Home

Sunday, 23 October 2022

ஒரு கூரையின் கீழே - சிறுகதை

 ஊரில் இருக்கிற எல்லா இடங்களிலும் புடவைக்கு இத்தனை ரூபாய், லுங்கிக்கு இத்தனை ரூபாய் என்று கூலிக்கணக்கு இருக்கும் போது, ராமலிங்க நாடார் மாத்திரம் இன்னும் வாரக்கூலிக் கணக்கைத்தான் அமுலில் வைத்திருந்தார். வாரத்துக்கு எழுபத்தைந்து ரூபாய். ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் விடுப்பு. மற்ற நாள்களில் காலை ஏழு மணிக்கு வந்து உட்கார்ந்தால், சாயங்காலம் பொழுது சாய்கிறவரை நெய்யவேண்டுமென்பதில் தயவு தாட்சண்யமற்ற கட்டளை. ஊர் விஷயத்தைச் சொல்லியெல்லாம் அவரோடு வாதாடமுடியாது. வாதாடுகிற மனுஷன் வேலை செய்யமாட்டான் என்பது அவர் அபிப்பிராயம். அடுத்த நிமிஷமேவெளியே போடா!’ என்பார். ‘ஊர்ல அவன் இவ்ளோ தரான், இவன் அவ்ளோ தரான்னு சொல்றதெல்லாம் வீண் பேச்சு. நான் இவ்ளோதா தருவன். இஷ்டமிருந்தா தறிய தொடு. இல்லேன்னா நடய கட்டு!’ என்று கறாராய்ப் பதில் விழும். இன்னொரு தறி எங்கயாச்சும் கிடைக்கிறது என்றால், நடையைக் கட்டிவிடலாம்தான். ஆனால் ஊரில் தறி கிடைப்பதுதான் அபூர்வம். அவனவனும் வேலைக்கு நாயாய் அலைந்தான். மற்றவர்களின் நிராதரவான சந்தர்ப்பமே நாடாருக்கு ஆதாயமாகியது.

எட்டுத் தறிகள். நீளவாக்கில் பக்கத்துக்கு நான்கு தறிகளாய் இரண்டு பக்கமும் போட்டிருந்தார். தறிகள் போட்டிருந்த அறையைப் பார்த்தால், எந்தக் காலத்திலாவது தானிய மூட்டை அடுக்குகிற குடோனாகப் பயன்படுத்தி இருப்பார்களோ என்று யோசிக்கத் தோன்றும். வெற்றிலைப்பெட்டிமாதிரி அடக்கமான இடம்.  ரொம்பவும் உயரம். நின்ற வாக்கில்கூட தொடமுடியாத மாதிரி இரண்டு ஜன்னல்கள். அந்தப் பக்கம் ஒன்று, இந்தப் பக்கம் ஒன்று. சதுரமாய் உள்ளே விழுகிற வெளிச்சம்தான் காலை, பகல் சாயங்கால வித்தியாசங்களைச் சொல்லும். மேல் தளத்திலும் சுவரிலும் அங்கங்கே காரை பெயர்ந்து உள்ளிருந்த செங்கற்கள் தெரிந்தன. நூலாம்படைகளும் சிலந்தி வலைகளும் தாராளமாய் மூலைகளில் தொங்கின. எப்பவாச்சும் சூரிய வெளிச்சம் சிலந்தி வலையில் படும்போது தங்கக்கம்பிகள்மாதிரி மின்னும். இறுக்கமும் புழுக்கமும் நிரந்தரமாய் உள்ளே நிறைந்திருக்கும். எரிச்சல் தாளாத தருணங்களில் திட்ட நேரிடும்போது முதலாளி நார்நாராய் எல்லார் வாய்களிலும் கிழிபடுவார்.

சடார்சடார் என்ற தறிக்கட்டைகளின் சத்தம் மண்டையை இடிக்கிறமாதிரி இருக்கும். எந்தச் சிந்தனையும் படரவிடாதபடி மூளையையே தட்டையாக்கி விடும் அந்தச் சத்தம். சீற்றத்துடன் விரைவாக உரசிச் செல்கிற தறிக்கட்டைகளின் நேர்த்தியும் நூல் மெத்தை ஏறிஏறி இறங்கிப் பின்னிக்கொள்கிற அழகும் பார்க்க நல்ல விஷயங்களாக இருந்தாலும் அதற்குப் பின்னணியாய் கயிற்றை இழுத்து அடித்து மாரெலும்பும் இதய பாகமும் வலிக்கிற வேதனை இருந்தது. படார் படார் என்று துடித்துக் கொள்கிற தறிகள் வேலை செய்பவர்களுக்காகச் சத்தம் போட்டு அழுகிற மாதிரி இருக்கும்.

எலும்புக்கை பட்டிக்கயிற்றை விசையோடு இழுக்கும். பளபளத்துக்கொண்டிருக்கிற நூலிழைகள் மேல் வந்து வாகாக மிதக்கும். வலது பக்கம் சாய்வாய் போன கை மீண்டும் இடது பக்கம் கயிற்றை விலுக்கென்று இழுத்து அடிக்கும். குறுக்கு இழை கச்சிதமாய் படிய, அகலமாய் வாய் திறந்த கட்டை நெருக்கி அழுத்தும் பாகங்களின் உரசல் சொல்லிவைத்தமாதிரி ஒன்றை அடுத்து மற்றொன்றைத் தொடர்ந்து நிகழும். எல்லாவற்றுக்கும் ஆதார சுருதியாய் சடார்சடார் என்கிற சத்தம் மாத்திரம் எங்கும் பரவியிருக்கும். கைகளும் விரல்களும் இயந்திரகதியில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். பிரகாசமான, வாயைத் திறந்து நூல் இழைகளை வாங்கிவாங்கி மடக்கிக் கொள்கிற பாகம் எல்லாவற்றையும் பெருமூச்சோடு பார்க்கும்.

எட்டு பேரும் இயந்திரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். எல்லார் முகத்திலும் ஏதாவது ஒரு சோகம் ரேகைகளாய் எழுதியிருந்தது. ஒருவர் மற்றவர்களிடம் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை என்கிற மாதிரி இருந்தார்கள். பேசுகிற ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தறிகளின் சத்தத்தையும் மீறி சத்தமிட்டு பேசுதல் அவசியமென்பதால்,  அப்படிப் பேச சக்தியில்லாதமாதிரி ஊமையாய் இருந்தார்க்ள. மௌனம் பயங்கரமான விஷயமாயிருந்தது. பேசுதற்குரிய விழைவும் உணர்ச்சிகளும் மாத்திரம் எல்லார் மனசிலும் கொப்புளித்துக் கொண்டிருந்தன.

