Home

Sunday, 16 October 2022

பெரிய மீனும் சின்ன மீனும்

 

ஒரு நாட்டுப்புறக்கதை. ஒரு குளத்தில் ஏராளமான மீன்கள் வாழ்ந்து வந்தன. அந்தக் கூட்டத்தில் ஒரு பெரிய மீன் இருந்தது. அதற்கு உணவு தேவைப்படும்போதெல்லாம், தன்னைச் சுற்றி நீந்தி விளையாடிக்கொண்டிருக்கும் சின்ன மீன்களை விழுங்கியது. பெரிய மீனைக் கண்டாலே சின்ன மீன்கள் அஞ்சத் தொடங்கிவிட்டன. அதன் வருகையை உணர்ந்ததுமே எல்லா மீன்களும் வேறு திசையை நோக்கி நீந்தித் தப்பிக்க முயற்சி செய்தன. ஆனால் பெரிய மீனின் வேகத்துக்கு அவற்றால் ஈடுகொடுக்க முடிவதில்லை. இப்படியாக சின்ன மீன் கூட்டத்தில் ஒரு பகுதி தொடர்ந்து பெரிய மீனுக்கு இரையாகி வந்தது.

தன் இயலாமையை நினைத்தும் பெரிய மீனின் கருணையின்மையை நினைத்தும் வருத்தத்தில் மூழ்கியிருப்பதைத் தவிர, சின்னமீன் கூட்டத்தால் எவ்விதமான தீர்வையும் எட்ட முடியவில்லை. ஒருநாள் எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் வீசப்பட்ட தூண்டிலுக்கு பெரிய மீன் இரையாகி விட்டது. நல்ல வேளை, பிழைத்தோம் என சின்ன மீன்கள் நிம்மதியாக நீந்திக் களித்தன. பிழைத்த சின்ன மீன்கள் ஒரு கட்டத்தில் வளர்ந்து பெரிய மீன்களாகின. அவற்றுக்குப் பசி எடுத்தது. நாலா பக்கமும் அலைந்து திரிந்து தம்மைச் சுற்றி நீந்தித் திரியும் சின்ன மீன்களை விழுங்கத் தொடங்கின.

சின்ன மீனை பெரிய மீன் விழுங்குவது இயற்கையான பண்பு என இக்கதை சுட்டுவதாக பலர் நினைத்துக்கொண்டிருக்கக்கூடும். ஆனால் அதுவல்ல உண்மை. கண்ணுக்கு  முன்னால் கிடைத்த  ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் தன்னலத்தையே அந்தப் பண்பு அடையாளப்படுத்துகிறது. மீன் இனத்தில் காணக்கூடிய இப்பண்பை, நாம் மனிதர்களிடத்திலும் பார்க்கமுடியும். அன்பு, பாசம், இரக்கம், நட்பு, பணிவு, கடமை, மதிப்பு என வெவ்வேறு பெயர்களில் தனக்கு நன்மை கிட்டும் வகையில் இன்னொருவரை வளைத்து, இழுத்து, நெருக்கி காரியங்களைச் சாதித்துக்கொள்ளும் மனிதர்கள் எங்கெங்கும் நிறைந்திருக்கின்றனர். சுரண்டுவதை முன்னிட்டு எவ்விதமான குற்ற உணர்வும் இல்லாதவர்களாகவே அவர்கள் வாழ்கிறார்கள். சுரண்டுவதை தன் உரிமையென்றும் இயல்பென்றும் நினைக்கும் அளவுக்கு அவர்கள் வாழ்க்கை அமைந்துவிடுகிறது.

