Home

Sunday 16 October 2022

உரையாடலுக்கான வாசல்

 


கடந்த நூற்றாண்டில் நிலவிய சாதியப்பார்வைக்கும் இந்த நூற்றாண்டில் இப்போது நிலவும் சாதியப்பார்வைக்கும் நுட்பமான அளவில் சில வேறுபாடுகள் உள்ளன. கொரானா வைரஸ் போல அதுவும் தன்னை காலந்தோறும் உருமாற்றிக்கொண்டே இருக்கிறது. தீண்டாமையின் பெயரால் முன்னொரு காலத்தில் சொன்னதுபோல யாரும் யாரையும் தெருவுக்குள் வராதே, கோவிலுக்குள் வராதே, குளத்துக்குள் இறங்காதே என இன்று தடுத்துவிட முடியாது. அனைவரும் கலந்து நடமாடுவது இன்று இயல்பாக மாறியிருக்கிறது. இந்த மாற்றத்துக்குத் தகுந்தபடி தம்மைத் தகவமைத்துக்கொண்டு தம் சாதியப்பற்றை உதறியும் சாதியக்கோட்டைக் கடந்தும் வந்தவர்கள் நம்மிடையே பலருண்டு. அதே சமயத்தில் தம்மை அறியாமலேயே ஆழ்மனத்தில் இன்னும் சாதியப்பார்வையைச் சுமந்து வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள். சாதியப்பார்வையை முற்றிலுமாகக் கடந்து அனைவரும் நல்லிணக்கப்பார்வையுடன் இணைந்திருக்கும் ஒரு வாழ்க்கைமுறை எதிர்காலத்தில் சாத்தியமாக வேண்டும். அதற்கு, சாதியத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிப்புகளை உருவாக்கியவர்களுக்கும் இடையில் ஓர் உரையாடல் நிகழ்ந்தாக வேண்டியிருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். அந்தப் புள்ளியை நோக்கி அனைவரும் நகர்ந்துவர வேண்டும்.

அந்த உரையாடலுக்கான ஒரு வாசலை இளம் எழுத்தாளரான திருக்குமரன் கணேசன் தன் சுயசரிதைக்குறிப்புகள் வழியே திறந்துவைத்திருக்கிறார்.  கசப்புகள் மண்டிய பல கணங்களை அவர் தம் இளம்பருவத்தில் கடந்துவந்திருக்கிறார். சாதி என்னும் நெருப்பு அவரை தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. அத்தகு பல தருணங்களை அவர் தேர்ந்தெடுத்த சிற்சில நிகழ்ச்சிகள் வழியாக இத்தொகுதியின் மூலம் நம்மிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். சாதியினால் சுட்ட வடு எத்தகைய வலி மிகுந்தது என்பதை நம்மை உணர்ந்துகொள்ள வைத்திருக்கிறார்.

வடுக்களை ஏற்படுத்தியவர்கள் யாரும் வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்லர். ஒவ்வொரு நாளும் அவரைச் சுற்றி வாழ்ந்தவர்களே. பெரும்பாலும் ஆசிரியர்கள். கூடப் படித்த நண்பர்கள். நண்பர்களின் குடும்பத்தார்கல்.  தெருவில் வசிப்பவர்கள். அன்பொழுகப் பழகுகிறவர்களின் நெஞ்சத்தில் கூட சாதியத்தின் நஞ்சுக்கொடி சுற்றியிருக்கிறது. தன்னிரக்கம், குற்ற உணர்ச்சி ஆகிய இரு உணர்வுகளும் கலந்துவிடாதபடி கச்சிதமான மொழியில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் முன்வைத்திருக்கும் திருக்குமரனின் எழுத்தாற்றல் பாராட்டுக்குரியது.

எதிர்காலத் தலைமுறையினரான மாணவமாணவிகளின் நெஞ்சிலிருந்து சாதியப்பார்வையை அழிக்கவேண்டிய பொறுப்பை ஏற்றிருக்கும் ஆசிரியர் பெருமக்களே சாதியத்தை விதைப்பவர்களாக இருக்கிறார்கள் என்னும் எதார்த்தம் நெருப்பெனச் சுடுகிறது. தம் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களே அத்தகு பார்வையுடன் நடந்துகொண்டதை சொந்த அனுபவங்களை முன்வைத்து வெளிப்படுத்தியுள்ளார் திருக்குமரன். சாதி இரண்டொழிய வேறில்லை என வகுப்பறையில் சொல்லிக்கொடுக்கும் பாடத்தின் வரிகள் அந்த ஆசிரியர்களுடைய நெஞ்சில் பதியாமலேயே போய்விட்டதை காலக்கொடுமை என்றே சொல்லவேண்டும்.

அந்நிகழ்ச்சியை விவரிக்கும் அத்தியாயத்தைப் படிக்கும்போது அந்த ஆசிரியர்மீது அருவருப்புணர்வே எழுகிறது. பள்ளிக்கூடத்தில் ஒரு சுற்றுலாவுக்கு ஏற்பாடு நடக்கிறது. மாணவமாணவிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பொறுப்பை ஆசிரியரொருவர்  ஏற்றிருக்கிறார். முதன்முதலாக பள்ளிக்கூடம் ஏற்பாடு செய்திருக்கும் சுற்றுலாவில் கலந்துகொள்ளும் ஆவலோடு அப்பாவிடமிருந்து பணத்தை வாங்கிச் சென்று செலுத்திவிட்டு, பயணம் தொடங்கும் நாளுக்காக காத்திருக்கிறான் ஒரு சிறுவன். குறிப்பிட்ட நாளில் ஒரு பகல்வேளையில் சுற்றுலாவுக்கு பேர் கொடுத்த அனைவரையும்  பள்ளி வளாகத்துக்கு வருமாறு அறிவிக்கிறார் ஆசிரியர். ஆவலின் காரணமாக, சொன்ன நேரத்துக்கு முன்பாகவே பள்ளிக்குச் சென்று காத்திருக்கிறான் சிறுவன். பதிவு செய்திருந்த மற்ற மாணவர்களும் மாணவிகளும் ஒவ்வொருவராக வந்து சேர்கிறார்கள். சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த இரண்டு வாகனங்கள் வந்து சேர்கின்றன.

மாணவமாணவிகளின் பெயர்ப்பட்டியலை கையில் வைத்திருக்கும் ஆசிரியர் அவர்களை வாகனங்களில் அமரவைக்கும் விதத்தில் அவர் கையாளும் தந்திரம் அவருடைய உள்ளப்போக்கைப் புலப்படுத்திவிடுகிறது. முதலில் சன்னதித் தெருவிலிருந்து வரும் பிள்ளைகளின் பெயர்களை மட்டும் தேர்ந்தெடுத்துச் சொல்லி அழைத்து அவர்களை இரு வாகனங்களிலும் முதல் இரு வரிசைகளில் அமரும்படி சொல்கிறார். அதன் பிறகு நடுத்தெருப் பிள்ளைகள். அடுத்து மேலத்தெருவைச் சேர்ந்த பிள்ளைகள். அவர்களை அடுத்திருக்கும் இரு வரிசைகளில் அமரும்படி சொல்கிறார். அதற்குப் பிறகு மாரியம்மன் கோயில் தெரு பிள்ளைகளின் பெயர்களைப் படிக்கிறார். இறுதியாக வடக்குத்தெரு, தெற்குத்தெருவைச் சேர்ந்த பிள்ளைகளை அழைத்து இறுதி வரிசைகளில் அமர்ந்துகொள்ளும்படி அறிவிக்கிறார். வகுப்பறை வருகைப்பதிவேட்டில் கடைபிடிக்க முடியாத சாதிப் பிரிவினையை சுற்றுலா வாகன இருக்கை வரிசைகளில் கடைபிடித்து நிறைவேற்றுகிறார் அந்த ஆசிரியர். சுற்றுலா முடிந்து திரும்பும்வரை ஒருவரும் இடம் மாறி அமரக்கூடாது என்று எச்சரிக்கிறார்.