பேசுகிறதைத் தடுக்கும் இன்னொரு அம்சம் முதலாளியின் திடீர் வருகைதான். முதலாளி வெளியே மரத்தடியில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருப்பார். அடுத்த வாரத்து நூல்கட்டு தயாரிப்பதிலும், இழைப்பிசிறு எடுப்பதிலும், சாயம் தோய்ப்பதிலும் உலர வைப்பதிலுமாய் ஈடுபட்டிருக்கிற வேலைக்காரர்களுக்கு நடுவில் மேஸ்திரி மாதிரி நிற்பார். உட்காராவிட்டால் அதட்டிக் கொண்டே இருப்பார். அங்கு அதட்டிஅதட்டி ஓய்ந்த மாதிரி, எப்பவாச்சும் திடீர் என்று தறி அறைக்குள் மேற்பார்வைக்கு வந்து எட்டிப் பார்ப்பார். பார்க்கிற அந்தத் தருணத்தில் எவனாவது சும்மா இருப்பது, பேசுவது, நூலை சிக்கலாக்கிக் கொண்டு சிக்கெடுக்கிற மாதிரி நேரம் கடத்துவது எல்லாம் அவருடைய பார்வைக்கு வந்துவிடும். அன்றைக்கு அவன் தீர்ந்த மாதிரிதான். பயங்கரமான வசைகளுடன் ஆரம்பித்து, நூல் விற்கிற விலை, பாவு விற்கிற விலை, சரக்கு விற்கிற விலை, இதில் தெண்டமாய் கூலி அழுகிற தனது நிலைமை எல்லாவற்றையும் செவிட்டில் அறைகிறமாதிரி பொரிந்து தள்ளுவார். முடிக்கும்போது நிர்தாட்சண்யமாய்இஷ்டமிருந்தா இரு. இல்லன்னா இப்பவே போய்டுஎன்று முடிப்பார். ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், முதலாளி இல்லாத தருணங்களில் முதலாளி சம்சாரம் அறைக்குள் வந்து, பிரியத்தோடு பேசுவதுதான், இப்படி ஒரு முதலாளிக்கு இப்படி ஒரு மனைவியா? என்று ஆச்சரியமாய் இருக்கும். ஒவ்வொருவருக்கும் கல்யாணமாகி விட்டதா இல்லையா? மனைவிக்கு எந்த ஊர், எத்தனைக் குழந்தைகள்? ஆண் எத்தனை, பெண் எத்தனை? வேறு நிலபுலம் உண்டா? குழந்தைகள் சௌக்கியமாய் உள்ளார்களா? என்று நிறையக் கேட்டு பேசுவார். எப்போதும் பேச விஷயம் இருக்கிற மாதிரி இருக்கும் அவர் தோரணை. தத்தமது கஷ்டங்களை எடுத்துச் சொல்கிறதன் மூலம் மனசை லேசாக்கிக்கொள்கிற தேவை எல்லோருக்கும் இருந்ததால், வடிகாலுக்காகவே காத்துக் கொண்டிருந்த மாதிரி எல்லாரும் உற்சாகத்தோடு பேசுவார்கள். அந்த உற்சாகமும், பேசி மனப்பாரம் பகிர்ந்துகொள்கிற இதமும் மனசைத் தக்கையாய் உணர்த்திவிடும். சட்டென்று, வாழ்வே சுலபமானதாகவும், சிக்கலற்றதாகவும், உருவம் மாறிவிட்ட மாதிரியும் தோன்றும். இன்னொரு நல்ல விஷயம் மத்தியான சாப்பாட்டுக்கு எல்லாரும் ஒன்றாகக் கூடி குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்காவது சுதந்திரமாக இருப்பதுதான். அதிகாலைச்  சூரியன் சரியாக மேலே எழுவதற்கு முன்னால், ஏழு மணிக்கெல்லாம் ஓடிவந்து தறியில் உட்கார்ந்த பிறகு, அறையில் இருப்பது ஜெயிலில் இருப்பது மாதிரிதான். இந்த உணர்வின் தீவிரமே மத்தியான சாப்பாட்டு நேரத்தை மிகவும் நெருக்கமாக உணரச் செய்தது. உச்சிச் சூரியனும், கண்ணைக் கூச வைக்கும் ஆகாயமும் திடீரென்று புதுசாக முளைத்த அதிசயமாய்ப்படும். மரத்தோரம் உட்கார்ந்து தூக்குவாளியைத் திறக்கும்போது நிம்மதியாய் இருக்கும். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதெல்லாம் இப்போதுதான் நிகழும். மனைவிக்கோ, குழந்தைக்கோ உடம்பு சரியில்லாமல் இருப்பது, குழந்தையின் ஜுரத்துக்கு சாமியாரிடம் காண்பித்து, மந்தரித்து தாயத்து கட்டிக்கொண்டது, அப்பா குடித்துவிட்டு கலாட்டா செய்தது, ஊரில் இருந்து சொந்தக்காரர்கள் யாராவது வந்திருப்பது, தொலைவில் இருக்கிற ஏதாவது ஒரு உறவின் மகளுக்கோ அல்லது மகனுக்கோ கல்யாணம் நிகழ இருப்பது, பித்தளைக் குண்டானையோ குடத்தையோ அடகு வைத்து பணம் வாங்கிக்கொண்டு, மனைவி போய் இருப்பது, சிற்சில சமயங்களில் செத்துப் போய்விடலாமா? என்றெல்லாம் யோசனை வருவது, குழந்தைகள் முகத்தைப் பார்த்து மனதைத் தேற்றிக்கொள்வது என்று ஏதாவது ஒரு விஷயம் பேச்சில் அடிப்படும். மனவேதனைகளை ஆற்றிக்கொள்ள இந்த சம்பாஷணை பெரிதும் அவசியமாக இருந்தது.