விட்டல்ராவ் எழுதிய வெளிமனிதன் என்னும் தொகுப்பில் உள்ள நான்கு குறுநாவல்களிலும் இத்தகு மனிதர்களின் சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை எழுதப்பட்டு ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் கடந்திருந்தபோதும், இக்கதைகளில் காணப்படும் எந்தச் சித்திரமும் இன்றுவரை மாறாமல் அப்படியே நீடிக்கிறது. மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்று குத்தலாக ஓரிடத்தில் எழுத்தாளர் ஜி.நாகராஜன் குறிப்பிட்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மனிதனின் சல்லித்தனம் பெருகியிருக்கிறதே தவிர, குறையவோ மறையவோ இல்லை என்பது சங்கடமான உண்மை. விட்டல்ராவின் குறுநாவல்கள் அந்த உண்மையின்மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன.

வெளிமனிதன் குறுநாவலில் மூன்று முக்கியமான பாத்திரங்களை நம் முன்னால் நிறுத்தியிருக்கிறார் விட்டல்ராவ். ஒருவர் மானிஷி டே. கல்வித்துறைசார் ஆவணப்படங்கள், அனிமேஷன் படங்கள் போன்றவற்றை தயாரித்துக் கொடுக்கும் நிறுவனத்துக்குச் சொந்தக்காரர். இன்னொருவர் ரங்கராஜ். ஓவியர். இளமையில் ஆதரவின்றி நின்ற ஒரு தருணத்தில் அடைக்கலம் கொடுத்து குடும்பத்தில் ஒருவனாகவே கருதி காப்பாற்றி வரும் செஞ்சோற்றுக்கடனுக்காக மானிஷி டேயின் எல்லாச் செயல்களுக்கும் பின்னால் தூணாக நின்று பணியாற்றுபவர். மூன்றாவது நபர் ரங்கராஜின் அப்பா. சிறுவயதிலேயே அவனையும் அவன் தாயையும் கைவிட்டு பெங்களூரைவிட்டு சென்னைக்கு இடமாற்றல் வாங்கிக்கொண்டு வந்து இன்னொரு பெண்ணை மணந்து வாழ்க்கை நடத்துபவர். மகன் வசிக்கும் இடத்தை எப்படியோ தெரிந்துகொண்டு வந்து அடிக்கடி பண உதவிக்காக கை நீட்டுபவர். ஒருவர் செஞ்சோற்றுக்கடனுக்காக இன்னொரு மனிதனை பயன்படுத்திக்கொள்வதை தன் உரிமையாக நினைக்கிறார். இன்னொருவர் பெற்ற உரிமைக்காக, மற்றொருவரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கருதுகிறார். அன்பும் கசப்பும் வெறுப்பும் படிந்த இந்த உறவுகளின் சிற்சில பரிமாணங்களை இந்தக் குறுநாவலில் சித்தரிக்கிறார் விட்டல்ராவ்.

ரங்கராஜ் என்னும் சிறுவனுக்கு இரக்கத்தின் காரணமாக அடைக்கலம் தந்தவர் டே.  அத்தகு நல்ல குணம் என்றென்றும் வணக்கத்துக்குரியது. அதில் ஐயமே இல்லை. குடும்பத்தில் ஒருவன் என்னும் இனிப்பான அடைமொழி வழியாக உணவும் உறைவிடமும் மட்டும் கொடுத்துவிட்டு, பத்தாண்டுகளுக்கும் மேலாக  அவனுக்கு ஊதியமே தராமல் அவன் உழைப்பில் வாழும் டே போன்ற மனிதர்களை வரையறுப்பது மிகவும் கடினம். வாழ்க்கை பற்றிய அவர்களுடைய கணக்கை ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது. டே மீது ரங்கராஜின் மனத்தில் கசப்பு பெருகிக்கொண்டே போகிறது. ஆனால் அதை வெளிப்படுத்த இயலாதபடி ஏதோ ஒரு நாகரிக உணர்வு அவனைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. அது வெடித்துவிடும் முன்பாக வெளியேறிவிட வேண்டும் என்பது அவன் எண்ணமாக இருக்கிறது. அப்படிப்பட்ட தருணத்தில் டேயின் குடும்பம் மகள் தொடர்பாக ஒரு சிக்கலில் சிக்கொண்டபோது,  அச்சிக்கலிலிருந்து மீண்டு வர ரங்கராஜ்  உள்ளார்ந்த வேகத்துடன் உதவி செய்கிறான்.

