Home

Sunday 30 October 2022

பொம்மைகள் - புதிய சிறார் சிறுகதைத்தொகுதி - முன்னுரை

 

அன்புள்ள சிறுவர் சிறுமிகளுக்கு, 

வணக்கம்.

 

ஒரு நாள் எங்கள் வீட்டுக்கருகில் உள்ள ஏரிக்கரையில் நடந்துகொண்டிருந்தேன். அது பெரிய ஏரி. அதன் சுற்றளவு இரண்டு கிலோமீட்டர் இருக்கும். ஏரியில் தண்ணீர் இல்லை. இருக்கும் தண்ணீரும் தூய்மையானதல்ல. அதில் களைகளும் புதர்களும் நாணல்களும் வளர்ந்து மண்டிக் கிடக்கின்றன.

 

ஆனால் ஏரியைச் சுற்றியிருக்கும் நடைப்பயிற்சிக்கான வட்டப்பாதை மட்டும் தூய்மையாக இருக்கும். இருபுறங்களிலும் பூச்செடிகளால் ஆன வேலிகள் உண்டு.  அவற்றைப் பாதுகாக்க இரும்புச்சட்டங்களால் ஆன தடுப்புகளும் உண்டு. செம்மண் நிறத்தில் வழவழப்பான சதுரவடிவக் கற்கள் பதிக்கப்பட்ட அந்தப் பாதையில் நடக்கும்போதே உற்சாகம் பிறக்கும்.

 

நடைபாதையில் சீரான இடைவெளியில் வட்டவடிவில் பெரிய நிழற்குடைகள் உண்டு. குடைக்குள் திசைக்கு ஒன்றாக சிமென்ட் பெஞ்சுகளும் உண்டு. நடைப்பயிற்சியை முடித்துவிட்டு இளைப்பாறுகிறவர்களும் வேடிக்கை பார்க்க வந்திருப்பவர்களும் காற்றோட்டமான இடத்தை நாடி குழந்தைகளை அழைத்து வந்திருப்பவர்களும் அந்த நிழற்குடையின் கீழே அமர்ந்திருப்பார்கள்.

 

அன்று, ஒரு சுற்று நடையை முடித்த பிறகு நான் ஒரு நிழற்குடையின் கீழே சென்று அமர்ந்தேன். இதமான காற்று வீசியது. எனக்குப் பக்கத்தில் இருந்த பெஞ்சில் ஒரு பாட்டியும் ஒரு சிறுமியும் உட்கார்ந்திருந்தார்கள். ஏற்கனவே நடந்து முடித்தவர்களைப்போல அவர்கள் காணப்பட்டார்கள். அந்தச் சிறுமி காலையில் வீட்டில் மிகவும் சுவைத்துச் சாப்பிட்ட அன்னாசிப்பழத்தைப் பற்றி தன் பாட்டியிடம் கன்னடத்தில் சொல்லிக்கொண்டிருந்தாள். அச்சிறுமியின் குரலும் கைகளை விரித்து விரித்துச் சொல்லும் விதமும் பிடித்திருந்ததால் அவர்கள் பக்கம் திரும்பாமலேயே காதுகொடுத்துக் கேட்டபடி இருந்தேன். அது ஒரு மகிழ்ச்சியான அனுபவம்.

 

அதைத் தொடர்ந்து அச்சிறுமி “ஒரு கதை சொல்லு பாட்டி” என்றாள். அந்தப் பாட்டி “எனக்கு என்னடி தெரியும்? உங்க அம்மாகிட்டதான் கேக்கணும்” என்று பதில் சொன்னார். உடனே அச்சிறுமி “உங்கம்மா உனக்கு ஒரு கதை கூட சொல்லித் தரலையா? எப்ப கேட்டாலும் தெரியாது தெரியாதுன்னு சொல்றியே” என்று கிண்டல் செய்தாள்.

 

அந்தப் பாட்டி அதைக்கூட நகைச்சுவையாக எடுத்துக்கொண்டார். “எதுக்கெடுத்தாலும் எங்கம்மாவ  நீ ஏன்டி  இழுக்கற?” என்று கேட்டார். “நீ ஒழுங்கா கதைய சொன்னா, நான் ஏன் அவங்கள இழுக்கறேன்?” என்று மடக்கினாள் சிறுமி.

 

“ஐயோ பகவானே, இவ என்னை விடமாட்டா போல இருக்கே” என்று மகிழ்ச்சியோடு சிறிது நேரம் முனகிவிட்டு யோசனையில் மூழ்கினார் பாட்டி. பிறகு ”சரி கேளு, சொல்றேன்” என்று தொடங்கினார். “அப்படி வா வழிக்கு” என்று சிரித்தாள் சிறுமி.

