Home

Sunday, 23 October 2022

குறிஞ்சிவேலன்: ஓர் உறவுப்பாலம்

  

1982இல் என்னுடைய முதல் சிறுகதை தீபம் இதழில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து, சிற்சில மாத இடைவெளியில் என்னுடைய கதைகள் தீபம் இதழிலும் கணையாழி இதழிலும் அடுத்தடுத்து வரத் தொடங்கின. நான் அப்போது கர்நாடகத்தில் பணிபுரிந்தாலும், எங்கள் பிரிவின் தலைமை அலுவலகம் சென்னையில்தான் இருந்தது. சிற்சில சமயங்களில் தலைமை அலுவலகத்திற்கு சில தகவல்களைக் கொண்டுசெல்ல வேண்டிய வேலை வரும். அப்போதெல்லாம் என்னை அனுப்பிவிடுவார்கள். அந்த வகையில் 1983இல்  ஒருமுறை சென்னைக்கு வந்தேன். முதல் இரு நாட்கள் அலுவலகத்திலேயே உட்கார்ந்து வேலையை முடித்தேன். அடுத்தநாள் இரவு புறப்படும் ரயிலில்தான் நான் பயணச்சீட்டு எடுத்திருந்தேன். அதனால் மூன்றாவது நாள் காலையில் பத்தரை மணியளவில் தீபம் அலுவலகத்துக்கு வழி விசாரித்துக்கொண்டு சென்றேன்.

அண்ணா சிலைக்கு அருகில் பிரதான சாலையிலிருந்து பிரியும் ஒரு சிறிய சாலையில் ஐந்து நிமிட நடை தூரத்தில் ஒரு கட்டடத்தின் மாடியில் தீபம் அலுவலகம் இருந்தது. வாசலை ஒட்டிய இடத்தில் ஒரு பெரிய மேசைக்கு அருகில் ஒருவர் அமர்ந்திருந்தார். நான் அவருக்கு வணக்கம் சொல்லி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர் புன்னகைத்தபடியே ”நான் திருமலை” என்று சொன்னார். “நல்ல நேரத்துலதான் வந்தீங்க. சீக்கிரம் வாங்க. உள்ள அறையிலதான் நா.பா. உட்கார்ந்திருக்கார். இப்ப வெளிய கெளம்பிடுவாரு. வாங்க, முதல்ல உங்கள அறிமுகப்படுத்தறேன்” என்று சொல்லிக்கொண்டே என் கைகளைப் பற்றிக்கொண்டு அவர் அறைக்குள் நுழைந்துவிட்டார்.

கண்ணை மூடிக் கண்ணைத் திறக்கும் நேரத்துக்குள் நான் நா.பா.வின் முன்னால் நின்றிருந்தேன். நா.பா. அப்போதுதான் எங்கோ கிளம்புவதற்குத் தயாரானவர்போல மேசையின் இழுப்பறையை மூடிவிட்டு நாற்காலியிலிருந்து நா.பா. எழுந்தார். “வாங்க. வாங்க. வணக்கம்.. நீங்கதான் பாவண்ணனா? ரொம்ப சின்ன வயசுப்பிள்ளையா இருக்கறீங்க. உங்க கதைகளை படிச்சிருக்கேன். உங்களுக்கு எழுத்து நல்லா வருது. தொடர்ந்து எழுதுங்க. தொடர்ந்து தீபத்துக்குக் கதை அனுப்புங்க. நான் அவசரமா வெளியே கெளம்பிட்டிருக்கேன். வேற ஒரு சந்தர்ப்பத்துல நிறைய பேசலாம்” என்று சொல்லிவிட்டு என் தோள்களைத் தொட்டு அழுத்தியபடி புன்னகைத்துக்கொண்டே வெளியேறினார். பேச எதுவும் தோன்றாதவனாக, அக்கணத்தில் நான் அங்கே நின்றபடி அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை. நல்ல உயரம். அடர்ந்த தலைமுடி. ஒரு சிலை எழுந்து நடந்துசெல்வதுபோல இருந்தது.