இன்னொரு உற்சாகமான விஷயம் ,  சாயங்காலம் நாலு மணிக்கு டீ எடுத்து வருகிற ராஜவல்லி. முதலாளி வீட்டுக்கு ஐந்தாறு வீடுகள் தள்ளி இருந்தது ராஜவல்லி ஓட்டல். எட்டுப் பேருக்கும் அங்கு கணக்கு இருந்தது. சாயங்காலங்களில் அவளே எட்டுக் கிளாஸில் டீ போட்டு வளையத்தில் மாட்டி எடுத்து வந்து விடுவாள். வாரக் கூலி தினமே அவளது கடன் பாக்கி அடைக்கப்படும். கதவைத் தட்டி வாசலில் ஒரு நிமிஷம் நிதானித்து மெதுவாக உள்ளே வருவாள். ராஜவல்லி பெரும்பாலும் கதவு தட்டும் சத்தம் தறி சத்தத்தில் கேட்பதில்லை. அவளின் நிற்கிற தோரணையும் உதடுகளோடு நிற்கிற சின்ன முறுவலும் அவள் வந்திருக்கிற சூழ்நிலையை உணர்த்திவிடும்.

வா

எல்லோருமே தெளிவான குரலில் உள்ளே அழைப்பார்கள். தறியோசை நிற்கும். நெற்றிக்குள் ஏதோ சமுத்திர அலைகள் புரள்கிற மாதிரி இருக்கும். மெதுவாய் வளையத்தில் இருந்து கிளாசை எடுத்து ஒவ்வொருவருக்கும் பணிவு தோன்ற நீட்டுவாள். குடித்து முடிக்கும் வரை கதவுப்படியின் பக்கம் சென்று உட்கார்ந்து  கொள்வாள். தலையைச் சற்றே பக்க வாட்டில் சாய்த்து நிற்கிற அவளோடு ஒவ்வொருவர்க்கும் ஏதாவது பேசத் தோன்றும். என்ன பேசுவது என்று அவளுக்கான வார்த்தைகளைத் தேடித் தேடிக் கூறுவார்கள். மிகச்சிறிய வாக்கியங்களால் ஆன இவர்கள் கேள்விக்கு அவள் பிரியத்தோடும் இனிமையோடும் பதில் சொல்லும்போது, சந்தோஷத்தால் குதூகலிப்பார்கள். தலையை மேலே நிமிர்த்தி அவளை நன்றியோடு பார்ப்பார்கள். தலையை மேலே நிமிர்த்தி அவளை நன்றியோடு பார்ப்பார்க்ள. காலி கிளாசை தறிக்குழியை விட்டு எழுந்திருந்து அவள் அருகில் சென்று கொடுத்துவிட்டுத் திரும்புவார்கள். அவள் அருகாமையை உணர்க்கிற அந்தத் தருணத்தை சந்தோஷமாய் நினைப்பார்கள்.

சரி நா வரன்.’

எல்லா கிளாஸ்களோடும் அவள் நொடிப் பொழுதில் மறைவாள். அவள் போன பிறகு கொஞ்ச நேரமாவது அவளைப் பற்றிய பேச்சாகவே இருக்கும். தினமும் பேசுகிற விஷயமாகவே இருந்தாலும், அலுப்பில்லாமல் மீண்டும் பேசப்படும்.

