Home

Saturday, 8 October 2022

விட்டல்ராவின் படைப்புலகம்

 

அரைநூற்றாண்டுக்கும் மேலாக தமிழிலக்கிய வெளியில் நாவல்கள், கட்டுரைகள் என பல தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் மூத்த படைப்பாளியான விட்டல்ராவ் அவர்களே. அவருடைய இலக்கியப் பங்களிப்பைக் கெளரவிக்கும் விதமாக இந்த ஒருநாள் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருக்கும் விழாக்குழுவைச் சேர்ந்த நண்பர்களே. சிறுகதை, நாவல்கள், திரைப்படக்கட்டுரைகள், நுண்கலைசார் கட்டுரைகள் என விட்டல்ராவ் இயங்கிய வெவ்வேறு தளங்கள் சார்ந்து அவருடைய ஆளுமையை இன்றைய தலைமுறை வாசகர்கள் புரிந்துகொள்வதற்கு உதவியாக ஆழமான கட்டுரைகளுடன் வந்திருக்கும் கருத்தரங்கப் பேச்சாளர்களே. சேலத்திலிருந்து மட்டுமன்றி, வெவ்வேறு நகரங்களிலிருந்து வந்து அவையில் நிறைந்திருக்கும் பார்வையாளர்களே. உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு நாள் முழுதும் அமர்ந்து உரையாடும் அளவுக்கு ஆழமான படைப்புகளை வழங்கிய படைப்பாளர்கள் பலர் இருந்தபோதும், அவர்களைப்பற்றிய உரையாடல்கள் மிகவும் குறைந்த அளவிலேயே தமிழ்ச்சூழலில் நிகழ்ந்திருக்கின்றன. நம் வாழ்க்கைத் தேவைகளில் இலக்கியம் ஒருபோதும் முதன்மைத்தேவையாக இருந்ததில்லை என்பது ஒரு முக்கியமான காரணம். முதன்மைத்தேவையாக வைத்துக்கொண்டவர்கள் கூட வெளிப்படையாக அதைக் காட்டிக்கொண்டதில்லை. 1900 தொடங்கி 2000 வரை ஒரு நூற்றாண்டு காலத்தில் நாம் கொண்டாடிய படைப்பாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.

போன நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் இலக்கிய ஆளுமை பாரதியாரே. ஆனால் பொதுவெளியில் அவரைப்பற்றிய உரையாடல்கள் அவர் வாழும் காலத்தில் நிகழவே இல்லை. நண்பர்களிடையிலான தனிச்சந்திப்புகளில்  மட்டுமே  அவருடைய படைப்புகளின் பெருமை குறித்தும் உயர்வு குறித்தும் உரையாடல்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆங்கில ஆட்சிக்கு எதிரான சிந்தனைப்போக்கு கொண்டவர் என்கிற பிம்பம் அவரை நெருங்கி வருவதற்கும் பொதுவெளியில் அவரைப்பற்றி உரையாடுவதற்கும் ஒரு பெரிய தடையாக இருந்திருக்கலாம். அவருக்குக் கிடைத்த பாராட்டுகள் எல்லாம் இவற்றைக் கடந்து நிகழ்ந்தவை என்றுதான் சொல்லவேண்டும். அவரைப்பற்றிய கட்டுரைகள், அவருடைய மறைவுக்குப் பிறகே அதிக அளவில் எழுதப்பட்டன. அவருடைய படைப்புகளை மனப்பாடம் செய்யும் நண்பர்கள் தனிச்சந்திப்புகளில் அவற்றை முன்வைத்து உரையாடி மகிழ்ந்த அனுபவக்குறிப்புகளையே நாம் பல கட்டுரைகளில் பார்க்கிறோம். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை தம் சுயசரிதையான ‘என் கதை’ நூலில் பாரதியாரைச் சந்திக்கச் சென்ற அனுபவத்தை விரிவாகவே எழுதியிருக்கிறார். ஐந்தாறு நண்பர்கள் ஒரு வீட்டில் சந்தித்துக்கொள்கிறார்கள். அவர்களிடையில் நடுநாயகமாக பாரதியார் அமர்ந்திருக்கிறார். பாடல்கள் பற்றி இரவு முழுதும் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி தனிச்சந்திப்புகளில்தான் அவர் கொண்டாடப்பட்டிருக்கிறார். அவருடைய பாடல்களை முன்வைத்து  விவாதித்திருக்கிறார்கள். விடுதலைக்குப் பிறகே அவருடைய பாடல்கள் விரிவான அளவில் கவனம் பெற்றன.