அந்த ஆசிரியரிடம் வெளிப்படும் சாதிவெறி நோக்கும் தன் சாதி மேட்டிமைப்பார்வை வெளிப்படையாக வெளிப்பட்டுவிடாதபடி செயல்படும் தந்திரமும் அருவருப்பூட்டுகின்றன. இன்று சமூக ஊடகங்களில் வெளிப்படுவதும் கூட இத்தகைய மனநிலைதான்.

வகுப்பறையிலேயே ஓர் ஆசிரியரிடம் வெளிப்பட்ட சாதியப்பார்வையை இன்னொரு அத்தியாயத்தில் பதிவு செய்திருக்கிறார் திருக்குமரன். ஒருநாள் தேசத்தலைவர்களின் படங்களை வகுப்பறையில் மாட்டுவதற்காக சுவரில் நேர்க்கோட்டில் ஆணியடிக்கச் சொல்கிறார் ஓர் ஆசிரியர். காந்தி, நேரு, திலகர் என மூன்று படங்களை ஒரே நேர்க்கோட்டில் தொங்க வைத்துவிட்டு, நான்காவதாக அம்பேத்கர் படத்துக்கான ஆணியை படவரிசையிலிருந்து சற்றே கீழே தாழ்த்தி அடிக்கச் சொல்கிறார். விவரம் புரியாமல் “அந்த படத்தையும் நேரா மாட்டியிருந்தா அழகா இருக்கும் சார்” என்கிறான் சிறுவன். அப்படி சுட்டிக்காட்டியதற்காக கோபம் கொண்ட ஆசிரியர் அச்சிறுவனை கையை நீட்டச் சொல்லி குச்சியால் அடிக்கத் தொடங்குகிறார்.

இன்னொரு அத்தியாயத்தில் மற்றோர் ஆசிரியரின் சுயரூபத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார் திருக்குமரன். வகுப்பில் படிக்கும் மாணவியை தொட்டுப் பேசும் மகிழ்ச்சிக்காக பக்கத்தில் அழைத்து நிற்கவைத்துக்கொள்ளும் அற்பமனம் கொண்டவர் அந்த ஆசிரியர். ஒருநாள் அம்மாணவியை அழவைத்து, பிறகு அமைதிப்படுத்தி பேசுவதுபோல தொடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்கிறார் அவர். அதற்காகவே திருத்தப்பட்ட தேர்வுத்தாளைக் கொடுக்கும் தினமன்று பதினைந்தாவது ரேங்க் வாங்கிய மாணவனை முதல் ரேங்க் என்று அறிவித்துவிட்டு, முதல் ரேங்க் வாங்கிய அம்மாணவியை பதினைந்தாவது ரேங்க் என அறிவிக்கிறார். அவர் எதிர்பார்த்ததுபோல தேர்வுத்தாளை கைநீட்டி வாங்கும் அவள் அழத் தொடங்குகிறாள். உடனே அவள் தோளைத் தொட்டுத் திருப்பி காதைப் பிடித்தித் திருகி “பறையன் கூட பர்ஸ்ட் ரேங்க் வந்துட்டான். உனக்கு என்னடி ஆச்சு?” என்று அவளை மேலும் கலங்கவைத்து அழவைக்கிறார். பிறகு மெல்ல மெல்ல அமைதிப்படுத்திவிட்டு அவளே முதல் ரேங்க் வாங்கியிருப்பதாக அறிவிக்கிறார்.