பேச்சு என்னதான் அவளைப் பற்றி இருந்தாலும், ஒரு வரம்புக்குள்ளாகவே இருக்கும். ஏதோ ஒரு டவுனில் அவளது கடந்த கால வாழ்க்கை. ஒரு லாரி டிரைவர்க்குத் தொடுப்பாகி இந்த ஊரில் வந்து வைத்த சின்ன டீக்கடை. பல நாள்களுக்கு அவன் வெளியூர்ப் பயணங்களாகச் செல்ல, தனியாகவே வாழ்வு நடத்தும் அவள் சுபாவம், கசப்பான அவள் இறந்தகாலம் பற்றியதாக மட்டுமே பேச்சு சுற்றியது. கசக்கிப் பிழிகிகற உழைப்புக்கும் மனச்சுமைக்கும் மத்தியில், ஒரு பெண்ணின் சமீபமான வரவு நிகழ்த்துகிற சாதாரணமான உற்சாகத்தைத் தாண்டி என்றும் மீறியதில்லை. உற்சாகம் தருகிற இந்த விஷயத்துக்காகவே ஒவ்வொருவரும் ராஜவல்லியைத் தனக்கு நெருக்கமான ஒரு பெண்ணாக மதித்தார்கள். தறிகளுடனான தம் சோக வாழ்வோடு அவள் மிகவும் சம்பந்தப்பட்டிருக்கிறாள் என்றும், அவள் வருகை நிகழாத மாலைப்பொழுதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்றும் எண்ணினார்கள்.

முதலாளிக்கு வழக்கமாக டவுனிலிருந்து நூல் சப்ளை செய்யும் ஆளோடு ஏதோ மனக்கசப்பு உண்டாகி, நூல் வரவு திடீரென நின்றது. நல்ல நூலுக்காக முதலாளி நிறைய இடங்களுக்கு அலைந்தார். பக்கத்து மாவட்டத்துக்கு பஸ் ஏறிப்போய், யார் யாரையோ பார்த்தார். எல்லாம் அலைச்சல் மயமாய் இருந்தது. பத்து நாட்கள் பேயாய் அலைந்தும் பிரயோஜனமில்லை. நடுவில் பழைய இருப்பு நூல்களெல்லாம் தீர்ந்து, எதுவும் இல்லை என்கிற நிலைமை வந்தபோது எல்லோருக்கும் பயமாய் இருந்தது.

கடைசிப் புடைவையை நெய்து முடித்ததும், எட்டுப் பேரையும் கூப்பிட்டு முதலாளி சொன்னார்: ‘‘எங்க அலஞ்சும் நூல் கெடைக்கல. கொஞ்ச நாள்ல ஏற்பாடு செய்றன். அதுவரைக்கும் வேலைக்கு வரவேணாம். வந்ததும் சொல்லி அனுப்பறன். அதுக்கப்புறம் வந்தா போதும்.’’

எல்லார் கணக்கையும் பைசா இல்லாமல் தீர்த்தார். ராஜவல்லியின் வார பாக்கியை அடைத்துவிட்டு எல்லோரும் நடந்தார்கள்.

கொஞ்ச நாள் என்பது ஏறத்தாழ ஒரு மாசம் ஆகியும் ஒன்றும் நல்ல முடிவாய் தெரியவில்லை. வீட்டில் பட்டினி பெருகியது. ஒருவேளைக் கஞ்சிக்கே உன்னைப்பிடி என்னைப்பிடி என்றது. பாத்திரங்கள¢ அடகுக்கடைக்கு நடந்தன. மனைவி & குழந்தைகளின் வதங்கிய பசித்த முகத்தைப் பார்க்கப்பார்க்க மனசு கலங்கியது. அடிவயிற்றில் சிலீர் என்று பயம் புரண்டது. முதலாளியைப் பார்ப்பதும், அவரதுஇல்லைஎன்ற பதிலைக் கேட்டுத் திரும்புவதும் வேதனையாய் இருந்தது. முன்பணமாகக் கொஞ்சம் பணம் கேட்டதற்கு முதலாளி மறுத்துரைத்த பதில் மேலும்மேலும் துக்கமாய் இருந்தது. என்னதான் விசுவாசமாக வேலை செய்தாலும், பணம் என்று வரும்போது முதலாளி முதலாளிதான், தொழிலாளி தொழிலாளிதான் என்று நினைத்துக் கொண்டார்கள். வெறும் தண்ணீர் குடித்து இரவுப் பொழுதைப் போக்கினார்கள்.

