Home

Friday 21 February 2020

வினோபா : மகத்தான சாதனை - கட்டுரை



25.03.1916 அன்று கல்லூரி இடைநிலைப் படிப்பின் இறுதித்தேர்வை எழுதுவதற்காக பம்பாய் செல்லும் ரயிலில் பயணம் செய்தார் ஓர் இளைஞர். சிறுவயது முதல் காசியையும் இமயத்தையும் காணும் கனவுகளை மனத்தில் தேக்கிவைத்திருந்தவர் அவர். பயணத்தின்போது அக்கனவுகள் மீண்டும் துளிர்த்தெழ, அந்த உந்துதலில் சட்டென சூரத் நிலையத்தில் இறங்கி காசிக்குச் செல்லும் ரயிலில் ஏறிவிட்டார். அங்கு தங்கி சமஸ்கிருதம் பயிலத் தொடங்கினார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் காசிக்கு வரும் அரசியல் போராட்ட வீரர்களைச் சந்தித்து உரையாடினார்.

வைத்தியநாதன் - கதர் என்னும் ஒளிவிளக்கு - கட்டுரை




ரெளலட் சட்டத்தை எதிர்த்து சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு காந்தியடிகள் தஞ்சாவூருக்கு 24.03.1919 அன்று வந்தார். ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையத்துக்குத் திரண்டு வந்து  காந்தியடிகளை வரவேற்றனர். தஞ்சாவூரில் புகழ்பெற்ற வழக்கறிஞரும்தமிழ் வரலாறுஎன்னும் புத்தகத்தை எழுதியவருமான  கே.எஸ்.சீனிவாசன் பிள்ளை காந்தியடிகளுக்கு மாலை அணிவித்து  ஊர்வலமாக தம் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். தமிழகப்பகுதிகளில் பயணம் செய்யும்போது தமிழில் கையெழுத்திடுவதை வழக்கமாகக் கொண்ட காந்தியடிகள் பெரிய கோவிலுக்குச் சென்ற தருணத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் தமிழில் கையெழுத்திட்டார். பதிவேட்டுக்கு அருகில் அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேனா வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் ஒவ்வொருவரும் சுதேசியமயமாக இருக்கும் நாணத்தட்டையால் மட்டுமே எழுதவேண்டுமென்றும் ஒவ்வொரு செயலிலும் சுதேசியத்தைக் கடைபிடிக்கவேண்டியது மிகமிக முக்கியமென்றும் ஆலய தர்மகர்த்தாக்களிடம் தெரிவித்தார்.

கோபிசெட்டிப் பாளையம் லட்சுமண ஐயர் - எளிமையும் நெருக்கமும் - கட்டுரை




1944 ஆம் ஆண்டு. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டு சொந்த ஊரான கோபிச்செட்டி பாளையத்துக்குத் திரும்பி வந்திருந்தார் இருபத்தேழு வயதான இளைஞரொருவர். ஒருநாள் தன் வயதையொத்த நண்பர்களுடன் சிறையனுபவங்களைப் பகிர்ந்தபடி உரையாடிக்கொண்டிருந்த தருணத்தில் கிரி என்னும் நண்பர் பேச்சோடு பேச்சாக காந்தியடிகளைச் சந்திக்கச் செல்லலாமா?” என்று கேட்டார். இளைஞரின் ஆழ்மனத்தில் கருவாக இருந்த அதே விருப்பம் அக்கணமே சுடர்விட்டு பெரிதானது. சென்னையில் உடல்நலம் குன்றியிருக்கும் நண்பரொருவரைப் பார்த்துவிட்டு வருவதாக வீட்டினரிடம் தெரிவித்துவிட்டு இருவரும் புறப்பட்டனர். நேராக சென்னைக்குச் சென்று அங்கிருந்து வண்டி மாறி வார்தாவுக்குப் போனார்கள்.

Friday 7 February 2020

ஒரு சொல்லின் வழியாக - புதிய கட்டுரைத்தொகுதி




ஒருநாள் எங்கள் கிராமத்து ரயில்நிலையத்தில் புதுச்சேரிக்குச் செல்லும் வண்டியை எதிர்பார்த்து நின்றிருந்தேன். புதுச்சேரி ரயில்நிலையம் கடற்கரைக்கு மிக அருகில் நடந்து செல்லும் தொலைவில் இருக்கிறது. அன்று முழுநிலவு நாள். வெள்ளித்தகடென நிலவொளி பட்டு மின்னும் கடலலைகளைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் பயணமே அதற்காகத்தான். குறிப்பிட்ட நேரம் கடந்த பிறகும் ரயில் வரவில்லை. இதமான காற்று வீசிக்கொண்டிருந்ததால் நின்றுகொண்டிருப்பதைவிட நடந்துகொண்டிருக்கலாம் என நினைத்து நடைமேடையின் ஓர் எல்லையிலிருந்து இன்னொரு எல்லை வரைக்கும் நடக்கத் தொடங்கினேன்.

புதிய பார்வை - கட்டுரை



நாடோடியாகத் திரிந்த மக்கள் பயிர்த்தொழிலில் ஈடுபட்டு ஓரிடத்தில் நிலைத்து நின்று வாழத் தொடங்கியபோதுதான் ஒரு பெரிய சமூகம் உருவானது. அச்சமூகத்தைக் காக்கவும் பேணவும் மென்மேலும் மேம்படச் செய்யவும் சிறிய சிறிய அரசுகள் உருவாகி,  பிறகு கால ஓட்டத்தில் சிற்றரசுகள் இணைக்கப்பட்டு பேரரசுகள் உருவாகின. கூடி வாழ்ந்த ஒவ்வொரு சிறு சமூகத்திலும், ஒருங்கிணைந்து வாழ அவசியமான சில விதிகள் இருந்தன. மக்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற அவர்களுக்கிடையே ஒரு பொதுப்புரிதலுக்கான அவசியம் இருந்தது. அந்த அவசியத்தை ஒட்டி சில நெறிகள் வகுத்துப் பின்பற்றப்பட்டன. அவையே அச்சமூகத்தின் நீதியாக இருந்தது. பல இனக்குழுக்கள் இணைந்து இணைந்து சமூகம் விரிவடைந்து பெருகும்போது, பெரிய சமூகத்தின் இயக்கத்துக்கு துணைநிற்கும்வகையில் பொதுநீதியும் விரிவாக்கம் செய்யப்பட்டது. சமூகம் விரிவடையும்தோறும் சமூகநீதியும் விரிவடைந்து வளர்ச்சி பெற்றது.  நெறிகள் என்பவை நீதியின் குரல். இந்த நீதி அரசாட்சியின் குரலாக  வெளிப்பட்டபோது சட்டமாக மாறியது. வாழ்வியலின் குரலாக வெளிப்பட்டபோது பழமொழியாகவும் தொடர்களாவும் மாறின. பழமொழிகள் ஒருவகையில் எழுத்துக்கு வராத இலக்கியம். வாய்வழியாகவே புழங்கி வந்தவை. மானுட குலத்துக்கான ஒரு பொது அறத்தை முன்வைக்க அவை முற்பட்டன.

பூனை எழுதிய அறை - கல்யாண்ஜியின் கவிதைத்தொகுதி - நினைவுகளின் பரண்



மொழி ததும்பும் மனம் வாய்க்கப் பெறுவது ஒரு பெரும்பேறு. சட்டென்று வெள்ளம் பொங்கிப் பெருகும் நாட்களில் கிணற்றின் மேல்விளிம்புவரைக்கும் உயர்ந்துவந்து ததும்பும் தண்ணீர்போல மொழி மனத்தில் பொங்கித் ததும்புகிறது. அத்தருணம் ஒரு படைப்பாளியின் வாழ்வில் ஓர் அபூர்வத்தருணம். மொழி பழகும் ஒரு குழந்தை கண்ணில் படுகிற ஒவ்வொன்றுக்கும் தன் போக்கில் ஒரு பெயரைச் சொல்லி அடையாளப்படுத்தி அழைக்கத் தொடங்குவதுபோல, அந்த அபூர்வத்தருணத்தில் படைப்பாளி தன் கண்ணில் தென்படும் ஒவ்வொன்றையும் புதிதாகப் பார்க்கிறான். புதிதாக அடையாளப்படுத்த முனைகிறான். புதிய சொற்கள். புதிய புனைவுகள். புதிய உவமைகள். புதிய தொடர்கள். மொழியால் அதன் ஆகிருதியை அள்ளிவிடமுடியாதா என்னும்  கனவு அவனைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. சமீப காலமாக, உத்வேகத்தோடு புதியபுதிய கோணங்களில் சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதிவரும் . வண்ணதாசன் அபூர்வத்தருணத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவராகத் தோன்றுகிறார்.

Monday 3 February 2020

தரிசனமும் ரகசியமும் - கட்டுரை



எண்பதுகளில் என் பணியின் நிமித்தமாக கர்நாடகத்தில் பெல்லாரி, ஹோஸ்பெட், கொப்பள், கதக், ஹூப்ளி, சித்ரதுர்கா, ஷிமோகா என பல இடங்களுக்கு மாறிமாறி அலைந்துகொண்டிருந்தேன்.  அப்போது தமிழில் வெளிவந்த எல்லாச் சிறுபத்திரிகைகளுக்கும் சந்தா கட்டி வரவழைத்துப் படித்தேன்.  ஏதாவது ஒரு பத்திரிகையில் இன்னொரு பத்திரிகையின் முகவரியும் விவரங்களும் இருக்கும். அவற்றை வைத்து அவர்களோடு தொடர்புகொண்டு பத்திரிகைகளை வரவழைத்துக்கொள்வேன். அவ்வகையில்தான் பெங்களூரிலிருந்து வெளிவந்த படிகள் இதழோடு எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. பெங்களூரில் நடைபெற்ற எழுபதுகளில் கலைஇலக்கியம் என்னும் கருத்தரங்கம் பற்றிய செய்திகள் அதில் இடம்பெற்றிருந்தன. எழுபதுகளின் இலக்கியச்செய்திகளைத் தோராயமாக அறிந்துகொள்ள அக்கருத்தரங்கத்தில் பங்கேற்க வேண்டும் என நினைத்தேன். அதற்கான பயணத்திட்டங்களையும் வகுத்துவைத்திருந்தேன். ஆனால், எதிர்பாராதவிதமாக பணியில் விடுப்பெடுக்க முடியாதபடி ஒரு சிக்கல் வந்துவிட்டது. அதனால் கருத்தரங்கத்துக்குச் செல்லவில்லை. அந்த ஏமாற்றம் எனக்கு அளவற்ற வருத்தத்தைக் கொடுத்தது.

கசப்புகளும் புன்னகைகளும் - கட்டுரை



உங்களுக்குக் காதில் விழுகிறதா? என் குரல் கேட்கவில்லையென்றால் அது என் குறையல்ல. அது ஒலிபெருக்கியின் குறைபாடுஎன்று மென்மையோடு கேட்கிறது ஒரு குரல். அது காந்தியடிகளின் குரல். இந்தியா விடுதலையடைவதற்கு முன்னால் 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புதுதில்லியின் நடைபெற்ற ஆசிய ஒற்றுமை மாநாட்டில் காந்தியடிகள் தன் உரையை இதுபோன்ற கேள்வியோடு தொடங்குகிறார். ஒருகணம் மகிழ்ச்சி ஆரவாரத்துக்குப் பிறகு பார்வையாளர் அரங்கில் அமைதி நிலவுகிறது.