ஆசிரியர் தொடர்பாக இன்னொரு காட்சி. பள்ளிப்படிப்பை முடித்து பட்டப்படிப்புக்காக கல்லூரியில் சேர்ந்திருந்த நேரம். புதிய ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்கு வந்து மாணவமாணவிகளிடம் ஒவொருவராக எழுந்து நின்று தன் பெயர், ஊர், படித்த பள்ளிக்கூடம், இலட்சியம், குலதெய்வத்தின் பெயர் எல்லாவற்றையும் வரிசையாகச் சொல்லி அறிமுகம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார். பெயர், ஊர், பள்ளி, இலட்சியம் எல்லாம் சரி. குலதெய்வத்தின் பெயர் எதற்காக என்று புரியாமல் குழம்புகிறான் அவன். அதற்கான விடை அடுத்த நொடியே அவனுக்குப் புரிந்துவிடுகிறது. முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு மாணவி எழுந்து நின்று தன் குலதெய்வத்தின் பெயரைச் சொன்னதுமே, அவள் சாதியை ஊகித்து அறிந்துகொள்ளும்  அவருடைய அற்பமனத்தை அவன் எளிதாகப் புரிந்துகொண்டான். அதனால் வரிசைப்படி தன் முறை வந்த போது, தன் குலதெய்வம் பகுத்தறிவுப்பகலவன் பெரியார் என்று தெரிவிக்கிறான். அவரால் மேற்கொண்டு எந்தக் கேள்வியும் கேட்கமுடியாமல் போய்விடுகிறது. கடுகடுப்புடன் அடுத்த மாணவனிடம் தம் கேள்விகளை முன்வைக்கச் சென்றுவிடுகிறார் அவர்.  

மற்றொரு காட்சி. மேல்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் விடுதியில் தங்கியிருக்கிறான் திருக்குமரன். வீட்டிலிருந்து தொலைவான ஊரில் பள்ளிக்கூடம் இருந்தது என்பதுதான் காரணம். அப்போது பாரதி என்பவன் அவனுக்கு நண்பனாக அமைகிறான். அவனோடு சேர்ந்து பாரதியின் வீட்டில் மதிய உணவு உண்பது எப்படியோ பழகிவிட்டது. பாரதியின் அம்மாவும் அவனிடம் பாசமாகவே இருக்கிறார். தினமும் இருவரையும் ஒன்றாக உட்காரவைத்து உணவு பரிமாறுகிறார் அவர். ஒருநாள் அவன் வரவில்லையென்றாலும் அதற்காக ஆதங்கப்படுகிறார் அந்த அம்மா. ஒருமுறை இருவருக்கும் வழக்கம்போல கறிக்குழம்பு ஊற்றி சாப்பாடு பரிமாறுகிறார் அவர். அப்போது எதிர்பாராத விதமாக ஏதோ ஒரு வேலையாக பாதி சாப்பாட்டில் எழுந்து போகிறான் பாரதி. அவன் இல்லாத தருணத்தில் தன் மகனைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆவலில் சில கேள்விகளை திருக்குமரனிடம் கேட்கிறார் அந்த அம்மா. அவள் மனம் நிறைவு கொள்ளும் வகையில் அவனைப்பற்றி பெருமையாகவே சொல்கிறான் திருக்குமரன். இறுதியில் அந்த அம்மா அங்கலாய்ப்புடன் ”எல்லாம் சரிதான் தம்பி. ஆனா திடீர்திடீர்னு இந்த பறப்பசங்கள வீட்டுக்குள்ள அழச்சிட்டு வந்துடறான். அத நினைச்சாதான் வருத்தமா இருக்குது” என்று சொல்கிறார். அதற்குப் பிறகு அவனால் தொடர்ந்து சாப்பிடமுடியாமல் எழுந்துவிடுகிறான். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவனால் பாரதியின் வீட்டுக்குச் செல்ல அவனுக்கு மனம் வரவில்லை. அவன் தாயார் சொன்ன சொற்களை நண்பனிடம் சொல்லவும் அவனுக்கு மனம் வரவில்லை. நல்ல அம்மாவின் மனத்திலும் இந்த மேட்டிமைப் பார்வை பதுங்கியிருப்பதை வேதனையுடன் தாங்கிக்கொள்கிறான். உண்மையை வெளிப்படுத்தாமலேயே அந்த நட்பைத் துண்டித்துக்கொள்கிறான்.  