 

“ஒரு ஊர்ல ஒரு சிங்கம்” என்று தொடங்கினார் பாட்டி. உடனே “நிறுத்து நிறுத்து” என்று தடுத்தாள் சிறுமி. “இந்த சிங்கம், ராஜா கதையெல்லாம் எனக்குத் தெரியும். வேற சொல்லு” என்று அறிவித்தாள். பாட்டி மீண்டும் சிறிது நேரம் யோசித்துவிட்டு “ஒரு ஊர்ல ஒரு பெரிய குகை” என்று மறுபடியும் தொடங்கினார். அப்போதும் “நிறுத்து நிறுத்து” என்று தடுத்தாள் சிறுமி. “இந்த மலை, குகை, காடு, பாறை கதையெல்லாம் எனக்குத் தெரியும். வேற சொல்லு” என்று அறிவித்தாள்.

 

இப்படி அந்தப் பாட்டி எந்தக் கதையைத் தொடங்கினாலும் அக்கணமே தடுத்து நிறுத்திவிட்டு ”வேற கதை சொல்லு, வேற கதை சொல்லு” என்று தூண்டிக்கொண்டே இருந்தாள் அச்சிறுமி. அந்தப் பாட்டியும் சற்றும் சலிப்பை வெளிப்படுத்தாமல்  புதிது புதிதாக எதையாவது சொல்ல முயற்சி செய்தார். அக்கணத்தில் அச்சிறுமியின் முகத்தைப் பார்க்கவேண்டும் என எனக்குள் எழுந்த  ஆவலைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. சற்றே அச்சிறுமியின் பக்கமாகத் திரும்பினேன். ஆவல் மின்னும் அவள் கண்களையும் முகத்தையும்  பார்த்தேன். நான் அவளைக் கவனிப்பதை அந்தப் பாட்டியும் அப்போது பார்த்துவிட்டார்.

 

சட்டென்று அச்சிறுமி உரையாடலை நிறுத்திவிட்டாள். அதற்குப் பிறகே நான் செய்த பிழையை நான் உணர்ந்தேன். அதற்குப் பிறகு, மெளனமாக அந்த இடத்தில்   என்னால் உட்கார்ந்திருக்கவே முடியவில்லை. ஒவ்வொரு கணமும் தலைமீது ஒரு பெரிய பாறையாக அழுத்தத் தொடங்கியது. அவர்கள் பக்கம் திரும்பாமலேயே நான் நிழற்குடையிலிருந்து வெளியேறி நடக்கத் தொடங்கினேன். இன்னொரு சுற்று நடையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவரும் வரை ஒருவித குற்ற உணர்ச்சியில் மனம் தவித்தது.

 

வீட்டில் வழக்கமான வேலைகளில் மூழ்கிய பிறகு எல்லாமே மறந்துவிட்டது. பிறகு இரவு உணவை அடுத்த ஓய்வைத் தொடர்ந்து எழுத உட்கார்ந்த தருணத்தில் சட்டென அச்சிறுமியின் முகம் எழுந்துவந்தது. எதிர்ப்புறத்தில் வந்து அமர்ந்திருப்பதைப்போல அவள் முகம் தெரிந்தது. அப்போது ”கதை சொல்லு” என்று அச்சிறுமி என்னிடம் கேட்பதுபோலவும் இருந்தது. “ம், சொல்லு, சொல்லு” என்று முடுக்கிவிடுவதுபோல இருந்தது. அச்சிறுமியின் அன்னையாக அப்போது என்னை நான் நினைத்துக்கொண்டேன். உண்மையிலேயே அது என் வாழ்வில் ஒரு பொன்னான தருணம். அத்தருணத்தை உடனடியாக நான் ஒரு கதையாக எழுதினேன். அதுவே ‘இளவரசி’ என்னும் சிறுகதை.

 

அடுத்த நாள் மீண்டும் அவள் என் மனக்கண் முன்னால் நின்றாள். கதை வேண்டுமென்று தூண்டினாள். அன்று இரு கதைகள் எழுதினேன். இப்படித்தான் இத்தொகுப்பின் கதைகள் ஒவ்வொன்றாக உருவாகின.

 

என்னை எழுதத் தூண்டும் அச்சிறுமியை வணங்குகிறேன். இத்தருணத்தில் என் குழந்தைப்பருவத்தில் எனக்கு ஒவ்வொரு நாளும் கதைசொல்லித் தழுவிக்கொண்ட என் அம்மாவுக்கு இத்தொகுதியைப் படையலாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். உலகியல் சுமைகள் என் பாதையில் ஒருகணமும் இடறிவிடாதபடி என்னைப் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லும் என் அன்பு மனைவியின் துணைக்கு இந்த உலகில் ஈடு இணையே இல்லை. அவருக்கு என் அன்பு. இத்தொகுதியின் கதைகளுக்கு உயிர்ப்பான ஓவியங்களை வரைந்திருக்கும் ஓவியர் ராஜன் அவர்களுக்கும் இப்புத்தகத்தை அழகாகப் பிரசுரித்திருக்கும் தன்னறம் சகோதரர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

 

பொம்மைகள்

சிறார் கதைத்தொகுதி

தன்னறம் பதிப்பகம்

குக்கூ காட்டுப்பள்ளி

புளியானூர் கிராமம்

சிங்காரப்பேட்டை - 635307