அலுலகத்தில் ஒருபுறம் அச்சுப்பொறி இருந்தது. இன்னொருபுறத்தில் இருந்த அறையில் ஏராளமான புத்தகக்கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நான் அவற்றையே வியப்புடன் பார்த்தபடி இருந்தேன்.

“இந்தப் பக்கம் இருக்கறதெல்லாம் தீபத்துக்கு வந்த கதைகளுடைய கட்டு. அதுக்குப் பக்கத்துல இருக்கறது எல்லாம் ஆபீஸ்க்கு வரவங்க குடுத்துட்டு போற புத்தகங்கள். இந்த மூலையில இருக்கறதெல்லாம் பழைய தீபம் பத்திரிகைப்பிரதிகள். அறுபத்தஞ்சில தீபத்துடைய முத இதழ் வந்தது. அந்த காலத்துலேர்ந்து வந்த இதழ்கள்ல விக்காததயெல்லாம் மூட்ட கட்டி வச்சிருக்கோம். உங்களுக்கு ஆர்வம் இருந்தா நீங்க வாங்கிட்டு போவலாம்”

அந்தப் புத்தகக்குவியலைப் பார்த்ததுமே ஏதோ ஒரு புதையலைப் பார்த்ததுபோல பரவசத்தில் மூழ்கிவிட்டேன். ”நான் ஒரு பத்து வருஷத்துப் பத்திரிகைய எடுத்துக்கறேன்” என்று திருமலையிடம் சொன்னேன். அவர் திகைத்தவர்போல “நெஜமாவா சொல்றீங்க?” என்று தயக்கத்துடன் கேட்டார். “உண்மைதான் சார். இத்தன வருஷத்துல யார்யார் எழுதனாங்க, என்னென்ன எழுதனாங்க, எல்லா விவரமும் தெரிஞ்சிக்க வேற என்ன வழி இருக்குது?” என்றேன். அவரும் ஆர்வத்தோடு ஆண்டுவாரியாகப் பிரித்து தனியாகக் கட்டு கட்டிக் கொடுத்தார். நான் அந்தக் கட்டுகளோடு அன்று ரயிலில் ஏறினேன்.

ஹொஸபெட் சென்று சேர்ந்ததும் ஒரு பெரிய அட்டைப்பெட்டியை வாங்கிவந்து அதற்குள் எல்லா இதழ்களையும் அடுக்கிவைத்துக்கொண்டு படிக்கத் தொடங்கினேன். அந்த வாசிப்பு கடந்த பத்து ஆண்டுகளில் இலக்கியம் வளர்ந்த திசையை ஓரளவு புரிந்துகொள்ள உதவியது. அப்போதுதான் அந்த இதழுக்காக சில எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக பங்களிப்பு செய்திருப்பதைக் கவனித்தேன். அந்த வகையில் என் மனத்தில் பதிந்த முதல் பெயர் குறிஞ்சிவேலன். ஆண்டுக்கணக்கில் அவர் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த கட்டுரைகளும் தொடர்கதைகளும் தீபத்தில் இடம்பெற்றிருந்தன. குறிஞ்சிவேலன் பெயர் இல்லாத தீபம் இதழே இல்லை என்று சொல்லிவிடலாம். ஐந்து சென்ட் நிலம் என்னும் தலைப்பு இன்னும் என் நினைவில் உள்ளது. எல்லா இதழ்களையும் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்ததால் எனக்குத் தொடர்கதை படிப்பதுபோலவே தோன்றவில்லை. ஒரு நாவலைப் படித்ததுபோலவே இருந்தது.

அடுத்தநாள் தீபம் அலுவலக எண்ணில் திருமலையை அழைத்துப் பேசினேன். “யார் சார் இந்த குறிஞ்சிவேலன்? ஒவ்வொரு இதழ்லயும் அவருடைய பேர் இருக்குது. நல்ல அருமையான கதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். கேரளத்துல இருக்கிறவரா, தமிழ்நாட்டுல இருக்கிறவரா?” என்று கேட்டேன்.

“தமிழ்நாடுதான். சொந்த ஊரு உங்க புதுச்சேரிக்கு பக்கத்துலதான். குறிஞ்சிப்பாடி. கால்நடை ஆய்வாளர். நெறய வருஷம் கேரளா பார்டர்ல வேலை செஞ்சிருக்காரு. அந்த வாழ்க்கையில மலையாளம் கத்துகிட்டவர்”

“மலையாள எழுத்தாளர்கள தமிழுக்கு அறிமுகப்படுத்தறது நம் சூழலுக்கு ரொம்ப முக்கியமான வேலை. வாசகர்கள் எல்லாருமே அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கோம் சார்.”

“குறிஞ்சிவேலன் மொழிபெயர்ப்புல தீபம் போட்ட முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள் தொடருக்கு நல்ல வரவேற்பு கெடைச்சிது. ஒவ்வொரு மாசமும் அந்தத் தொடருக்கு நிறைய வாசகர் கடிதங்கள் வரும். ரெண்டு வருஷம் ஓடனதே தெரியலை. ரொம்ப நல்ல தொடர். யாராவது அவருக்கு ஒரு அவார்ட் கொடுத்து பாராட்டினா நல்லா இருக்கும்.”

“படிச்சேன். படிச்சேன். அந்தத் தொடரயும் படிச்சேன் சார். பஷீர், தகழி, கேசவ்தேவுக்குப் பிறகு மலையாள இலக்கியத்துக்காக பாடுபட்ட பல ஆளுமைகளுடைய பெயர்களை முதமுதலா குரிஞ்சிவேலன் தொடர்லதான் தெரிஞ்சிகிட்டேன். இந்தக் கட்டுரை ஒரு வாசகனுக்கு பெரிய அளவுல உதவி செஞ்சிருக்கிற கட்டுரைன்னுதான் சொல்லணும்”

அதற்குப் பிறகு எந்தப் பத்திரிகையில் குறிஞ்சிவேலன் என்னும் பெயரைப் பார்த்தாலும், உடனடியாக அந்தப் படைப்பைப் படிப்பது வழக்கமானது. குறிஞ்சிவேலன் என் விருப்பத்துக்குரிய மொழிபெயர்ப்பாளராக மாறினார்.

அதற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து ஒரு புத்தகக்கண்காட்சியில் அவருடைய மொழிபெயர்ப்பில் வெளிவந்திருந்த எஸ்.கே.பொற்றேகாட்டின் விஷக்கன்னி நாவலை வாங்கினேன். எனக்கு அந்த நாவல் வாசிப்பு புதிய அனுபவமாக இருந்தது. புதிய வாழ்க்கையைத் தேடி வயநாடு மலைப்பிரதேசத்தில் குடியேறும் எளிய விவசாயிகள் காடு திருத்தி வளப்படுத்தி பயிர்நிலங்களாக மாற்றுகிறாகள். ஓயாத உழைப்பு அவர்களுக்குத் துணையாக இருந்தது. அந்த மலைநிலங்களும் அவர்கள் மீது கருணைகொண்டிருந்தன. அதே சமயத்தில் மலைப்பகுதியில் பரவத் தொடங்கிய நோய்க்கு அவர்கள் இரையாகத் தொடங்கினர். சமவெளிப்பரப்பில் வாழ்ந்து பழகிய அவர்களுடைய உடல்நிலை மலைப்பகுதியின் தட்பவெப்ப நிலைக்கு இசைந்துபோகவில்லை. ஒரே சமயத்தில் அந்த மலை அவர்களுக்கு வாழ்விடத்தை அளித்த .கருணைத்தாயாகவும் அவர்களுக்கு நோயை அளித்து இரக்கமில்லாமல் உயிரைப்பறிக்க முனையும் அரக்கியாகவும் அமைகிறது. எனக்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. குறிஞ்சிவேலனின் மொழிபெயர்ப்பு தடையற்ற வாசிப்புக்கு உகந்ததாக இருந்தது. நான் அப்போதுதான் பேர்ல் எஸ்.பக் எழுதிய நல்ல நிலம் மொழிபெயர்ப்பு நாவலைப் படித்து முடித்திருந்தேன். உலகெங்கும் வாழ்க்கையை ஓரளவு நிம்மதியுடன் வாழ நல்லதொரு நிலம் தேடி, இடம் தேடி, பொருள் தேடி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் சென்றுகொண்டே இருக்கிறார்கள் என்பதையும் தவிர்க்கமுடியாத அத்தேடலில் துரதிருஷ்டவசமாக பலருடைய வாழ்க்கையே கைநழுவிப் போகிறது என்பதையும்  புரிந்துகொண்டேன். அத்திசையில் படிப்பவர் நெஞ்சில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக விஷக்கன்னி நாவல் இருந்தது. குறிஞ்சிவேலனின் மொழியாளுமையால் அந்த நாவலை ஒரு தமிழ்ப்படைப்பாகவே உணர்ந்தேன்.

புத்தகக்கண்காட்சிக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் குறிஞ்சிவேலனின் மொழிபெயர்ப்பில் ஏதேனும் ஒரு புதிய புத்தகம் இருப்பதைப் பார்த்தேன். தொடர்ச்சியான அவருடைய உழைப்பு அவர் மீது நான் கொண்டிருந்த மதிப்பை உயர்த்தியது. அவசியம் படிக்கவேண்டிய எழுத்தாளராக குறிஞ்சிவேலனின் பெயரை மனத்துக்குள் குறித்துக்கொண்டேன். அப்படித்தான் அவருடைய பல புத்தகங்களை வாங்கிப் படித்தேன். சல்லி வேர்கள், காட்டு வெளியினிலே, ஆறாம் விரல், நெட்டூர் மடம் என பல புத்தகங்கள் என் சேமிப்பில் சேர்ந்துகொண்டே இருந்தன. பல ஆண்டுகளுக்கு முன்பாக தீபம் இதழில் தொடர்கதையாக வந்த ஐந்து சென்ட் நிலம் நாவல் புத்தக வடிவில் வந்தபோது, ஆவலோடு வாங்கி வைத்துக்கொண்டேன். ஒருநாள் பெட்டியில் அப்புத்தகங்களை ஒழுங்குபடுத்தி அடுக்கிக்கொண்டிருந்தபோது, அவை அனைத்தும் மலையாளத்தில் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் எழுதிய நாவல்களாக இருப்பதை உணர்ந்தேன். காண்டேகர் எழுதிய மராத்தி நாவல்களை கா.ஸ்ரீ.ஸ்ரீ. தொடர்ச்சியாக மொழிபெயர்த்து வெளியிட்டதைப்போல, மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் நாவல்களை குறிஞ்சிவேலன் மொழிபெயர்த்திருப்பதாக நினைத்துக்கொண்டேன். அவருடைய மொழியாக்கங்கள், தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளர் பட்டியலில் எதிர்காலத்தில் அவருக்கு உறுதியான இடத்தை அளிக்கும் என்ற எண்ணத்தைக் கொடுத்தன.

மேலும் பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.  பெங்களூரில் வாழ்ந்த மொழிபெயர்ப்பாளரான சரஸ்வதி ராம்நாத் அவர்கள் 1999இல் மறைந்தார். அவருடைய குடும்பத்தினர் அவருடைய பெயரில் ஓர் அறக்கட்டளையை நிறுவி ஆண்டுதோறும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் ஒருவருக்கு விருது வழங்கி கெளரவிக்கத் திட்டமிட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகள் பெங்களூர் தமிழ்ச்சங்க வளாகத்தில் நடைபெற்றன. விருதுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை காவ்யா சண்முகசுந்தரத்திடமும் என்னிடமும் அளிக்கப்பட்டது. நாங்கள் ஒருநாள் காலை அவருடைய இல்லத்தில் சந்தித்து உரையாடினோம். எங்கள் இருவருடைய விருப்பத்துக்கும் உரிய மொழிபெயர்ப்பாளராக குறிஞ்சிவேலனே இருந்தார். நாங்கள் ஒருமனதாக அவரைத் தேர்ந்தெடுத்தோம். அவருடைய வீட்டிலிருந்தே தொலைபேசியில் குறிஞ்சிவேலனை அழைத்து காவ்யா சண்முகசுந்தரம் விருதுத்தகவலைத் தெரிவித்தார். அவரும் அவ்விருதைப் பெற்றுகொள்ள இசைந்துகொண்டார்.

விழா அன்று காலையிலேயே குறிஞ்சிவேலன் பெங்களூருக்கு வந்துவிட்டார். ஏறத்தாழ பதினேழு ஆண்டு காலமாக தொடர்ந்து மொழிபெயர்ப்புகள் வழியாக மட்டுமே . அவரை அறிந்துவைத்திருந்த நான் அன்றுதான் முதன்முதலாக அவரை நேரில் சந்தித்தேன். தலைநிறைய அடர்த்தியான முடி. கச்சிதமாக நறுக்கி ஒதுக்கப்பட்ட மீசை. அங்கங்கே கொஞ்சம் நரையோடியிருந்தது. சிரித்த முகம். பளிச்சென பற்கள் தெரிய அவர் சிரிப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு சாயலில் என் தந்தையைப்போல இருந்தார்.

அன்று சில மணி நேரங்களே அவரோடு உரையாடினேன் என்றபோதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து பழகிவந்தவரைப்போல நெருக்கத்தோடு பேசினார். நான் எப்படி பெங்களூருக்கு வந்து சேர்ந்தேன் என்ற கேள்வியோடு அவர் அன்றைய உரையாடலைத் தொடங்கினார். நானும் உற்சாகமாக அவருடைய கேள்விக்குப் பதில் சொன்னேன். பிறகு, தீபம் இதழில் அவருடைய எழுத்தைப் படிக்கத் தொடங்கியதை முன்வைத்து நான் பேசத் தொடங்கினான். மறைந்த சரஸ்வதி ராம்நாத் அவர்மீது கொண்டிருந்த மதிப்பைப்பற்றியும்  தெரிவித்தேன். அப்படியே இளமைக்காலத்தில் ஏற்பட்ட இலக்கியநாட்டம் பற்றிய திசையில் எங்கள் உரையாடல் சென்றது. எங்கள் பள்ளியாசிரியர்கள் பற்றியும் கல்லூரி ஆசிரியர்கள் பற்றியும் மாணவர்களிடையில் இலக்கிய ஆர்வம் உருவாக அவர்கள் ஆர்வத்துடன் பாடுபட்டதைப்பற்றியும் நான் விரிவாகச் சொன்னேன். அதன் தொடர்ச்சியாக அவர் தனக்.கு வகுப்பெடுத்த இரு ஆசிரியர்களைப்பற்றி ஆர்வத்துடன் சொல்லத் தொடங்கினார்.

“ரெண்டு பேருமே தங்கமானவங்க. நல்ல இலக்கிய ஆர்வம் உள்ளவங்க. அந்தக் காலத்திலயே பத்திரிகையில கதையெல்லாம் எழுதுவாங்க. அதையெல்லாம் வகுப்புக்கு கொண்டு வந்து மாணவர்கள்கிட்ட குடுத்து படிங்கடான்னு சொல்வாங்க. அது மட்டுமில்ல, அவுங்க வாங்கிப் படிக்கிற பத்திரிகைகள், புத்தகங்கள் எல்லாத்தையும் கொண்டு வந்து வகுப்புல காட்டுவாங்க. விருப்பமுள்ளவங்க வீட்டுக்கு எடுத்துப் போய் படிச்சிட்டு கொண்டு வாங்கடான்னு கூட சொல்வாங்க. நான் அப்ப அதையெல்லாம் எடுக்கவே மாட்டேன். அந்த பக்கமாவே திரும்பிப் பார்க்கமாட்டேன். கதை படிக்கிறதுல ஆர்வம் இல்லை. அப்ப பதினோராவது வகுப்பு படிச்சிட்டிருந்தேன். பப்ளிக் எக்சாம் தவிர வேற எந்த சிந்தனையும் என் மனசுல இல்ல. என் பக்கத்துலயே என்னுடைய நண்பன் உட்கார்ந்திருந்தான். படிப்புல ரொம்ப சுமார்தான். ஆனா அவனுக்கு வாத்தியார் கொண்டுவந்து குடுக்கற புத்தகங்கள் மேல ஒரு ஈடுபாடு உண்டாயிடுச்சி. அதனால அவன் அந்த கதை புத்தகங்களையெல்லாம் வாங்கி வச்சிகிட்டு படிப்பான். க்ளாஸ் ரூம்லயும் படிப்பான். வீட்டுக்கு எடுத்துப் போயும் படிப்பான். எக்சாம் நேரம் நெருங்கிட்டுது. அப்ப கூட பாட புத்தகத்துக்குள்ள கதைபுத்தகத்தை மறைச்சி வச்சிகிட்டு படிப்பான். எக்சாம்ல பாஸ் பண்ண வேணாமா? கதை புத்தகம் படிக்கிற நேரத்துல பாட புத்தகம் படிச்சா கூட பத்து மார்க் வாங்கி பாஸ் பண்ணலாமேன்னு நான் அவன்கிட்ட சொல்வேன். பாத்துக்கலாம் உடுடான்னு அவன்பாட்டுக்கு கதை புத்தகம்தான் படிப்பான். எக்சாம் முடிஞ்சி ரிசல்ட் வந்துட்டுது. இதுல என்ன வேடிக்கைன்னா, காலமெல்லாம் கதை புத்தகம் படிச்ச அவன் பாஸ் பண்ணிட்டான். பாட புத்தகத்தைத் தவிர வேற எதையும் படிக்கா நான்  ஃபெயிலாய்ட்டேன்.”

