1989இல் ஒருநாள் வழக்கம்போல புதுவையிலிருக்கும் நண்பரோடு தொலைபேசியில் பேசியபோது “ஒரு முக்கியமான விஷயம் சொல்றேன். கேட்டுக்கோ. எழுத்தாளர் கி.ரா. இங்க பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துக்கு விசிட்டிங் ப்ரொஃபசரா வந்திருக்காரு” என்றார். ”ஜாய்ன் பண்ணிட்டாரா?” என்று ஆவலுடன் கேட்டேன். “ஜாய்னிங்லாம் முடிஞ்சது. லாஸ்பேட்டைக்கு பக்கத்துல வாடகைக்கு வீடு எடுத்திருக்காரு. நான் அடுத்த வாரம் போய் பார்க்கலாம்ன்னு இருக்கேன்” என்று சொன்னார். அதைக் கேட்டதும் அந்தக் கணமே வண்டி பிடித்துச் சென்று அவருடைய வீட்டு முன்னால் நிற்கமாட்டோமா என்று இருந்தது.
எனக்குப் பிடித்த அவருடைய கோபல்லபுரம் நாவலும் கன்னிமை, பேதை,
கனிவு, கதவு,
ஜடாயு போன்ற சிறுகதைகளும் மனத்தில் வரிசை கட்டி நின்றன. பெரிய எழுத்தாளர்கள்
யாரையும் நான் அதுவரை நேரில் சந்தித்ததில்லை. ஜெயகாந்தன், வண்ணதாசன், வண்ணநிலவன், சுந்தர
ராமசாமி, கி.ராஜநாராயணன், நீல பத்மனாபன், அசோகமித்திரன் என
நான் பார்க்க நினைத்த எழுத்தாளர்களின் பட்டியல் மிகவும் நீண்டது. என்னுடைய கர்நாடக
வாசத்தின் காரணமாக அந்த விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள இயலாமல் இருந்தது. புதுச்சேரிக்கே அவர் குடிவந்திருப்பதை
எனக்கு தானாகவே அமைந்த நல்வாய்ப்பாகவே நினைத்தேன். அடுத்த முறை ஊருக்குச் செல்லும்போது அவரோடு சில மணி நேரங்களாவது உரையாடவேண்டும் என முடிவு செய்துகொண்டேன். பத்து நாட்கள் இடைவெளியிலேயே என் நண்பர் மீண்டும் என்னை அழைத்து கி.ரா.வைச் சந்தித்துவிட்டு வந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
“வாயத் தெறந்தா போதும். கதைகதையா சொல்றாரு. கடவுளே, எங்கேருந்துதான் அவ்ளோ கதைங்கள
கத்துகிட்டாரோ. பெரிய ஜீனியஸ்தான். சந்தேகமே இல்லை. அவருக்கு தெரியாத
கதையே உலகத்துல இல்லைன்னு நெனைக்கறேன். பூனைய பாத்தா ஒரு கதை. ஓடற
நாயைப் பாத்தா ஒரு கதை. செடிய
பாத்தா ஒரு கதை. பேச
ஆரம்பிச்சாவே அவருக்கு கதைகள்தான் ஞாபகத்துக்கு வருது. ஒவ்வொரு கதையும்
தேன் சொட்டறமாதிரி இருக்குது” தன் மகிழ்ச்சியைக்
குறிப்பிடும் அவருடைய வர்ணனைகளைக் கேட்டபோது ஒருகணம் எனக்குள் பொறாமை எட்டிப் பார்த்து மறைந்தது.
“சரி, என்னென்ன
கதைகள் சொன்னாரு? அத சொல்லு” என்று அவரை நான் அவசரப்படுத்தினேன். ஆனால் அவரோ “அதெல்லாம் ஞாபகத்துல இல்லப்பா. நீயே வந்து
கேட்டுக்க. ஆனா ஒன்னு
மட்டும் உண்மை. இவர மாதிரி
பேசற ஆளு நம்ம வட்டாரத்துலயே இல்ல. கெளய உலுக்கினா
புளியம்பழம் விழறமாதிரி இருக்குது, அவர் வாய்லேருந்து
கதைகள் கொட்டிட்டே இருக்குது” என்று ஏதேதோ
சொல்லி உரையாடலை வேறுபக்கம் திசைதிருப்பிவிட்டார்.
இரண்டு மாதங்களாக நண்பர் தொலைபேசியில் கொடுக்கும் விவரணைகளை மட்டுமே கேட்டுக்கேட்டு மனத்தை நிறைத்துக்கொண்டேன். அதற்குப் பிறகுதான் எனக்கு விடுப்பெடுத்துக்கொண்டு ஊருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
ஊருக்குப்
புறப்படுவதற்கு முன்னால் அவருக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக வேர்கள் தொலைவில் இருக்கின்றன என்ற தலைப்பில் வெளிவந்திருந்த என்னுடைய முதல் சிறுகதைத்தொகுதியை ஞாபகமாக எடுத்துவைத்துக்கொண்டேன்.
