரம் ரூபாய மாசாமாசம் சேத்து கட்டனன். டபுள் சீட்டு, டிரபிள் சீட்டுன்னு ஒரு வருஷத்துக்குள்ள முடிஞ்சிட்டுது சீட்டு. எல்லாருக்கும் ரொம்ப நாணயமா பணத்த குடுத்தா. சொளயா பணத்த பாத்தப்பறம்தான் இவருக்கும் கொஞ்சம் நம்பிக்கை வந்திச்சி. அந்தப் பணத்துல மூத்தவளுக்கு ரெண்டு வளையல் வாங்கிப் போட்டோம். அந்த சீட்டு முடிஞ்ச கையோட அடுத்த சீட்ட ஆரம்பிச்சா அவ. கொஞ்சம் கூடுதலான தொகை. அதுவும் நல்லா போச்சி. அத எடுத்துத்தான் ரெண்டாவது பொண்ணுக்கு ஒரு ஆரமும் ஒரு ஜோடி கம்மலும் மூக்குத்தியும் வாங்கனோம்.

இப்படியே நாலஞ்சி சீட்டு நடந்திடுச்சி. தொகையும் கூடிகிட்டே போச்சி. அடுத்த சீட்டு ரெண்டு லட்ச ரூபாய் சீட்டு. தொகய நெனைச்சா பயமா இருந்திச்சி. இவரும் வேணாம்ன்னு சொன்னாரு. ஆனா அவ விடவே இல்ல. அக்கா அக்கான்னு வந்து ஆயிரத்தெட்டு கத சொன்னா. பெரிய பொண்ணுக்கு மாப்பள பாத்துட்டிருந்த நேரம் அது. ஏதாச்சிம் ஒன்னு முடிவாச்சின்னா, கல்யாணத்த முடிச்சிரலாம்னு திட்டம், ஆனா கல்யாணம்னு வந்தா பணத்துக்கு எங்க போவமுடியும்? சீட்டுன்னு ஒன்னு இருந்தா அவசரம் ஆத்தரத்துக்கு டக்குன்னு எடுத்து  செலவு பண்ணலாமேன்னு ஒரு யோசன ஓடிச்சி. ஏதோ ஒரு குருட்டுத் துணிச்சல்ல சேந்துட்டோம். எங்களால மாசாமாதம் செலவுல ஒதுக்கமுடியாத அளவு பெரிய தொகை. ஆனா பொண்ணு வாழ்க்கற நெனச்சி ஒரு வேள ரெண்டு வேளன்னு சாப்பாட்டு செலவ கொறச்சி பணத்த சேத்தோம். பழைய சோறு, கஞ்சி, கேவுரு அடன்னு காலம் ஓடிச்சி. ரொம்ப முடியாம போன நேரத்துலதான் இப்படி சொல்தா ஊட்டுல வேலைக்கு வந்து சேந்தன். மொதல்ல வாசல் பெருக்கி, கோலம் போட்டா போதும்ன்னுதான் சொன்னாங்க. நாலு ஊட்டுல போட்டேன். அதுல கெடைச்ச பணத்தயும் சீட்டுலதான் போட்டேன். ஏதோ ரெண்டு லட்சம் கெடைக்கும் புள்ளைய கரையேத்திரலாம்ன்னு நெனைச்சிட்டிருந்தம்.