நவீன சிறுகதையாசிரியர்களின் பட்டியலில் புதுமைப்பித்தனே முதன்மையான ஆளுமை. ஆங்கிலேய எதிர்ப்பு போன்ற அரசியல் காரணம் எதுவும் இல்லாத நிலையில்கூட அவருடைய படைப்புகள் பெரிய அளவில் தமிழ்ச்சூழலில் கொண்டாடப்பட்டதில்லை. அவருடைய மறைவுக்குப் பிறகு ரா.ஸ்ரீ.தேசிகன், க.நா.சு. போன்ற பல எழுத்தாளர்கள் மீண்டும் மீண்டும் எழுதியே புதுமைப்பித்தனின் இடத்தை நிலைநாட்டினர். மெளனியை வீடு தேடிச் சென்று பாராட்டிய பலருடைய நினைவுக்குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவரும் பொது அரங்குகளில் கொண்டாடப்பட்டதில்லை. பிச்சமூர்த்தி, கு.ப.ரா. போன்றவர்களைப்பற்றி யாரேனும் நினைவுக்குறிப்புகள் எழுதியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

பொதுவெளியில்  படைப்புகளை முன்வைத்து கொண்டாடப்பட்ட எழுத்தாளராக நம்மால் ஜெயகாந்தனை மட்டுமே சொல்லமுடிகிறது. ஜெயகாந்தனின் எழுத்தாக்கங்களே இல்லாமலிருந்த இறுதி கால்நூற்றாண்டில் கூட அவரைப்பற்றிய உரையாடல்கள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன.

தமிழிலக்கிய வளர்ச்சிக்காக அரும்பணியாற்றிய ஆளுமைகள் பலருண்டு. கு.அழகிரிசாமி, ப.சிங்காரம், எம்.வி.வெங்கட்ராம், க.நா.சு., போன்ற பலரைப்பற்றி எப்போதும் ஒரு ஆழ்ந்த மெளனமே தமிழ்ச்சூழலில் நிலவி வந்திருக்கிறது. சில படைப்பாளிகளைப்பற்றி உரையாடல்கள் நிகழ்கின்றன. சில படைப்பாளிகளைப் பற்றி எவ்விதமான உரையாடலும் நிகழ்வதில்லை. இதுதான் காரணம் என நாம் எதையும் வரையறை செய்துகொள்ள முடியாது. அது அப்படித்தான் என நினைத்து கடந்து செல்வதைத் தவிர வேறு வழி இல்லை.

எழுத்தாளர்களை முன்வைத்து உரையாடல் நிகழ்த்துவது என்பது இரண்டாயிரத்துக்குப் பிறகு உருவான ஒரு புதிய ஆரோக்கியமான பழக்கம். இது நேர்மறையான விளைவுகளை உருவாக்கும் ஒரு செயலாகும். எழுத்தாளர்களின் ஆக்கங்களை ஒட்டுமொத்தமாக முன்வைத்து அவர்களுடைய சமூகப்பங்களிப்பைச் சுட்டிக்காட்டி போற்றுவது ஒரு புதிய மரபாகவே தொடங்கி நிகழ்ந்துவருகிறது. ஏற்கனவே யுவன் சந்திரசேகர், எம்.கோபாலகிருஷ்ணன், யூமா வாசுகி  போன்ற எழுத்துலக ஆளுமைகளைப்பற்றி இத்தகு கருத்தரங்குகளை ஒருங்கிணைத்த அனுபவம் உள்ள கவிஞர் லாவண்யா சுந்தரராஜன். இன்று எழுத்தாளர் விட்ல்ராவ் பற்றிய கருத்தரங்கம் அவருடைய முயற்சியால் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் விட்டல்ராவ் ஐம்பதாண்டு காலமாக இலக்கிய வெளியில் இயங்கிவரும் ஆளுமை. முதன்முதலாக அவருடைய படைப்புகள் பற்றிய கருத்தரங்கத்தை இன்று நடத்துவதன் வழியாக, வரலாறு நம் மீது சுமத்தவிருந்த பழியிலிருந்து நாம் தப்பிவிட்டோம்.

தமிழ் நாவல் உலகில் விட்டல்ராவின் பங்களிப்பு மிகமுக்கியமானது. போக்கிடம், நதிமூலம், வண்ணமுகங்கள், காலவெளி, நிலநடுக்கோடு ஆகிய அவருடைய படைப்புகள் அனைத்துமே காலத்தைக் கடந்து நிற்பவை. அரை நூற்றாண்டு காலமாக அவை மீண்டும் மீண்டும் வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன. அவற்றைப்பற்றி தனித்தனியாக இங்கே படைப்பாளிகள் உரையாற்ற இருக்கிறார்கள். நான் அந்தக் களத்தைத் தொடாமல் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் விட்டல்ராவின் படைப்புலகத்தைப் புரிந்துகொள்ள ஏதுவாக ஒரு சில குறிப்புகளை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