முதலில் நண்பரே வீட்டுக்கு வந்து என்னை அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தார். எதிர்பாராத விதமாக அவருக்கு வேறொரு வேலை வந்துவிட்டது. அதனால் முகவரியை வாங்கிக்கொண்டு நான் தனியாகவே அவரைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டேன். இரண்டு பேருந்து மாறி, நிறுத்தத்தில் இறங்கி
அவருடைய வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில் அவரே எதிரில் வந்தார். அது அவருடைய
நடைப்பயிற்சி நேரம். வணக்கம் சொல்லிவிட்டு
என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். “வாங்க வாங்க, பார்க்கறதுக்கு ரொம்ப சின்ன
வயசா இருக்கீங்க” என்றபடி புன்னகைத்தபடியே என் தோளைத் தொட்டு அழுத்தினார். தொடர்ந்து “வாங்க, இப்படியே
நடந்துபோவோம். அங்க ஒரு பூங்கா இருக்குது. அங்க உக்கார்ந்து
பேசுவோம்” என்று அழைத்துச்
சென்றார். ஒரு புங்கமரத்தடியில்
சிமெண்ட் பெஞ்சில் நாங்கள் உட்கார்ந்தோம்.
அம்மா, அப்பா என்ன
செய்கிறார்கள், தம்பி தங்கைகள் எத்தனை பேர், கர்நாடகத்துக்கு நான் ஏன்
வேலைக்குச் சென்றேன். திருமணமாகிவிட்டதா, எத்தனை
குழந்தைகள் என அடுக்கடுக்காக பல கேள்விகள் கேட்டார். பிறகு “வீட்டம்மாவையும்
குழந்தையையும் ஏன் அழச்சிட்டு வரலை? அடுத்த தரம்
அவசியமா அழச்சிட்டு வாங்க” என்றார். நான்
பையிலிருந்து என்னுடைய சிறுகதைத்தொகுதியை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.
பேசிக்கொண்டிருக்கும்போதே சிறிது தொலைவில் ஒரு பூந்தொட்டிக்கு அருகில் நின்றிருந்த இரு மைனாக்கள் மீது அவருடைய கவனம் பதிந்தது. ஒரு மைனா
தொட்டியின் ஒரு பக்கமாக சுற்றி வரும்போது அடுத்த மைனா அதே தொட்டியின் வேறொரு பக்கமாக சுற்றிவந்து அதற்கு முன்னால் நின்றது. உடனே முதல்
மைனா பக்கத்தில் இருந்த மரத்தடியை நோக்கி நடந்து சென்றது. இரண்டாவது மைனா
சில கணங்கள் அதை பொறுமையாக வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்துவிட்டு ஒரு நொடியில் விர்ரென்று பறந்து சென்று அதற்கு அருகில் சென்று நின்றது. இப்படியே சில
கணங்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகுவதும் பின்தொடர்வதுமாக இருந்துவிட்டு, சட்டென எதிர்பாராத ஒரு நேரத்தில் இரண்டும் ஒன்றாக வானைநோக்கிப் பறந்துசென்றன.
பறந்துபோகும் மைனாக்களைப் பார்த்தபடி நாக்குத் தட்டி புன்னகைத்த கி.ரா. “என்னமோ பேசி ரெண்டும் ஒரு உடன்படிக்கைக்கு வந்துட்டுதுங்க, பார்த்தீங்களா?” என்று கேட்டார். அவர் கண்கள்
மலர்ந்திருந்தன. பிறகு அந்த மைனாக்கள் பறந்துபோன திசையை ரசனையோடு பார்த்தார். “உலகத்துல பிணக்கு கொள்ளாத, கோவிச்சிக்காத ஜீவராசிகளே
கிடையாது. ஆனா அடுத்த
நிமிஷமே எல்லாம் கூடி சிரிச்சி விளையாட ஆரம்பிச்சிடும். இந்தக் கணக்குல சேத்துக்க முடியாத ஒரே உயிரு மனுஷன் மட்டும் தான்” என்று சொல்லிவிட்டு
மைனாக்கள் பறந்துபோன திசையையே ஒருகணம் பார்த்தார். பிறகு பெருமூச்சுவிட்டபடி திரும்பி “அதுக்கு நாம
ஒன்னும் செய்யமுடியாது” என்றவாறு உதட்டைப் பிதுக்கி கைகளை விரித்தார்.
“ரஷ்யப் படைப்புகள்லாம் நீங்க படிச்சிருக்கீங்களா?” என்று கேட்டார் கி.ரா. “படிச்சிருக்கேன்” என்று தலையசைத்தேன். “யார்யார படிச்சிருக்கீங்க?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார். நான் உடனே “மாக்சிம் கார்க்கி” என்றேன். அவர் “ம், அப்புறம்?” என்று தூண்டினார். நான் “டால்ஸ்டாய், தாஸ்தாவெஸ்கி, துர்கனேவ்” என்று அடுக்கிக்கொண்டே
சென்றேன். நான் ஒவ்வொரு
பெயராகச் சொல்லச்சொல்ல அவர் “ம்,
அப்புறம்?” என்று கேட்டு தூண்டிக்கொண்டே இருந்தார். நான்
“ஆன்டன் செகாவ்” என்றேன். “ஆ, அவர படிச்சிங்களோ இல்லையோன்னு தெரிஞ்சிக்கத்தான் அப்புறம் அப்புறம்னு கேட்டுட்டே இருந்தேன்” என்று அவர்
வலது கை ஆட்காட்டி விரலை உயர்த்தி அசைத்துக்கொண்டே புன்னகைத்தார். “பெரிய மேதை அவன். வைரக்கல்ல தேடி
எடுக்கிறமாதிரி வாழ்க்கையிலேருந்து கதைகளை அவன்
தேர்ந்தெடுக்கிறான்” என்றார்.
கி.ரா.அத்துடன் நிற்கவில்லை. நேர்முகத்தேர்வில் கேள்வி கேட்பதுபோல “செகாவ் கதையில எது புடிக்கும்?” என்று கேட்டார். நான் ஒருகணம்
யோசித்து “பந்தயம்” என்று
சொன்னேன். அவர் வழக்கம்போல “ம், அப்புறம்?” என்று ஆரம்பித்துவிட்டார். நானும் வான்கா, வெட்டுக்கிளி, ஸ்டெப்பி
என அடுக்கிக்கொண்டே சென்றேன். அவர்
“அதெல்லாம் சரி, இப்ப
நான் ஒரு கதை சொல்றேன், கேளுங்கோ. செகாவ்
எப்பேர்ப்பட்ட மன்னன்னு புரிஞ்சிக்க இந்த ஒரு கதை போதும்” என்று சொன்னார்.
தொண்டையை செருமிக்கொண்டு அவர் கதை சொல்லத் தொடங்கினார். அவர் விவரிக்கும் நிகழ்ச்சிக்கு இணையாக அவருடைய விழிகள் விரிந்து சுருங்கின. முக அமைப்பு
மாறிக்கொண்டே இருந்தது. குரலில் ஏற்ற
இறக்கங்கள் வந்து படிந்தன.
“ஒரு காட்டுல கிறிஸ்துவ துறவிகள் மட்டும் வாழக்கூடிய ஒரு மடம் இருக்குது. அது ஊருலேருந்து
பத்து பதினைஞ்சி மைல் தள்ளியிருக்குது அந்த மடம். மடத்துல இருந்த
நூறு துறவிகளுக்கு ஒரு தலைமைத் துறவி இருக்காரு. நாள் முழுக்க
அவர் கிறிஸ்துவுடைய கருணைய பத்தி பிரசங்கம் செய்வாரு. பாட்டு பாடுவாரு. அப்புறம் விருந்து நடக்கும். எல்லாரும் திருப்தியா
சாப்ட்டுட்டு படுத்துக்குவாங்க. ஒரு நாள் யாரோ காட்டுல வழிதவறிப் போன ஒரு ஆளு அந்த மடத்துக்குள்ள வந்து பசிக்கு சாப்பாடு கேக்கறான். அவுங்களும் ஐயோ
பாவம்னு கொடுக்கறாங்க. அத வாங்கி சாப்டுட்டு அவன் அங்கயே தங்கிக்கறான். அவுங்க பாட்டு பேச்சு எதுவுமே அவனுக்கு புடிக்கலை. அடுத்த நாள்
விடிஞ்சதும் கெளம்பறதுக்கு முன்னால இதெல்லாம் ஒரு வாழ்க்கையா, மக்கள் நடுவுல வந்து வாழ்ந்து பாருங்கன்னு சொல்லிட்டு போயிடறான். அடுத்த நாள்
பெரிய துறவி மட்டும் நான் போய் ஊருக்குள்ள பாத்துட்டு வரேன்னு சொல்லிட்டு போறாரு. போனவரு அடுத்தநாளே
ரொம்ப துக்கத்தோடு மடத்துக்கு திரும்பி வராரு. என்ன விஷயம்னு
எல்லாரும் ஆதரவா கேக்கறாங்க. ஐயோ, ஊருக்குள்ள
எல்லா பொம்பளைங்களும் அரைகொறயா துணிய கட்டிகிட்டு ஆடறாங்க. பொம்பளைங்கள அம்மணமா
செலயா செஞ்சி தெருவுக்கு தெரு வச்சி வேடிக்கை பாக்கறாங்க, அசிங்கம், அசிங்கம்னு தலையில
அடிச்சிகிறாரு. அப்புறம் எல்லாரும் தூங்க போயிடறாங்க.”
கி.ரா. ஒரு கணம் சின்ன இடைவெளி விட்டார். அதுவரை அவர்
முகத்தில் வெளிப்பட்ட தீவிரம் குறைந்து, சட்டென புன்னகை
படர்வதைப் பார்த்தேன்.
“அடுத்த நாள் காலையில பெரிய துறவி அறையிலேருந்து எழுந்து வந்து கூடத்துல நிக்கறாரு. ஒரு ஆளு
கூட அங்க இல்ல. எல்லாரும் மடத்த
விட்டு கெளம்பி ஊருக்கு போயிட்டாங்க. பொம்பளைகளை பாக்கற ஆசை அவங்களயெல்லாம் இழுத்தும் போயிட்டுது. இந்த பொம்பள ஆசை இருக்குதே, அது ஒரு
விசித்திரமான ஆசை. அத
ஒவ்வொரு பாஷையிலும் மனுஷன் விதவிதமா எழுதி பார்த்திருக்கான். அப்பவும் அந்த ஆசை போகமாட்டுது. சின்ன வயசுக்காரன் செகாவ். ஒவ்வொரு கதையும்
அருமையா இருக்கும். அவன் எழுதி
நூறு வருஷம் ஆயிட்டுதுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. ஒரு கதைன்னு
சொன்னா அப்படி எழுதணும். நூறு வருஷம், எரநூறு வருஷம் நின்னு பேசணும். எழுதப்பட்ட கதைகள
படிச்சி படிச்சி மக்கள் பேச்சுவாக்கில பேசற கதையா மாறணும். ஒரு நாட்டுப்புறக்கதையா
மாறாத ஒரு கதைக்கு உயிரு கிடையாது”
அவர் பேசியது ஒரு வகுப்பெடுத்ததுபோல இருந்தது. ”சரி போவோமா, நேரமாயிட்டுது, இன்னும்
திரும்பலையேன்னு கணவதி கவலைப்படுவா” என்றபடி எழுந்து வேட்டியை சரிப்படுத்திக்கொண்டார். பல்கலைக்கழக வேலைகளைப்பற்றித் தெரிந்துகொள்வதற்காக நான் அவரிடம் விசாரித்தேன்.
“எனக்கு புடிச்ச வேலை. அதனாலதான் வி.சி.கேட்டதும்
சரின்னு சொல்லி கெளம்பி வந்துட்டேன். முதல் கட்டமா இந்த புதுச்சேரி வட்டாரத்துல புழங்கக்கூடிய நாட்டுப்புறக்கதைகளை தொகுக்கறோம். இப்பவாவது சொல்ல ஆளுங்க இருக்காங்க. இன்னும் பத்து வருஷம் போனா, ஒரு ஆளு
கூட கெடைக்கமாட்டான். நாட்டுப்புறக்கதைன்னு சொன்னா என்னமோ கிள்ளுக்கீரைன்னு நெனைக்கறாங்க. என்னமோ படிக்கத் தெரியாத ஆளுங்க பேசிக்கிற கதைன்னு ஒரு சிலருக்கு எண்ணம் இருக்குது. அது ரொம்ப
தப்பு. நாட்டுப்புறக்கதைகள்தான் இந்த மண்ணுடைய பெரிய செல்வம். நம்ம முன்னோர்
சேர்த்து வச்சிட்டு போயிருக்கிற புதையல். புதையல தேடி
ஓடறமாதிரிதான் நாங்க நாலாபக்கமும் இப்ப இந்த கதைகளை தேடி ஓடிட்டிருக்கோம்”
வாய்மொழிக்கதைகள் உருவாகும் விதங்களையும் அவை மண்ணில் நிலைகொள்ளும் விதங்களையும் அவர் விரிவாக வீடுவரைக்கும் சொல்லிக்கொண்டே வந்தார். தன் மனைவியை
அழைத்து “இவரு பாவண்ணன்னு
ஒரு எழுத்தாளர்ம்மா. இந்த ஊர்க்காரர். ஆனா இப்ப இங்க இல்ல. கர்நாடஹாவுல இருக்காரு” என்று அறிமுகப்படுத்தினார். எங்கோ தொலைவில் என்பதுபோல அவர் கை உயர்ந்து தாழ்ந்தது. கர்நாடகா என்பதை
அவர் கர்நாடஹா என்று உச்சரித்த முறை எனக்கு புதுமையாக இருந்தது.
அப்போது எங்கிருந்தோ மேளமும் நாகசுரமும் ஒலிக்கும் மங்கள ஒசை கேட்டது. அவருடைய முகம்
அந்த இசையின் பக்கம் தானாக திரும்பியது. ஒன்றிரண்டு நிமிடங்கள் அந்த இசையிலேயே ஆழ்ந்துவிட்டார் அவர்.
“தெனம் நடக்கும் இந்த கச்சேரி. உக்காந்த இடத்துலேருந்து
செலவில்லாமலேயே கேக்கலாம். இந்த ஊருல
என்ன செளகரியம் தெரியுமா, எல்லாத்துக்கும் ஒரு மைக்
வச்சிடறாங்க. வீட்டுக்குள்ளேருந்தே கேக்கலாம்”
அந்த இசைக்கோவையில் ஏதோ ஒரு முக்கியமான உச்சம் நிகழ்ந்ததுபோல அவர்
சட்டென அமைதியானார். நானும் அந்த மங்கல இசையில் மூழ்கினேன்.
“நீங்க இசை கேப்பீங்களா?” என்று சில நிமிடங்களுக்குப் பிறகு கேட்டார் கி.ரா. “உண்டு” என்று சொன்னேன்
நான். “வளவனூருல எங்க வீட்டுக்கு பக்கத்திலயே ஒரு நாகஸ்வர வித்வான் இருந்தாரு. ஒவ்வொரு நாளும்
விடியற நேரத்துல அவருடைய வாசிப்பை கேக்க கேக்க சந்தோஷமா இருக்கும். பெங்களூருல வீட்டுக்கு
பக்கத்துலயே நடக்கிற சில கச்சேரிகளுக்கு மட்டும்தான் போகமுடியும். எல்லா கச்சேரிகளுக் இப்ப கேசட்டாவே கெடைக்குது. அத ஓடவிட்டு கேப்பேன்.”
“யார் பாட்ட கேப்பீங்க?”
“கோபால கிருஷ்ண பாரதி, ஊத்துக்காடு….”
“எழுதனவங்கள கேக்கலை. பாடறவங்கள பத்தி
கேட்டேன்”
“எம்.எஸ்., பட்டம்மாள், ஜி.என்.பி, மகாராஜபுரம்
சந்தானம். எல்லாமே கேசட்
வழியாதான். எதயும் நேருல
கேட்டதில்லை”
“எந்த வழியா கேட்டா என்ன, கேக்கணும். அதுதான்
முக்கியம். அது ஒரு
ரசனை. எழுதறவனுக்கு ரசனை
ரொம்ப ரொம்ப முக்கியம்”
அவர் தன் இளமைநாட்களில் இசையை ரசித்த விதத்தைப்பற்றியும் வளர்த்துக்கொண்ட விதத்தைப்பற்றியும் கற்றுக்கொள்ளத் தொடங்கி அதைக் கைவிட்டதைப்பற்றியும் சொன்னார். அழகிரிசாமியைப்பற்றியும் காருகுறிச்சி அருணாசலத்தைப்பற்றியும் சுருக்கமாக பகிர்ந்துகொண்டார்.
திடீரென அவர் அழகிரிசாமியின் கதைகளைப்பற்றி சொல்லத் தொடங்கினார். பிறகு பேச்சு அங்கிருந்து டி.கே.சிதம்பரநாத முதலியாரிடம் தாவியது. அப்புறம் சுந்தர
ராமசாமியை நோக்கிச் சென்றது. அதைத் தொடர்ந்து
கடிதம் எழுதும் கலையை நோக்கித் திரும்பியது. இரவு கவிந்த பிறகு அடுத்த வாரம் வருவதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப மனமில்லாமல் கிளம்பினேன்.
அடுத்த வாரம் என் மனைவியையும் குழந்தையையும் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினேன். தொடக்கத்தில் என்னிடம் கேட்ட எல்லாக் கேள்விகளையும் அவளிடமும் அவர் கேட்டு பதில் தெரிந்துகொண்டார். ”குழந்தையை புடிச்சிட்டே இருக்காதம்மா. ஓடி ஆடட்டும் விடு” என்றார். தன் மனைவியை அழைத்து அறிமுகம் செய்தார். அவர்கள் அனைவரும்
அடுத்த அறைக்குள் சென்று உரையாடத் தொடங்கினர்.
நாங்கள் கூடத்திலேயே அமர்ந்து பேசத் தொடங்கினோம். அன்று அவர் என்னிடம் கோபல்லபுரம் எழுதத் தொடங்கிய சூழலைப்பற்றிச் சொன்னார். நான் அந்த
நாவலை இருமுறை படித்திருப்பதாகச் சொன்னேன். பல துணைக்கதைகளில்
அவர் கொடுத்திருந்த விவரணை அழகின்
தனித்துவம் பற்றியும் அதன் வாசிப்பு இன்பத்தைப்பற்றியும் சொன்னேன்.
“எதிலயும் நமக்கு ரசனை முக்கியம். எங்க ஊருல
யாரயாவது வசவா சொல்லணும்ன்னா ரசனை கெட்ட ஜென்மம்னு சொல்றதுண்டு. ரசனை கெட்ட ஜென்மம்னு சொன்னா வெறும் சக்கைன்னு அர்த்தம். நீங்க எழுத்தாளரா
இருந்தாலும் சரி, இல்லைன்னாலும்
சரி, மனுஷங்கறவன்
ரசனையோடு இருக்கணும். பேச்சுல ரசனை இருக்கணும். சாப்பாட்டுல ரசனை இருக்கணும். உடுத்தற உடையில ரசனை இருக்கணும்.”
அவருடைய சொற்கள் கல்மேல் எழுத்தாக என் நெஞ்சில் பதிந்தன. அன்று அவர்
சொன்ன ”சாப்பாட்டுல உப்பு மாதிரி மனுஷனுக்கு ரசனை” என்னும் வாக்கியம்
ஒருபோதும் மறக்கமுடியாத அமுதமொழியாகிவிட்டது. அதை எனக்குள்ளேயே மீண்டும் மீண்டும் சொல்லி மனப்பாடமாக்கிக்கொண்டேன்.
அடுத்து மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் புதுவைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஒருநாள் மாலை
நேரத்தில் நான் அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். அன்று அவர் நடைப்பயிற்சிக்குச் செல்லவில்லை. வீட்டில்தான் இருந்தார். ஏதோ
எழுதிக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் எடுத்து வைத்துவிட்டு உரையாடுவதற்கு கூடத்துக்கு வந்துவிட்டார். தன் மனைவியை அழைத்தார். நான் அவருக்கு
வணக்கம் சொன்னேன். சிறிது நேரத்துக்குப்
பிறகு அவர் மோர் கொண்டுவருவதாகச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார். மோர் அருந்தியபடி
கி.ரா. பல்கலைக்கழக கதைகளைச் சொல்லத் தொடங்கினார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு கி.ரா. தன் அறைக்குள் மீண்டும் சென்று ஒரு புத்தகத்தோடு வெளியே வந்தார். சென்ற முறை
நான் அவரிடம் கொடுத்துவிட்டுச் சென்ற என் சிறுகதைத்தொகுதி. என்ன சொல்லப் போகிறாரோ என்று ஒருகணம் மனத்தில் ஏதோ ஓர் எடை அழுத்தியது.
“உங்க ரசனை, உங்க மனசு
ரெண்டும் என்னன்னு தெரிஞ்சிக்க இந்த ஒரு புத்தகம் போதும். நல்ல விதமா
தொடங்கியிருக்கீங்க. எத பத்தியும் கவலைப்படாம போயிட்டே இருங்க” என்று என்னருகில்
நின்று ஒருமுறை தோளைத் தொட்டு அழுத்திவிட்டு தன்னுடைய
நாற்காலியை நோக்கிச் சென்றார்.
“மனிதாபிமானம்தான் உங்க கதைகளுக்கு அடிப்படையா இருக்குது. அது ரொம்ப
ரொம்ப இயல்பா இருக்குது. அதுதான் உங்க
தனித்தன்மை” என்று சொன்னபடி பக்கங்களைப் புரட்டியபடியே இருந்தார். சில கணங்களுக்குப்
பிறகு “எல்லாக் கதையுமே
ஒன்னுக்கொன்னு போட்டியா இருக்குது. நீங்க தொடர்ந்து
எழுதணும். அதுதான் ரொம்ப
முக்கியம்” என்றார்.
“மகன அழச்சிகிட்டு ஒரு அப்பா வேலைக்கு வழி செய்ய சொல்லி ஒரு புள்ளிய பாக்க போற கதை ரொம்ப நல்ல கதை. அப்பா, புள்ள ரெண்டு பேரும் அந்த ஆள பாக்கறதுக்கு அந்த வீட்டு வாசல்ல நிக்கற கட்டத்த எழுதும்போது அங்க ஒரு குளவி சுத்தி சுத்தி வந்து சத்தம் போடறத பத்திய ஒரு குறிப்பு இருக்குது. ரொம்ப ரசனையான
குறிப்பு அது. அப்புறம்
ஒரு போஸ்ட்மேன் சைக்கிள் ஸ்டான்ட எடுக்கும்போது கார் மேல படிஞ்ச மண்ண குனிஞ்சி தொடச்சிட்டு போற மாதிரியான ஒரு குறிப்பு. ரெண்டுமே அருமை. ரெண்டுமே அருமை”
அவர் சொல்வதைக் கேட்கக்கேட்க எனக்கு
வானத்தில் பறப்பதுபோல இருந்தது.
”இந்த ரெண்டு குறிப்பு இல்லாமல் கூட இந்த கதைய எழுதலாம். கதை ஓட்டம்
போயிட்டே இருக்கும். அப்படித்தானே மத்த
எல்லாருமே எழுதறாங்க. நீங்க குடுக்கற
ரெண்டு குறிப்பு அந்த கதைய பல மடங்கு உயரத்துக்கு கொண்டு போகுது. ரசனைங்கறது ஒரு
எழுத்தாளனுக்கு பெரிய பலம்”
சில கணங்களுக்குப் பிறகு “நீங்க சுந்தர
ராமசாமி கதைகளை படிச்சிருக்கீங்களா?” என்று கேட்டார். நான் படித்திருப்பதாகச்
சொன்னேன். அக்கரைச்சீமையிலே, பிரசாதம், ஒரு புளியமரத்தின் கதை என்று தலைப்புகளைச் சொன்னேன். “அந்த கதைகளை நல்லா ஆழமா படியுங்க. எத்தன முறை
படிச்சாலும் தப்பில்லை. ஒரு கதையில
உரையாடல எப்படி அமைக்கணும்கறதுக்கு அவர் கதைகள் பெரிய வழிகாட்டி” என்றார்.
பொழுது கவிந்து இருட்டத் தொடங்கியதும் நான் விடைபெற்றேன். “இப்ப கெளம்பனாதான் நல்லது. இருட்டிப் போனா
இங்கேருந்து ஆட்டோ எதுவும் கெடைக்காது” என்று கி.ரா. என்னை வழியனுப்பினார்.
அன்றுமுதல் ஊருக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் அவரைச் சென்று பார்த்து உரையாடிவிட்டு திரும்புவதை வழக்கமாகவே வைத்திருந்தேன். இரண்டு ஆண்டுகளிலேயே அவருடைய பல்கலைக்கழக பணிக்காலம் முடிந்துவிட்டது. அவரை அழைத்திருந்த துணைவேந்தர் பணி
ஓய்வு பெற்று சென்றுவிட்டார். புதிய துணைவேந்தருக்கு அதைப்பற்றியெல்லாம் யோசிக்கும் மனநிலை இல்லை. எப்படியோ கி.ரா.வுக்கு
புதுச்சேரி வாசம் பிடித்துவிட்டது. நாள்தோறும் அவரைச் சந்தித்து இலக்கியம் பேச வரும் நண்பர்கள் வருகை பிடித்திருந்தது. அதனால் மீண்டும் தன் சொந்த ஊருக்குச் செல்லும் எண்ணத்தை கைவிட்டு புதுச்சேரியிலேயே நீடிக்க விரும்பினார். இரண்டு மூன்று வாடகை வீடுகள் மாறினார். இறுதியாக அவருக்கு
அரசு குடியிருப்பில் ஒரு வீடு கிடைத்தது. அந்தக் குடியிருப்பு
நான் படித்த கல்லூரிக்குச் செல்லும் பாதையோரமாக இருந்தது. அங்கு செல்லும்
ஒவ்வொரு முறையும் சில கணங்கள் பழைய நினைவுகளில் தோய்ந்துவிடுவேன். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த
அருணா, சிவக்குமார் தம்பதியினருக்கும் கி.ரா.வுக்கும் நல்ல நெருக்கமான தொடர்பு இருந்தது.
நான் புதுச்சேரிக்குச் சென்றிருக்கும் தருணங்களில் கி.ரா.வைப் பார்க்க அவர்கள் புறப்படும்போது
அவர்களோடு சேர்ந்து நானும் சென்று பார்த்து உரையாடிவிட்டுத் திரும்புவேன்.
அந்த வீட்டில் இருக்கும்போதுதான் ஒவ்வொரு மாதமும் முழுநிலா நாளன்று நண்பர்கள் சந்தித்து உரையாடும் கூட்டத்தை கி.ரா. தொடங்கி நடத்தினார். ஏதோ ஒருசில காரணங்களால் அவரால் அதைத் தொடர்ந்து நடத்த இயலாமல் போய்விட்டது. கதைசொல்லி என்னும் இலக்கிய இதழையும் அப்போதுதான் கி.ரா.
தொடங்கினார். அதன் தொடக்க கால இதழ்களில் நான் ஒருசில சிறுகதைகளை எழுதினேன். இன்றளவும் அந்த
இதழ் தொடர்ந்து வெளிவருகிறது.
அவரோடு முப்பதாண்டு காலமாக தொடர்பில் இருந்தேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரோடு உரையாடிக் களித்த ஒவ்வொரு
பொழுதும் இனிய நினைவாக மனத்தில் தங்கியிருக்கிறது. உரையாடும்போது, பேசும் சங்கதிகளுக்குத் தொடர்புடையதாக பற்பல கதைகளை அவர் நினைவுகூர்ந்து சொல்வதை நான் பல முறை வியப்போடு பார்த்திருக்கிறேன். எந்த முயற்சியும் இல்லாமல் அவர் அவற்றை எடுத்துரைப்பார். அந்த அளவுக்கு அக்கதைகளின் சாரம் அவர் நெஞ்சில் இறங்கியிருந்தது.
அவர் மறைந்த செய்தி கிடைத்த (17.05.2021)
அன்றும் மறுநாளும் அவரோடு
பழகிய நினைவுகளில் மூழ்கியிருந்தேன். அவ்வப்போது அவர் எழுதிய சிறுகதைகளைப் பிரித்துப் படித்தேன். பக்கங்களை மனம்போன
போக்கில் புரட்டியபோது வேட்டி கதை கிடைத்தது. அதைப் படிக்கும்
ஒவ்வொரு முறையும் அதன் ரசனையான வரிகள் முகம் மலரவைத்துவிடும். அதில் படிந்திருக்கும் அவலச்சுவையை உணரும்போது ஆழ்ந்த துயரம் ஏற்படும். அந்தத் துயரமும்
நகைச்சுவையும் தூங்காநாயக்கரின் கதையில் இரண்டறக் கலந்திருக்கின்றன. சுதந்திர தின வெள்ளிவிழாவை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக ஊருக்குள் பணவசூல் செய்கிறது ஒரு கூட்டம். கதை நிகழும்
தினத்தில் அவர்கள் தூங்காநாயக்கரைப் பார்க்க வருகிறார்கள். அவர் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்குப் போகாவிட்டாலும் அடி வாங்கியவர். ஆனால் கட்டிக்கொள்ள ஒழுங்காக ஒரு வேட்டி கூட இல்லாத நிலையில்தான் அவர் இருக்கிறார். பரபரப்போடு எழுந்து நின்று வேட்டி கிழிசலை மறைத்தபடி அவர்களை வரவேற்கத் தயாராகிறார் என்று அங்கதத்துடன் கதை முடிவடைகிறது. வேட்டி பற்றிய ஏராளமான ரசனைக்குறிப்புகளுடன் தொடங்கும் சிறுகதை இறுதிக்கணத்தில் நெஞ்சை அடைக்கவைக்கும் அங்கதக்குறிப்புடன் முடிவடைகிறது. கிழிந்த வேட்டியை ஒரு குறியீடாக நினைக்கும்போதே, சட்டென ஒரே கணத்தில் தூங்காநாயக்கரே இந்திய நாட்டின் ஏழைப்பட்டாளத்தின் அடையாளமாக மாறிநிற்பதை ஒருவித திகைப்புடன் உணர்ந்தேன்.
அடுத்து நான் படித்த சிறுகதை கதவு. அரைநூற்றாண்டுக்கும் அதிகமாக பலராலும்
எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டு விவாதிக்கப்பட்ட சிறுகதை. கதையைப் படித்துக்கொண்டிருக்கும்போது
தற்செயலாக ஒரு கணத்தில் அதன் செவ்வியல் தன்மைக்கு என்ன காரணம் என்பதைப் புரிந்துகொண்டேன். அந்தக் கதவில் குழந்தைகள் ஒரு படத்தை ஒட்டிவைத்திருக்கிறார்கள். அந்தக் கதவை கொஞ்சம் கவனமாகப் பார்த்தால் அந்தப் படத்துக்கு மேல் சற்று உயரமான இடத்தில் இன்னொரு படம் ஒட்டியிருப்பதைப் பார்க்கலாம் என்றொரு குறிப்பு உள்ளது. அந்தப் படம்
ஒட்டப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்டதால் அழுக்கும் பழுப்பும் படிந்து மங்கலாகிவிட்டது. ஒருவேளை லட்சுமியின் தகப்பனார் குழந்தையாக இருக்கும்போது ஒட்டிய படமாக இருக்கலாம் என்று அந்தக் குறிப்பு விரிவாக உள்ளது. இன்றைய தலைமுறைக்குழந்தை
ஒட்டிய ஒரு படம். பழைய தலைமுறைக்குழந்தை
ஒட்டிய இன்னொரு படம். அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் என்று தொடங்கும்
பாரிமகளிரின் பாடல் அக்கணத்தில் நினைவுக்கு வந்தது. அவர்களுக்கோ வறுமை
திடீரென வந்த நிகழ்ச்சி. லட்சுமியின் குடும்பத்திலோ
வறுமை நிரந்தரமான நிகழ்ச்சி. பழைய படம்
ஒட்டிய அந்தக் காலத்திலும் அதே வறுமை. புதிய ஒட்டப்பட்ட
இந்தக் காலத்திலும் அதே வறுமை. காலந்தோறும் வறுமையைத்
தவிர அக்குடும்பம் எதையும் அறியவில்லை. பழைய படம் ஒட்டப்பட்ட காலத்திலும் அந்தக் கதவு ஜப்தி செய்யப்பட்டிருக்கலாம். அப்போது அதை மீட்டு வருவதற்கு அவர்களுக்கு வழி இருந்திருக்கிறது. மனிதர்களும் இருந்திருப்பார்கள். இப்போதோ, மீட்கும் வழியும்
இல்லை. மனிதர்களும் இல்லை. இந்த அவலத்தை அந்தப் படமும் கதவும் உணர்த்திக்கொண்டே இருக்கிறது. கதவு சிறுகதையை செவ்வியல் சிறுகதையாக மதிக்க இந்த ஒரு காரணம் போதும் என்று தோன்றியது.
தொடர்ந்து கன்னிமை கதையின் வரிகளில் மூழ்கினேன். கன்னிமைக்கே உரிய குணங்கள் நாச்சியாரை விட்டு மறைந்துபோனதை வியப்போடும் ஒருவித இயலாமையோடும் அனைவரும் பார்க்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதையில் இடம்பெறும் விவரணைகள் அனைத்தும் அந்த மாற்றத்தை சுட்டிக்காட்டியபடியே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து இறுதியில் அவள் ரூபா அணா பைசா கணக்கில் மூழ்கியிருக்கும் கணம் வரைக்கும் நீள்கின்றன. திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின் என
அவளிடம் உருவாகும் மாற்றங்கள் இருவிதமாக உள்ளன. பிறந்த வீட்டிலிருந்து
புகுந்த வீட்டை நோக்கி அவளை வழியனுப்பிவைக்கும் உறவினர் ஆரத்தி எடுக்கும்போது பாட்டொன்றை பாடுவதாக கதையில் ஒரு குறிப்பு இருக்கிறது. “மாயம்ம, லஷ்மியம்ம போயி
ராவே” என்பது அந்தப்
பாட்டின் ஒரு வரி. எங்கள்
தாயே, லஷ்மி தேவியே, போய் வருவாய் என்பதுதான் அதன் பொருள். மங்கலவழக்காக பாடப்படும்
அப்பாடலைப் படிக்கும்போது அவர்கள் விடைகொடுத்து அனுப்புவது நாச்சியாரை மட்டுமல்ல, நாச்சியாரிடம் படிந்திருக்கும்
கன்னிமைக்கே உரிய பண்புகளுக்கும் விடைகொடுத்து அனுப்புகிறார்கள். நமது ஒருங்கிணைந்த பிரார்த்தனையே கன்னிமைக்கு விடைகொடுக்கிறது என்கிற கோணத்தை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. இத்தனை காலமும் நாச்சியார் மீது விழுந்த பழி இனிமேலாவது விலகவேண்டும். பழிக்குரியவர் நாமே.
ரசனையான அவருடைய வரிகளின் நிழலில் இப்படிப்பட்ட அருமையான சித்திரங்களை இதுவரையில் பார்க்க முடியாமல் போனதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. இப்படி ஒரு கோணத்தை நான் கண்டறிந்தேன் என்று சொன்னால் அந்த ரசனையான மனிதர் ஒரு குழந்தையைப்போல கண்கள் மலர காது குளிர கேட்டு புன்னகைத்திருக்கக்கூடும். அந்த வாய்ப்பை நான் தவறவிட்டேன் என்பது பேரிழப்பு. வாழ்நாள் முழுதும்
அந்த முள் என்னை தைத்துக்கொண்டே இருக்கும்.
(கி.ரா. நூற்றாண்டு விழா மலருக்காக எழுதப்பட்ட கட்டுரை )