இன்னொரு பக்கத்தில் பெற்ற தந்தையின் சுரண்டல். தன்னிடமிருந்து பணம் பறிப்பதற்காகவே தன் இருப்பிடத்துக்கு மீண்டும் மீண்டும் வந்து அவமானத்தைத் தேடி வைத்துவிட்டுப் போகும் அவரை வெறுத்து ஒதுக்கினாலும் எதிர்பாராத அவருடைய மரணத்துக்குப் பிறகு அந்தக் குடும்பத்துக்கு தேவையான எல்லா உதவிகளையும் அவன் செய்தாக வேண்டிய நெருக்கடி உருவாகிறது. அவை அனைத்தையும்  எவ்விதமான பற்றுணர்வுக்கும் இடம் கொடாமல் நிறைவேற்றுகிறான்.

எல்லாத் திசைகளிலும் அவன் ஒருவித சுரண்டலுக்கு இலக்கானவன். வாழ்நாள் முழுதும் பெரிய மீன்களால் விழுங்கப்படும் சின்ன மீனாகவே வாழ்ந்துவந்தவன். ஆனால் தான் பெற்ற கசப்பை அவன் யாருக்கும் திருப்பியளிப்பதில்லை. மாறாக, அவர்கள் உடைந்து விழும் தருணத்தில் துன்பம் துடைத்தூன்றும் தூணாக நிற்கிறான். ஒருவன் வீட்டு மனிதனாக இருப்பதிலோ, வெளிமனிதனாக இருப்பதிலோ எவ்விதமான பெருமையும் இல்லை. மாறாக மற்றவர்களைச் சுரண்டாத, மற்றவர்களுக்குத் தூணாக விளங்கும் மனிதனாக வாழ்வதுதான் முக்கியம். குறுநாவலுக்குள் விட்டல்ராவ் எந்த இடத்திலும் அந்த எண்ணத்தை முன்வைக்கவில்லை. மாறாக, ஒரு வாசகன் தன் வாசிப்பின் வழியாக அதைப் பெற்றுக்கொள்ளும் வகையில் கதையின் கட்டமைப்பு அமைந்திருக்கிறது.

புளி இத்தொகுப்பில் உள்ள இன்னொரு முக்கியமான குறுநாவல். வெவ்வேறு ரகமாக பிரிக்கப்பட்ட புளியை கொட்டையை நீக்கி, நார்ப்பகுதியை அகற்றும் வேலையில் நாள்முழுக்க ஈடுபட்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள். அந்தத் தொழிற்கூடம்தான் கதையின் களம். அங்கு பணிபுரியும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமான சிக்கல். சிலர் அதை வெளிப்படுத்துகிறார்கள். சிலர் அதை மனத்துக்குள்ளேயே அடக்கிவைத்துக்கொள்கிறார்கள். மற்ற தொழிற்கூடங்களில் அளிக்கும் கூலியைவிட குறைவான கூலியைத்தான் கொடுக்கிறான் முதலாளி. அந்த முதலாளியை ஏமாற்றி மாலை வேளையில் கூடத்தைவிட்டு வெளியேறி வீட்டுக்குச் செல்லும் வழியில் கூடத்திலிருந்து திருட்டுத்தனமாக உருட்டி எடுத்துவரும் புளிப்பந்தை பலசரக்குக்கடையில் கொடுத்துவிட்டு பணம் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள் பெண்கள். ஒவ்வொரு மீனுமே தன்னை பெரிய மீனாகக் கருதி, அடுத்த மீனை விழுங்கப் பார்க்கிறது.

சொந்த மகளின் திருமணத்தை நடத்த தேவைப்படும் பணத்தை கடனாகப் பெற்றுக்கொண்டு, அதற்கு ஈடாக மகள் போல வளர்த்த இன்னொரு இளம்பெண்ணை முதலாளி வீட்டுக்கு பணிப்பெண்ணாக நெஞ்சத்தை கல்லாக்கிக்கொண்டு அனுப்பிவைக்கிறாள் ஒரு தாய். ஒவ்வொருவரும் தன் சொந்த நலத்தையே முக்கியமாக நினைக்கிறார்கள். அதற்காக எந்த எல்லைக்கும் கீழே இறங்கிச் செல்ல தயாராக இருக்கிறார்கள். இதில் ஒருவருக்கும் குற்ற உணர்ச்சியில்லை.  புளி எந்த வடிவத்தில் இருந்தாலும் அதன் சுவையில் மாற்றம் இருப்பதில்லை. மனிதர்களும் எந்தத் தட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தத்தம் எல்லைக்கு உட்பட்ட வகைகளில் சுரண்டுவதற்கு நாணமற்றவர்களாகவே இருக்கிறார்கள். இது மிகப்பெரிய துரதிருஷ்டவசமான உண்மை.

மிக அருகில் ஒரு பாலம் சுரண்டலின் இன்னொரு வடிவத்தை முன்வைக்கும் கதை. பெருமழையின் காரணமாக இடிந்துபோன பாலத்தைப் பழுதுபார்த்து புதுசாகக் கட்டியெழுப்ப தொழிலாளர்களை ஓர் ஊரிலிருந்து நகரத்துக்கு அழைத்துவந்து அருகிலேயே இருக்கும் ஒரு மேட்டுப்பகுதியில் குடிவைக்கிறார் ஓர் ஒப்பந்ததாரர். அங்கிருந்து சிறிது தொலைவில் அதே நகரத்தைச் சேர்ந்த குடிசைவாசிகள் வசிக்கும் மற்றொரு பகுதி உள்ளது. அவர்களும் எங்கோ நகரத்துக்குள் வேலை செய்யும் தொழிலாளர்களே. குடிசைவாசிகளில் ஒருவன் வந்து ஒரு தொழிலாளிக்கு பொருளாசை காட்டி மயக்க நினைக்கிறான். சிமெண்ட் மூட்டையை திருட்டுத்தனமாக எடுத்துக் கொடுக்கும்படி கேட்கிறான். கட்டுமானத் தொழிலாளி அதற்கு இசைவதில்லை. நினைத்த அளவுக்கு பால வேலை வேகமாக நடைபெறவில்லை. யாராரோ எங்கெங்கோ பணத்தைச் சுருட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் வேலை நின்றுவிடுகிறது. சிறிது கால இடைவெளியில் மீண்டும் தொடர்கிறது. நிற்பதும் தொடர்வதுமாக பாலவேலை நடப்பதுபோலவே அவர்கள் வாழ்க்கையும் தேக்கமும் அசைவும் கொண்டதாகவே இருக்கிறது. அவர்கள் ஒப்பந்ததாரரால் கைவிடப்படுகிறார்கள். வாழ்க்கையின் நிமித்தமாக உள்ளூர் குடிசைவாசிகள்போல எங்கெங்கோ பொருளியல் தேவைக்காக வழி தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு நட்பாகக் கிடைக்கும் ஒருவன், அக்குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை தன் பாலியல் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்கிறான். நீரின் பெருக்கால் அடிக்கடி இடிந்து விழும் பாலத்தைப்போல அவர்கள் வாழ்வும் சிதைவதும் எழுந்து நிற்பதுமாக அமைந்துவிடுகிறது.

குடும்ப அமைப்புக்குள்ளேயே திகழும் தன்னலப்போக்கை இன்னொருத்தி குறுநாவல் முன்வைத்திருக்கிறது. சொந்த ஊரில் கணவன் செய்யும் கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பெற்ற மகனைக்கூட உதறிவிட்டு வெளியேறிவிடுகிறாள் ஒருத்தி. அவள் இறங்கிய இடத்தில் அவளை ஏற்று அடைக்கலம் கொடுக்கிறான் இன்னொருவன். ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் இருப்பவன் அவன். அவளை இன்னொரு மனைவியாக ஏற்று அவளோடு குடும்பம் நடத்துவதில் அவனுக்கு எவ்விதமான மனத்தடையும் இல்லை. அவளுடைய உழைக்கும் வேகமும் அர்ப்பணிப்பும் அவளை பொருளாதார அளவில் சொந்தக் காலில் நிற்க துணையாக இருக்கின்றன. அவளோடு தொடக்கத்தில் மோதும் முதல் மனைவி அவளிடமிருந்து கிட்டும் லாபங்களைக் கணக்கிட்டு அமைதியாகிவிடுகிறாள். ஒருவரை ஒருவர் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எதிர்பாராத கணத்தில் அவள் வசிக்கும் தெரு வழியே செல்லும் கட்சி சார்ந்த வாகன ஊர்வலத்தில் பழைய கணவனைப் பார்க்கிறாள் அவள். தன் இருப்பிடம் தெரிந்துவிட்டதே என்று குழம்புகிறாள். சில நாட்களிலேயே அவன் அனுப்பிவைத்த சமாதானத்தூதுவன் அவளைச் சந்தித்து பல வாக்குறுதிகளை அளிக்கிறான். பழைய குடும்ப அமைப்புக்குள் பொருந்தும் வேகம் உந்தித் தள்ள ஒருவரிடமும் தெரிவிக்காமல் இரவோடு இரவாக அவனை நாடிச் சென்றுவிடுகிறாள் அவள்.

ஒவ்வொருவரும் இன்னொருவரை, ஒரு பாத்திரத்தைப்போல பயன்படுத்திக்கொள்வதை பல்வேறு காட்சிகள் வழியாக அடுக்கிக்கொண்டே செல்கிறார் விட்டல்ராவ். ஒளவையாரின் மூதுரை உறவைப்பற்றிய ஒரு வரையறையை அளிக்கிறது. அற்ற குளத்தில் அறுநீர்ப்பறவைபோல் உற்றுழி தீர்வார் உறவல்ல என்றும் அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு என்றும் கூறுகிறது அந்த வரையறை. ஆனால் எதார்த்தம் வேறொன்றாக இருக்கிறது. ஒருவன் தன் மனைவியோடு சேர்ந்திருப்பதும் அடித்து வதைப்பதும் விரட்டுவதும் தேவையான போது அழைத்துச் சேர்த்துக்கொள்வதும் தன் விருப்பம் சார்ந்த உரிமைகளாக நினைக்கிறான். இன்னொருவனோ அடைக்கலம் தேடி வந்தவளுக்கு அளிக்கும் ஆதரவை ஆட்கொள்ளும்  உரிமையாக நினைத்துக்கொள்கிறான்.  அவளோ, யார் தனக்குரியவர் என்னும் முடிவை அடையமுடியாமல் தடுமாறுகிறாள். அனைவரும் அந்தந்த நிமிடத்தில் தோன்றுவதைச் செய்கிறவர்களாக இருக்கிறார்களே தவிர, வரையறையை ஒட்டி வாழ்கிறவர்கள் யாருமில்லை.

காற்றின் போக்கில் அலையும் காகிதத்துண்டுபோல மனிதவாழ்வு தன்னலத்தின் வேகத்துக்கு ஆட்பட்டு அலைந்துகொண்டே இருக்கிறது. இன்னொருவரை இரையாக்கிக்கொள்வது பற்றிய நாணமற்றதாக கொஞ்சம் கொஞ்சமாக சமூகம் மாறிக்கொண்டே செல்கிறது. விட்டல்ராவின் குறுநாவல்கள் அந்த மாற்றத்தின் பதிவுகளாக மலர்ந்திருக்கின்றன.

 

(புக் டே – இணைய இதழ், 15.10.2022)