மாப்பிள்ள பாத்து வாய்வார்த்தயா தேதியெல்லாம் குறிச்சி முடிவு பண்ண நேரத்துல படுபாவி என் அடிவயித்துல நெருப்ப வச்சிட்டா. ராவோட ராவா புருஷனும் பொண்டாட்டியும் புள்ளகுட்டிங்களோட ஊரவிட்டே ஓடிட்டாங்க தம்பி. யாருக்கும் எதுவும் புரியலை. ஏதாச்சிம் தந்தி கிந்தி வந்து அவசரமா ஊருப்பக்கம் போயிருப்பாங்க வந்துருவாங்கன்னுதான் நெனச்சம். ஆனா அவ வரவே இல்லை தம்பி. கம்பி நீட்டிட்டா. ஒரு மாசம் கழிச்சி ஊட்டுக்கு சொந்தக்காரரு போலீஸ வச்சி கதவ உடச்சி உள்ள போனப்பறம்தான் அவ திட்டம் போட்டு ஏமாத்தியிருக்கான்னு தெரிஞ்சிது. ஒரு சின்ன சாமான்கூட ஊட்டுக்குள்ள இல்ல. என்னமோ கழுவி தொடைச்சிவிட்ட மாதிரி இருந்திச்சி. போலீஸ், புகார்னு எல்லாரும் போனாங்க. என்ன போயி என்ன புண்ணியம் தம்பி? அவ போன தெசையே தெரியலை. குழைய குழைய பேசிட்டு என் அடிவயித்துல கொள்ளிக்கட்டய சொருவிட்டா குடிகேடி. ஒரு ரூபாயா, ரெண்டு ரூபாயா தம்பி, ரெண்டு லட்ச ரூபா. வாயகட்டி வயித்தகட்டி, பச்சத்தண்ணிய மட்டுமே குடிச்சி ஒவ்வொரு ரூபாயா சேத்து கட்டனேன். ஓடுகாலி எல்லாத்தயும் சுருட்டி எடுத்துகிட்டு ஓடிட்டா. பைத்தியம் புடிச்ச மாதிரி ஆயிடுச்சி.

சொன்ன தேதியில கல்யாணம் செய்யலைன்னு நின்னு போயிடுச்சி. நாக்க புடுங்கிக்கறமாதிரி மாப்பள ஊட்டுக்காரங்க கேட்ட கேள்விய தாங்கிக்கவே முடியலை. நல்லா வீரமா பேசுவாரே தவிர, எங்க ஊட்டுக்காரரு பெரிய கோழை தம்பி. என்ன அடிச்சாரு. திட்டனாரு. கொல பண்ணப்போறேன்டி ஒன்னன்னு மிரட்டனாரு. தப்பு நம்ம பேருலன்னு எல்லாத்தயும்  தாங்கிகிட்டேன். ஆனா அவரால தாங்க முடியலை. மொதல் மொதலா வாழ்க்கையில இப்படி முன்வச்ச கால பின்வைக்கற மாதிரி ஆயிடுச்சேன்னு ரொம்ப ஒடுங்கிட்டாரு. வீடு வேலைன்னு நடப்பொணமா போயிட்டாரு. எப்படி இருந்த ஆளு, இப்படி ஆயிட்டாரேன்னு எனக்கு என் மேலயே வெறுப்பு. ஆத்தரம். கசப்பு. என்ன நெனைச்சாரோ தெரியலை. திடீர்னு ஒருநாள் தூக்குல தொங்கிட்டாரு.

எங்களயெல்லாம் தனியா தவிக்க உட்டுட்டு அவருமட்டும் நிம்மதியா போயி சேந்துட்டாரு. அஞ்சி பைசா குடுத்து உதவறதுக்கு எனக்கு ஆள் இல்ல தம்பி. நம்ம கைய நம்பித்தான் நாம வாழ வேண்டி இருந்திச்சி. மூணு பொண்ணுங்களும் பெரிசாயி நிக்குது. என்ன செய்ய முடியும் சொல்லுங்க. ஒருத்தி பிளாஸ்டிக் கம்பெனியில வேலைக்கு போறா. இன்னொருத்தி அஜீஸ் நகர்ல ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில இருக்கறா. மூணாவது பொண்ணு ரெடிமேட் துணிதைக்க போவுது. சின்ன பையன் மட்டும் படிக்கறான். சீட்டுக்காக பணம் பொரட்ட ஆரம்பிச்ச வேலை. இன்னிக்கு கஞ்சி குடிக்கறதுக்கு ஒரு வழியா போயிடுச்சி.

அந்த சிறுக்கி மவ எந்த ஊருல இருந்தாலும் என்னைக்காவது ஒருநாள் என் கையில மாட்டுவா தம்பி. அந்த தெய்வத்துக்கு கண்ணிருந்தா அவள என் கண்முன்னால கொண்டாந்து நிறுத்தும். காசு பணத்த கேக்கறதெல்லாம் அப்பறம் தம்பி, மொதல்ல என் நெஞ்சில் எரியற நெருப்பு அடங்கறமாதிரி நாலு வார்த்த நறுக்குன்னு கேக்கணும். செத்து போன என் புருஷன திருப்பி கொண்டார முடியுமாடின்னு அவள கிழிக்கற மாதிரி கேக்கணும். அப்பதான் தம்பி என் மனசு ஆறும்.’’

*

(தொடரும்)