முன்னொரு காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சமாக ஏழு அல்லது எட்டு குழந்தைகள் இருந்தார்கள். வீடு நிறைய குழந்தைகள் இருந்த காலத்தில் அந்த வீட்டில் இருந்த தாத்தாக்களும் பாட்டிகளும் அவர்களுடைய வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தார்கள். குறிப்பாக முன்னிரவுப்பொழுதுகளில் குழந்தைகள் மடிமீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க, அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் நல்ல நல்ல கதைகளை சொன்னார்கள். குழந்தைகளுக்கும் தாத்தா பாட்டிகளுக்கும் இடையில் மகத்தானதொரு உறவு நிலவியது. எல்லாத் தலைவர்களும் தம் வாழ்க்கை வரலாறுகளில் இதைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.
காலம் மாறியது. குடும்ப அமைப்பும் மாறியது.
ஒரு குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் மட்டுமே இருந்தார்கள். பெற்றோர்கள்
ஒரு ஊரிலும் தாத்தா பாட்டிகள் இன்னொரு ஊரிலுமாக இருந்தனர். பெற்றோர்கள் தம்மால் முடிந்த
அளவுக்கு நேரம் செலழித்து குழந்தைகளுடன் சிரித்துப் பேசி பொழுதுபோக்கினார்கள். கதைகள்
சொன்னார்கள். குருவியையும் கோழிகளையும் காட்டி சோறு ஊட்டினார்கள். நவீன கல்வி அறிமுகப்படுத்திய
புத்தகங்கள் வழியாக பள்ளியாசிரியர்களும் கதைகளை அறிமுகப்படுத்தினர்.
மீண்டும் காலமும் குடும்ப அமைப்பும்
மாறின. ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு குழந்தை மட்டுமே இருந்தது. பொருள் தேடும் வேலைக்கான
உழைப்பின் காரணமாக, குழந்தைகளிடம் பெற்றோர்களால் மிகக்குறைந்த நேரம் மட்டுமே செலவழிக்க
முடிந்தது. கதையோ, பாட்டோ சொல்லவும் பகிர்ந்துகொள்ளவும் பொழுதற்றவர்களாக வாழ்க்கை எந்திரமயமாகிவிட்டது.
பள்ளியாசிரியர்களோடு இப்போது தொலைக்காட்சியும் வகைவகையான யூடியூப் காணொளிகளின் தொகுப்பும்
குழந்தைகளின் கதைத்தேவையை ஈடு செய்யத் தொடங்கின.
தாத்தாபாட்டியாக இருந்தாலும் சரி, அம்மா
அப்பாவாக இருந்தாலும் சரி, ஆசிரியராக இருந்தாலும் சரி, அனைவரும் தனி மனிதர்கள். தாம்
குழந்தைகளோடு உரையாடுகிறோம் என்னும் தன்னுணர்வு உள்ளவர்கள். எதைச் சொல்லவேண்டும், எதைச்
சொல்லக்கூடாது என்னும் தெளிவுள்ளவர்கள். ஆனால் தொலைக்காட்சிகளும் யூடியூப் காணொளிக்காட்சிகளும்
அடிப்படையில் வணிக நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டவை. எல்லாவற்றையுமே பார்வையாளர்கள்
முன்னால் காட்சிகளாக வைப்பவை. அங்கே தேர்வு என்பதே இல்லை. குழந்தைகளின் மன அமைப்புக்கு
உகந்தவை என்னும் எல்லைக்கு அப்பால் உள்ளவற்றையும் இறக்கிவைத்து, சுமைகொண்ட மனம் கொண்டவர்களாக
குழந்தைகளை மாற்றிவிடுகின்றன.
இன்றைய சூழல் குழந்தைகளை இப்படி ஒரு
நெருக்கடியில் தள்ளிவிடும் என்று ஒருவரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். தெரிந்தோ தெரியாமலோ
கல்லும் முள்ளும் அடர்ந்த பாதையில் இறங்கி நடக்கத் தொடங்கிவிட்டோம். இனிமேல் பின்னோக்கித்
திரும்பிச் செல்வது சாத்தியமில்லை. மெல்ல மெல்ல
கவனமாக கடந்துசெல்வதே நம் இலக்காக இருக்கவேண்டும்
தொலைக்காட்சியையோ, காணொளிக்காட்சியையோ
பார்ப்பதிலிருந்து குழந்தைகளை ஓர் எல்லைக்கு மேல் தடுப்பதோ கண்காணிப்பதோ இயலாத செயல்.