ஒரு விடியல் நேரத்தில் சாயம் தோய்க்கிற பையன் கதவைத் தட்டி நூல் வந்த விவரத்தைச் சொன்னபோது, புதுரத்தம் பாய்ந்த மாதிரி இருந்தது. ஒருவன் இன்னொருவனுக்குச் சொல்லி, இன்னொருவன் அடுத்தவனுக்குச் சொல்லி எட்டுப் பேருக்கும் கால் மணி நேரத்துக்குள் செய்தி பரவியது. அடுத்த ஒரு மணி நேரத்தில் எல்லாரும் தறி குடோனுக்கு முன்னால் நின்றார்கள். எல்லார்க்கும் பரிச்சயமான தனது தறியைத்தொட்டு அசைக்கவும், கயிற்றைப் பிடித்து விசையோடு இழுக்கவும், கட்டைகளை வருடி நகர்த்தவும் கைகள் துடித்தன.

முதலாளி வந்து நூல் அளந்து கொடுத்தார். பொருந்துகிற வேலையில் இன்னும் ஒரு மணி நேரம் தாமதமானது.

சடார் சடார்என்கிற சத்தம் மீண்டும் அறையை ஆக்கிரமித்தது. அவரவர்களுக்கும் வீட்டுக் கஷ்டங்களும் பிரச்சினைகளும் யோசனைகளாய் இருந்தன. பேசிக் கொள்ளக்கூட நேரமில்லை.  எக்கி எக்கி இறங்கிய மார்பின் அசைவில் வெறும் வயிறு கூவியது. பட்டினியின் பலவீனம் இதயத்தை மிகவும் நோகச் செய்தது புழுக்கத்தில் வேர்த்து வழிந்தது. ஒரு டீ குடித்தால் தேவலாம் போல் இருந்தது. அதன் சூடும் இதமும் புத்துணர்ச்சியாய் இருக்கும். ஆனால், சட்டென்று தறியைவிட்டு எழுந்து போவது முதலாளிக்குப் பிடிக்காத விஷயம். நடுவில் பல நாட்கள் வேலையில்லாமல் திரிந்துவிட்டு, வேலைக்குத் திரும்பியிருக்கிற முதல் தினத்தில் கெட்ட பெயர் வாங்க யாருக்கும் இஷ்டமில்லை. ஒருவன் எழுந்து டீயின் விருப்பத்தை மற்றவர்களுக்கு வெளியிட்டபோது எல்லோருக்கும் அது விருப்பமாய் இருந்தது. எப்படிக் குடிப்பது என்பதுதான் பிரச்சினையானது.

ஒருவன் மாத்திரம் எழுந்து வாசல் கதவுக்கு அருகில் வந்து மெல்ல எட்டிப் பார்த்தான். சுறுசுறுப்பாக உலகம் இயங்கிக் கொண்டிருந்தது. தள்ளுவண்டியில் வெங்காயம் தக்காளி விற்பனை கூவிக்கொண்டு போனான். வினோதமான அவனின் குரலைக் கேட்டு நாய்கள் குரைத்தபடி அவனைப் பின் தொடர்ந்தன. தள்ளாத கிழவன் ஒருவன் விறகுக்கட்டோடு நடந்தான். முதலாளி தூரத்தில் மரத்தடியில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தார். சாயத்தொட்டிக்குப் பக்கத்தில் சின்னப் பையன் குனிந்து கொண்டிருந்தான். ஒரு ஓட்டமாய் டீக்கடைக்கு ஓடிப்போய் டீ சொல்லிவிட்டு வருவதில் நிச்சயம் அந்தப் பையன் உதவமுடியும் என்று நினைத்தான். சொன்னால் போதும், எடுத்து வருவதெல்லாம் ராஜவல்லி பார்த்துக்கொள்வாள். இன்றுமுதல் வேலை ஆரம்பமாகி இருக்கிற விஷயத்தை இதன் மூலமாகவே அவள் தெரிந்துகொள்வாள் என்று யோசனையோடு அந்த பையன் இருந்த திசையைப் பார்த்து ‘‘ஸ்... ஸ்...’’ என்று சத்தம் போட்டான். மூன்றாவது சத்தத்துக்கு அந்தப் பையன் திரும்பினான். ‘‘இங்க வா!’’ என்று கையசைத்து அவன் வருவதை ஊர்ஜிதம் செய்துகொண்ட பின்பு தலையை உள்ளிழுத்துக் கொண்டான்.

இன்னாது?’

இங்க உள்ள வாடா!’

கதவை அகலமாக இரண்டு கைகளாலும் திறந்துகொண்டு உள்ளே வந்தான்.

இன்னா விஷயம்?’’

போய் ராஜவல்லி கிட்ட ஆளுக்கொரு டீ சொல்லிட்டு வரியா?’’

யாருகிட்ட?’

’ராஜவல்லிகிட்டா.’’

அந்த அம்மா இப்ப கடை வச்சில்ல. ஊரவிட்டுப் போய்ட்டுது.’

எதிர்பார்த்ததற்கு மாறாக அந்தப் பையனிடம் இருந்து வந்த பதில் எல்லாரையும் அதிர வைத்தது. அடுத்து என்ன பேசுவது, என்ன கேட்பது என்றுபுரியாத இருட்டுக்குள் தள்ளிவிடப்பட்ட மாதிரி இருந்தது. குழப்பமான தவிப்போடு பையனைப் பார்த்துக் கேட்டான் ஒருவன்.

நெஜமாவா?’’

அட பொய்யா சொல்றன். போன வாரம்தா போச்சி. அந்த லாரி டிரைவர் போன வாரம் வந்திருந்தான். அவனுக்கும் அந்த அம்மாவுக்கும் சரியான சண்டை. தெருவுல இழுத்துப் போட்டு அடி அடின்னு செமத்தியா அடிச்சிட்டான் அவன். ராத்திரியெல்லாம் வாசல்ல ஒக்காந்து அழுதுக்னுதா இருந்திச்சி. விடிஞ்சி பாத்தா ஆளக்காணம். எங்கியே போய்ட்டுது. அதகூட நம்பமுடியல. ஒடித்தான் போய்ட்டுதுன்னு சில பேர் சொல்றாங்க. எங்கியோ போய் தூக்குபோட்டு செத்திருக்கும்னு சிலபேர் சொல்றாங்க. மொத்தத்தில கடை மாத்திரம் இப்ப இல்ல..’’

ஒரு கணம் கல்லாய்ச் சமைந்து நின்றுவிட்டார்கள் எல்லாரும் இத்தனை காலம் தங்கள் பிரியத்துக்கும் உற்சாகத்துக்கும் உரிய ஒரு பெண் கண்காணாத இடத்துப் போய்விட்டாள் என்பது கொஞ்ச நேரத்துக்குத் தாங்கமுடியாத விஷயமாய் இருந்தது சொந்தமான ஒன்றை இழந்துவிட்டதுபோல் துக்கமாய் இருந்தது.

சரி... போ...’’

பையன் போனதும் ஆழ்ந்த மௌனத்தோடும் இனம் புரியாத வேதனையோடும் தறிக்குழிக்கு வந்து உட்கார்ந்தார்கள். வழக்கமான சடார்சடார் என்கிற சத்தம் உக்கிரத்தோடு எழுந்து எழுந்து அடங்கியது.

அநேகமாக அதற்குப் பிறகு டீயின் வரவு நின்றே போனது சாத்தப்பட்ட ராஜவல்லி கடையைத்தவிர வேறு கடையே தெருவில் இல்லாததும், சாதாரண டீக்காக வேலை மெனக்கட்டு எழுந்து அடுத்த தெருவரைக்கும் போய் வருவது முதலாளிக்கு இஷ்டமில்லாத விஷயமானதாலும், டீ தேவைப்படுகிற தருணங்களில் ராஜவல்லியின் நெருக்கமான தோரணை சட்டென்று நினைவுப் பாதையில் ஊர்வது ரொம்ப காலத்துக்குத் தொடர்ந்தும் அதற்குக் காரணங்களாகின.

(பிரசுரமாகாதது - 1986)