Home

Friday, 7 February 2020

ஒரு சொல்லின் வழியாக - புதிய கட்டுரைத்தொகுதி




ஒருநாள் எங்கள் கிராமத்து ரயில்நிலையத்தில் புதுச்சேரிக்குச் செல்லும் வண்டியை எதிர்பார்த்து நின்றிருந்தேன். புதுச்சேரி ரயில்நிலையம் கடற்கரைக்கு மிக அருகில் நடந்து செல்லும் தொலைவில் இருக்கிறது. அன்று முழுநிலவு நாள். வெள்ளித்தகடென நிலவொளி பட்டு மின்னும் கடலலைகளைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் பயணமே அதற்காகத்தான். குறிப்பிட்ட நேரம் கடந்த பிறகும் ரயில் வரவில்லை. இதமான காற்று வீசிக்கொண்டிருந்ததால் நின்றுகொண்டிருப்பதைவிட நடந்துகொண்டிருக்கலாம் என நினைத்து நடைமேடையின் ஓர் எல்லையிலிருந்து இன்னொரு எல்லை வரைக்கும் நடக்கத் தொடங்கினேன்.



ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு வெளியே இரண்டு மரங்கள் இருந்தன. ஒன்று போகன்வில்லா. இன்னொன்று நந்தியாவட்டை. இரண்டிலும் பூக்கள் பூத்து நிறைந்திருந்தன. மரத்தில் பூத்திருந்த அளவுக்கு சற்றும் குறைவின்றி மரத்தடியிலும் உதிர்ந்திருந்தன. நடைவண்டியை உருட்டிச் செல்லும் சிறுமியைப்போல பூக்களை உருட்டிக்கொண்டிருந்தது காற்று. அதைப் பார்ப்பதே பரவசமாக இருந்தது. 
மறுகணம் அதே காட்சி வரிசை குழம்பி நடக்கும் திருவிழாக்கூட்டத்தைப்போலத் தோன்றியது. பிறிதொரு கணத்தில் குழலூதுபவன் பின்னால் மயங்கித் தள்ளாடியபடி செல்லும் எலிக்கூட்டமெனக் காட்சியளித்தது. மற்றொரு கணத்தில் தாவித்தாவிச் செல்லும் தவளைக்கூட்டமெனத் தோன்றியது. இப்படி கணந்தோறும் அக்காட்சி மாறிமாறித் தோற்றம் காட்டி மகிழ்ச்சியூட்டியது. ஒரு பூவின் வழியாக எத்தனை எத்தனை தோற்றங்களை நாம் உருவாக்கிக்கொள்கிறோம் என்று நினைத்துக்கொண்டேன். ரயில் பயணத்திலும் கடற்கரையிலும் கூட அந்த எண்ணமே என்னை ஆட்கொண்டிருந்தது. நான் விரும்பிப் பார்க்கும் அலைகள் கூட அன்று பூச்சரத்தைப்ப்போலக் காட்சியளித்தது.
ஒரு சொல்லின் வழியாக என்னும் தொடர் அந்தத் தருணத்தில்தான் என் மனத்தில் உருப்பெற்றிருக்கவேண்டும். அது எனக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது. இக்கட்டுரைகளையெல்லாம் திரட்டியெடுத்து வரிசைப்படுத்தித் தொகுத்தபிறகு, தலைப்பைப்பற்றி யோசித்தபோது, அந்தத் தொடர் சட்டென மன ஆழத்திலிருந்து மெல்ல எழுந்துவந்தது. ஒரு புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான காட்சி வழியாக ஒருசில அடி தொலைவு முன்னே சென்று நம் அகம் பார்க்கக்கூடிய அல்லது உணரக்கூடிய அனுபவங்களுக்கு அழுத்தம் கொடுத்து எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைத்தொகுதிக்கு இந்தத் தலைப்பைவிட பொருத்தமான வேறொரு தலைப்பு அமைந்துவிடமுடியாது.
இத்தருணத்தில் என் மனத்தில் மறைந்த புனைகதைக்கலைஞர் பிரபஞ்சனின் உருவம் நிழலாடுகிறது.  அவர் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் விதத்தையும் புத்தகங்களை நண்பர்களிடம் மிகுந்த ரசனையுடன் அறிமுகப்படுத்தும் விதத்தையும் நான் பலமுறை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். ரசனையோடு அவர் சொல்வதை ஒருநாள் முழுக்க உட்கார்ந்து கேட்டபடி இருக்கலாம். பல இடங்களில் மேடையுரைகளில் கூட தான் படித்த பழைய நூல்களைப்பற்றியும் கதைகளைப்பற்றியும் நினைவுகூர்ந்து பேசுவதுண்டு. அவர் தன் இறுதிக்காலத்தில் புனைகதைகள் எழுதுவதைக் குறைத்துக்கொண்டு, படித்த புத்தகங்களைப்பற்றி மட்டுமே மிகவும் விரிவாக எழுதினார். ரசனையின் அடிப்படையில் அமைந்த இக்கட்டுரைத்தொகுதியை நண்பர் பிரபஞ்சனுக்கு வணக்கத்துடன் சமர்ப்பணம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இத்தொகுதியில் அடங்கியிருக்கும் கட்டுரைகள் உங்கள் நூலகம், அம்ருதா, தீராநதி, காலச்சுவடு, சங்கு, தூறல் ஆகிய அச்சிதழ்களிலும் மலைகள், சொல்வனம், திண்ணை, பதாகை ஆகிய இணைய இதழ்களிலும் வெளிவந்தவை. இவ்விதழ்களின் ஆசிரியர்களுக்கு என் அன்பும் நன்றியும். என் அன்பு மனைவி அமுதாவின் அன்பும் ஊக்கமும் என் எழுத்து முயற்சிகளில் எப்போதும் துணையாக இருப்பவை. அவரையும் இத்தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன். இந்தக் கட்டுரைத்தொகுதியை மிகச்சிறந்த முறையில் பிரசுரித்திருக்கும் என்சிபிஎச் நிறுவனத்துக்கும் என் மனமார்ந்த நன்றி

(ஜனவரி 2020 வெளியீடு)