குறிஞ்சிவேலன் புன்னகையோடு விவரித்துக்கொண்டே சென்றார். கேட்டுக்கொண்டிருந்த எனக்குத்தான் திகைப்பாக இருந்தது. “ஏன் சார் அப்படி ஆச்சு?” என்று கேட்டேன். என்னால் அந்தப் புதிரைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. “அப்படித்தான் ஆச்சு. என்ன செய்யறது?” என்று விரல்களை விரித்தபடி சிரித்தார் குறிஞ்சிவேலன்.

“கதைபுத்தகம் படிச்சவன் பாஸாயிட்டான். நான் தோத்துட்டேனேனு எனக்குள்ள ஒரு வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்தை போக்கறதுக்கு என்ன வழின்னு யோசிச்சேன். இனிமே நாமும் கதை புத்தகம் படிப்போம்ன்னு முடிவுகட்டி எங்க ஊரு நூலகத்துக்கு போக ஆரம்பிச்சேன். ஒரு வேகத்துல கைக்கு கிடைச்ச புத்தகத்தையெல்லாம் எடுத்து படிச்சேன். அந்த ஒரு வருஷத்துல மட்டும் எரநூறு முன்னூறு புத்தகம் படிச்சேன். பொன்னியின் செல்வன் பாகங்களை தொடர்ச்சியா ஒரே மூச்சுல வெறிபுடிச்ச மாதிரி படிச்சேன். ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகங்களையெல்லாம் அப்பதான் படிச்சேன். அப்பப்ப பாட புத்தகங்களயும் பொரட்டி கேள்விபதில்கள் எல்லாத்தயும் படிச்சேன். எப்படியோ அந்த வருஷம் நடந்த எக்சாம்ல பாஸ் பண்ணிட்டேன். அந்த ஒரு வருஷ இடைவெளி எனக்கு இலக்கியத்தின் மேல ஒரு பெரிய ஆர்வத்த உண்டாக்கிடுச்சி. அதுக்கப்புறம் எனக்கு வெட்டிரனரி இன்ஸ்பெக்டரா வேலை கெடைச்சிது. வேலைக்குப் போனேன். மதுரை பக்கத்துல போஸ்டிங். ஒருநாள் எனக்கும் எங்க அதிகாரிக்கும் ஒரு சின்ன பிரச்சினை. அவர் செய்யச் சொன்ன வேலையை நான் செய்யலை. எனக்கு தண்டனை குடுக்கறதா நெனச்சிகிட்டு என்ன கேரளா பக்கத்துல இருக்கிற செக்போஸ்ட்டுக்கு மாத்திட்டாரு. எல்லையை கடந்து உள்ள வர மாட்டுக்கு தடுப்பூசி போடணும். அதான் வேலை. அந்த செக்போஸ்ட்ல நானும் ஒரு போலீஸ்காரரும் மட்டும்தான் இருப்போம். தனிமைன்னா அப்படி ஒரு தனிமை. புத்தகம்தான் அப்ப எனக்கு கிடைத்த ஒரே பொழுதுபோக்கு. ஏராளமான புத்தகங்கள நான் அப்ப வாசிச்சேன். பக்கத்துல ஒரு மலையாள கிராமம் இருந்தது. அங்க போய் ஒன்னாங்கிளாஸ் ரெண்டாங்கிளாஸ் மலையாள புத்தகங்கள வாங்கிட்டு வந்து முறையா மலையாளம் படிக்க கத்துகிட்டேன். என் அதிகாரி எனக்கு தண்டனை குடுக்கறதா நெனச்சி என்ன அங்க அனுப்பினார். ஆனா நான் அந்த காலகட்டத்தை மலையாளம் எழுதப்படிக்கவும் பேசவும் கத்துக்கறதுக்கு பயன்படுத்திகிட்டேன். அந்த ஆர்வம்தான் என்னை மொழிபெயர்க்கிற முயற்சியில இறங்க வச்சிது. ஒரு தோல்வியும் தண்டனையும் என் வாழ்க்கையில பெரிய திருப்புமுனையா அமைஞ்சிட்டுது.”

மொழிபெயர்ப்பு என்னும் துறைக்குள் அடியெடுத்து வைத்த பின்னணியை அவர் சொல்லச்சொல்ல நான் அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். வாழ்க்கை ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக உருவாக்கும் திட்டத்தோடு இயங்குகிறது என்றும் அதற்கான பின்னணியை அதுவே அமைத்துத் தருகிறது என்றும் நினைத்துக்கொண்டேன். ஏறத்தாழ முப்பதாண்டு கால மொழிபெயர்ப்பு அனுபவத்துடன் அப்போது குறிஞ்சிவேலன் இருந்தார். அந்த முப்பதாண்டு கால இடைவிடாத உழைப்புதான் ஆர்.சண்முகசுந்தரம், த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, கா.ஸ்ரீ.ஸ்ரீ. சி.ஏ.பாலன், சரஸ்வதி ராமனாத் என மொழிபெயர்ப்பு வழியாக தமிழுக்கு வளமூட்டிய தலைமுறை வரிசையில்  குறிஞ்சிவேலனுக்கு உருவாகி வந்திருக்கும் இடம் என்று தோன்றியது. அன்றைய நிகழ்ச்சியில் அவர் விருது பெற்ற பிறகு அவரைப்பற்றிப் பேசியபோது, அச்சொற்களை அரங்கத்திலும் சொன்னேன்.

அச்சமயத்தில் சரஸ்வதி ராம்நாத் அவர்களின் தூண்டுகோலின் விளைவாக நானும் மொழிபெயர்ப்புத்துறையில் இறங்கியிருந்தேன். ஒருசில சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் என மொழிபெயர்த்திருந்தேன். என் மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து கவனித்துப் படிப்பதாக குறிஞ்சிவேலன் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்து சில ஆண்டுகளுக்குப் பிறகு குறிஞ்சிவேலனிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. மொழிபெயர்ப்புக்கென திசையெட்டும் என்னும் பெயரில் தமிழில் ஒரு புதிய பத்திரிகையைத் தொடங்கவிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு நான் மொழிபெயர்ப்புப்படைப்புகளை அனுப்பவேண்டும் என்றும் அவர் எழுதியிருந்தார். அதற்கிணங்க சில படைப்புகளை சிற்சில மாத இடைவெளியில் அவருக்கு அனுப்பி வைத்தேன். அவை தொடர்ந்து திசையெட்டும் இதழில் வெளிவந்தன.

இதழ்களில் அவர் பல புதுமைகளைப் புகுத்திக்கொண்டே இருந்தார். இலக்கியச்சிறப்பிதழ்களைக் கொண்டுவரத் தொடங்கினார்.  ஜப்பானிய இலக்கியச்சிறப்பிதழ், கொரிய இலக்கியச்சிறப்பிதழ், ஸ்பானிஷ் இலக்கியச்சிறப்பிதழ் என அயல்நாட்டு மொழிகள் சார்ந்து பல சிறப்பிதழ்களைக் கொண்டு வந்தார். அவருடைய தொடர்புவட்டம் மிகவும் விரிந்தது. சலிப்பில்லாமல் எண்ணற்றோரைத் தொடர்புகொண்டு அவர்களனைவரையும் தூண்டி செயல்படவைத்த்துக்கொண்டே இருந்தார். இந்திய மொழிகளின் மீது கவனத்தைத் திருப்பியதும் குஜராத்தி சிறப்பிதழ், கொங்கணி சிறப்பிதழ், பஞ்சாபி சிறப்பிதழ் என மொழிக்கொரு சிறப்பிதழைக் கொண்டுவந்தார். அந்தந்த மொழிகளில் எழுதப்பட்ட கதை, கவிதை, கட்டுரைகளை  நண்பர்கள் வழியாக மொழிபெயர்த்து வாங்கி ஒவ்வொரு காலாண்டிலும் இதழைக் கொண்டுவந்தார். நான் அவருக்காக கன்னட இலக்கியச்சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்துக் கொடுத்தேன். கடந்த பதினெட்டு ஆண்டுகளாக திசையெட்டும் இதழ் வெளிவந்துகொண்டுள்ளது. முதல் இதழ் வெளிவரும்போது எந்த அளவுக்கு வற்றாத ஊக்கத்துடன் குறிஞ்சிவேலன் உழைத்துவந்தாரோ, அதே ஊக்கமுள்ளவராகவே இப்போது வந்துள்ள எழுபத்திரண்டாவது இதழிலும் காணப்படுகிறார்.

பதினெட்டு ஆண்டு கால பத்திரிகைப்பணியின் சுமை காரணமாக, எவ்விதத்திலும் அவருடைய மொழிபெயர்ப்புப்பணி குறையவில்லை. அந்தப்பணி இன்னொரு பக்கம் தன் திசையில் வற்றாத நதியென பெருக்கெடுத்தோடிக்கொண்டிருக்கிறது. நாற்பதுக்கும் அதிகமான புத்தகங்களை இன்று அவர் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துவிட்டார். அது உண்மையிலேயே பெரிய சாதனை. விஷக்கன்னி, இரண்டாம் இடம், ஆறாவது பெண், பாண்டவபுரம், ஆல்பா, கரைந்த சிற்பங்கள், சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி, மாதா ஆப்பிரிக்கா ஆகிய மொழிபெயர்ப்புகள் இன்னும் பல தலைமுறைகள் கடந்தும் குறிஞ்சிவேலனின் பெயரை இந்த மண்ணில் நிலைநிறுத்திக்கொண்டிருக்கும்.

ஏறத்தாழ மலையாள மொழியின் மூன்று தலைமுறை எழுத்தாளர்களை குறிஞ்சிவேலன் தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். முதல் தலைமுறையைச் சேர்ந்த தகழி, பஷீர், கேசவதேவ், எஸ்.கே.பொற்றேகாட் உள்ளிட்ட  எழுத்தாளர்களையும் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த எம்.டி.வாசுதேவன் நாயர், மலையாற்றூர் ராமகிருஷ்ணன், காக்கநாடன் போன்றோரையும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஆனந்த், சந்திரிகா, ட்டி.எம்.ராமகிருஷ்ணன், சி.வி.பாலகிருஷ்ணன் போன்றோரையும் தமிழுக்கு அறிமுகப்படுத்திய குறிஞ்சிவேலன் மலையாளத்துக்கும் தமிழுக்கும் இடையில் ஓர் அற்புதமான உறவுப்பாலமாக விளங்குகிறார்.

இன்று குறிஞ்சிவேலன் எண்பது வயதை நிறைவுசெய்கிறார். அவர் நூறாண்டுகாலம் வாழவேண்டும். இன்றைய புதிய தலைமுறையினரின் மலையாளப் படைப்புகளையும் தமிழுலகம் அறியும்படி செய்யவேண்டும். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

 

( மொழிபெயர்ப்பாளர் குறிஞ்சிவேலன் முத்துவிழா மலருக்காக எழுதிய கட்டுரை )