நதிமூலம் நாவலில் ஒரு காட்சி இடம்பெறுகிறது. கிட்டா எனப்படும் கிருஷ்ணையர் குளத்தில் விழுந்த ஒருத்தியைக் காப்பாற்றுகிறார். சாதி அடிப்படையில் தீண்டாமை நிலவி வந்த காலம் அது. தீண்டக்கூடாத ஒரு சாதியைச் சேர்ந்த ஒரு பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பதை நேருக்கு நேராகப் பார்த்தபடி மேல்சாதியைச் சேர்ந்த ஊர்க்காரர்கள் பலர் நின்றிருக்கிறார்கள். அவர்களுக்கு சாதி பெரிதாகத் தெரிகிறது. ஆயினும், எல்லாவற்றையும் விட மனித உயிர் மகத்தானது என்கிற எண்ணம் கொண்ட  கிருஷ்ணையர் அந்தக்குளத்தில் இறங்கி அந்தப் பெண்ணைக் காப்பாற்றுகிறார். அதனாலேயே அவர் சாதியை விட்டு விலக்கி வைக்கப்படுகிறார். அவருடைய குடும்பம் அக்கிரகாரத்திலிருந்து வெளியேற்றப்படுகிறது. ஊருக்கு வெளியே குடிசைப்பகுதிக்கு அவர் சென்று வாழவேண்டிய நிலை ஏற்படுகிறது. பருவ வயதில் பெண்பிள்ளைகளையும் சிறுவர்களையும் பாதுகாப்போடு வளர்க்க வேண்டியிருக்கிறது. எநத அமைப்பிலும் சேரமுடியாத ஓர் உதிரி மனிதராகவே அவர் வாழ்ந்து மறைகிறார்.

போக்கிடம் நாவலில் இடம்பெற்றிருக்கும் பேச்சியும் பரீதுவும் கூட ஒருவகையில் உதிரி மனிதர்களே. பேச்சிக்கு கிராமத்தில் எந்த ஆதரவும் இல்லை. இருப்பவர்கள் அவளுடைய தனிமையையும் விதவைக்கோலத்தையும் இயலாமையையும் பயன்படுத்திக்கொண்டு அவள் இளமையைத் துய்க்க நினைப்பவர்களே தவிர அவளுக்கு ஆதரவாக நிற்பவர்கள் என எவரும் இல்லை. சாலை போடுவதற்காக அந்த ஊருக்கு வந்திருக்கும் வாகன ஓட்டியான அவனும் ஒருவகையில் உதிரி மனிதனே. இந்த உதிரி மனிதர்கள் தமக்குள் இணைந்து தமக்கான போக்கிடத்தைத் தாமே கண்டடைகிறார்கள். அந்த வரலாற்றுத்தடமே விட்டல்ராவின் படைப்புலக மையம்.

ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் அமைப்புக்குள் வாழும் மனிதர்களும் அமைப்புக்கு வெளியே வாழும் உதிரிமனிதர்களும் இணைந்தே வாழ்கிறார்கள். ஆனால் அமைப்புக்குள் வாழும் மனிதர்களின் உழைப்பும் மேன்மையும் பேசப்படும் அளவுக்கு அமைப்புக்கு வெளியே வாழும் உதிரி மனிதர்களின் உழைப்பும் தவிப்பும் மேன்மையும் வெற்றியும் பேசப்படுவதில்லை. வரலாற்றில் தடம் பதிப்பதுமில்லை. ஆனால் விட்டல்ராவ் இந்த உதிரிமனிதர்களை நம் மனத்துக்கு மிகவும் நெருக்கமான மனிதர்களாக உணரவைக்கிறார். இது விட்டல்ராவின் படைப்புலகத்தின் மிகமிக முக்கியமான அம்சமாகும.

அவருடைய சமீபத்திய படைப்பான நிலநடுக்கோடு நாவலில்கூட இத்தகு உதிரி மனிதர்களின் இருப்பைக் காணமுடியும். கடந்த நூற்றாண்டின் இருபதுகளிலும் முப்பதுகளிலும் சமூக அமைப்பு வட்டத்துக்குள் வாழ்ந்தவர்கள் ஆங்கிலோ இந்திய மக்கள். விடுதலைக்குப் பிறகு அவர்கள் அமைப்பு வட்டத்துக்கு வெளியே சென்றுவிடுகிறார்கள். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக உதிரி மனிதர்களாகி விடுகிறார்கள். அந்த உதிரிமனிதர்களின் ஆழ்மனத்தில் தேங்கியிருக்கும் கருணையின் சுவட்டை நாம் நிலநடுக்கோட்டில் காணமுடியும்.

விட்டல்ராவின் எழுத்துலகம் உதிரிமனிதர்களின் வாழ்க்கையால் நிறைந்திருக்கிறது. குரலற்றவர்களின் குரலாக, முகமற்றவர்களின் முகமாக விட்டல்ராவின் படைப்புலகம் விளங்குகிறது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக தம் எழுத்துப்பயணத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் மூத்த படைப்பாளிக்கு விட்டல்ராவ் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அவரைப்பற்றிய உரையாடலை இன்று தொடங்கிவைத்திருக்கும் நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள்.

(21.11.2021 அன்று சேலத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆற்றிய தலைமையுரையின் எழுத்துவடிவம்)