அன்பின் ஈரத்துடன் தொடங்கி பாதியிலேயே முறிந்துபோன மற்றொரு நட்பு பற்றிய காட்சியும் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இணைபிரியாத தோழனாக இருக்கிறான் ஒரு சிறுவன் அவன் பெயர் கார்த்திகேயன். உயர்சாதியைச் சேர்ந்தவன். ஆனால் அதுசார்ந்த எவ்விதமான வேறுபாடான பார்வைகளும் இல்லாதவன். ஒருநாள் தன் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் கொய்யாமரத்தில் பழுத்திருக்கும் பழங்களைப் பறிக்க திருக்குமரனையும் அழைத்துச் செல்கிறான் அவன். மரம் வீட்டுக்குப் பின்னால் இருக்கிறது. வீட்டின் எல்லா அறைகளையும் கடந்துதான் பின்கட்டுக்குச் செல்லவேண்டும். வழியில் அமர்ந்திருந்த அவன் தாத்தா “அவாள்லாம் நம்ம ஆத்துக்குள்ள வரக்கூடாதுன்னு நோக்கு தெரியாதா என்ன? போகச் சொல்லுடா வெளியில” என்று தாத்தா சத்தம் போடுகிறார். அதைப் பொருட்படுத்தாத நண்பனை மரம் வரைக்கும் அழைத்துச் சென்று பழங்களைப் பறிக்கவைக்கிறான். இருவரும் ஓடோடி பள்ளிக்குத் திரும்பி வந்துவிடுகிறார்கள். தொடக்கப்பள்ளிக்குப் பிறகு இருவரும் ஆளுக்கொரு திசையில் போய்விடுகிறார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்செயலாக ஒரு பேருந்தில் இருவரும் இளைஞர்களாக சந்தித்துக்கொள்கிறார்கள். பழைய நண்பனைப் பார்த்த மகிழ்ச்சியில் “டேய், கார்த்தி, எப்படிடா இருக்க? பார்த்து எவ்ளோ வருஷமாச்சி?” என்று ஆவலோடு பேசுவதற்கு நெருங்கிச் செல்கிறான். ஆனால் கோவில் பூசாரி கோலத்தில் இருந்த அவன் பேருந்து இருக்கையில் ஜன்னலோரமாக உடல்நசுங்க நகர்ந்து உட்கார்ந்தபடி ஓரிரு வார்த்தைகல் மட்டும் பேசிவிட்டு அமைதியாகிவிடுகிறான்.

நட்பை மட்டுமல்ல, பல ஆண்டுகளாகத் தொடர்ந்த காதலையும் ஒருநாள் துறந்துவிட நேர்ந்ததை மற்றொரு அத்தியாயம் வழியாக உணர்ந்துகொள்ள முடிகிறது. காதல் காலம் முடிவடைந்து திருமணம் செய்துகொள்ள வேண்டிய காலம் வந்தபோது அந்தப் பெண் தன் காதலை ஏற்றுக்கொள்ளும்படி தன் பெற்றோரிடம் பேசி ஏற்றுக்கொள்ள வைத்துவிடமுடியும் என்று நம்பிக்கையோடு சொல்கிறாள். தொடர்ந்து, அடுத்த கணமே காதலனைத்தான் ஏற்றுக்கொள்ள வைக்கமுடியுமே தவிர, காதலனுடைய பெற்றோரையோ, அவர்கள் வாழும் சூழலையோ ஏற்றுக்கொள்ள வைக்கமுடியாது என்றும் அதனால் திருமணமானதும் தனியாக வந்துவிடவேண்டும் என்றும் அவள் ஒரு வேண்டுகோளை வைக்கிறாள். அந்தக் காதல் தோல்வியடைய அதுவே காரணமாகிவிடுகிறது. இப்படி சாதிவெறுப்பு நோக்கினை எதிர்கொள்ள நேர்ந்த பல்வேறு தருணங்களை சின்னச்சின்ன கட்டுரைகள் வழியாக பதிவு செய்திருக்கிறார் திருக்குமரன்