மாறாக, அவற்றுக்கு இணையாக சிறுவர்களுக்காகவென்றே எழுதப்பட்டிருக்கும் கதைப்புத்தகங்களையும்
பாட புத்தகங்களையும் அறிமுகப்படுத்தவேண்டும். அவற்றின் சுவை எத்தகையது என்பதை அவர்களே
உணரும்வகையில் செய்யவேண்டும்.
நல்லவேளையாக பாரதியார், கவிமணி தேசிய
வினாயகம் பிள்ளை காலத்திலிருந்து தொடங்கி நவீன கல்வி யுகத்தில் உருவாகி வந்த கதைப்புத்தகங்களும்
பாடல் புத்தகங்களும் நம் மொழியில் கொட்டிக் கிடக்கின்றன. அந்தப் புதையலை குழந்தைகளுக்கு
அறிமுகப்படுத்த வேண்டும். அந்தப் புதையலின் மதிப்பை அவர்கள் ஒருமுறை உணர்ந்துவிட்டால்
போதும், அவர்களாகவே மேலும் மேலும் புதையலைத் தேடிச் செல்லத் தொடங்கிவிடுவார்கள்.
வள்ளியப்பாவின் குதிரைச்சவாரி, திரும்பி
வந்த மான்குட்டி, நான்கு நண்பர்கள், பர்மா ராணி, நீலா மாலா, ரோஜாச்செடி கதைகளைப் படிக்கத்
தொடங்கும் குழந்தைகள் மீண்டும் மீண்டும் படிக்க விரும்புவார்கள். பூவண்ணனின் அதிசயப்பானையும்
அற்புதச்சேவலும், வீரமணி போன்ற கதைப்புத்தகங்களில் மூழ்கிவிட்டால் விடுபடவே மனம் வராது.
அந்தக் கதைகள் எல்லாமே ஓர் இன்பக்கடல். அலைதவழும் அந்தக் கடலில் கால்களை நனைக்கவும்
விளையாடவும் குளிக்கவும் நீந்தவும் அவர்களுக்கு ஓர் அறிமுகம் கிடைத்தால் போதும், அந்தச்
செல்வத்தை அவர்களாகவே தேடித்தேடிச் சேர்த்துவைத்துக்கொள்ளத் தொடங்குவார்கள். ஒவ்வொருவரிடமும்
வாசிப்புப்பழக்கம் இப்படித்தான் தொடங்குகிறது.
தமிழ்ச்சூழலில் பாரதியார், கவிமணி,
பெ.தூரன், வள்ளியப்பா, பூவண்ணன், வாண்டுமாமா, முல்லை தங்கராசன் என சிறார் இலக்கியம்
சார்ந்து இயங்கிய சாதனையாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். யெஸ்.பாலபாரதி, முருகேஷ், கமலவேலன்,
கொமா.கோ.இளங்கோ, இரா.நடராசன் என இன்றளவும் அந்தச் சாதனைச்சரடு தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அப்பட்டியலில் புதுவை சார்ந்து இயங்கிவருபவர் பாரதிவாணர்சிவா. புதுவைபாரதி என்னும்
பெயரில் குழந்தைகளின் படைப்பூக்கத்துக்கான ஒரு களமாக அவர் நடத்தி வரும் இதழ் மிகமுக்கியமானது.
முன்னூறு இதழ்களாக அவர் அந்த இதழை எல்லா இடர்களையும் கடந்து இன்றளவும் தொடர்ந்து நடத்திவருவது,
அவருடைய அர்ப்பணிப்புணர்வுக்கும் இலக்குநோக்கிய
பயணத்துக்கும் அடையாளமாக உள்ளது. சிறுவர் சிறுமியருக்காக எழுதுவது மட்டுமல்ல, படைப்பூக்கம்
மிக்க சிறுவர் சிறுமியர்களை உருவாக்குவதும் அவருடைய கனவாக இருக்கிறது. எழுதுவதற்கும்
ஓவியங்களைத் தீட்டுவதற்கும் சிறார்களுக்கும் தொடர்ந்து பயிற்சியளிக்கிறார்.
சிங்கமும் யானையும் என்னும் தலைப்பில்
பதினேழு சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுப்பை நமக்காக அளித்திருக்கிறார் பாரதிவாணர்சிவா. குழந்தைகள் தெரிந்துகொள்ளவேண்டிய பல தகவல்கள் இக்கதைகளில்
அடங்கியுள்ளன. எல்லாமே வாசிப்பு சுவாரசியத்தை ஊட்டுவதற்காக புதிய கோணத்தில் முன்வைக்கப்படுகின்றன.
சிங்கமும் யானையும் புத்தகத்துக்கான
தலைப்புக்கதையாக இருந்தாலும் தொகுதிக்குள் அது கடைசியாக இடம்பெற்றிருக்கிறது. அக்கதையைப்
படித்ததும் ஆரம்பப் பாடசாலையில் நான் படித்த சிங்கமும் சுண்டெலியும் கதையை நினைத்துக்கொண்டேன்.
அந்தக் கதை ஒரு காட்டில் ஒரு பகல்வேலையில் தூங்கும் சிங்கத்தோடு தொடங்கும். அந்தப்
பக்கமாக வந்த ஒரு சுண்டெலி தூங்கும் சிங்கத்தின் முதுகில் ஏறி விளையாடும். தூக்கம் கலைந்ததால் சிங்கம் சினம் கொண்டு
எழுந்துவிடும். எலியிடம் கடுமையான குரலில் பேசும். உன்னைத் தின்றுவிடப்போகிறேன் என்று
பிடித்துவைத்துக்கொண்டு மிரட்டும். அச்சம் கொண்ட எலி மன்னிப்புக்காக மன்றாடும். இன்று
நீங்கள் என்னை கொல்லாமல் விட்டால் என்றாவது ஒருநாள் உங்களுக்கு நான் உதவுவேன் என்று
தெரிவிக்கும். அதைக் கேட்டு சிங்கம் சிரிக்கும். இந்த சின்னஞ்சிறிய உடம்பை வைத்துக்கொண்டு
எனக்கு உதவி செய்யப் போகிறாயா என்று அதட்டலாகக் கேட்டாலும் போ, போ, பிழைத்துப்போ என
கொல்லாமல் விட்டுவிடும். சில நாட்களுக்குப் பின் அதே காட்டில் ஒரு துண்டு இறைச்சிக்கு
ஆசைப்பட்டு ஒரு வேடன் விரித்த வலையில் சிக்கிக்கொண்டு தவிக்கும். அப்போது அந்த வழியாக
வந்த எலி வலையை அறுத்து சிங்கத்தைக் காப்பாற்றிவிடும். வெட்கத்தோடு எலிக்கு நன்றி சொல்லிவிட்டு
சிங்கம் ஓடிவிடும். எங்கள் ஆசிரியர் இந்தக் கதையைச் சொல்லிவிட்டு உருவத்தைப் பார்த்து
யாரையும் எடைபோடக் கூடாது என்றும் சொன்னார். மேல்வகுப்புக்கு வந்த பிறகு வேறொரு ஆசிரியர் அதே கதையை திருக்குறளில் இடம்பெற்றிருக்கும் ’உருவுகண்டு
எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து’ என்னும் குறளோடு பொருத்திக்
காட்டினார்.
இதைப்போலவே இன்னொரு உண்மையை உணர்த்துவதாக
அமைந்துள்ளது பாரதிவாணர் எழுதியிருக்கும் சிங்கமும் யானையும் சிறுகதை. விலங்குகளையே
பிரதான பாத்திரங்களாகக் கொண்ட கதையின் ஊடாக, வசதி என்னும் நோக்கத்திலும் நவீனம் என்னும்
எண்ணத்திலும் சமீப காலமாக நாம் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கி, நம் சுற்றுச்சூழலுக்கு
நாமே எதிரானவர்களாகவும் பிற உயிர்களுக்கு ஊறு விளைவிப்பவர்களாகவும் எப்படி மாறிவிட்டோம்
என்பதை சொல்லாமல் சொல்லி உணர்த்துகிறார்.
ஒரு மான் வயிற்றுவலியால் துடிக்கிறது.
மருத்துவமனையில் அதைப் பரிசோதிக்கும் மருத்துவர், கிலோ கணக்கில் பந்துபோல அதன் குடல்
பகுதியில் சுருண்டிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கண்டுபிடிக்கிறார். அறுவைசிகிச்சை
மூலம் அது அகற்றப்படுகிறது. உயிர்பிழைத்த மான் சோர்வோடு நடமாடுகிறது. மானுக்கு நேர்ந்த
விபத்து மற்ற உயிர்களுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் விலங்குகள் கூடிப்
பேசுகின்றன. காட்டின் மிகமுக்கியமான விலங்குகளான சிங்கமும் யானையும் அந்தக் கூட்டத்திற்கு
தலைமைப் பொறுப்பேற்று முக்கிய முடிவுகளை எடுக்கின்றன. அது முதன்மையாக நாம் அறிந்துகொள்ள
வேண்டிய நீதி என்பதை யாரும் சொல்லாமலேயே நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது.