திருக்குமரன் தன் தாத்தா மொட்டையன் பற்றியும் தந்தை கணேசன் பற்றியும் தீட்டியிருக்கும் சொற்சித்திரங்கள் இத்தொகுதியின் மிகமுக்கியமான பகுதிகள். இரு பகுதிகளுமே காவியத்தன்மையுடன் உள்ளன. இருவரும் இருவேறு தன்மை கொண்டவர்கள். அமைதியாக இருக்கவேண்டிய தருணங்களில் அமைதி காத்தும் எதிர்ப்பைப் புலப்படுத்தவேண்டிய தருணங்களில் துணிவுடன் எதிர்த்தும் சாதியத்தைக் கடந்த தன் சுயத்தை வெளிப்படுத்துகிறார் தாத்தா மொட்டையன். ஆனால், ஊராட்சிமன்றத் தலைவராக வெற்றி பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தும் கூட, கட்சி மேலிடம் தன்னை தொடர்ச்சியாக மூன்றுமுறை ஒதுக்கிவைக்கும் நிலையில் கூட அமைதி காத்து தன் எல்லையை தானே சுருக்கிக்கொள்கிறார் தந்தை கணேசன். எந்த நிலையிலும கட்சித்தலைமையை எதிர்த்து கசப்புடன் ஒரு சொல் கூட சொல்ல அவர் மனம் துணியவில்லை.  அவருக்கு இருந்த ஒரே ஆசை தலைவர் உயிர்துறப்பதற்கு முன்னால் தன் உயிர் பிரிந்துவிடவேண்டும் என்பதுதான். வியப்பூட்டும் வகையில், அவர் விரும்பிய விதமாகவே அவருடைய மரணம் அமைந்துவிட்டது. தன் இறுதிமூச்சு வரைக்கும் தன்னை தன் கட்சி ஓர் அடியாளாகவே நடத்தியது என்பதை அறியாமலேயே அவர் மறைந்துவிட்டார்.

கணேசனின் நெஞ்சில் நிறைந்திருந்த உணர்வை ஆழமும் உறுதியும் நம்பிக்கையும் நிறைந்த கட்சிப்பற்று என்று குறிப்பிடலாம். ஆனால், காலமெல்லாம் அவரை தவறான வழியில் பயன்படுத்திக்கொண்டு, ஒரே ஒரு அங்குலம் கூட வாழ்வின் ஏணிப்படியில் ஏறிவிடாதபடி என்றென்றைக்குமாக அவரைத் தரையிலேயே தடுத்து நிறுத்திவைத்திருந்த கட்சிக்காரர்களின் நயவஞ்சகத்தையும் நம்பிக்கை துரோகத்தையும்  அப்பட்டமான சுயநலத்தையும் குறிப்பிட தமிழில் சொல்லே இல்லை.  

இந்நூலில் உள்ள பெரும்பாலான நினைவுச்சித்திரங்களில் சாதிப்பெயர் சாதி அடையாளத்தைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படவில்லை. மாறாக, இழிவுக்குறிப்பு, அழகின்மை, முரட்டுத்தனம், கரிய உடல் என வெவ்வேறு பண்புகளோடு இணைத்துப் பயன்படுத்தப்படுகிறது. நெஞ்சின் ஆழம் வரைக்கும் சென்று படிந்துவிட்ட சாதியப்பார்வைதான் இதற்குக் காரணம்.  இது நெருக்கமான நண்பர்களிடமும் வெளிப்படுகிறது. நட்பே இல்லாத மனிதர்களிடமும் வெளிப்படுகிறது. நட்புச்சக்திகளுக்கு அந்தப் பிழையைச் சுட்டிக்காட்டி நட்பைத் தக்கவைத்துக்கொள்வது மிகமுக்கியம். நட்புச்சக்திகளின் வட்டம் விரிவடையும்தோறும் நல்லிணக்கச் சமூகத்தின் எல்லைகளும் விரிவடையும்.

 

(கறிவிருந்தும் கவுளி வெற்றிலையும் – தன்வரலாறு – திருக்குமரன் கணேசன். காலச்சுவடு, 669, கே.பி.சாலை, நாகர்கோவில் -629001. விலை.ரூ175)

(புக் டே – இணைய இதழ் 07.10.2022)