காக்கை போட்ட தீர்மானம் என்ற சிறுகதையும்
மறைமுகமாக சுற்றுச்சூழல் மேம்பாட்டை வலியுறுத்தும் சிறுகதை. ஊர் விரிவாக்கம், சாலை
விரிவாக்கம் என ஏதேதோ காரணங்களால் தினந்தோறும் மரங்கள் வெட்டுப்படுகின்றன. மழை இல்லாததால்
குளம், குட்டை, ஏரி என அனைத்தும் நீரின்றி வற்றிவிடுகின்றன. மரங்களே இல்லாத சூழலில்
காக்கைகளால் எங்கும் கூடு கட்டவும் முடியவில்லை. தாகத்துக்கு தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை
என துயரத்தில் மூழ்குகிறது காக்கை. தற்செயலாக ஏதோ ஓரிடத்தில் பாதையோரமாக தண்ணீர்க்குழாய்
உடைந்து, தண்ணீர் பெருகி குளமெனத் தேங்கி நிற்கிறது. காக்கை அந்த இடத்தில் இறங்கிவந்து,
அந்தத் தண்ணீரை அருந்தி தாகத்தைத் தணித்துக்கொள்கிறது. மனிதர்களாகிய நம் தன்னலம் சார்ந்த எண்ணங்கள் பிற
உயிர்களுக்கு எப்படியெல்லாம் ஊறு விளைக்கின்றன
என்பதை இக்கதையைப் படிக்கும் வாசகர்கள் தானாகவே உணர்ந்துகொள்வார்கள்.
பறவைக்குடில் இன்னொரு சிறந்த கதை. தொடர்மழையின்
காரணமாக ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு விடுமுறை விட்டுவிடுகிறார்கள். சில மாணவர்களுக்கு
அது கொண்டாட்டமாக இருக்கிறது. சிலருக்கு அது சலிப்பாக இருக்கிறது. மழையின் காரணமாக
எங்கேயும் வெளியே செல்லமுடியவில்லையே என்று அவர்கள் தவிக்கிறார்கள். நமக்கே இந்த அளவுக்கு
தவிப்பு இருந்தால், எப்போதும் வெட்டவெளியில் பறந்துகொண்டே இருக்கும் பறவையினங்களுக்கு
எவ்வளவு தவிப்பாக இருக்கும் என்று பேசிக்கொள்கிறார்கள். கூடு கட்ட முடியாத பறவைகளின்
சங்கடத்தைப்பற்றியும் பேசிக்கொள்கிறார்கள். அந்த உரையாடலின் முடிவில் அவர்கள் மனத்தில்
ஒரு திட்டம் உதிக்கிறது. அந்த நேரத்துக்கு கைக்குக் கிடைத்த கூடை, பானை, செத்தை, கயிறு
என சின்னச்சென்ன பொருட்களைச் சேகரித்து தொங்கும் குடில்களை உருவாக்கி பார்வையில் படுகிறமாதிரி
மரக்கிளைகளில் தொங்கவிடுகிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே எங்கெங்கோ குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த
பறவைகள் அந்தக் குடில்களைத் தேடிவந்து தங்கிவிடுகின்றன.
பாரதிவாணர் சிவாவின் சிறுகதைகளின் கட்டமைப்பின்
பொதுத்தன்மையை உணர்த்துவதற்காகவே இக்கதைகளைப்பற்றி இங்கு குறிப்பிட்டேன். கதைத்தொகுதியை
முழுமையாக வாசிக்கும் சிறுவர்கள் மேலும் சில உண்மைகளைக் கண்டடையக் கூடும். இந்தத் தொகுதியில்
உள்ள சிறுகதைகளுக்கு இவரிடம் ஓவியம் பயிலும் பிள்ளைகளே ஓவியம் தீட்டியிருக்கிறார்கள்.
அது ஒரு நல்ல முயற்சி. ஆசிரியரின் கதைகளும் மாணவர்களின் ஓவியங்களும் இத்தொகுதியில்
இணைந்திருக்கின்றன. பாரதிவாணர் சிவா மேலும் ஆற்றலுடன் கதைகளை எழுதவேண்டும். எழுதி எழுதி
சிறுவர்சிறுமியரின் நெஞ்சில் இடம்பிடிக்கவேண்டும். அவருக்கு என் அன்பான வாழ்த்துகள்.
(புதுவை
பாரதிவாணர் சிவா எழுதிய சிங்கமும் யானையும் சிறுகதைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரை)